Advertisement

அத்தியாயம் பத்து :
துளசி வரும் போது காலை பத்து மணி, அதுவரையிலும் திரு மகளை பார்ப்பதும் பின் வந்து சோபாவில் அமர்வதுமாக இருக்க,
“என்ன இது, இந்த அண்ணன் என்ன பண்றாரு? குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தறாரு!” என்று தனம் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.
வெங்கடேஷ் வெளியே கிளம்பியிருந்தான், அவனுக்கு தெரியவில்லை, திருவும் சொல்லவில்லை! மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் வேறு ஒரு பக்கம் எதற்கு வரவேண்டும் என்று போனில் துலைத்து எடுத்தனர்
“மா! துளசி தான் சொன்னா மா!” என்று முடித்து விட்டான்.
“துளசி” என்ற பெயர் வந்ததும் அமைதியாகி விட்டனர். எப்படியோ சேர்ந்து வாழ்ந்தால் சரி என்ற நிலைக்கு வந்திருந்தனர். ஷோபனாவையும் அவளின் அப்பா வீட்டிற்கு அனுப்பி விட்டான் வெங்கடேஷ்.
ஏற்கனவே கொஞ்சம் பயந்து தான் இருந்தாள் ஷோபனா, “இப்போது போ” என்று அனுப்பி விட்டவன், “நான் வர சொல்லறவரை நீ இங்கே தான். என்னை கூப்பிட்டுக்குவார்ன்னு நீ யார் கிட்டயாவது சொன்ன, திரும்ப கூப்பிடவே மாட்டேன்” என்று பயமுறுத்தி அனுப்பியிருந்தான்.
மக்களின் நல வாழ்விற்கு, திருப்பத்தை எதிர்பார்த்து திருப்பதி கிளம்பியிருக்க, சென்று சேரும் முன்னேயே பிடி அருள் புரிந்து விட்டேன் என்று கடவுள் அனுக்கிரஹம் புரிந்து விட்டார்.
அப்படி திரு ரூமிற்கும் ஹாலிற்கும் அலைய, மீனாக்ஷி நல்ல உறக்கத்தில் தான்.
பின் அவன் ஹாலில் அமர்ந்திருந்த போது தான் துளசி வந்தாள். வேகமாக அவள் வீட்டிற்குள் வர, திரு வரும் அவளையே விழி எடுக்காமல் பார்த்திருந்தான்.
அவனை பார்த்ததும் ஒரு நொடி தயங்கி நின்றவள், பின் வேகமாக ரூமின் உள்ளே போக, செல்லும் அவளை யோசனையுடன் பார்த்திருந்தான்.
மெலிந்திருந்தாள், கண்களை சுற்றி லேசான கரு வளையம், அதனையும் மீறி அவளின் தோற்றம்! அவனுக்குள் ஒரு சந்தேகத்தை தோற்றுவித்தது.
மனம் சட்டென்று ஒரு பரவச நிலையை உணர, அம்மாடி என்று இதயம் துடித்தது. ஆனால் அவளிடம் ஒரு பிரதிபலிப்பும் தெரியவில்லை. எவ்வளவு பெரிய விஷயம். எப்படி என்னை பார்க்கும் போது சாதாரணமாக கடக்க முடியும்?    
அந்த யோசனையில் இருந்தான். டேக்சி வாயிலில் நிற்க, அதன் பிறகே பணம் கொடுக்க வேண்டுமோ என்று வெளியில் வந்து பார்க்க, பிரசன்னா அங்கேயே நின்றிருப்பது தெரிந்தது.
அவனை பார்த்தும் வருடங்கள் இருக்க, அவன் கல்லூரி படிக்கும் போது பார்த்தது, ஒல்லியாய் உயரமாய் இருந்த பையன் இப்போது முழு ஆண்மகனாய் அங்கே வந்த டாக்சியில் சாய்ந்து நின்றிருக்க,
“உள்ள வா பிரசன்னா, ஏன் அங்கேயே நிக்கற” என்றான்.
“தெரியலை, அக்கா ஒன்னுமே சொல்லலை!” என்று அவன் சொல்ல,
“அவ மீனாக்ஷியை பார்க்கற டென்ஷன்ல இறங்கி ஓடியிருப்பா, நீ உள்ள வா, பழசையே பிடிச்சிட்டு தொங்கிட்டு, உங்க அக்கா சொல்லணும்னு வெயிட் பண்ணக் கூடாது!” என்று கறாராகப் பேசினான்.
தன்னால் எந்த பிரச்னையும் எப்போதும் வருவதை விரும்பாத பிரசன்னா உள்ளே வந்து விட்டான். அவனின் உடைகளை பார்த்தவுடனே துளசி தயாராகும் வரை கூட விடவில்லை என்று புரிந்தது.
“அவசரமா கூட்டிட்டு வந்துட்டாளா?” என்று திரு பேச,
“என்னிடமா பேசினார் இவர்” என்று அதிசயித்து பார்த்த பிரசன்னா “ஆம்” என்பது போல தலையசைத்தான்.
