Advertisement

தேவிகா அவரது வீட்டில் தொலைக்காட்சியில் போட்ட செய்தியை மிகுந்த சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று வரை அவரைப் பயமுறுத்திய வழக்கு இன்று ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதை நினைத்து அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. தன் வீட்டில் சமையல் வேலைச் செய்யும் பெண்ணை அழைத்து,”இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால ஐயாகிட்ட காசை வாங்கிக்கோ. மார்கெட் போய் தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துரு. இன்னைக்கு எல்லாருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, நண்டுக் கறி, இரத்தப் பொறியல், முட்டை பொடிமாஸ், சாதம், அயிர மீன் குழம்பு, நெத்திலி வருவல் இப்படி என்.வீ. ல இருக்கிற எல்லாட ஐட்டமும் செஞ்சுடு.” என்று ஆர்ப்பாட்டத்துடன் கூறினார் தேவிகா.

அதையெல்லாம் கேட்டுக் கொண்டே அங்கே வந்த ஜகதீஷ் தேவிகாவிடம்,”என்ன தேவி ரொம்ப சந்தோஷமான மனநிலையில இருக்கப் போல? என்ன விஷயம் தேவி?” என்று கேட்டார்.

“என்ன எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறீங்க? அந்த ஆதன் கதை முடிஞ்சதுல, அந்தச் சந்தோஷம் தான் நான் தலை கால் புரியாமல் ஆடுறதுக்குக் காரணம்.” என்றார்.

“ஓ ஆமா தேவி. உண்மையிலே ரொம்ப நல்ல வேலைச் செஞ்சுருக்கான் பாண்டி.” என்றார் அவர்.

“என்னது பாண்டியா? நான் இவ்ளோ சந்தோஷமா இருக்கிறதற்குக் காரணம் எட்வின், பாண்டி கிடையாது. அவனால் நான் ஜெயிலுக்கு போற நிலைமை வந்துருக்கனும். நல்ல வேளை அந்த எட்வினால் பாருங்க கதையே மாறிப் போச்சு.” என்று மிகுந்த சந்தோஷத்துடன் கூறினார் தேவிகா.

சரியாக அப்போது பாண்டி அங்கு வர, தேவிகா வேகமாக அவனிடம் வந்து,”டேய் பாண்டி அந்த எட்வினை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லு.”என்று கூற, பாண்டி அதிர்ந்து பார்த்தான்.

“என்ன சொல்றீங்க மேடம்?” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டான். ஏனென்றால் தேவிகா பாண்டியைத் தவிர வேற யாரையும் அவர் வீட்டுக்கு அழைக்க மாட்டார். எதுவாக இருந்தாலும் பாண்டி மூலமே அனைத்தையும் செய்பவர் இன்று எட்வினை நேரில் பார்க்க அழைக்கின்றார் என்றால் அவருக்கு அவன் மேல் பற்றுதல் வந்துவிட்டது. இதை வளர விட்டால் தனக்கு ஆபத்து ஆகி விடுமே என்று யோசித்தான்.

அவன் பதில் பேசாமல் அப்படியே நிற்பதைப் பார்த்த தேவிகா,”என்ன பாண்டி எதுவும் பேசாமல் இருக்க? நான் சொன்னது காதுல விழுந்தது தான? போ போய் அந்த எட்வினை வரச் சொல்லு.” என்று கூறிவிட்டுச் சாய்விருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

பாண்டியும் வேறு வழியில்லாமல் எட்வினுக்கு அழைத்து வரச் சொன்னான். எட்வினும் கிளம்பி தேவிகாவின் வீட்டிற்கு வந்தான்.

அவன் உள்ளே நுழையவும் தேவிகா வேகமாக எழுந்து,”ஓ நீ தான் எட்வினா?” என்று கேட்டார்.

“ஆமா மேடம் நான் தான் எட்வின்.”

“ரொம்ப நல்ல காரியம் பண்ணிருக்க. எங்க யாருக்கும் தோனாத ஐடியா உனக்கு எப்படித் தோனுச்சு?”

