அந்த பெண்ணின் கணவரோ, “அதை சொல்ல நீ யாருடா, என் பொண்டாட்டிக்கு நான் இங்க தான் பார்ப்பேன்..”  என்று விஷ்ணுவிடம் சண்டைக்கு நின்றான். விஷ்ணு அவனை கண்டு கொள்ளாமல், அந்த அம்மாவிடமே,

“என் அம்மா ஹாஸ்பிடல் தான் அது, அட்ரஸ் தரேன், கிளம்புங்க..” என,

“அப்போ உங்க அம்மா ஹாஸ்பிட்டலுக்கு பணம் பார்க்க தான் போக சொல்றியா..? நாங்க எல்லாம் ஏமாற மாட்டோம்..” என்று எகிற,

“ஆமாமாம்.. உன்னை யாராலும் ஏமாத்த முடியாது, அது தெரியுது..” கேலியாக சொன்னான்.

“என்னடா லந்தா..”  அவன் விஷ்ணு  மேல் ஏறி கொண்டு போக, ஒரே கையால் அவனை கீழே தள்ளி விட்டவன், “என்னம்மா சொல்றீங்க..?” கேட்டான். அந்த பெண்ணின் அம்மாவிற்கு மருமகனை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை, கை பிசைந்து நிற்க,

“ம்மா.. யோசிக்காதீங்க, இப்போ  உங்க பெண்ணுக்கு ஸ்பெஷல் கேர் அவசியம்  தேவை, இங்க அது கிடைக்கணும்ன்னா நீங்க இன்னும் பல லட்சம் கட்ட வேண்டியிருக்கும், எங்க அம்மாகிட்ட சொல்றேன் பணம் வாங்க வேண்டாம்ன்னு, காசை பத்தி யோசிக்காம போங்க..”  என,

“என்னை மீறி செஞ்சிடுவாளா இவ..? அப்பறம் எப்படி அவ பொண்ணு என்கிட்ட பொழைப்பா..”  மாமியார் என்றும் பாராமல் கணவனாகப்பட்டவன் வார்த்தைகளை விட,

“என்ன நடக்குது இங்க..?”  என்று வந்தான் ஈஷ்வர் அவன் போலீஸ் தோரணையில். மகா பேசும் போதே விஷ்ணு மெசேஜ் மூலம் வர சொல்லியிருந்தான்.

நீரஜாவிற்கோ நிலைமை கை மீற கூடாது என்று புரிய, உடனே டீனை வர சொல்லி ஆள் அனுப்பினார். “என்ன விஷ்ணு யார் இவன்..? டேய் என்னடா ஹாஸ்பிடல்ல வச்சு ஓவரா சவுண்ட் விட்டுட்டு இருக்க.. யார் நீ..? என்ன பிரச்சனை இங்க..?” என்றான் அதட்டலாக.

அந்த பெண்ணின் கணவன், போலீஸை பார்த்ததும் பம்மியபடி நடந்தவற்றை சொல்ல, அங்கு வந்த மகாவிடம், “என்ன இதெல்லாம் உண்மையா டாக்டர்..” கேட்டான்.

அவள் ஆமாம் என்று சொல்ல, “நல்லதுக்கு தானே சொல்லியிருக்காங்க, அப்பறம் என்ன சத்தம்..?”

“இல்லை சார் இவன் அவங்க அம்மா ஹாஸ்பிடலுக்கு ஆள் சேர்க்க பார்க்கிறான், அதுக்கு இந்த பொண்ணும் உடைந்தை..”  விஷ்ணு, மகா இருவரையும் கை காட்டி சொன்னான்.

“அப்படியா..? உனக்கு தெரியுமா..? வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டிருக்க போல, இந்த அம்மா உன் மூஞ்சுக்கு பொண்ணு கொடுத்ததே பெருசு, இதுல மைனர் அவங்களை  மரியாதை இல்லாம கத்திக்கிட்டிருக்க, இப்போ பேசு பார்ப்போம்..”  என்றான் மிரட்டலாக கை காப்பை மேலேற்றி.

“சார் சார் இவங்க எல்லாம் சேர்ந்து என் குழந்தையை கொல்ல பார்க்கிறாங்க, அதான்..ஆஆ..” வாயை மூடி கத்தினான். ஈஷ்வர் கையை கீழிறக்கியவன்,

“இவ்வளவு நேரம் நீ பேசினதே பெருசு, ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்றதை செய், இல்லை..” விரல் நீட்டி எச்சரித்தவன், “என்ன செய்யணும் விஷ்ணு..?”   கேட்டான்.

