Advertisement

ஹரிகா க்ரான்ட் பேலேஸ்,

ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஐந்து நட்சத்திர விடுதி ஜகஜோதியாக ஜொலித்து கொண்டிருந்தது. அந்த விடுதியின் ஒரு பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி இடத்தில் மேடை போன்ற அமைப்பில் தன் இணையுடன் உட்கார்ந்திருந்தான் அஸ்வத். அவனுக்கு அருகில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தாள் ஹரிதா.

ராகவன், அஸ்வத்தின் தந்தை மற்றும் ஹரிதாவின் தாய் மாமா வந்தோரை ஒரு பக்கம் வரவேற்றுக் கொண்டிருக்க, அவரது தங்கையும் ஹரிதாவின் அம்மாவுமான பூர்ணிமா ஒரு பக்கம் வரவேற்றுக் கொண்டிருந்தார். அவர்களது தந்தை நம்பியப்பன் மற்றும் தாய் மரகதம் முன் வரிசையில் உட்கார்ந்து மேடையில் அவர்களுடைய பேரன் மற்றும் பேத்தியின் சந்தோஷ முகத்தை மகிழ்ச்சியுடன் அதே நேரம் இந்தச் சந்தோஷத்தைக் காண தங்களுடன் தங்களது மருமகனும் மருமகளும் இல்லையென்ற கவலையில் கண்ணில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, தீடிரென இருவரின் தோளிலும் கைப்பட, இருவரும் ஒரு சேர திரும்பிப் பார்த்தனர். அவர்களின் இளைய பேத்தி மற்றும் ராகவனின் செல்லப் பெண் ப்ரனவிகா சிரித்த முகமாக நின்று கொண்டிருந்தாள்.

நம்பியப்பன் வேகமாகக் கண்ணைத் துடைக்க, மரகதமும் அவருடைய கண்ணீரை உள்ளே இழுத்துக் கொள்ள, இதைக் கவனித்த ப்ரனவிகா,”எதுக்கு இப்போ இரண்டு பேரும் எமோஷ்னலா இருக்கீங்க? அம்மாவும் மாமாவும் நம்ம கூட வேணா இல்லாம இருக்கலாம். ஆனால் அவங்க ஆசீர்வாதம் எப்பவும் அண்ணாவுக்கும் அண்ணிக்கும் இருக்கும். நீங்கக் கவலப்படாதீங்க, அப்புறம் அப்பாவும் அத்தையும் ரொம்ப வருத்தப்படுவாங்க.” பெரிய மனிதர் போல் ப்ரனவிகா கூற, முதியவர்களுக்கு அவளின் பேச்சைக் கேட்டு சந்தோஷமே வந்தது.

“பெரிய மனுஷி சொல்லிட்டா கேட்டுக்கோங்க.” மரகதம் பாட்டி பேத்தியைக் கிண்டல் செய்ய,

“அவள் என்னோட பேத்தி, எப்பவும் என்னைப் போலத் தான் அறிவா பேசுவா. ஆனால் அதலாம் உனக்குப் புரியாது?” நம்பியப்பன் தன் பங்கிற்கு மரகதம் பாட்டியைக் கிண்டல் செய்ய,

“என் கூட சேர்ந்து நீங்களும் அழுதுட்டு இப்போ பேத்தி வந்ததும் அவள் பேச்சைக் கேட்டு கண்ணைத் துடைச்சுட்டு பேசுறதை பார்.” அலட்டாமல் பாட்டி தாத்தாவை வார,

“போடீ உனக்குப் பொறாமை என்னைப் பார்த்து.” தாத்தாவும் பாட்டியை வார, சிறிது நேரம் அவர்களது கவலையை மறந்து சிரித்துக் கொண்டிருந்தனர் முதியவர்கள். அவர்களது சிரிப்பைப் பார்த்ததும் தான் ப்ரனவிகாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

“சரி இவ்ளோ நேரம் எங்க போயிருந்த ப்ரனி? பூர்ணி உன்னை காணோம்னு தேடிட்டு இருந்தா. நீங்கப் பண்ணக் கூத்துல அதை மறந்துட்டேன் நான்.” என்றவாறு ப்ரனவிகாவின் கையை அவரது கைக்குள் பிடித்துக் கேட்க,

“மரோ நான் என்ன பண்றது? ஹரிதா அண்ணி ரெடியாகுற வரைக்கும் என்னை விடவே இல்லை. இப்போ தான் நான் ரெடியாகி வந்தேன்.”

