Advertisement

அத்தியாயம் அறுபத்து மூன்று :

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் 
  உள்ளங் குலைவ துண்டோ? — மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
  வேதனை யுண்டோடா?

அலுவலகத்தில் அமர்ந்து கணினி திரையைத் தான் வெறித்திருந்தான் ஈஸ்வர்,  அவனின் வாழ்க்கையில் வர்ஷினி என்ற பெண் புதிதாக வந்த உணர்வு தான்..

ஆகிற்று வர்ஷினி அவனிடம் “உன்னைப் பிடிக்கவில்லை ஆனாலும் விட்டுப் போக முடியாது இல்லையா?” எனச் சொல்லி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.

வர்ஷினி எப்போதும் போலத் தான் பேசினாள், ஆனால் ஈஸ்வரால் சகஜமாகப் பேச முடியவில்லை.. அதுவும் “நீங்க என்னை தான் லவ் பண்ணுனீங்க, பண்ணுவீங்க” என்று சொன்ன பிறகு மனதிற்குள் எழுந்த குற்ற உணர்ச்சியைத் தடுக்கவே முடியவில்லை.

ஆம்! காதலித்தானா தெரியாது? ஆனால் காதல் சொன்னவன் ஆகிற்றே ஐஸ்வர்யாவிடம்!

இப்போதெல்லாம் வீட்டிற்கு விரைவாக ஆறு மணிக்கு சென்று விடுகின்றான். எந்த வேலை என்றாலும் அங்கே இருந்தே பார்த்துக் கொள்கிறான்.  மனதில் சொல்லொணா துயரங்கள் இருந்த போதும் இருவருமே அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

வர்ஷினி பேசிய அன்றே “நிறைய தப்பு பண்றேன் போல வர்ஷ்” என்றவன், “முடிஞ்சவரை சரி பண்ணிக்கறேன்” என்று சொல்லி விட்டான் தான். ஆனால் எப்படி சரி செய்து கொள்வது என்று தெரியவில்லை.

மேலே பேசவும் அப்போது முடியவில்லை. உணவு உண்டு சென்று திரும்பவும் வர்ஷினி உறங்கிவிட, அடுத்த நாள் கல்லூரி கூட செல்லாமல் உறங்கிவிட.. அவனால் பேசவே முடியவில்லை.

அவன் தூக்க மாத்திரையின் விளைவு என நினைத்திருக்க, அவள் உட்கொண்ட மாத்திரையின் விளைவு என்று  தெரியவேயில்லை. பிறகு மனதிற்குள் பேச உரு போட்டுக் கொண்டே இருந்தான், இதுவரை பேசும் தைரியம் வரவில்லை என்பது உண்மை.

பேச மட்டுமில்லை அருகில் செல்லவும் தைரியம் வரவில்லை.. ஆம்! ஒரு முறை அருகில் படுத்திருக்கும் போது, கை மேலே போட்டு விட்டான். நாசுக்காக அதை விலக்கி ஏதோ வேலை இருப்பது போல வர்ஷினி எழுந்து சென்று விட்டவள்.. சிறிது நேரம் கழித்து வந்த போது, “ப்ளீஸ் கை மேல போடாதீங்க.. ஐ அம் நாட் கம்ஃபர்டபில்” என்றாள் தெளிவாக..

ஈஸ்வர் பதிலே பேசவில்லை ஒரு தலையசைப்பு மட்டுமே கொடுத்தான். ஆனால் எங்கே இருந்து அதன் பிறகு வரும் அவனுக்கு உறக்கம். வர்ஷினியின் வார்த்தைகளை கேட்ட போது மனதில் தீச்சுட்ட உணர்வு.. பெரிதாக சறுக்கி விட்டான் என்று அவனுக்கே புரிந்தது.

அவனாக விலகி இருந்த போது ஒன்றும் தெரியவில்லை அவளாக விலக்கும் போது.. வர்ஷினி வேண்டும் என்று ஒவ்வொரு அணுவும் துடிக்க ஆரம்பித்தது. உறங்குவதர்க்குள் பெரும் பாடு பட்டுப் போனான்.  

