அவனை அணைத்தபடி முகம் பார்த்த மகாவின் பார்வையில், அவளின் நெற்றி முட்டிய விஷ்ணு, “ஏன் அப்படி பார்க்கிற..? நான் கேட்டதுக்கு ஓகேவா..?” என்றான்.
மகா பதில் சொல்லாமல் திரும்ப அவன் நெஞ்சில் முகம் புதைந்து கொண்டாள். “ஓய் சிங்காரி.. இதுக்கென்ன அர்த்தம்..?” விஷ்ணு அவள் முகம் நிமிர்த்தி கேட்க, மகா கண்களோ அவனை மருள மருள பார்த்தது. அதில் விஷ்ணு இதழ்கள் தானாகவே மகாவின் நெற்றியில் அழுத்தமாக பதிந்தது.
மகளிடம் பேச வந்த கங்கா பார்வையில் இக்காட்சி விழ, அம்மாவாக அவருக்கு கொஞ்சம் பக்கென்று தான் ஆனது. “இதென்ன..?” வேக நடை போட்டு ரூம் அருகில் செல்ல போக,
“ம்மா..” என்று ஈஷ்வர் அவர் கை பிடித்து நிறுத்தினான். அவனும் தங்கையிடம் பேச அம்மா பின் வந்தவன் இக்காட்சி பார்த்து அதிர்ச்சி ஆச்சரியம் கொண்டவன், கங்காவை தடுத்தான்.
“ஈஷ்வர் அவங்க..” கங்கா அவர்களை பார்க்க, விஷ்ணு மகாவை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டிருந்தான்.
“ஈஷ்வர்.. என்னடா இது..?” அவர் குரல் கொஞ்சம் சத்தமாகவே வர,
“ஸ்ஸ் ம்மா.. வாங்க..” என்று கை பிடித்து தள்ளி கூட்டி சென்றுவிட்டான்.
“இப்போ என்னம்மா..? அவங்களுக்கு நாமளே பேசி வச்சது தானே.. அப்பறம் என்ன..? இருங்க..” ஈஷ்வர் அவரை அமைதி படுத்த பார்த்தான்.
“பேசி தான் வச்சிருக்கு ஈஷ்வர், ஆனா இன்னும் நிச்சயம் கூட செய்யல, அதுக்குள்ள இது.. இப்படி.. ச்சு.. முதல்ல மகாவை கூட்டிட்டு போலாம்..” கங்காவிற்கு இதை எப்படி ஏற்று கொள்ள முடியும்..? ஏற்கனவே மகள் பேசியதில் கவலையில் இருந்தவர்க்கு இதுவும் சேர்ந்து கொள்ள நிதானம் தப்பி போனார் அந்த நேரத்தில்.
“ம்மா.. ப்ளீஸ், கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க, ஏன் இவ்வளவு படபடப்பு..?”
“ஈஷ்வர்.. இப்போ என்ன நான் பொறுமையா இருக்கணும் அதானே, நான் பொறுமையா தான் இருக்கேன், நீ போய் முதல்ல உன் தங்கச்சிய கூட்டி வா போ..” கங்கா அதிலே நிற்க, கேட்க மாட்டார் என்று புரிந்து கொண்ட ஈஷ்வர்,
“சரி நீங்க போங்க, நான் போய் கூட்டி வரேன்..” என்று அவரை அனுப்பி விட்டவன், ரூம் அருகில் செல்லும் போதே, “விஷ்ணு..” என்று கூப்பிட்டு கொண்டே சென்றான்.
அதுவரை மகா விஷ்ணு அணைப்பிலே நின்றிருந்தவள், அண்ணன் குரல் கேட்கவும் தள்ளி நின்றாள். விஷ்ணு அவளின் முகம் பார்த்தவன், திரும்பி ஈஷ்வரை பார்க்க, அவன் இப்போது கதவுக்கருகில் வந்திருந்தான்.
“வாடா..” விஷ்ணு கூப்பிட, ஈஷ்வர் தங்கையை பார்த்தபடி உள்ளே வந்தான். அவள் இவன் முகம் பார்க்காமல், எங்கோ பார்த்து நிற்க, “அம்மா மகாவை கூட்டி வர சொன்னாங்க..” என்றான்.
மகா கேட்டவள், முகம் துடைத்தபடி ரூமை விட்டு வெளியே செல்ல, ஈஷ்வர் விஷ்ணுவை பார்த்தான். “என்ன ஈஷ்வர்..?” அவன் பார்வையில் விஷ்ணு கேட்க, ஈஷ்வருக்கு அவனிடம் கேட்க நூறு கேள்வி இருந்தது.
