Advertisement

கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 3
    கோட்டைப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் படகு ஊரிலுள்ள போட் ஜெட்டியை அடையுமுன்னே ஒருவன் ஒரு துணியைக் கம்பில் கட்டி வீசிக் காட்டிக் கொண்டிருந்தான். இவன் கடலோரத்தில் போட்டை ஒதுக்கி மெதுவாகச் செலுத்தத் தொடங்கியதும் அவன் இவனிடமிருந்து அதை வாங்கி போட் ஜெட்டியின் துவக்கம் வரை சென்று அங்கே போட்டை நிறுத்தி இவனைத் தூக்கிக்கொண்டு சற்று தூரம் நடந்து சென்று அங்கிருந்த காரில் இவனை ஏற்றிவிட்டு மீண்டும் போட்டிற்கு வந்து கை ரேகைத் தடயங்களை அழித்துவிட்டு ரத்தம் சுத்தம் செய்து நாய் மோப்பம் பிடிக்காத்திருக்கத் தேவையான யாவற்றையும் செய்துவிட்டு காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான். காரில் இருந்தவன் மயக்கமுற்றிருந்ததால் அவனுக்கு மேலதிக விபரங்கள் தெரியவில்லை..
காரோட்டிக்கிடப்பட்ட பணி போட்டை அப்புறப் படுத்தி அதிலுள்ளவர்களைப் பத்திரமாக மீட்டு தர்ஹா தெருவி லிருக்கும் சுலைமான் பாயிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை அணுகும்பொழுதுதான் அவனுடன் ஒரு குழந்தை இருந்திருக்க வேண்டும் என்பதும் அக்குழந்தைதான் பத்திரமாக மீட்கப் பட வேண்டியவள் என்பதும் அவனுக்குத் தெரிந்தது.
பிள்ளை இல்லை என்றதும் அதிர்ந்த சுலைமான் பாய் அவனிடம் தொலைபேசியைத் தந்துவிட்டு குண்டடி பட்டவனுக்குச் சிகிச்சை அளிக்கச் சென்றுவிட்டார்.
தொலைபேசியில் அந்தப் பக்கமிருந்து ஒலித்த வசவுகளைப் பொறுமையாகக் கேட்டவன்  ‘வழக்கம் போலப் பொருள் வருதுன்னு நினைச்சேன் அண்ணே…இந்த மாதிரி வேலைக்கு நம்ம கூட வரவங்க பேரு விவரமெல்லாம் கேட்கற பழக்கம் நமக்கு எப்போவும் இல்லைல்லே ண்ணே…அதான்…குண்டைப் பார்த்ததும் மீதிப் பேர் ஓடிட்டாங்கன்னு நினைச்சேண்ணே.. இவன் முழிக்கட்டும்.. எப்படியும் பிள்ளையை எங்கேயும் பொறுப்பில்லாம விட்டிருக்க மாட்டாண்ணே…உங்களுக்குத் தெரியாததா…? இல்லைண்ணே… நானும் இங்கேதான் இருக்கேன்..அவன் முகம் முழிக்கற வரைக்கும் இருந்து பிள்ளையைப் பத்தித்  தகவல் கேட்டுட்டு உங்ககிட்டே பேசறேன் அண்ணே…சரிண்ணே…நீங்களா போன் பண்ற வரைக்கும் நானா பேசலைண்ணே….பிள்ளை போட்டோ இருக்காண்ணே…நான் ஊருக்குள்ள போய்த் தேடிப் பார்க்கிறேன்…” என்றுவிட்டு அந்தப்  பக்கம் மீண்டும் கேட்ட வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டு தனக்குத்தானே புலம்பிக் கொண்டு அடிபட்டவன் கண்விழிக்கக் காத்திருந்தான்.
