அடங்காத நாடோடி காற்றல்லவோ 20 1 18981 அடங்காத நாடோடி காற்றல்லவோ 20 “இவகிட்ட பேசினா வேலைக்கு ஆகாது.. பேசி பேசியே நம்மளை காலி பண்றா..” விஷ்ணு நினைக்க, மகாவோ அவளின் வாய் மேல் வைத்திருந்த விஷ்ணு கையை விலக்கினாள். “என்ன திரும்ப சொல்ல போறியா..? போய் தூங்கு போடி..” விஷ்ணு சிரிப்புடன் அதட்ட, மகா கெத்தாக புருவம் தூக்கியவள், அது.. என்ற தோரணையுடன் தூங்க பெட்டிற்கு சென்றாள். “ஏண்டி என்கூட பெட்லையா தூங்க போற..? இந்த கீழே தூங்குறது, சோபால தூங்குறது எல்லாம்..” விஷ்ணு வேண்டுமென்றே கேட்டான். “போய் தூங்குங்க.. எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை..” என்றாள் தோள் குலுக்கி. “நான் உன்னை சொன்னேன்டி சிங்காரி..” “அது எதுக்கு வீணா..? எங்க படுத்தாலும் ஒன்னும் நடக்க போறதில்லையே..” என்று விஷ்ணுவையும், பெட்டையும் பார்த்து சொல்ல, அவள் தலையில் கொட்டியவன், “உன் வாயை அடைக்கிற நாள் சீக்கிரம் வரும் இருடி..” என்றான் சீண்டலாக. “ஏன் உங்க வாயை எனக்கு தர போறீங்களா என்ன..?” அவளும் சீண்ட, விஷ்ணுவிற்கு அப்படி ஒரு சிரிப்பு. “போதும் தூங்குடி..” அத்தோடு பேச்சை நிறுத்தி படுக்க, மகாவும் அவன் பக்கத்தில் படுத்தாள். கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது இருவருக்குமே. மகா மறுபக்கம் திரும்பி படுக்க, அவளை பார்த்த விஷ்ணுவிற்கு கொஞ்சம் பக்கென்று ஆனது. “ஏய் என்னடி இது..?” என்றான் சத்தமாக. “என்ன..?” மகா திரும்பி கேட்க, “அது.. அது ஒன்னுமில்லை.. நீ தூங்கு..” என்றுவிட்டான். மகா அவனை புரியாமல் பார்த்து அதே போல படுக்க, இங்கு விஷ்ணுவிற்கு தான் வேர்த்தது. “என்ன பிளவுஸ் இது..?” கண்கள் அவளின் பளிச் முதுகிலே நிலைத்தது. மேலேயும், கீழேயும் ஏதோ பூ டிசைன் போல நாட் வைத்து இருந்தது அவ்வளவு தான். அதிலும் அவள் திரும்பி படுத்திருக்க, அவன் கண்களுக்கு பளீர் முதுகு மட்டும் தான் பட்டது. “நீ ட்ரெஸ் மாத்தலையா..?” கேட்டுவிட்டான். “பரவாயில்லை.. எனக்கு டியூட்டில இப்படி இருந்து பழக்கம் தான்..” என்றாள் மகா படுத்தபடியே. “என்ன அங்கேயேயும் இப்படி சேரி கட்டிட்டு போவியா..?” உர்ரென்று கேட்டான். “ரொம்ப ரேர் கட்டிருக்கேன்..” மகா சொல்ல, கணவனுக்கு கொஞ்சம் கடுப்பு தான். “சரி சரி இப்போ சேஞ்ஜ் பண்ணிட்டு தூங்கு..” என்றான். “இருக்கட்டும், எனக்கு தூக்கம் வருது..” மகா அசதியில் தூங்கியும்விட, விஷ்ணு மறுபக்கம் திரும்பி கொண்டான். சில நிமிடங்கள் தூக்கம் ஆட்டம் காட்டினாலும், அவனுக்கும் காலை சீக்கிரம் எழுந்த அசதி தூங்கிவிட்டான். மறுநாள் இருவரும் நிதானமாக எழுந்தனர். விஷ்ணு தான் முதலில் முழித்தவன், தன் பக்கம் தூங்கும் மகாவை சில நொடிகள் பார்த்துவிட்டு, குளிக்க சென்றவன், தன் வழக்கமான வேலைகளை