ஆனால் இப்போது கேட்க வேண்டாம் என்று நினைத்தவன், “ஒன்னுமில்லை.. வா போலாம்..” என்று அவனுடன் ஹாலுக்கு வந்தான். அங்கு கங்கா மகள் கை பிடித்து பக்கத்தில் அமர வைத்து கொண்டிருக்க, விஷ்ணு ஒரு பார்வை பார்த்தவன் நேரே சின்னு ரூமிற்கு சென்றுவிட்டான்.
“கிளம்பலாமா ஈஷ்வர்..?” கங்கா கேட்க,
“சரிம்மா..” என்றவன், அனுவை கையில் எடுத்து கொண்டான்.
“இருங்க அண்ணி நைட் சாப்பிட்டே போலாம்..” துர்கா சொல்ல,
“இருக்கட்டும் அண்ணி.. இன்னொரு நாள் பார்ப்போம்..” என்றுவிட்டார் கங்கா. ஈஷ்வர் மகளுடன் சென்று விஷ்ணுவிற்கு சொல்லி கொண்டு வெளியே வர, அவனும் உடன் வந்தவன் மகாவை பார்த்தான்.
அவளோ இன்னமும் ஒருவித அழுத்தத்திலே இருப்பது புரிய, அவள் அருகில் செல்ல போனான். அவனையே பார்த்து கொண்டிருந்த கங்கா, மகளின் கையை இன்னும் நன்றாக பிடித்து கொண்டு, “அப்போ நாங்க கிளம்பறோம்..” என்று எழுந்துவிட்டார். விஷ்ணு அவரை பார்த்து புருவம் சுருக்கினான்.
“சரிங்கண்ணா..” என்றவர், பல்லவி, ஈஷ்வரை நிற்க வைத்து தாம்பூலம் கொடுத்தார். அதில் மூவருக்கும் பட்டு துணி, நகை, பூ, பொட்டு, வளையல் எல்லாம் இருக்க, தயக்கத்துடன் ஈஷ்வரை பார்த்தாள். அவன் கண் அசைக்க எடுத்து கொண்டாள். எல்லோரும் வெளியே வர, மகாவின் லக்கேஜ் காருக்கு சென்றிருந்தது.
“மகா உனக்கு தேங்க்ஸ் சொல்ல கூடாது, ஆனா என்னால சொல்லாமலும் இருக்க முடியல, இத்தனை மாசம் உன்னோட சப்போர்ட் இல்லன்னா நான் தனியா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன், தேங்க்ஸ்டா..” துர்கா அவளை அணைக்க,
“அத்தை.. சின்னுக்கு செஞ்சதுக்கு எல்லாம் ஏன் தேங்க்ஸ் சொல்றீங்க.. அவன் நம்ம சின்னு தானே..?” மகாவும் அவரை அணைத்து கொள்ள, பார்த்திருந்த எல்லோருக்கும் நெகிழ்வான நொடிகள்.
“உங்களுக்கும் நன்றிண்ணி.. என் சூழ்நிலை புரிஞ்சு மகாவை இங்கு விட்டிருந்தீங்க..” கங்காவின் கை பிடித்து துர்கா சொல்ல,
“என்னண்ணி இது நன்றின்னு எல்லாம் சொல்லிக்கிட்டு, நம்ம சின்னுக்கு செய்ய என்ன..? பாருங்க அவன் சீக்கிரம் சரியாகிடுவான்..” அவரின் கை பிடித்து ஆறுதலாக தட்டி கொடுத்தார் கங்கா.
“கிளம்பலாம்..” நரசிம்மன் சொல்ல, மறுபடியும் ஒருமுறை சொல்லிக்கொண்டு எல்லோரும் காரில் ஏறிக்கொண்டனர் பல்லவியும் சேர்த்து. ஈஷ்வர் மட்டும் தனியே பைக் எடுத்து கிளம்ப, கார் கிளம்பியது.
கடைசி நொடியில் மகா திரும்பி விஷ்ணுவை பார்க்க, அவன் தலை அசைத்தான். அவளும் தலை அசைக்க, பார்த்த கங்காவிற்கு இவர்கள் திருமணத்தை முடித்துவிட்டால் என்ன என்றே தொன்றியது.
அதற்கேற்றாற் போல் அந்த வாரமே மகாவை கேட்டு தூரத்து சொந்தம் என்று ஒரு குடும்பம் வந்து நின்றனர். “என்ன மச்சான் இது என் பொண்ணு என் தங்கச்சி மகனுக்கு தான்னு உங்களுக்கு தெரியாதா..?” நரசிம்மன் அவர்களிடம் நேரடியாக கேட்க,
“இல்லை நரசிம்மா, விஷ்ணு தம்பி இப்போ கொஞ்சம் சரியில்லாம இருக்குதுன்னு கேள்விப்பட்டோம், அதான் நீங்க அங்க சம்மந்தம் பண்ணுவீங்களோன்னு..” அவர் இழுத்தார்.
