அடங்காத நாடோடி காற்றல்லவோ 9 1 14314 அடங்காத நாடோடி காற்றல்லவோ 9 “உண்மையாவே நீ உங்க அப்பாவை பழிவாங்க தான் இப்படி செய்றியா ஈஷ்வர்..?” அவனை நம்பாமல் பார்த்தான் விஷ்ணு. “எனக்கு வேறென்ன காரணம் இருக்குன்னு நீயே சொல்லு..” அவன் தோளை குலுக்க, விஷ்ணுவிற்கு சந்தேகம் தான். “அது தான் எனக்கும் புரியல, அவர் உன்னை பார்த்து வேதனைபடணுங்கிறது இது ஒன்னு தான் வழியா..?” சுற்றிலும் எல்லோரும் முழு போதையில் மிதந்து கொண்டிருக்க, ஈஷ்வரும் கையில் கிளாஸுடன் அமர்ந்திருந்தான். “எனக்கு இது தான் தோணுச்சு, நீயே சொல்லு நாளைக்கு ஹெட் நியூஸ்ல மினிஸ்டர் மகன் போதையில் தகராறுன்னு வந்தா எப்படி இருக்கும்..?” “கேவலமா இருக்கும், எனக்கு பிடிக்கல..” “எனக்கும் தான் நீ பண்றது பிடிக்கல..” “டேய் நான் ஜஸ்ட் பியர் தான் வாங்கி வச்சிருக்கேன், அதுவும் குடிக்க கூட இல்லை, நீ லார்ஜ் வாங்கி குடிக்க போறேன்னு சொல்ற, எவ்வளவு தைரியம் இருக்கணும் உனக்கு.. கொடுடா அதை..” பிடுங்கி கொண்டான். “இப்போ எதுக்கு அதை பிடுங்குற, கேட்டிருந்தா நானே உனக்கு வேற வாங்கி தந்திருப்பேன், அதான் நம்ம பினாசியர் கூடவே இருக்காரே..” முகத்தில் கர்சீப் கட்டி அழுவது போல அமர்ந்திருந்த சுப்ரமணிய பார்த்து ஈஷ்வர் சீண்டலாக சொன்னான். “யாரு நான் உனக்கு பினான்சியரா..? எதோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு ஹாஸ்பிடல்ல இருந்த என்னை அடிச்சி பிடிச்சு வர வச்சிட்டு கதை அடிச்சிட்டு இருக்கீங்களா..? நான் கிளம்புறேன்..” சுப்ரமணி விட்டால் போதும் என்று எழ, “எங்கடி போற..?” ஈஷ்வர் அவன் கை பிடித்து திரும்பவும் சேரில் அமரவைக்க, அவனுக்கோ குமட்டி கொண்டு வந்தது. “டேய் என்னை விட்டு தொலைங்கடா.. இந்த நாத்தம் தாங்க முடியல..” “ஆமாம் இல்லை.. எனக்கும் இந்த பார் பிடிக்கல.. வாங்க போலாம்..” ஈஷ்வர் எழவும், விஷ்ணு, சுப்பிரமணி இருவரும் வெளியே வந்தனர். “அப்பாடா.. இப்போதான் மூச்சே விட முடியுது..” சுப்ரமணி முகத்தில் கட்டியிருந்த கர்சீப் எடுத்தான். “கிளம்பலாமா..?” விஷ்ணு காருக்கு செல்ல, “ஈஷ்வரோ, அங்க இல்லை.. என் கூட வாங்க..” என்று ரோடை கடந்து சற்று தூரத்தில் இருந்த பப்பிற்குள் நுழைந்துவிட்டான். “ஈஷ்வர்.. என்ன செஞ்சிட்டிருக்க நீ..? முதல்ல இங்கிருந்து கிளம்பு..” விஷ்ணு கோபத்துடன் அதட்டினான். அவனோ நல்ல இடம் பார்த்து அமர்ந்தவன், “ஏன் இவ்வளவு கோவம்..? உட்காரு விஷ்ணு, சுப்பு குட்டி நீங்களும் உட்காருங்க..” என, விஷ்ணு அவனை முறைத்து நின்றிருந்தான். “அப்போ உனக்கு என் கஷ்டம் தெரியல