“ப்பா.. எனக்குஇப்போவேஒருசல்யூட்அடிச்சுடுங்கப்ளீஸ்..” என்றான்மகன்அப்பாவிடம்கெஞ்சலாக. அதில் எல்லோரும் சத்தமாக சிரித்துவிட, நரசிம்மனுக்கு அவனை விட மனதில்லை போல.
“ம்ப்ச்.. இப்போ எதுக்கு சிரிப்பு..? அவர் சின்ன பிள்ளை புரியாது, அமைதியா இருங்க..” எல்லோரையும் சத்தம் போட்டு அடக்கியவர், “சின்னு.. உங்க அப்பா இப்போ சலியூட் அடிக்கிறதுல என்ன இருக்கு, நாலாயிரம் பேர் பார்க்க, சும்மா கெத்தா யூனிபார்ம்ல அடிக்கிறது தானே மரியாதை.. யோசிங்க..” என்று அவனிடம் பக்குவமாக பேச, சின்னு நொந்து தான் போனான்.
“என்னை காப்பாத்துங்களேன்..” பார்வை பார்க்க,
“ப்பா.. போதும் அவனை விடுங்க, அவன் முதல்ல டிசர்ட் சாப்பிடட்டும்..” மகா அப்பாவிடம் சொன்னவள், “நீ சாப்பிடு சின்னு..” என்று முடித்து வைத்தாள்.
“அண்ணின்னா அம்மான்னு நிரூபிச்சுட்ட மகா..” சின்னு அவளை ஏகத்துக்கும் புகழ்ந்து நிம்மதியுடன் சாப்பிட, மீண்டு ஒரு சிரிப்பு.
நரசிம்மன் மட்டும் உம்மென்று அமர்ந்திருக்க, “விடுங்க மச்சான்.. நீங்க இந்த சட்டசபையில..” என்று அவரை திசை திருப்பிவிட்டார்.
உணவு முடியவும் பெரியவர்கள் எல்லாம் கிளம்ப, அனுவையும் கங்கா தங்களோடு கூட்டி சென்றுவிட்டார். இவர்கள் மட்டும் சின்னுவிற்கு பிடித்த ஸ்டேண்ட் அப் காமெடி பார்க்க சென்றனர். அங்கு சென்றவுடன் மகா கண்கள் யாரையோ தேட, பார்த்த விஷ்ணுவிற்கு அதிருப்தி தான்.
“மகா.. ஆரம்பிச்சுட்டாங்க போல.. வா..” சின்னு அவள் கை பிடிக்க, ம்ம்.. என்று மகா ஸ்டேஜ் பார்த்து அமர்ந்தாள். “ஏன் காவ்யா வரல..?” மகா யோசிக்க, காவ்யாவோ முன்னமே வந்துவிட்டவள், சின்னுவை பார்த்து ஓரமாக கண் கலங்க அமர்ந்துவிட்டாள்.
எத்தனை மாதம் சென்று அவனை இப்படி பார்க்கிறாள். அவன் உடல் அசைவுகளிலே அவள் கண்கள் நிலைத்தது. காமெடி கேட்டு அவன் சிரிக்க, காவ்யா கண்களும் கண்ணீருடன் சிரித்தது. அவன் தலை முடி கோத, இவள் கண்கள் அந்த கையிலே நின்றது. அந்த கைகளை பிடிக்க, இறுக்கமாக கோர்க்க, தோள் சாய பல ஆசைகள், கனவுகள்.
ஸ்டென்ட் காமெடி முழுதும் அவனை பார்த்தே அமர்ந்திருக்க, ஸ்டேண்ட் அப் காமெடியும் முடிவுக்கு வந்தது. எல்லாம் கிளம்ப, “காவ்யா போலாம்..” என்றாள் உடன் வந்திருந்த அவளின் அக்கா. அவளுக்கு தங்கையின் இச்செயல்கள் பிடிக்கவில்லை. ஆனால் அவளின் கண்ணீர், கெஞ்சல் அவளை இங்கு வரவைத்து அவளுடன்.
காவ்யாவிற்கு இப்போது மிகவும் தயக்கம் சின்னு முன் சென்று நிற்கவா, அவனிடம் பேசுவா என்று. மகா சின்னு வீல்சேரை தள்ளி கொண்டு நடக்க, காவ்யா அவர்கள் பின்னாலே சென்றாள். லிப்ட் வரவும் காவ்யா சற்று மனதைரியத்துடன் உள்ளே செல்ல போக, லிப்ட் புல்லாகி போனது.
இவர்கள் இன்னொரு லிப்டில் கார் பார்க்கிங் செல்ல, காவ்யா கொஞ்சம் அவசரத்துடனே பார்க்கிங்க சென்றவள் சின்னுவை தேடினாள். கிளம்பிட்டாங்களா..?
