அடங்காத நாடோடி காற்றல்லவோ 15 1 13944 அடங்காத நாடோடி காற்றல்லவோ 15 “இன்னும் கிளம்பாம என்ன பண்ற மகா..? நாங்க நாங்க அண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டோம், நீ சீக்கிரம் வந்துடு..” கங்கா குரலில் அவ்வளவு உற்சாகம், மகிழ்ச்சி. பின்னே இத்தனை வருடம் அவர் எதற்காக ஆசைப்பட்டாரோ அது நடக்கிறது அல்லவா..? எல்லோரும் இணைந்திருக்கும் ஒரு குடும்பம். மகன், மருமகள், பேத்தி வந்திருக்க, மகளும் வந்துவிட்டால் அவர் குடும்பம் முழுமை அடைந்து விடும் அல்லவா..? அங்கு மகாவும் அவள் வீட்டிற்கு செல்வதில் ஆவலாக இருந்தவள், “வந்துடுவேன்ம்மா.. நீங்க போங்க..” என்றாள். “சரி சரி லேட் பண்ணாம சீக்கிரம் வந்துடு.. அனு கீழே விழுந்துடுவ, பத்திரம்..” மடியில் துள்ளி கொண்டிருந்த பேத்தியை இழுத்து பிடித்தபடி மகளிடம் சொன்னார். “அனு குட்டி குதிக்கிராளாமா..? பத்திரமா பிடிங்கம்மா..” என்ற மகாவிற்கு அண்ணன் மகளை பார்க்கும் ஆசை இப்போதே வந்துவிட்டது. “உன் மருமகளை நான் பிடிச்சுகிறேன்டி, நீ வந்து சேரு..” கங்கா வைக்க, மகா மலர்ந்த புன்னகையுடன் அவளின் வார்டுக்குள் சென்றாள். இன்று அவளுக்கான பகல் ஷிப்ட், எப்போதும் இரவு வருவது போல தான் நீரஜா போடுவார், ஈஷ்வர் ரிசப்ஷன் என்று லீவ் எடுத்துவிட, அதற்கு அடுத்த நாள் நைட் ஷிப்ட் போட்டவர், மறுநாளான இன்றும் மதிய நேர ஷிப்ட் போட்டுவிட்டார். அதிலும் இரவு ஷிப்ட் முடிந்த சில மணி நேரங்களிலே, விஷ்ணு வீட்டிற்கு என்று குளித்து, சாப்பிட்டு தூங்கி கொண்டிருந்தவளுக்கு இப்படி என்று போன். மகாவிற்கு கோவம் தான். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அந்த நீரஜாவின் முன் என்னால் முடியாது என்று நிற்க கூடாது என்பதால் அப்படியே கிளம்பி வந்திருந்தாள். தூக்கத்தில் கண்கள் எரிந்தது தான். ஆனால் அலட்சியம் செய்து டியூட்டி பார்த்து கொண்டிருந்தாள். இங்கு கங்காவும் மகளை கூப்பிட விஷ்ணு வீட்டிற்கு கிளம்பிவிட்டார் அதுவும் மொத்த குடும்பத்துடன், ஆமாம் ஈஷ்வர், பல்லவி, அனு மூவரும் கூட கிளம்பியிருந்தனர். பல்லவியை துர்கா காலையிலே போன் செய்து முறையாக அழைத்திருந்தார். இல்லயென்றாலும் சின்னுவை பார்க்க ஈஷ்வர் நிச்சய அழைத்து வந்திருப்பான் தான். நரசிம்மன் காரில் வர, கங்கா பேத்தியை தன்னுடன் எடுத்து கொண்டார். ஈஷ்வர் பல்லவி மட்டும் பைக்கில் வந்தனர். பல்லவியை பைக்கில் அழைத்து வர வேண்டும் என்று