அடங்காத நாடோடி காற்றல்லவோ 8

“விஷ்ணு..”  கூப்பிட்டபடி அவன் தோள் தட்டினான் ஈஷ்வர். மகாவை அணைத்து கரைந்து கொண்டிருந்தவன், ஈஷ்வர் குரலில் வேகமாக நிமிர்ந்து அவனை பார்த்தான்

கண்களில் கண்ணீர் தேங்கி நின்ற விஷ்ணுவை கண்ட ஈஷ்வர்க்கு  மனம் பிசைய, “டேய்.. என்னடா..” என்று அவனை அணைத்து கொண்டான்

மகாவிற்கு அண்ணனை கண்டு தங்கையாக பதறி போக, கலக்கத்துடன் நின்றிருந்தவள், இருவரின் அணைப்பில், சில நொடிகள் தேங்கி நின்று ஹாஸ்பிட்டல் உள்ளே சென்றுவிட்டாள். ஈஷ்வர் கண்கள் தங்கையை ஒரு நொடி யோசனையாக பார்த்து மீண்டது

விஷ்ணுவோ தம்பியின் வார்த்தைகளில் உழன்று கொண்டிருக்க, ஈஷ்வர் அவனை சமாதானம் செய்து ஓரிடத்தில் அமரவைத்தான். “இப்போ சொல்லு.. என்ன ஆச்சு..?” விஷ்ணுவை பார்த்து அமர்ந்து ஈஷ்வர் கேட்டான்

ம்ப்ச்.. என்ன சொல்ல..? போடா.. எனக்கே என்னை நினைச்சு வெறுப்பா இருக்கு..”  விஷ்ணு மிகவும் விரக்தியுடன் சொன்னான்

விஷ்ணு.. முதல்ல நீ உன்னில் இருந்து வெளியே வாடா, இப்போ உன் சப்போர்ட் சின்னுக்கு ரொம்ப அவசியம்..”

இல்லைடா.. அவனுக்கு யாரும் தேவை இல்லை போல, அவன் மகாகிட்ட என்ன பேசியிருக்கான் தெரியுமா..?”

என்ன சொன்னான்..?”

விஷ்ணு என்னன்னு  சொல்லுடா..”

அவனுக்கு இந்த வலியில் இருந்து விடுதலை வேணுமாம்.. ஏன் என்னை  காப்பாத்துறீங்க, விட்டுடுங்க கேட்டிருக்கான்..” விஷ்ணுவிற்கு  மீண்டும் தொண்டை அடைத்து கண்ணீர் தேங்கியது

அவனா இப்படி பேசினான்..?”  ஈஷ்வர்க்கும் கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது

ஏன் ஈஷ்வர் அப்போ இத்தனை வருஷமா அவன் இப்படி தான் நினைச்சிட்டிருக்கான் போல, அவனுக்கு கொஞ்சம் கூட நம்ம பாசம் மனசை தொடல, ஒருவேளை மனசை தொட்ற அளவுக்கு என் பாசம் இல்லையோ..”

விஷ்ணு.. முதல்ல நீ இப்படி எல்லாம் நினைச்சு உன்னை வருத்திகிறதை நிறுத்து, இதுல உன் தப்பு எங்கேயும் இல்லைடா..”

இருக்கு ஈஷ்வர்.. என் தப்பு இந்த முறை இருக்கு, அவன் இப்படி இருக்க நானும் ஒரு காரணம்.. ம்ஹூம்.. நான் மட்டும் தான் காரணம்..”

என்னடா பேசிட்டிருக்க..?”

உண்மை ஈஷ்வர்.. நான் தப்பு பண்ணிட்டேன்என் தம்பியை இப்படி படுக்க வச்சுட்டேன், நான் எல்லாம் அண்ணனா இருக்கவும் சரி, டாக்டரா இருக்கவும் சரி  தகுதியே இல்லாத ஆளு..”