“ஹாய் காவ்யா..” சின்னு குரல் அவளின் பின்னிருந்து கேட்க, சட்டென அவள் கண்கள் கலங்கி போனது. காவ்யா.. சின்னு கூப்பிட, கண்கள் துடைத்து திரும்ப, அவன் புன்னகையுடன் அவளை பார்த்தவன், “ஹாய்..” என்றான் மறுபடியும்.
அவனை சுற்றி எல்லாரும் இவர்களை பார்த்து நிற்க, “ஹா.. ஹாய்..” என்றாள் காவ்யா திணறி.
“ண்ணா.. இது என்னோட புக் ப்ரண்ட் காவ்யா..” சின்னு முதலில் அவளை விஷ்ணுவிற்கு தான் அறிமுகம் செய்தான்.
“எனக்கு இவங்களை தெரியும் சின்னு..” விஷ்ணு சொல்ல, எப்படி..? கேட்டான் சின்னு.
“உன்னை பார்க்க நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க..” என்றான் அண்ணன்.
“என்னை பார்க்க வந்தீங்களா..?” சின்னு புருவம் சுருக்கி கேட்க,
“ஆ.. ஆமா..” என்றாள் காவ்யா. ஓஹ்.. சின்னு அவளை ஊன்றி பார்க்க, சிவந்த கண்கள் தெரிந்தது.
“ஓகே.. கிளம்பலாமா..?” ஈஷ்வர் கேட்க,
“ம்ம்.. பை காவ்யா.. அப்புறம் பார்க்கலாம்..” என்றான் சின்னு.
“உங்க போன் ஆன் பண்ணலையா..?” அவன் கிளம்ப போகிறான் என்று தெரிந்து காவ்யா வேகமாக கேட்க,
“ஆன் பண்ணனுமா..?” என்று தான் கேட்டான் சின்னு. விஷ்ணு புருவம் தூக்க, மகா கண்களோ கணவனை பார்த்து சிரித்தது. என்னடா நடக்குது இங்க..? ஈஷ்வர், பல்லவி இருவரும் கண் விரித்து பார்த்தனர்.
“அடேய்..” ஈஷ்வர் சிரிப்புடன் சின்னு தோளை தொட்ட,
“நான் போன் பண்றேன் காவ்யா.. பை..” காருக்கு வர, ஈஷ்வரோ சின்னுவை பார்த்து சிரித்து கொண்டே வந்தான்.
“மாமா.. ப்ளீஸ் ஸ்டாப்..” சின்னு சிணுங்கினான்.
“ஏண்டா படிக்க சொன்னா சின்ன பிள்ளைங்கிற, இங்க போன் ஆன் பண்ணனுமா கேட்கிற..? நாங்களே பரவாயில்லை போலவே..” ஈஷ்வர் அவனை ஓட்டி கொண்டே வந்தான். விஷ்ணு எதுவும் பேசாமல் வெளியே பார்த்து வர, சின்னுவிற்கு எக்கச்சக்க சங்கடம்.
“மாமா.. அவங்க ஏதோ டிஸ்டர்ப்பா இருந்த மாதிரி இருந்தது, அதான் கேட்டேன்..” என, ஈஷ்வரோ அப்படியா என்று இன்னும் கலாய்த்தான்.
“மகா ப்ளீஸ் சொல்லு.. நான் அதுக்காக தான் கேட்டேன்..” சின்னு அவள் உதவிய நாட,
“ண்ணா.. போதும் விடுங்க, அவங்க ப்ரண்ட்ஸ், பேசுறாங்க.. சும்மா அவனை ஓட்டாதீங்க.. பாவம்..” என்று அண்ணனை அடக்க, பேச்சும் சிரிப்புமாக வீடு வந்து சேர்ந்தனர்.
விஷ்ணு தம்பிய ரூமிற்கு கூட்டி சென்றவன், ரிப்ரெஷ் செய்ய வைத்து, படுக்க வைத்தான், அவன் எதுவும் பேசாமல் இருப்பது தம்பிக்கு என்னவோ போல இருந்தது. “ண்ணா.. காவ்யா..” என்று ஆரம்பிக்க,
“சின்னு.. முதல்ல தூங்கு, நேரமாச்சு பாரு.. காலையில பேசலாம்..” என்று முடித்துவிட, தம்பியும் குட் நைட்டுடன் படுத்துவிட்டான். மகா தானும் ரிப்ரெஷ் செய்து வந்தவள், சின்னுவை பார்த்துவிட்டு, கணவனுடன் ரூம் சென்றாள்.
அன்றைய வாக்குவாதத்திற்கு பிறகு இன்று தான் கணவனும், மனைவியும் ஒன்றாக ரூமில் இருக்கின்றனர். மகா நேரே பெட்டிற்கு போக, விஷ்ணு ரிப்ரெஷ் செய்ய சென்றான்.
