Advertisement

புகழ் உண்ண வரவுமே, மங்கை ஒதுங்கிக்கொள்ள, பொன்னி பரிமாற, அவனோ உண்பதற்கு மட்டுமே வாய் திறந்தான்..  எதுவும் பேசவில்லை.. உண்டுவிட்டு எழுந்து போய்விட, அதற்குமேல் பொன்னியும் மங்கையும் சாப்பிட,
மங்கையோ “நீ போ பொன்னி.. நான் முன்னாடி ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்..” என்றுவிட, பொன்னி திரும்பவும் அறைக்கு வர, அப்போதும் புகழேந்தியின் எண்ணம் எல்லாம் அவள் அந்த சேலையை தேடுகிறாளா என்றுதான் இருந்தது..
ஆனால் பொன்னிக்கோ இப்போது மனதில் மங்கை சொன்ன பெண்ணின் விஷயம்.. இவனிடம் சொல்லி பேச சொல்லுவோமா என்ற எண்ணம்.. அதில் சேலை அங்கிருந்ததெல்லாம் அவளுக்கு நினைவில் கூட இல்லை.. ஆனால் புகழேந்திக்கு அது மட்டும் நினைவில்..
“என்னங்க வேலை இருக்கா???” என்று அவனருகே சம்மணமிட்டு அமர,
“பார்த்தா எப்படி தெரியுது???” என்றான் இறுமாப்பாய்..
‘இதென்ன இப்படி பேசுறாங்க…’ என்று பார்த்தவள், “ம்ம் சரி..” என்றுசொல்லி கட்டில் விட்டு இறங்கப் போக,
“ஏன்.. இல்லைன்னா மட்டும் நீ என்ன பண்ணிட போற…” என்று வீம்பு பேச்சில் இழுத்தான்..
“நான் என்ன பண்ணேன்னு தெரியலை… என்ன பண்ணனும்னு தெரியலை.. நீங்க ஏன் கோபமா இருக்கீங்கன்னும் தெரியலை…” என்றவள், மீண்டும் அப்படியே அமர்ந்துகொள்ள, அடுத்த ஒரு பத்து நிமிடம் மௌனத்தில் தான் கழிந்தது..
அவனும், இவள் என்னதான் செய்கிறாள் என்று பார்க்க மௌனமாய் இருக்க, இவளும் அப்படித்தான் இருந்தாள்.. இருவரின் பார்வையும் மட்டும் அவ்வப்போது ஓர ஓரமாய் சந்தித்துக்கொள்ள, ஒருநிலையில் பொன்னிதான்
“பாக்குறீங்கதானே.. பேசினா என்னவாம்.. உட்காந்திருக்கேன்ல.. அப்படியென்ன கோபம்… இல்ல சொல்லிட்டு கோபப்படனும்…” என்று கடிந்தவள், அப்போதுதான் அங்கே கட்டிலில் சேலை இருந்தது நியாபகம் வந்து,
“இங்க வச்சிருந்த சேலை…எங்க…” என்று தேட, புகழேந்தி கமுக்கமாய் இருந்துகொண்டான்..
“இங்கதானே இருந்தது…..” என்று சொல்லியபடி அவளும் அறை முழுவதும் தேட, இவனோ “தேடு… தேடு…” என்று ரசித்துக்கொண்டு இருந்தான்..
“ஏங்க இங்கதானே சேலை இருந்தது…” என்று கடைசியில் பொன்னி அவனிடமே கேட்க,
“எந்த சேலை.. எனக்கென்ன தெரியும்..” என்று தோள்களை குலுக்கிவிட்டு அவன் வேலையில் கவனமாய் இருப்பது போல் இருக்க,
“நீங்க கொடுத்த சேலைதான்.. இங்கதான் வச்சேன்.. காணோம்…” என்றவளுக்கு மறந்தும் கூட இவன்தான் மறைத்து வைத்திருப்பான் என்று தோன்றவில்லை..
“என்னங்க கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்.. மெத்தையை தூக்கிட்டு பாக்கனும்..” என்றதும்,
“என்னது.. கொடுத்த கிப்ட்ட ஒழுங்கா வைக்க முடியாது.. இப்போ வந்து என்னை தள்ளுன்னு சொல்றியா.. போ அதெல்லாம் முடியாது.. நீ என்னவோ பண்ணு.. கொடுத்ததுமே கட்டிருக்கணும்.. அதைவிட்டு என்னவோன்னு வச்சிட்டு போன…” என்று புகழும் அவன் மனதில் இருந்ததை கொஞ்சம் சொல்லிட,
‘ஓ.. அதான் கோபமா???!!!’ என்று தோன்றியது அவளுக்கு.. அப்படியே ‘இதை சொல்ல என்ன வந்தது…’ என்ற எண்ணமும்..