விஷ்ணு.. திரும்ப திரும்ப உன்னை நீ பிளேம் பண்றதை  நிறுத்துடா.. கண்டதையும் யோசிக்காத.. விஷ்ணு என்னை பாரு முதல்ல, கொஞ்சம் நிதானமா பேசு, யோசி, அது தான் நமக்கு இப்போ முக்கியம்..”  சில நொடிகள் மௌனம் காத்த விஷ்ணு, முகத்தை அழுந்த துடைத்தான்

காபி வாங்கிட்டு வரேன் இரு..”  ஈஷ்வர் வாங்கி வந்து கொடுக்க, மறுக்காமல் குடித்தனர் இருவரும்

இப்போ சொல்லு எங்க தப்பு நடந்துச்சு..? உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா..?” ஈஷ்வர் நிதானமாக கேட்டான்

சக்கரவர்த்தி, துர்கா இருவரும் விஷ்ணுவிடம் பேச வந்தவர்கள் இவர்கள் பேச்சில் தொந்தரவு செய்யாமல் நின்றுவிட்டனர். அதிலும் சக்கரவர்த்திக்கு பல விஷயங்கள் தெரிய வேண்டி இருந்ததால் அமைதியாக அவர்களுக்கு முன் சென்று நின்றார்

விஷ்ணு, ஈஷ்வர் இருவரும் அவர்களை  பார்த்தனர். விஷ்ணு கண் சுருக்கி தீவிர யோசனையில் சில நிமிடங்களை கடந்தான்

ஈஷ்வர்.. எனக்கு JR, திலக் ரெண்டு பேர் மேலயும் சந்தேகம் இருக்குடா.. இதுல யாரோ ஒருத்தர் தான் சின்னு டேப்ளெட்ஸ் மாத்தி கொடுத்திருக்காங்க..”  என்றான்.  

ஓகே.. டாக்டர் பிரதாப் லண்டன் போனதுல இருந்து  நடந்ததை எல்லாம் சொல்லு..” என, விஷ்ணு எல்லாம் சொன்னான். சொல்லி முடிக்க  பல பல சந்தேகங்கள் முளைத்தன. ஏன் ஈஷ்வர்க்கு விஷ்ணு மேல் ஒரு மனத்தாங்கலும் உண்டானது. கேட்கவில்லை. கேட்டால் நிச்சயம் வேதனைப்படுவான்.

ஆனால் சக்ரவர்த்தியோ, “விஷ்ணு நீ இப்படி பண்ணலாமா..? சின்னுக்கு கிட்னி அபெக்ட் ஆகியிருக்குன்னு திலக் சொன்னார் இல்லை, நீ ஏன் செகண்ட் ஒபினியன் வாங்கலை..”  பட்டென்று கேட்டுவிட்டார்

விஷ்ணு முகம் மிகவும் கசங்கி போனது. “என்.. என்கிட்ட ரிப்போர்ட் காட்டி கேட்டாங்க..” துர்கா முன்னால் வந்து சொன்னார்

ம்ப்ச்.. என்ன துர்கா இது..? ரெண்டு பேரும் டாக்டர்ஸ், நல்லா இருந்த சின்னுக்கு இப்படின்னு ஒரு டாக்டர் சொன்னா, நீங்க இன்னொரு ஹாஸ்பிடல் பார்த்திருக்க வேண்டாமா..? ஏன் நீயே உன் ஹாஸ்பிடல்ல திரும்பவும் டெஸ்ட் எடுத்திருக்கலாம் இல்லை.. உங்களை நம்பி தானே நான் விட்டேன்..”  சக்கரவர்த்தி இருவரையும் கடிந்து கொண்டார்

தப்பு தாங்க..” துர்கா அழுகையுடன் சொன்னார்

நீ இப்படி சொல்றது இது ரெண்டாம் முறை துர்கா, முதல்ல நடந்ததை மறந்துட்டியா..? என் மகனை இப்படி வீல் சேரில் உட்கார வச்சது யாரு..?”  சக்ரவர்த்தி சொல்லிவிட, துர்கா கண்ணீர் நிற்காமல் வழிந்தது

ஆம் சின்னு பிறக்கும் போது நன்றாக தான் இருந்தான். அவனின் ஐந்து வயது வரை ஓடியாடி விளையாடியவன் தான். ஆனால் அவனின் ஐந்து வயதில் விதி ஆட்டம் காட்டியது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த ஜுரம், மூளை காய்ச்சலாக மாறி அவன் காலை பறித்து கொண்டது

துர்கா அப்போது வேறு ஒரு மருத்துவரிடம் வேலை செய்து கொண்டிருந்தார். முதலில் சின்னுவிற்கு லேசான காய்ச்சல் இருக்க, மாத்திரை கொடுத்தவர், ருக்குவை துணை வைத்துவிட்டு ஹாஸ்பிடல் கிளம்பிவிட்டார். மூன்றாம் நாள் மாலை போல வீட்டிற்கு கிளம்பும் நேரம், அவசர பிரசவ கேஸ் வர, துர்காவால் வீட்டிற்கு போக முடியவில்லை