முடிந்தவரை தன்னை வர்ஷினியிடம் கலகலப்பாக மாற்றிக் கொண்டான், நிறைய பேச்சுக் கொடுத்தான். அவன் பேசுவதற்கு முகமெல்லாம் திருப்பவில்லை, கேட்பதற்கு பதில் சொன்னாள், ஆனால் அவளாகப் பேசவில்லை.

ஆனால் ஈஸ்வர் பின் வாங்கவில்லை.. பின் வாங்கினால் அவன் ஈஸ்வர் அல்லவே.. ஆதலினும் கடக்க வேண்டிய தூரம் அறியவில்லை. சமாதானம் செய்து கொள்ளலாம் என்ற அசட்டு துணிச்சலில் இருந்தான்.      

வர்ஷினி அங்கே அவளின் அப்பா வீட்டிற்கு செல்லவேயில்லை, முரளியும் ஷாலினியும் வந்து தான் குழந்தையை காட்டிச் செல்லும் படி ஆகிற்று.

“ஏன் வர்ஷினி வரலை?” என்றவர்களிடம்,

“அன்னைக்கு இவர் கோபப்பட்டு ரஞ்சனி அண்ணியை கூட்டிட்டு வந்தப்போ, திரும்ப வந்து அண்ணியை கூட்டிட்டு போக மட்டும் தான் செஞ்சாங்க. இவரையும் சமாதானம் செய்யலை, என்னை கன்சிடர் பண்ணவேயில்லை. அப்புறம் எப்படி அண்ணா நான் வரமுடியும்”

“இவர் அந்தக் கோபத்தை என்கிட்டே காட்டலை, காட்டியிருந்தா நான் எங்க போவேன்.. நீங்கல்லாம் என்னை ஒரு ஆளுன்னு நினைக்கவேயில்லை, அப்புறம் உங்க வீட்டுக்கா வந்திருப்பேன்.. அதனால நான் வரலை, வரவும் மாட்டேன்”    

“பத்துண்ணா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவேயில்லை, நீங்க மட்டும் இப்போ பாப்பா வந்த பிறகு தானே வர்றீங்க” என்று விட,

முரளியால் பேசவே முடியவில்லை..

“சாரி டு சே திஸ் அண்ணா, உங்க சொந்த தங்கையா இருந்தா இப்படி தான் இருந்திருப்பீங்களான்னு தான் நினைக்கத் தோணுது” என,

“ஐயோ, இவள் இத்தனை விஷயங்களை மனதிற்குள் போட்டு மருகிக்கொண்டிருந்தாளா எனக்கு எதுவுமே தெரியவில்லை” என வெட்கமாகப் போய் விட்டது ஈஸ்வருக்கு..

அவளின் கண்களில் கடலின் ஆழத்தை கண்டவன், மனதும் அப்படித்தான் என புரிந்து கொள்ளவில்லை. 

முரளி மனம் பதைத்து அவசரமாக பேச வர..

“உங்களுக்குத் தெரியுமா அண்ணா, தாத்தா எப்பவும் எதாவது பேசிட்டே இருப்பார் என்னை.. அதனால இந்த சொத்து உனக்கு அப்படி எதுக்கு? தூக்கிக் கொடுத்துடுன்னு இவர் எவ்வளவு கன்வின்ஸ் பண்ணினார். ஆனா நான் தான் முடியாது சொல்லிட்டேன். அது என்னோடதுன்னு” 

“பத்துண்ணா என்ன பண்ணினாலும் இவர் பேசிடுவாரா.. பேச மாட்டார்! ரஞ்சனி அண்ணியோட ஹஸ்பன்ட்னு பேசாம தானே இருப்பார்”

“ஆனா பத்துண்ணா அப்படி நினைக்கலை தானே! விட்டுடுங்க!” என்று முடித்து விட்டாள்.

வர்ஷினி பேச பேச ஷாலினியின் கண்கள் கலங்கி விட்டது.. 

ஷாலினி எவ்வளவு சமாதானம் செய்தும் கேட்கவில்லை..

“ப்ச், விடுங்கண்ணி, இது சரியாகாது!” என்று சொல்லிவிட, மூவருமே திகைத்து நின்றனர்.

