Advertisement

                      தோற்றம் – 26
“என்னங்க….. இதெல்லாம் சரியே இல்லை….” என்று பொன்னி சிணுங்க…,
“நீ கட்டல.. சோ நான் கட்டி விடுறேன்…” என்று அவளுக்கு மும்முரமாய் சேலை கட்டிவிடும் பணியில் இருந்தான் புகழேந்தி..
“ஐயோ.. ப்ளீஸ்.. நானே கட்டிக்கிறேன்….” என்று கையை காலை பொன்னி உதற, அவளுக்கோ வெட்கமும் கூச்சமும் பிடுங்கியது…
“நீ எங்க கட்டின…?? சோ இதான் உனக்கு பனிஷ்மென்ட்…” என்று அவன் சேலைக்கு அடுக்கு எடுக்க ஐந்தாவது முறையாக முயற்சி செய்துகொண்டு இருக்க,
“கடவுளே…..!!!!!! ரெண்டு நிமிஷம்ல கட்ட வேண்டிய சேலை.. நீங்க அடுக்கு எடுக்கவே இத்தனை நேரமா….” என்று பொன்னி திரும்பவும் ஆரம்பிக்க,
“கண்ணு.. நீ சைலென்ட்டா நின்னா டூ மினிட்ஸ்ல முடியும்… இல்லையோ திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிப்பேன்….” என்று அவன் வந்த சிரிப்பையும் அவன் கண்களில் எட்டிப் பார்த்த கள்ளத்தனத்தையும் பெரும்பாடு பட்டு மறைத்து அவளிடம் பேச,
“என்னது…” என்று கண்களை அகல விரித்தவள், “நீங்க இருக்கீங்க பார்த்தீங்களா..” என்று பல்லை கடித்தவள்,
“குடுங்க இப்படி…” என்று வெடுக்கென்று அவனின் கரங்களில் இருந்த சேலையை பிடுங்கி, அடுத்த இரண்டே நொடியில் அழகாய் சேலையை கட்டி முடித்திட, அவனோ விசில் அடித்தபடி அவளை சுற்றிக்கொண்டு வந்தான்..
“ஷ்.. என்னங்க நீங்க.. வர வர ரொம்ப படுத்துறீங்க…” என்று அமர போனவளை,
“ஏய் நில்லு நில்லு…” என்று நிறுத்தி, “அழகை ரசிக்க விடும்மா…” என்றவன் அவன் சொன்னதை செய்யத் தொடங்க,
“கடவுளே…!!!!!” கன்னக் கதுப்பு மேலெழும்ப சிரிப்பினை அடக்கியவள், “போதும்.. ரொம்ப வெக்கப்பட வைக்கறீங்க…” என்று திரும்ப சிணுங்க,
“ஷப்பா!!!!!!!!” என்று நெஞ்சில் கை வைத்தவன், “இதுதான் வெட்கமா???!!!!” என்று கேட்டு சிரிக்க,  பொன்னிக்கு இப்போதும் ஆச்சர்யம்தான்..
அத்தனை கோவமாய் பேசியவனா இவன் என்று.. அதுவும் ஒரு அரைமணி நேரத்திற்கு முன்பு வரைக்கும் முகத்தை உர்ரென்று தூக்கி வைத்துக்கொண்டு இருந்தவனா இவன் என்று..
பொன்னியும் அசோக்கும் வீட்டிற்கு திரும்ப வந்திட, ஹாலில் அமுதாவும் மங்கையும் அமர்ந்திருக்க, புகழேந்தி அறையினில் இருந்தான்…
அசோக் வீட்டினுள் வந்தவன், அமுதா அங்கிருக்கவும் கொஞ்சம் தயங்கி நிற்க, அமுதாவோ “மதினி நான் போய் எல்லாருக்கும் டீ போடுறேன்…” என்று எழுந்து உள்ளே சென்றுவிட,
மங்கையோ “டீ வேணாம் அமுதா.. எல்லாரும் ஒரேதா டிபன் எடுத்துக்கலாம்…” என்றிட,
“ம்மா.. நீ இரு.. நானும் போய் எல்லாம் எடுத்து வைக்கிறேன்…” என்று பொன்னியும் உள்ளே சென்றிட, அசோக்கும் மங்கையும் அங்கேயே இருந்துகொண்டனர்..
