அடங்காத நாடோடி காற்றல்லவோ 23

“இன்னைக்கும் டியூட்டிக்கு போகணுமா மகா..?”  ஹால்பிடலுக்கு கிளம்பி கொண்டிருந்தவளிடம் சின்னு கேட்க

எனக்கும் உங்களை போல  வீட்ல இழுத்து போர்த்தி தூங்க தான் ஆசை மச்சினரே.. என்ன செய்ய  எங்க டீன் என்மேல அநியாயத்துக்கு பாசமா இருக்காரேஎன்னை பார்க்காம இருக்க முடியாது அவரால..”  கிண்டலாக சொல்லி எல்லாம் எடுத்து வைத்தாள் மகா.  

ச்சு மகா.. லீவ் எடு, நாளை உன் பர்த்டே தானேஎல்லாம்  வெளியே டின்னர் போலாம், செலிபிரேட் பண்ணலாம்..” சின்னு ஆசையாக கேட்க

விஷ்ணு அதுவரை அமைதியாக இருந்தவன், “லீவ் எடு மகா..”  என்றான்

மகாவோ நிமிர்ந்து, “இப்போ தான் நான் உங்க  கண்ணுக்கு தெரியுறனா..?” பார்வை பார்த்தாள் கணவனை. விஷ்ணு முகம் திருப்பி கொண்டான்

இப்படித்தான் அவர்கள் நாட்கள் சென்று கொண்டிருக்கிறது. காவ்யா வந்த அன்று பேசிய பேச்சின் தாக்கம் இருவரிடத்திலும் இன்னும் இருக்க, முன் போல பேச்சு வார்த்தைகள் இல்லை. இருவருமே மற்றவரை சமாதானம் செய்ய முயலவும் இல்லைஒரு மாதமாக இருவருக்கும் இடையே நீடிக்கும் பனிப்போர்.   

வீட்டினருக்கு, சின்னுவிற்கு வித்தியாசம் தெரியாத அளவு தேவைக்கே சில வார்தைகள். சின்னுவும்  சரியாகி ஒரு மாதத்திற்கு மேலே ஆகிவிட்டது. விஷ்ணு முழு நேரமும் தம்பியுடேனே செல்ல, மகா எப்போதும் போல இரவு டியூட்டி, பகல் தூக்கம், சின்னு என்று இருந்தாள். ரூமிலும் கணவன், மனைவி சேர்ந்திருக்கும் நேரம் மிகவும் குறைவு

விஷ்ணுவின் இரவு தூக்கம் தனியே தான். சில நாட்கள் தம்பி ரூமிலும் தூங்குவான். மாதேஷ் இடையிடையே வந்து செக் செய்ய, விஷ்ணு அவரிடம் அடுத்த கட்ட முயற்சி பற்றி பேசி கொண்டிருக்கிறான். அவரும் அவனுக்கு உதவ, அதன் வேலையிலும் விஷ்ணு ஓடி கொண்டிருந்தான்

இந்த இடைவெளியில் தான் மகாவின் பிறந்த நாள் நாளை வந்தது. அதற்கு தான் சின்னு கேட்டு கொண்டிருக்க, மகாவிற்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லை. இப்போது என்று இல்லை எப்போதும் அவள் அந்த நாளில் பெரிதாக எதுவும் செய்வதில்லை

புது உடை கூட கங்கா சொன்னால் தான் போடுவாள். மற்றபடி சாதாரண நாட்கள் போல தான் அதுவும். ஆனால் இந்த முறை சின்னு கேட்க, சட்டென்று மறுக்க முடியவில்லை

ப்ளீஸ் மகா..” சின்னு மேலும் கேட்க, சரி.. என்றுவிட்டவள் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சொல்லிவிட, சில பல பேச்சுகள் தான். இப்படி கடைசி நேரத்தில் சொல்வதால்

ம்ம்.. லீவ் எடுத்தாச்சு, சொல்லுங்க மச்சினரே என்ன பிளான்..?” சின்னுவிடம் கேட்டு அமர்ந்தாள்

சூப்பர் மகா.. ண்ணா.. எங்க டின்னர் போலாம்..?” அண்ணனிடம் கேட்டான்

உனக்கு ஏதாவது இருந்தா சொல்லு..” விஷ்ணு மனைவியிடம் கேட்க

எங்க எங்கன்னாலும் ஓகே தான், ஆனா என்னோட கெஸ்ட் ஒருத்தர் வருவாங்க..” என்றாள் கணவனை நேராக பார்த்து. அதிலே அது யார் என்று விஷ்ணுவிற்கு புரிய, அவன் முகம் மேலும் இறுகி போனது

யார் மகா..? ஈஷ்வர் மாமா பேமிலியா..?” சின்னு கேட்க

நோ.. உனக்கு சர்ப்ரைஸ்..” என்றாள் கண் சிமிட்டலுடன்

எனக்கு சர்ப்ரைஸா..? யார் மகா..?” சின்னு ஆர்வத்துடன் கேட்க

அது உன்னோட ப்ரண்ட் யாராவது இருக்கும் விடு  சின்னு..” என்று பட்டென முடித்தான் அண்ணன். மகா அவனை முறைக்க

