அடங்காத நாடோடி காற்றல்லவோ 21

“இப்போ பார்க்க முடியாது காவ்யா.. நானே சொல்றேன், அப்போ வீட்டுக்கு வரலாம் சரியா..?”  மகா போனில் பேசியபடி வீட்டிற்குள் வந்தாள். 

“சரிங்கக்கா..” அந்த பக்கம் காவ்யா ஏமாற்றமாக சொன்னாள். 

“உடனே அப்செட் ஆக கூடாது  காவ்யா, இன்னும் உன் விஷயம் வீட்டுக்கு தெரியாது இல்லை, நீ என்கிட்ட பேசியே மூணு வாரம் தானே முடிஞ்சிருக்கு, நான் முதல்ல இவர்கிட்ட பேசிடுறேன், அப்பறம் வீட்ல பேசிடலாம்..” மகா சமாதானமாக சொன்னாள். 

“புரியுதுக்கா.. ஆனா வீட்ல என்னை ஏத்துப்பாங்களான்னு பயமா இருக்கு..” காவ்யா தவிப்புடன் சொன்னாள். 

“நம்பிக்கை வைடா.. வாய்ப்பிருக்கு.. நான் பேசிட்டு சொல்றேன்..” மகா வைத்து விட,  ருக்கு அவள் கையில் பூஸ்ட்டை வைத்தார்

தேங்க்ஸ்க்கா..” மறுக்காமல் குடிக்க

ஏன் பாப்பா.. பேசாம இந்த  நைட் டியூட்டியை மாத்திக்கலாம் இல்லை.. எத்தனை நாளைக்கு இப்படி..?” கேட்டார்.

இருக்கட்டும்க்கா.. இனி போய் தூங்க தானே போறேன்..”  என்றாள் மகா பூஸ்ட் குடித்தபடி

என்னவோ போ.. நீயும் கல்யாணம் முடிச்சு இந்த ஒரு மாசமாவே ஓடிட்டு தான் இருக்க, புது பொண்ணா எங்கேயாவது போக முடியுதா..?” அவர் நொடித்து கொள்ள, மகா சிரிப்புடன் மேலேறினாள்

அவர்கள் ரூம்  கதவை திறந்தவள், “எங்க இவ்வளவு பரபரப்பா கிளம்புறீங்க..?” கணவனை புரியாமல் பார்த்தாள். விஷ்ணு  அவசரமாக குளித்து வந்து கிளம்பி கொண்டிருந்தவன்

எங்கேயும் இல்லை.. டாக்டர் மாதேஷ் சின்னுவை பார்க்க வந்துட்டு இருக்கார்..” என்றவன் தலை வார

என்ன திடீர்ன்னு.. சின்னு ஓகே தானே..?”  மகா சட்டென்று பற்றி கொண்ட பயத்துடன் கேட்டாள்

ஹேய் ரிலாக்ஸ்டி.. அவன் ஓகே தான்.. இது.. ம்ம்.. உனக்கு நான் வந்து சொல்றேன், நீ குளிச்சிட்டு வா..” அவளின் தோள் தட்டி கீழே சென்றான். மகாவும் உடனே குளிக்க செல்ல, கீழே மாதேஷ் வந்துவிட்டார்

வாங்க வாங்க டாக்டர்..”  விஷ்ணு அவரை வரவேற்று சின்னு ரூம் அழைத்து சென்றான்

எப்போ பார்த்தீங்க..?” டாக்டர் கேட்டு கொண்டே சின்னுவை பார்க்க ஆரம்பித்தார்

காலையில தான் டாக்டர், நான் எப்போவும் போல அவன்கிட்ட பேசிட்டு இருக்கும் போது ரைட் ஹாண்ட்ல லாஸ்ட் பிங்கர்  லேசா அசைஞ்சது..”  என்றான் பரபரப்பாக

ஓகே.. அப்போ இவர் ரிகவர் ஆக ஆரம்பிச்சுட்டார், நம்ம ட்ரீட்மெண்ட் ஒர்க் ஆகுது, குட்.. அப்படியே கன்டினியூ பண்ணுங்க, சீக்கிரமே எழுந்துடுவார்..”  மாதேஷ் நம்பிக்கையுடன் சொல்ல, விஷ்ணு முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி

எஸ் டாக்டர்.. இதுக்கு முன்னாடி இப்படி ஏதாவது தெரிஞ்சுதான்னு  நான் லாஸ்ட் மந்த் சிசிடிவி பார்த்தேன், அதுல எங்க மேரேஜ் டே அன்னைக்கு அவனோட கண் இமை அசைஞ்சிருக்கு..” என்றான்