ஆரம்பித்துவிட்டான். எப்போதும் போல முதலில் சின்னுவை பார்க்க சென்றவன், அவனுக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா பார்த்துவிட்டு, சிறிது நேரம் அவனுடன் பேசிவிட்டு, வெளியே வந்தான். ஈஷ்வர் அவனுக்காக ஹாலில் காத்திருக்க, இருவரும் ஜிம் சென்றனர். பெண்கள் காலை உணவை முடித்துவிட்டு, மகா வருவதற்காக காத்திருந்தனர். அவளும் மேலும் சில நிமிடங்கள் சென்று முழித்தவள், இருக்கும் இடம் புரிந்து குளித்து கீழிறங்கினாள். “பூஜை ரூமுக்கு போய்ட்டு வா மகா..” துர்கா சொல்ல, செய்தவள், நேரே சின்னு ரூமிற்க்கு சென்று வந்தாள். “காபி குடிக்கிறியா மகா..?” பல்லவி கேட்க, “பசிக்குது அண்ணி..” என்றாள் மகா அனுவை கையில் தூக்கி கொண்டு. “விஷ்ணு வந்திரட்டும் இரு மகா..” கங்கா சொல்லிவிட, மகா முகத்தை தூக்கி வைத்து அமர்ந்துவிட்டாள். விஷ்ணு நேரம் சென்று வந்தவன், மனைவி சோர்வுடன் அமர்ந்திருப்பதை தான் பார்த்தான். இவள் அவனை பார்க்கவும் முகம் திருப்ப, “என்ன..?” என்று கேட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான். “விஷ்ணு போய் குளிச்சிட்டு வா.. அவ பசியில உட்கார்ந்திருக்கா..” என்றார் துர்கா. “ஏன் சாப்பிட வேண்டியது தானே..?” விஷ்ணு புரியாமல் கேட்க, “இல்லை கல்யாணம் முடிச்சு ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடணும்ன்னு தான் இருக்க சொன்னேன்..” என்றார் கங்கா. “அத்தை இது என்ன..? மகா அவங்க சொன்னா நீயம் உட்கார்ந்திடுவியா..? வா முதல்ல..” கூட்டி சென்று அவனே அவளுக்கு உணவு பரிமாறி சாப்பிட வைத்தான். “அத்தை.. எங்க வேலையில் இது எல்லாம் பார்க்கவே முடியாது, பார்க்கவும் கூடாது.. இனி இப்படி எல்லாம் வேண்டாம்..” கங்காவிற்கு சொன்னவன், குளிக்க சென்றுவிட்டான். ஈஷ்வர் எல்லாம் அமைதியாக பார்த்தவன், தானும் குளிக்க செல்ல, பல்லவி உடன் சென்றாள். “அண்ணி நம்ம காலம் இல்லை இது மாறிப்போச்சு.. விடுங்க..” கங்காவிற்கு சொல்லியபடி துர்கா பலகாரம் எடுத்து வைத்து கொண்டிருந்தார். விஷ்ணு, ஈஷ்வர் குளித்து வரவும் பல்லவி இருவருக்கும் பரிமாற, மகா டேபிளிலே அனுவுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தாள். பார்த்த கங்காவிற்கு பிடிக்கவில்லை. “புருஷன் கூட சேர்ந்து தான் சாப்பிடல, பரிமாறவாவது செய்யலாம் இல்லை..” மகளை நினைத்து கோவம் கொண்டார். சொன்னால் மருமகனே பாய்வான் எதுக்கு வம்பு..? அவரும் பலகாரம் எடுத்து வைக்க, உறவினர்களுக்கு அனுப்பும் வேலை ஆரம்பித்தது. “அப்பறம் விஷ்ணு எப்போ கேரளா கிளம்பணும்..?” துர்கா கேட்க, “கேரளாக்கு போகலைம்மா.. இங்க சென்னையிலே சின்னுக்கு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணியாச்சு..” என்றான் விஷ்ணு. எல்லோரும் புரியாமல் பார்க்க, ஈஷ்வர் மட்டும் அமைதியாக