“அவங்களை அம்மா ஹாஸ்பிடலுக்கு போக சொல்லு..” என,

“வேண்டாம்..” என்றாள் மகாவோ இடையிட்டு. ஏன்..? விஷ்ணு, ஈஷ்வர் இருவரும் பார்க்க,

“இங்க தான் சீனியர் டாக்டர் இருக்காங்களே, அவங்களே பார்க்கட்டும்..”  என்றாள்.

“ஏய் என்ன உன் அண்ணா போலீசா இருந்தா நாங்க பயந்திடுவோமா..? ஓவரா பேசுற..? டீன் வர சொல்லியிருக்கேன் வரட்டும், உங்களை எல்லாம் என்ன பண்றேன் பாருங்க..”  நீரஜா பேச,   “இவர் தானா..”  ஈஷ்வர்  விஷ்ணுவை பார்க்க, அவன் தோள் குலுக்கினான்.

“டாக்டர் மேடம் ஏன் இவ்வளவு டென்சன் உங்க டீன் தானே வரட்டும்.. பேசுவோம்..” என்றவன், விஷ்ணுவிடம் சென்று கேட்டு கொண்டிருக்க,

“என்ன இங்க பிரச்சனை..?” என்று வந்தார் டீன்.

“வாங்க சார் இவங்க தான் பேஷண்டுக்கு ட்ரீட்மெண்ட் பண்ண விடாம பிரச்சனை பண்றது..?” நீரஜா கை காட்ட, விஷ்ணுவை பார்த்தவர்,

“நீதாணடா.. இப்போ என்ன..?” என்றார்.

அவனோ, “உங்க ஸ்டாப் கிட்டயே கேளுங்க..” என்றான்.

“நீ அடங்கமாட்ட.. சொல்லுங்க நீரஜா..” என, அவர் அவருக்கு ஏற்ற படி எல்லாம் சொன்னார்.

“மகாலக்ஷ்மி நீங்க இன்டென்ஷிப் ஸ்டூடன்ட், உங்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தா..”  அவளிடம் கேட்டார் அவர்.

“டாக்டர்.. பேஷண்டோட கண்டிஷனை தான் நான் சொன்னேன்..”  மகா சொல்ல,

“சீனியர் டாக்டரை விட உனக்கு தெரியுமா..?”  டீன் கேட்டார்.

“சார் அவங்களை விட எனக்கு தெரியுமா இல்லையான்னு ஏன் பிரச்சனை..? பேசாம ஆப்பரேஷனுக்கு முன்னாடி எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கொண்டு வர சொல்லுங்க அதுலே தெரிஞ்சிடும் இல்லை..”  என்றாள் மகா.

டீனுக்கு அவள் வரும் இடம் புரிய, “அது எல்லாம் நாங்க  பார்த்துகிறோம், நீ ஒரு ஸ்டூடன்ட் போல இரு..” என்றார் அதிகாரமாக.

“சார்.. இப்போ ஏன் அவங்களை மிரட்டுறீங்க..? அவங்க சொன்னது போல அந்த ஸ்கேன் ரிப்போர்ட் உடனே என் கைக்கு வரணும், இப்போவே..”   என்றான் ஈஷ்வர் இடையிட்டு.

“சார்.. நீங்க இந்த சிட்டி டிஸ்பியா இருக்கலாம், அதுக்காக எங்க ஹாஸ்பிடல் விஷயத்துல தலையிட முடியாது..”  என்றார் டீன் திமிராக.

“ஏன் இந்த ஹாஸ்பிடல் என்ன சென்னைக்கு வெகு அருகிலா இருக்கு..? சென்னைக்குள்ள தானே இருக்கு.. அப்பறம் நீங்க எப்படி என்னோட லிமிட்ஸ் சொல்வீங்க, இப்போ சொல்றேன் இதை நான் கேஸா எடுக்கிறேன், ம்மா.. நீங்க கம்பளைண்ட் கொடுங்க, உங்க பொண்ணை இப்படி பண்ண இவங்களை கம்பி என்ன வைக்கிறேன்..” என,

“நாங்க உங்க ஹையர் ஆபிஷியல்கிட்ட பேசுவோம்..” என்றார் டீன் கொஞ்சம் டென்க்ஷனுடன்.

“இவரோட ஹையர் ஆபிஷியல் கமிஷனர் சக்ரவர்த்தி சார் தான்..” என்றான் விஷ்ணு தீர்க்கமாக. முன்னொரு காலத்தில் பவரை வைத்து கொண்டு அவரை டிரான்ஸாப்ர் செய்த பெருமையில் சுற்றி திரிந்தவர் அல்லவா இந்த டீன். விஷ்ணு இப்போது சொல்லவும்  அவர் முகத்தில் பீதியின் சாயல்.

