அடங்காத நாடோடி காற்றல்லவோ 1 2 18821 அந்த பெண், அழுது கொண்டே அங்கிருந்து செல்ல, இவர் மகளோ என்று நினைத்த விஷ்ணு பார்வை என்னமோ அவரை விட்டு விலகவில்லை. அடுத்த சில நிமிடங்களில் டாக்டர்கள் வெளியே வர, அவர்களுக்கு பின்னால் நர்ஸுகள், MD, அவுஸ் சர்ஜன் மாணவர்கள் இருந்தனர். உள்ளே பல ஆப்ரேஷன், எதெதில் யாருக்கு செய்தார்கள் என்று பார்த்து நர்ஸ், மற்றும் MD மாணவர்கள் அவர்கள் உறவினரிடம் பதில் சொல்லி கொண்டிருந்தனர். அதில் ஒரு சீனியர் மாணவன் அந்த தாத்தாவிற்கு எதோ சொல்ல, அவர் அந்த பைல் காட்டி ஏதோ கேட்டார். வாங்கி பார்த்த அவனுக்கு ஏதும் புரியவில்லை போல. சமாளிப்பாக எதோ சொல்லி கிளம்பிவிட்டான். அந்த முதியவர் தவிப்புடன் டாக்டர்களை நெருங்கும் வழிய பார்த்து நின்றார். டாக்டர்கள் எல்லோரிடமும் ஓரிரு வார்த்தை மட்டும் பேசினர். அப்படி இந்த முதியவரிடமும் சில நொடிகள் படபடவென சொல்லி அடுத்த ஆட்களுக்கு சென்றுவிட்டனர். அந்த முதியவர் எதையோ கேட்க போராடுவது புரிந்தது. இதற்கு மேலும் அதை பார்க்க முடியவில்லை. அவர் அருகில் சென்ற விஷ்ணு, “என்ன கேட்கணும்..?” என்றான். அவனை பார்த்தவர் இவனுக்கு என்ன தெரியும் என்று பார்க்க, “நீங்க கேளுங்க எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்..” என்றான் பொறுமையாக. “இல்லை தம்பி என் பொண்டாட்டிக்கு இப்போ ஒரு ஆறு மாசமா வீட்டுக்கு தூரம் ஆகும் போதெல்லாம் நிறைய ரத்தம் போயி, வலியில் துடிச்சு போயிடுவா, போன வாரம் ரத்தம் அதிகமா போயி மயக்கம் போட்டுட்டா, என் பங்காளி இங்க இலவசமா பார்க்கிறாங்கன்னு சொல்ல, இங்க கூட்டிட்டு வந்தேன்..” “இவங்க கர்ப்ப பைல ஏதோ கட்டி இருக்கு, கர்ப்ப பை எடுத்துடனும் சொல்லி இன்னைக்கு ஆப்பரேஷன் செஞ்சாங்க, என் மச்சான் பார்க்க வந்தவன் அது கேன்சர் கட்டியா இருக்க போகுது, எதுக்கும் நல்லா விசாரிச்சுக்கோன்னு சொன்னான், அதான் கேட்கலாம்ன்னு டாக்டர் போயிட்டார்..” அவர் கவலையாகவும், பயத்துடனும் சொன்னார். “ஓஹ்.. உங்க மாப்பிள்ளை வந்தார் இல்லை அவர் டாக்டர்கிட்ட பேசலையா..?” விஷ்ணு கேட்க, “அவர் ஏன் தம்பி இதெல்லாம் விசாரிக்க போறாரு, அவருக்கு யார் என் பொண்டாட்டிக்கு பணிவிடை செய்யன்னு கவலை, அதான் என் மகளை கையோடு இழுத்து போயிட்டார்..” அவர் விரக்தியுடன் சொன்னார். விஷ்ணுவிற்கு கோவம் வந்தது என்ன மனிதன் என்று. “சரி விடுங்க, நீங்க அந்த