“உட்காரு” என்று சொல்ல, பிரசன்னா எதுவும் பேசாமல் உட்கார்ந்து விட்டான்.
கிட்ட தட்ட கால் மணிநேரம் கடந்து துளசி வந்தவள், “அத்தைக்கு ஃபோன் பண்ணி கொடுங்க” என்று சொல்லி, பின் அகிலாண்டேஸ்வரியிடம் பேசினாள். விஷயத்தை சொல்லி, தான் அங்கே வந்து விட்டதையும் சொல்லி என்ன செய்ய வேண்டும் என்று கேட்டாள்.
“உன் சின்ன அத்தைங்களை போய் கூப்பிடு, அவங்க வந்து எல்லாம் பார்த்துக்குவாங்க! நாங்க வர இன்னும் ஒரு மணிநேரத்துக்கு மேல ஆகும்” என்றார்.
பின் துளசி சென்று அவர்களை அழைக்க, துளசியை பார்த்து அவர்களுக்கு ஆச்சர்யம், அதையும் விட இந்த விஷயத்தை கேள்வி பட்டு சந்தோசம்!
உடனே அவர்கள் கிளம்பி வந்து விட்டனர்! எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்ள, திரு அழைத்து வெங்கடேஷிற்கு சொன்னான்.
மகளுக்கு உணவு எடுத்து போய் கொடுத்து “அவ சாப்பிடட்டும் அத்தை, பின்ன என்ன பண்ணணுமோ பண்ணிக்கலாம்!” என்று துளசி சொல்ல, அவர்கள் மறுத்து எதுவும் பேசவில்லை.   
பிரசன்னா பரிதாபமாக அங்கே அமர்ந்திருப்பதை பார்த்த திரு, “துளசி” என்று அழைத்தவன், “எங்களுக்கு டிஃபன் எடுத்து வை” என்றான்.
“நீங்க இன்னும் சாப்பிடலையா?” என்றவள் “தனம்” என்று குரல் கொடுக்க,
“அக்கா வந்துட்டீங்களா?” என்று வேகமாக அவள் சமையல் அறை விட்டு ஏறக்குறைய ஓடிவந்தாள். தனத்தின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
“அண்ணா காலையில இருந்து அங்குட்டும் இங்குட்டும் அசைஞ்சிட்டே இருந்தாரா? என்னவோன்னு நினைச்சேன்! நீங்க வர்றதுக்கு தானா!” என்று அதிசயிக்க,
தனம் பேசியதை காதில் வாங்காதவன் போல திரு அமர்ந்திருக்க, துளசியின் முகம் புன்னகையில் மலர்ந்தது.   
“தனம் நம்ம வீட்ல விஷேஷம், மீனாக்ஷி பெரிய பொண்ணு ஆகிட்டா, வேலை இருந்துட்டே இருக்கும், ஒரு ரெண்டு பேரை ஒரு பத்து நாளைக்கு கூட கூப்பிட்டுக்கோ, என்ன பணமோ குடுத்துக்கலாம்”  
“ஐ அப்படியா” என்று சந்தோஷித்தவள், “நான் ஃபோன் பேசறேன்” என்று உள்ளே போய் விட்டாள்.     
“வா பிரசன்னா” என்றவள் அமரவைத்து இருவருக்கும் பரிமாற, “நீயும் உட்காரு துளசி, எல்லோரும் வந்துட்டா சாப்பிட முடியாது” என்றான் திரு.
“என்னிடமா பேசியது? நான் இவனுடன் அமர்ந்து சாப்பிடுவதா?” என்று விழி விரித்தாள் துளசி.
“உட்காரு” என்றான் சிறு அதட்டலோடு! அவன் உணவு உண்ணும் நேரம் இன்னும் அவளை அருகில் பார்க்கலாம் அல்லவா!
பார்வை முழுவதும் துளசியிடம், அவனால் பார்வையை விலக்க முடியவில்லை, காதல் பார்வையல்ல, ஆராய்ச்சி பார்வை.
அப்போதும் திருவின் பக்கம் அமரவில்லை, பிரசன்னாவின் பக்கம் அமர்ந்து தான் உண்டாள். வேகமாக உண்ண, “மெதுவா சாப்பிடு, அஞ்சு நிமிஷத்துல ஒன்னுமாகாது” என்றும் அதட்டினான்.
உணவு உண்டவுடனே பிரசன்னா “நான் கிளம்பட்டுமா?” என,
“இரு பிரசன்னா” என்று திருவும், “சரி கிளம்பு” என்று துளசியும் ஒரே நேரத்தில் சொல்ல,
“ஏன்?” என்ற பார்வை திருவிடம் கிளம்ப,
“இன்னும் முறையா சொல்லலை, இவன் என்னை கொண்டு வந்து விட வந்தான். எல்லோரும் வர வர இவனை தெரியாது, யார்ன்னு கேட்பாங்க, அப்புறம் நம்ம கிட்ட சொல்லாம இவங்களுக்கு சொல்லிட்டாங்களான்ற பேச்சு வரும், அவன் போகட்டும்!”  