       குண்டு  சற்றே ஆழமாகப் பாய்ந்திருந்ததாலும் தொடர்ந்து ஏற்பட்ட உதிரப் போக்கு ,வலி, மன உளைச்சலிலும், ஓய்வு  கொடுக்காது காலை அசைத்தது, உடல் பலவீனம்  ஆகிய பல காரணங்களால் அடிபட்டவனுக்கு குண்டு எடுக்கப்பட்ட பின்னும் நினைவு திரும்பத் தாமதமாகும் என்று சொல்லிய மருத்துவர் கூற்றிற்கு மாற்றின்றி கடத்தியவர்கள் கால வரையின்றிக் காத்திருக்க வேண்டியதாயிற்று.
 ராமேஸ்வரம் கடலோரக் காவற்படை அலுவலக பூத்:
       பதட்டத்துடன் அந்த நள்ளிரவில் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தான் அண்ணாதுரை. இரு நாட்கள் முன்பு கடலுக்குப் புறப்பட்ட போது உடன் வந்த முத்துவேலனுக்கு திடீரென்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மீன் பிடித்து விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் போட்டில் அவனை அனுப்பிவிட்டு அவனுக்குப் பதிலாக அவர்களுள் ஒரு மீனவனை உடனழைத்துச் சென்றதால் விரைவாகத் திரும்பி வர வேண்டியதாயிற்று. இம்முறை பிடித்த மீன்கள் ஊறுகாய்க்கும் பதப் படுத்துவதற்கும் ஏற்றனவாக இருந்ததால் அம்மீனவனின் உதவியுடன் ஒரு கம்பெனியில் மீன்களை விற்றுவிட்டுத் திரும்பி வந்தவனுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அவனது போட்டைக் காணவில்லை.
       ஊரில் அதிகமான அளவில் காவல்துறை ஊழியர்களின் நடமாட்டத்தை அந்த நள்ளிரவில் போட்டை எடுக்கும்பொழுது கண்டிருந்தவன் தன்னுள்ளே எதுவும் பதற்றமாக உணரவில்லை. நிசப்தமாக இருந்த அவ்விடத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிளை எழுப்பி அவன் மோட்டார் போட்டைக் காணவில்லை என்று பதற்றத்துடன் உரைத்தபோது அவன் பதட்டமின்றி கொட்டாவி விட்டுக் கொண்டே என்ன நடந்ததென்று விசாரித்தான்.
       “என் போட்டைக் காணோம் சார்…நான் இந்த ஊரில்லைங்க…கோட்டைப்பட்டினம் பக்கத்தில மீமிசல்…”
       “அப்போ எதுக்கு இங்கே கம்ப்ளைன்ட் குடுக்க வந்தே? நாங்க அந்தக் கம்ப்ளைன்டை வாங்க முடியாதே…நீ போய்க் ஆவுடையார்கோவில் இல்லை மணமேல்குடில புகார் பண்ணு…”
       “இல்லைங்க சார்…இங்கே உள்ள போட் ஜெட்டில நிறு த்தியிருக்கும் போதுதான் காணோம்..”
       “அப்போ சரி…நல்ல வேளை…என்கிட்டே சொல்லாமல் நீ நேரே ஆபிசுக்குப் போயிருந்தா என் வேலைக்குப் பிரச்சினையாயிருக்கும்..போட்டோட பார்கிங் ரசிது, போட் பேப்பர், உன்னோட பிஷர்மேன் ஐ.டி. கார்டு எல்லாம் ஒரு ஜெராக்ஸ் குடு…”
       “சார்..என்கிட்டே ஒரு காப்பிதான் இருக்கு…இந்நேரத்துல ஜெராக்ஸ் கடை இருக்காதே…”
       “சரி குடு…எல்லாத்துக்கும் நான் நம்பர் மட்டும் எழுதி வெச்சிக்கறேன்…தூக்கத்திலிருந்து எழுப்பினது எழுப்பிட்டே…ஓர் டீயும் ஒரு கேக்கும் வாங்கிக் குடுத்துட்டு உன் அட்ரசைக் குடுத்திட்டுப் போ…போன் நம்பர் வெச்சிருக்கியா…?”