அன்றே வீட்டில் சொல்லி, கமலம்மாவும், பத்துவும், முரளியோடு திரும்பவும் வர.. “வாங்க” என்று ஒற்றை சொல் சொல்லி ஈஸ்வர் அந்த இடம் விட்டு நகரப் போக,

முரளி பத்துவை பார்த்த பார்வையில் “சாரி, நான் தப்பா பேசினதுக்கு” என்று சொல்லியபடி பத்து அவசரமாக ஈஸ்வர் முன் சென்று நிற்க.

அந்த பாவனையில் ஈஸ்வர் சிரித்து விட்டான்.. முரளியை பார்த்து “என்னடா பண்ற நீ?” என,

“என்ன பண்ண சொல்ற? உன்னை மாதிரி ஒரு டபிள் பாயில்ட்டும், இவனை மாதிரி ஒரு ஹாஃப் பாயில்ட்டும் வெச்சிருந்தா இப்படி தண்டா செய்யணும்”

“எல்லாம் எனக்கு தான் தெரியும்னு பேசற தானே? அப்புறம் ஏன்டா இன்னும் காம்ப்ளிகேட் பண்ணின” என்று ஈஸ்வரை கேட்டாலும் பார்வை வர்ஷினியிடம் தான் இருந்தது.

வர்ஷினி யாரோ பேசிக் கொள்வது போல, தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்பது போல அசையாமல் நின்றிருந்தாள்.

“சாரி வர்ஷி!” என்று பத்து அவளிடமும் கேட்க..

“சாரி கேட்கற அளவுக்கு என்ன தப்பு பத்துண்ணா நீங்க பண்ணுனீங்க?” என்றாள் கூர்மையாக..

பத்துவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை..

முரளி தான் “விடு வர்ஷினி இன்னும் அதையே பேசுவியா?” என,

இவர்கள் எல்லாம் பேசுவதை பார்த்திருந்த கமலம்மாவிற்கு பேசவே வரவில்லை. கனமான மனதோடு பார்த்திருந்தார். 

“நீங்க என்னை விட்டுட்டீங்க முரளிண்ணா, அதனால இப்படி தான் பேசுவேன்” என்று சொல்லும் போதே கண்களில் நீர் நிற்க துவங்க இலகுவான சூழ்நிலை மீண்டும் கனமானது..

“இவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தாங்க, அண்ணியை மட்டும் கூட்டிட்டு வந்துட்டாங்க, அப்போ நான்? என்கிட்டே எதுவும் பேசலை! சொல்லலை!”

“இவர் என்னை இங்கே கூட்டிட்டு வந்துட்டார்!”

கமலம்மா ஏதோ பேச வர.. “நீங்க பேசாதீங்க! அப்பா இருந்தா இப்படி தான் விட்டிருப்பீங்களா? அப்போ அப்பாக்காக மட்டும் தான் என்னை  எல்லோரும் பார்த்துக்கிட்டீங்க.. அப்போ நான் தள்ளி தானே இனிமே நிக்கணும்!”

“ஹாஸ்டல்ல இருக்கும் போது கூட நாலு பேர் முகத்தை பார்க்க முடியும். இங்க தனியா தான் உட்கார்ந்து இருக்கேன்.. இவர் உங்களுக்கு பணம் குடுக்கணும்னு வீட்டுக்கே வர்றதில்லை, ஆஃபிஸ்லயே தான் இருக்கார்” என்று சொல்லும் போதே திரும்பவும் அழுகை வர, யார் முன்னும் அழப் பிடிக்காமல் ரூமின் உள் புகுந்து கொள்ள, வந்தவர்களை ஈஸ்வர்  தான் கவனித்து அனுப்பும்படி ஆகிற்று.

“சரியாகிடுவா?” என்று ஈஸ்வர் சொன்ன போதும், கமலம்மாவின் அழுகையை நிறுத்தவே முடியவில்லை.    

“டேய், சீக்கிரம் சரி பண்ணுடா! அப்பா என்ன சொல்றாங்களோ அதையே கேட்டு பழகிட்டாங்க. சுயமா யோசிக்கத் தெரியலை அம்மாவுக்கு!” என்றவன் அவரை அழைத்துக் கொண்டு கிளம்பவும்…

“இங்க நானே பயந்து இருக்கேன். இதுல இவங்களோடதை நான் சரி பண்ணவா? கிழிப்பேன்!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்,   

பத்துவிடம் “ரஞ்சனி எப்படி இருக்கா?” என்றான் ஈஸ்வர்.