இப்படி அவனோட ஆர்வத்தை கிளப்பாத..” என்றான் அவன் கண்டிப்புடன் சின்னுவிற்கு கேட்காத அளவு

இதனால எல்லாம் எதுவும் மாறாது, நடக்காது..” மகா சிறு குரலில் பேச

அப்பறம் எதுக்கு அவன்கிட்ட சர்ப்ரைஸ் சொல்லுற..?” என்றான் அவனும் விடாது

உங்ககிட்ட பேச முடியாது..” மகா முகம் திருப்ப

நீ பண்றது தப்புன்னு உனக்கு புரியவே இல்லையா மகா, அந்த பொண்ணுக்கு சின்னு மேல இருக்கிற பீலிங்ஸ் என்னன்னே உறுதியா தெரியல, அதை நம்பி இவனை கிளப்பிவிடாத..”  விஷ்ணு சீரியசாக சொல்ல, மகா முகம் சுருங்கியது

இப்போதான் அவன் ஒரு பெரிய கண்டத்தில இருந்து மீண்டு வந்திருக்கான், திரும்ப ஒரு வலி, வேதனை, கஷ்டம்ன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ..”  மிரட்டலுடன் எழுந்து செல்ல, மகாவிற்கு மனது திடுக்கென்றது

அவர் சொல்றதும் சரி தானோ..? காவ்யாகிட்ட அந்த உறுதி இருக்கா..? அவளே இன்னும் குழப்பத்துல தானே இருக்கா..? ஒருவேளை இவர் ஆசைப்படுறது போல சின்னு சரியாகிட்டா அவளுக்கு இருக்கிற அந்த  பீலிங்க்ஸும் போயிடுமா..? அவளே சொன்னாளே இரக்கத்துல முதல்ல பார்த்தேன்னு.. அவங்க அம்மா பண்ண தப்புக்கு பொறுப்பேற்க நினைக்கிறாளா..? 

இல்லையே சின்னுவை கடக்க முடியலன்னு சொன்னாளே, பார்த்து அப்படி அழுதாளே..? எந்த ஸ்பெஷல் பீலிங்க்ஸும் இல்லைன்னா இப்படி தவிக்க முடியுமா..? யோசித்து யோசித்து தலை வலித்தது தான் மிச்சம்

என்ன ஆச்சு மகா..?” அவள் சுருங்கிய முகம் பார்த்த சின்னு கேட்க, மகா எதுவும் இல்லை என்று தலையாட்டினாள்.   

சின்னுவிற்கு காவ்யா தான் வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் சின்னு மீதான அவள் தவிப்பு, தேடல் உண்மை என்று உணர்த்ததாலே  அவளுக்கு உதவி செய்ய முன் வந்தாள் . இப்போது விஷ்ணு பேசுவதை பார்த்தால் சஞ்சலம் தோன்றாமல் இல்லை.

இங்கு விஷ்ணு போன் செய்து நரசிம்மன் குடும்பத்தை இன்வைட் செய்ய, அவர்களும் வருவதாய் முடிவானது.  “ஓகே பிளான் டன்.. நைட் ஏழு மணிக்கு கிளம்பலாம், டேபிள் புக் பண்ணியாச்சு, டின்னர் முடிச்சு சின்னுக்கு பிடிச்ச ஸ்டேண்ட் அப் காமெடி ஷோவும் பார்க்க போறோம்..” விஷ்ணு சொல்ல, சின்னுவிடம்  அப்படி ஒரு ஆர்ப்பாட்டம்

ஹேய்  சூப்பர்ண்ணா..”  அண்ணா கை பிடித்து மகிழ்ச்சியுடன் சொல்ல, விஷ்ணு அவன் தலையை வருடிவிட்டான்.

மகாவும், எதுக்கு நாம குழப்பிக்கணும், காவ்யாகிட்ட பேசிடலாம்.. முடிவெடுத்து விட்டவள், அவளுக்கு அழைத்து இன்றைய பிளானை பற்றி சொன்னாள்

அவள்,  “நான் வரேன்க்கா.. அவரை பார்க்கணும் ப்ளீஸ் ப்ளீஸ்..” என்று கெஞ்சலாக கேட்க, சரி வா.. என்று வைத்துவிட்டாள்.