இதில் இவ்வளவு இருக்கிறதா என்று பார்த்திருந்தனர் திருவும் பிரசன்னாவும்.
பின் பிரசன்னா கிளம்ப, “நாம ஏதாவது டாக்சிக்கு பணம் கொடுக்கணுமா?” என்று திரு கேட்க,
அவனை நேரடியாக முறைத்தவள், “நல்லா சம்பாரிக்கறான். இது அவனுக்கு ஒரு பணமில்லை, அப்படியே அவனுக்கு சம்பாதனை இல்லைனாலும் இந்த மாதிரி பணம் குடுத்தா அவனை அசிங்கப்படுத்தற மாதிரி, எங்க அப்பா அம்மாகிட்ட நடக்கற மாதிரியே அவன் கிட்டயும் செய்யக் கூடாது!” என்று கண்டிப்பாகச் சொல்ல,
“தெரியாம கேட்டுட்டேன், என்னை விட்டுடு!” என்ற பாவனையை கண்களில் காண்பித்து, அவனை வழியனுப்ப வெளியில் சென்றான் திரு.
அப்போது சரியாக அகிலாண்டேஸ்வரி வந்து விட, வீடே இன்னும் பரபரப்பானது. “எங்க போற நீ?” என்று பிரசன்னாவை அப்படியே பிடித்து இழுத்து வந்தார்.
“இங்கயே இரு! தாய் மாமன் நீ தான் சடங்கெல்லாம் செய்யணும்” என்று சொல்லிவிட, தன் உடையை குனிந்து பார்த்துக் கொண்டவன்,
“அத்தை, நான் போய் வேற டிரஸ் எடுத்துட்டு வர்றேன்”  
“அட! ஆம்பிள்ளை பையனுக்கு என்ன அழகு? நீ உள்ள வா!” என்று அவனை அழைத்து வந்து அமர்த்தி விட, பரிதாபமாக அமர்ந்திருந்தான்.
திரு தான் “உள்ள போய் ரெஸ்ட் எடு, இல்லை டீ வீ பாரு, நான் தேவைன்னா கூப்பிடறேன்” என்று அவனின் ரூமிற்கு அழைத்து சென்று விட, இத்தனை கும்பலுக்கு பழக்கப் படாத பிரசன்னா பேசாமல் அங்கேயே இருந்து கொண்டான். 
“துளசி, உங்கம்மா வீட்டுக்கு ஃபோன் போடு” என்று அவர் சொல்ல, பின்பு முறையாய் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.     
இப்போது சாரதா வீட்டினருடன் பேசுவதில்லை. அதனால் இன்னொரு தங்கைக்கு மட்டும் அழைப்பு எப்படி விடுவது என்ற யோசனை, கூடவே அங்கே தங்களின் மகளும் வாழ்க்கை பட்டிருக்கிறாள், இப்படி மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் ஆலோசித்து கொண்டிருக்க,
வெங்கடேஷ் இதுதான் சாக்கென்று “எங்க வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்பி வா. நான் உங்க வீதி முக்குல நிக்கறேன்” என்று ஷோபனாவிடம் சொல்ல, ஷோபனாவும் வந்து விட்டாள்.
“சித்தி, எதுன்னாலும் இவளையும் வெச்சிக்கங்க, வாய் பேசினா உடனே என்னை கூப்பிட்டு விடுங்க” என்று வெங்கடேஷ் சொல்லவும்,
“அப்போ எங்கம்மாவை திட்ட வேண்டாம்னு சொல்ற” என்று நிருபமா கேட்க,
“ஹேய், நீ எப்போ வந்த?” என்றான் வெங்கடேஷ்.
“எனக்கு இப்போ லீவ், நான் இங்க வந்து ரெண்டு நாள் ஆச்சு, உனக்கு உன் பொண்டாட்டியை பிரிஞ்ச ஏக்கத்துல தங்கச்சியை கூட கண்ணே தெரியலை போல” என்றாள்.
நிருபமா சத்தியநாதன் வசுமதியின் பெண், எஞ்சினியரிங் கடைசி வருஷத்தில் சென்னையில் படித்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ இன்னொரு வாலு எங்கே?”  
“நானும் இங்கே தான் இருக்கேன்” என்று கமலநாதன் மேகலாவின் பெண் யாழினி சொன்னாள். அவளும் நிருபமாவின் கல்லூரியில் முதல் வருடம் படித்து கொண்டிருந்தாள்.
அவர்களின் ஆண்மக்கள் இருவரும் படித்து முடித்து வேலையில் இருந்தனர். ஒருவன் புனேயில், மற்றொருவன் அமெரிக்காவில். அவர்கள் இருவருக்குமே பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். இங்கே தொழிலை கையில் எடுத்தது திருவும் வெங்கடேஷும் தான். திரு படிப்பை முடிக்கவில்லை, வெங்கடேஷ் படித்தும் அவனின் தந்தை அவனை வேலைக்கு அனுப்பவில்லை.

Advertisement