“அவளுக்கு எல்லா விஷயத்துக்கும் நீ வேணும். அப்படியே வளர்ந்துட்டா, சரி போய் உன் அத்தையையும் அப்பாவைவும் கூட்டிட்டு வா. அஸ்வத்தும் ஹரிதாவும் மேடைக்கு வந்துட்டாங்க. இவங்க இன்னும் அங்கேயே நின்னா எப்படி? சீக்கிரம் போய் கூப்பிடு, நிச்சியத்தை ஆரம்பிக்கனும்.” மரகதம் கூற, தலையைச் சரியென்று அசைத்துவிட்டு தரையில் விழும் அவளது உடையைத் தூக்கியும் தூக்காமல் தன் துள்ளல் நடையுடன் தந்தையையும் அத்தையையும் அழைக்கச் சென்றாள்.

நம்பியப்பன் ஓர் அக்கா, ஓர் அண்ணன் மற்றும் ஒரு தங்கையுடன் பிறந்தவர். அவரது தந்தை என்ன நினைத்தாரோ ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆனதும் அந்தக் காலத்திலே அவருக்குச் சொத்துக்களாக என்ன இருந்ததோ அதைப் பிரித்துக் கொடுத்துவிட்டார். நம்பியப்பனுக்கு மரகதம் உடன் திருமணம் முடிந்ததும் கிடைத்தது ஐந்நூறு சதுரடி நிலம்.

நம்பியப்பன் பத்தாவது வரை மட்டுமே படித்தார். அதன்பிறகு ஓர் உணவகத்தில் வேலைக்குச் சென்றுவிட்டார். திருமணத்திற்குப் பிறகுத் தன் தந்தை கொடுத்த நிலத்தில் சொந்தமாக உணவகம் ஆரம்பிக்க வேண்டும் என்று யோசனை கொண்டார். ஆனால் அவரால் உடனே கட்டிடம் கட்ட பணமில்லை. அதனால் அவர் முடங்கவில்லை, உடனே அந்த நிலத்தில் கூரை போட்டு ‘நம்பி பவன்’ ஆரம்பித்தார். மரகதமும் அவருக்கு உதவியாக இருக்க, இரண்டே வருஷத்தில் கட்டிடம் கட்டும் அளவு தொழில் முன்னேற்றம் அடைந்தது. இப்பொழுது நம்பி பவன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மக்களால் விரும்பப்படும் சைவ உணவகமாக வளர்ந்துள்ளது.

அஸ்வத் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே தன் தாத்தா மற்றும் தந்தையிடம் ஐந்து நட்சத்திர விடுது ஒன்றைக் கட்ட வேண்டுமெனக் கூற, முதலில் நம்பியப்பன் வேண்டாம் என்று கூறிவிட, அஸ்வத்தும் விட்டுவிட்டான். ஆனால் அவன் முழுதாக விடவில்லை. பள்ளிப் படிப்பை முடித்ததும் தாத்தாவிடம் சமத்தாகப் பேசி அவரின் சம்மதத்தை வாங்கிவிட, உடனேயே இடம் பார்த்து அஸ்வத்தின் ஆசைப்படி உருவானது தான் ஹரிகா க்ரான்ட் பேலேஸ். தன் ஆசை தங்கையின் பெயரையும் அன்புக் காதலியின் பெயரையும் இணைத்து அந்த விடுதிக்கு வைத்துவிட்டான்.

ப்ரனவிகா தன் அப்பா மற்றும் அத்தையை அழைத்துக் கொண்டு வர, நிச்சயம் இனிதே தொடங்கியது. அஸ்வத்தும் ஹரிதாவும் மோதிரம் மாற்றிக் கொள்ள, ப்ரனவிகா தன் கையில் உள்ள பார்ட்டி பாப்பர்ஸை வெடிக்க வைக்க, திடீரென கேட்டச் சத்தத்தில் சிறிதாகப் பயந்துவிட்டாள் ஹரிதா.

“அட என்ன அண்ணி இதுக்கே பயந்தா எப்படி? அடுத்து ஆயிரம் வாள சரவெடி வெடிக்கலாம்னு இருக்கேனே.” ஹரிதாவிற்கு பட்டாசு என்றால் பயம். அதனால் ப்ரனவிகா ஹரிதாவை வம்பிழுக்க,

“அச்சோ ப்ரனி ஏன் இப்படிப் பண்ற? அதலாம் வேண்டாம். அத்தான் நீங்களாவது சொல்லுங்க வேண்டாம்னு.” ப்ரனவிகா உண்மையாகக் கூறுகிறாள் என்று நம்பி, விட்டால் அழுதுவிடுவேன் என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு ஹரிதா கூற,

“அட ஹரி அவள் உன்னைக் கிண்டல் அடிக்கிறா. வெடிலாம் எதுவும் வெடிக்கலை. உனக்குப் பயம்னு தெரிஞ்சு நான் அதைச் செய்ய விடுவேனா?” அஸ்வத் ஹரிதாவின் கையைப் பற்றிச் சமாதானப்படுத்த, ப்ரனவிகா சிரித்துவிட்டாள்.

“அச்சோ பச்சைக் குழந்தை. இப்போலாம் பிறக்கிற குழந்தை கூட கையில பட்டாசை வெடிக்கும். நீ என்னடானு இந்த பார்ட்டி பாப்பர்ஸ்கே பயப்படுற. இரு நாளைக்கு என் மருமகனோ, மருமகளோ பிறந்ததும் அது கையால பட்டாசைத் தூக்கிப் போட்டு வெடிக்கக் கத்துக் கொடுக்கிறேன்.” ஹரிதாவை சீண்ட ப்ரனவிகா கூற,

ஹரிதா, ப்ரனவிகாவைப் பார்த்து முறைத்து,”போ டீ. நா என் குழந்தையை உன் கையிலயே தர மாட்டேன்.”

“நீ எதுக்கு தரனும் நானே எடுத்துப்பேன்.” என்று ப்ரனவிகாவும் கூற, இருவரும் மாறி மாறிப் பேச, அஸ்வத் தலையில் கை வைத்து அய்யோ என்று முழிக்க,

“அட இரண்டு பேரும் என்ன இது சின்ன பிள்ளங்க மாதிரி? பாருங்க எல்லாரும் உங்களைத் தான் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்காங்க.” பூர்ணிமா கூறவும் சுற்றம் உணர்ந்து அமைதியாகினர்.

ஹரிதாவும் ப்ரனவிகாவும் நகமும் சதையும் மாதிரி. இருவரும் என்றும் பிரிந்தது இல்லை. பூர்ணிமாவிற்கு காதல் திருமணம். அவளது கணவன் வீட்டில் ஒத்துக்க வில்லை. அதனால் கணவனுடன் தன் பிறந்த வீட்டில் தான் இருந்தார். அன்று ப்ரனவிகாவின் அம்மாவிற்கு காய்ச்சல், ராகவன் ஊரில் இல்லை என்று ஹரிதாவின் தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். திரும்பி வரும் பொழுது வேகமாக வந்த லாரி இவர்களின் மேல் ஏற, சம்பவ இடத்திலே ஹரிதா அப்பாவின் உயிர் பிரிய, ப்ரனவிகாவின் அம்மாவிற்குத் தீவிரச் சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் இருவரும் இறக்கும் பொழுது ப்ரனவிகாவிற்கு நான்கு வயது, ஹரிதாவிற்கு ஆறு வயது. ஹரிதா அப்பாவின் செல்லம். அவரோடு தான் பல நாட்கள் இருந்திருக்கின்றாள். அவரது இழப்பு அவளை மிகவும் பாதித்தது. அதை விட பூர்ணிமாவின் புகுந்த வீட்டினர் அவரை வார்த்தையால் திட்டிக் காயப்படுத்த அவரால் ஹரிதாவை கவனிக்க முடியவில்லை. அது ஹரிதாவை இன்னும் பாதிக்க, அவளால் ஒரு வருடம் பள்ளிக்கூடமே செல்ல முடியவில்லை. ஏற்கனவே அவளைப் பள்ளியில் தாமதமாகத் தான் சேர்த்தனர். இதில் ஒரு வருடப் படிப்பும் கெட, குடும்பத்தில் உள்ளவர்கள் ப்ரனவிகாவோடு ஹரிதாவை சேர்த்து விட்டாலாவது அவள் மகிழ்ச்சியாக இருப்பாள் என்று முடிவெடுத்து அவளை ப்ரனவிகாவோடு பள்ளி அனுப்பினர். அதிலிருந்தே இருவரும் ஒட்டிப் பிறக்காத இரட்டையர் போல் தான் இருந்தனர்.

அதற்காக அவர்களுக்குள்ள சண்டை வந்தது இல்லை என்று கூற முடியாது. நிறைய முறை சண்டையிட்டுள்ளனர், ஆனால் உடனேயே பேசி விடுவர். அதனால் பெரியவர்களும் இருவரின் சண்டைக்குள் வருவதில்லை. இன்று பொது இடத்தில் அதுவும் விசேஷ இடத்தில் என்று தான் பூர்ணிமா பேசியதும்.

நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்து அனைவரும் சாப்பிட்டு வீட்டிற்கு வந்து அக்கடா என்று படுத்தப் பொழுது தான் அவர்களின் சோர்வே தெரிந்தது ஒவ்வொருவருக்கும்.

~~~~~~~~~~

சென்னை மாவட்டத்தின், அடையார் பகுதியில் அமைந்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் மூன்றாவது வீட்டில் தான் குடியிருக்கிறான் பரத். அவன் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் கணினி பொறியாளர்.

அவனது அலுவல் நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஏழு மணி வரை. காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பும் அவன் இரவு எட்டு மணிக்குத் தான் வீடு திரும்புவான். அங்கு வசிப்பவர்கள் அந்த வீட்டில் அவன் மட்டுமே இருக்கின்றான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த வீட்டில் அவன் மட்டுமில்லை கூடவே அவனது நண்பன் இளமுகிலனும் அவனோடு தான் தங்கியிருக்கின்றான்.

இளமுகிலனின் சூழ்நிலை காரணமாக மூன்று வருடங்கள் முன்பு சொந்த ஊரை விட்டு சென்னை வந்தவன். பரத் அவனுடன் கல்லூரியில் படித்தவன் ஆனால் இருவரும் நண்பர்கள் கிடையாது. பரத் மெக்கானிக்கல் படித்துவிட்டு அவனது துறையில் வேலை கிடைக்கவில்லை என்று மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். இளமுகிலனோ கணினி பொறியியல் படித்தவன். அதனால் ஒருவரை ஒருவர் தெரியும் அவ்ளோ தான்.

சென்னை வந்த புதிதில் தன் கையிலிருந்த பணத்தை வைத்துக் கொண்டு ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தான் இளமுகின். அங்கு அவனால் பல நாட்கள் என்ன சில தினங்கள் கூட தங்க முடியவில்லை. யாரைப் பார்த்தாலும் பயம், எதைப் பார்த்தாலும் பயம். சாப்பிட வெளியே வேறு செல்ல வேண்டும். யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயம். அதனால் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவான். அப்படி ஒரு நாள் இரவு வெளியே ஒரு தள்ளு வண்டிக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் பரத் இவனைப் பார்த்து இவனிடம் பேச வந்தான்.

“ஹேய் நீ இளமுகில் தான?” கேட்டவாறு அவனது பக்கத்தில் ஸ்டூலை போட்டு உட்கார, இளமுகிலுக்கோ பயம். அது அவனது முகத்திலும் தெரிய, பரத் யோசனையாய் அவனைப் பார்த்தான்.

“என்னாச்சு? ஏன் இவ்ளோ பயம்? எதாவது பிரச்சனையா?” என்று பரத் கேட்க, இளமுகில் எதுவும் பேசவில்லை. சாப்பிடக் கூட இல்லாமல் தட்டைப் போடச் செல்ல, பரத் அவனது கையைப் பிடித்துத் தடுத்து,

“நான் பேசுனது உனக்குப் பிடிக்கலைனா நான் போயிடுறேன். நீ சாப்பிடு, சாப்பிடாம போகாத.” என்று கூறிவிட்டு அவன் எழுந்து செல்ல, அப்பொழுது தான் இளமுகிலிற்கு தன்னைத் தேடி அவன் வரவில்லை, எதார்த்தமாகத் தான் தன்னை இங்குப் பார்த்து விட்டுப் பேச வந்திருக்கின்றான் என்று புரிந்து அவனிடம் விரைந்து சென்றான்.

“பரத்..” என்று சத்தமாக அழைக்க, அவனது வாகனத்தில் ஏறச் சென்றவன் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

