“இன்னைக்கு என்ன ஆச்சு..?” விஷ்ணு பக்கத்தில் அமர்ந்தான் ஈஷ்வர்

என்ன பல்லவியை பார்த்துட்டு வந்திருக்க போல..”  ஈஷ்வரின் முக மலர்ச்சியில்  விஷ்ணு கிண்டலாக கேட்டான்.  

“என் லவியை நான் தினமும் தான் பார்க்கிறேன், நீ முதல்ல நான்  கேட்டதுக்கு  பதில் சொல்லு..” ஈஷ்வர் அவனை பார்த்தபடி  அமர்ந்து கேட்டான்

விஷ்ணு பதில் சொல்லாமல் முன்னால்  பார்த்தான். மாலை நேர பீச் காற்று இருவரின் முன் உச்சி முடிய கலைத்து விளையாடி கொண்டிருந்தது

விஷ்ணு..”  ஈஷ்வர் திரும்ப கூப்பிட

எப்படியும் உன் தொங்கச்சி உனக்கு சொல்லியிருப்பா இல்லை, அப்பறம் என்னடா..”  நேரே பார்த்தவாறே கேட்டான்

நீ காலேஜ்ல கோவப்பட்டதுக்கு நான் கேட்கல விஷ்ணு, நீ எப்போவும் சரி, ஆனா அத்தையை ஏன் இன்னும் பேசுற..? அவங்க பாவம் இல்லையா..?” ஈஷ்வர் ஆதங்கத்துடன் கேட்டான்

நீங்க உங்க ரத்தத்துக்கு கேட்கிறீங்க..? நான் என் ரத்தத்துக்கு கேட்கிறேன் அதுல  என்ன தப்பு..?”

அப்போ நீ எங்க அத்தை ரத்தம் இல்லையா..?”

இருந்து என்ன பிரயோஜனம்..? என் தம்பி இன்னிக்கு இப்படி இருக்க காரணமே அவங்க தானே..?”

தெரியாம நடந்த ஒரு விஷயத்துக்கு இன்னமும் நீ  அத்தையை பிளேம் பண்றது நல்லா இல்லடா.. அவங்க சின்னுக்கு அம்மா, உன்னை விட அவங்களுக்கு தான்  வேதனை அதிகம்..”

ச்சு.. ஈஷ்வர் என்னை கொஞ்ச நேரம் தனியா விடு..” அவன் நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தான்

எழுந்து போய் தொலைடா.. இல்லை கடல்ல தூக்கி போட்டிருவேன்..”

போறேன்.. இருடா..” ஈஷ்வர் அவன் மனம் உணர்ந்து தனிமை கோடுக்க, எழுந்து நடக்க செல்ல, விஷ்ணு முன்னால் பார்த்தான்

எப்போதும் போல இப்போதும் அலைகள் அவனை பார்த்து சிரித்தது. நான் தான் கரைய தேடி அலைகிறேன் என்றால் நீயும் கிடைக்கவே கிடைக்காத கரையை தேடி அலைந்து கொண்டிருக்கிறாய்..???  ஒவ்வொரு அலையும் அவன் காலை நனைத்து எதார்த்தத்தை ஏற்று கொள்ள அவனை உந்தியது

ம்ஹூம்.. அவனால் தான் இன்னமும் சில விஷயங்களை ஏற்று கொள்ள முடியவில்லை. பெருமூச்சுடன் தனக்குள் சொல்லி கொண்டான், “நானும் ஒரு நாள் இதிலிருந்து வெளியே வருவேன், மற்ற  மனித மரங்களை போல நானும் காத்து வீசும் பக்கம் எல்லாம் போவேன், எதிர்த்து நிற்க மாட்டேன்..”  தன்னை தானே மாற்றி கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறான்

இருள் சூழ ஆரம்பிக்கவும், “போலாமா..?”  ஈஷ்வர் விஷ்ணு பக்கத்தில் வர, அவனும் மறுபேச்சின்றி எழுந்து கிளம்பினான். 

“மாமா நாளைக்கு வரார் போல..”  ஈஷ்வர் நடந்து கொண்டே கேட்க, 

“ம்ம்.. வீட்டுக்கு வரியா..” விஷ்ணு பைக் எடுத்து கேட்டான். 

“இல்லைடா.. லேட் ஆச்சு, அம்மா போன் பண்ணிட்டாங்க..” ஈஷ்வரும் அவன் பைக் எடுக்க, இருவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினர். 

“வந்துட்டான்ங்க..”  துர்கா இவன் பைக் சத்தம் கேட்கவும் போன் பேசி கொண்டிருந்த சக்கரவர்த்திக்கு சொன்னார். 

