Advertisement

அத்தியாயம் ஐம்பத்தி இரண்டு :

தயக்கத்தின் காரணம் மயக்கம்!

“ஆம்! ஒரு மயக்கம், அதற்காக ஒரு திருமணம்.. இதுவா நீ?” என்ற கேள்வி அவனின் முன் பூதாகரமாய் நின்றது. ஆம்! அதுவரை திருமணம் மட்டுமே மனதில். இப்போது “நீ! உன் பிறப்பு! உன் வளர்ப்பு! இதனைக் கொண்டா?” என போராட ஆரம்பித்தது.

ஆம்! கையினில் கிட்ட வேண்டும் என நினைத்து, கிட்டச் செய்து, கிட்டிய பின் ஒரு சுய அலசல்.. அதுவரை இல்லாத அலசல்.. அதற்கு முன்னும் அலசியிருக்கின்றான் தான். ஆனால் இப்போது இது வேறு!

வேண்டும், வேண்டும்! ஆம், வேண்டும் என நினைத்து.. தன்னை மீறி பறிக்க முற்பட்டு.. முடியாமல்.. இப்போது திருமணத்தால் உனக்கு தான் என கொடுக்கப்பட்டு.. அதற்கு ஒரு தனிமையும் கொடுத்து.. அது இருவருக்கும் தெரிந்து.. இருந்த போதும்.. ஒரு தயக்கம்!

இதனைக் கொண்டே அவனுக்குள் இத்தனை போராட்டங்கள் இந்த ஒரு வருடத்திற்கும் மேலாக.. ஆனால் தடைகள் இல்லை எனும் போது.. சில மணிநேரங்களுக்கு முன் அவள் முன் பித்தனாகி பிதற்றிய போதும்.. வேண்டி நின்ற போதும்.. இப்போதும் கசக்கி முகரும் ஆத்திரங்கள் அவனுள் ஆக்ரோஷமாய் கிளர்ந்து எழுந்த போதும்..

எங்கோ இருந்த அவனின் ஆழ்மனம் அவனிடம் கேள்வி கேட்டது!

 இதற்காக ஒரு திருமணத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றாயே சரியா என. அப்போது உன்னை கவரும் அம்சங்கள் அவளிடம் இல்லாத போது விட்டு விடுவாயா? நீச்சனாகிப் போனாயா நீ என..

அவனின் ஆழ் மனதின் சக்தி அவனை அவனுள் சுழற்றி அடிக்க.. கேள்விகள் மனம் முழுவதும் தாக்க.. அவளையே பார்த்து இருந்தவன்.. தன்னையும் மீறி தலையை உலுக்கி வேகமாக எழுந்த விதத்தில்..

ஈஸ்வரையே பார்த்திருந்த வர்ஷினி பயந்து போனாள், “என்ன ஆச்சு?” என்றும் உடனே கேட்க..    

“ஒன்னுமில்லை!” என்றவன், அப்படியே திரும்ப அமர்ந்தான்.    

“இல்லை! எனக்கு மயக்கமெல்லாம் இல்லை! மயக்கதிற்காக எல்லாம் திருமணம் செய்பவன் நான் இல்லை.. இது அது அல்ல.. ஒரு வேளை இதுதான் காதலோ? முன்பே காதல் சொன்னதால் இதை என்னால் பகுத்தறிய முடியவில்லையோ?” என யோசனைகள் ஓடும் போதே,

அவன் ஒன்றுமில்லை என்ற போதும் அருகினில் வந்தவள்.. “என்ன ஆச்சு?” என்றாள் கவலையாக..

அவளின் பாவனையைப் பார்த்து புன்னகைத்தவன், மீண்டும் ஒன்றுமில்லை என சொல்லி, “எனக்கு குளிக்கணும்! அதுக்கு தான் அப்படி எழுந்தேன்!” என்றான்.  

நம்பாத பார்வை பார்த்தவள், “போங்க, குளிங்க!” என்று சொல்லி.. அறையில் இருந்த டீ வீ யை உயிர்ப்பித்து அமர்ந்தாள்.

