அடங்காத நாடோடி காற்றல்லவோ 25 1 15655 அடங்காத நாடோடி காற்றல்லவோ 25 “இப்போ என்ன தாங்க வேணும் உங்களுக்கு..?” மகா செல்லமான சலிப்புடன் கேட்டாள். “எனக்கு என்ன வேணும்..? எதுவும் இல்லை.. போ..” விஷ்ணு முறுக்கினான். மகா சிரிப்புடன் தலை ஆட்டி கொண்டவள், “அப்போ ஏன் கோவம்..?” கேட்டாள். “எனக்கு என்ன கோவம்..?” விஷ்ணு கோவம் தெரியவே கேட்டான். “பாருங்க இதுலே உங்க கோவம் தெரியுது..?” மகா கேட்க, “போடி..” என்றான் விஷ்ணு. சில நொடி மௌனம். “என்ன போனை வைக்கணுமா..?” விஷ்ணு உர்ரென்று கேட்க, “நான் எப்போ அப்படி சொன்னேன்..?” என்றாள் மகா. “பின்ன எதுவும் பேசாம அமைதியா இருந்தா நான் என்ன நினைக்கட்டும்..?” “எதுவும் நினைக்க வேண்டாம்.. போய் தூங்குங்க.. போங்க..” “ஹாஸ்பிடல் வந்துட்டியா..?” “இல்லை.. இன்னும் நேரம் இருக்கு..” “அப்போ எதுக்கு வைக்க சொல்ற..? அங்க போய் ரீச் ஆகுற வரை பேசுடி அகங்காரி..” “அதுக்கு நீங்க ஒழுங்கா பேசணும்..? இப்படி உர்ரென்னு பேசுனா நான் என்ன பண்ணட்டும்..?” “அப்படியென்ன ஒழுங்கு இல்லாம பேசிட்டேன் நான்..? இல்லை அப்படி பேசினா கூட தான் என்ன..? நீ என் பொண்டாட்டி தானே..? அப்படி இப்படி பேசினா தப்பில்லை..” “நான் இப்போ ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கேன்..” “நான் ஒன்னும் உன் கை பிடிச்சு இழுக்கலையே..?” “அச்சோ.. ஏங்க இப்படி..?” “உனக்கு புரியாதுடி..” விஷ்ணு குரலில் ஏதோ ஒன்று. “எனக்கு எல்லாம் புரியுது..” மகா மென்குரலில் சொல்ல, “என்ன புரியுதா..? புரிஞ்சா இப்படி எல்லாம் என்கிட்ட..” “எனக்கு உங்களை புரியுது..” அவன் பேசி கொண்டே போக மகா இடையிட்டு அழுத்தமாக சொன்னாள். “இல்லை மகா உனக்கு என்னை புரியல..” விஷ்ணு குரலில் அவ்வளவு வருத்தம், தேடல், ஏக்கம். “சரி எனக்கு உங்களை புரியல தான்.. விடுங்க..” என்றுவிட்டாள் மகா. அந்த பக்கம் விஷ்ணுவின் சீறலான மூச்சு காற்று மகாவின் காதோடு மனதையும் துளைத்தது. “நான் வைக்கிறேன்..” விஷ்ணு வைத்தும்விட்டான். மகா இங்கு புளுடூத்தை எடுத்து போட்டாள். என்னமோ கண்களும் கலங்கிவிட்டது அவளுக்கு. ச்சு.. மூச்சை இழுத்துவிட்டு வழியில் கவனம் வைத்தாள். ஆயிற்று விஷ்ணு சின்னுவுடன் கேரளா சென்று ஒரு மாதம். வீட்டில் எல்லோரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று பார்த்து வருகின்றனர். இன்னும் மகா மட்டும் தான் செல்லவில்லை. அதுவே கணவனுக்கு கோவம். “நீ வா..” என்று நேராக மனைவியிடம் கேட்கவில்லை. ஆனால் பேச்சுக்கள் அப்படி தான் இருக்கும். இப்போது பேசியது போல. மகாவிற்கு புரியதான் செய்தது. ஏன் அவளுக்கு மட்டும் விஷ்ணு, சின்னுவை நேரில் பார்க்க ஆசை இல்லையா என்ன..? கணவன் புரிந்து கொள்ளாதது அவளுக்கும் கோவத்தை கொடுக்கும், அந்த நேரங்களில் இப்படி முட்டியும் கொள்வார்கள். ஆனால் அவளால் என்ன செய்ய முடியும் என்று அவள் பார்க்க வேண்டுமே..? அதற்கு நேரம் கொடுக்காமல் முறுக்கினால் என்ன செய்ய என்ற ஆதங்கம் மனைவிக்கு. “இந்த டீன்கிட்ட தான் போய் நிக்கணும்..? அவர் இப்போதான் அவர் பவரை