இளமுகில் வேகமாக அவனிடம் வந்து,”சாரி பரத். வேற ஒரு டென்ஷன். அதனால தான் உன்கிட்ட அப்படி நடந்துக்க வேண்டியதா போயிடுச்சு. வெரி சாரி.” மனமார மன்னிப்பு வேண்ட,

“இருக்கட்டும் இளமுகில். எனக்கும் புரிஞ்சது, அதான் உன்னைத் தொந்தரவு பண்ணாம நான் வந்துட்டேன்.”

“தாங்க்ஸ் டா. சரி நீயும் சாப்பிட்டு போ.” வாய் அவ்வாறு கூறினாலும் இன்னும் இளமுகிலிற்கு பயம் தெளியவில்லை. அதைப் புரிந்து கொண்ட பரத் எதுவும் அவனிடம் அடுத்துப் பேசாமல் வேகமாகச் சாப்பிட்டு விட்டு நகர்ந்துவிட்டான்.

நாட்களும் நகர்ந்தன, கையில் உள்ள காசும் குறைந்து கொண்டே இருந்தது. வேலைக்குப் போக வேண்டும் என்றால் வெளியே செல்ல வேண்டும். அவனிடம் மடிக்கணினி இல்லை. இருந்திருந்தால் அறையிலிருந்தே வேலைச் செய்திருப்பான். அந்த அறையில் உள்ளவர்களும் அவனை ஒரு மாதிரியாகத் தான் பார்த்தனர். ஏன் என்றால் வந்த நாளிலிருந்து யாரிடமும் அவன் பேசவுமில்லை. வேலைக்கும் போகவில்லை. அவன் எல்லாரையும் பயந்த பார்வையுடன் பார்க்க, அவர்களும் அவனிடம் பேசவில்லை. அதனால் அவர்களிடம் உதவியும் கேட்க முடியவில்லை. மறுபடியும் ஒரு நாள் வெளியே சென்ற சமயம் பரத்தை பார்க்க, இன்று இளமுகிலே சென்று பேச, பரத்தும் நன்றாகவே பேசினான்.

அதற்குப் பிறகு பல முறை பரத்தை சந்தித்தான். அதன் பிறகு தான் அவனுக்கு பரத் மேலும் நம்பிக்கை வந்தது. இத்தனை முறை பார்த்தும் அவனைப் பற்றி பரத் எதுவும் கேட்கவில்லை. அதே போல் அவன் பயந்தது போல் எதுவும் நடக்கவுமில்லை. அந்த நம்பிக்கையில் இளமுகிலன் அவனிடம் சகஜமாகப் பேசத் தொடங்கினான். யாரிடமாவது அவனது மனப்பாரங்களை கூறினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, பரத்திடம் கூறலாம் என்று முடிவு செய்து ஒரு நாள் இளமுகிலனே அவனது பிரச்சனை அனைத்தையும் பரத்தை நம்பி அவனிடம் கூறி விட்டான். அடுத்த நிமிடம் அவனுடன் அவன் தங்கியிருந்த மேன்ஷன் சென்று அவனது அறையை காலி செய்ய வைத்து அவனோடு தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

இளமுகிலன் பரத் வீட்டிற்கு வந்தாலும் வாடகைப் பணத்தில் பாதி அவன் தந்துவிடுவேன் என்று கூறியே தான் வந்தான். அதே போல் முதல் மாதம் அவன் கையிலிருந்த பணத்திலிருந்து கொடுத்து விட்டான். அடுத்த மாதத்திற்குச் செலவுக்குப் பணம் வேண்டும். அதற்கு முன்பு அவனுக்கு வேலை வேண்டும். வெளியே போகாமல் எப்படி வீட்டிலிருந்தே வேலை செய்ய என்று அவன் யோசிக்க, பரத்தே அதற்கும் தீர்வைக் கூறி விட்டான்.

வீட்டிலிருந்தே ப்ரீலேனஸ்ராக பணியாற்று என்று பரத் யோசனை கூற இளமுகிலனுக்கும் சரியென்று தோன்றியது. ஆனால் அதற்கு மடிக்கணினி வேண்டும். பரத்திடமே தவணையில் ஒரு மடிக்கணினி வாங்கித் தரச் சொல்ல, பரத்தோ முழு பணத்தையும் போட்டு வாங்கிக் கொடுக்க, இளமுகில் முதலில் கோபப்பட்டாலும் பின்பு தவணை முறையில் பரத்திற்கு பணம் தந்துவிடுவேன் என்று கூறியே அவனிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