“நீ நல்லவனா கெட்டவனான்னு முதல்ல முடிவு பண்ணுடா ஈஸ்வரா” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு குளிக்க சென்றவன்,

“எனக்கு டவல்” என, “தோ, அங்க இருக்கு!” என அவளின் கபோர்டை காட்ட,

“காட்ட கூடாது! நீ வந்து எடுத்துக் கொடுக்கணும், இதெல்லாம் ஒரு மனைவி கணவனுக்கு செய்வாங்க!” என சொல்லி வேறு கொடுக்க..

எழுந்து வந்தவள் “வேற என்ன என்ன செய்யணும் லிஸ்ட் கொடுத்துடுங்க ஞாபகம் வெச்சிக்கறேன்!” என,

இவள் விளையாடுகின்றாளா என பார்த்தான்.. இல்லை! இல்லவே இல்லை! அவளின் முகம் சீரியசாக இருந்தது. உண்மையாக உணர்ந்து கேட்கிறாள் என புரிந்தவன்..

“நான் சும்மா உன்னை கலாட்டா பண்ண சொன்னேன்.. இது என்ன வேலையா லிஸ்ட் கொடுக்க.. அப்படி எல்லாம் இல்லை.. நீயா என் பக்கத்துல வரணும்னு சொன்னேன்!” என,

“அதுதான் வந்தேனே, நீங்க சொன்னதும் செஞ்சேனே”  

“என்ன செஞ்சே?” என்றான் சட்டென்று ஞாபகம் வர பெறாமல்..

“அது” என்று சில நொடி தயங்கியவள்… “அது தான் ஹக் பண்ணினேன், கிஸ் பண்ணினேன்!” என தயங்கி சொல்ல..

“ஷ்!” என அவனின் தலையை அவனே தட்டிக் கொண்டான். “ஐயோ! இதற்கா திருமணம் என நான் யோசித்தது போல, இதற்கு தான் திருமணம்!” என அவளை நினைக்க வைத்து விட்டேனா என மனதில் நொந்து கொண்டவன்.

“கல்யாணமானதுனால நான் இதை உன்கிட்ட உரிமையா கேட்கறேன்னாலும், இதுக்காக மட்டும் கல்யாணம் கிடையாது!” என்றான்.

“நீ கேட்டே இல்லையா உனக்காக உன் பின்னாடியே சுத்தற ஒருத்தன் தான் வேணும்னு, அந்த மாதிரி உனக்கு என்னை பார்த்தா இன்னும் கூடவா தோணலை.. அந்த கட்டிப் பிடிச்சது முத்தம் கொடுத்தது என்னக்காக புரியுது, ஆனா எனக்காக அது வேண்டாம்.. உனக்கு தோணனும் இல்லையா? அது ஒரு ஃபீலிங்.. என் மாதிரி ஒரு எக்ஸ்ட்ரீம் வேண்டாம்.. விட்டுடு..”

“ஆனா என்னோட கணவன்னு தோணலையா?..” என இடைவெளி விட்டவன், “தோணனும்” என கூடவே சொல்ல..  

பரிதாபமாக பார்த்து நின்றாள். புத்திசாலி தான்! அவன் சொல்வது சரிதான்! ஆனால் உணர்வுகள் என்பது தானாக வருவது.. அதை எப்படி வரவைக்கவா முடியும்! அவள் யோசித்த படி நிற்க..

“எனக்கு புரியுது, அதெல்லாம் தானா வரணும், வரவழைக்க முடியாது!” என்று வார்த்தையாக சொன்னவன்.. “ஒரே நாள்ல உன்னை நிறைய யோசிக்க வைக்கறேன் போல, சாரி!” என்று டவலை எடுக்கப் போக..