காட்டுவார்..” எரிச்சல் கொண்டாள் மகா. விஷ்ணு அவர்கள் ஹாஸ்பிடல் மேல் கம்பளைண்ட் செய்திருக்க, அதன் கோவம் நேராகவோ, மறைமுகமாகவோ மகா மேல் பாய்ந்து கொண்டிருக்கிறது. இப்படி எதாவது அவர்கள் செய்ய கூடாது என்று தான் விஷ்ணு மெடிக்கல் கவுன்சலில் லெட்டர் ஒன்றையும் கொடுத்திருக்கிறான். மகாவின் படிப்பு எவ்விதத்திலும் பாதிக்க படக்கூடாது, இவர்கள் அவளுக்கு மனஉளைச்சல் கொடுக்கும் படி நடக்க கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறான். அதனாலே அவள் படிப்பில் அவர்கள் கை வைக்க முடியவில்லை. மகாவும் நன்றாக படிப்பவள் என்பதால் அதை செய்யவும் முடியவில்லை அவர்களால், ஆனால் தினம் தினம் அவளுக்கு மனவுளைச்சல் நிச்சயம் உண்டு தான். நீர்ஜாவின் கையாட்கள் அவளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீண்ட தான் செய்தனர். கூடவே டீனும் அவளுக்கு அளவுக்கு அதிகமான வேலையும் கொடுத்தார். சில நாட்கள் பொதுவான எமர்ஜென்சியிலும் போட்டு விடுவார். இரவு நேரம் என்பதால் ஓய்ந்து போவாள். ஆனால் ஒரு போதும் என்னால் முடியவில்லை, டியூட்டி மாற்றுங்கள் என்று யாரிடமும் நிற்க மாட்டாள், வீட்டிலும் சொல்ல மாட்டாள். “எனக்கு இது அனுபவம் தானே..” என்று தன்னை தானே மெருகேற்றவே நினைப்பவள், இப்போது வேறு வழி இல்லாமல் டீனிடம் சென்று நிற்க வேண்டிய சூழ்நிலை. விஷ்ணுவிற்காக செய்ய வேண்டும். விடுமுறை கேட்க வேண்டும். அதுவும் இரண்டு, மூன்று நாட்கள் மட்டுமே கிடைக்கும். விடுப்பு என்பது அவர்களுக்கு குதிரை கொம்பு தான். ஒரு வருடத்திற்கு பொது விடுமுறை நாட்களே அவர்களுக்கு விரல் விட்டு எண்ணும் அளவு தான் கிடைக்கும். இதில் இவளாக கேட்க வேண்டும், அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில் கேட்க வேண்டும். டீன் அதிகம் பேசுவார், அவ்வளவு ஈசியாக கிடைக்காது தான், ஆனால் மகா விடுமுறை எடுத்த நாட்கள் மிகவும் குறைவு என்பதால் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. “பார்க்கலாம், அட்லீஸ்ட் ஒரு நாள் கிடைச்சா கூட போதும், அவரை போய் பார்த்திட்டு வந்திடணும்..” நினைத்தபடி காரை ஓட்டினாள். ஹாஸ்பிடல் வந்துவிட காரை நிறுத்தி உள்ளே சென்றாள். போன் ஒலிக்க பார்த்தால் விஷ்ணு தான். “சொல்லுங்க..” என்றாள் போன் எடுத்து. “ஹாஸ்பிடல் ரீச் ஆகிட்டியா..?” கேட்டான். கோவமாக பேசிவிட்டோமே, எப்படி காரை ஓட்டுவாள் என்று போன் போடுகிறான். புரிந்து சிரித்த மகா, “வந்துட்டேன்.. நீங்க தூங்க போங்க..” என்றாள் சிரிப்பை மறைக்காமல். “எனக்கு தூங்க தெரியும், நீ யாரையும் இடிக்காம வந்து சேர்ந்தியான்னு கேட்க தான் போன் பண்ணேன்..” என்றான் வீராப்பாக. “ம்ம்.. நம்பிட்டேன்.. பை..” மகா சிரிப்புடனே வைக்க, அங்கு விஷ்ணு முகத்திலும் லேசான சிரிப்பு தான். அன்றைய டியூட்டி நேரம் முடியவும் அங்கேயே அவள் இன்சார்ஜ் டாக்டருக்காக காத்திருந்தாள். நீரஜா இல்லாததால் வேறு ஒருவரிடம் மாற்றியிருந்தனர். அவர் வரவும் விஷ் செய்தவள், மூன்று நாட்கள் லீவ் கேட்க, “நீங்க டீனை