இளமுகில் வீட்டிலிருந்து வெளியே வராமல் மடிக்கணினி மூலம் பரத் கூறியபடியே வேலை தேடிக் கொண்டான். எந்தக் காரணத்துக்காகவும் அவன் வெளியே வர மாட்டான். காய்ச்சல் என்றால் கூட பேரசிட்டாமல் போட்டுக் கொண்டு தூங்கிவிடுவான். எதாவது தேவை என்றாலும் பரத் தான் வாங்கி வருவான். அதனால் இளமுகில் மூன்று வேலையும் சமைத்து விடுவான், அதே போல் வீட்டு வேலையும் இளமுகிலனே செய்து விடுவான்.

பரத் கூட ஒரு முறை,”டேய் சமைக்கிறதோடு நிப்பாட்டு டா. அதுவும் நீ நல்லா சமைக்கிறதுனால, வீட்டு வேலை எல்லாம் வேண்டாம். நான் வந்ததுக்கு அப்புறமா சேர்ந்து செய்துக்கலாம்.” என்று கூற,

“ப்ச் நான் வீட்டுல சும்மா தான் இருக்கேன். நீ வேலை முடிச்சுட்டு வரும் போது அவ்ளோ டையர்டா வர, அதுக்கு அப்புறம் வீட்டுலயும் வேலை செய்யவா? அதலாம் வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். இந்த வீடு என்ன பெருசாவா இருக்கு? இரண்டு ரூம், சமையல் கட்டு, அப்புறம் ஹால் அதுவும் குட்டியா தான இருக்கு, எனக்குப் பிரச்சனை இல்லைடா. அப்புறம் துணி, நீ தான் வாஷிங் மெஷின் வாங்கி போட்டுருக்கியே! பாத்திரமும் இரண்டு பேருனால கம்மியா தான் இருக்கு. ஸோ எனக்குப் பெரிய விஷயமா தெரியலை. ஏதாவது வேலை செஞ்சா நானும் எதுவும் நினைக்காம இருப்பேன் டா.” என்று கூறிவிட, பரத்தும் சரியென்று விட்டுவிட்டான்.

இளமுகில் சீக்கிரமே எழுந்துவிடுவான். கொரோனா வந்தது யாருக்காவது சாதமாக இருந்தது என்றால் அது இவனுக்குத் தான். ஏனென்றால் கொரோனாவிற்குப் பிறகு தான் எல்லாரும் முகத்தில் மாஸ்க் அணிகின்றனர். அதனால் இவன் முகத்தில் மாஸ்க் போட்டால் யாரும் குறிப்பாக அவனைப் பார்க்க மாட்டார்கள். அதுவும் வெளியே செல்ல மாஸ்க் போட மாட்டான், உடற்பயிற்சி செய்வதற்காக மாஸ்க் போடுவான். முகத்தில் மாஸ்க்கும் தலையில் தொப்பியும் அணிந்து கொண்டு மாடியில் போய் யாரும் வருவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்து விடுவான். பின்பு வீட்டிற்கு வந்து காலை உணவு, மற்றும் பரத் அலுவலகத்திற்கு மதிய உணவு எடுத்துக் கொண்டு செல்வதால், மதிய உணவையும் காலையிலே செய்து முடித்து விடுவான். பின்பு குளித்து விட்டு வர, பரத்தும் தயாராகி வர, காலை உணவு இருவரும் சேர்ந்தே சாப்பிடுவர். அதன்பிறகு பரத் வேலைக்குச் சென்றுவிட, இளமுகில் வீடு கூட்டி, பாத்திரம் கழுவி, துணியை மெஷினில் போட்டு விட்டு, அவனது மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அவனது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவான். பின்பு ஏழு மணி போல் இரவு உணவு செய்ய ஆரம்பிக்கச் சரியாக அவன் முடிக்கும் நேரம் பரத் வந்துவிடுவான். இருவரும் பேசிக் கொண்டே சாப்பிடுவர். அதன் பிறகு பரத் அவனது குடும்பத்திடம் ஃபோனில் பேச, அதைப் பார்க்கும் இளமுகிலிற்கும் அவனது குடும்பம் ஞாபகம் வரும். அதே நேரம் வேண்டாத சில விஷயங்களும் ஞாபகம் வரும். உடனே கவனத்தைத் திசைத் திருப்பிடுவான். இது மட்டும் தான் கடந்த மூன்று வருடங்களாக இளமுகில் வாழ்வில் நடந்து கொண்டிருக்கின்றன.