“சோ.. இதான் கோபமா?? நான் கட்டமாட்டேன்னு சொன்னேனா.. வேலை முடிச்சிட்டு கட்டறேன்.. இல்லாட்டி அழுக்காகிடும்தானே சொன்னேன்…” என்றவள் நின்று அவனையே பார்க்க,
“ஒன்னும் வேணாம்.. நீ போய் உங்கண்ணன் கொடுத்த பைக்கையே கட்டிட்டு சுத்து…” என்று உள்ளிருந்த பொறாமையும் வெளியே வந்தது..
பொன்னிக்கு முதலில் அவன் சொன்னது புரியவில்லை… “என்ன?? என்ன சொன்னீங்க..” என்று கேட்க,
“ஒண்ணுமில்ல ம்மா தாயே.. உங்களுக்கு நாங்க கொடுத்த கிப்ட்டா பெருசா தெரியபோகுது… போ போ…” என்று அசால்ட்டாய் சொன்னவன் வேலையை பார்க்க, பொன்னிக்கு அப்போதுதான் முழுதாய் புரிந்தது..
அவனின் உர்ரென்று முகத்தினையே பார்த்தபடி நின்றவளுக்கு ஒருநிலையில் சிரிப்புதான் வந்தது.. இதென்ன சிறுபிள்ளை தனமாய் ஒரு பிடிவாதமும் கோபமும்.. என்று தோன்ற சிரிப்பை அடக்கித்தான் நின்றிருந்தாள்.. அவனுக்கும் தெரியாமல் இருக்குமா என்ன??
“ஓ.. உனக்கு என்னை பார்த்தா சிரிப்பா வேற இருக்கோ.. அதுசரி.. நான் என்ன வண்டியா  வாங்கி கொடுத்தேன்..  பெருசா வந்துட்டா சேலை இங்க வச்சேன்னு.. சும்மா போ டி…” என்று புகழ் கடிய, பொன்னிக்கு நிஜமாகவே முகம் அப்போது சுருங்கிப்போனது..
அப்போதும் ஒன்றும் சொல்லாது பொன்னி அப்படியே நிற்க, புகழ் தான் பேசிக்கொண்டே போனான்..
“அப்படி குதிக்கிற.. அப்போ எனக்கு எப்படி இருக்கும்.. நான் கிப்ட் பண்ணப்போ அப்படி குதிச்சியா… அசோக் வண்டி வாங்கிட்டு வந்ததும் என்னை மறந்துட்டல்ல போ.. போ..” என்றவன் பேசிக்கொண்டே இருக்க,.  பொன்னிக்கு மிக மிக சங்கடமாய் போய்விட்டது..
இதை இவ்வளவு சீரியசாக எடுத்தானா என்று..
“என்ன இப்போ அமைதியாகிட்ட.. அதான் என்னவோன்னு தூக்கி போட்டிருந்தியே.. இப்போ ஏன் தேடுற… ஹ்ம்ம் என்னை சொல்லணும்.. ஆசையா வாங்கிட்டு வந்தேன்ல…” என்று புகழ் கேட்கும்போதே பொன்னிக்கு கண்களில் மளுக்கென்று நீர் வந்துவிட்டது..
அவளும் நினைக்கவில்லை அழுவோம் என்று.. ஆனால் அழுகை வந்துவிட்டது.. புகழேந்தி இத்தனை நாளில் இப்படி உதாசீனமாய் பேசியதுமில்லை என்பதால் அவளுக்கு ஒருமாதிரி ஆகிட, அதிலும் அவளின் பிறந்தநாள் அன்று போய் அவன் இப்படியெல்லாம் பேசிட, அவள் நினைக்காத ஒன்றையும் சொல்லிட அழுகைதான் வந்துவிட்டது..
அவன் பேசியதற்கெல்லாம் ஒன்றுமே சொல்லாது, கண்களைத் துடைத்துக்கொண்டு வந்து மறுப்பக்கம் படுத்துவிட்டாள். ஆனாலும் அழுகை கட்டுப்பாடில்லாமல் வர, அவளின் உடல் மட்டும் குலுங்க, அப்போதுதான் புகழ் அவளை கவனித்தான்..
