“நல்ல விஷயம் துர்கா, என்ன விஷ்ணு பேசிடுவோமா..?”  மகனிடம் கேட்டார் சக்ரவர்த்தி.

அவனோ நொடியும் தாமதிக்காமல், “வேண்டாம்..”  என்றான்.

“என்ன விஷ்ணு ஏன் வேண்டாம் சொல்ற..?”  துர்கா வேகமாக கேட்க,

“என்னம்மா பேசுறீங்க சின்னுக்கு இப்படி இருக்கும் போது என் கல்யாணமா..? வாய்ப்பே இல்லை..”   திட்டவட்டமாக சொன்னான்.

“விஷ்ணு சின்னுக்கு இப்போ.. ச்சு.. அவனுக்கு எப்போ நினைவு திரும்புன்னு நமக்கு தெரியாதுடா, கடவுள் கையில தான் இருக்கு,  அதுவரை நீங்க கல்யாணம் செஞ்சுக்காம இருக்க முடியுமா..?”

“ம்மா.. அது எத்தனை வருஷம் ஆனாலும் சரி சின்னு கண் முழிச்சதுக்கு அப்பறம் தான்  எங்க கல்யாணம் நடக்கும், நடக்கணும்..”

“விஷ்ணு கொஞ்சம் பொறுமையா அம்மா சொல்றதை கேளு, சின்னுக்கு எப்போ நினைவு திரும்பும்ன்னு உறுதியா தெரியாதப்போ கல்யாணத்தை தள்ளி போடறது சரியா வராதுடா..”  சக்ரவர்த்தியும் சொல்ல,

“இல்லைப்பா.. நீங்க என்ன சொன்னாலும் இது தான் என் முடிவு..”  விஷ்ணு அவன் பிடியிலே நின்றான்.

“எல்லாம் நல்லதா கூடி வர நேரத்துல நீ ஏண்டா படுத்துற விஷ்ணு, புரிஞ்சுக்கோடா, உனக்கும், மகாக்கும் இது தான் சரியான வயசு கல்யாணம் பண்றதுக்கு, அங்க  மகாவை பெண் கேட்டு வேறு ஆளுங்க வராங்க, அண்ணா, அண்ணி யோசிக்கிறதும் சரி தானே..?”

“ம்மா.. பொண்ணு இருந்தா கேட்டு வரத்தான் செய்வாங்க, அதுக்காக எல்லாம் இப்போ கல்யாணம் செய்ய முடியாது, எனக்கு முதல்ல சின்னுவை பார்க்கணும்.. நான் கேரளால ஒரு இடத்துல விசாரிச்சிருக்கேன், அவங்க சின்னுவை கூட்டி வர சொல்றாங்க, நாங்க இன்னும் இரண்டு வாரத்துல கிளம்புறோம்..”   முடிவாக சொல்லி எழுந்து சென்றுவிட, துர்கா, சக்கரவர்த்திக்கு தலையிடி.

“இப்போ அண்ணாகிட்ட என்ன சொல்லங்க..?” கவலையாக கேட்டார் துர்கா.

“உண்மையை சொல்லு துர்கா..” சக்கரவர்த்தி சொல்ல, துர்காவும் வேறு வழி இல்லாமல் மறுநாள் நேரிலே சென்றார். மொத்த குடும்பமும் காலை உணவிற்கு கூடியிருக்க, “வாங்கண்ணி..”  கங்கா இவரை வரவேற்று உணவுண்ண அமரவைத்தார்.

பொதுவான பேச்சுகளுடன் உணவு முடிய, துர்கா, கங்கா, நரசிம்மன் மூவரும் ஹாலில் கூடினர். ஈஷ்வர் டியூட்டிக்கு கிளம்பி வர, பல்லவி உடன் இருக்க, மகா அனுவுடன் இருந்தாள்.

“அதுண்ணா..” என்று துர்கா தயங்கி எல்லார் முகம் பார்த்தார்.

“என்னம்மா சொல்லு..” நரசிம்மன் ஊக்க,

“அது விஷ்ணு இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் சொல்றான்..” என்றார். மகா,  ஈஷ்வர், பல்லவி மூவரும் புரியாமல் பார்க்க,

“ஏன்ம்மா.. இப்போ என்ன..?” நரசிம்மன் யோசனையுடன் கேட்டார்.

“இல்லைண்ணா சின்னுக்கு இப்படி இருக்கும் போது எப்படி கல்யாணம்ன்னு தயங்குறான்..” என, இப்பொது இளையவர்களுக்கு புரிந்தது. மகா புருவம் சுருங்கி விரிந்தது.