“அந்த ராஜாவை வைச்சு தான் ஆதன் உங்களைப் பிடிக்க நினைச்சான். அவன் இல்லாமல் போனால் தான் இந்தக் கேஸுல சிக்கலை ஏற்படுத்த முடியும். அதே சமயம் ஆதன் அந்த ராஜா இல்லைனாலும் ஏதாவது பண்ணுவான். அவனை ஆஃப் பண்ண லாக்அப் டெத் தான் சரினு தோனுச்சு. அதான் அந்த ஐடியாவை உங்ககிட்ட சொன்னேன்.” என்று அவன் சாதாரணமாகக் கூற, அவனது அறிவை எண்ணி தேவிகா வியக்கத் தான் செய்தார்.

“உன்னை மாதிரி ஒருத்தன் முதல்லயே என் கூட இல்லைனு நான் ரொம்ப கவலைப்படுறேன். இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகலை, இனி நீ என்னோட ஆள்.” என்று தேவிகா கூறினார்.

அவன் அவரைப் பார்த்துச் சிரித்து,”ரொம்ப நன்றி மேடம்.” என்று கூறினான்.

“ம் இன்னைக்கு எங்க வீட்டுல தான் நீ சாப்பிடனும். ஒரு பெரிய விருந்தே தயார் படுத்தச் சொல்லிருக்கேன்.” என்றார் தேவிகா.

“இல்லை மேடம் சாரி, நான் இன்னைக்கு என்.வீ. சாப்பிட மாட்டேன்.” என்றான் எட்வின்.

“ப்ச் அப்படியே!! சரி அப்போ இன்னொரு நாள் நீ கண்டிப்பா சாப்பிடனும்.” என்றார் தேவிகா.