       “மூணாவது தெருவில ஒரு வீட்டில இருக்கு…அந்த நம்பர் வேணும்னா தரட்டா…?”
       “போய்யா…அதெல்லாம் வேணாம்…பக்கத்து வீட்டு PP நம்பருக்கே யாரும் கூப்பிடறதில்லை…வீடு பூட்டியிருக்குன்னு சாக்கு சொல்றாங்க…அட்ரஸ் மட்டும் குடு…போதும்…”
       “சரி சார்” எனப் பணிவுடன் கூறிவிட்டு பூத்தைப் பூட்டிவிட்டு வந்த அந்தக் கான்ஸ்டபிளுடன் சேர்ந்து ஒரு சிகரெட்டைப்  புகைத்துவிட்டு டீயையும் குடித்துவிட்டு விடைபெற்றான் அண்ணாதுரை.
மீமிசல் கடற்கரைக் குப்பம் – மீமிசல்:
       விடியத் துவங்கிய அவ்வேளையில் அச்சிறுமி இருந்த அந்த வீட்டின் கதவுகள் தட்டப்பட்டன. சற்றே பதற்றத்துடன் சிறுமியை முகம் வரை நன்கு இழுத்து மூடிப் போர்த்திவிட்டு அருகில் அமர்ந்து அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவளது மகனுக்கு வாயில் விரல் வைத்து மூடி “பேசாதே” என சைகை செய்துவிட்டு சிறுமியின் உறக்கம் கலையாமல் கதவைத் திறந்தவள் அங்கே நின்ற முத்துவேலனைப் பார்த்து ஆசுவாசமடைந்தாள்.
       “வா முத்து…அண்ணன் இன்னும் கடலிலேயே இருக்காரா..?” எனக் கேட்டவாறே அவனுக்கு உணவளிக்க எத்தனித்தவள் அவன் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்து அவசரமாக வாயிற்கதவைச் சாத்தினாள்.
”இல்லைக்கா…எனக்கு அன்னிக்கு வயித்து நோவுன்னு நான் கடலுக்குப் போகலை…ராமேஸ்வரத்து ஆளு ஒருத்தன்தான் கூடப் போனான்.அவன் இரண்டு நாளாக் கடல்லியே இருக்கறதால நேத்து ராத்திரியே திரும்ப வரணுமின்னு சொல்லித்தான் அப்படியே போட் மாறிப் போனான்…நான் அண்ணன் வந்திருக்குமின்னு நினைச்சேன்..அதான் வலையைக் கழுவிக் காயவெச்சிட்டு மீன் விக்க இல்லைனா கருவாடு காயப் போட உனக்கு உதவி பண்ணலாம்னு வந்தேன்க்கா…”
“என்னடா சொல்றே? நம்ம போட்டில ஒரு ஆளு வந்து அண்ணன் குடுக்க சொன்னாருன்னு இந்தப் பிள்ளையை அரசு  கையில குடுத்துட்டுப் போயிருக்காண்டா…அரசுக்கு அவன் யாருன்னு தெரியலை..போட்டில இருந்தவன் குண்டுக் காயம் பட்டுக் காலில ரத்தம் வந்திச்சுன்னு சொன்னான்…
“நீ என்னக்கா சொல்றே? பிள்ளை நம்ம பக்கத்துப் பிள்ளை மாதிரியே இல்லையே…சினிமால வர பிள்ளை மாதிரில்ல இருக்கு.. காதில கழுத்திலல்லாம் வேறே தங்கம் தொங்குது…அண்ணன் அப்படில்லாம் பொம்பளைப் பிள்ளையைப் பொறுப்பில்லாம யாரோடையும் அனுப்ப மாட்டாருக்கா..    இது கூடவா உனக்குத் தோணலை..? அத்தோட அவர் என்ன ஊரில நடக்கற திருவிழாவுக்கா போனாரு தொலைஞ்சு போன பிள்ளையைக் கூட்டிட்டு வர? கடலுக்குள்ள கடல் கன்னிதானே இருக்கும்?பிள்ளைகிட்டே கேட்டியா யாரு என்னன்னு” என்றவாறே போர்வையை விலக்கி சிறுமிக்குக் கால்கள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துக் கால் இருக்கு அப்போ கடல் கன்னி இல்லை…எனத் தனக்குள்ளே முனகிக் கொண்டான்.
