காரை திறக்க சின்னு கீழே விழுந்திருந்தான். “சின்னு..” விஷ்ணு அவனை தூக்கி சீட்டில் உட்கார வைத்து முதலுதவி செய்ய, ம்ஹூம்.. முழிப்பே இல்லை.
“ஹாஸ்பிடல் போலாம்..” ஈஷ்வர் காரை எடுக்க,
“போலீஸ் நீங்க போக கூடாது, நாங்க பார்த்துகிறோம்..” என்றனர். ஈஷ்வர் அவரை தள்ளிவிட்டு காரை எடுத்து கொண்டு பறந்துவிட்டனர். அந்நேரத்தில் ரோடும் காலியாக இருக்க, அவர்கள் ஏரியாவிலே இருந்த துர்கா ஹாஸ்பிடல் தான் சென்றனர்.
மகா போனில் சொல்லியிருக்க, துர்கா அடித்து பிடித்து ஹாஸ்பிடல் வந்துவிட்டார். போலீசும் இவர்கள் பின்னால் வந்துவிட்டனர். துர்கா காரில் வரும் போதே சக்கரவர்த்திக்கு அழைக்க, போன் ஸ்விட்ச் ஆப்.
உடனே நரசிம்மனுக்கு அழைத்து சொல்லியிருக்க, அவரும் கங்காவுடன் வந்திருந்தார். போலீஸ் அவரை பார்த்து தயங்கி நிற்க, அப்போது அங்கு வந்த டிஸ்பி நரசிம்மன் மேல் கொண்ட பகையால் என்னவென்று கூட விசாரிக்காமல் இருவர் மீதும் FIR பைல் செய்து அர்ரெஸ்ட் செய்தே தீருவேன் என்று நின்றார்.
நரசிம்மனுக்கு இருவர் மீதும் தவறு இருக்காது என்ற நம்பிக்கை இருந்த போதும், விஷ்ணு, ஈஷ்வர் இருவரும் அங்கிருந்து நகர்வதாய் இல்லை.
“சின்னுக்கு என்னன்னு பார்த்துட்டு தான் வருவோம்..” அசையாமல் நின்றனர். இருவரையும் ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. விடியற்காலை போல சின்னுவிற்கு முழிப்பு வர, அதன் பிறகே ஸ்டேஷன் சென்றனர்.
சக்கரவர்த்தி ஒரு முக்கியமான கேசில் துப்பு துலக்கி கொண்டிருந்தவர் அதை முடித்து போனை ஆன் செய்ய, விஷயம் தெரிந்தது. அவர் இங்கு வருவதற்குள் நரசிம்மனே ஹோட்டல் சிசிடிவி வைத்து இருவர் மேல் தவறு இல்லை என்று நிரூபித்து ஜாமின் எடுத்தவர், கையோடு அந்த டிஸ்பி மேலும் வழக்கு தொடர்ந்தார்.
ஈஷ்வரை போலீஸ் ஆக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவர் ஆயிற்றே. மகன் மேல் FIR எப்படி.
விஷ்ணு, ஈஷ்வர் சென்றபடியே ஹாஸ்பிடல் வந்தனர். அதற்குள் இங்கு சின்னுவிற்கு என்ன பிரச்சனை என்று கண்டுகொண்டனர். இதயத்தில் அடைப்பு.