அடங்காத நாடோடி காற்றல்லவோ 9 2 15548 அதே வழி, இன்னும் இருட்டு, திரும்ப பார் உள்ளே வந்தவன், நிதானித்து முன்னால் பார்க்க, மற்றவன் கட்டை விரல் கீழே காண்பித்தான். ஈஷ்வர் உடனே பின்னால் சென்றவன், அந்த இருட்டில் நின்றான். அந்நேரம் அவன் மொபைல் வைபிரேட் ஆக, விஷ்ணு என்று புரிந்தது. “ச்சு..” கண் சுருக்கியவன், மொபைலை வெளியே எடுக்க முடியாமல் நின்றான். சில நொடிகள் சென்று திரும்ப வைபிரேட் ஆகி உடனே நிற்க புரிந்து கொண்டவன், வேகமாக ரெஸ்ட் ரூம் சென்று முகம் முழுக்க தண்ணீர் சொட்ட வெளியே சென்றான். வழியில இருவர் உட்கார்ந்து தீவிரமாக பேசி கொண்டிருக்க, ஈஷ்வர் கைகள் போகிற போக்கில் அங்கிருந்த லைட்டைரை எடுத்து கொண்டது. “இவ்வளவு நேரம் என்னடா பண்ண..?” விஷ்ணு பைக்கில் நின்றபடி கேட்க, “ரெஸ்ட் ரூம் போனேன் விஷ்ணு..” என்றவன் அவன் பின்னால் அமர, பைக் வீட்டிற்கு சென்றது. ………………….. மறுநாள் காலை ஈஷ்வர் வெளியே சென்றிருக்க, விஷ்ணு லேட்டாக தான் எழுந்தான். கங்காவின் ஏற்பாட்டின் படி சமையல் செய்பவர் அவர் வேலையை முடித்திருக்க, இவனுக்கு பசி என்ற ஒன்று இல்லவே இல்லை போல. “ஈஷ்வர் சாப்பிட்டானா..?” என்று மட்டும் கேட்டு கொண்டவன், கையில் ஒரு காபியுடன் அமர்ந்தான். எப்போதும் போல சின்னு நினைவிற்கு வந்தான். நாளை அவனின் பிறந்த நாள். “அவனை பார்க்க போகணும்.. போகணுமா..?” இருவேறு மனநிலையில் காபி குடித்து முடித்வன், குளித்து பைக் எடுத்து கடைக்கு சென்றவன், பார்சல்களுடன் அவனின் மெடிக்கல் கேம்பஸ் சென்றான். மகா அங்கு தான் MS கைனகாலஜி படித்து கொண்டிருக்கிறாள். இவன் பைக் நிறுத்தி கேன்டீன் உள்ளே செல்ல, சரியாக நீரஜா வந்தார் உடன் பிரசாத். அன்று விஷ்ணுவை மனநோய் என்று தாக்கியவன். விஷ்ணு பார்த்தாலும் கண்டு கொள்ளாமல், கையில் காபியுடன் டேபிளில் அமர்ந்தவன், மொபைல் எடுத்து மகாவிற்கு மெசேஜ் அனுப்பிவிட்டு காபி குடிக்க ஆரம்பித்தான். நீரஜா வேண்டும் என்றே பக்கத்து டேபிளில் அமர்ந்தவர், “ஏன் பிரசாத் அன்னைக்கு நீ மனநோய் உள்ளவங்க சொன்னதுக்கு அவ்வளவு கோவம் பட்டாங்க சிலர், அவங்க அப்பா எல்லாம் வந்து வார்னிங் கொடுத்தார், ஆனா அது உண்மை தான்னு இப்போ எல்லோர்க்கும் தெரியுது இல்லை, ஒரு டாக்டர் மாதிரியா இருக்காங்க, ஆளும், முடியும்..” சிரிக்க, பிரசாத் சத்தமாக சிரித்தான். விஷ்ணுவிற்கு அவர்கள் பேச்சு காதில் விழுகாமல் இல்லை. நிதானமாக காபி குடிக்க, மகா வேகமாக வந்தவள், தூரத்திலே பார்த்துவிட்டாள். இன்னைக்கு என்ன ஏழரையோ..? சலிப்புடன் விஷ்ணு டேபிளுக்கு சென்றவள், நீரஜாவிற்கு விஷ் செய்து அமர்ந்தாள். “இது சின்னுக்கு