ஈஷ்வரின் ஆசையில் பல்லவிக்கும் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கண்ணாடி வழியே அவனின் லவி முகம் பார்த்த ஈஷ்வர் பின் கை கொண்டு சென்று அவள் கை பிடித்து தன் வயிற்றில் வைத்தான். “ஈஷ்வர் என்ன இது..?” பல்லவி சிணுங்கலாக கேட்டாலும் கைகள் அவன் வயிற்றை கட்டி கொண்டது. “என்னமோ பிடிக்காத மாதிரி தான்..” ஈஷ்வர் அவளின் கை பார்த்து சிரிப்புடன் மனைவியை சீண்டினான். “நீங்க முன்னாடி பார்த்து ஓட்டுங்க..” பல்லவி கைகளை விலக்காமலே நொடித்து கொள்ள, ஈஷ்வர் மலர்ந்த சிரிப்புடன் விஷ்ணு வீட்டிற்குள் வண்டிய விட்டான். துர்கா வாசலுக்கே வந்து வரவேற்றவர் கையில் ஆர்த்தி தட்டு இருக்க, முன்னமே வந்துவிட்ட கங்கா பேத்தியை அவர்கள் கையில் கொடுத்தார். ஈஷ்வர் மகளை கையில் வாங்கி கொண்டவன், மனைவியை தோளோடு சேர்த்து பிடித்தான். துர்கா மூவருக்கும் ஆர்த்தி எடுத்து முடிக்க, வீட்டிற்குள் நுழைந்தனர். விஷ்ணு சின்னு ரூமில் இருக்க, மூவரும் நேரே அங்கு தான் சென்றனர். பெட் பக்கத்தில் அமர்ந்து எதையோ படித்து கொண்டிருந்த விஷ்ணு, ஈஷ்வரை பார்த்தும் பார்க்காதவன் போல முகம் திருப்பி கொண்டு, “வாம்மா..” என்று பல்லவியை மட்டும் கூப்பிட்டான். “எனக்கும் என் பேபிக்கும் வரவேற்பு இல்லை போல..” ஈஷ்வர் சின்னு பக்கத்தில் செல்ல, “அனு பேபிக்கு உண்டு, அவங்க அப்பாக்கு தான் இல்லை..” விஷ்ணு சத்தமாக சொன்னவன், தள்ளி இருந்த சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான். கங்கா, நரசிம்மனும் கூட சின்னுவை பார்க்க வந்திருக்க, சின்னு பெட் சுற்றி ஆட்கள். “இவர்கள் எல்லாம் என் உண்மையான உறவு தான், ஆனாலும் என்னமோ தம்பி இப்படி உணர்வில்லாமல் படுத்திருக்க எல்லாம் பார்ப்பது வேதனையை கொடுத்தது. என்று இந்த நிலை மாறும்..?” விஷ்ணு முகம் இறுக்கமானது. ஈஷ்வர் திரும்பி அவனை பார்த்தவன், என்ன புரிந்து கொண்டானோ எல்லோரையும் வெளியே கூட்டி வந்துவிட்டான். ருக்கு ஜுஸ் கொடுத்து உபசரிக்க, சில நிமிடங்கள் பொதுவான பேச்சு சென்றது. விஷ்ணு வெளியே வந்தவன், தனி சோபாவில அமர்ந்து கொண்டான். அவனுக்கும் ருக்கு ஜுஸ் கொடுக்க, எடுத்து கொண்டான். “மச்சான் வரதா சொன்னாராம்மா..?” சக்ரவர்த்தியை கேட்டார் நரசிம்மன். “வருவார்ன்னு தான் நினைக்கிறன்ண்ணா..” துர்கா சொல்ல, “மகா அவ ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டாளா..?” கங்கா எழுந்தார். “வச்சுட்டான்னு தான் நினைக்கிறேன்ண்ணி.. எதுக்கும் பாருங்க..” துர்கா