வேகமாக வந்து அவளே எடுத்துக் கொடுக்கவும், குளிக்க சென்றவன்.. குளித்து வந்த போது அமர்ந்து டீ வீ பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“உனக்கு தூக்கம் வந்தா தூங்கு வர்ஷி. எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்!” என,

“என்ன பேசுகின்றான் இவன்?” என விழிவிரித்து பார்த்தாள். “பின்னே, கட்டிபிடி! முத்தம் கொடு! என்று கிடைத்த சிறு தனிமையில் பிதற்றி விட்டு, இப்போது தூக்கம் வந்தால் தூங்கு என்கின்றான்” எனப் பார்க்க..

அவளின் பார்வையை பார்த்து சிரிப்பு வந்தது. “கண் திறந்துட்டே தூங்கறியா? உன் கண்ணை பார்த்துகிட்டே இருப்பேன்!” என,

முகத்தில் எதையும் காட்டாமல், வேகமாக சென்று படுத்து உடனே கண்களையும் மூடிக் கொண்டாள்.

“முதல் நாளே உன்னை பைத்தியம்னு நினைக்கப் போறா அவ!” என மனதினில் நினைத்துக் கொண்டவன்… அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து தன்னுடைய மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.               

படுத்து கண்களை மூடி இருந்தாலும் மெதுவாக இமை திறந்து ஈஸ்வரை பார்க்க, ஃபோனை பார்த்து ஏதோ செய்து கொண்டிருந்தான். ஆம்! ஸ்டாக் எக்ஸ்சேஞ் செக் செய்து கொண்டிருந்தான். அதில் ஆழ்ந்தவன்.. உடனே சிஸ்டம் தேட.. அங்கே அவளின் லேப் இருக்க.. அதை எடுத்தான்.

என்ன செய்கின்றான் இவன் என்பது போல அரை விழிகளில் பார்த்தவள், லேப் எடுத்ததால் சற்று பதட்டமானாள். உடனே தணிந்தவள், என்ன செய்ய முடியும் அது பாஸ்வோர்ட் ப்ரொடக்ட் என பார்த்திருக்க..

ஆன் செய்தவன் பாஸ்வோர்ட் கேட்க.. வர்ஷினியை விழித்திருக்கின்றாளா எனப் பார்க்க, அவள் வேகமாக கண்மூடி இருந்தாள், எப்படி தன்னை கூப்பிடுகின்றான் என பார்க்க..

ஈஸ்வர் அழைக்கவேயில்லை.. வெகு நேரம் கழித்து அரை விழியில் பார்க்க, அதில் வேலை செய்து கொண்டிருந்தான். எப்படி முடிந்தது என யோசித்தவள், உடனே எழுந்து அமர்ந்து “என்ன பண்றீங்க?” என

“உன் லேப் கொஞ்சம் யூஸ் பண்ணிகிட்டேன்!”

“அது பாஸ்வோர்ட் இருக்கு”  

“அதை பிரேக் பண்ணிட்டேன்!” என்று ஈசியாக சொல்லி திரும்ப வேகமாக எதோ செய்ய,

“ஹய்யோ!” எனப் பார்த்திருந்தவள், “எதுக்கு என் லேப் என்னை கேட்காம யூஸ் பண்றீங்க!” என,

“ஏன்? என்ன வெச்சிருக்க உன் லேப்ல நான் பார்க்கக் கூடாத மாதிரி” என்று ஈஸ்வர் உடனே கேட்க..

“ஒன்னுமில்லையே” என்றாள் அவசரமாக..  அவள் அவசரமாக சொன்ன விதமே ஏதோ இருகின்றது என்று காட்டியது.

ஆனால் அந்த நீல நிறக் கண்களில் தென்பட்ட கலவரம் என்னவென்று கேட்க விடாமல் தடை செய்ய..

“நான் இருக்கும் போது உன் கண்ல இந்த மாதிரி ஒரு பயம் எதுக்கும் வரக் கூடாது” என..

அவனுக்கு புரியவில்லை.. ஆனால் புரியும் போது? அவனை அவனால் மன்னிக்கவே இயலாது!