“விஷ்ணுவுக்கு சின்ன மருமகன் உடம்பு முடியாம இருக்கிற வேதனை, வருத்தம் தான் மாமா, மத்தபடி அவருக்கு என்ன..? என் மகளுக்கு அவரை விட மாப்பிள்ளையா..? என்னிக்கு இருந்தாலும் அவர் தான் என் மருமகன்..” முடித்துவிட்டார் நரசிம்மன் நடுச்சபையில்.
அவர்களும் விடைபெற்று கொள்ள, மகாவிற்கு இது தெரிந்தாலும் கண்டு கொள்ளவில்லை. அவள் இரவில் டியூட்டி சென்று வருபவள் பகலில் தூங்கினாள். முழித்திருக்கும் நேரம் அனுவுடன் நேரம் செலவழித்தாள். எப்போதும் போல தான் இருந்தாள். ஆனால் அப்படி இல்லை.
அப்பா, அண்ணனிடம் பெரிதாக பேச்சு வார்த்தை இல்லை. முன்பிருந்த ஒட்டுதல் கூட அவள் பேசியதில் இருந்து குறைந்து போனது. அதை சரி செய்யவும் மகா நினைக்கவில்லை. அவளுக்கு அது வரவும் வராது.
“என் மனசை நான் சொன்னேன் அவ்வளவு தான், அவங்களும் அப்படித்தானே நடந்துக்கிட்டாங்க.. அப்பறம் என்ன..?” ஒரு புகை போலான இருள் விழுந்தது மூவர் உறவுக்குள்.
புரிந்த நரசிம்மனும், ஈஷ்வரும் அவளை அணுக முடியாமல் நின்றனர். அவள் வாய் திறந்து இப்படி என்று சொல்லாவிட்டால் அவர்களுக்கு அவளின் மனக்குமுறல் தெரிந்திருக்குமோ என்னவோ, இத்தனை வருடம் மகா அதை விடுத்து அவர்களிடம் சாதாரணமாக இருந்தவள் தானே அவளாக சொல்லும்வரை.
அதனாலே அப்பா, மகன் இருவரும் அவளிடம் நெருங்க முடியாமல் நின்றனர் போல. மற்றபடி அந்த வீட்டு பெண்கள் நால்வரும் நன்றாக தான் இருந்தனர். பல்லவிக்கும், மகாவிற்கும் ஒரு புரிதல் வந்திருக்க, பேச்சு நட்புடனே சென்றது. அனு இப்போது அத்தையிடம் ஒட்டி கொள்ள, இருவரும் ஸ்கூட்டியில் வெளியே சென்று வர கூட செய்தனர்.
நாட்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றாலும் அமைதியாக சென்றது மகாவிற்கு. இதில் தன்னை குழப்பி கொண்டது கங்கா தான், அவர்கள் பார்த்த மகா, விஷ்ணு நெருக்கம் அவரை உறுத்தி கொண்டே இருந்தது போல. அதனாலே நரசிம்மனிடம் இருவர் திருமணத்தை பேசிவிட்டார்.
அவரோ, “இப்போ என்ன அர்ஜன்ட் கங்கா..? மகா இன்னும் படிச்சு முடிக்கலையே..?” என்றார்.
“அதெல்லாம் கல்யாணம் முடிச்சு படிச்சுக்கட்டும்.. மகாக்கு இது கல்யாண வயசு தானே அப்புறம் என்ன..? நீங்க முதல்ல அண்ணிகிட்ட பேசுங்க.. இல்லை இப்படித்தான் பொண்ணு கேட்டு வருவாங்க, எல்லோருக்கும் நாம பதில் சொல்லிட்டே இருக்க முடியாது, அவளுக்கு உடைந்தபட்ட இடத்துக்கு அவ போகட்டும்..” வித விதமாக பேசி நரசிம்மனை சம்மதிக்க வைத்தார்.
நரசிம்மனும் மறுநாள் துர்காவிடம் இப்படி என்று பேச, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி தான். “நானே உங்ககிட்ட இது பத்தி பேசணும் நினைச்சிட்டு இருந்தேன்ண்ணா, ஆனா நீங்க மகாக்கு இப்போ கல்யாணம் செய்ய நினைப்பீங்களோ இல்லையோன்னு தான் கேட்காம இருந்தேன், இப்போ தான் நீங்க சொல்லிட்டீங்க இல்லை, நான் இவர்கிட்ட பேசிட்டு சீக்கிரம் உறுதி பண்றது போல வச்சுக்கலாம்..” உற்சாகத்துடன் சொன்னவர், இரவு உணவுண்ணும் போது மகன், கணவனுக்கு இப்படி என்று சொன்னார்.