“சரி நீ எதுவும் பேசாத..” அவர் சொல்லி கொண்டிருக்க, விஷ்ணு நேரே சின்னு ரூமிற்க்கு சென்றான். 

“ண்ணா.. படம் சூப்பர்.. நீயும் வா..”  படம் பார்த்து கொண்டிருந்த சின்னு இவனை பார்த்ததும் குதூகலத்துடன் கூப்பிட்டான். 

“நான் பார்த்துட்டேன் சின்னு, நீ பாரு..”  என்றவன், மேலே ரூமிற்கு சென்று ரிப்ரெஷ் செய்து கீழே வந்தான். 

“விஷ்ணு சாப்பிடலாம் வாப்பா..” ருக்கு இவனை கூப்பிட, 

“வச்சு கொடுத்துடுங்க ருக்கு..” உணவுடன் சின்னு ரூமிற்கு சென்றான்.

“கணேஷ்ண்ணா நீங்க சாப்பிட்டு தூங்க போங்க.. நான் இருக்கேன்..”  அவரை அனுப்பிவிட்டவன், தம்பிக்கு ஊட்டி கொண்டே இவனும் சாப்பிட்டான். 

“போதும்ண்ணா..”  சின்னு சொன்ன பிறகும் மேலும் ஒரு இட்லி வைத்து ஊட்டியவன், தான் சாப்பிட்டு முடித்து பிளேட் எடுத்து சென்று கிச்சனில் வைத்து வந்தான். 

“படம் முடிஞ்சிருச்சுண்ணா, ரொம்ப நல்லா இருந்துச்சு, வேற படம் இருக்கா..?”  சின்னு ஆர்வத்துடன் கேட்க, 

“இருக்கு.. நாளைக்கு பார்க்காலம், இன்னிக்கு என்ன படிச்ச அதை முதல்ல சொல்லு..”  அவனின் பேக்கை எடுத்தான். 

“படிச்சேன்..”  சலிப்பாக சொன்ன துருவ் முகம் சுருங்கியது. அவன் மிகவும் வெறுக்கும் நேரங்கள். சில நொடிகள் அப்படியே அமர்ந்தான். 

முடியவில்லை. போகவும் பிடிக்கவில்லை. மற்ற நேரங்களில் சமாளிக்க கூடியவனுக்கு  இந்த நிமிடங்களில் எரிச்சல், கோவம், ஏன் அழுகை கூட கொந்தளிக்கும். சிறு வயதில் என்றால் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. வளர்ந்து டீனேஜில் நிற்பவனுக்கு இந்த நிமிடங்கள் சகிக்கவில்லை. அண்ணனே என்றாலும் சங்கடம். 

இயலாமையுடன் எட்டி வீல் சேரை இழுத்தான். “ம்ப்ச்.. என்கிட்ட சொல்றதுக்கு என்னடா..?” விஷ்ணு தம்பியை தன் கையில் தூக்கி சென்று பாத்ரூமில் விட்டு வெளியே வந்தான். 

பெட்டிற்கு பக்கத்தில் இருந்த வீல் சேர் அவன் பார்வை வட்டத்திற்கு விழுக, சின்னு நிற்காமல் ஓடிய நாட்கள் நினைவிற்கு வந்தது. உள்ளே தண்ணி விழுகும் சத்தம் நிற்கவும் விஷ்ணு தம்பிய தூக்கி வந்து பெட்டில் உட்கார வைத்தவன், அவனின் பாடபுத்தகத்தை எடுத்தான். 

“மேத்ஸ் சார் வந்தாரா..?” அன்றைக்கான நோட்ஸ் எடுக்க, 

“வரல..” என்றான் சின்னு. 

“ஏன் வரல..? நான் காலையிலே சொல்லிட்டேனே..”  விஷ்ணு கேட்க, 

“தெரியலண்ணா..”

“நீயும் போன் பண்ணி கேட்கல, ஜாலியா இருந்திட்ட..”

“ண்ணா.. நான் படிச்சு என்ன பண்ண போறேன், விடேன்..”

“சின்னு இன்னொரு முறை இப்படி பேசின கண்டிப்பா அடி வாங்குவ, நீ படிக்காம ஏமாத்த இது சாக்கு உனக்கு..”  விஷ்ணு கடிந்து கொண்டிருக்க,  சின்னு போன் ஒலித்தது. 

“இந்த ஆப் பாயிலை..” விஷ்ணு  பல்லை கடித்து போன் எடுக்க, 

“ஓய் முறை பையா..” என்றாள் மகா மறுபக்கம் உற்சாகமாக.