“கண்டிப்பா மேடம்.” என்று எட்வின் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான் எட்வின்.

~~~~~~~~~~

ஆதன் பற்றிய செய்திகள் காட்டுத் தீ போல் அனைத்துப் பகுதியிலும் பரவியது. அவன் ராஜாவை அடித்துக் கொலை செய்யவில்லை என்றாலும் அனைவரின் பார்வையிலும் ஆதன் தான் அதைச் செய்தான். எப்படி ஆதன் பற்றி அனைத்து ஊடகங்களும் செய்தியைப் பரப்பியதோ அதே போல் ராஜா பற்றியும் செய்திகளை மறக்காமல் பரப்பியது. அது தேவிகா மற்றும் எட்வின் கூட்டணிக்கு எதிராக அமைந்தது. ஆம் ராஜா பற்றிய செய்தி ஊடகங்களில் வந்தவுடன் சமூக வலைத் தளங்களில் ஆதனுக்கு ஆதரவாகப் பலர் தங்கள் கருத்துகளை முன் வைத்து #சூப்பர்காப்ஆதன் என்று ஹாஷ்டேக் செய்து அதை ட்ரென்ட் செய்யவும் வைத்தனர்.

இதை யாருமே எதிர்பார்க்க வில்லை. சமூக ஆர்வலர்கள், பெண்கள், பொது மக்கள் எனப் பலரும் ஆதனுக்கு ஆதரவாகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

அந்த நாளின் முடிவிற்கு முன்பே பலர் ஆதனிற்கு ஆதரவாகக் களம் இறங்கி விட்டார்கள். இவ்வாறு நடக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை தேவிகா.

அன்று மதியம் வரை இருந்த சந்தோஷம் அதன் இடம் தெரியாமல் போய் விட்டது தேவிகாவிற்கு.

அப்போது உள்ளே வந்த பாண்டி வேகமாக தேவிகாவிடம்,”பாருங்க மேடம் நான் ஆதனை தீர்த்துக் கட்டலாம்னு சொன்னேன். அப்படிச் செஞ்சுருந்தா இந்நேரம் எந்தப் பிரச்சனையும் வந்துருக்காது. அந்த எட்வின் பேச்சைக் கேட்டு இப்போ நிலைமை எப்படி மாறிடுச்சு பாருங்க.” என்றான் கோபமாக.

அவன் கூறியதில் உள்ள நியாயம் புரிய, உடனே எட்வினுக்கு அழைத்தார் தேவிகா.

“எட்வின் சோசியல் மீடியா பார்த்தியா? அந்த ஆதனுக்கு சப்போர்ட்டா நிறையப் பேர் ட்வீட், போஸ்ட்னு போட்டுட்டு இருக்காங்க. இதைச் சைபர் க்ரைம்ல சொல்லி தடுக்க முடியாதா? இதுல அவனோட ஹாஷ்டேக் ட்ரென்ட் ஆகி இப்போ இந்தியா முழுசா நியூசா வந்துட்டு இருக்கான். அது மட்டுமா அவனைப் பத்தி தான் எல்லாம் நியூஸ் சேன்னல்லயும் டிபேட் நடத்திட்டு இருக்காங்க. இப்போ என்ன பண்றது? இது அவனுக்குச் சாதகமா முடியாதா?” என்று கோபமாகக் கேட்டார் தேவிகா.

“மேடம் அவங்க எவ்ளோ வேணாலும் ட்ரென்ட் பண்ணட்டும். பட் சட்டம்னு ஒன்னு இருக்கு. அதன்படி கண்டிப்பா ஆதனுக்கு தண்டனைக் கிடைக்கும். நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க.” என்று நிதானமாகக் கூறினான் எட்வின்.

“எட்வின் கண்டிப்பா நடக்குமா? சப்போஸ் அவனுக்கு அவங்க தண்டனை தராட்டி? திரும்ப அவன் என் கேஸ்குள்ள நுழைவான்.”

“மேடம் அதெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை. அப்படியே அவனுக்குத் தண்டனைக் கிடைக்காட்டியும் உங்க கேஸ்ல அவன் நுழைய மாட்டான். அதுக்கான ப்ராசஸ்ஸை நான் பண்ணிட்டேன். நீங்கக் கவலையை விடுங்க.” என்றான் எட்வின்.

“என்ன சொல்ற நீ?”

“மேடம் அவன் ராஜாவை நெருங்கினதே அந்தச் சாமிக்கண்ணு அவனால் தான். நான் அவன்கிட்ட பேசிட்டேன். நாளைக்கு கமிஷ்னர் முன்னாடி சாமிக்கண்ணு ஆதன் சொல்லித் தான் ரம்யாவைக் கொலைப் பண்றதைப் பார்த்தேன்னு சொன்னேன்னு அவன் சொல்லுவான். அப்போ என்னாகும்? இந்த கேஸ் சூசைட்னு க்ளோஸ் ஆகிடும். அதனால அவன் திரும்ப ஸ்டேஷனுக்கு வந்தாலும் இந்த கேஸ்ல அவனால் ஒன்னும் பண்ண முடியாது. என் கிட்ட ஒரு வேலைக் கொடுத்தால் அதைத் தெளிவா முடிப்பேன். அதனால் எந்தக் கவலையையும் வேண்டாம்.” என்றான் எட்வின்.

“சூப்பர் எட்வின். இந்தப் பிரச்சனை எல்லாம் முடியட்டும் நான் உன்னை ஹெவியா கவனிக்கிறேன்.” என்று கூறிவிட்டு வைத்தார் தேவிகா.

~~~~~~~~~~

எப்படி வில்லன்கள் கூட்டணிக்கு ஆதன் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆவது தெரியுமோ அதே போல் சாத்விகா மற்றும் அவளது நண்பர்களுக்கும் அந்தச் செய்தி உவப்பைத் தந்தது.

“ராக்கி ஆதன் சார் ட்ரென்டாகிட்டு இருக்கார் பார்த்தியா?” என்று கேட்டாள் சக்தி.