சொல்ல, கங்கா மகள் தங்கியிருந்த ரூம் சென்றார். அனு மெல்ல மெல்ல எழுந்து விளையாட ஆரம்பிக்க, பல்லவி மகள் பின் சென்றாள். கங்கா வெளியே வந்தவர், “இன்னும் என்ன பண்றா..?” என்று மகளுக்கு போன் செய்தார். “எடுத்தவள், இன்னும் பைவ் மினிட்ஸ்ம்மா, கிளம்பிடுவேன்ம்மா..” என்றாள். அவளின் டியூட்டி நேரம் முடிந்திருக்க, அடுத்த வந்த டாக்டர் நீரஜாவை பார்க்க சென்றிருக்க, பேஷண்டிடம் அமர்ந்திருந்தாள். “சரி சரி பொறுமையா வா.. நாங்க அண்ணி வீட்ல தான் இருக்கோம்..” என்றார் கங்கா. “அனு பேபி என்ன பண்றாம்மா..?” மகா கேட்க, “அங்க இங்க ஓடிட்டு இருக்கா, உன் அண்ணியும் அவ பின்னாடி ஓடிட்டு இருக்கா..” கங்கா சிரிப்புடன் சொல்ல, மகா முகத்திலும் புன்னகை. “நான்..” என்று பேச ஆரம்பிக்க, “இங்க என்ன நடக்குது..?” என்ற நீரஜா சத்தத்தில் மகா போனுடன் திரும்பி பார்த்தாள். “பேஷண்ட் பார்க்க சொன்னா போன் பேசி சிரிச்சிட்டு இருக்க..?” அவர் அதிகாரத்துடன் அதட்ட, “நான் கூப்பிடுறேன்ம்மா..” என்று வைத்தவள், “சொல்லுங்க டாக்டர்..” என்றாள். “என்ன சொல்லணும், பேஷண்டுக்கு ட்ரிப்ஸ் முடிஞ்சது கூட தெரியாம போன் பேசிட்டு இருக்க, அவ்வளவு அர்ப்பணிப்பு வேலையில.. இவ்வளவு பொறுப்பில்லாம வேலை செய்றதுக்கு அந்த கோட்டை கழட்டி வச்சிடலாம்..” அவர் இது தான் வாய்ப்பென்று சத்தமாக பேசி கொண்டே போக, எல்லார் கண்ணும் இவள் மேலே. மகா கைகளை இறுக்கி கொண்டவள், “நான் ட்ரிப்ஸ் ஆப் பண்ணிட்டு தான் பேசினேன்..” என்றாள். “ஏன் மாத்திட்டு பேச முடியாத அளவுக்கு முக்கியமான ஆளா..? உன்னை சொல்லி தப்பில்லை உன் சகவாசம் அப்படி, அந்த லூசர் சொந்தம் நீ வேற எப்படி இருப்ப..?” விஷ்ணுவை தாக்கி பேசினார். “தேவையில்லாம பேசாதீங்க டாக்டர்.. அந்த பேஷண்டுக்கு அடுத்த ட்ரிப்ஸ் இருக்கா இல்லையான்னு நீங்க சார்ட்ல எழுதலை, அதனால தான் நான் ஆப் பண்ணேன்..” “எழுதலைன்னா என்ன..? நீயும் டாக்டர் தானே, பேஷண்ட் கண்டிஷன் பார்த்து போட வேண்டியது தானே, இல்லை என்கிட்ட வந்து கேட்க வேண்டியது தானே, அதை விட்டு ஜாலியா போன் பேசிட்டு இருந்திட்டு என்னை சொல்றியா நீ..? ஏன் உனக்கு டியூட்டில போன் எடுக்க கூடாதுன்னு தெரியாதா..? இதுக்கே உன் மேல ஆக்ஷன் எடுக்கணும்..” நீரஜா வேண்டுமென்றே பேச, “என் மேல எந்த ஆக்ஷனும் எடுக்க முடியாது டாக்டர்..” என்றாள் மகா. “ஏன் எடுக்க முடியாது..? என்ன உங்க அப்பா மினிஸ்டர், அண்ணா டிஸ்பின்னு திமிர் காட்டுறியா..?” “டாக்டர்.. முதல்ல