இல்லை விஷ்ணு, நான் என் லவியை பிரிஞ்சு எவ்வளவு வேதனையில இருக்கேன்னு உனக்கு புரியல இல்லை, என்ன இருந்தாலும் என் லவி வேற வீட்டு பொண்ணு தானே.. நாங்க கஷ்டப்பட்டா உனக்கு என்ன..? விடு..” ஈஷ்வர் முகாரி ராகம் பாடினான். “ஈஷ்வர்.. உண்மையாவே நீ என் ஈஷ்வர் தானா..? என்னவோ நீ சரியில்லை, ஆறு மாசமா என் உயிரை வாங்கிட்டு இருக்க..? பல்லவியை தேடி கண்டுபிடிக்கலாம் சொன்னாலும் ஒத்துழைக்க மாட்டேங்கிற, வீட்டுக்கும் போக மாட்டேங்கிற, எங்கெங்கோ சுத்துற, இப்போ கொஞ்ச நாளா பார் பாரா சுத்துற, என்ன தாண்டா வேணும் உனக்கு..?” விஷ்ணு ஆற்றாமையுடன் அமர்ந்துவிட, ஈஷ்வர் பதில் சொன்னான் இல்லை. அவன் கண்கள் விஷ்ணு பின் பார்த்து சுருங்கி விரிந்து சமிக்சை செய்தது. இங்கு சுப்ரமணியோ கிளம்பிவிடலாம் என்று நின்று கொண்டே இருக்க, திரும்பி அவனை பார்த்த ஈஷ்வர், “சுப்பு குட்டி உனக்கு வீட்டுக்கு போகணுமா..? பொண்டாட்டி மேடம் தேடுவாங்களா..?” என்று கேட்டான். அவன் ஆம் என்று வேகமாக தலையாட்ட, “ஆமா தேட தான் செய்வாங்க, என் பொண்டாட்டி இருந்திருந்தா அவளும் என்னை தேடியிருப்பா.. ஆனா அந்த மினிஸ்டர் தான் அவளை எங்கேயோ கொண்டு போய் ஒளிச்சு வச்சிருக்கார்.. நான்.. நான் பொண்டாட்டி இல்லமா சுத்திட்டு இருக்கேன், நான் பாவம் தானே..” ஈஷ்வர் மீண்டும் முகாரி ராகத்தை ஆரம்பிக்க, சுப்ரமணி ஒப்பாரி வைக்கும் நிலைக்கே சென்று விட்டான். “டேய் உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையாடா.. நீ உங்க அப்பாவை பழிவாங்குறேன்று என்னை காவு கொடுத்துட்டு இருக்க அது மட்டும் தெரியுது, ஏற்கனவே என் பொண்டாட்டி நான் குடிச்சிட்டு வரேன்னு தினமும் பஞ்சாயத்து கூட்டுறா..” “இதுல நீ வேற எனக்கு பொண்டாட்டி இருக்கு, உனக்கு இல்லைன்னு அழுது வடியற.. ஆனா ஒன்னு மட்டும் தெரியுதுடா இப்படியே உங்ககூட சுத்திட்டு இருந்தேன் வைங்க எனக்கும் பொண்டாட்டி இல்லமா போயிடுவா.. ஒருவேளை அதுக்கு தான் பிளான் போடுறீங்களோ என்னவோ..” “அழாதீங்க சுப்பு செல்லம், அப்படி எல்லாம் அண்ணியை உங்களை விட்டு போக விட மாட்டோம்..” “ஏன் இந்த திடீர் கரிசனம்.. புரிஞ்சு போச்சுடா அங்கேயும் நான் மிதி வாங்கணும் அதானே..” “சுப்பு குட்டி ஏன் இவ்வளவு அழுகை, சமத்தா போய் எங்களுக்கு ஒரு லார்ஜ் வாங்கிட்டு வாங்க பார்ப்போம்..” “ஈஷ்வர்.. போதும், சுப்பு நீ வீட்டுக்கு கிளம்பு..” விஷ்ணு சொல்ல, அவனும் விட்டால் போதும் என்று ஓடிவிட்டான். “இப்போ சொல்லு எதுக்கு இப்படி பண்ணிட்டிருக்க..?” விஷ்ணு மற்றவனிடம் கூர்மையாக