Advertisement

அத்தியாயம் – 1

 

 

பொழுது மெதுவாய் புலர ஆரம்பித்திருந்த அதிகாலை நேரம் தெருமுனையில் அலுவலக வண்டியில் இருந்து இறங்கினாள் சங்கமித்ரா. இரவு நேரப்பணி முடித்து அப்போது தான் வந்துக்கொண்டிருந்தாள் அவள்.

 

 

வீட்டிற்கு நடையை எட்டிப்போட்டவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டின் வாயிலின் முன் நின்று தன் கைப்பையை துழாவி அவளிடம் வைத்திருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றாள்.

 

 

குழந்தை அவளின் நாத்தனார் காவ்யாவுடன் உறங்கிக் கொண்டிருந்ததை எட்டிப்பார்த்துவிட்டு அவர்களின் அறைக்குள் சென்றவள் பத்து நிமிடத்தில் குளித்து முடித்து வெளியில் வந்தாள்.

 

 

பூஜையறையில் விளக்கேற்றி வைத்து ஓரிரு நிமிடம் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்தவள் சமையலறைக்குள் நுழைந்தாள். காலை டிபனும் மதிய உணவுக்கும் தயார் செய்ய ஆரம்பித்தாள்.

 

 

சற்று நேரத்தில் அவளின் மாமியார் மகேஸ்வரி வெளியில் எழுந்து வரும் அரவம் கேட்க அவருக்கு சூடாக காபியை போட்டு எடுத்துக் கொண்டு அவரிடம் நீட்டினாள்.

 

 

“உன் போன் என்னாச்சு மித்ரா என்றார் மகேஸ்வரி.

 

 

“என்னாச்சு அத்தை உள்ள சார்ஜ் போட்டிருக்கேன்

 

 

“எப்பவும் போட்டு வைச்சுக்க மாட்டியா முன்னாடியே?? உன் போனு ஆப்ல இருக்குன்னு இப்போ தான் ராஜா சொன்னான்

 

 

மித்ராவுக்குள் பரபரவென்றிருந்தது அதே ஆர்வத்துடன் “என்ன சொன்னார் அத்தை?? என்றாள்

 

 

“அவனுக்கு பரிட்சை முடிஞ்சிருச்சாமே… என்று அவர் முடிப்பதற்குள் “அது தான் எப்பவோ முடிஞ்சுட்டுதே அத்தை

 

 

“கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளேன். அதுக்குள்ள என்ன அவசரமோ உனக்கு

 

 

“அவனுக்கு கடலூர்ல போஸ்டிங் ஆகியிருக்காம். நாளைக்கு பிளைட்ல இங்க வரானாம். உன்னை டிக்கெட் போட சொல்லி கூப்பிட்டான் போல. உன் போன் தான் ஆப் ஆகிட்டுல அதான் அவனே டிக்கெட் போட்டுட்டான் போல

 

 

“நாளைக்கு வந்திடுவானாம், உன் கார்டுல தான் டிக்கெட் போட்டானாம். அதை உன்கிட்ட சொல்ல சொன்னான் என்று முடித்தார் அவர்.

 

 

“நாளைக்கு எப்போ வரேன்னு எதுவும் சொன்னாரா அத்தை என்று விசாரித்தாள் அவள்.

 

 

“அதெல்லாம் எதுவும் சொல்லலை. நீயே அப்புறமா அவன்கிட்ட பேசி கேட்டுக்கோயேன் என்றுவிட்டு அவர் நகரவும் அவளுக்கு மகிழ்ச்சி ஊற்று சுரக்க ஆரம்பித்தது.

 

 

அப்படி இப்படி என்று முழுதாய் மூன்று வருடங்கள் ஓடிவிட்டதே. அவ்வப்போது அவன் வந்து எட்டிப் பார்த்துவிட்டு போனாலும் நிரந்தரமாய் இப்போது தானே இங்கு வருகிறான் என்பதில் உற்சாகமானாள் அவள்.