இருந்தான். “அதானே.. இவனுக்கு தெரியாம இருக்குமா..?” பார்த்த மகா புரிந்து கொண்டாள். “என்னடா சொல்ற..? அந்த டாக்டர் கேரளால தான் இருக்கார் சொன்ன..?” துர்கா கேட்க, “இப்போ சென்னைம்மா..” என்றான். “புரியற மாதிரி சொல்லு விஷ்ணு..” சக்ரவர்த்தி கேட்க, “ப்பா.. அவர் இப்போ சென்னையில தான் இருக்கார், சோ போன வாரமே சின்னுக்கு ட்ரீட்மெண்ட்டும் ஆரம்பிச்சாச்சு, புரியலையா..?” என்றவன், அவன் மொபைல் எடுத்து சில ஆடியோக்களை ஓடவிட்டான். எல்லாம் அவர்கள் வீட்டில் பேசியது. “இது என்னடா..?” சக்கரவர்த்தி கேட்டார். “ப்பா.. உங்களுக்கு தெளிவா சொல்லிடுறேன், நான் சொன்ன டாக்டர் மாதேஷ் USல வேலை பார்த்திட்டு இருந்தப்போ ஒரு விஷயத்தை முயற்சி பண்ணியிருக்காங்க, அது என்னன்னா பேஷண்ட்டுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கிறவங்களை பேச வச்சிட்டே இருக்கிறது, அவங்களை தொடுறதுன்னு ஆறு வாரம் செஞ்சிருக்காங்க..” “அது வெற்றியும் அடைஞ்சிருக்கு, அந்த பேஷண்ட் கோமால இருந்து வெளியே வந்திருக்காங்க, அந்த ஆர்டிக்கள் படிச்சிட்டு தான் நானா அவரை தேடி பேசினேன், அவரும் அங்க அவரோட சர்வீஸ் முடிச்சிட்டு கேரளா வந்துட்டார், சோ அவர்கிட்ட கேட்டிருந்தேன்..” “அவர் டைம் கேட்டிருந்தார், ஏன்னா அவருக்கு இங்க *** ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சிருக்கு, சோ இங்க சென்னயில அவரோட கைடன்ஸ்ல ட்ரீட்மெண்ட் போய்ட்டிருக்கு, நீங்க எல்லாம் மாமா வீட்டுக்கு போயிருந்தபோ தான் நேர்ல வந்து சின்னவை பார்த்துட்டு போனார்..” முடித்தான். “ஓஹ்.. நல்ல விஷயம்டா.. கேட்கும் போதே ஒரு நம்பிக்கை வருது விஷ்ணு..” சக்கரவர்த்தி மகிச்சியுடன் சொல்ல, மற்றவரிடமும் அந்த நம்பிக்கை தெரிந்தது. “சின்னுக்கு இன்பெக்ஷன் பிரச்சனை இருக்கிறதால நாம இல்லாத நேரத்துல நம்ம குரல் மட்டும் அவன் ரூம்ல ஓடிட்டே இருக்கும்.. அதுக்கு தான் இந்த ஆடியோ, ருக்கு ஆன்ட்டி, கணேஷ் அங்கிள் தான் பார்த்துகிறாங்க அந்த நேரத்துல..” விஷ்ணு மேலும் சொன்னவன், “இனி நாம செய்ய வேண்டியது, நீங்க எல்லாம் சின்னுகிட்ட பேசுறது மாதிரி தனி தனியா பேசி ஆடியோ ரிக்கார்ட் பண்ணி கொடுங்க.. அடுத்து அவனை பார்க்க போகும் போதும் இன்பெக்ஷன் ஆகாத அளவு பாதுகாப்போட அவனை தொட்டு பேசுங்க..” என்றான். அதன்படி எல்லோரும் அன்றே ஆடியோ ரிக்கார்ட் செய்து கொடுக்க, அனுவையும், “குட்டி மாமா..” என்று பேச வைத்து மகா ரிக்கார்ட் செய்தாள். கேட்ட எல்லோருக்கும் நெகிழ்ச்சி. “இதுக்காகவே என் மகன் கண்டிப்பா முழிச்சு வந்து உன்னை தூக்கிக்குவான்டா..” துர்கா அனுவை தூக்கி கொஞ்சினார். “நிச்சயமாம்மா.. நம்ம சின்னு பாசக்காரன், அவனுக்கு நம்ம குடும்பம்ன்னா ரொம்ப பிடிக்கும், நம்மளை எல்லாம் பார்க்கவே