ரிப்போர்ட் எல்லாம் கொடுங்க, நான் பார்த்திட்டு சொல்றேன்..” வாங்கி பார்த்தவன் கண்கள் சுருங்கியது. “நீங்க இங்கேயே இருங்க நான் வரேன்..” என்றவன் அந்த ரிப்போர்ட்டை எடுத்து கொண்டு பக்கத்து பிளாக் சென்றான். அங்கு அவனின் சீனியர் கைனகாலஜி சுமித்ரா இருக்க, அவளிடம் காட்டி கேட்டான். அவள் பார்த்தவள், ஏதோ சொல்ல, விஷ்ணுவிற்கு கோவம் பொங்கியது. அந்த ரிப்போர்ட்டை எடுத்து கொண்டு வேக நடையுடன் டாக்டர் ரூமிற்குள் வந்தான். இவனை பார்த்த டாக்டர் குப்தா, “விஷ்ணு.. நீ சஸ்பென்ஷன் முடிச்சி என்ன பார்த்து சொல்லிட்டு தானே கிளாஸ் போயிருக்கணும்..” அவனின் வகுப்பு இன்சார்ஜாக கேட்க, “அவனோ இது என்ன டாக்டர்..?” என்று ரிப்போர்ட்டை விரித்து கைனகாலஜி டாக்டர் நீரஜாவிடம் கேட்டான். “நான் என்ன கேட்கிறேன் நீ என்ன கேட்கிற..?” குப்தா கோபத்துடன் கேட்க, “நீங்க கேட்டதுக்கு பதில் என் சாரி, நான் உங்களை பார்க்காம கிளாசுக்கு போனது தப்பு தான், முடிஞ்சுதா, இப்போ இதுக்கு பதில் சொல்லுங்க, என்ன இது..?” என்றான் மீண்டும். “என்ன கேட்கிற நீ..?” கைனகாலஜி டாக்டர் நீரஜா ரிப்போர்ட் வாங்கி பார்த்தவர், “இதுக்கு என்ன..?” என்றார் சாதாரணமாக. “இதுக்கு என்னவா..?” உள்ளுக்குள் கொதித்தவன், “டாக்டர்.. அந்த பெரியவர் வெளியே அவர் பொண்டடிக்கு என்னவோ எதோன்னு அழுதுட்டு நிக்கிறார், நீங்க சாதாரண பைப்ராய்ட் கட்டிக்கு அவங்க யூட்ரஸையே எடுத்துட்டீங்க.. மெடிசனால இதை கண்ட்ரோல் பண்ணிருக்க முடியம் தானே.. அப்பறம் எதுக்கு ஆப்பரேஷன்..?” நேர்பார்வையாக கேட்க, “விஷ்ணு ஆரம்பிச்சுட்டியா..? கூல், அவங்க வயசானவங்க, மெனோபஸ் ஸ்டேஜ், கூட இந்த கட்டி வேற. ரத்த போக்கு, வலி ரொம்ப அதிகம் இருந்தது, அதான் எடுத்துட்டோம், இந்த வயசுக்கு மேல யூட்ரஸ் இருந்தா என்ன இல்லாட்டி என்ன..?” அலட்சியமாக சொன்னார். அவரின் அலட்சியம் நெஞ்சை கொதிக்க வைத்தது. “ஏழைகளுக்கு இலவசமா பண்ணி கொடுக்கிறோம் சொல்லி, அவுஸ் சர்ஜன் ஸ்டூடண்ட்ஸ்க்கு, MD ஸ்டூடண்ட்ஸ்க்கு இந்த ஆப்பரேஷனை யூஸ் பண்ணிக்கிறீங்க, ஹவ் சீப் யூ ஆர்.. நீங்க எல்லாம் உயிரை காட்கிற டாக்டரா..? கசாப்பு கடைக்காரன்..” வார்த்தைகளை அழுத்தி, ஆத்திரத்துடன் சொல்ல, நீரஜா, குப்தாவிற்கு கோவம் வந்தது. “ஸ்டூடன்ட் நீ, நீ என்னை கேள்வி கேட்கிறியா..? உன்னை என்ன பண்றேன் பாரு.. நீ எப்படி இந்த MD முடிக்கிறேன் நானும் பார்க்கிறேன்..” நீரஜா மிரட்டவே செய்ய, விஷ்ணு