 

 

அதே உற்சாகத்துடன் அவள் சமையலை முடிக்கவும் அவளின் செல்ல மகள் அவள் புடவையை இழுத்து தன்னை தூக்குமாறு கூற அவளை வாரியணைத்து முத்தமிட்டவள் குழந்தையின் தேவைகளை கவனித்தாள்.

 

 

சங்கமித்ரா இந்த வீட்டிற்கு வந்து மூன்று வருடங்கள் முடியப்போகிறது. குழந்தைக்கு இரண்டு வயதாகிறது, வீட்டில் மாமியார் மகேஸ்வரி, நாத்தனார், மச்சினன் என்று அவளை சுற்றி உறவுகள் இருந்தாலும் கொண்டவன் இல்லாமல் வெறுமையாகவே இந்த நாட்கள் கடந்தது அவளுக்கு.

 

 

காவ்யா கல்லூரி மூன்றாம் ஆண்டும், மச்சினன் சைலேஷ் முதலாம் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் கல்லூரிக்கு கிளம்பிச் செல்லவும் மாமியாரை தேடி வந்தாள் மித்ரா.

 

 

“அத்தை நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடறேன் என்றாள்.

 

 

“ஏன் படுக்கலையா?? காலையில தானே வீட்டுக்கு வந்த, சமையல்தான் முடிஞ்சிடுச்சே?? இன்னைக்கும் உனக்கு நைட் ஷிப்ட் தானே??

 

 

“ஆமா அத்தை. நான் வந்து படுக்கறேன், இப்போ கோவிலுக்கு போயிட்டு வந்திடறேனே. அப்படியே வரும் போது உங்களுக்கு கால் வலி மருந்து வாங்கணும் வாங்கிட்டு வந்திடறேன்

 

 

“என்னமோ போ நான் சொன்னா கேட்கவா போறே. சரி மருந்து வாங்கிட்டு வந்திடு, குழந்தையை கூட்டிட்டா போகப் போறே??

 

 

“ஆமா அத்தை அவளையும் கூட்டிட்டு போறேன். நாள் முழுக்க பார்த்துக்கறீங்க, நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அத்தை நான் இவளை கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்திடறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி வெளியில் வந்தாள்.

 

 

வெளியில் வந்தபின் தான் மூச்சே வந்தது அவளுக்கு. மித்ராவின் மாமியார் ஒரு ரகம் அவருக்கு மித்ராவை பிடிக்கிறதா இல்லையா என்று இன்று வரை அவளுக்கு சந்தேகமே.

 

 

நாயகன் படத்தில் கமல்ஹாசனை பார்த்து அந்த குழந்தை நீங்க நல்லவரா!! கெட்டவரா!! என்று கேட்குமே அது போல அவளுக்கும் அவள் மாமியாரை பார்த்து கேட்க வேண்டுமென்று தோன்றும்.

 

 

இரவு வேலை பார்த்துவிட்டு வருகிறாளே வந்தும் கூட நமக்காக சமையல் எல்லாம் செய்கிறாளே என்ற அவளுக்கு உதவுவோம் என்று எப்போதும் அவருக்கு தோன்றியதில்லை. சமயத்தில் அவள் மேல் அக்கறை இருப்பது போலவும் இருக்கும் அவர் பேச்சு.

 

 

காவ்யா உதவி செய்யத்தான் செய்வாள் ஆனால் மித்ரா தான் அவளை தடுத்து விடுவாள். மாலை சிற்றுண்டியும் இரவு உணவும் அவள் தான் பார்த்துக் கொள்கிறாள் மேலும் கல்லூரி விட்டு வரும் அவள் குழந்தையையும் பார்த்துக்கொண்டு காய்ந்த துணிகளை அடுக்குவது பாத்திரம் அலம்பி வைப்பது என்று மற்ற வேலைகளை அவள் பார்த்து கொள்வாள்.