அனைவரும் உண்பதற்கு எடுத்து வைக்க, அமுதா “மதினி.. முதல்ல எல்லாரும் சாப்பிடட்டும்.. அ.. அடுத்து நான் லாஸ்ட்ல சாப்பிட்டுக்கிறேன்…” என்றுசொல்ல,
“ஏன்?? ஏன் அமுதா..” என்று கேட்டவளுக்கு அவளின் தர்மசங்கடம் புரிய,
“ஹ்ம்ம் சரி விடு.. முதல்ல அவரும் அசோக்கும் சாப்பிடட்டும்.. அடுத்து நம்ம மூணு பேரு உட்காந்துக்கலாம்..” என்றவள், அசோக்கையும் புகழேந்தியையும் அழைக்க, அசோக் வந்துவிட்டான் ஆனால் புகழ் வரவில்லை.
“அமுதா போய் அவரை வர சொல்லு…” என்று பொன்னி அவளை அங்கிருந்து நகர்த்தும் எண்ணத்தில் தான் அமுதாவை விட்டு புகழேந்தியை அழைக்கச் சொன்னாள்..
அமுதா அழைக்கப் போகவும், புகழுக்கு அதுவும் ஒரு கோவம் ‘ஏன் இவ வந்து கூப்பிட மாட்டாளா???’ என்று..  வரவில்லை என்றுவிட்டான்.. பசியில்லை என்று ஒரு காரணமும்.. அதையே அவளும் வந்து பொன்னியிடம் சொல்ல,
‘பசிக்கலையா??’ என்று தானாக முனுமுனுத்தபடி புகழை அழைக்கச் செல்ல, அவனோ ஆபிஸ் கிளம்பிக்கொண்டு இருந்தான்..
“என்னங்க?? எங்க கிளம்பிட்டீங்க.. ஆபீஸா??” என்றபடி பொன்னி அவனின் அருகே போக,
“ம்ம்..” என்று மட்டும் சொன்னவன் அவளின் முகத்தை கூட பார்க்கவில்லை..
அவனின் கவனமெல்லாம் பொன்னி, அவன் வாங்கிக்கொடுத்த சேலையை கவனிக்கிறாளா என்பதிலேயே தான் இருந்தது. ஆனால் பொன்னிக்கோ கவனமெல்லாம் அவன் மீது தான் இருந்தது.. வேறெதிலும் இல்லை..
“ஏன்?? வீட்ல இருக்கேன்னு சொன்னீங்கதானே.. இப்போ கிளம்புறீங்க.. சாப்பிட கூப்பிட்டவும் வரலை…” என்று கேட்கையிலேயே,
“நீயா வந்து கூப்பிட்ட…” என்று புகழ் வேகமாய் கேட்க, அப்போதுதான் அவளுக்கு அவன் கோவமாக இருக்கிறான் என்பதே புரிந்தது.. ஆனாலும் ஏன் கோபம் என்றும் தெரியவில்லை.. பொதுவாய் புகழேந்தி அனைத்திற்கும் முகம் தூக்கும் ரகமுமில்லை என்பதால் பொன்னிக்கு சட்டென்று அவனின் கோபமும் புரிபடவில்லை..
“கோவமா இருக்கீங்களா???!!!! என்னாச்சு??” என்று அவனது தோளை தொட, வெடுக்கென்று தோளை உதறியவன்,
“ஒண்ணுமில்ல.. ஆபிஸ்ல இருந்து கால்.. உடனே போகணும்…” என்றபடி அவனின் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிட,
“ம்ம்ச் நில்லுங்க.. நான் பேசிட்டு இருக்கேன்ல.. சாப்பிட்டு கூட போகலை..” என்றபடி அவனின் பின்னேயே பொன்னி ஓடாத குறையாய் நடந்து போனாள், என்றாள் புகழேந்தியோ அதைவிட வேகமாய் நடந்தான்..  
“பசிக்கல.. அவ்வளோதான்.. வந்தவங்களை கவனி… போ..” என்றவன் அப்படியே கிளம்பிச் சென்றுவிட்டான்..