~~~~~~~~~~

திருச்சி மாவட்டத்தின், மேற்குப் பகுதியின் சட்டசபை உறுப்பினர் தான் தில்லை சங்கர். அவரது முழுப் பெயர் சங்கர் தான். தில்லை நகரில் வசிப்பதாலும் அவரது கட்சியில் இன்னொரு சங்கர் இருப்பதாலும் அவரை தில்லை சங்கர் என்று அழைக்கின்றனர். அவரது கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த முறை அமைச்சர் ஆகியிருப்பார். ஆனால் அவரது போதாத காலம் அவரது கட்சி தோல்வியைச் சந்தித்து விட்டது. அதனால் வெறும் சட்டமன்ற உறுப்பினர் தான்.

அவரது வீட்டில் அன்று ஒரே சத்தமாக இருக்க, அவரோ முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருக்க, அவரது மனைவி கவிதாவோ அவரை முறைத்துக் கொண்டிருந்தார்.

“அப்பா நீங்க எம்.எல்.ஏ. வா இருந்து என்ன ப்ரியோஜனம்? மூணு வருஷமா ஒருத்தனை தேடிட்டு இருக்கீங்க, இப்போ வரைக்கும் அவனைப் பத்தி எதுவும் தெரியலை! என்னோட நிலைமை புரிஞ்சும் நீங்க இப்படி அமைதியா இருக்கிறது நல்லது இல்லை அப்பா.” அவரது சீமந்த புத்திரி திவ்யா சங்கரிடிம் கேட்க,

அவரோ,”என்ன டா இப்படிச் சொல்லிட்ட? அப்பா நீ கேட்டது எதுவும் செய்யாம இருந்திருக்கேனா? அவன் எங்க இருக்கானே தெரியலை டா. கண்டிப்பா அவன் வெளிநாட்டுக்குப் போகலை. அது எனக்கு நல்லா தெரியும். இங்கத் தான் அவன் எங்கேயோ இருக்கான். ஆனால் எங்கனு தெரியலை. அப்பா என்ன செய்றது சொல்லு.” சிறுபிள்ளைக்குக் கூறுவது போல் பொறுமையாக அவளிடம் விளக்கமளிக்க,

“சும்மா சாக்குப் போக்கு சொல்லாதீங்க அப்பா. எப்படிப்பா மூணு வருஷம் ஒருத்தன் யார் கண்லயும் படாமல் இருக்க முடியும்? நீங்க சீரியஸா தேடலை. அப்படித் தேடியிருந்தா கண்டிப்பா அவன் கிடைச்சுருப்பான்.” ஆவேசமாக திவ்யா கூற,

“இல்லை டா மா உனக்கே தெரியும் இரண்டு வருஷமா கொரோனா, ஊரடங்கு, விதிவிலக்குனு நிறைய இருந்ததால என்னால ஒன்னும் செய்ய முடியலை. இன்னும் கொஞ்ச நாள் டைம் தா, அதுக்குள்ள அவன் எங்க இருந்தாலும் நான் கண்டுபிடிச்சுடுறேன்.”

“கிழிச்சீங்க. எதாவது சொல்லிட போறேன் அப்பா. போலிஸ்கிட்ட இருந்து தப்பிச்சு போயிருக்கான் அவன். இந்தக் கொரோனா காலத்துல அவங்களுக்கு எந்த தடையும் இல்லை தான? அவங்களால எப்படிக் கண்டுபிடிக்க முடியாம போச்சு?”

“திவி மா என்ன டா இப்படிப் பேசுற? நம்ம கேஸ் மட்டுமா அவங்க பார்க்கிறாங்க? அது மட்டுமில்லாம அவனோட எந்த ஐடி ப்ரூஃப்பும் அவன் உபயோகப் படுத்தவே இல்லை. அவனோட செர்ட்டிஃபிகேட் கூட எடுத்துட்டு போகலை. அவன் ஏற்கனவே வேலை செய்த இடத்திலும் விசாரிச்சாச்சு. அவன் வேலையை விட்டு எப்போவோ நின்னுட்டானாம். அவன்கிட்ட செர்ட்டிஃபிகேட் எதுவுமில்லாதனால கண்டிப்பா அவன் பெரிய கம்பெனில வேலைக்குப் போயிருக்க முடியாது. அவனைப் பிடிக்கிற மாதிரி நம்மகிட்ட எதுவுமில்லை. அதனால போலிஸ்க்கும் கொஞ்சம் கஷ்டமா இருக்குது மா.” பொறுமையாக சங்கர் பதிலளிக்க,

“நீங்க அரசியல்வாதில அதான் நல்லா பேசுறீங்க அப்பா. உங்க பேச்சு ஜாலத்தை எங்கிட்டேயே காட்டுறீங்க. அது தான் எனக்கு வருத்தமா இருக்கு. ஆனால் ஒன்னு உங்களுக்கு அவன் வேணும்னா அவனை எப்படியாவது கண்டுபிடிச்சுருப்பீங்க. ஆனால் தேவை எனக்குத் தான! அதான் இப்படிச் சாக்கு சொல்லுறீக்க. விடுங்க இனி நான் பார்த்துக்கிறேன்.” கோபமாகப் பேசிவிட்டு திவ்யா அவளது கைப்பேசியோடு நகர,