 

 

அதன் பொருட்டே காவ்யாவை அவள் வீட்டில் இருக்கும் தருணங்களில் வேலை வாங்க மாட்டாள். சைலேஷ் கல்லூரி செல்ல ஆரம்பித்துவிட்டாலும் இன்னமும் பாலகனாகவே இருப்பது போல் தோன்றும் அவளுக்கு.

 

 

இந்த வீட்டில் அவளால் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இருவர் அதில் ஒருவர் அவள் மாமியார் என்பது இந்நேரம் புரிந்திருக்கும், மற்றொருவர் வேறு யார் அவளின் கணவன் தான்.

 

 

மித்ரா வழியில் சென்ற ஆட்டோவை பிடித்து ஏறி அமர்ந்து யாருக்கு போனில் முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். அது வேறு யாருமல்ல மித்ராவின் மித்ரா தான்.

 

 

மித்ரன் என்றால் நண்பன் தானே மித்ரா என்றால் நண்பி தானே அதான் அப்படி சொன்னேன். மித்ராவின் தோழி என்று சொல்வதை விட அப்பெண்ணை கண்ணாடி என்று கூட சொல்லலாம்.

 

 

ஏனென்றால் மித்ரா அவள் உணர்வுகளை அதிகம் பிரதிபலிப்பது அவளிடத்தில் தான், அவள் தான் சுஜாதா. “ஹலோ சுஜி என்ன செய்யற, எவ்வளோ நேரமா உனக்கு போன் பண்ணிட்டே இருக்கேன்

 

 

“சொல்லும்மா என்ன விஷயம் காலையிலேயே போன் பண்ணியிருக்க? வாய்ஸ்ல ஒரு குஷி தெரியுது என்றாள் எதிர்புறம் இருந்தவள்.

 

 

“எல்லாம் நல்ல விஷயம் தான் நேர்ல வந்து பேசறேன். வீட்டில தானே இருக்க

 

 

“ஆமா வீட்டில தான் இருக்கேன். உனக்கு நைட் ஷிப்ட் ஆச்சே நீ தூங்கலையா?? அப்படி என்ன தலை போற அவசரம், அதை போன்ல சொல்ல வேண்டியது தானே?? எதுக்குடி வீணா அலைச்சல் உனக்கு என்று தோழிக்காய் பரிந்தாள்.

 

 

“பரவாயில்லை இருக்கட்டும் வீட்டுக்கு போய் தூங்க தானே போறேன். நானே என் மாமியாரை அதையும் இதையும் சொல்லி சமாளிச்சுட்டு வந்திருக்கேன். நீ வேற ஏன் எதுக்குன்னு கேட்டுட்டு இருக்க. நான் வீட்டுக்கு வரேன் அவ்வளோ தான் சரியா?? என்றாள் மித்ரா.

 

 

“நான் ஒண்ணும் உன்னை வரவேணாம் சொல்லலை. நீ வா, சாப்பிட்டியாடி??

 

 

“அதை மறந்துட்டேன் பாரேன். நான் வர்றதுக்குள்ள சூடா நாலு தோசையும் நீ அரைப்பியே காரமான அந்த தக்காளி சட்டினியும் எனக்காக செஞ்சு வை. நான் கொலைபசியில இருக்கேன் வந்து சாப்பிடுறேன் என்றுவிட்டு போனை வைத்தாள் மித்ரா.

 

 

சுஜி மித்ராவின் நெருங்கிய தோழி, இருவருக்கும் பள்ளிக்காலத்தில் இருந்தே நல்ல நட்பு. பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் வேறு வேறு வகுப்புக்கு மாறிய போதும் கூட மதிய உணவு வேளையில் சந்தித்துக் கொண்டு பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

 

 

இருவருக்கும் தனித்தனியா வெவ்வேறு தோழிகள் உடன்பயிலும் வகுப்பில் இருந்தாலும் இருவரும் மட்டும் வெகு நெருக்கம். மதிய உணவு வேளையில் ஒன்று சுஜி மித்ராவின் வகுப்புக்கு வருவாள் அல்லது மித்ரா அவள் வகுப்புக்கு செல்லுவாள்.