பாருங்க..” என்றார் அவர். “இது தெரிந்தது தானே..” மகா நேராக டீனை பார்க்க சென்றாள். இவள் என்று தெரிந்தவுடன் அவர் வெய்ட் செய்ய சொன்னார். “இதுவும் தெரிந்த விஷயம் தானே..” அங்கேயே ரிப்ரெஷ் செய்து கேன்டீன் சென்று பால் குடித்து வந்தாள். “எங்கம்மா போயிட்ட..? டாக்டர் நீ இல்லன்னதும் ரவுண்ட்ஸ் போயிட்டார்..” என்றார் அட்டண்டர். அப்படியா சரி..? மகா அங்கேயே அமர்ந்துவிட்டாள். ஈஷ்வர், வீட்டில் இருந்து எல்லாம் எப்போதும் போல போன் செய்ய பேசி வைத்தாள். டீன் ரவுண்ட்ஸ் முடித்து வந்தவர், இவளை கடந்து ரூம் சென்று வெகு நேரம் ஆன பின்பும் கூப்பிடவில்லை. இது வேலைக்கு ஆகாது எழுந்தவள், “ண்ணா.. நான் மூணு நாள் லீவ் எடுத்துகிறேன்னு டீன்கிட்ட சொல்லிடுங்க..” என்று திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டாள். “டாக்டர்.. எங்க போறீங்க..? இருங்க.. நான் டீன்கிட்ட சொல்லிட்டு வரேன்..” அவர் உள்ளே சென்று வந்தவர், உள்ள போங்க என்றார் மகாவிடம். மகா உள்ளே சென்றவள் அவருக்கு விஷ் செய்து நிற்க, “என்ன நீங்க பாட்டுக்கு அட்டண்டர் கிட்ட லீவ் சொல்லிட்டு கிளம்புறீங்க, அவரா உங்களுக்கு MS கொடுப்பார்..” என்று ஒரு பாடு கத்தி முடிக்க மகா அமைதியாகவே நின்றாள். “மரியாதைன்னா என்னன்னே உங்களுக்கு தெரியாது போல..” டீன் முடிக்க, “அதை யாருக்கு கொடுக்கணும்ன்னு எனக்கு தெரியும், உங்களை பத்தி தெரியறதுக்கு முன்னாடி ஓகே, தெரிஞ்ச பின்னாடி எப்படி மரியாதை வரும்..?” உள்ளுக்குள் நினைத்தவள், அவரிடம் மூன்று நாட்கள் விடுமுறை கேட்க, முடியாது என்றார் அவர். மகாவிற்கு இவரிடம் கெஞ்ச வேண்டுமா என்று தோன்ற, விஷ்ணு வேறு மனதில் வந்து அமர்ந்தான். அங்கேயே அமைதியாக நின்றாள். அவள் அமைதியில் டீனுக்கு என்ன தோனியதோ, “இரண்டு நாள் மட்டும் தான்..” என்று அனுப்பிவிட்டார். “தேங்க் யூ டாக்டர்..” சொல்லி வெளியே வந்தவள் முதல் வேலையாக ஈஷ்வருக்கு தான் போன் அடித்தாள். “ண்ணா.. எனக்கு கேரளாக்கு டிக்கெட் போடு.. இன்னைக்கே.. எப்போன்னாலும் சரி..” என்றாள் உற்சாகமாக. “தனியாவா போற..?” ஈஷ்வர் கேட்க, “ஏன் உங்க போலீஸ் போர்ஸை கூட கூட்டிட்டு போகட்டா..” என்றாள் கேலியாக. “மகா..” ஈஷ்வர் சிரித்துவிட்டவன், “நீ வீட்டுக்கு தானே போற, நான் வரேன்..” என்று வைக்க, “டேய்ண்ணா..” அவன் வைக்கும் முன் அவசரமாக கூப்பிட்டவள், “அவருக்கு தெரிய வேண்டாம், சர்ப்ரைஸ்..” என்றாள். ஓகே ஓகே.. ஈஷ்வர் வைக்க, வீட்டுக்கு கிளம்பினாள். அவள் சென்று சேருவதற்குள் ஈஷ்வரோடு நரசிம்மன் வீட்டிற்கு வந்துவிட்டிருந்தார். ண்ணா.. என்று உள்ளுக்குள் பல்லை கடித்தவள், “வாங்கப்பா..” என்றாள் வரவேற்பாய். அவரோ, “தனியாவா கேரளா போக போற..?” என்றார் எடுத்ததும். “ஏன்ப்பா..? அதுல என்ன இருக்கு..?” மகா சாதாரணமாக கேட்டாள். “இல்லைம்மா.. கூட நாங்க யாராவது வரோம், அதான்..” என்றார். “வேணாம்ப்பா.. நான் போயிப்பேன்..” மகா சொல்ல, “நாங்க உன்னை விட்டுட்டு வந்துடுறோம் மகா..” என்றார் அவர். “ம்ப்ச் ப்பா.. என்ன இது..?” மகா முறைப்பாய் அண்ணனை பார்த்தாள்.