“எதுக்கு போன் பண்ண..?” விஷ்ணு கேட்க, 

“ஐயே இது முறைக்கிற பையா..” என்றாள் கேலியாக. 

“இப்போ எதுக்கு சின்னுக்கு  போன் பண்ண..? உனக்கு தான் ஒரு வேலையும் இல்லை, உன் அடிமை அந்த இஷான் எல்லா நோட்ஸ் கொடுத்துடுறான், மத்தவங்களும்  அப்படியா..? அவன் இந்த வருஷம் ப்ளஸ் டூ, சும்மா சும்மா அவனை தொல்லை பண்ணாத..”

“அதை நீங்க சொல்லாதீங்க, நானாச்சு, என் சின்னுவாச்சு,  நீங்க போனை அவன்கிட்ட கொடுங்க..”

“அடிங்க.. நான் என்ன சொல்லிட்டிருக்கேன், அவன் படிக்கணும், வைடி..”  கட் செய்து தூக்கி போட்டவன் உர்ரென்று தன்னை பார்த்த தம்பியின் தலையில் கொட்டினான். 

“ண்ணா..”  தலையை தேய்த்து கொண்டு சிணுங்கியவன், விஷ்ணு விட மாட்டான் என்று தெரிந்த படிக்க செய்தான். 

“ஓகே இது போதும், மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம்.. பால் கொண்டு வரேன் இரு..”  வெளியே சென்று பால் எடுத்து வந்து தம்பிக்கு கொடுத்தான். சின்னு குடித்து முடிக்க, திரும்பவும் பாத்ரூம் கூட்டிக்கொண்டு வந்தவன், படுக்க வைத்தான். 

“நீ படிக்க போறியாண்ணா..?” சின்னு கேட்க, 

“இல்லைடா.. தூங்கலாம்..” என்றவன் தம்பியுடன் படுத்தான். 

“ண்ணா.. நான் ப்ளஸ் டூ முடிச்சு ஆர்ட்ஸ் படிக்கட்டுமா..? எனக்கு நல்லா படம் வரைய வருது இல்லை..”  சின்னு உற்சாகத்துடன் கேட்டான். 

“க்கும் ஆரம்பிச்சிட்டியா..? உனக்கு தினம் தினம் ஒரு சாய்ஸ்..”  விஷ்ணு சலித்து கொள்ள, 

“ண்ணா..” என்ற சின்னு விஷ்ணு பக்கம் திரும்ப முதலில் முதுகை திருப்பியவன், கை எடுத்து அசையாத தன் இரு கால்களை திருப்பி விட்டான். பார்த்திருந்த விஷ்ணு தொண்டை குழி ஏறி இறங்கியது. 

சின்னு முகம் பார்க்கவும் சாதாரணமாக வைத்தவன், “என்ன திடீர் ஆர்ட்ஸ்..?”  கேட்டான். 

“மகா தான் சொன்னா நான் சூப்பரா டிராயிங் பண்றேன்னு..”

“அவ சொன்னான்னா கண்டிப்பா தப்பா தான் இருக்கும், அவளே ஒரு அரை வேக்காடு, அவ உனக்கு ஐடியா கொடுக்கிறாளா..?”

“ண்ணா.. நீ சும்மா சும்மா மகாவை பேசாத, அவளும் உங்களை போல  டாக்டர்..”

“க்கும்.. அவ படிக்கிற லட்சணம் எனக்கு தான் தெரியும், சரியான மக்கப்டா அவ..” விஷ்ணு எப்போதும் போல மகாவை ஓட்ட, சின்னு எப்போதும் போல அவளுக்கு முட்டு கொடுக்க என்று அப்படியே தூங்கி போயினர். 

இடையிடையே விஷ்ணு எழுந்து தம்பியை பார்த்து தூங்கினான்.  மறுநாள் காலை எப்போதும் போல விஷ்ணுவிற்கு நேரமே விழிப்பு வந்துவிட, திரும்பி சின்னு முகத்தை பார்த்தான்.  

அவன் சுவாசம் ஏறி இறங்க, நிம்மதியுடன் பார்த்த அன்ணனுக்கு திரும்ப தொண்டை குழி ஏறி இறங்க, தம்பி தலையை வருடியவன், பெட் சீட் போர்த்தி, கதவு மூடி சென்றான். 

“ருக்கு கிரீன் டீ..” சக்ரவர்த்தி சத்தம் கேட்க, விஷ்ணு நின்று தந்தையை பார்த்தான். அவரும் அவனை பார்க்க, தலை அசைப்புடன் ரூம் சென்றவன், ஜாக்கிங்கிற்கு கிளம்பி வந்தான்.