 

 

‘இவளுங்க அப்படி எந்த கோட்டையை பிடிக்க இப்படி குசுகுசுன்னு பேசுவாளுங்களோ தெரியலையே என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

 

 

‘என்ன தான்டி நீங்க ரெண்டு பேரும் பேசுவீங்க என்று ஒரு பெண் நேரிலேயே கேட்டுவிட்டாள். இருவருமே அதற்கு பதில் சொல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ளுவர்.

 

 

இப்படி ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையில் கண் திருஷ்டியாய் இடைவெளியும் அமைந்தது. பள்ளிப்படிப்பு முடிந்து இருவரும் பிரிய மித்ரா ஒரு கல்லூரியிலும் சுஜி வேறு கல்லூரியிலும் பயின்றனர்.

 

 

எப்போதாவது தான் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் காலப்போக்கில் நின்று போனது, ஏனெனில் சுஜிக்கு திருமணமாகி அவள் கணவர் பெருமாளுடன் ஆந்திராவிற்கு சென்றுவிட்டாள்.

 

 

நடுவில் சில வருடங்கள் அப்படி இப்படி என்று கழிந்திருந்தாலும் எப்படியோ ஒருவர் எண்ணை மற்றவர் கண்டுபிடித்து அவர்களின் நட்பை மீண்டும் புதுப்பித்தனர்.

 

 

சுஜியின் கணவருக்கு அவ்வப்போது வேலை மாற்றம் நிகழ்ந்ததில் அவர்கள் ஊர் ஊராக மாறி இதெல்லாம் அலுத்துப் போனவளாக சுஜி கடைசியில் சென்னைக்கே வந்துவிட்டாள், குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு.

 

 

இரு செல்வங்கள் அவளுக்கு ஐந்து வயதில் பெண்ணும் இரண்டு வயதில் ஒரு மகனும். இப்போதும் கூட அவள் கணவருக்கு வேலை மாற்றம் தான் அவர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவளும் குழந்தைகளுமாக தனியாக வசிக்கின்றனர்.

 

 

வெளியில் ஆட்டோ சத்தம் கேட்டு சுஜி வாயிலுக்கு வந்தாள் சபரியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டே, “வாடி இவளையும் தூக்கிட்டு வந்திட்டியா?? இனி ரெண்டுக்கும் கொண்டாட்டம் தான் என்றவள் மித்ராவின் இடுப்பில் இருந்த மதுபாலாவை தூக்கி இன்னொருபுறம் வைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

 

“அப்புறம் சொல்லு என்னை பார்த்து நேர்ல சொல்லியே ஆகணும்ன்னு நீ ஆர்வமா இருக்கற விஷயம் என்னவோ என்ற சுஜி குழந்தைகள் இருவரையும் விளையாட வைத்துவிட்டு உள்ளே சென்று மித்ராவிற்கு சாப்பிட அவள் கேட்ட தோசை தக்காளி சட்டினி சகிதம் வந்தாள்.

 

 

“சாப்பிடு சாப்பிட்டுட்டே சொல்லு. இல்லை சொல்லிட்டு சாப்பிடு விஷயம் என்னன்னு தெரியலன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்றாள் சுஜி.

 

 

“அவர் ஊர்ல இருந்து வர்றார்டி, இங்க கடலூர்ல போஸ்டிங் ஆகிருக்கு அவருக்கு. எனக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கு சுஜி என்று தோழியை கட்டியணைத்துக் கொண்டாள்.

 

 

“நீ சந்தோசப்படுறது பார்த்தா எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குடி. ஆமா எப்படி தெரியும் உனக்கு போன் பண்ணாரா??