முகத்தில் சிறிதும் பயமில்லை. “செய்ங்க, என்னவேனா செய்ங்க, ஐ டோன்ட் கேர், அதுக்கு முன்னாடி உங்களோட இந்த ஆப்பரேஷனுக்கு பதில் சொல்ல ரெடியா இருங்க..” ரிப்போர்ட்டுடன் வெளியே செல்ல, நீரஜா, குப்தா உடனே அவர் ஹாஸ்பிடல் டீனை பார்க்க சென்றனர். விஷ்ணு அந்த பெரியவரிடம் சென்று நடந்ததை விலக்கி, ஹாஸ்பிடல் நிர்வாகத்திடம் கேள்வி கேட்க சொல்லி கொண்டிருக்க, அவரோ புரிந்தும் புரியாமலும் பயந்து போய் நின்றிருந்தார். “பயப்படாதீங்க, அவங்க செஞ்சது தப்பு.. தைரியமா கேளுங்க.. நான் இருக்கேன்..” அவன் சொல்ல, அவரோ, “என்னால சுத்தமா பணம் புரட்ட முடியாம தான் இங்க இலவசம்ன்னு கூட்டிட்டு வந்தேன், இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரில நான் என்ன கேள்வி கேட்க முடியும் தம்பி, விடுங்க, என் பொண்டாட்டி நல்லா இருந்தா போதும்.. எங்க தலையெழுத்து ஏதோ நடக்கட்டும்..” என்றார் இயலாமையுடன். விஷ்ணு அவரிடம் பேச முயற்சிக்க, அவனை தேடி கொண்டு ஆட்கள் வந்துவிட்டனர். “உன்னை டீன் கூட்டிட்டு வர சொன்னார்..” இருவர் வந்து நிற்க, விஷ்ணு அந்த ரிப்போர்ட்டை பத்திரமாக பிடித்தபடி அவர்களுடன் சென்றான். சில நிமிடங்கள் டீன் ரூமிற்கு வெளியே காத்திருக்க, துர்கா அங்கு வந்தார். அவரின் முகத்தில் நிச்சயம் கோபம். காலையில அவ்வளவு சொல்லியும் அடங்க மாட்டேங்குறான்.. மகனை முறைத்தபடி வர, “நீங்க ஏன் வந்தீங்க..?” என்றான் மகன் அவருக்கு மேல். “டீன் உங்களை உள்ளே வரச்சொன்னார்..” பியூன் வர. அம்மா, மகன் இருவரும் உள்ளே சென்றனர். “உட்காருங்க டாக்டர்..” துர்காவை அமர சொன்ன டீன், விஷ்ணுவிடம் திரும்பினார். “MD செகண்ட் இயர் ஸ்டூடன்ட், இன்னும் அப்படியே இருந்தா எப்படி மேன், எப்போ பார்த்தாலும் எதாவது இஷ்யூ, உன் வேலை என்னமோ அதை பார்க்க வேண்டியது தானே, இதுல எல்லாம் ஏன் தலையிடுற..” டீன் பேசி கொண்டிருக்க, விஷ்ணு சிறிதும் அசராமல் நின்றான். “டாக்டர் துர்கா என்ன இது..? நாங்களும் எவ்வளவு தான் பொறுத்து போறது, ஒரு வாரம் சஸ்பென்ஸன் முடிச்சு இன்னிக்கு தான் காலேஜ் வந்ததே, வந்ததும் ஆரம்பிச்சுட்டாரு, ஏதோ விஷ்ணு பெஸ்ட் ஸ்டூடன்ட்ங்கிறதால தான் திரும்ப இங்கேயே MD சீட் கொடுத்தேன், ஆனா..” அவர் தலையை ஆட்ட, விஷ்ணு நீ என்ன வேணா பேசு என்று நின்றான். அவனுக்கு நீரஜாவை விட மனதில்லை. எவ்வளவு திமிர், ரொம்ப அசால்ட்டா பேசுறாங்க, விவரம் தெரியாத வயசானவங்களை