இத்தனை பேசியதற்கும், புகழ் அவளின் முகத்தினை கூட பார்க்கவில்லை.. இத்தனை நாளில் ஒருமுறை கூட புகழ் இப்படி நடந்ததில்லை.. அதுவும் இன்று, அவளின் பிறந்தநாள் அன்று அவன் இப்படி முகம் திருப்பி சென்றது மனதை மிக மிக சங்கடப்படுதியது. அவனின் கோபம் ஏன் என்றும் தெரியவில்லை.. சாப்பிடாமல் போவதும் என்னவோ போல் நிற்க, அவன் கிளம்பியபின்னும் கூட அப்படியேதான் இருந்தாள்..
“என்ன பொன்னி… ஏன் இங்க நிக்கிற???” என்று மங்கை வந்து கேட்க,
“இல்லம்மா.. அது.. அவர் ஆபிஸ் போனார்…” என்றவளைப் பார்த்து, “சாப்பிட கூட இல்லை???!!!!” என,
“ம்ம்.. போன் வந்ததுன்னு கிளம்பிட்டார்…” என்றவள் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை.. உள்ளே வந்துவிட்டாள்.. மனம் என்னவோ போல் இருந்தது..
டைனிங் டேபிளில் அசோக் அமர்ந்து உண்டுகொண்டு இருக்க, அமுதா சமயலறையில் இருக்க, பொன்னி முகத்தில் எதையும் காட்டாது வந்து அங்கே நிற்க,
“புகழ் எங்க பொன்னி???” என்றான் அசோக்..
“எதோ இம்பார்டன்ட் கால்னு சொல்லி ஆபிஸ் கிளம்பி போயிட்டார்..” என, “ஓ…” என்றவன் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.
ஆனால், பொன்னி வந்ததுமே அமுதா வேகமாய் சமையலறை நகர்ந்தது போலவும், அசோக்கின் பார்வை அவ்வப்போது, சமையலறை பக்கமாய் சென்றுவருதாகவும்  பொன்னிக்குத் தோன்றியதோ என்னவோ..
‘ச்சி நான் என்ன நினைக்கிறேன்… அப்படியெல்லாம் இருக்காது…’ என்று நினைத்துக்கொண்டாள்..
அசோக்கும் உண்டுவிட்டு கிளம்பிட, அவன் கிளம்பும்வரைகும் அமுதா வெளிவரவே இல்லை.. அடுத்து மங்கை, பொன்னி, அமுதா மூவரும் உண்ண, பொன்னிக்கு அவ்வளவு நேரமிருந்த உற்சாகம், புன்னகை எல்லாம் அப்படியே காணாமல் போய்விட்டது. புகழேந்தியைப் பற்றிய யோசனைகள் மட்டுமே..
அமுதா மதியம் வரைக்கும் இருந்தவள், “மதினி.. நான் ஹாஸ்டல் போறேன்.. அசைன்மெண்ட்ஸ் இருக்கு எழுதணும்..” என்று கிளம்ப,
“எடுத்துட்டு வந்திருந்தா இங்கயே எழுதியிருக்கலாமே அமுதா..” என்றார் மங்கை..
“இல்லத்தை.. பிரண்ட்ஸ் கூட சேர்ந்து எழுதனும்” என்று அமுதா மறுக்க,
“ம்மா நீ இரு.. நான் போய் அமுதாவை விட்டுட்டு வர்றேன்..” என்று கிளம்பினாள் பொன்னி..
“இல்ல இல்ல.. அதெல்லாம் வேணாம்.. வெளிய ஆட்டோ இருந்தா நானே போயிப்பேன்..” என,
“அதெல்லாம் வேணாம் அமுதா.. தனியா போகவேணாம்.. பொன்னி நீ போய் விட்டு வா..” என்று மங்கையும் சொல்ல,
“நீ வா அமுதா…” என்றவள் அவளையும் புதிய ஆக்டிவாவில் ஏற்றிக்கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டுவிட்டு வர, மங்கை முன்னே வாசலிலேயே அமர்ந்திருந்தார்..
“ஏன் ம்மா இங்க இருக்க..?? உள்ள உட்கார வேண்டியது தானே…” என்றபடி வண்டியை நிறுத்தும்போது தான் பார்த்தாள், புகழேந்தியின் வண்டியும் அங்கே இருந்தது..
‘வந்துட்டாரா??!!!!’ என்று தனக்குள்ளே கேட்டபடி, படியேற,
“டி பொன்னி.. இங்க வாயேன்..” என்றார் மங்கை..