ருக்கு போன் செய்து காய்ச்சல் அதிகமாகிறது, உடம்பில் அங்கங்கு தடி தடியாக இருக்கிறது என்று சொல்ல, துர்கா அவரின் தோழி சித்ராவின் கிளினிக் சென்று  பார்க்க சொன்னார். ருக்கு கூட்டி சென்று பார்க்க, அவர்  காய்ச்சல்க்கு  மாத்திரை கொடுத்து அனுப்பிவிட்டார்

ஆனால் சின்னுவிற்கு காய்ச்சல் குறையாததோடு அழுகை நிற்கவே இல்லை. விஷ்ணுவிற்கு  அப்போது பனிரெண்டு வயது. அவனே அம்மாவிற்கு போன் செய்து  வீட்டிற்கு வர சொல்லி கெஞ்ச, அங்கு அவர் அந்த பெண்ணிற்கு ஆப்பரேஷன் செய்ய தியேட்டர் செல்லும் நேரம். அம்மா, குழந்தை இரு உயிர்

மீண்டும் சித்ராவை சென்று பார்க்க சொல்ல, இவர்கள் சின்னுவை தூக்கி கொண்டு ஓடினர்அவன் காய்ச்சல் குறைய இன்ஜெக்ஷன் போட்டார். அப்படியும் குறையவில்லை என்றதோடு சின்னுவின் அழுகை மிகவும் கூடி போனது

நாம அம்மா ஹாஸ்பிடல் போயிடலாம் ஆன்ட்டி, எனக்கு பயமா இருக்கு..”  அழுது கொண்டே இருந்த தம்பி பார்த்து விஷ்ணுவும் அழுகையுடன்  சொல்ல, சித்ரா  கேட்கவில்லை

குறைஞ்சிடும் என்று  மீண்டும்  ஒரு  முறை இன்ஜெக்ஷன் போட்டுவிட்டார். அவ்வளவு தான் வலிப்பு எடுக்க ஆரம்பித்தது. உடனே பக்கத்தில் இருந்த பெரிய ஹாஸ்பிடல் கூட்டி கொண்டு ஓடினர். நேரே icuவில் வைத்தனர்

மூளை காய்ச்சல் என்றனர். உயிர் பிழைத்தது அதிசயம் என்றனர். ஆனால் கால் இனி இயங்காது என்றனர். முடிந்தது. சின்னு ஓரிடத்தில் முடங்கினான். விஷ்ணுவிற்கு அம்மா வந்து பார்த்திருந்தால் தம்பிக்கு இப்படி ஆகியிருக்காது என்று மனதில் பதிந்து போனது. அவர் மேல் கோவத்தை சுமக்க ஆரம்பித்தான்

துர்காவிற்கோ சொல்லவே வேண்டாம். இந்த நொடி வரை அழுது கரைகிறார். வருடங்கள் கடந்தும் மாறவில்லைஇப்போதும் சக்ரவர்த்தி சொல்லிவிட, துர்காவிற்கு அவ்வளவு  வேதனை. அத்தையை பார்த்த ஈஷ்வருக்கு தாங்க முடியவில்லை

“மாமா.. அத்தை வேணும்ன்னு செய்யல, இது உங்களுக்கும் தெரியும்.. திரும்ப திரும்ப இதையே சொல்லி அவங்களை ஏன் அழ வைக்கிறீங்க..?”  என்று கோபத்துடன் கேட்டான்.  

ஈஷ்வர்.. நான் உன் அத்தையை குத்தம் சொல்ல சொல்லலை, அங்க என் மகன் வலியில வேதனையில துடிச்சிட்டு  இருக்கான்.. என் கண்ணுக்கு இப்போ அது மட்டும் தான் தெரியுது..”  சக்ரவர்த்தி அப்பாவாக மறுகினார்

புரியுது மாமா..? ஆனா அதுக்காக இவங்களை பேசினா நடந்தது மாறிடுமா..? யாரும் வேணும்ன்னு செய்யல மாமா.. இது நடந்திடுச்சு..”

அதான் நானும் கேட்கிறேன் ஈஷ்வர் எப்படி நடந்துச்சு இவங்களோட அஜாக்கிரதையால் தான், இவதான் இப்படி பண்ணான்னா இவனும் அப்படி தான் இருக்கான், அப்போ உங்களை நம்பி என் மகனை விட்டது என் தப்பு தான் இல்லை..”