“தெரியவில்லை” என்றா சொல்ல முடியும், ரஞ்சனி தான் பத்துவிடம் பேசுவதே இல்லையே “நல்லா இருக்கா” என,

பேசுவதில்லை ஈஸ்வருக்கே தெரியுமே! கண்டிப்பாக அவனை மீறி வீட்டிற்கு சென்றிருந்தாலும், பத்துவோடு பேசியிருக்க மாட்டாள் என, வேண்டுமென்றே “டிரைவர் போஸ்ட்டாவது இருக்கா, இல்லை அதுவும் காலியா?” என ஈஸ்வர் கேட்க..

“அதெல்லாம் காலி தான்!” என முரளி சொல்ல.. பத்துவின் முகத்திலும் ஒரு அமைதி..

பிறகு அதனைப் பற்றிய பேச்சுக்கள் எதுவுமில்லை..

ஆனால் ஈஸ்வர் இனி பத்துவிடம் விரோதம் பாராட்டுவதாக இல்லை. அவன் எப்படியோ போகிறான், என்னவோ பேசிக் கொள்கிறான் என்ற முடிவிற்கு வந்து விட்டான். ஈஸ்வருக்கு மிகவும் நிச்சயம், பத்துவிடம் தான் விரோதம் பாராட்டினால், வர்ஷினியும் பத்துவோடு சரியாகப் பேச மாட்டாள்.

இவளாவது பேச தான் மாட்டாள், ஆனால் ரஞ்சனி வாழவே மாட்டாள் எனத் தெரியும். ரஞ்சனிக்காகவாவது பணத்தை விரைவாக கொடுத்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்.   

பிறந்த வீட்டில் யாருமில்லை என்ற உணர்வோடு வர்ஷினி இருப்பதா.. இல்லை அப்படி விட முடியாது. எல்லோரோடும் அவள் நன்றாகப் பேச வேண்டும்.. அதற்காகவாவது எல்லாம் விரைவில் சரி செய்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்.  

இப்போது அதையெல்லாம் நினைத்து அமர்ந்திருந்தான். அவளின் வீட்டினரோடு பேச வைக்க முயல, என்ன முயன்றும் வர்ஷினி சமாதானம் ஆகவில்லை. பிடிவாதம் கண்டு பயந்து விட்டான்.. சமயம் பார்த்துக் கொண்டே இருந்தான் தான் முன்பு ஒரு பெண்ணிடம் காதல் சொன்ன விஷயத்தை சொல்லி விடுவது என..

பின்னே இந்த நரக வேதனை தனக்கு ஆகாது என்றே தோன்றியது.. இப்போது பிரச்சனையோடு பிரச்சனையாக சொல்லிவிடு என்று மனம் ஒரு புறம் சொல்லியது.. 

ஆம்! சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக ஆரம்பித்தது. வர்ஷினியை அவனால் இயல்பாக அணுக முடியவில்லை சமாதானம் செய்ய முடியவில்லை, தவறிழைத்த மனது அவனை குத்திக் கொண்டே இருந்தது.

எதுவாகினும் சொல்லி அதனை எதிர்கொண்டு விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டான்.

வர்ஷினியின் நடத்தை அவனை கொன்றது.. எதோ பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் பேசும் சிநேக பாவம் மட்டுமே! மனதில் ஐஸ்வர்யாவின் உறுத்தல் இருப்பதால் அவனால் அதிகமாக முன்னேற முடியவில்லை.

அவளாக வாய் திறந்து சொன்ன பிறகு ஒரு பொய் நம்பிக்கையை கொடுக்க மனதில்லை.. நிச்சயம் பெரிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியும், ஆனாலும் இந்த உடலில் உயிர் உள்ள வரை வர்ஷினியை பிரிய விடமாட்டேன் என்ற உறுதி வெகுவாக இருந்தது.       

ஆனால் அவனுக்குத் தெரியவில்லை, “நாம் பிரிந்து விடலாம்” என அவனே சொல்வான் என்று..