அவளுக்கோ புகழேந்தியை போய் பார்க்கவேண்டும் என்ற வேகம், “என்னம்மா… சொல்லு…” என்று பொன்னி நடந்தபடி கேட்க,
“ஏய் ஒரு நிமிஷம் நில்லு டி.. நான் சொல்றதை கேட்டுட்டு போ…” என்றுசொல்ல, மனதினில் லேசாய் ஒருவித எரிச்சல் மூண்டாலும் அதனை அடக்கி,
“ம்ம்.. சொல்லும்மா.. என்ன விஷயம்..” என்றாள் பல்லை கடித்து..
“இரு இரு…” என்றவர், வேகமாய் போய் அவரின் பையை எடுத்து வந்து, அதனுள் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து காட்டினார் அவளிடம். ஒரு பெண்ணின் படம்.. பார்க்க லட்சணமாய் இருந்தாள்..
“என்னம்மா ?? யாரிது???”
“இங்க வர்றதுக்கு முன்ன தரகர் வந்து கொடுத்துட்டு போனார் பொன்னி.. இந்த ஊரு தானாம் பொண்ணு.. இன்னும் அசோக் கிட்ட கூட காட்டல.. ஊர்லையே ஜாதகம் எல்லாம் பார்த்துட்டேன் நல்லா பொருந்தி வருது.. ஒருதடவ மாப்பிள்ளைய விட்டு அவங்க வீட்ல பேச சொல்லேன்..” என்று மங்கை சொல்ல,
பொன்னிக்கு பக்கென்று இருந்தது.. ஏற்கனவே அவன் கோபமாய் இருக்கிறான்.. அதற்கு என்ன காரணம் என்றும் தெரியாது.. இதில் இதனை போய் சொன்னால் அதற்கு என்ன சொல்வானோ என்றும் இருக்க, நல்ல விஷயம் வேறு எடுத்ததுமே மாட்டேன் என்று சொல்லிட கூடாதே என்று இருந்தது..
அப்படி சொல்லிடவும் மாட்டான் தான், இருந்தாலும் என்று பொன்னி இழுத்துக்கொண்டு நிற்கையில், இவை அனைத்துமே உள்ளே புகழேந்திக்கும் கேட்டது தான்..
‘அவ்வளோ சொல்றாங்க.. வந்து கேட்கிறாளா பாரேன்.. திமிர் கூடிப்போச்சு…’ என்று முனுமுனுத்து கொண்டு, பசியை வேறு கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தான்..
ஆம், வேகமாய் கிளம்பிப்போனவன், ஆபிஸும் போகவில்லை.. நண்பர்களிடம் பந்தாவாய் ‘பொன்னிக்கு பர்த்டே.. சோ வொர்க் ப்ரம் ஹோம் போட்டேன்…’ என்று சொல்லி கிளம்பியவன் திரும்ப எந்த முகத்தினை வைத்து போவான்.. ஆக சும்மாவே பைக்கில் சுற்றிக்கொண்டே இருந்தான்..
பொன்னி அழைக்கும் போதெல்லாம் போன் எடுத்து பேசும் எண்ணமே இல்லை.. அவள் அழைக்க அழைக்க மனதினுள் ஒரு பிடிவாதம் தான் கூடியது.. ‘என்னை கண்டுக்காம இருந்தா.. இப்போ என்னவாம்.. கால் பண்ணிட்டே இருக்கட்டும்…’ என்று, அப்படித்தான் கோவம் வந்தது.. அவளின் அண்ணனை பார்த்ததும் தன்னை மறந்துவிட்டாள் என்று. 
‘இன்னிக்குதான் வண்டி வாங்கிக் கொடுக்கனுமா.. ஏன் இத்தனை நாள் வாங்கி கொடுத்திருக்க வேண்டியது தானே.. நான் கொடுத்த கிப்ட் கூட மறக்க வச்சிட்டான்…’ என்று சிறுபிள்ளை தனமாய் தான் ஒரு கோபம்.. ஒரு பொறாமை.. அவளை பிடித்து நிறுத்த முடியவில்லை என்ற இயலாமை எல்லாம்..
‘இதெல்லாம் ஒரு மேட்டரா???’ என்று அவன் மனசாட்சி கேட்க, “ஆமா அப்படித்தான்…” என்று சொல்லிக்கொண்டான்..