“ம்ம்ச் இப்போ ஏன் குலுங்குற..??” என்றவனுக்கு அவளின் அழுகை புரிய, “ஏய் கண்ணு என்ன..?? என்னாச்சு???” என்றவன் தன் கோவம் மறந்து அவளின் அருகே வர, அவளோ
“போ…” என்பதுபோல் அவனைத் தள்ள,
“ம்ம்ச் இன்னிக்கு போய் அழுதுட்டு இருக்க.. என்ன பொன்னி நீ.. இப்போ ஏன் அழற.. இங்க பாரேன் அழாத …” என்றவனுக்கு அவனின் கோபம்தான் அதற்கு காரணம் என்று மறந்தே போயிருந்தது..
புகழேந்திக்கு எல்லாம் சரி, ஆனால் பொன்னியின் அழுகை மட்டும் தாங்காது.. பிடிக்கவும் செய்யாது..
“பொன்னி.. கண்ணு.. இங்க பாரேன்…” என்று அவளின் கரங்களை விளக்க,
“ஒன்னும் வேணாம் போங்க.. அழ வச்சிட்டு இப்போ வந்து என்ன…” என்று அவளின் முறையை முறையாய் ஆரம்பித்தாள்..
“ஹேய். ஹேய்.. அதுக்காக அழலாமா.. இப்போ என்ன இனிமே நான் திட்டல.. திட்டமாட்டேன்.. சேலைதானே.. இதோ… இங்கதான் இருக்கு…” என்று அதனை எடுத்தும் கொடுத்தவன்,
“அழாத பொன்னி…” என்றான் பாவமாய்..
இதுக்கு அவன் காலையில் இருந்து முகம் தூக்கியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.. இப்படி அவளின் கண்ணீரை பார்த்ததும் பொசுக்கென்று காணாமலும் போய்விட்டது.. இது தேவையா என்று அவன் மனமே அவனிடம் கேட்க,
“ச்சு போ..” என்று அதனை விரட்டியவன்,
“பொன்னி.. கண்ணும்மா.. ப்ளீஸ்.. இங்க பாரேன்…” என்று அவளை திருப்ப முயன்றான்..
“ஒன்னும் வேணாம்… இப்படி பேசிட்டீங்க.. நான் என்ன அப்படியா நினைச்சேன் உங்களை.. பர்ஸ்ட் டைம் உங்களைத்தானே கூப்பிட்டேன்… வாங்கன்னு.. அப்போவே தெரியவேணாம்…” என்று முகம் திருப்பாமலே சொன்னவள், அவனின் கைகளை தட்டிவிட,
“சரி சரி திட்டிக்கோ.. நான் ஒன்னும் சொல்லலை.. நீ திரும்பு.. அழாத.. அத்தை வேற இருக்காங்க.. இப்படி பண்ணாத…” என்று அவனும் சமாதானம் செய்ய,
பொன்னியோ “போ போ சொன்னீங்க…” என்றவள் “நான் போகணும்னா எப்பவோ போயிருப்பேன்ல…. ஆனா போனேனா…?? நீங்க வேணும்னு தானே எல்லாம் பொறுமையா இருந்தேன்.. இப்படி பேசுறீங்க…” என்றவளுக்கு பழையது எண்ணி எல்லாம் அழுகை வந்தது..
அப்போது அவனிடம் சொல்லி அழாத அழுகை எல்லாம் இப்போது பொன்னிக்கு வந்திட,
“பொன்னி.. என்னடா.. இங்க பாரு.. சரி சரி நான் சில்லியா பிஹேவ் பண்ணிட்டேன்தான் போதுமா.. அதுக்கு ஏன் இதெல்லாம் சொல்லி அழற…” என்றவன் எங்கே ஏதாவது பேசி இவள் கிளம்பிக்கூட போய்விடுவாளோ என்றுகூட இருந்தது..
ஏனெனில் இதுநாள் வரைக்கும் பொன்னி ஓரளவு பொறுமையில் இருப்பது அவனும் கண்டதுதான்..
“லாஸ்ட்ல நீங்களும் இப்படி பேசிட்டீங்கதானே… போங்க…” என்று பொன்னி சொல்லும் போதே, வீட்டின் காலிங் பெல் அடிக்க,
“யாரோ வந்திருக்காங்க…” என்று புகழ் சொல்ல, “போய் பாருங்க…” என்றவள் சட்டமாய் படுத்துக்கொள்ள,
“ம்ம் நேரம்..!!!” என்றெண்ணியபடி, எழுந்து போனான்..