 

 

“அத்தைக்கு போன் பண்ணி சொன்னார்டி. முறைக்காதடி எனக்கு போன் பண்ணியிருக்கார் போல நான் சுவிட்ச் ஆப் பண்ணி வைச்சிருந்தேன் அதான் அத்தைக்கு போன் பண்ணி சொல்லியிருக்கார்

 

 

“ஏன் உங்க மாமியார்கிட்ட போன் பண்ணி சொன்னவருக்கு உன்னை கூப்பிட்டு கொடுக்கச் சொல்ல எவ்வளவு நேரமாக போகுது. நீ இன்னுமாடி திருந்தலை என்று தலையில் அடித்துக்கொண்டாள் தோழி.

 

 

“நான் வேலையா இருந்திருப்பேன் அதான் அத்தை கொடுத்திருக்க மாட்டாங்க. அவரும் நான் தூங்கிட்டு இருப்பேன்னு நினைச்சுட்டு பேசாம விட்டிருப்பார் இதெல்லாம் போய் ஒரு குத்தமா எடுத்துக்க முடியுமாடி

 

 

“இப்படியே அவருக்கு சப்பைக்கட்டு கட்டிட்டே இரு. மாடா உழைச்சுட்டு இருக்க அது தெரியலை அவங்களுக்கு என்று வழக்கம்போல் ஆரம்பித்த சுஜி தோழியின் முகம் பார்த்து பாதியிலேயே நிறுத்திக்கொண்டாள்.

 

 

“அப்புறம் அவர் இங்க வந்திட்டா நீ வேலையை விட்டுடலாம்ல. அவரோடவே கடலூர் போய்டலாம். இனியாச்சும் உனக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கட்டும்டி. என்ன நீ இல்லாம எனக்கு தான் கஷ்டமாயிருக்கும் என்ற சுஜி உண்மையிலேயே வருத்தமாக சொல்ல தோழியின் வருத்தம் கண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த மித்ரா தோழியின் கையை பிடித்துக்கொண்டாள்.

 

 

“நீ கொஞ்ச நாள் என்னைவிட்டு இருந்தல, அது போல தானே இதுவும். நான் அவரோட போனாலும் உனக்கு போன் பண்ணாம இருப்பேனா. உன்கிட்ட பேசலைன்னா எனக்கு தான் மண்டை வெடிச்சு போகுமே

 

 

“நான் அழுது புலம்பவும் சந்தோசத்தை வெளிப்படுத்தவும் எல்லாத்துக்குமே எனக்கு நீ தானேடி இருக்க என்ற மித்ராவின் கண்கள் லேசாக கலங்க “சீய் லூசு நான் தான் ஓவரா பீலிங்க்ஸ் போட்டா நீ எனக்கு மேல பீலிங்க்ஸ் காட்டுற

 

 

“சாப்பிடு முதல்ல, சீக்கிரமா வீட்டுக்கு போ. இப்போ போனா தான் கொஞ்ச நேரம் தூங்குறதுக்கு வசதியா இருக்கும். மது இங்கயே இருக்கட்டும், உன் மாமியார்கிட்ட சொல்லிடு

 

 

“நான் காவ்யா வர்ற நேரத்துக்கு அவளை கொண்டு வந்து வீட்டில விட்டுட்டு போறேன் சரியா. உனக்கு இன்னொரு தோசை சுடட்டுமாடி. பசியோட இருக்க போல கடகடன்னு காலி பண்ணிட்ட, நான் அதை கூட பார்க்காம வெட்டியா பேசிட்டு இருக்கேன் பாரு என்று உள்ளே செல்ல எழுந்தாள் சுஜி.

 

 

“அம்மா தாயே போதும்டி இதுக்கு மேல சாப்பிட வயித்துல எனக்கு இடமில்லை. இதுவே புல்லாகிடுச்சு என்றுவிட்டு எழுந்தாள் மித்ரா.