மதியம் வரைக்கும் வெளியில் சும்மாவே சுற்றியவனுக்கு, வெளியே உண்ணவும் மனம் வரவில்லை.. ஆபிஸும் போக முடியாது.. காரணம் மதியத்திற்கு மேல் தான் அவனுக்கு வேலை.. ஆக திரும்ப வீட்டுக்கே வர, மங்கை மட்டும் தான் இருந்தார்..
அவனைப் பார்த்ததுமே “அமுதாவை கொண்டு போய் விட போயிருக்கா…” என்று சொல்ல,
“சரிங்கத்தை…” என்றவன் அறைக்குள் சென்றுவிட்டான், மங்கை பொன்னி வருகிறாரா என்று பார்க்க வாசல் வந்துவிட்டார்..
புகழ் அப்போது வந்தபோதும் அவன் வாங்கிக்கொடுத்த அந்த சேலை அப்படியே இருக்க, சொல்லவும் வேண்டுமா???
‘இதை எடுத்து கூட வைக்கலையா???!!!’ என்று பார்த்தவனுக்கு அதை அப்படியே தூக்கி எரியும் வேகம் தான் வந்தது.. ஆனாலும் என்னவோ மனம் கேட்கவில்லை.. எடுத்து மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டான்.. வந்து தேடுகிறாளா என்று பார்க்கும் ஒரு சிறு அல்பத்தனம் தான்..
ஆனால் பொன்னி வந்தவளோ “என்னங்க.. சாப்பிட வாங்க..” என்று வேறெதுவும் கேட்காது அழைக்க, அவனோ முகத்தை திருப்பிக் கொண்டான்..
வேலை இருப்பது போல் அவன் முன்னே கணினி இரு.. இருக்கிறது தான் ஆனால் செய்ய முழுதாய் மனமில்லை..
“உங்களைதான் சொல்றேன்.. கோபமெல்லாம் இருக்கட்டும்.. வந்து சாப்பிடுங்க முதல்ல…” என்றாள் எங்கே போனாய் என்றுகூட கேட்காது..
“வேணாம் எனக்கு பசிக்கல.. வயிறு மனசு எல்லாம் நிறைஞ்சு போச்சு…” என்றவன் வேலையில் மும்முரமாய் இருப்பது போல், புருவத்தை சுருக்கிக்கொண்டு அமார்ந்திருக்க,
“உங்களுக்கு இன்னிக்கு என்னாச்சு..?? காலைல நல்லாதானே இருந்தீங்க…” என்றாள் இவன் ஏன் இப்படி செய்கிறான் என்று விளங்காது..
“ஏன் ..?? எனக்கென்ன நல்லாதானே இருக்கேன்..”
“சரி அப்போ சாப்பிட வாங்க…”
“ஏய்… சொல்லிட்டே இருக்கேன்ல.. போ டி…” என்று பல்லை கடிக்க,
அவனை அதிர்ந்து பார்த்தவள்,  அறையின் வாயிலுக்கு வந்து, “ம்மா வா நீ வந்து சாப்பிடு.. நான் அப்புறம் அவர்கூட சாப்பிட்டுக்கிறேன்…” என்று மங்கையை அழைத்தாள்.
அதாவது நீ வந்தால் நானும் உண்பேன்.. இல்லையா நானும் இப்படிதான் இருப்பேன் என்று.. ஒருவித மறைமுக மிரட்டல்.. ப்ளாக்மெயில். புகழேந்திக்கு இதுவும் கடுப்பாய் தான் இருந்தது.
“ம்ம்ச்…” என்று எரிச்சலாய் லேப் டாப்பை தூக்கி கட்டிலில் கிடாசிவிட்டு, “சாப்பாடு எடுத்து வை…” என்று சொல்லியபடி வர,
“ம்ம் அது…” என்று சின்னதாய் சிரித்துக்கொண்டாள் பொன்னி..
அவளின் மனதில் இன்னொரு வருத்தமும், இன்னும் புகழ் வீட்டில் இருந்து அமுதாவை தவிர வேறு யாருமே அவளை வாழ்த்தவில்லை. அவர்களுக்கு தெரியுமா என்பதும் தெரியாது.. ஆனாலும் மனம் ஒருவிதத்தில் எதிர்பார்த்தது.. இதில் இவன் வேறு முகத்தை தூக்கிக்கொள்ளவும் எப்போதுமில்லாத விதமாய் அவளுக்கு அவள் மீத சந்தேகம்..
தான் எதுவும் செய்தோமா என்று..

Advertisement