       விலக்கிய போர்வையைச் சரிசெய்து சிறுமியின் முகச் சிணுக்கம் மறையத் தலையைக் கோதிவிட்டு உறங்க வைக்க முற்பட்ட அரசுவை அவர்கள் கவனிக்கவில்லை. மீனாட்சிக்குக் கணவனைப் பற்றிய கவலை ஒருபுறம்…பெண்மகவைப் பற்றிய கவலை மறுபுறம் அவளை அலைக்கழித்தது.
       “நான் வேணும்னா ராமேஸ்வரம் போய்ப் பார்த்திட்டு வரட்டாக்கா..? எனக்குக் கூடப் போனவனைத் தெரியும்..”
       “இல்லைடா…இருடா..சித்த நேரம்…அரசு..நம்ம போட்டில இருந்தவன் நனைஞ்சிருந்தானாடா..?”
       “இல்லைம்மா”
       “அப்போ அண்ணன் வந்து போட்டை நிறுத்தினப்புறம் இந்தப்பிள்ளை விளையாட கொள்ளன்னு ஏறியிருக்குமோடா..? போட்டோட சேர்த்துப் பார்க்காம பிள்ளையையும் ஆஸ்பத்திரிக்கு அவசரத்துக்குன்னு குடுத்துட்டாரோ உங்கண்ணன்…?இல்லை ஆஸ்பத்திரிக்குப் பிள்ளை எதுக்குன்னு நம்ம வீட்டில அரசுவோட விளையாடட்டும்னு சொல்லி விட்டிருப்பாரோ..?”
“இருக்கும்கா…அண்ணன் தாராள மனசு தெரிஞ்சதுதானே..? அப்போ மீனை என்ன செஞ்சிருப்பாரு..? ராமேஸ்வரத்திலையே ஏலத்துக்கு விட்டிருப்பாரோ..? நேத்து புது வருஷம் வேறே…நல்ல கூட்டம் இருந்து மீனெல்லாம் வித்திருக்கும்…ஆனாலும் நீ ரொம்ப நல்ல மாதிரிக்கா…அண்ணனை சந்தேகப் படாம பிள்ளையைப் பத்தி யோசிக்கறியேக்கா..?”
“போடா..உங்கண்ணனைப் பத்தி உனக்குத் தெரியாதா? ஒத்தைக்காலில நின்னு என்னைக் கட்டிட்டு வந்தாங்கள்ள..கைப்பிடிச்ச அன்னிக்குக் குடுத்த நம்பிக்கை இன்னும் குறையாமத்தான் வெச்சிருக்காங்க” என்றவளின் முகம் மணாளனைப் பற்றிய பெருமையில் மின்னியது.
“பொழுது விடியப் போகுது..நீ போய் நம்ம 3வது தெரு பாய் வீட்டுக்கு போன் வருதா பாரு…இந்தப் பிள்ளை நம்ம வீட்டில இருக்கறதை யார்கிட்டேயும் சொல்லாதே..நான் அண்ணன் வந்தா உன்னைக் கூப்பிட அரசுவை அனுப்பறேன்” என முத்துவைத் தொலைபேசி இருக்கும் வீட்டிற்கு  அனுப்பியவள் வீட்டில் மகனிடம் எச்சரித்தாள்.