மாலை ஐந்து மணி ஆகிவிட.. அப்பாவையும் ஜகனையும் போய் பார்த்தவன்.. “ஓரளவுக்கு பணம் ரெடி பண்ணிட்டோம் நாம.. நாளைக்கு லீகலா குடுத்துடலாமா” என,

“குடுத்துடலாம்” என்று ஜகன் சொல்ல..

“குடுத்துடலாம், ஆனா நமக்கு ரொட்டேஷன்க்கு மணி குறைஞ்சிரும்.. பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது” என நமஷிவாயம் சொல்ல,

“பார்த்துக்கலாம் பா, எதுன்னாலும் பார்த்துக்கலாம். நாம பணத்தை திரும்பக் கொடுக்கிற வரை பத்துகிட்ட ரஞ்சனி பேசக் கூட மாட்டாப்பா. என்னை மீறி அவ போயிருக்கலாம், அந்த வீட்லயும் அவ இருக்கலாம், ஆனா நான் சொன்னதுல தான் நிற்பா.. பணத்தை திரும்பக் கொடுக்குற வரை அங்க சகஜமா இருக்க மாட்டாப்பா” என,

அதன் பிறகு நமஷிவாயம் ஏன் பேசப் போகிறார்..

பேசியவுடன் வீட்டிற்கு கிளம்பினான்.. வர்ஷினி வந்திருக்க.. “ஒரு காஃபி கிடைக்குமா வர்ஷ்” என்றபடி சோபாவில் அமர்ந்து காலை நீட்டிக் கொள்ள,

எதிரில் வந்து நின்றவள் “பால் இருக்கு, ஆனா காஃபி தூள் இல்லை வாங்கணும்” என..

“போய் வாங்கலாமா?” என்று உடனே எழுந்தான்..

“வாங்கலாம்ன்னா”

“நீயும் நானும் போகலாம்னு அர்த்தம்” என்றவன்.. உடனே மலருக்கு அழைத்து, “அம்மா டிஃபன் கொடுத்து விடாதீங்க.. நாங்க வெளில போறோம்” என,

“சரி” என்றவர், “லேட் பண்ணாம வீட்டுக்கு திரும்பிடணும்” என,

“எஸ் அம்மா! டன்!” என்றான் கைபேசியில் உற்சாகமாக.

“என்ன இன்னைக்கு என்னவோ கொஞ்சம் நல்லாப் பேசறீங்க?” என,

“எஸ், ஸ்பெஷல் தான்.. நம்ம பணத்தை நாளைக்கு திருப்பி கொடுக்கப் போறோம்” என,

“எப்படி? எப்படி முடியும்? அவ்வளவு பணம்” என்றாள் ஆச்சர்யமாக.   

“புதுசா டெபாசிட் ஸ்கீம்ஸ் அறிவிச்சோம், இந்த தேதிக்குள்ள டெபாசிட் பண்ணினா கொஞ்சம் வட்டி அதிகமா சொல்லி.. ஏற்கனவே நாம இந்த மாதிரி சொல்லி அதை கரக்டா குடுத்தும் இருக்குறதால நல்ல ரெஸ்பான்ஸ், பாதி பணம் அதுல வந்துடுச்சு”

“திடீர்னு அவங்க பணத்தை திரும்பக் கேட்டா?”

“வட்டின்னு எதுவும் கிடையாது, அதே சமயம் அசல்ல பத்து பெர்சன்ட் எடுத்துட்டு தான் கொடுப்போம்.. இதை டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்ன்னு சின்னதா ஸ்டார் போட்டு எங்கயோ ஒரு மூலையில நாம சொல்லலை. தெளிவா பெருசா எல்லோருக்கும் புரியற மாதிரி தெரியற மாதிரி சொல்லியிருக்கோம்”

“இது தப்பில்லையா?”