கேட்டான். “ச்சு.. அதான் சொன்னேன் இல்லை, மினிஸ்டரை..” “ஈஷ்வர்.. என்கிட்ட உன் ஸ்மார்ட்னஸை காட்டாத, என்னன்னு சொல்லு..” “விஷ்ணு.. நான் குடிக்கிறதில்லை, ஜஸ்ட் மேல ஊத்திக்கிறேன் அவ்வளவு தான், இதுக்கு எதுக்கு விசாரணை பண்ணிட்டு இருக்க.. விடு..” “ஈஷ்வர்.. இதனால உன் பேர் கெடுறது உன் கண்ணுக்கு தெரியலையா..? நேத்து கூட மாமாவோட கட்சி கூட்டத்துல உன்னை வச்சு அவரை தாக்கி பேசியிருக்காங்க..” “இது தானே எனக்கு வேணும் விஷ்ணு..” “ஈஷ்வர்.. இத்தனை நாள் தான் நீ ஆசைப்பட்டபடி பார் பாரா சுத்தியாச்சு, இனியும் முடியாது, ஒழுங்கா ஏதாவது வேலைக்கு போற வழிய பாரு..” “ஓகே போறேன், நீ எப்போ ஹாஸ்பிடல் போற சொல்லு..” “ஈஷ்வர் என்னை விட்டுடு..” “முடியாது விஷ்ணு, நீ முதல்ல ஹாஸ்பிடல் போ..” “ச்சு..” விஷ்ணு பீர் எடுத்து குடிக்க, ஈஷ்வர் அதை பிடுங்கி வீசி விட்டான். ஈஷ்வர்.. விஷ்ணு அதட்ட, அவனோ அவனை நேராக பார்த்தான். “புரிஞ்சுக்கோடா.. என்னால கண் மூடி தூங்க முடியல.. நான்.. சின்னு அங்க..” திணறியவன், எழுந்து வேகமாக வெளியே சென்றுவிட்டான். ஈஷ்வர் பணம் கொடுத்து வெளியே போக, விஷ்ணு அவன் பைக் எடுத்து கிளம்பியிருந்தான். நல்லதா போச்சு.. ஈஷ்வர் திரும்பவும் பாருக்குள் வந்தவன், அங்கிருந்த ஆளுக்கு கண் காட்ட, அவன் கிளாஸ் ட்ரேக்கு அடியில் கட்டை விரல் தூக்கி காட்டினான். ஈஷ்வர் நேராக ரெஸ்ட் ரூம் சென்றவன், அங்கிருந்து மறுபக்க கதவு வழியே வெளியே நடக்க ஆரம்பித்தான். சுற்றிலும் இருட்டு, அந்த இருட்டுக்கு கண்கள் பழக, நடையோ வேகமாக இருந்தது. சில அடிகள் சென்று செங்கல் அடுக்கி வைக்க பட்டிருக்க, அதன் அடுத்த பக்கம் சென்றான். ஒரு சின்ன வீடு இருக்க, ஈஷ்வர் உள்ளே நுழைந்து கதவு மூடினான். உள்ளே நால்வர் இருந்தனர். “விஷ்ணு கிளம்பிட்டானா..?” நடு நாயகமாக நின்றிருந்த சக்கரவர்த்தி கேட்க, “கிளம்பிட்டான், பட் சீக்கிரம் வருவான் என்னை கூட்டி போக..” என, ஆமோதிப்பாக தலை ஆட்டிய சக்ரவர்த்தி அவன் முன் ஒரு பைல் நீட்டினார். ஈஷ்வர் அதை பிரிக்க, அங்கிருந்த இன்னொருவர், “சின்னுக்கு கொடுத்த அதே ட்ரீட்மெண்ட் தான் கொடுத்திருக்காங்க, அந்த பையனுக்கு நடந்த ஆக்சிடென்ட்டில் நிறைய அடி, நாலு மாசம் படுத்த படுக்கை, இப்போ அந்த பையனுக்கும் கிரிட்டிகல் சொல்றாங்க..” என, ஈஷ்வர் எல்லாவற்றையும் தீவிரமாக பார்த்து கொண்டான். “இந்த மெடிசன்..” ஈஷ்வர் விரலால் தட்ட, “அதே மெடிசன் தான்..” என்றார் சக்கரவர்த்தி. ஈஷ்வர் அவரை நிமிர்ந்து பார்க்க, ஆம் என்று தலை ஆட்டியவர், “இங்க அவங்களுக்கு எந்த பயமும் இல்லை.. சோ கண்டுக்கல..” என்றார். “என்ன சார் சொல்றீங்க கண்டுக்கலன்னா..?” உடன் இருந்த மற்றவர் கேட்க, “குணா.. என் மகனுக்கு கொடுத்த மெடிசன் தான் இது, ஆறு மாசத்துக்கு முன்னாடி சின்னுக்கு ரொம்ப சீரியஸ் ஆகவும், நாங்க அந்த டாக்டர்ஸ் கூப்பிட்டு விசாரிச்சோம், அவங்க சொன்னதுல சந்தேகம் வந்து நான் உடனே சின்னு, ரிப்போர்ட்ஸ், மெடிசன் எல்லாம் எடுக்க வீட்டுக்கு போனேன்..” “ஆனா நான் அங்க போறதுக்குள்ள எதுவும் இல்லை, எல்லாம் எடுத்திட்டு போயிட்டாங்க, எனக்கு என்னோட சந்தேகம் உறுதியானது அங்க தான்..” என்றார் சக்ரவர்த்தி. “என்ன சார் சொல்றீங்க, உங்க வீட்லே உள்ள புகுந்து எடுத்திருக்காங்க..” “எஸ்.. நாங்க இன்னார்ன்னு தெரிஞ்சிடுச்சு அவங்களுக்கு, நான் போலீசா இருப்பேன்னு அவங்களுக்கு தெரியல, எப்போவும் விஷ்ணு மட்டும் தான் சின்னு கூட எல்லா செக் அப் போவான்.. பிரதாப்பும், JRகிட்ட எதுவும் சொல்லலை, சின்னு டீடெயில்ஸ் மட்டும் தான் கொடுத்து சஜ்ஜஸ்ட் பண்ணியிருக்கார், அதே போல திலக்கிற்கும் தெரியல, விஷ்ணுவும் ஹாஸ்பிடல் பார்ம்ல பேர் மட்டும் தான் போட்டிருக்கான், எங்க ப்ரபேஷன் போடல, சோ ரெண்டு பேருக்கும் தெரியல..” “அன்னைக்கு ஹாஸ்பிடல் வச்சு என்னை, ஈஷ்வர் அப்பாவை, துர்காவை பார்க்கவும் தான் புரிஞ்சிருக்கு, உடனே எல்லாம் எடுத்துட்டாங்க, நல்ல வேளை விஷ்ணு வச்சிருந்த ஸ்டாக் மெடிசன் கிடைச்சது.. அதை வச்சு தான் நான் ஆரம்பிச்சு இவ்வளவு தூரம் வந்திருக்கேன்..” என்று முடிக்க, ஈஷ்வர் கண்களோ அந்த பைலிலே இருந்தது. அவன் சுருங்கிய புருவம், தீவிர யோசனையை காட்டியது. “ஈஷ்வர் ஏதாவது முன்னேற்றம் இருக்கா, அவனை கண்டிபிடிக்க முடிஞ்சுதா.. நான் சொன்ன ஹாஸ்பிடல்ல செக் பண்ணியா..?” சக்கரவர்த்தி கேட்க, ஈஷ்வரோ பைலை மூடி குணாவிடம் கொடுத்தவன், “அவன் எந்த ஹாஸ்பிடலும் இல்லை..” என்றான். “என்ன சொல்ற, அவன் டாக்டர் தானே..? நான் விசாரிச்சப்போ அவன் அங்க தான் இருந்தான்..” “இல்லை.. அவன் எப்போவும் ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணல.. உங்களை சுத்தவிட்டிருக்கான்.. உண்மையை சொல்லணும்ன்னா அவன் டாக்டரே இல்லை..” “ஈஷ்வர் என்ன சொல்ற நீ..?” “உண்மை.. இந்த ஆறு மாசத்துல அவனோட நடமாட்டம் கவனிச்ச வரை, அவன் ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கான்.. ஆனா அவன் நல்லவன் இல்லை..” “யார் அவன் சொல்லு ஈஷ்வர்..?” “இப்போ முடியாது சார், கூடிய சீக்கிரம் அவனை உங்க கண் முன்னாடி நிறுத்துறேன்.. இப்போ கிளம்புறேன்..” என்றவன், குணாவிடம் எதோ சொல்லி வெளியே வந்தான்.