“அரசு…பாப்பா நம்ம வீட்டில இருக்கறது பத்தி இப்போ யாருக்கும் சொல்லாதே..அப்போதான் உன்கூட ரொம்ப நால் விளையாடும்…இல்லன்னா உன் பிரன்ட்ஸ் அப்படிக் கூட்டத்தைப் பார்த்தா அழும்..”
“சரிம்மா…சொல்ல மாட்டேன்…”
“நீயும் படுத்துத் தூங்குப்பா…பாப்பா எழுந்திரிச்சதும் விளையாடலாம்…”
உறங்கத் தொடங்கிய மகனைத் தட்டிக் கொடுத்தவாறே முத்து கொண்டுவரும் கணவனிடமிருந்தான தகவலுக்காகவும் அல்லது நேரில் வரவிருக்கும் கணவனுக்காகவும் காத்திருந்தாள்.
முதலில் வந்தது முத்துதான்…அக்கா போட்டைக் காணோமாம்…அண்ணன் மணல்மேல்குடி ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் குடுத்திட்டு வரேன்னு சொன்னாரு…என்ற தகவலுடன் வந்து நின்றான்.
“அவருட்டே பாப்பா நம்ம வீட்டில இருக்கறது பத்திச் சொன்னியாடா?”
“இல்லைக்கா..,..அண்ணன் தகவல் சொல்ல சொல்லிச்சுன்னுதான் சொன்னாங்க…நீ பிள்ளை இங்கே இருக்கறதை யார்ட்டேயும் சொல்ல வேணாம்னு சொன்னியில்ல..அதுதான் நான் அவங்ககிட்டே ஏதும் சொல்லலை. “சரி முத்து…அண்ணன் வர வரை பொறுமையாவே இருப்போம்” என்றுரைத்துவிட்டு கணவன் வரும்வரை காத்திருக்கத் தொடங்கினாள்.
மணல்மேல்குடி கோஸ்ட் கார்ட் காவல் நிலையம்:
       அந்த ஸ்டேஷனுக்குள்  நுழைந்த அண்ணாதுரை அங்கிருந்த ரைட்டரை அணுகி கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு அருகிலிருந்த ஹோட்டலில் அவருக்கு காப்பி டிபனையும் வாங்கிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.
       வரும் வழியில் பொழுது போகவென்று பச பயணத்தில் படிப்பதற்காக ஒரு காலை நாளிதழை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினான்.
       பஸ்ஸில் அவனருகே அமர்ந்திருந்தவர் கேட்டதால் முதல் பக்கத்தை அவரிடம் தந்துவிட்டு மீதிப் பகுதிகளைப் படித்துக் கொண்டு வந்தவன் அவருடைய “கலி முத்திப் போச்சு தம்பி…நம்ம பக்கத்து நியாயத்தைக் கேட்க வைக்கன்னு சின்னப் பிள்ளைத் தனமா பிள்ளையைப் பிணையாப் பிடிச்சு வெச்சிருக்கானுங்க…எந்தக் காலத்துல இருக்காங்க இவங்க? கலெக்டரா இருந்தா மட்டும் அந்த ஒத்தை ஆளால என்ன செய்ய முடியும்? அவனுக்குத் தான் பிள்ளைப் பாசம் இருக்கும்…நாமம் அரசாங்கத்துக்கோ இல்லை பக்கத்து நாட்டு அரசாங்கத்துக்கோ ஏதாவது உறைக்குமா என்ன? அப்படி இருந்தா நாம ஏன் இன்னும் எல்லைக்கு அடிச்சுகிட்டு நிக்கப் போறோம்..?இதில நம்ம அரசாங்கம் வேறே இரண்டு நாள் தவணை கேட்குதாம் முடிவெடுக்க” என்ற ஆதங்கத்தைக் கேட்டு அந்தப் பக்கம் கவனத்தைத் திருப்பினான்.
