அடங்காத நாடோடி காற்றல்லவோ 19 1 14846 அடங்காத நாடோடி காற்றல்லவோ இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றனர். மகாவின் முகம் கோவத்தில் சிவந்து போயிருக்க, விஷ்ணுவோ கண் இறுக்க மூடி தலை கோதி கொண்டான். இப்படியே சில நொடிகள் செல்ல, வெளியே உறவினர்கள் சத்தம் கேட்டபடி இருந்தது. டேபிள் மேல் மகா வீசிய பூ சிதறியிருக்க, பார்த்த விஷ்ணு என்ன நினைத்தானோ, “அந்த பூவை எடுத்து வை..” என்றான் மகாவிடம். அவளோ பூ பக்கம் கூட திரும்பாமல், “நான் முதல்லே உங்களை கேட்க தானே செஞ்சேன் இதுல கம்பல்ஷன் சரி வராது, உங்களுக்கு மேரேஜ் வேண்டாம்ன்னா வேண்டாம்ன்னு சொல்லுங்கன்னு..” அவனை நேராக பார்த்து கேட்டாள். “ம்ப்ச்.. இப்போவும் சொல்றேன் எனக்கு உன்கூட மேரேஜ் வேணும் தான், ஆனா அது இந்தளவு கூட்டமா, கொண்டாட்டமா வேண்டாம்..” விஷ்ணு அழுத்தமாக சொன்னான். “சரி ஓகே அப்போ ஒன்னு பண்ணவோம், நானும் நீங்களும் மட்டும் கோவில்ல வச்சு கல்யாணம் பண்ணிக்குவோம், அண்ட் இது உங்களுக்கு புதுசும் இல்லை தானே, என் அண்ணனுக்கு அப்படி தானே முன்ன நின்னு பண்ணீங்க..” கோவத்தில் நக்கலுடன் சொன்னாள். “மகா..” விஷ்ணு அதட்ட, “ஏன் உண்மையை தானே சொன்னேன்..” மகா தோள் குலுக்கினாள். “இப்போ எதுக்கு ஈஷ்வர் பத்தி பேசிட்டு இருக்க..? நம்மை பத்தி மட்டும் பேசு..” விஷ்ணு பல்லை கடித்தான். “அவன் யாரோ இல்லை என் அண்ணா, நான் பேசுவேன், அதோட இப்போ நம்மை பத்தி பேச இது நேரமில்லை, எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு தான் நாளைக்கு காலையில மேரேஜ் வரை வந்திருக்கு..” “நான் இதுக்கெல்லாம் சரி சொல்லலை.. சிம்பிளா தான் ஏற்பாடு பண்ண சொன்னேன்..” “இப்போ என்ன பண்ணலாம் எல்லோரையும் துரத்திடலாமா..?” “எல்லோரையும் வேண்டாம், இந்த வீட்டு பெருசுங்களை துரத்தினா போதும்..” “முன்ன நின்னு ஏற்பாடு பண்ணது உங்க ஈஷ்வர்..” “அதுக்காக அவன் இல்லாம என் கல்யாணமா..?” “அப்போ என் அப்பா, அம்மா, மாமா, அத்தை இல்லாம நான் கல்யாணம் பண்ணிப்பேனா..?” “ராங்கி ராங்கி.. உன்னை..” அவள் தோள் பிடித்து லேசாக உலுக்கியவன், “என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டியா..? அங்க சின்னுவை தனியா விட்டு வந்தேன்னு நான் வேதனையில வந்தா இங்க விருந்து, வானவேடிக்கை, நிச்சயம்ன்னு ஒரே அமக்களமா இருக்கு, பார்த்த எனக்கு எப்படி இருக்கும் சொல்லு..?” “இங்க அப்படியே குத்துது, வலிக்குது, இதை எல்லாம் அவன் இல்லாமல் என்னால ஏத்துக்க முடியல, அனுபவிக்க முடியல, அவனுக்கு இது போல பல ஆயிரம் கனவு இருந்துச்சு நம்ம மேரேஜ்ல.. ஆனா இப்போ அவனால கண்ணால பார்க்கிறது மட்டுமில்லை, உணர கூட முடியல, எனக்கு எப்படி இருக்கும் யோசுச்சு பாரு.. விட்டா இப்படியே அவன்கிட்ட