அடங்காத நாடோடி காற்றல்லவோ 18 2 16979 “இல்லை என் கல்யாணத்துக்கு என்ன செய்யணும்ன்னு கூட உங்களுக்கு தெரியாதா..? அதையும் அம்மா தான் சொல்லனுமான்னு கேட்டிருப்பா..” கங்கா சொல்ல, மற்ற மூவர் முகத்திலும் புன்னகை தான். “கண்டிப்பா கேட்டிருப்பா கங்கா.. என் பொண்ணாச்சே..?” நரசிம்மன் பெருமையாக சொல்ல, கங்காவிற்கு இப்போது இன்னும் சிரிப்பு. “நான் உங்க பொண்ணுன்னு இப்போதான் உங்களுக்கு தெரியுதாப்பான்னு கேட்டிருப்பா.. இதை நினைச்சு தானே சிரிச்ச..?” நரசிம்மன் தானே கேட்டார். கங்கா ஆமோதிப்பாக தலையாட்ட, நரசிம்மன் முகத்தில் வருத்தம், பெருமை இரண்டும் வந்தது. “நான் என்னதான் என் பொண்ணை கவனிக்காம விட்டாலும் அவ எங்கேயும் சரியல, எங்களையே கேள்வி கேட்கிற அளவு நிமிர்ந்து தான் நிக்கிறா..” என, ஈஷ்வர் அதை முழுமனதுடன் ஏற்றான். “உண்மைப்பா.. அவ தெளிவு, தைரியமே வேற.. நம்ம வீட்டு மகாலக்ஷ்மி தான்ப்பா அவ..” தங்கையை பெருமையுடன் அண்ணனும் சொன்னான். “அந்த மகாலக்ஷ்மிக்கு எப்படி கல்யாணம் பண்றோம்ன்னு பேசுவோமா..? உங்க மருமகன் ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டிருக்கான்..” கங்கா சலித்து கொள்ள, “இனி மருமகனை அவன், இவன் சொல்லாத கங்கா, அது நல்லா இருக்காது..” கணவர் சொன்னார். “நான் பார்த்து வளர்ந்த பையன் விஷ்ணு, எனக்கு இப்படி கூப்பிட தான் வரும், விஷ்ணு ஒன்னும் வேற வீட்டு பையன் இல்லையே, நீங்க உங்களை போல என்னை எதிர்பார்க்காதீங்க, என்னால எல்லாம் உங்களை மாதிரி மரியாதையா பேசிட்டு இருக்க முடியாது, என்னை விட்டுடுங்க..” கங்கா முடித்துவிட்டவர், “நாம பேசினது போல அண்ணியோட குல தெய்வ கோவில்ல கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு ஈஷ்வர் கிட்ட சொல்லிட்டேன், அவன் விஷ்ணுகிட்ட பேசிட்டு சொல்லட்டும்..” என, நரசிம்மன் மகனை பார்த்தார். “நான் பேசுறேன்ப்பா.. ஒரு அளவுக்கு மேல அவனை வற்புறுத்த என்னால முடியாது தான்.. ஆனால் அம்மா சொல்றதும் சரி, பேசி பார்க்கிறேன்..” என்றான். “நீ இப்படின்னு பேசு ஈஷ்வர், பார்ப்போம், அப்பறம் முகூர்த்தத்துக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு, மகாக்கு தேவையான நகை, புடவை எல்லாம் நானும் மருமகளும் பார்த்துகிறோம், இந்த இன்விடேஷன், கல்யாண ஏற்பாடு,விருந்து, அழைப்பு எல்லாம் உங்க பொறுப்பு..” என்று இப்போதே கங்கா வேலைகளை பிரித்துவிட, நேரம் அதிலே சென்றது. நடுஇரவு போல தான் தூங்க சென்றனர். பல்லவி மகளை பார்த்து, உடை மாற்ற செல்ல, ஈஷ்வர் அவள் கை பிடித்தான். “என்ன ஈஷ்வர்..?” பல்லவி கேட்க, “நீ எங்கேயும் தப்பில்லை லவி, யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்க கூடாது..” என்றான் அழுத்தமாக. “இல்லை ஈஷ்வர் என்னால தானே..” “நோ லவி.. என்னோட அவசரம் தான் காரணம், நீ இல்லை..” “மகா அன்னைக்கு