அசோக் தான் திரும்ப வந்திருந்தான்.. “வாங்க அசோக்…” என்றவன் “பொன்னி அசோக் வந்திருக்காங்க…” என்றழைக்க, அவளும் வேகமாய் முகம் கழுவி விட்டு வந்து நிற்க,
“அம்மா எங்க பொன்னி.. கூட்டிட்டு போலாம்னு வந்தேன்…” என, மங்கையும் வந்துவிட்டார்..
“ம்மா போலாமா…” என்று அசோக் கேட்க, அவரோ பொன்னியைப் பார்த்தார்..
அவர் பேச சொன்ன விசயம் இன்னும் பொன்னி பேசிருக்கவில்லை என்பது அவளின் முகத்தினை பார்த்தாலே தெரிந்தது..
“ம்மா நீ போ.. நான் போன் பண்றேன்…” என, “ம்ம் சரி…” என்று அவரும் கிளம்ப,
“ஏன் இருந்துட்டு போலாமே…” என்றது புகழேந்தி தான்..
“இல்ல புகழ்.. அம்மாவை வீட்ல விட்டுத் நான் திரும்ப ஆபிஸ் போகணும்..” என்று அசோக் சொன்னதும், புகழ் அதுக்கு மேல் எதுவும் மறுக்கவில்லை..
அசோக்கும் மங்கையும் கிளம்பிட, பொன்னி அவனிடம் ஒன்றுமே சொல்லாது திரும்ப அறைக்குள் செல்ல, அவன் தான் “பொன்னி பொன்னி…” என்று பின்னேயே போனான்..
“நான் கூப்பிட்டிட்டே இருக்கேன் வந்துட்ட…” என்றவன், அவளின் அருகே வர,
“நானும் தான் காலைல கூப்பிட்டேன்.. நீங்க போனீங்க..” என்றாள்..
“சரி சரி.. எதோ கோபத்துல போயிட்டேன்.. அதுக்கு அழுவியா நீ…” என்றவன் அப்போது வராத கண்ணீரை துடைப்பது போல் அவளின் கன்னத்தை வருட,
“ம்ம்ச் ஒன்னும் வேணாம் விடுங்க…” என்று பொன்னி தள்ள, “அதெல்லாம் விட முடியாது…” என்றவனோ கன்னத்தோடு சேர்த்து அவளையு  இறுக்கிப் பிடிக்க,
“என்னதிது… போங்க…” என்று பொன்னி விடுபட முயன்றாலும் முடியவில்லை..
“இதை கட்டு…” என்று புகழ் திரும்ப அவளின் கரங்களில் சேலையை கொடுக்க, “ம்ம்….” என்றவளுக்கு மெல்லமாய் ஒரு புன்னகை எட்டிப்பார்க்க,
“என்ன ம்ம் சொல்ற.. கட்டு..” என,
“நீங்க வெளிய போங்க.. கட்டிட்டு வர்றேன்..” என்ரவளைதான் பிடித்து, வம்பு செய்து, தான் கட்டுவேன் என்று அடம் செய்து, இறுதியில் ஒருவழியாய் அவளே கட்டி முடிக்க,
‘உனக்கு எதுக்குடா கோபமெல்லாம்…’ என்று கேட்டது அவனின் மனசாட்சி தான்..
“அசோக் ரொம்ப வருசமா என்னை வண்டி வாங்கிக்க தான் சொன்னான்.. நான்தான் வேணாம் சொல்லிட்டேன்.. இப்பவும் கூட சொல்லிருந்தா நான் வேணாம் தான் சொல்லிருப்பேன்…” என்றவள்,
“நீங்க கொடுத்த கிப்ட்டும் அசோக் கொடுத்ததும் எனக்கு ரொம்ப ரொம்ப ப்ரீசியஸ் தான்.. ஆனா ரெண்டுமே வேற வேற…” என,
“ம்ம் ம்ம் சரி சரி… விடு…” என்றான் அதற்குமேல் பதில் சொல்லத் தெரியாமல்..
“இப்பவும் கோபமா???” என்றபடி அவனின் சட்டை பட்டனை திருக,
“இல்லையே.. கோபமா எனக்கா?? இல்லையே…” என்று புகழ் சொல்ல,
“ம்ம்.. ஆனா வீட்ல எல்லாருக்கும் இன்னும் என்மேல வருத்தம் தான் போல.. யாருமே விஷ் பண்ணலை…” என்று மறைக்காமல் அவளும் தன் வருத்தத்தை சொல்லிவிட்டாள்..