இப்படி தான் ஏமாத்துறதா..? அவ்வளவு கோவம். கதவை தட்டி நீரஜா வர, விஷ்ணு அவரையே பார்த்து நின்றான். உட்காருங்க டாக்டர் குப்தா, நீரஜா வர இருவரையும் உட்கார சொன்ன டீன், “விஷ்ணு அந்த பைலை டாக்டர்கிட்ட கொடுங்க..” என, விஷ்ணு முடியாது என்றான். “விஷ்ணு என்ன இது..? கொடு..” துர்கா சொல்ல, “ஏன் கொடுக்கணும்..? உங்களுக்கு நடந்தது தெரியாது.. கொடுக்க முடியாது..” விஷ்ணு சொல்ல, டீன்க்கு புரிந்தது அவன் எண்ணம். “இங்க பாருங்க டாக்டர் உங்க மகன் ஹாஸ்பிடல் விவகாரத்துல எல்லாம் தலையிடுறாரு, இது சரியில்லை, நீங்களும் ஒரு ஹாஸ்பிடல் ரன் பண்றீங்க, அதுல உள்ள நெளிவு சுளிவு எல்லாம் உங்க பிள்ளைக்கு தெரியாதா..? ஏதோ இத்தனை வருஷம் சின்ன சின்ன பிரச்சனைன்னா விட்டா, இவர் எங்க இன்ஸ்டிடியூட்டு கூடவே மோத பார்க்கிறார்..” “உங்க அண்ணா, ஹஸ்பண்ட் பவர் விட எங்ககிட்ட அதிகமாவே இருக்கு, இல்லைன்னா இவ்வளவு வருஷம் எங்க ஓனர் இதை ரன் பண்ண முடியுமா..? பைலை கொடுக்க சொல்லுங்க, இல்லை உங்க மகனோட எதிர்காலம் எப்படி வேணா மாறும்..” துர்காவிடம் எச்சரிக்கையாக சொல்ல, துர்காவிற்கு எதார்த்தம் புரிந்தது. மகனிடம் வந்தவர், அவனிடம் இருந்த பைலை பிடிங்கி கொடுக்க, “ம்மா..” என்று கத்தினான் விஷ்ணு. “எதுவும் பேசாத விஷ்ணு, உனக்கு என்ன அந்த பெரியவர் வைப் நல்லா இருக்கணும் அதானே, நம்ம ஹாஸ்பிடல் வச்சு நான் பார்க்கிறேன், இந்த விஷயத்தை விடு..” என்றவர், டீனிடம் மன்னிப்புடன் மகனை இழுத்து கொண்டு வெளியே வந்தார். மகா விஷயம் கேள்விப்பட்டு இவர்களுக்காக வெளியே நிற்க, விஷ்ணுவோ துர்கா கையை உதறியவன், “நீங்களும் அவங்களை போல தானே, உங்ககிட்ட இதை தான் எதிர்பார்க்க முடியும்..? சொந்த மகனையே பலியாக்கின ஆள் தானே நீங்க..?” ஏதும் செய்ய முடியாத இயலாமையுடன் கொதிக்க, அவனின் வார்த்தைகள் எப்போதும் போல இப்போதும் துர்கா கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. “என்ன பேசுறீங்க நீங்க..?” துர்கா கண்ணீரில் மகா கோவத்துடன் விஷ்ணுவை அதட்டியவள், துர்கா கையை பிடித்து கொண்டாள். “என்ன சொந்த ரத்தம் பேசுதா..? உங்களுக்குன்னா மட்டும் வலி, மத்தவங்களுக்கு.. ச்சு.. உங்ககிட்ட எல்லாம் பேசுறதே வேஸ்ட், எல்லாம் அவங்கவங்க கம்பர்ட் ஸோன்ல தான் இருக்கீங்க.. வெளியே வந்து பட்டா தான் மத்தவங்க கஷ்டம் புரியும்..” அவனின் கோட்டை கழட்டி மகா மேல் போட்டவன், கிளம்பிவிட்டான்.