காலை 9 மணி:
       உறங்கி விழித்த சிறுமி புதிய இடத்தில் தானிருப்பது கண்டு அழத் தொடங்கினாள். அவளது அழுகை கேட்டு கண்விழித்த அரசுவும் அவனது தாயும்  அவளை சமாதானப் படுத்தக் கொடுத்த விளையாட்டுப் பொருட்கள் அவளால் வீசி எறியப்பட்டன.
       சிறுமியான அவளுக்கு அவனது கார், பைக், சைக்கிள் போன்ற பொம்மைகளில் அவ்வளவாகப் பிடித்தம் இருக்கவில்லை. அவனது பவர் ரேஞ்சர்ஸ் அவளை சற்று நேரம் இழுத்துப் பிடித்தது. மீண்டும் அழத் தொடங்கியவளுக்கு அவனது வண்ணக் கிளிஞ்சல்களும் சங்குகளும் அவளுக்கு அதிசயமான அரிதான விளையாட்டுப் பொருளாகக் காட்சியளித்தது. அதை வைத்திருந்த அவனும் அவளுக்குத் தோழனாகிப் போனான். 
காலை 11 மணி:
       வீட்டிற்குள் களைத்து நுழைந்த அண்ணாதுரை கையில் நீர் கொணர்ந்து தந்த மனைவியிடம் ஒரு புன்முறுவலைச் சிந்தியவாறே “பாய் வீட்டில தகவல் சொன்னாங்களா..? விடியும்பொழுதே நீ காத்திருப்பேன்னு போன் பண்ணிச் சொன்னேனே..நீயும் பயலும் ரொம்ப நேரம் காத்திருந்தீங்களா..? அதான் கவலையா இருக்கியா..? இது யாரு அரசு..? புது பிரண்டா?எங்கேயோ பார்த்தாப் போலவே இருக்கே” என்று பேசிக் கொண்டே போனவன் அவள் முகபாவனை குழப்பத்தைக் காட்டுவதைக் கண்டு என்னவென்று வினவினான்.
       நடந்ததை சுருக்கமாக அவனிடம் சொன்னவளின் குழப்பம் அவனுக்குள் குடியமர்ந்தது.
—————————————————————————————————-
ராமநாதபுரம் கலெக்டர் இல்லம்:
“நான் படிச்சுப் படிச்சு சொன்னேன்…தேனு என்கூட இருக்கட்டும்னு…யாரவது கேட்டிங்களா..? புது வருஷம்…பிள்ளையை அழ விட வேணாம்… அவ ஏங்கிப் போய்டுவா..அது இதுன்னு என்னென்னமோ சொன்னிங்க..இப்போ என்ன ஆச்சு? அரசாங்கத்துக்குக் கோடி  பிள்ளைங்க…நமக்கு இருக்கறதோ ஒத்தைப் பிள்ளை…அதுவும் மகாலட்சுமியே நேர்ல வந்த மாதிரி லட்சணமான பொம்பளைப் பிள்ளை…இனி ஒரு பிள்ளைக்கும் வாய்ப்பில்லை…” எனத் திட்டிக் கொண்டிருந்தவர் மருமகளின் அடக்க இயலாக் கதறலைக் கேட்டு அவளை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
“ஏம்மா பங்கஜம்…இப்படி அழுதுட்டே இருந்தா உடம்புக்கு என்னத்துக்கு ஆகும்…? கங்காதரா…நீயாவது சொல்லு அவளுக்கு…ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் கொஞ்சம் தூங்க வை…ராத்திரி எல்லாம் பிள்ளையைக் காணும்னு அழுதிருக்கா…பொறுப்பில்லாம நீயும் கூடச் சேர்ந்து கவலைப் பட்டுட்டு இருக்கே…” என்று மகனையும் மருமகளையும் அனுப்பியவர் கவலையில் ஆழ்ந்தவாறே எங்கோ மனதின் ஓரத்தில் தெரிந்த வெளிச்சப் புள்ளியின் நம்பிக்கையில் பேத்திக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.

Advertisement