கொடுத்துடு.. நாளைக்கு அவன் பர்த் டேக்கு இந்த ட்ரெஸ் போட சொல்லு..” விஷ்ணு பார்சல் எடுத்து கொடுக்க, மகா அமைதியாக வாங்கி வைத்து கொண்டாள். “மகாலக்ஷ்மி..” நீரஜா கூப்பிட, மேம் என்று அவரிடம் சென்றாள். “கிளாஸ் முடிஞ்சுதா..?” என்றார் அதிகாரமாக அவர். “நான் பர்மிஷன் வாங்கிட்டு தான் வந்திருக்கேன் மேம்..” மகா சொல்ல, “பர்மிஷன் வாங்கிட்டு வந்து பார்க்கிற அளவுக்கு இங்க யாரும் இல்லையே..” என்றார் அவர் நக்கலாக. மகாவிற்கு அவர் பேச்சு பிடிக்கவில்லை. அமைதியாக நின்றாள். “போய் கிளாஸ் கவனி, சும்மா லூசர்ஸ் எல்லாம் பேசிக்கிட்டு இருக்காத..” என்றுவிட மகாவிற்கு சுர்ரென்று பொங்கியது. திரும்பி விஷ்ணுவை பார்க்க, அவனோ மிகவும் சாதாரணமாக மொபைல் பார்த்து கொண்டிருந்தான். “மகா உன்கிட்ட தான் பேசுறேன்.. கிளாஸ் கிளம்பு..” அவர் திரும்பவும் சொல்ல, “நான் அவர்கிட்ட பேசிட்டு போறேன் மேம்..” என்றாள் மகா திடமாக. “இப்போ தானே சொன்னேன் இது போல் ஆள்கிட்ட எல்லாம் பேச்சு வச்சுக்காதான்னு, முதல்ல இந்த செக்கூரிட்டியை சொல்லணும், ஒரு மெடிக்கல் கேம்பஸ்க்குள்ள யார் யாரை விடுறதுன்னு அறிவு வேண்டாம், இவங்களை போல ஆளுக்கு எல்லாம் தான் கீழ்பாக்கம் இருக்கே, அங்க போக வேண்டியது தானே..” அவர் பேசி கொண்டே போக, “மேம்.. யார் கேம்பஸ்க்குள்ள வரணும், நான் யாரை பாரக்கனும்ன்னு எல்லாம் நீங்க சொல்லாதீங்க..” என்றாள் மகா கொஞ்சம் சத்தமாகவே. “என்ன பேசுற நீ..? உன் நல்லதுக்கு தானே சொல்றேன்..” “என் நல்லதுன்னா பார்த்தா நான் உங்களோட கூட தான் இப்படி நின்னு பேசவே கூடாது.. ஏன் மறந்து போச்சா நீங்க பண்ணது, வேணும்ன்னா இந்த சிட்டி கமிஷனர் என் மாமா சக்கரவர்த்தி சாரை வர சொல்லவா..” என, நீரஜாவிற்கு கொஞ்சம் திக்கென்று தான் இருந்தது. “மகாலக்ஷ்மி.. ஒரு சீனியர் டாக்டர்கிட்ட எப்படி பேசணும்ன்னு தெரியாதா..?” பிரசாத் பேச, “நீங்க முதல்ல யார் என்னை கேள்வி கேட்க..?” என்றாள் சூடாக. “உங்களுக்கு டாக்டர்கிட்ட தான் ட்ரைனிங் மறந்துடாதீங்க..” பிரசாத் மிரட்டலாக நினைவு படுத்தினான். “சோ வாட்.. நான் பேச கூடாதா..? என்னோட பெர்சனல் பத்தி பேச இங்க யாருக்கும் உரிமை இல்லை..” “என்ன உன் அத்தை மகன் இந்த லூசருக்கு சப்போர்ட்டா..? அவனே மாஸ்டர் படிச்சும் பிராக்டிஸ் பண்ணாம பரதே..” அவன் சொல்ல வரும் வார்த்தை புரிந்து மகா கோவத்தை கட்டு படுத்த முடியாமல் டேபிளில் இருந்த தண்ணீர் டம்ளர் எடுத்து அவன் முகத்தில் விசிறியடித்தாள். “ஏய்.. எவ்வளவு தைரியம் உனக்கு..?” பிரசாத் மகாவிடம் ஏறிக்கொண்டு போக, “உன் மூஞ்சில தண்ணீ வீசுனாளே அப்போவே தெரியலையா அவ தைரியம் எவ்வளவுன்னு..” விஷ்ணு