அதன்படி துர்கா சீக்கிரமே வர, சக்ரவர்த்தி மட்டும் அங்கு வந்து சேர்ந்து கொள்வதாக சொல்லிவிட்டார்விஷ்ணு குடும்பம் இங்கிருந்து கிளம்ப, ஈஷ்வர் குடும்பமும் கிளம்பி நேராக ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்

இரு குடும்பமும் நீண்ட வருடங்கள் சென்று எந்த வித மனவேதனையும் இல்லாமல் சந்தோஷமாக பேசி சிரித்து கொண்டிருக்க, மகா, விஷ்ணு மட்டும் மேலாக சிரித்துஉணவை கொறித்து நேரத்தை கடத்தினர்

என்ன ஆச்சு விஷ்ணு ஆர் யூ ஓகே..?” ஈஷ்வர் அவனை கவனித்து கேட்க

எனக்கு என்னடா..? நீ என்னை பார்க்காம சாப்பிடு..” விஷ்ணு முடித்துவிட, ஈஷ்வர்க்கு புரியத்தான் செய்தது எதுவோ சரியில்லை என்று. ஆனால் மேலும் கேட்க முடியாமல் அமைதியாகிவிட்டவன் பார்வை தங்கையையும் சுற்றி வந்தது. அவள் கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை

அப்பறம் அண்ணி..” சின்னு சிரிப்புடன் ஆரம்பிக்க

சொல்லுங்க மச்சினரே..” என்றாள் மகாவும் உதடு விரித்து

உங்க மச்சினருக்கு கல்யாண சாப்பாடு எங்க..?” சின்னு எப்போதும் போல ஆரம்பித்தான். இடைப்பட்ட நாட்களில் அடிக்கடி கேட்டது தான். மகாவை வம்பிழுக்க கேட்டு கொண்டிருக்க, பெரியவர்கள் அவர்கள் பேச்சை சிரிப்புடன் பார்த்திருந்தனர்

விஷ்ணு கண்களோ சிரிக்கும் மகா மேல் தான் நிலைத்திருந்தது. அவன் பார்வை உணர்ந்தவள் அவன் பக்கம் திரும்பாமல், சின்னுவுடன் வாய் அடித்து கொண்டிருக்க, விஷ்ணு கண்களை மூடி திறந்தான்

அவனுக்கு மகாவுடன் சரியாக பேசாமல் எதுவும் ரசிக்கவில்லை. “என்னை எப்படி மாத்தி வச்சிருக்கா சிங்காரி, போதைக்காரன் மாதிரி அவபின்னாடி சுத்த தான் தோணுது.. முடியல..”  விஷ்ணு  சீக்கிரமே  உணவை முடித்து எழுந்து சென்றுவிட்டான்

மகா பார்த்தவள், திரும்பவும் சாப்பிட செய்ய, ஈஷ்வர் அவள் போகமாட்டாள் என்று தெரிந்து அவன் எழுந்து சென்றான். உணவு முடியவும் டிசர்ட் வர, பல்லவி இருவரையும் சென்று கூப்பிட்டு வந்தாள். விஷ்ணுவிற்கு பாசுந்தி  சொல்லியிருந்தாள் மகா

அவனோ, எனக்கு எதுவும் வேண்டாம்.. என்று அதை திருப்பி அனுப்பிவிட, மகாவிற்கு முகம் சுருங்கி போனது. “ண்ணா.. உனக்கு பிடிக்கும்ன்னு மகா சொன்னா..”  சின்னு சொல்ல, விஷ்ணு மனைவியை பார்த்தான்

அவள் ஐஸ்கிரீமை  ஸ்பூனால் கிளறி கொண்டிருக்க, எல்லார் பார்வையும் அவர்கள் மேல். என்னவோ,ஏதொன்று பெரியவர்களுக்கு லேசான பயமும். இருவருமே விடாகொண்டர்கள் ஆயிற்றே. அவர்கள் பார்வையே மகாவிற்கு பிடிக்கவில்லை. இப்போ என்ன..? என்று கத்த தான் தோணியது. இரண்டு நொடி விட்டிருந்தால் கத்தியும் இருப்பாள்.

அதற்குள் விஷ்ணு, “எனக்கு பாசுந்தி வேண்டாம், ஹெவியா இருக்கு..” என்றவாறே மனைவி பக்கம் வந்தவன் அவள் கையில் இருந்த ஸ்பூன் வாங்கி,  “ஐஸ்கிரீம் போதும்..” என்று எடுத்து சாப்பிட, எல்லோருக்கும் ஒரு ஆசுவாசம்

மகா நிமிர்ந்து கணவனை முறைக்கஅவளுக்கும் ஊட்டி விட்டவன்தானும் திரும்ப சாப்பிட்டான். “ண்ணா.. இங்க சின்ன பிள்ளைகளும் இருக்கோம்.. இதெல்லாம் சரியில்லை..”  சின்னு சிரிப்புடன் கிண்டலடிக்க

யாருடா இங்க சின்ன பிள்ளை..?” விஷ்ணு தேடுவது போல பார்த்தான்.  

ஏன் நானும் அனுவும் தான்.. என்ன பேபி..?”  அவளிடம் கேட்க,அனுவும் ஆமா என்று தலையாட்ட, “பாருங்க..” என்றான் தம்பி ரோஷமாக

அனு மட்டும் தான் சின்ன பிள்ளை, நீ எல்லாம் இல்லை, இன்னும் சின்ன பிள்ளைன்னு யாரை ஏமாத்த பார்க்குற.. ஒழுங்கா விட்ட டிகிரியை கம்ப்ளீட் பண்ற வழியை பாரு..” என்றான் அண்ணன் கண்டிப்புடன்