“போனவன் போனவனாவே இருக்கட்டும் டீ. இனிமேலாவது நான் சொல்றதைக் கேள். ஒழுங்கா என் அண்ணன் பையனைக் கல்யாணம் பண்ணிகிட்டு வாழுற வழியைப் பார்.” இதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கவிதா கூற,

திவ்யாவிற்கு எங்கிருந்து தான் அவ்ளோ கோபம் வந்ததோ பக்கத்திலிருந்த பூஜாடியை எடுத்து வீச, கவிதாவிற்கு பக்கத்தில் அந்த பூஜாடி விழ, ஒரு நிமிடம் பயந்து விட்டார் கவிதா.

“ஏய் என்ன டீ பண்ணிட்டு இருக்க?” ஆவேசமாக கவிதா கூறிவிட்டு அவளை அடிக்க வர,

சங்கர் அவரது கையைப் பிடித்துக் கொண்டு,”என்ன பண்ற கவிதா?”

“இதை நீங்க அவகிட்ட கேட்டுருக்கனும். கொஞ்சம் கூட மட்டுமரியாதை இல்லாம இப்படி என் மேல பூஜாடியை தூக்கி எறியிரா, நீங்களும் வேடிக்கைப் பார்த்து கிட்டு இருக்கீங்க. எல்லாம் உங்களால தான்.”

“ப்ச் அதான் மேல படலைல அப்புறம் எதுக்கு இப்படிக் கத்திட்டு இருக்கிற? அவளுக்குப் பிடிக்காதுனு தெரிஞ்சும் நீ பேசுனது தப்பு கவிதா.” மகளை அதட்டாமல் மனைவியைக் குறை கூற,

“உங்ககிட்ட போய் பேசுறேன் பாருங்க என்னை சொல்லனும். அப்பாவும் பொண்ணும் என்னமோ பண்ணுங்க.” என்றவாறு அவரது அறைக்குச் சென்று விட்டார்.

“அப்பா அம்மாகிட்ட சொல்லி வைங்க, இனி ஒரு தரம் அவங்க என்னோட கல்யாணத்தைப் பத்தி பேசுனாங்க அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன். அதே மாதிரி நீங்க செஞ்ச வரைக்கும் போதும். இனிமேல் நான் பார்த்துக்கிறேன். எவனை உங்களால கண்டுபிடிக்க முடியாதுனு சொன்னீங்களோ அவனை நான் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரேன். அப்புறம் பேசிக்கிறேன் நான் அம்மாகிட்ட.” என்றவாறு திவ்யா அவளது கைப்பேசி எடுத்து யாருக்கோ அழைத்துக் கொண்டே அவளது அறைக்குச் செல்ல, சங்கர் நிலைமை தான் பரிதாபமாக இருந்தது.

சங்கரின் பெரிய லட்சியமே அரசியலில் பெரிய இடம் செல்ல வேண்டுமென்பதே. அவரது அப்பா கடைசிவரை தொண்டராகவே இருந்து இறந்து விட, கடுமையாக உழைத்து கவுன்சிலர், எம்.எல்.ஏ என்று முன்னேறி இப்போது கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் இருக்கிறார்.

அவருக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் தவமிருந்து பெற்ற குழந்தை தான் திவ்யா. அவளை எந்த விதத்திலும் கஷ்டப்படவே விட மாட்டார். அவள் கேட்ட அனைத்து பொருள்களும் உடனே கிடைத்து விடும். அத்தனை செல்லமாக அவளை வளர்த்தார். கவிதாவைக் கூட ஒரு வார்த்தைச் சொல்ல விட மாட்டார். அனைத்துமே அவளது இஷ்டம் தான். திவ்யாவும் நிறைய விஷயங்களில் புத்திசாலியாகவே இருந்தாள். அவள் படிப்பிலும் கெட்டி. இதோ இப்பொழுது அவர்களது ஏற்றுமதி நிறுவனத்தை அவள் தான் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.

தனது அறைக்குச் சென்ற திவ்யா வேகமாக வெளியே வந்து அவளது அப்பாவைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தனது வண்டியை எடுத்துக் கொண்டு எங்கேயோ சென்று விட்டாள். வேகமாக வெளியே வந்த சங்கர் மகள் தனியாக வண்டி ஓட்டிக் கொண்டு போவதைப் பார்த்து அவரது ஆள் ஒருவனிடம் கண்ணைக் காட்ட, அவன் வேகமாக அவனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திவ்யாவின் பின் சென்றான்.

Advertisement