 

 

“ஆமா இவ ரொம்ப சாப்பிட்டு சாப்பிட்டு பூசணிக்காய் சைஸ் ஆகிட போறோம்ன்னு பயம். என்ன இருந்தாலும் என்னை மாதிரி வருமா, மீ ஜீரோ சைஸ் ஆச்சே என்று சுஜி கூறவும் மித்ரா விழுந்து விழுந்து சிரித்தாள்.

 

 

உண்மையில் சுஜி சற்று பூசிய உடல்வாகு மித்ரா தான் ஒரு பிள்ளை பிறந்த பிறகும் கூட இன்னமும் ஜீரோ சைஸில் இருப்பவள். ஒடித்தால் விழுந்துவிடுவாள் போல் இருக்கிறாள் என்று சுஜி கூட கிண்டல் செய்வாள்.

 

 

“அப்புறம் சொல்லு பெருமாள் அண்ணா எப்போ வர்றாங்க என்றாள் தோழியிடம்.

 

 

“வரேன் வரேன்னு சொல்லி வரவே மாட்டேங்குறார்டி கடுப்பா இருக்கு. அங்கேயே தான் இருக்க போறோம்ன்னா எங்களையாச்சும் கூட்டிட்டு போகணும். இதோ அதோன்னு தினமும் ஒரு கதை சொல்லி எனக்கு பீதியை கிளப்புறதே அவருக்கு வேலையா போச்சு

 

 

“அண்ணா தினமும் உன்கிட்ட பேசுறது உனக்கு பீதியா இருக்கா இரு இரு அண்ணாகிட்ட சொல்றேன் என்று மிரட்டினாள் மித்ரா. “உன் மேல பாசம் இருக்க போய் தான் ஏதோவொரு சாக்கு வைச்சு உனக்கு தினமும் பேசுறார்

 

 

“நீயாச்சும் பரவாயில்லை அண்ணா பேசுறார் உன்கிட்ட, உங்க அண்ணன் ஒரு நாளும் அவரா எனக்கு பேசினதில்லை. அப்படி அவரா பேசினா ஒண்ணு டிக்கெட் போடு, இல்லை காசு போடு இது தான் சொல்லுவார்

 

 

“வெறுப்பா இருக்குடி தினமும் வேலைக்கு போயி அப்படியும் இப்படியும் கஷ்டப்பட்டு ஒரு மெக்கானிகல் வாழ்க்கையா இருக்கு. பெரும்பாலான நேரத்தை நான் மெஷினோடவே கழிக்கறனோன்னு இருக்கு

 

 

“ஒரு படத்துல ஹீரோ சொல்லுவாரே என்னோட வாழ்க்கையை நான் திரும்பி பார்த்தா அதுல மொத்தமும் நீங்க தான் இருப்பீங்கன்னு அவரோட அப்பாவை சொல்லுவார். எனக்கும் அப்படி தான்டி இருக்கு ஒரு நாள் என் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது இந்த மெஷின் தான் இருக்குமோன்னு தோணுது

 

 

“எனக்கே எனக்காகன்னு நான் என்னைக்கு தான் வாழப்போறேன்னு தெரியலை. மது மட்டும் இல்லைன்னா நிச்சயம் பாலைவனமா தான் இருக்கும் என்னோட வாழ்க்கை

 

 

“அவ பேரை போலவே என்னோட வாழ்க்கைக்கு இனிமை சேர்க்க வந்தது அவ தான்ல சுஜி. அவளுக்கு கூட நான் என்ன செய்யறேன், சின்ன குழந்தை அவ கூடவே இருந்து நேரம் செலவழிக்க கூட முடியலை. அதை நினைச்சா எவ்வளவு கில்டியா இருக்கு தெரியுமா?? குழந்தைக்காக கூட நான் ஒரு நாள் அதிகமா விடுப்பு எடுத்ததில்லை

 

 

தோழி இதற்கு மேல் பேசினாள் அழ ஆரம்பித்துவிடுவாள் என்று உணர்ந்த சுஜி அவள் பேச்சை மாற்ற முயற்சி செய்தாள். “உங்கண்ணன் என் மேல பாசமா போன் பண்றாங்க அடி போடி

 

 

“ராஜா அண்ணன் போல இவரும் பேசாமலே இருக்கலாம். பேசி கொல்றதை விட பேசாமலே இருக்கலாம் என்றாள் சுஜி.