ஓடிடலாம் போலிருக்கு..” பேசி கொண்டே போனவன் கண்ணில் கண்ணீர் தேங்கிவிட, மகா அவனை பார்த்தவள், தானே அவனை இடையோடு கட்டி கொண்டாள். விஷ்ணு அவள் கழுத்தில் முகம் புதைத்து கொள்ள, கண்ணீர் துளிகள் தோளை நினைத்தது. மகா கண்களிலும் கண்ணீர் தேங்கியிருக்க, கைகள் அவன் முதுகை ஆறுதலாக வருடி கொண்டிருந்தது. “இதே நான் அவனை போல இருந்திருந்தா அவன் என்னை விட்டு இப்படி எல்லாம் பண்ணியிருப்பானா நீயே சொல்லு, அவனுக்கு எல்லாத்துக்கும் அண்ணா நான் வேணும், அப்பா, அம்மா விட என்னை தான் எதிர்பார்ப்பான், இப்போ அவன் இல்லாம என் கல்யாணம், அதுவும் உன்கூட.. இது அவனோட எத்தனை நாள் ஆசை.. எவ்வளவு பேசியிருப்பான் என்கிட்ட இதை பத்தி.. இப்போ அவன் அங்க..” அணைத்தபடியே பேசியவனுக்கு வார்த்தைகள் வராமல் துக்கம் தொண்டையில் அடைக்க, அவளை அழுத்தமாக அணைத்து கொண்டான். மகா அவனை வருடி கொண்டே நின்றிருந்தாள். ஆனால் மனதில் அவளுக்கும் அவ்வளவு வேதனை. ஆனால் மனம் திறந்து அழ முடியாத நிலை. வெளியே ஒரு ஊரே அவர்களை எதிர்பார்த்து காத்திருக்க, இங்கு அழுது கரையும் நேரமில்லை. மனமும் இல்லை. எங்களின் வேதனை இன்னொருவருக்கு பேசும் பொருளாக இருக்க கூடாது. சில நொடிகள் விஷ்ணுவை அப்படியே விட்டவள், “போதும்.. கொஞ்சம் தண்ணீர் குடிங்க.. வெளியே எல்லாம் இருக்காங்க..” என்றாள் அணைப்பை விலக்கி. விஷ்ணு சூழ்நிலை உணர்ந்து தன்னை நிலை படுத்தி கொண்டவன், மகா புடவை முந்தானை எடுத்து முகம் துடைத்து, அவள் கொடுத்த தண்ணீரை குடித்தான். சரியாக ஈஷ்வர் கதவை தட்ட, “ஒரு நிமிஷம்ண்ணா..” மகா சொன்னவள், விஷ்ணு கை பிடித்து, “நம்மளோட இந்த மேரேஜை சின்னுக்கு நினைவு வரும் போது காட்டணும், அதை பார்த்து அவன் சந்தோஷப்படணும், அதுக்கு நீங்க சாதாரணமா இருந்தா கூட போதும், நான் பார்த்துகிறேன்..” என்றாள் நிறுத்தி நிதானமாக. விஷ்ணுவிற்கு மகாவிடம் பேசியபிறகு கொஞ்சம் ஆசுவாசமாக உணர, எதுவும் சொல்லாமல் அவளை இன்னொரு முறை அழுத்தமாக அணைத்து கதவை திறந்து சென்றுவிட்டான். அதற்கு பிறகு விஷ்ணு குளித்து கிளம்பி வரவும், நிச்சயம் ஆரம்பமானது. அவன் முகம் பார்த்து ஈஷ்வர் எல்லாம் செய்ய, மகா முகத்தில் ஒரு மிதமான புன்னகை. இருவரையும் சபைக்கு வரவைத்து நிச்சய உடை கொடுக்க, அணிந்து வர, மணமக்களை மேடையில் அமர வைத்து சந்தனம் பூசி ஆசீர்வாதம் செய்தனர். இரு வீட்டின் பெரியவர்கள் முடிக்க, இறுதியாக இரு வீட்டு பெற்றோரும் வந்தனர். விஷ்ணு பெற்றவர்களை பார்க்க, துர்கா உணர்ச்சி வசப்பட்டவராய், மகனுக்கு, மருமகளுக்கு சந்தனம் பூச, சக்ரவர்த்தி முகமும் மிகவும் நெகிழ்ந்து தான் இருந்தது. அவர்களின் உணர்வுகள் புரிந்த விஷ்ணுவால் நிச்சயம் சந்தோஷப்பட முடியவில்லை. “விஷ்ணு..” அவன் முகம் இறுகவும், ஈஷ்வர் பக்கத்தில் வந்துவிட்டான். மகாவும் அவன் கை