அவனும், மகாவும் அவர்கள் திருமண நாள் அன்று விளையாட்டாக சண்டை போட்ட போது அசைந்ததை இன்று காலை ஒரு முறை செக் செய்த போது கண்டு கொண்டான். “அப்பறமும் ஒரு முறை பிங்கர் அசைஞ்சிருக்கு, அடுத்து இன்னைக்கு காலையில இப்படி..” என்றான் முழுதாக

ஓகே.. இந்த ஒன் மந்த்ல இத்தனை முறை மூமெண்ட்  இருந்திருக்கு ரைட்..” மாதேஷ் மேலும் கேட்டு தெரிந்து கொண்டவர், அடுத்து என்ன செய்ய என்று டிஸ்கஸ் செய்தவர், மெடிசனிலும் மாற்றங்கள் கொண்டு வந்தார்

மகா, துர்கா வெளியே காத்திருக்க, விஷ்ணு டாக்டருடன் வந்தவன், “டாக்டர்.. சாப்பிடலாம்..” என்று உபசரித்தான். அவர் ஹாஸ்பிடலுக்கு நேரம் என்று ஆச்சு என்று மறுத்து கிளம்ப, “என்னடா..?” துர்கா கேட்டார்

இப்போ சொல்லலாமா..?” ஒரு நொடி யோசித்தவன், அவர்களே பார்த்து தெரிந்து கொள்ளட்டும், சர்ப்ரைஸாக இருக்கும் என்று நினைத்தவன், “நார்மல் செக் அப்.. ஆனா இனி நீங்க சின்னுகிட்ட பேசும் போது அவனை குளோசா வாட்ச் பண்ணுங்க..” என்றான்

ம்ம்..”  என்று மகா, துர்கா தலையாட்ட, சக்ரவர்த்தி டியூட்டிக்கு கிளம்பி வர, எல்லோரும் காலை உணவிற்கு அமர்ந்தனர்

அவரும் சின்னு பற்றி கேட்டு தெரிந்து கொண்டவர், “அப்பறம்  விஷ்ணு.. உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றார்

சொல்லுங்க..” என்றான் விஷ்ணு

அது.. க்கும்.. இல்லைடா சின்னுக்கு பார்க்க ஆரம்பிச்சு கூட ஒரு மாசம் முடிய போகுது, எந்த மாற்றமும் இல்லை.. அதான்..”  சக்ரவர்த்தி மனைவியை பார்க்க, அவர் பேசுங்க என்று கண் காட்டினார்

என்னன்னு சொல்லுங்க கமிஷனர்.. ஏன் அம்மா கண் காமிச்சா தான் மேற்கொண்டு பேச வருமா..?” கிண்டலாக கேட்டான் மகன். இவன் ஒருத்தன்.. உள்ளுக்குள் சலித்து கொண்ட தந்தை

இல்லைடா.. இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி சின்னுவையே பார்த்துட்டு இருக்க முடியும்..? முன்ன போல அம்மாவே அவனை பார்த்துகிறேன்னு  சொல்றா.. அதான் இனியாவது நீ அம்மா ஹாஸ்பிடலுக்கு போலாம் இல்லை..” பதமாக கேட்டார்

ப்பா..  முதல்ல  சின்னுகிட்ட மாற்றம் இல்லைன்னு உங்களுக்கு தெரியுமா..?” கூர்மையாக கேட்டான்

என்னடா சொல்றா..?” துர்கா ஆச்சரியத்துடன் கேட்டார்

அவன் சீக்கிரமா எழுந்துடுவான்.. சோ அவனை பத்தி பேசாம உங்களுக்கு என்கிட்ட என்ன சொல்லணுமோ அதை தெளிவா சொல்லுங்க..” என்றான்

அதான்.. அம்மா ஹாஸ்பிடலுக்கு போறது தான்..”

அங்க எதுக்கு டோக்கன் கொடுக்கவா..?”

விஷ்ணு.. ஆரம்பிச்சுட்டியா..? நாங்க சீரியஸா சொல்றோம், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும்..? படிச்ச படிப்புக்கு சர்வீஸ் பண்ற ஐடியாவே இல்லையா உனக்கு..?” துர்கா படபடத்தார்

மகா இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்க, பார்த்த விஷ்ணுவிற்கு சிரிப்பு தான். எதாவது கண்டுகிறாளா பாரு..? 