மாமா..  ப்ளீஸ்.. கொஞ்சம் பொறுமையா இருங்க..”

என்னாலயும் முடியல ஈஷ்வர் உள்ள அரை உயிரா படுத்திருக்கிற என் மகனை பார்த்தா என் நெஞ்சே வெடிக்குது.. ச்சு.. இவங்களை சொல்லி என்ன ஆக போகுது, ஒரு அப்பாவா நான் பார்த்திருக்கணும் என் மகனை..”  மறுகினார் மனிதர்

மாமா.. அவங்க..”

அவர் சொல்றது சரிதான் ஈஷ்வர், ஏற்கனவே ஒருமுறை அடி வாங்கியிருக்கும் போது நான் இன்னும் உஷாரா இருந்திருக்கணும்பிரதாப் சஜஸ்ட் பண்ண டாக்டர் தானே JR, நான் வேலை பார்க்கிற ஹாஸ்பிடல்ல இருக்கிற டாக்டர் தானே திலக்ன்னு நம்பினது என் தப்பு தான்செகண்ட் செக் அப் எடுத்திருக்கணும், அட்லீஸ்ட் செகண்ட் ஓப்பினியனாவது போயிருக்கணும், அப்படி செஞ்சிருந்தா அப்போவே யார் மேல தப்புன்னு தெரிஞ்சிருக்கும்..”  விஷ்ணு இடையிட்டு துயரத்துடன் சொன்னான்

இப்போ பீல் பண்ணி என்ன ஆக போகுது..? உள்ள படுத்திருக்கிற உன் தம்பி நல்லாகிடுவானா..?”  சக்ரவர்த்தி கட்டுப்படுத்த முடியாமல் பேச

மாமா.. போதும், உங்களுக்கு இருக்கிற அதே  வேதனை தான் இவங்களுக்கும் இருக்கு, நீங்க சின்னு அப்பான்னா, அத்தை அவனோட அம்மா, விஷ்ணு அம்மா ஸ்தானத்தில இருந்து அவனை இத்தனை வருஷம் பார்த்துக்கிட் அண்ணன், அவங்களை போய் பேசிட்டே போறீங்க,   அவங்க எவ்வளவு கஷ்டபடுவாங்கன்னு யோசிச்சு பேசுங்க..”  ஈஷ்வர் பேச, சக்கரவர்த்தி  மனைவி, மகனை பார்த்தார்

இருவரின் கண்ணீரும் அவரை சுட்டது. இதுநாள் வரை மனைவி படும் துயரம் புரிந்தும் பேசியிருக்க கூடாது. அப்பாவாக சின்னுவை தாங்கிய பெரிய மகனையும் பேசியிருக்க கூடாது. செல்ல  மகன் நிலை பேச வைத்துவிட்டது

சாரி.. திடீர்ன்னு எல்லாம் நடக்கவும் பேசிட்டேன்..” உணர்ந்து இருவரிடமும் கேட்டார்

இங்கு விஷ்ணுவிற்கோ அம்மாவை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை. இத்தனை வருடம் அவரை எவ்வளவு பேசியிருப்பான், இப்போது அவனும் அதே போல ஒரு தவறை தானே செய்திருக்கிறான்.

ஈஷ்வர்க்கு அவன் நிலை புரிந்தது. தோளில் தட்டி கொடுத்தான். “முடிஞ்சது முடிஞ்சது.. அதை மாத்த முடியாது. அடுத்து என்ன செய்ய பார்க்கலாம்..”  ஈஷ்வர் பொதுவாக சொன்னான்

விஷ்ணு.. சின்னு ரிப்போர்ட்ஸ், டேப்ளெட்ஸ் எல்லாம் எங்க இருக்கு..?”  கேட்டார் சக்ரவர்த்தி

அவன் ரூம்ல தான்..”

“அது தவிர வேற ஏதாவது இருக்கா..?”

இருக்குப்பா.. என் ரூம்ல  மெடிசன் மட்டும் ஸ்டாக் இருக்கு, ஆனா ரிப்போர்ட் சின்னு ரூம்ல தான் இருக்கு..  ஏன் கேட்கிறீங்க..?”