பேசினது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஈஷ்வர், எனக்கும் அண்ணா, அப்பா இருக்காங்க தானே, அவங்களால நான் ஒருவிதத்தில பாதிக்க பட்டா, இங்க மகாவும் காயப்பட்டிருக்கா இல்லை.. அத்தையும் இந்த பிரச்சனையில எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க, அதான்..” “கண்டிப்பா எங்களால அவங்க காயப்பட்டிருக்காங்க, இல்லைன்னு நான் சொல்லலை, சொல்லவும் கூடாது, சொல்லவும் மாட்டேன், ஒரு மகனா, அண்ணனா நான் சறுக்கின இடம் அது, ஆனா இனியும் அப்படி இருக்க மாட்டேன், அது வேற, ஆனா இதுல என் பொண்டாட்டி எங்கேயும் இல்லை..” “இருக்கேன் ஈஷ்வர்.. என்மேல் நீங்க வச்ச காதல் தானே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்..” “அப்படி பார்த்தா என்னால் நீ பட்ட கஷ்டம், அதுக்கு நான் என்ன செய்யட்டும்..? உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறதை தவிர..” “ஈஷ்வர்.. ப்ளீஸ்.. முன்னமே சொல்லிட்டேன் என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம்ன்னு.. திரும்ப ஏன்..?” பல்லவி அவனை அணைத்து கொண்டாள். ஈஷ்வரும் அவளை அணைத்து கொள்ள, “நம்ம வயசு அப்போ அப்படி ஈஷ்வர், அந்த வயசுல காதல்ன்னும் போது எதையும் யோசிக்க விடாது, விடுங்க.. இனி நாம சரியா இருக்கலாம்..” என்றாள். “எஸ்.. மகா கல்யாணம் வருது, அண்ணனா, அண்ணியா ஜமாய்ச்சிடுவோம்..” ஈஷ்வர் மகிழ்ச்சியுடன் சொன்னான். பல்லவியும் தலையாட்ட, அவர்கள் சொன்னதை செய்யவும் செய்தனர். அதற்கு முதல்படியாக ஈஷ்வர் பத்து நாளும் மெடிக்கல் லீவ் எடுத்தான். அடுத்து அன்றே விஷ்ணுவை சந்தித்து இப்படி என்று சொல்ல, அவன் முறைத்தவன், “ஆரம்பிச்சிட்டீங்களா..? அதானே பார்த்தேன்..?” என்றான் கடுப்பாக. “இல்லை விஷ்ணு அம்மா, அப்பா ஆசைப்படுறாங்க, எங்களுக்கும் உங்க கல்யாணத்தை இவ்வளவு சிம்பிளா செய்ய மனசில்லை. கோவில்ல தானே, ரொம்ப பெரிய கூட்டம் வராம பார்த்துகிறேன், முக்கியமான ஆட்கள், சொந்தம், ப்ரண்ட்ஸ் இப்படி தான்..” ஈஷ்வர் பொறுமையாக எடுத்து சொல்ல, “அந்த முக்கியமான ஆட்கள்ல உங்க அப்பாவோட கட்சி ஆட்களும் கண்டிப்பா இருப்பாங்க, அவங்க இல்லாம உங்க அப்பா பொண்ணு கல்யாணம் செய்வாரா என்ன..?” நக்கலாக கேட்டான். “இருப்பாங்க தான், ஆனா கட்சி தலைமை, அமைச்சருங்க மட்டும்..” “அவங்க மட்டும் தானா..? முடியாது ஈஷ்வர்..” என்றுவிட்டான் விஷ்ணு. “டேய் ப்ளீஸ்டா.. என் கல்யாணத்தை பார்க்க தான் யாருக்கும் வாய்ப்பில்லாம போச்சு, உங்க கல்யாணமாவது நல்லா நடக்கட்டுமே, ஒத்துக்கோடா..” “அவங்களுக்கு பார்க்க வாய்ப்பில்லாம பண்ணிட்டு இப்போ வந்து கதை அடிக்கிற நீ..? உன்னை உன் தங்கச்சி கேட்கிறதுல தப்பே இல்லை..” “என்னடா இப்போவே பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணிட்டு நண்பனை கழட்டி விடுற..?” “உன்னை கழட்டி விட்டுட்டாலும்..? ஈஷ்வர் புரிஞ்சுக்கோடா எனக்கு இந்த கட்சி