அவன் வருவான், அதுவும் என் பேபியை பார்க்கவே வருவான்..” விஷ்ணு அனுவை கன்னம் கிள்ளி முத்தம் வைத்து கொஞ்சினான். இதில் எல்லோருக்கும் இன்னொன்றும் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. நடந்தது அவர்கள் ஆசைப்பட்டது தானே.. விட்டுவிட்டனர். “அப்போ நான் லீவை கேன்சல் பண்ணிட்டு எப்போவும் போல ஹாஸ்பிடல் போலாமா..?” மகா விஷ்ணுவை பார்த்து பொதுவாக கேட்டாள். கங்கா வாய் திறக்க வந்தவர், ஈஷ்வர் கை பிடித்து கண் காட்டிவிட, அமைதியாகிவிட்டார். “போ மகா, இதென்ன கேள்வி.. உன்னோட ஸ்டடீஸ் பாரு..” விஷ்ணு சொல்லிவிட, மற்ற பேச்சு சென்றது. “ம்ப்ச்.. என்ன ஈஷ்வர் இது, எதுக்கு என்னை பேச வேண்டாம்ன்னு பார்த்த, இன்னும் மறுவீடு, குலதெய்வ கோவில், பங்காளி, மாமா, மச்சான் விருந்து, சீர்ன்னு அவங்க செய்ய வேண்டிய சடங்கு இன்னும் இருக்கே..” கங்கா அதிருப்தியுடன் கேட்டார். “ம்மா.. அதுகுக்கு எல்லாம் கண்டிப்பா விஷ்ணு ஒத்துக்க மாட்டான், நாம கேட்கவும் கூடாது, முதல்ல சின்னுவை பார்ப்போம், பொறுமையா எல்லாம் செய்வோம், கல்யாணம் முடிஞ்சதும் எல்லாம் செய்யணும்ன்னு எதுவும் இல்லை.. விடுங்க..” என்றுவிட்டான் மகன். “என்னமோ போங்கடா.. இந்த வீட்ல நீங்க சொல்றது தான் சட்டம்..” அம்மாவாக பொரிந்தார். “ஏன் நீங்க நினைச்சபடி விஷ்ணு, மகா கல்யாணம் நடக்கலையா என்ன..? நீங்க தானே பிளானே போட்டு கொடுத்தது..?” ஈஷ்வர் கேட்க, “அது தான் எனக்கும் அதிசயமா இருக்கு, இதுக்கும் விஷ்ணுவுக்கு எதாவது காரணம் இருக்கும், இல்லைன்னா நீங்களாவது எங்க பேச்சை கேட்கிறாதவாது..” கங்கா சொல்ல, “சரியா சொன்னீங்க அண்ணி, எனக்கும் அது தான் தோணுச்சு, இல்லைன்னா எதுக்கு கேரளா போக வேண்டாம் தெரிஞ்சும் விஷ்ணு எதுவும் சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்டான்..” துர்காவும் சொன்னார். “சரி விடுங்க, இதை கேட்க வேண்டாம்ன்னு தானே விட்டோம்.. எப்படியோ நாம ஆசைப்பட்ட படி கல்யாணம் முடிஞ்சிடுச்சு இல்லை..” சக்ரவர்த்தி முடித்துவிட்டார். அந்த நாள் அப்படியே செல்ல, மதிய உணவு நேரம், “ஈஷ்வர்.. இன்னைக்கு நீரஜா மேல விசாரணை இருக்கு, வரியா..?” விஷ்ணு கேட்டான். பெரியவர்கள், பல்லவி, அனு முதலிலே உண்டு தூங்க ரூம் சென்றிருக்க, இவர்கள் மட்டும் தான் இருந்தனர். “போலாம் விஷ்ணு, மகா..?” கேள்வியாக பார்த்தான். “அவ இல்லாமலா..?” விஷ்ணு சொன்னவன், “மூணு மணிக்கு கிளம்பனும்..” என்றான். மகா முகம் யோசனையில் இருக்க, “என்ன மகா..?” ஈஷ்வர் கேட்டான். “இல்லை அந்த ஹெட் நர்ஸ் வருவாங்க தானே..? அவங்க தானே முக்கிய சாட்சி..?” மகா சந்தேகமாக கேட்டாள். “கண்டிப்பா வருவாங்க மகா, நாம பிளான் பண்ண படி எல்லாம் நடக்கும்..” விஷ்ணு நம்பிக்கையாக சொன்னான். சொன்னது போல அந்த நர்ஸும் வந்தார்.