மொத்த குடும்பமும் கூடிவிட்டது. மாதேஷ் வந்துவிட்டார். ஒரு முழு பரிசோதனை. அந்த நாள் முழுதும் பரப்பரப்புடன், மகிழ்ச்சியுடன், தவிப்புடன், தீராத பயத்துடன் சென்றது. ஈஷ்வர் விஷ்ணுவை விட்டு நகரவில்லை. மகா ஓரமாக அமைதியாக அமர்ந்துவிட்டாள். பெண்களின் இரு கைகளும் சேர்ந்தே இருந்தது வேண்டுதலாக.
அனு சத்தம் மட்டும் தான் கேட்டு கொண்டே இருந்தது. மற்றபடி பெரியவர்கள் பார்த்து பார்த்து தான் பேசினர். பெற்றவர்களுக்கு கண்கள் கலங்கி கொண்டே இருந்தது. பயத்தில் மகிழ கூட முடியவில்லை. உணவு என்பதே மறந்து தான் போனார்கள்.
அன்று மாலை போல தான் மாதேஷ், “சின்னு வந்துவிட்டான் என்றார். எல்லாம் நார்மலாக இருக்கிறது என்றார். சீக்கிரம் பழையபடி ஆகிடுவான் என்றார்..”
ம்ம்ம்.. நடந்தேவிட்டது.. அதிசயம் நடந்தேவிட்டது. சின்னு கண் முழித்துவிட்டான். நெடுநாள் தூக்கத்தில் இருந்து விழித்தான். மொத்த குடும்பத்தையும் பார்த்தான்.
விஷ்ணு மகாவை அணைத்து நின்றான். அவன் கண்கள் சிரித்தது. பேச முடியவில்லை. மெல்ல பேசலாம் என்றுவிட்டார் டாக்டர். உள்ளுக்குள் கொந்தளித்த உணர்ச்சிகளை அடக்கி கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியாமல் சின்னுவை பார்த்தனர். அவனும் உணர்ச்சிவசப்பட்டான் போல.
“நோ.. நோ.. பி நார்மல்.. நீங்க திரும்பி வந்துட்டீங்க, ஹாப்பியா இருங்க..” மாதேஷ் அவனை முழு தீவிரத்துடன் கண்காணித்தார். அங்கேயே இரவு வரை இருந்தவர், அவனுக்கு முழு தூக்கம் பார்த்து கிளம்பினார்.
அதன் பிறகே மொத்த குடும்பமும் உணவு என்பதை கொறித்தனர். பெருத்த நிம்மதி, ஆசுவாசம், உயிர் மீண்ட திருப்தி எல்லார் முகத்தை கொஞ்சம் மலர வைத்தது. ஆனாலும் சின்னு நன்றாக பேசும் வரை தீராத அச்சம் தான். அதனாலே மகிழ்ச்சி என்பதே இன்னும் முழுமையாக இல்லை.
இரவு யாரும் கண் மூடவில்லை. மகா டியூட்டிக்கு செல்லவில்லை. ஈஷ்வர் குடும்பமும் கிளம்பவில்லை. அனுவை மட்டும் தூங்க வைத்து ஹாலில் தவம் கிடந்தனர். விஷ்ணு சின்னு ரூமை விட்டு நகரவில்லை. ஈஷ்வர் அவனுடனே.
மறுநாள் காலை சின்னு முழிக்கும் நேரம் பார்த்து மாதேஷ் வந்துவிட்டார். அவனும் முழிக்க, மீண்டும் ஒரு பரிசோதனை. அதிலே சில நிமிடங்கள் சென்றது. மாதேஷ் கேட்பவற்றுக்கு சின்னு மெல்ல மெல்ல சில வார்த்தைகள் பேசினான். அவன் குரல்.. விஷ்ணு தொண்டை குழி ஏறி இறங்க கைகள் கட்டி நின்றுவிட்டான்.
அடுத்து வந்த நாட்கள் கண்ணாடி பாத்திரம் கையாள்வது போல சின்னுவை கவனித்தனர். மாதேஷ் தேவைப்படும் நேரம் எல்லாம் வந்தார். துர்கா ஹாஸ்பிடல் செல்லவே இல்லை. கங்கா, பல்லவி, ஈஷ்வர் இங்கேயே. நரசிம்மன் அவர் வேலை பார்க்க கிளம்பினாலும், தினமும் காலை, மாலை வந்து சென்றார்.
சக்ரவர்த்தி தவிர்க்கவே முடியாமல் டியூட்டிக்கு கிளம்ப, ஈஷ்வர் ஆன் டியூட்டி, ஆப் டியூட்டி என்று இருந்தான். மகாவிற்கும் அவள் மேல் கோவம் கொண்டிருந்த டீன் ஹாஸ்பிடலுக்கு வந்தே ஆக வேண்டும் என்றுவிட அவளும் எப்போதும் போல இரவு டியூட்டி சென்று வந்தாள்.
இப்படியே அடுத்த இரு வாரம் கடக்க, சின்னு முழுமையாக குணமடைந்துவிட்டான் என்று மாதேஷ் உறுத்தியளித்து கிளம்பினார். விஷ்ணு அவர் கை பிடித்து கண்கள் கலங்கிவிட்டான்.
“சியர் அப் மேன்.. இன்னும் உன்னோட பிளான் இருக்கு இல்லை, லெட்ஸ் ஹோப் பெஸ்ட்..” அவர் விஷ்ணுவை அணைத்து கிளம்பினார்.
சின்னு எல்லோரிடமும் நன்றாக பேசினான். அனுவை தான் கொஞ்சி தீர்த்துவிட்டான். பெற்றவர்கள் அவன் பேச பேச குழந்தையை பார்பபது போல ரசித்து பார்த்து அமர்ந்திருந்தனர். பல்லவியை அறிமுகம் செய்துவைக்க, அவளிடமும் நன்றாக பேசினான்.
மகாவை பார்க்கும் போதெல்லாம் அவன் கண்கள் சிரிக்க, விஷ்ணுவை பார்க்கும் போதெல்லாம் கலங்கும் அண்ணனை போல.
“சின்னு ஜுஸ்..” மகா கொடுக்க,
“கொடுங்க அண்ணி..” என்பான் சிரிப்புடன் சின்னு. அப்படி கூப்பிடும் போது அவனின் குரலில் தெரியும் மகிழ்ச்சி..
“சொல்லுங்க மச்சினரே..” என்பாள் மகா.
“ம்ம்.. இது பெட்டர் மகா, இப்படியே என்னை மரியாதையா கூப்பிடு..” கெத்தாக ஜுஸ் குடிக்க, மகாவிற்கு இது எல்லாம் இன்னும் கனவு போல தான் இருக்கும். அவளுக்கே அப்படி என்றால் விஷ்ணுவிற்கு சொல்லவும் வேண்டாம்.
“ண்ணா..” என்று சின்னு கூப்பிடும் நேரங்களில் எல்லாம் அடைத்த தொண்டை குழி வலியில் துடிக்கும். தம்பியை மெல்ல அணைத்து கொள்வான் அண்ணன்.