ஆளுங்க வந்து மைக் பிடிச்சாலே ஆகாது, அப்பறம் மைக்கும் பறக்கும், ஆளும் பறக்கும் பார்த்துக்கோ..” “அப்படி எல்லாம் யாரும் பறக்காம நான் பார்த்துகிறேன், ப்ளீஸ்டா..” கேட்டு கேட்டு ஒத்து கொள்ள வைத்தான். விஷ்ணுவும் சிம்பிளா ஓகே என்று அரை மனதாக ஒத்துக்கொள்ள, மகா எதையும் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கும் இப்படி என்று சொல்ல சரி என்று முடித்துவிட்டாள் அவ்வளவு தான். விஷ்ணுவும் அவளும் போன் பேசுவது இல்லை. அன்று ஒரு இறுக்கத்தோடு வைத்தவன் தான் அதன் பிறகு அழைக்கவில்லை. மகாவும் விட்டுவிட்டாள். எப்போதும் போல துர்காவிடம் சின்னு பற்றி கேட்டு தெரிந்து கொண்டாள், இடையில் சென்று பார்த்தும் வந்தாள். விஷ்ணு வெளியே சென்றிருக்க இருவர் சந்திக்கும் வாய்ப்பும் இல்லாமல் போனது. அவர்கள் இப்படி இருக்க, கல்யாண வேலைகள் முழு மூச்சாக சென்றது. நரசிம்மன் என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்ல, வெளி வேலைகள் எல்லாம் ஈஷ்வர் தான் முன் நின்று செய்தான். துர்கா, சக்ரவர்த்திய கூட விடவில்லை. அவர்கள் வேலையும் சேர்த்து தானே செய்தான். “நீங்க உங்க வேலைகளை பாருங்க, கல்யாண வேலை என் பொறுப்பு, இது என் விஷ்ணு, என் தங்கச்சி கல்யாணம், நான் தான் செய்வேன்..” என்று ஓடி ஓடி செய்தான். பல்லவியும் சலிக்காமல் கங்காவுடன் கடை கடையாக சுற்றினாள். மாமியாரும் மருமகளும் முதலில் மகாவிற்கு உடை எடுத்தனர். “நான் புடவை பார்த்துகிறேன் பல்லவி, நீ அவளுக்கு ஏத்தது போல வெஸ்டர்ன் துணி பாரு..” என்று இருவரும் எடுத்து குவித்தனர். அடுத்து நகைக்கு சென்றனர். “பழைய நகை இருக்கு தான், இருந்தாலும் இப்போ உள்ள ட்ரெண்ட் நகையும் எடுக்கலாம்..” என்று எடுத்தனர். இடையில் ஒரு நாள் முகூர்த்த புடவை எடுக்க, காஞ்சிபுரத்தையே வீட்டிற்கு வர வைத்தனர். “மகா உனக்கு காஸ்மெடிக்ஸ்..” பல்லவி கேட்க, “அண்ணி நான் என்ன போடுறேன்னு நீங்க கேட்கிறீங்க, சும்மா பவுண்டேஷன் மட்டும் தான்.. அது என்கிட்ட இருக்கு.. அதுவே போதும்..” என்றுவிட்டாள். “சரி கல்யாணத்துக்கு உனக்கு எந்த பியூட்டி பார்லர் இருந்து வரணும்..?” கேட்க, “பல்லவி, கங்கா பியூட்டி பார்லர் இருந்து..” என்று எப்போதும் போல டியூட்டிக்கு கிளம்பிவிட்டாள். அன்று மட்டுமில்லை நாளை திருமணம் இன்று ஊருக்கு கிளம்ப வேண்டும் என்றால் முன்னிரவு வரை டியூட்டிக்கு சென்று தான் ஊருக்கே கிளம்பினாள். விஷ்ணு இரவு போல் தான் ஊருக்கு வருவேன் என்றுவிட்டான். சின்னுவை பார்க்க கணேஷ், ருக்கு அங்கயே நின்றுவிட, இவன் மாதேஷை பார்க்க சென்றான். அவர் சென்னையில் இருக்க, நேர்லே சென்று பேசிவிட்டு வந்தான், இந்த பத்து நாட்களும் அவருடன், அவர் சொன்ன ஆர்டிக்கள், மெடிசன் உடன் தான் நேரம் சென்றது. அதிலும் அவர் கொடுக்கும் மெடிசனை எத்தனை முறை விசாரித்து தம்பிக்கு செலுத்தினான் என்பது கணக்கே