யாரிடம் எதுவும் சொல்லாமல் தானே விஷயங்களை பார்த்துக் கொள்ளும் அவளின் மனப் பக்குவம், பல எதிர்மறை விளைவுகளுக்கு பந்தக் கால் நட்டு விட்டது எனப் புரியவில்லை. ஆனால் அது அவனால் மட்டும் என்று சொல்ல முடியாது.. ஆனாலும் அவனும் உண்டு அதில்!     

  “என்ன பார்க்கறீங்க?” என நிகழ்வுக்கு வர..

“சொன்னா சிரிக்க மாட்டியே.. ஜஸ்ட் ஒரு பிட்..(bid). பல நாள் பார்த்திருக்கேன், ஆனாலும் வாங்கணும் தோணினது இல்லை.. இப்போ இந்த நிமிஷம் சொல்லுது அதை வாங்குன்னு… அதுதான் பார்த்துட்டு இருக்கேன்”

“அதுவும் நான் எவ்வளவு ஆர்வமா எதிர்பார்த்த கல்யாணம்.. இந்த நைட்ல நான் பண்ணிட்டு இருக்குற வேலை எனக்கே சிரிப்பா வருது.. ஆனா ஏதோ ஒன்னு சொல்லுது இப்போ இதை நீ செய்ன்னு” என சன்ன சிரிப்புடன் சொல்ல,  

“அது என்ன பிட்?”

“இப்போ அது பேசற விஷயம் இல்லை.. அப்புறம் சொல்லி தரேன். ஜஸ்ட் பத்து நிமிஷம் இதை முடிச்சிடறேன்!” என அவன் அமர..

அவளின் மொபைலை எடுத்து அது என்ன பிட் என ஆராய்ந்தாள். அவன் வேலையை முடித்த நிமிடம் அதை அக்குவேறு ஆணி வேறாக அலச முற்பட்டு இருந்தாள்.  ஆனால் புரியவில்லை என்பது வேறு.   

வேலையை முடித்த போது மனதிற்கு அவ்வளவு திருப்தியாக இருந்தது ஈஸ்வருக்கு.. ஈஸ்வர் பைனான்ஸ் என்ற ஒன்று மட்டுமே பல வருடங்களாக அவனின் குறிக்கோளாக இருக்க.. வேறு எதுவுமே அவன் யோசித்தது இல்லை..

அவனுக்கு தெரியாமல் அது பிரச்சனையில் மாட்டி விட அதை விடுவிப்பது அவனின் பெரும் வேலையாகிப் போக.. அதை விடுவிக்கும் பொருட்டு, அவன் அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.

பின்பு வர்ஷினியை கொண்டு அவனுள் இடைவிடாத போராட்டம், தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு வேலைகளில் ஈடுபட்டாலும், லாபம் பார்த்தாலும், அது பெரிய லாபமாக ஈஸ்வருக்கு தோன்றியதில்லை, அவனுக்கு எதிலும் திருப்தியுமில்லை.

ஆனால் இந்த நிமிடம்… நேரம் போக அதை பார்த்திருந்தவன்.. சில முடிவுகளை எடுக்க, அதில் அவனுக்கு மிகுந்த திருப்தி. அந்த சந்தோஷத்தோடே வர்ஷினியைப் பார்த்தான்.

ஃபோனில் பார்த்துக் கொண்டு இருந்தால் முகத்தில் அவ்வளவு தீவிரம் கூட.. அருகே சென்று என்ன பார்க்கின்றாள் என்று பார்க்க, பிட் என்றால் என்னவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நான் தான் சொல்றேன்னு சொன்னேனே”

“எப்போ சொல்வீங்கன்னு எதுக்கு வெயிட் பண்ணனும், நானே பார்த்துகிட்டேன்.. எனக்கு யாரும் எதுவும் சொல்லிக் கொடுத்தது கிடையாது. எல்லாம் எப்பவும் நானே தான் தெரிஞ்சிக்குவேன்” என்று மிகவும் இயல்பாக அவள் கூற..         