“நாங்க மினிஸ்டர்கிட்ட பேசுவோம்..” அவர் விடமால் சொல்ல,

“பேசுங்க.. ஆனா என்ன லாஸ்ட்டா நடந்த மெடிக்கல் மாபியா என்கவுண்டரே cm தலைமையில தான் நடந்துச்சு, போட்டதும் நான் தான்..” என்றான் ஈஷ்வர் கூர்மையாக.

டீன், நீரஜா எல்லாம் நிலைமையின் தீவிரத்தில் அடுத்து என்ன செய்ய என்று தவிக்க,  “என்ன ஆரம்பிப்போமா..?” ஈஷ்வர் அவன் வேலையை ஆரம்பித்தே விட்டான்.

விஷ்ணு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஈஷ்வருக்கு சொன்னவன், முதல் வேலையாக  சக்கரவர்த்திக்கு போன் செய்து நீரஜா முன் செய்த குளறுபடியின் பைலை தூசி தட்டியது தான். அடுத்து இந்த பெண்ணின் ஸ்கேன் ரிப்போர்ட், சார்ட், ட்ரீட்மெண்ட், மெடிசின் எல்லாம் கைப்பற்றினான்.

அவர்கள் வேகத்தில் நீரஜா, டீன் அலண்டு போயிருக்க, விஷ்ணு அடுத்து செய்ததில் நீரஜாவிற்கு மொத்தமும் போனது. ஆமாம் அவர் மேல் கேஸ் பைல் செய்ததோடு, மெடிக்கல் பார் கவுன்சிலிலும் கம்பளைண்ட் செய்துவிட்டான். அவர் ஆடிப்போனார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரால் கடைசி வரை மருத்துவமே பார்க்க முடியாது அல்லவா..? இறுதியில் வேறு வழி இல்லாமல் விஷ்ணுவிடமே சென்று கேட்க,

அவனோ, “ஐம்பதிஞ்சு வயசுக்கு மேல ஆச்சு இல்லை, இனி நீங்க டாக்டரா இருந்தா என்ன இல்லாட்டி என்ன..?” என்றான். அன்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்று வேறு வடிவில் தாக்கின.

“இதுவரைக்கும் மருத்துவ துறைக்கு நீங்க செஞ்ச சேவையே போதும்.. கோட்டை கழட்ட வேண்டிய நேரம் வந்துடுச்சு..” விஷ்ணு சொன்னவன் அதை செய்யவும் முன் நின்றான்.

அந்த இரவு முழுதும் அதற்கே போக, காலையில் தான் ஓய்வாக ஹோட்டலில் அமர்ந்தனர் மூவரும். “விஷ்ணு எப்போ அந்த டாக்டர் மேல என்கொயரி இருக்கும், சொல்லு நானும் வரணும்..” என்றான் ஈஷ்வர் காபி குடித்த படி.

“இப்போ தானே கம்பிளையண்ட் கொடுத்திருக்கேன், இன்னைக்கு இல்லை நாளைக்கு இருக்கும்..”  விஷ்ணு சொன்னவன் மகாவை பார்க்க, அவள் காபி குடித்து கீழே வைத்தாள்.

“அப்பறம் விஷ்ணு  அத்தை ஏதாவது சொன்னாங்களா உங்க நிச்சயம் பத்தி..?” ஈஷ்வர் கேட்க,

“ம்ம்.. இப்போ பண்ணனுமா..? ஏன் இவ்வளவு அவசர படுறீங்க..?” விஷ்ணுவோ  மகா பார்த்து கேட்டான். அவள் பதில் சொல்லாமல் அவனை தீர்க்கமாக பார்க்க,

“இப்படி பார்த்தா எப்படி..? ஏன் இப்போ கல்யாணம் வைக்கணும் பேச்சு வந்துச்சு முதல்ல..?”  அவன் மீண்டும் மகாவிடமே கேட்டான்.

“எனக்கு தெரியாது..”  மகா சொல்ல,

“அப்போ  நீ நிறுத்த வேண்டியது தானே..?”

“நான் ஆரம்பிச்சும் வைக்கல..”

“அப்போ உனக்கு  ஓகேவா மேரேஜ்க்கு..? சின்னு இப்படி இருக்கும் போது எப்படிடி கல்யாணம் செய்ய..?”

“செய்யாதீங்க.. அவ்வளவு தானே முடிஞ்சது.. இதுக்காக என்னை இப்படி கேட்கணும்ன்னு இல்லை..”

“என்ன கேட்டுட்டேன் நான்..?”

“பின்ன உனக்கு ஓகேவா கல்யாணத்துக்குன்னு கேட்டா..? நான் ஒன்னும் உங்களோட கல்யாணம்ன்னு குதிச்சிகிட்டு இல்லை.. உங்களுக்கு இஷ்டம் இருந்தா பண்ணுங்க இல்லை ஒடுங்க..” என்றுவிட்டாள்.