என் டியூட்டி நேரம் தெரிஞ்சிட்டு பேசுங்க, எனக்கு டியூட்டி முடிஞ்சு பத்து நிமிஷம் ஆச்சு, உங்க பின்னாடி இருக்க டாக்டர் தான் இப்போ பார்க்கிறார், அவர் ட்ரிப்ஸ் பத்தி கேட்க தான் உங்க பின்னாடி நிக்கிறார், அவருக்கு முதல்ல பதில் சொல்லுங்க..” மகா நிமிர்ந்து நின்று பேசினாள். அதில் நீரஜாவிற்கு கொதித்து கொண்டு வந்தது. “அதுக்காக நீ பேஷண்டை பார்க்க மாட்டியா..? விட்டுடுவியா..? உன்னை சொல்லி என்ன பண்ண..? படிச்சு மார்க் எடுத்து டாக்டர் சீட் கிடைச்சிருந்தா தான் அதோட மதிப்பு தெரியும்.. பணம் கட்டி வந்தா இப்படி தான்..” “உங்களுக்கு தெரியுமா நான் பணம் கட்டி தான் சேர்ந்தேன்னு, என்னோட கட் ஆப் மார்க் என்ன தெரியுமா உங்களுக்கு..?” மகாவிற்கு இது தாங்கவே முடியவில்லை. அவ்வளவு கோவம். “என்கிட்டயே வாய்ஸ் ரைஸ் பண்றியா..? நீ MS முடிக்க நான் மனசு வைக்கணும்..” நீரஜா நேரிடையாக மிரட்ட, மகா அலட்சியத்தை அவள் முகத்தில் காட்டினாள். “ஏய் என்ன தைரியம் உனக்கு..?” நீரஜா கத்த, “ஷ்ஷ் டாக்டர், இங்க பேஷண்ட்ஸ் இருக்காங்க, இப்படி எல்லாம் சத்தம் போட கூடாது..” என்றாள் மகா கை கட்டி. “எனக்கே சொல்றியா நீ..?” “சொல்ல வேண்டி இருக்கே டாக்டர் என்ன செய்ய..? நீங்க என்னை மிரட்டுறதை விட்டு பேஷண்ட்ஸ் பாருங்க.. எவ்வளவு நேரம் அவங்க உங்களுக்காக காத்திருப்பாங்க..” மகா சொன்னவள், அவள் பேக் எடுத்து கொண்டு வெளியே வந்துவிட்டாள். அவளின் வேக நடையில் அவள் கோவம் தெரிந்தது. பேசிவிட்டாள் தான், ஆனால் கோவம் குறைந்தபாடில்லை. அங்கு கங்காவோ கையில் போனுடன் யோசனையாக நின்றிருக்க, “என்ன ஆச்சும்மா..?” என்றான் ஈஷ்வர் கவனித்து. “இல்லைடா.. மகாகிட்ட பேசிட்டிருந்தேன், அப்போ யாரோ அவளை சத்தம் போட்ட மாதிரி இருந்துச்சு..” என்றார் மகனிடம். “என்னம்மா சொல்றீங்க..? அவளை யார் சத்தம் போடா போறா..?” ஈஷ்வர் குழப்பத்துடன் கேட்டான். கங்காவிற்கும் அந்த சத்தம் மகாக்கு தானா என்று உறுதியாக தெரியாததால், “எனக்கே சரியா தெரியல விடு..” என்றவர், திரும்ப மகளுக்கு அழைத்தார். அவள் எடுக்கவில்லை, “ஏன் போன் எடுக்க மாட்டேங்கிறா..?” கங்கா முணுமுணுக்க, “எடுக்கலையா..? நான் கூப்பிடுறேன் இருங்க..” என்று இவனும் அழைத்தான். மகா எடுக்கவே இல்லை. துர்காவும் அங்கு வந்தவர், “மகாக்கு ரெஸ்ட்டே இல்லை அண்ணி பாவம், நேத்து நைட் டியூட்டி முடிச்சிட்டு வந்தவ, திரும்ப மதிய டியூட்டிக்கும் போயிருக்கா..” என்றார்.