வர்ஷினி என்னவோ இயல்பாகத் தான் கூறினாள்.. ஆனால் அந்த பாவனையே ஈஸ்வரை வருத்தப் படுத்தியது.. “அது உன்னோட கல்யாணத்துக்கு முன்னே. இப்போ நீ சங்கீதவர்ஷினி விஸ்வேஸ்வரன். அண்ட் உன்னோட சர்ச் என்ஜின் நானா இருக்க தான் இஷ்டப்படறேன்.. எதுன்னாலும் என்கிட்டே கேள்.. நீ எதையும் தேட வேண்டிய அவசியமில்லை! அப்படி எனக்கும் தெரியலைன்னா தேடிக்கலாம்” என்றவன், வேகமாக லேப் அணைத்து,

“இந்த பால் எல்லாம் கொடுத்து விடுவாங்களே, அதெல்லாம் ஒன்னும் இல்லையா? பசிக்குது!” என,

“இல்லையே!” என்றவள், “நான் கூட மூவீஸ்ல எல்லாம் பார்த்திருக்கேன். அப்படி எல்லாம் எதுவும் கொடுத்து விடலை!” என்றாள் சீரியசாக.

சிரிப்பு வந்து விட வாய் விட்டு சிரித்தவன், “யார் உன்னை இங்க அனுப்பினா?” என.

ஈஸ்வர் சிரித்ததற்கு முகத்தை சுருக்கியவாறே “ரஞ்சனி அண்ணி” என,

இந்த ரஞ்சனி தான் ஏதோ சொதப்பி விட்டால் என புரிந்தவனாக, சிரித்ததற்கு, “சாரி” என கையை தூக்கி கேட்டவன், “உங்கம்மா, ஷாலினி இல்லையா?” என,

“அம்மா அப்பாக்கு சாப்பாடு குடுக்க போனாங்க! ஷாலினி அன்னிக்கு கால் ரொம்ப வீங்கி இருந்தது, நான் தான் போய் படுங்கன்னு துரத்தி விட்டேன், ஒரு பாட்டி டைம் ஆச்சு ஆச்சு எங்க கமலம்மா கேட்டாங்களா.. ரஞ்சனி அண்ணி கூப்பிட போனாங்க.. நான் தான் யாரையும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நானே போறேன், அம்மாவை கூப்பிடாதீங்கன்னு வந்துட்டேன்” என்று நீண்ட விளக்கம் சொல்ல,   

“சரி விடு, கால்ல எல்லாம் விழ சொல்லலையா?” என்றான் இலகுவாக.  

“அதுவும் சொல்லலையே!”

“ஓஹ் அப்படியா” என்ற ஈஸ்வரின் பாவனையில் “விழணுமா?” என்று வர்ஷினி பொசிஷன் எடுக்க..

தான் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி தன்னுடன் சுமுகமாக நடக்க நினைக்கும் அவளின் எண்ணம் புரிய, “வேண்டாம், வேண்டாம், நான் மொத்தமா உன் கிட்ட விழுந்துடேனே!” என,

“என்ன விழுந்தீங்க?” என்றவளிடம் பதில் சொல்லாமல் அவளை நெருங்கி நின்றான்.

அதுவரை இருந்த சகஜ மனப்பான்மை போய், ஈஸ்வரின் பார்வையில் “என்ன? என்ன?” என்று வர்ஷினி திக்க ஆரம்பித்தாள். ஆம்! ஒரு தீவிரம்.. ஒரு வேட்கை.. ஈஸ்வரிடம் எல்லாம் யோசனைகளும் பின் போய் விட்டன.. இப்போது வர்ஷினி  மட்டுமே அவனின்  முன்.

“முதல்ல உன்னோட இந்த கண்!” என்று மிக மிக அருகில் வர, கண்களை இறுக்கமாக அவளையும் அறியாமல் மூடிக் கொண்டாள். 

இத்தனை நேரம் அவன் யோசித்தது எல்லாம் எங்கோ போனது… இப்போது அவன் நினைவில், நனவில், எல்லாம் வர்ஷினி மட்டுமே..