மகா பக்கத்தில் வந்து நின்றான் காக்கும் அவதாரமாக. “நீயே ஒரு லூசர்.. நீ இவளுக்கு சப்போர்ட்டா..” பிரசாத்திற்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. “கம் அகைன் இவளா..” “ஆமா இவளே தான்.. என்னடா செய்..” அவன் பேசி கொண்டே போக, மின்னலாக வலி தலைக்கு ஏறி டேபிளை பிடித்து நின்றான். குனிந்து கீழே பார்க்க, ரத்தம் அவன் வாயில் இருந்து வழிந்து கொண்டிருந்தது. “இப்போ சொல்லு..” விஷ்ணு குரல் அவ்வளவு அழுத்தம். “ஏய் என்ன மேல கை வைக்கிற..? உன்னை என்ன பண்றேன் பாரு..” நீரஜா எகிற, “பண்ணிக்கோ.. இந்த கேம்பஸ்ல படிச்சப்போவே உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியல, இப்போ என்ன கிழிக்கணுமோ கிழிச்சுக்கோ, உன் கழுத்துல தொங்குதே இந்த ஸ்டெத்துக்கு மட்டும் தான் மரியாதை, உனக்கு இல்லை.. காட் இட்..” டேபிளில் இருந்த பார்சல் எடுத்து, மகா கை பிடித்து வெளியே வந்தான். பைக் அருகில் வரவும் மகா அவன் கையை உதறினாள். “என்னடி..?” விஷ்ணு கேட்க, அவளோ சிவந்த முகத்தில் கோவம் குறையாமல் நின்றாள். “என்னால உனக்கு பிரச்சனை ஆகிடுச்சு சாரி.. நான் வேணும்ன்னு.. ச்சு என் ராசியே இப்படி போல..” “ஸ்டாப் இட்.. பேசாதீங்க..” என்றாள் மகா சீறலாக. “அவங்க வார்த்தைக்கு வார்த்தை உங்களை லூசர் சொல்லிட்டு இருக்காங்க, அது உங்களுக்கு கேட்கலையா..? இல்லை உரைக்கலையா..?” “ஏன் உரைக்கணும், அது உண்மை தானேடி..” என்றான் விஷ்ணு சாதாரணமாக. “அப்போ இப்படியே தான் இருக்க போறீங்களா..?” “ஏன் நல்லா இல்லையா..?” அவன் தாடியை நீவி விட்டு கேட்டான். “எந்த ரெஸ்பான்சிபிலிட்டியும் இல்லாம குடிகாரங்களா சுத்த தான் உங்களுக்கும், என் அண்ணனுக்கு பிடிச்சிருக்கு போல..” “ ஈஷ்வரை பத்தி பேசாத..” “ ஏன் பேசக்கூடாது, பேசுவேன், அவனும் சரி நீங்களும் சரி உங்க வலியிலே சுகம் கண்டு வாழுறீங்க.. சுயநலவாதிங்க..” “ஆமாம்டி அகங்காரி நாங்க அப்படி தான்.. சுயநலவாதிங்க தான், இப்போ என்னாங்குற..?” “அப்போ உங்களை நம்பி இருக்கிற எங்க நிலமை..” “எங்களை ஏன் நம்புற, உனக்கு அந்த அவசியமும் இல்லை, நீங்க எல்லாம் வீர பெண்மணிகள், சிங்க பெண்கள், ஜான்சி ராணிகள்.. நான் தான் இப்போ அதை நேர்லே பார்த்தேனே..” “இப்படி பேச உங்களுக்கு வெட்கமாயில்லை..” “என்னடி இது.. இருக்கிறதை தானே சொல்றேன்..” “ஏன் இப்படி..?” “மகா.. எங்களை விட்டுட்டு நீ படிக்கிற வழிய பாரு..” “முடியலையே , உங்களை, அவனை, சின்னுவை யாரையும் விட முடியலையே..” “ஓய் சிங்காரி.. இவ்வளவு அழுத்தம் வைக்காத மனசுல, அப்பறம் என்னை மாதிரி ஆயிடுவ.. விட்டுடு.. போ..” அவன் பைக் எடுத்து கிளம்பிவிட்டான்.