“இல்லை, தப்பில்லை. அத்தனை பேருக்கு அதிகமா வட்டி கொடுக்கும் போது நாம ரிஸ்க் எடுக்கறோம்.. இன்சூரன்ஸ் ஸ்கீம்ஸ்ன்ற பேர்ல நம்ம நாட்டுல நடக்குறது மிகப் பெரிய கொள்ளையை விட இது கம்மி தான்”

“கவர்மென்ட்து இல்லை, ப்ரைவேட் ஆளுங்களது. அவங்க சொல்ற ஸ்கீம்ஸ் எல்லாம் அவ்வளவு கேட்சியா இருக்கும். ஆனா எல்லாம் இருபது வருஷம் முப்பது வருஷம்பாங்க.. ஆறு வருஷம் தொடர்ந்து நீ பணத்தை கட்டியிருந்தா கூட, ஒரு பாயிண்ட்ல உன்னால கட்ட முடியாம போனதுன்னா கட்டினதுல மூணுல ஒரு பாகம் கூட திரும்ப வராது.. இதுல மூணு வருஷம் முன்ன நிறுத்தினா அத்தனை பணமும் போச்சு”

“அதெல்லாம் பெரிய பெரிய கொள்ளை. யாரும் எதுவும் செய்ய முடியாது. நம்ம அந்த மாதிரி எதுவும் பண்ணலை…  வெறும் பத்து பெர்சன்ட் தான் எடுக்கறோம்.. அதுவுமில்லாம பாதி வருஷம் வந்தவுடனே போனஸ்ன்னு ஒரு அமௌன்ட் கொடுக்கறோம்!”    

“நான் இதுல இருக்குற வரை, நம்ம ஃபைனான்ஸ்ல இன்வெஸ்ட் பண்ணினவங்க யாரும் ஏமாத்திட்டாங்கன்னு சொல்லவே மாட்டாங்க! எவ்ரி திங் இஸ் பக்கா!” என்றான் உறுதியாக.

“அதுவுமில்லாம புதுசா தங்கம் அடமானம் வெக்கறது கூட கொண்டு வந்திருகோம்.. ஆனா எல்லாம் ரொம்ப கேர் ஃபுல்லா பண்ணனும் ரிஸ்க் அதிகம்” என,

“ரிஸ்க்னா ஏன் செய்யணும், வேற ட்ரை பண்ணலாமே” என்றாள் உண்மையான அக்கறையோடு..

“ரிஸ்க் இல்லாதது இந்த ஃபைனான்ஸ்ல எதுவுமே இல்லை. என்ன நகைன்றப்போ இன்னும் கவனமா இருக்கணும்!”

“உனக்கு தெரியுமா? சில நாடுகள்ல அதன் மக்கள் கிட்ட இருக்குற தங்கத்தை விட பல மடங்கு தங்கம், நம்ம இந்தியால ஒரு ஃபைனான்ஸ் கம்பனி கிட்ட இருக்கு.. இது ரொம்ப பெருசு.. இந்த கோல்ட் லோன்”

ஈஸ்வர் பேசப் பேச அவனின் முகத்தையே ஆராய்ந்திருந்தாள் வர்ஷினி.. வர்ஷினியிடம் அவன் கவனம் சிறிதும் இல்லை.. அவ்வளவு ஆர்வமாக விஷயத்தை விளக்கிக் கொண்டிருந்தான்.   

“பாதி பேர் தான் திருப்புவாங்க, மீதி பேர் அப்படியே விட்டுடுவாங்க.. நாம பேங்க்ல குடுக்கறதை விட அதிக பணம் குடுக்கறோம்!”

“அண்ட் ஸ்ட்ரிக்டா பேப்பர்ஸ் எதுவும் கேட்கறது இல்லை, சோ! திருட்டு நகையை வந்த லாபம்ன்னு வைக்கறவங்க அதிகமா இருப்பாங்க!”

“அது தப்பில்லையா?”  

“தப்பு தான்! ஆனா வர்றவன் தப்பானவனா கண்டுபிடிக்க முடியாது!”

“இதில்லாம முன்ன வெஹிகிள் லோன் ஸ்கீம்ஸ் அட் ஜீரோ பெர்சன்ட் இண்டரெஸ்ட் குடுத்தோம், இப்போ வீட்டு உபயோகப் பொருட்களுக்கும், ஈவன் ஃபர்நிச்சர்ஸ் கூட”

“இந்த ஆறு மாசமா நிறைய கொஞ்ச கொஞ்சமா லாஞ்ச் பண்ணியிருக்கேன், பார்ப்போம்! பட், ரொம்ப கவனமா இருக்கணும், இல்லை நம்மளை முழுங்கிரும்” என,

பேசப் பேச அவன் பேசிய விதம், அவன் ஆர்வம் பார்த்து வியந்து நின்றாள்.