ம்மா.. நான் கண்டிப்பா டியூட்டி பார்ப்பேன், ஆனா சின்னு ரிக்வர் ஆனதுக்கு அப்புறம், ம்ஹூம்.. அதுக்கு அப்புறமும் எனக்கு வேற பிளான் இருக்கு, சோ எப்படியும் நான் செர்வீஸ் பண்ண சிக்ஸ் மந்தாவது ஆகும்..” முடிவாக சொன்னான்

என்ன ஆறு மாசமா..? விஷ்ணு எதாவது பொறுப்பா பேசுறியா..? முன்னவாவது பரவாயில்லை, இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, புருஷனா பொண்டாட்டியை பார்க்க வேண்டாமா..?” துர்கா பேச, என்ன வண்டி நம்ம பக்கம் திரும்புது.. மகா அலர்ட் ஆனாள்

ஏன் இப்போ நான் என் பொண்டாட்டிய பார்க்கிறதில்லையா என்ன..?” மனைவியை பார்த்து கிண்டலாக கேட்டான்

விஷ்ணு.. என்னை பேச வைக்காத, சம்பாத்தியம் தான் புருஷ லட்சணம்..” துர்கா பட்டென சொல்ல, மகா, சக்கரவர்த்திக்கு இப்பேச்சு பிடிக்கவில்லை. அதிருப்தியாக துர்காவை பார்க்க, விஷ்ணுவோ  பிளேட்டில் இருந்து கையெடுத்து நன்றாக சாய்ந்து அமர்ந்தவன்

அதானே உங்க அண்ணா ரத்தம் தானே உங்களுக்கும்.. பொறுப்பான வேலை, சம்பாத்தியம்ன்னு..” உதடு வளைத்தவன்,  “நீங்க ஒன்னும் உங்க காசுல எனக்கு சோறு போட வேண்டாம்.. ஓய் பொண்டாட்டி.. மாசாமாசம் எனக்கு பணம் கொடுத்துடு சரியா..”  என்றான் மகாவிடம்

நான் எந்த காசை கொடுக்கட்டும்..”  மகா பொதுவாக  தலையாட்டி வைத்தாள்

பாருங்க என் பொண்டாட்டி எனக்கு கொடுக்கிறேன் சொல்லிட்டா.. விஷயம் முடிஞ்சது..”  விஷ்ணு சிரிப்புடன் சொன்னான்.  

டேய்.. நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசுற..? ஏண்டா என்னை இப்படி படுத்துற..? உங்க வீட்ல  நீங்க காசு கொடுத்தா சாப்பிடணும்.. ஏற்கனவே மகாவை பொண்ணு கேட்டதே நீ இப்படி இருக்கிறதா சொல்லி தான்  தெரியுமா..? கேட்டதும் எங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லு.. எப்போதான் நீ எங்களை புரிஞ்சுக்க போற..?” துர்கா கண்ணில் கண்ணீருடன் பொரிந்து தள்ளினார்

ம்ப்ச்.. துர்கா ஏன் இவ்வளவு டென்சன் ஆகுற..? பொறுமையா பேசு..” சக்கரவர்த்தி சொல்ல

ஏங்க அவன் பேசுறதை பார்த்திங்களா..? என்னமோ அவன் சாப்பிட பணம் கேட்டது போல, அவன் படிச்ச படிப்புக்கு வேலைக்கு போக சொன்னா இப்படி எல்லாம் பேச சொல்லுதா.. அப்போ ஒரு அம்மாவா நான் எதுவும் கேட்க கூடாது இல்லை.. கேட்டா இப்படியா..?” அவர் ஆற்றாமையுடன் பேச, மகா திரும்பி கணவனை முறைத்தாள்

இப்போ என்ன..? நான் செர்வீஸ் பண்ணனும் அதானே, அதுக்கு தானே இவ்வளவு பேச்சும், பண்றேன், ஆனா ஹாஸ்பிடல் வந்து இல்லை, ஆன்லைனில் பண்ணிக்கிறேன்..” என்றுவிட்டான்

விஷ்ணு.. நான்..” துர்கா பேச வர, சக்ரவர்த்தி அவர் கை பிடித்து தடுத்துவிட்டவர்

விஷ்ணு அம்மா சொல்றது உனக்கு கண்டிப்பா புரியும், அதே சமயம் நீ சொல்றதும் எங்களுக்கு புரியது, சின்னு சரியாகாம நீ எபெக்டிவா எதுவும் செய்ய போறதில்லை, அவ்வளவு தானே விடு.. துர்கா நீயும் விடு, அவன் தான் பண்றேன் சொல்லிட்டான் இல்லை..”