விஷ்ணு, “அவன் உன் அண்ணன் தானே.. விடு..” என்றான் ஈஷ்வரின் முகம் பார்த்து.
“எனக்கும் புரியுது இப்போ இது தேவையில்லாத பேச்சுன்னு, ஆனாலும் என்னால நிறுத்த முடியல..” என்றாள் உச்சகட்ட அழுத்தத்தில்.
விஷ்ணுவிற்கு அவள் நிலை புரிய, “வா..” என்று அவள் கை பிடித்து இழுத்து சென்றான். மகா அவன் பின்னே சென்றவள், என்ன நினைத்தாளோ கை விட்டு வேகமாக பல்லவியிடம் வந்தவள்,
“நான் உங்களை மீன் பண்ணி எதுவும் பேசல அண்ணி..” என்றாள்.
“எனக்கு உன் மனசு புரியுது மகா, எனக்கும் ஒரு அண்ணா இருக்காங்க தானே..?” என்றாள் பல்லவி அவள் கை பிடித்து ஆதரவாக.
“மகா நீ உன் அண்ணனை தானே கேட்ட, பல்லவிக்கு புரியும், நீ வா..” விஷ்ணு மீண்டும் அவள் கை பிடித்து ரூமிற்கு சென்றவன், “என்ன ஆச்சு உனக்கு..?” என்றான் நேராக நிறுத்தி.
“தெரியல..” மகா சோர்வுடன் சொன்னாள்.
“என்ன தெரியல..? ஈஷ்வர் முகம் வாடி போச்சு, அவனும் பாவம் தானே..?” அவள் சண்டை போடுவாள் என்று தெரிந்தே கேட்டுவிட்டான். ஈஷ்வர் வருத்தம் அவனை பாதிக்காமல் இருக்குமா..?
புரிந்த மகா அவனை நேராக பார்த்தவள், நெருங்கி அவனை கட்டி கொண்டாள். விஷ்ணுவிற்கு அதிர்ச்சி ஆச்சரியம் தான்.
“மகா..” குரல் லேசாக வர, கைகள் அணைக்காமல் திணறின.
மகா அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என் மேலயும் இப்படி பாசம் வைப்பீங்களா..?” அவ்வளவு எதிர்பார்ப்புடன் கேட்டாள்.
விஷ்ணுவிற்கு அவள் குரல், முகம் எதுவும் தாங்கவில்லை. தானும் அவளை அணைத்து கொண்டவன்,
“ஏன் பாசம்..? நான் என்னையே உனக்கு தரேன்.. வாங்கிக்கிறியா..?” என்றான்.