“அது சரிம்மா.. ஆனா சின்ன மருமகனுக்கு எப்போ சரியாகும்ன்னு..” நரசிம்மன் நிறுத்த,

“எனக்கும் புரியுதுண்ணா.. ஆனா சின்னு வைத்தியத்துக்கு  விஷ்ணு கேரளால எங்கோ பார்த்திருக்கானாம், இன்னும் இரண்டு வாரத்துல அங்க கிளம்பனும்  சொல்லிட்டிருக்கான்..” என,    நரசிம்மனுக்கு அதிருப்தி  போல. அமைதியாகிவிட்டார்.

“சரிண்ணி.. ஒரு உறுதி மட்டுமாவது வச்சுக்கலாம் இல்லை, எங்களுக்கும் வரவங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்காது இல்லை..”   கங்கா கேட்க, துர்காவிற்கும் இது சரி என்று தான் தோன்றியது. ஆனால் மகனை நம்பி எதுவும் பேச முடியாத நிலை.

“ம்மா.. விடுங்க, நான் விஷ்ணுகிட்ட பேசிட்டு சொல்றேன்..” அத்தையின் முகம் பார்த்து ஈஷ்வர் சொன்னான்.

பெரியவர்கள் சரி என்றுவிட, ஈஷ்வர் அன்று இரவே விஷ்ணுவை பார்க்க கேட்டான். அவனோ மகாவை பார்க்க செல்கிறேன் அங்கு வா.. என்றான். ஈஷ்வர்க்கு அவர்கள் இடையில் என்ன நடக்கிறது என்று புரியாத நிலை.

“எப்படி இவ்வளவு க்ளோஸ் ஆனாங்க, நான் இல்லாதப்போவா..?”  அப்படி அடித்து கொண்டிருந்தவர்கள் இன்று அணைத்து நிற்கும் அளவு என்றால் அவனுக்கு குழப்பம் மட்டுமே மிஞ்சியது. நேரிலே கிளம்பிவிட்டான்.

மகா டியூட்டியில் இருக்க, விஷ்ணு நேரே சென்றுவிட்டான். மகா இவனை பார்த்ததும் ஏதும் சொல்லாமல் உட்கார சேர் எடுத்து போட்டவள், பேஷண்டை பார்க்க icu  சென்றாள். ஏதோ டெலிவரி கேஸ் போல. பேஷன்டிற்கு ஆப்பரேஷன் நடந்து முடிந்திருக்க, பல்ஸ் ரேட் நார்மலுக்கு வரவில்லை.

அந்த பெண்ணின் அம்மா, “என் மகளுக்கு ஒன்னும் இல்லையே, அவளுக்கு வலிப்பு பிரச்சனை வேற இருக்கே, நான் என்ன பண்ணுவேன், மகமாயி தாயி என் பொண்ணையும்,   குழந்தையும்  காப்பாத்துமா..”  என்று அழுகையுடன் புலம்பி கொண்டிருக்க,

அந்த பெண்ணின் கணவரோ மாமியாரை ஆடி கொண்டிருந்தார்,   “உங்களை நம்பி தான் என் பொண்டாட்டிய அனுப்பினேன், பனி குடம் உடைச்சு இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க..? இன்குபேட்டரில் இருக்கிற  என் குழந்தைக்கு மட்டும் எதாவது ஆச்சு பாருங்க..” என்று அவரை வதைத்து கொண்டிருக்க, அந்த அம்மாவோ,

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாது மாப்பிள்ளை, நாங்களும் பனி குடம் உடைஞ்சதும் கூட்டி வந்துட்டோம்..”  என்று சமாதானம் சொல்லி கொண்டிருக்க, பார்த்த மகாவிற்கு வெறுத்து போனது.

எதுவும் சொல்லாமல் அவளின் டேபிளுக்கு வந்தவள், ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்து சார்ட் எழுத ஆரம்பித்துவிட்டாள். அவள் எழுதுவதை பார்த்த விஷ்ணு புருவம் சுருங்கி விரிய, பட்டென அந்த சார்ட்டை பிடுங்கி படித்தான்.

“ம்ப்ச்.. கொடுங்க..” மகா வாங்க,

“நீ என்ன பண்ணிட்டிருக்கன்னு உனக்கு தெரியுதா மகா..”  என்றான் அவன் இவளை உறுத்து விழித்து.

“நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க..?” மகாவும் இயலாமை கோபத்துடன் கேட்டாள்.

“என்ன செய்ய முடியாது உன்னால, அதுக்கு நீ மனசு வைக்கணும் அவ்வளவு தான்..”

“நான் இங்க ஜஸ்ட் இன்டென்ஷிப் தான் பண்ணிட்டு இருக்கேன், டாக்டர் இல்லை.. என்னால உங்களை போல எல்லாம் சண்டை போட முடியாது..”

“ஏன் போட்டா என்ன..? அந்த அம்மா அழுகையும் பார்த்து எப்படி அமைதியா இருக்க,  உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல மகா..”