அவளையும் மீறி “என்னைவிட உங்களுக்கு இது மேல தான் இன்ட்ரஸ்ட் போல” என்று விட,  

வெகு சில மாதங்களுக்குப் பிறகு சட்டென்று அவளை இடையோடு இறுக்கமாக அணைத்துப் பிடித்தவன், அந்த நீல நிறக் கண்களைப் பார்த்து..

“உன் மேல இருக்குற இன்ட்ரஸ்ட் விட எதுவுமே எனக்கு முக்கியம் கிடையாது வர்ஷ், இதை நீ நம்பணும். அது என்னைக்கும் குறையவே குறையாது” என,

ஈஸ்வர் இப்படிப் பிடிப்பான் என்று வர்ஷினியும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் இறுக்கமான அணைப்பு. கண்களின் ஆழத்தில் புதைந்து கொண்டு இருந்தவன், உதடுகளுக்கு வேலை கொடுக்கவில்லை. அதில் கவனமில்லை.

நொடியில் ஈஸ்வர் தன்னை ஆளுகைக்குள் எடுத்துக் கொள்வான் எனத் தெரியும். ஈஸ்வரைப் பற்றி எது தெரியுமோ தெரியாதோ. இதை நன்றாக அறிந்தவள் ஆகிற்றே.    

மீண்டும் எதற்குள்ளும் இப்போதைக்கு சிக்கிக் கொள்ளும் எண்ணமில்லை. ஈஸ்வர் தன் உறுதியை சோதிக்க தள்ளி இருக்க.. வர்ஷினி சிறிது காலம் ஏங்கித் தவித்தவள்.. தன் உடலின் ஏக்கத்தை மனதின் உறுதியில் வென்றிருந்தாள்.      

ஆம்! அன்றைக்கு பிறகு அவள் மாத்திரையும் எடுத்திருக்கவில்லை.  

அவனின் கைகளை நாசுக்காக விலக்கி விட்டவள், “நம்பிட்டேன்” என்றபடி கிளம்ப..

திரும்ப இழுத்துப் பிடிக்க முனையவில்லை. பணத்தை கொடுத்ததும் ஐஸ்வர்யாவின் விஷயத்தை பேசி விடுவது என்று முடிவெடுத்துக் கொண்டான். ஆனால் ஐஸ்வர்யா என்ற பெயரை உபயோகப்படுத்த அவன் தயாராய் இல்லை.. தன்னுடைய காரணங்களுக்காக அவளை இழுத்து விடுவது எந்த வகையிலும் நியாயமில்லாதது போலவே தோன்றியது.

அவரவர் யோசனைகளோடே அவர்கள் ஒரு பல் பொருள் அங்காடி சென்று பொருட்களை எடுத்து வெளியில் வர.. அவர்கள் வந்த நேரம் ஐஸ்வர்யாவும் அவளின் அம்மாவும் படிகளில் ஏற.. அவர்களுக்குப் பின் அஸ்வின் ஏறிக்கொண்டிருந்தான். ஈஸ்வர் அவர்கள் ஏறும் போதே பார்த்து விட்டான், ஐஸ்வர்யா அவனை பார்க்கவில்லை.

வர்ஷினி அஸ்வினை கவனிக்கவில்லை, ஆனால் ஐஸ்வர்யாவைப் பார்த்தவள், “அவங்க ரொம்ப அழகா இருக்காங்க இல்லை” என்று சகஜமாக ஈஸ்வரிடம் காட்டியவள், “நான் அவங்களை எங்கயோ பார்த்திருக்கேன்” என்றாள் கூடவே.

வர்ஷினி சொன்னதும் ஐஸ்வர்யாவை கூர்ந்து கவனித்தான். ஆம்! இன்னும் மிக அழகாகி விட்டால் என தான் தோன்றியது.  

ஆனாலும் வர்ஷினியிடம் உடனே “உன்னை விட எனக்கு யாரும் அழகு கிடையாது” என..

“தோடா” என்று வர்ஷினியின் பேச்சு கிண்டலாக வந்த போதும், ஒரு க்ஷணமேனும் அந்தக் கண்கள் மயக்கத்தை காட்டியது.  

    யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்உன்னை-மாயையே!

 

Advertisement