பிடிக்க, “என்னோட எதுவும் முடியலன்னு இவங்களுக்கு சொல்லுடா, என் சின்னுக்கு நல்லா கிராண்டா நான் கல்யாணம் செஞ்சு வைப்பேன், அந்த நாள் சீக்கிரம் வரும்ன்னு சொல்லுடா..” பெற்றவர்கள் முகம் பார்த்து விஷ்ணு வார்த்தைகளை அழுத்தி உச்சரிக்க, இருவர் கண்களிலும் கண்ணீர் தேங்கிவிட்டது. “அப்படி வந்தா எங்களை விட யார் அதிகம் சந்தோஷப்படுவா, நடக்கட்டும்டா.. நீ சொன்னது போல சீக்கிரம் நடக்கட்டும்..” சக்ரவர்த்தி மனைவி கை பிடித்து கீழே சென்றுவிட்டார். அடுத்து நரசிம்மன், கங்கா வர, மகா இருவரையும் அமைதியாக பார்த்தாள். அம்மாவாக கங்கா பூரித்து போனவர், அவளுக்கு சந்தனம் பூச, நரசிம்மனுக்கோ மகளின் பார்வையை கூட தாங்கமுடியவில்லை. சந்தனம் பூசி அவள் தலை மேல் கை வைத்து ஆசீர்வாதம் செய்தவர், அவள் காலில் விழுகவும், கைகள் நடுங்க மகளின் தலையை வருடி கீழே சென்றுவிட்டார். “அவ்வளவு தான்ப்பா.. எழுந்துக்கோங்க..” பெரியவர் சொல்ல, “ஈஷ்வர்.. ண்ணா..” மகா, விஷ்ணு இருவரும் ஒரு நேரத்தில் கூப்பிட்டனர். ஈஷ்வர், “நாங்க எதுக்குடா..” சொல்ல, “அண்ணி வாங்க..” என்றாள் மகா கங்காவுடன் நின்றிருந்த பல்லவி பார்த்து. “போம்மா..” கங்கா சொல்ல, “அனுவையும் கூட்டிட்டு வாங்க..” என்றாள் மகா. பல்லவியின் அம்மா வீட்டினரும் விஷ்ணு திருமணத்திற்கு வந்திருக்க, அனு பாட்டி, மாமாவிடம் இருக்க, பல்லவி வாங்கி மேடையேற, ஈஷ்வர் மனைவி, மகளுடன் சந்தனம் பூசினான். மகா இருவர் காலிலும் விழ, விஷ்ணு ஈஷ்வரை அணைத்து கொண்டான். அடுத்து விருந்து ஆரம்பமானது. மணமக்கள் அமைதியாக உண்ண, ஈஷ்வர் போட்டோகிராபரிடம் முன்னமே சொல்லவிட்டான் இந்த ஊட்டி விடுறது எல்லாம் கேட்க கூடாதென்று. அவர் அப்படியே போட்டோ எடுத்து கிளம்ப, மணமக்கள் ரூமிற்கு சென்றனர். மறுநாள் விடியற்காலையிலே திருமணம் என்பதால், ஈஷ்வருக்கு நிற்க நேரமில்லாமல் போனது. “ச்சு.. இப்போ எதுக்கு இப்படி ஓடிட்டு இருக்க..? யார்கிட்டேயாவது சொல்லிட்டு தூங்க போ..” ரூமிற்கு பாயசம் எடுத்து வந்தவனிடம் விஷ்ணு சொல்ல, “ஒரு நாள் தூங்கலைன்னா என்ன..? நீ குடிச்சிட்டு தூங்கு, காலையிலே சீக்கிரம் முழிக்கணும்..” ஈஷ்வர் வேலைகளை பார்க்க சென்றுவிட்டான். அடுத்த நாள் காலை திருமணத்திற்கு தயாராகி கோவிலுக்கு கிளம்பினர். விஷ்ணு முதலில் கிளம்ப, மகா பின்னால் சென்றாள். மணமகனை மனமேடையில அமர வைத்து சடங்குகள் முடிய, மகாவை அழைத்து வந்தனர். விஷ்ணு அவள் அருகில் அமரும் வரை பார்த்தவன், “இன்னைக்கு தான் அடக்கமான பொண்ணு மாதிரி இருக்கடி..” என்றான் கிண்டலாக. மகா திரும்பி கண் சுருக்கி முறைத்தவள், “நீங்க இன்னைக்கு கூட அப்படி இல்லை, பாருங்க ஆளும் தாடியும்..” அடிக்குரலில் பாய்ந்தாள். “எல்லோருக்கும் தெரியட்டும் உன்கூடான