“அடடா.. அதெல்லாம் இல்லை.. அங்க பொதுவா பர்த்டே எல்லாம் யாரும் பெருசா எடுக்கமாட்டாங்க கண்ணு.. நானே போய், இன்னிக்கு என் பிறந்தநாள் ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு கேட்டாதான், அவங்களுக்கு நியாபகமே வரும்.. அப்ப்டியிருக்கப்போ..” என்றவன், இன்னமும் அவள் முகம் அப்படியே இருப்பது கண்டு,
“இரு…” என்றவன், மகராசிக்கு அழைத்து “தாயே.. இன்னிக்கு உன் மருமகளுக்கு பிறந்தநாள் நீ ஒண்ணுமே சொல்லலைன்னு என்கூட சண்டை போடுறா…” என்று மிக மிக சீரியசாய் சொல்ல, அவரோ அதை நிஜம் என்றே நம்பிவிட்டார்..
“அடடா எனக்கு தெரியாதே கண்ணு.. சரி குடு..” என்றவர்,
“கண்ணு.. உனக்கு பிறந்தநாள்னு எனக்குத் தெரியாது.. நல்லா இரும்மா…” என்றவர் “இதெல்லாம் மனசுல போட்டுக்காத என்ன…” என்றார் நிஜமாகவே மகன் மருமகளுக்கு நடுவில் சண்டையோ என்று..
பொன்னியோ புகழை முறைத்தபடி “இல்லத்தை சண்டை எல்லாம் எதுவுமில்லை..” என,
“இங்க இதெல்லாம் பழக்கமில்ல கண்ணு…” என்றவர் மேலும் இரண்டு நொடி பேசிவிட்டு வைக்க,
“நீங்க இருக்கீங்களே.. ஏங்க இப்படியெல்லாம் பண்றீங்க…” என்றாள் பொறுக்காது..
“நான் என்ன பண்ணிட்டேன்..” என்றவன் விஷமமாய் அருகே வர,        
“ரொம்ப பெரிய ஆள்தான்” என்றவள் “ஒரு நிமிஷம்  இருங்க…” என்றுவிட்டு  மங்கை கொடுத்த புகைப்படத்தை அவனிடம் காட்டி அவர் சொன்னதை சொல்ல,
“ஓ… இதுல நான் என்ன பேசணும்…” என்றான் புரியாது..
“எங்களுக்கு சம்மதம்.. உங்களுக்கு எப்படி.. என்ன ஏதுன்னு கேளுங்க…” என,
“இல்ல நான் எப்படி…” என்று புகழ் தயங்க, “நம்ம கல்யாணத்துக்கு நீங்கதானே பேசினீங்க.. இப்பவும் பேசுங்க…” என்று பொன்னி சொல்லும்போதே என்னவோ புகழுக்கு ஒரு அண்ணனாய் அமுதாவின் நினைவுதான் வந்தது..
அவன் தங்கையை வேண்டாம் என்றுவிட்டு வேறொரு பெண்ணின் வீட்டில் பேசுவதா?? என்று மனம் கேட்டது.. அசோக் அமுதா திருமண பேச்சே இல்லாது இருந்திருந்தால் கூட அவனுக்கு இது தோனியிருக்காது.. ஆனால்.. அதுவே ஒரு பிரச்னையாகி போனபின்பு தோன்றாமல் இருந்தா தான் அது ஆச்சர்யமே…
“என்னங்க நீங்க.. பேசுங்க…” என்று பொன்னி ஊக்க, புகழ் பதில் சொல்லும் முன்பே பொன்னிக்கு மங்கை அழைத்துவிட்டார்.
“ம்மா என்னம்மா.. இரு.. அவர் பேசுறேன்னு சொல்லிருக்கார்..” எனும்போதே,
“இல்ல பொன்னி.. அது…” என்று மங்கை இழுக்க,
“என்னம்மா சொல்லு..” என,
“இந்த அசோக் இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டான்..” என்று சொல்ல,
“என்னம்மா சொல்ற..” என்று பொன்னி அதிர்ச்சியாய் கேட்டவளுக்கு தானாகவே குரல் உயர்ந்துவிட்டது..
“ம்ம் வீட்டுக்கு வந்ததும் சொன்னேன் பொன்னி இப்படி விசயம்.. மாப்பிள்ளய விட்டு பேச சொல்லிருக்கேன்னு.. யாரை கேட்டு அப்படி சொன்ன.. என்னை கேட்கவேனாமா.. எனக்கு கல்யாணமும் வேணாம் ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டு கோபமா போயிட்டான்…” என, பொன்னிக்கு மனதினில் இனம் புரியா ஒரு பயம் தான் வந்தது..         
                                               
              

Advertisement