மகா மொபைலை பார்த்து படுக்க, விஷ்ணு வந்தவன், லைட்டை அணைத்து படுத்தான். “என்ன எதுவும் பேசாம தூங்குறாங்க..?” அவன் அமைதி மகாவிற்கு எப்படியோ இருந்தது. பொறுத்து பார்த்தவள், “எனக்கு என்ன கிப்ட் வாங்கி இருக்கீங்க..?” கேட்டாள்.
இப்போ தான் என்கிட்ட பேச தோணுச்சா இவளுக்கு..? வெறுமையாக உணர்ந்தவன், “நாளைக்கு தானே உன் பர்த்டே..?” என்றான் அவள் பக்கம் திரும்பாமலே.
“ரொம்ப தான்..” மகா முனகி மொபைலை வைத்து படுத்தவள், சில நொடிகளில் தூங்கியும் போனாள். ஆனால் இங்கு விஷ்ணுவோ கண்ணை மூடாமல் சுவற்றை வெறித்து படுத்திருந்தவன், ஒரு நேரம் போல எழுந்து கால்களை நீட்டி அமர்ந்துவிட்டான். அவன் கண்கள் திரும்பி படுத்திருந்த மனைவி மேல் நிலைத்தது.
புரிந்தது.. அவனுக்கு எல்லாம் புரிந்தது அவனின் அடங்காத மனம் மகாவிடம் அடங்கியது. ஆனால் அதை அவளிடம் சொல்ல தான் முடியவில்லை. யாரோ ஒரு பெண்ணிற்காக என்னைவிட்டு விலகி நிற்பவளிடம் என்னவென்று என் மனதை சொல்ல..?
“அதுவும் அன்னைக்கு அவ்வளவு பெரிய வார்த்தையை ரொம்ப சாதாரணமா சொல்றா..? எனக்கு எப்படி வலிக்கும்ன்னு இவளுக்கு புரியலையா..?” கண்கள் அவளையே பார்த்திருக்க, மகா டியூட்டி பார்க்கும் பழக்கத்தில் ஆழந்த உறக்கத்தில் இல்லாமல் இடையில் பட்டென விழித்தாள்.
“ச்சு.. வீட்ல தான் இருக்கோமா..?” மறுபக்கம் திரும்பியவள், கணவன் அமர்ந்திருப்பதை பார்த்தாள்.
“தூங்கலையா..?” கண்களை சுருக்கி கேட்க,
“நீ தூங்கு..” என்றான் அவன்.
மகா நன்றாக கண் விழித்து கணவனை பார்த்தவள், “என்ன ஆச்சு..?” கேட்டாள். விஷ்ணு பதில் சொல்லாமல் அவளை பார்க்க, அவன் அமைதியில் மகா எழுந்து அமர்ந்தவள், “என்னங்க..?” என்றாள் கேள்வியாய்.
அவள் சாதாரணமாக கேட்பது விஷ்ணுவிற்கு கடுப்பாக இருக்க, பெட்டை விட்டு எழுந்து பால்கனிக்கு செல்ல, “உங்களை தானே கேட்கிறேன், எங்க போறீங்க..?” மகா பின் வந்து கைபிடித்து கேட்டாள்.
“விடுடி என்னை..” விஷ்ணு அவள் கை உதற, மகா இன்னும் வலுவாக பிடித்தவள்,
“என்னன்னு சொல்லுங்க முதல்ல..” என்றாள் அதட்டலாக.
“என்ன சொலுணும் இப்போ உனக்கு..?” விஷ்ணு அவளை பார்த்து கேட்க,
“அதெப்படி தூக்கம் வராம இருக்கும், மணி பாருங்க.. வெய்ட்.. ஒருவேளை எனக்கு பனிரெண்டு மணிக்கு விஷ் பண்ண முழிச்சிருக்கீங்களோ..” வேகமாக திரும்பி நேரம் பார்க்க, அது மணி ஒன்றை தாண்டி சென்று கொண்டிருந்தது. அதானே.. மகா கடுப்பாக கணவனை பார்த்தாள்.
“என்ன புதுசா கேட்கிற..? உனக்கும், எனக்கும் இதெல்லாம் பிடிக்காதுன்னு தான் வீட்ல விஷ் பண்ணல.. என்னை கேட்கிற நீ..?” விஷ்ணு சொல்ல,
“பிடிக்கலைன்னா பொண்டாட்டிக்கு விஷ் பண்ண கூடாதா என்ன..?” மகா நொடித்து கொண்டாள்.
“என்கிட்ட எல்லாம் எதிர்பார்ப்பியா நீ..?”
“நீங்க மட்டும் என்னை எதிர்பார்க்கிறீங்களா என்ன..? உங்களுக்கு உங்க ஈஷ்வர் மட்டும் போதும் தானே..?”
“அவன் என் ஈஷ்வர் தான், ஆனால் நான் அவன் இல்லை..” என்றான்.