இல்லை சும்மா தான்..” சக்கரவர்த்தி முடித்துவிட, விஷ்ணு, ஈஷ்வர்க்கும் நம்ப  முடியவில்லை

ஓகே.. இப்போ முதல்ல அந்த மெடிசின் எல்லாம் எடுத்து டெஸ்ட் கொடுக்கலாம்.. அங்க தான் ஏதோ தப்பு நடந்திருக்கு..”  ஈஷ்வர் சொல்ல

அதை நான் பார்த்துகிறேன்..” என்றார் சக்ரவர்த்தி

இல்லை மாமா.. நாங்க..”

ஈஷ்வர்.. நீ இப்போ லீவுல தான் வந்திருக்க, இங்க நின்னு செய்ய முடியாது, நான் பார்த்துகிறேன்..”   என, அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிய ஈஷ்வர் அமைதியாகிவிட்டான். ஆனாலும் அவர் பேச்சில் ஏதோ ஒன்று இருந்தது. போலீஸ் மூளை இப்போதே வேலை செய்ய ஆரம்பித்தது.

“விஷ்ணு நான் சொன்னது என்ன ஆச்சு..? உன் தம்பிக்கு எதுவும் பார்க்காம இங்கே உட்கார்ந்திருக்க, அவனுக்கு நீ தான் முன்ன நின்னு செய்யணும், உன்னை தேடுறான் அவன்..  எழுந்து உள்ள வா.. ஈஷ்வர் அவனை கூப்பிட்டுட்டு வா..”  சக்கரவர்த்தி மனைவியுடன் உள்ளே சென்றார்.  

விஷ்ணு.. சின்னுவை பார்க்க போலாம் வா..”  ஈஷ்வர் விஷ்ணுவை கூப்பிட, அவன் வரவில்லை நீ போ என்றான்.

டேய்.. நீ  என்ன பண்ணிட்டிருக்கன்னு உனக்கு புரியுதா..? சின்னுக்கு உன் சப்போர்ட் இப்போ ரொம்ப தேவை.. ஒழுங்கா அவனை கவனி..” ஈஷ்வர் கண்டிப்புடன் சொன்னான்.

ஈஷ்வர்.. என்னால எப்படிடா அவன்கிட்ட போக முடியும்..? அவன் என்னை நம்பி தானே நான் சொன்ன ட்ரீட்மென்ட் எல்லாம் எடுத்தான்.. அவன்.. அவன் இப்போ உயிருக்கு..”

“விஷ்ணு.. ஸ்டாப் இட் மேன், நீயேன் இப்படி ஆகிட்ட.. உன்கிட்ட பேசிட்டு இருந்தா எல்லாம் சரிவராது.. வா..”  ஈஷ்வர் அவன் கை பிடித்து சின்னுவிடம் இழுத்து சென்றான். மகா மட்டும் ரூமில் இருக்க, பெரியவர்கள் அடுத்து என்ன என்று பார்த்து கொண்டிருந்தனர்

ஈஷ்வர், விஷ்ணு கதவு திறந்து உள்ளே செல்ல, சின்னு கண் முழித்து படுத்திருக்க, மகா முகம் கோவத்திலும்அழுகையிலும் சிவந்து இருந்தது. இப்போ என்ன பேசினான் தெரியலையே..? விஷ்ணு தம்பியை பார்த்தான்.

அவன் முகத்தில் லேசான புன்னகை தான். “என்னடா என் தங்கச்சியை கடிச்சு வச்சுட்டியா அழுதிட்டு இருக்கா..”  ஈஷ்வர் விளையாட்டாக ஆராய்ந்தான்

மாமா.. அவளை கடிச்சா அவ என்னை பிராண்டிடுவா..” சின்னு மெல்லிய குரலில் சிரிப்புடன் சொன்னான்.

“அதென்னமோ உண்மை தான்..”  என்ற ஈஷ்வர் திரும்பி விஷ்ணுவை பார்த்தான். அவன் தள்ளியே நிற்க, கண்ணால் அதட்டி அருகில் வர வைத்து தான் தள்ளி நின்றான்

எங்கண்ணா போயிட்ட..” விஷ்ணு அருகில் வரவும் தானே அவன் கை பிடித்து கொண்டான் சின்னு

இங்க வெளியே தான் இருந்தேன், உனக்கு இப்போ எப்படி இருக்கு.. ரொம்ப வலிக்குதா..?” தம்பியை மேலிருந்து கீழ் பார்த்து கேட்டான்