இல்லை. அவன் கவனம் முழுக்க சின்னுவிலே இருந்தது. இந்த முறை எந்த பிசகும் நடந்து விட கூடாது என்பதில் படு தீவிரமாக இருந்தான் அண்ணன். அவன் திருமணத்திற்கான இரண்டு நாட்களிலும் தம்பிய பார்க்க வேண்டும் என்று சிசிடிவி வைத்து தன் மொபைலில் இணைத்து கொண்டு தான் மாலை போல ஊருக்கே கிளம்பினான். சக்ரவர்த்தியின் குலதெய்வ கோவில் திருச்சி என்பதால் எல்லோரும் காலையிலே கிளம்பிவிட்டனர். அங்கு அவரின் பூர்வீக வீடு இருக்க, ஈஷ்வர் முன்னமே சென்றிருந்தவன், இவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தான். அதன்படி மகா ஹோட்டலில் தங்க, விஷ்ணு குடும்பம் அவர்கள் வீட்டில். விஷ்ணு பிளைட்டில் இரவு போல வர, நிச்சயம் ஏற்பாடாகியிருந்தது. பார்த்தவுடன் என்னமோ அப்படி ஒரு கோவம். அங்கு தம்பி தனியாக இருக்கிறான், நான் அவனை விட்டு கல்யாணம் செய்ய போகிறேன் என்ற உறுத்தலில், ஆற்றாமையில், வேதனையில் இருந்தவனுக்கு இதை பார்த்ததும் கோவம். ஈஷ்வரை தேட அவன் இருந்தால் தானே..? ஏர்போர்ட்டிற்கு காரை மட்டும் அனுப்பிவிட்டவன், இப்போதும் அவன் கண் முன் வரவில்லை. “இவனை..” விஷ்ணு பல்லை கடித்தவன், மகா ரூமில் இருப்பது பார்த்து நேரே அவளிடம் சென்றான். “அச்சோ..” தூரத்தில் இருந்து பார்த்த ஈஷ்வர் வேகமாக சென்று, “விஷ்ணு.. வாடா..” அவன் கை பிடித்து கூப்பிட்டான். திரும்பி முறைத்தவன், “இவ்வளவு நேரம் எங்க இருந்தியோ அங்கேயே ஓடிடு..” சீறியவன் பார்வை திரும்ப மகாவிடம் தான் சென்றது. “மாப்பிள்ளை பொண்ணுகிட்ட பேச ஆசைப்படுறார் போல.. பாவம்..” என்று ஒரு பெண் துடுக்காக சொல்ல, மகாவிற்கு புரிந்தது அவன் கோவம். “ண்ணா.. நாங்க பேசிட்டு வரோம்..” என்றாள் அண்ணனிடம். அவன் புரிந்து எல்லோரையும் கூட்டி கொண்டு வெளியே செல்ல, விஷ்ணு அவள் அருகில் சென்றவன், “என்னடி இது எல்லாம்..?” என்று அவளின் அலங்காரத்தை பார்த்து கேட்டான். மகா அதற்கு பதில் சொல்லாமல், “நாளைக்கு கல்யாணத்துக்குள்ள இந்த தாடி எடுங்க..” என்றாள். “ராங்கி நான் என்ன கேட்கிறேன்..? நீ என்ன சொல்ற..? நான் கல்யாணத்துக்கு மட்டும் தானே ஓகே சொன்னேன், ஆனா இங்க என்னடான்னா ஒரு ஊரே கூடி நிக்குது, நிச்சயம், விருந்துன்னு அமர்க்கள படுது, அங்க என் தம்பி சுயநினைவு கூட இல்லாமல் படுத்திருக்கான், நீங்க இங்க கொண்டாடிட்டு இருக்கீங்க..?” “அவன் என் தம்பி தானேன்னு நினைச்சுட்டிங்களா..?” வார்த்தைகளை விட, மகா பட்டென அவள் தலையில் இருந்த பூவை எடுத்து டேபிளில் போட்டவள், வேகமாக வெளியே செல்ல போனாள். “ஏய் என்னடி பண்ற..?” விஷ்ணு அவள் கை பிடிக்க, மகா வலுவாக அவன் கை உதறினாள். “அகங்காரி.. இப்போ நீ எதுக்கு குதிக்கிற..?” அவள் முன் நின்று வழி மறைத்தான். “ஏன் நீங்க மட்டும் தான் கொதிக்கணுமா..? எழுதி வச்சிருக்கா..? எனக்கு ஒன்னும் அப்படி இந்த கல்யாணம் செய்யணும் இல்லை..” என்றாள் சீறலாக.