இந்த கல்யாணம் எனக்கு எவ்வளவு பெரிய கஷ்டம்ன்னு.. ஏற்கனவே இங்க நிறைய பேர், மாப்பிள்ளை முகத்துல களையே இல்லை, அயோ பாவம்ன்னு தான் சொல்லிட்டு இருக்காங்க..” விஷ்ணு உதடு மடித்து சிரிக்க, “உங்களை மாதிரி எனக்கு தாடி முளைச்சிருந்தா நானும் என் காலு வரை வளர்த்திருப்பேன், அவ்வளவு கொடுமை தான் எனக்கும் இந்த கல்யாணம்..” விடாமல் காய்ந்தாள். “ஷ்ஷ்.. இங்க என்ன பேச்சு, சடங்கை செய்ங்க..” கங்கா குனிந்து கண்டிக்க, மகா முகம் திருப்பி செய்ய, விஷ்ணு கொஞ்சம் மலர்ந்த முகத்துடனே செய்தான். எல்லோரும் மிகவும் எதிர்பார்த்த மாங்கல்யமும் விஷ்ணு கைக்கு வந்து சேர, மகாவிற்கு லேசாக உள்ளங்கைகள் வேர்த்தது. விஷ்ணு கையில் தாலியுடன் மகாவிடம் குனிந்தவன், “மகா..” என்றான். அவள் நிமிர்ந்து பார்க்க, “இந்த மகாலக்ஷ்மிக்கு ஏத்த விஷ்ணுவா நான்னு எனக்கு தெரில, ஆனா கண்டிப்பா இருக்க முயற்சி செய்வேன்.. நீ என்னை இருக்க வைப்பன்னு எனக்கு தெரியும்.. அது தான் எனக்கும் வேணும்..” சொல்லி கொண்டே அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான். ஈஷ்வர், பல்லவி, பெற்றவர்கள் மிகவும் நெகிழ்ந்த தருணத்துடன், கடவுளை வேண்டி கொண்டு அர்ச்சதை தூவி ஆசீர்வாதம் செய்தனர். அடுத்து அவள் நெற்றியில் குங்குமம் வைத்து, அக்னியை வலம் வர, மிச்ச சடங்குகள் வேகமாக நடந்தேறின. தம்பதிகளாக குலதெய்வத்தை வழிபட்டு, கோவிலை சுற்றி வெளியே வந்தனர். கோவிலுக்கு முன் இருந்த நிலத்தில் பெரிதாக டென்ட் போட்டு காலை உணவு ஆரம்பமாக, மணமக்கள் வீட்டிற்க்கு சென்றனர். அங்கு மகா விளக்கேற்றி, பாலும் பழமும் முடிய, காலை உணவு. அது முடியவும் சிறிது நேரம் உறவுகளோடு சென்றது. அதுவரை அமைதியாக இருந்த விஷ்ணு, “கிளம்பலாம்..” என்றுவிட்டான். “இன்னும் கொஞ்ச நேரம் விஷ்ணு..” ஈஷ்வர் சொல்ல, “எல்லா சடங்கும் முடிஞ்சது ஈஷ்வர்.. இங்க சும்மா பேசிட்டு இருக்கிறதுக்கு சின்னு கூட பேசினா பலன் கிடைக்கும்.. நாம கிளம்பலாம்..” என்றான் முடிவாக. மகாவும் ஒத்துக்கொள்ள, மதியம் போல கிளம்பினர். “நீங்க போங்க, நான் இங்க இருந்து பார்த்திட்டு வரேன்..” ஈஷ்வர் சொல்ல, “அதெல்லாம் இங்க இருக்கிறவங்க பார்க்கட்டும், நீ என்னாட கிளம்பு..” விஷ்ணு நின்றுவிட்டான். “நான் பார்த்துகிறேன்.. நீங்க இவங்களோடே போங்க..” நரசிம்மன் சொல்ல, எல்லோரும் திருச்சியில் இருந்து பிளைட் மூலம் சென்னை வந்தனர். துர்கா மருமகளுக்கு ஆரத்தி எடுக்க, மகா வலது கால் எடுத்து வைத்து விஷ்ணு வீட்டின் மகாலக்ஷ்மியாக நுழைந்தாள். பூஜை ரூம் சென்று விளக்கேற்றியவுடன், “சின்னுவை பார்க்க போகணும் மகா.. குளிச்சிட்டு வந்துடு..” விஷ்ணு சொல்ல, இருவரும் குளித்து சின்னு ரூமிற்க்கு சென்றனர்.