 

 

மித்ராவிற்கு தெரியும் சுஜி இதை வாய் வார்த்தையாக கூறுகிறாள் என்று. அவளுக்கு ஒரு நாள் பெருமாளிடம் பேசாமல் போனாலும் உலகமே நின்றுவிடும் என்று.

 

 

“சரி சரி நீ சொன்னதை நான் நம்பிட்டேன் என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள் மித்ரா. தன்னையே வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்த சுஜியை பார்த்து “என்னடி அப்படியே பார்த்திட்டே இருக்கே?? இந்த பார்வை எல்லாம் அண்ணாகிட்ட வைச்சுக்கோ என்கிட்டே எதுக்கு?? என்றாள்

 

 

“சரி இந்த கதை அந்த கதை எல்லாம் விடு. இப்போ உன் கதைக்கு வருவோம். நான் ஏன் அப்படி பார்த்தேன்னா உன்னை பார்த்தா அவள் ஒரு தொடர்கதை சுஜாதா மாதிரி சமயத்துல எனக்கு தோணுது

 

 

“ஏன்டி உனக்கு அப்படி தோணுது?? அவர் என்ன குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்றாரா என்ன?? என்று தோழியை முறைத்தாள் மித்ரா.

 

 

“அடியேய் அதுல சுஜாதாவோட அண்ணன் தான் அப்படி இருப்பார். நான் மொத்த கதையும் அப்படி சொல்லலை. நீ இப்படி ஓயாம உழைக்கறதை பார்த்தா அப்படி தோணிச்சு அதான் சொன்னேன்

 

 

“ஹேய் ஹேய் மித்ரா உன்னோட கதையை எனக்கு மறுபடியும் சொல்றியா என்றாள் சுஜி.

 

 

“என்ன கதையை மறுபடியும் சொல்லணும்?? என்றாள் மற்றவள் புரியாமல்

 

 

“அதான் உன்னோட கதை நீயும் அண்ணாவும் கல்யாணம் பண்ண கதை

 

 

“நீ அந்த கதையை எத்தனை முறை தான் கேட்ப. உனக்கு சலிக்கவேயில்லையா?? என் கதை ஒண்ணும் அவ்வளவு வொர்த் இல்லையே?? இதையே நீ இத்தனை முறை ஏன் கேக்குற??

 

 

“என்னது வொர்த் இல்லையா… எங்க என் முகத்தை பார்த்து சொல்லு. நீ அப்படியா நினைக்கிற?? அண்ணாக்கு எப்படியோ தெரியலை, நீ அவங்களை எவ்வளவு வொர்த்தா நினைக்கிறன்னு எனக்கு தான் தெரியும்

 

 

“சரி அதை விடு. எனக்கு தான் உன் கதை தெரியுமே, மத்த எல்லாருக்கும் தெரிய வேணாமா?? அதான் கேக்குறேன் மறுபடியும் ஒரு முறை சொல்லேன் உன் கதையை கேப்போம்

 

 

“சரி சொல்றேன் இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு. அதுக்குள்ள எவ்வளவு சொல்ல முடியுமோ சொல்றேன். பாதியில நான் கிளம்பிட்டா திட்டக்கூடாது ஓகே வா என்று டீல் பேசினாள் மித்ரா.

 

 

“அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சுஜி பதில் சொன்னாலும் அவளுக்கு தெரியும் மித்ரா ஒன்றை ஆரம்பித்தால் முடிக்காமல் விடமாட்டாள் என்று.

 

 

Advertisement