“இப்போ நான் போய் அவங்ககிட்ட உண்மையை சொன்னா மட்டும் அவங்க ஏத்துப்பாங்க நினைக்கிறீங்களா..? கண்டிப்பா இல்லை..”  மகா அடித்து சொன்னாள்.

“பேசாம  சொல்ல கூடாது மகா.. போய் முதல்ல அவங்ககிட்ட சொல்லு போ..”  அவள் தோள் பிடித்து திருப்பி விட்டான். இவன் பிடிவாதம் தெரிந்தவள் என்பதால் மகா நேரே அந்த பெண்ணின் கணவன், அம்மாவிடம் சென்றவள்,

“உங்க பொண்ணுக்கு பனிக்குடம்  உடைஞ்சதால எந்த பிரச்சனையும் இல்லை, உள்ள குழந்தைக்கு போதுமான தண்ணி இருந்தது, முயற்சி பண்ணியிருந்தா சுக பிரசவமே பண்ணியிருக்கலாம், ஆப்பரேஷன் தேவை பட்டிருக்காது..” என,

“என்னம்மா சொல்ற நீ..? இதை முதல்லே சொல்லியிருக்கலாம் இல்லை..” அந்த பெண்ணின் அம்மா இவள் மேல் பாய்ந்தார்.

“நான் இப்போதான் டியூட்டிக்கு வந்தேன்ம்மா, முன்ன வந்தாலும் சொல்லியிருப்பானா தெரியல, ஏன்னா நீங்களே போய்  ஆப்பரேஷன் பண்ணலாம்ன்னு டாக்டர்கிட்ட கேட்டிருக்கீங்க..”

“அது பனிக்குடம் உடைஞ்சதால சீக்கிரம் குழந்தையை வெளியே எடுத்துடனும், விட்டா  குழந்தைக்கு ஆபத்து சொல்லிட்டாங்கன்னு என் மாப்பிள்ளை தான் உடனே பண்ணுங்க சொல்லிட்டார்..”

“அப்போ நான் தான் தப்பு சொல்றீங்களா..? டாக்டர் சொன்னதை தான் நான் செஞ்சேன், அதோட இந்த பொண்ணுக்கு என்ன தெரியும்.. இருங்க நான் பெரிய டாக்டர்கிட்டே கேட்டுட்டு வரேன்..”   என்று அவன் நீரஜாவிடம் செல்ல, அந்த பெண்ணின் அம்மாவோ மகளை நினைத்து அழுது கொண்டிருந்தவர்,

“இப்போ என்னம்மா பண்றது..? என் மகளை காப்பாத்த முடியாதா..?” கேட்டார்.

“காப்பாத்தலாம்மா..  நீங்க டாக்டர்கிட்ட தைரியமா  பேசுங்க.. சீப் டாக்டர் வர சொல்லி பார்க்க கேளுங்க..” சொல்லி கொண்டிருக்க,

“மகா என்ன இது..? இவர் என்னென்னமோ சொல்றார்.. உன் வேலை என்ன நான் சொல்றதை செய்றது தானே..? உன்னை  யார் இவங்ககிட்ட பேச சொன்னா..? ஹாஸ்பிடல் ரூல்ஸ்க்கு எதிரா நடந்துகிட்டத்துக்கு உன்மேல சிவியர் ஆக்க்ஷன் எடுக்காம விட மாட்டேன்..” நீரஜா வந்ததும்   காச்சு மூச்சென்று கத்த, மகா திரும்பி விஷ்ணுவை தான் பார்த்தியா என்பது போல பார்த்தாள்.

நீரஜா அவள் பார்வை போன திசை பார்த்து இன்னும் உச்சிக்கே சென்றுவிட்டார் போல, “இவன் செய்ய சொன்னானா உன்னை இப்படி..? எனக்கு தெரியும் இவனுக்கு தான் இந்த தைரியம் எல்லாம் உண்டு, இருங்க இப்போவே டீன்கிட்ட பேசி உன் இன்டென்ஷிப்பையே கேன்சல் பண்ண வைக்கிறேன்..”  என்று பெரிதாக மிரட்ட,

 விஷ்ணு அவரை நேர் கொண்டு பார்த்தவன், “செய்ங்க..” என்றான் ஒற்றை வார்த்தையில். அவன் முடிவெடுத்து விட்டான். மகா தலை ஆட்டிகொண்டவள், பேஷண்டை பார்க்க சென்றாள்.

“செய்ய தான் போறேன், முன்ன இல்லை நீ தப்பிச்சது, இந்த முறை இவளை விட மாட்டேன்..”  என்றார் அகங்காராமாக.

“செய்ங்கன்னு தான் நானும் சொல்றேன், அதுக்கு முன்னாடி..” என்று அந்த பெண்ணின் அம்மாவிடம் வந்தவன், “உங்க பொண்ணை நான் சொல்ற ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போங்க, அவங்க நல்லா பார்ப்பாங்க..”  என்றான்.