கண்களை மூடியதும் தான் காற்றில் எழும்பியது புரிய.. ஆம், அவளை கைகளில் தூக்கி இருந்தான்.. அவனின் கைகளில் இருப்பது புரிய… அப்போதும் கண்களை திறக்கவில்லை.. அவளை படுக்கையில் விடுவது புரிய.. வர்ஷினிக்கு இன்னும் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. அதைக் கட்டுப் படுத்த கண்களை இன்னும் இறுக்க..

“வர்ஷ், எதுக்கு கண்ணை இவ்வளவு கஷ்டப்படுத்துற” என்று மெதுவாக அதை பிரித்து விட முயன்றான். முடியவில்லை!

எழுந்து விளக்கை அணைத்து அவளின் அருகில் படுத்தவன்.. “ஸ்டே கூல் வர்ஷ்..” என்றவன் மெதுவாக அவளின் நெற்றியை நீவி விட அந்த கதகதப்பில் கண் திறந்தாள்.. ஆனாலும் கண்களில் ஒரு கலவரம்.

அந்த கலவரத்தை பார்த்ததும் சற்று நிதானபட்டவன், “இவ்வளவு நேரம் எவ்வளவு தைரியமா இருந்த, நான் கேட்டது கூட செஞ்ச, இப்போ என்ன பயம்?” என,

“தெரியலை” என்றாள்..

“தூக்கம் வருதா?” என்றவனிடம், “இல்லை” என்பது போல தலையாட்டினாள்.

அடுத்த கேள்வியாக “களைப்பா இருக்கா?” என, “ஆம்” என்பது போல தலையாட்ட.. “தூங்கு, சரியா போயிடும்!” என்றவன்.. “நாம சிங்கப்பூர் போகலாமா ஒரு பத்து நாள்!” என,

“ம்ம்ம்!” என்பது போல தலையாட்டினாள்.

உடனே தன் மொபைல் எடுத்து அவன் டிக்கெட்டிற்காக பார்க்க.. “நான் அந்தப் பக்கம் திரும்பிக்கட்டுமா?” என சம்மதம் கேட்டாள்.

அவள் கேட்ட பாவனையில் புன்னைகை வந்தது.. “சரி” என..

உடனே அவசரமாக திரும்பப் போனவளிடம்.. மொபைலை கீழே வைத்து, “ஒரே ஒரு கிஸ் மட்டும் பண்ணிக்கட்டுமா?” என ஈஸ்வர் கேட்க…

“சரி” என்பது போல ஒரு தலையாட்டல் மட்டும்.. “நீ லிப்ஸ் ஸ்டிக் போட்டிருக்க, அதை துடைச்சிடு” என..

கைகளால் துடைக்க போனவளை.. தடுத்து கைகளை பிடித்துக் கொண்டவன்.. “இங்கே துடைச்சிடு!” என்று அவனின் கன்னத்தை காட்ட..

“ஆங்” என அந்த நீல நிறக் கண்களை இன்னும் விரிக்க… 

அந்த கண்களில் மீண்டும் தன்னை தொலைக்க ஆரம்பித்தவன்.. வர்ஷினியின் முகத்தை தானாக அருகில் இழுத்து தன் கன்னத்தை திருப்பி வாகாக காட்டி தான் சொன்னதை செய்ய வைத்தான்.

ஈஸ்வரால் அதன் பின் தன்னை கட்டுப் படுத்தவே முடியவில்லை.. தயக்கம், மயக்கம், காதல், என்ற ஆராய்ச்சி எல்லாம் எங்கோ பறந்தது.

இத்தனை நாள் மனதின் அலைபுருதல்கள் எல்லாம் வர்ஷினியிடம் காட்ட ஆரம்பித்தான்.  `

தான் ஈஸ்வரின் கன்னத்தில் உதடுகளை வைத்தது தான் வர்ஷினிக்கு தெரியும்.. அதன் பின் எதுவுமே தெரியவில்லை. எங்கோ அலைகளில்  அடித்து செல்லப் பட்டாள்..       

விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது                                       சரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது!

Advertisement