“ம் பார்த்தேன் சக்தி. என்ன ட்ரென்ட் ஆனாலும் கமிஷன்ல நிவாஸூக்கு ஃபேவரா ஜட்ஜ்மென்ட் வராதுனு சொன்னார்.”

“என்ன இப்படிச் சொல்ற ராக்கி? அப்போ ஆதன் சார் என்ன பண்ணப் போறார்?” என்று கேட்டான் பிரபு.

“அவர் ஒரு ஐடியா வைச்சிருக்கார். அது படியா நடந்தால் கண்டிப்பா நிவாஸ் இதுல இருந்து எல்லாம் வெளில வந்துடுவார். ரம்யா கேஸூம் முடிஞ்சுடும்.” என்றாள் சாத்விகா.

அவள் கூறியதைக் கேட்ட அனைவருக்கும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஆதன் எந்தப் பிரச்சனையும் இன்றி அவர் மீண்டும் காவல் அதிகாரியாக வலம் வர வேண்டும் என்று மனதார நினைத்தனர்.

“அப்புறம் இன்னொரு விஷயம். நான் கொஞ்ச நாளுக்கு இங்க இருக்க மாட்டேன். என்னைக் கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணாதீங்க. அண்ட் சக்தி வீட்டை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கோ.” என்றாள் சாத்விகா.

“ஏய் எங்கே போகப் போற நீ?” என்று கேட்டான் ரவி.

“என்கிட்ட எதுவும் இப்போதைக்கு கேட்க வேண்டாம். நானே அந்த விஷயம் முடிஞ்சதும் சொல்றேன். ப்ளீஸ் வேற எதுவும் கேட்க வேண்டாம்.” என்று அவள் கூற, அவர்களும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

அலுவலகத்தையும் அவர்களையே அவள் வரும்வரை பார்த்துக் கொள்ளச் சொன்னாள். அவர்களும் அவள் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டனர்.

அன்றைய இரவு சாத்விகா தனக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு அவளது வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பினாள்.

சாத்விகா நேராக வந்த இடம் ஆதனின் வீட்டிற்குத் தான். அவன் இவளுக்காக வெளியே நின்று காத்துக் கொண்டிருந்தான்.

அவள் வரவும் வேகமாகச் சென்று அவள் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு அவளது தோளில் கைபோட்டு உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான்.

உள்ளே நுழைந்ததும்,”சாத்விகா நீ கண்டிப்பா போகனுமா? நல்லா யோசிச்சுக்கோ!!” என்றான்.

அவள் அவனைப் பார்த்துத் திரும்பி நின்று அவனது கண்ணை நேருக்கு நேராகப் பார்த்து,”இங்க பாருங்க நிவாஸ் நீங்க என்னைப் பத்தி நினைச்சு தேவையில்லாமல் பயப்படாதீங்க. எனக்கு ஒன்னும் ஆகாது. நீங்க இந்தக் கேஸ்ல இருந்து வெளில வந்தால் போதும். ப்ளீஸ் என்னை ஸ்டாப் பண்ணாதீங்க.” என்றாள்.

அவள் இவ்வளவு அழுத்தமாகக் கூறியதும் அவனுக்கும் வேறு வழியில்லை. சரியென்று ஒத்துக் கொண்டு அவளை அனைத்துக் கொண்டான். அவளது தோள்பட்டையில் தன் தாடையை வைத்துக் கொண்டு,”பார்த்து இரு பேபி. ஒரு வேகத்துல எதுவும் பண்ணிடாதா. உனக்காக நான் இங்கே காத்துட்டு இருக்கேன். அதை மட்டும் மறந்துடாதா சரியா.” என்றான்.

அவள் உடனே அவனை நிமிர்த்தி அவனது கண்ணத்தைத் தன் கரங்களால் தாங்கி,”நிவாஸ் நம்புங்க நான் பத்திரமா இருப்பேன். நீங்க இங்க இருக்கிற பிரச்சனையை சால்வ் பண்ணுங்க சரியா. மத்ததை நான் பார்த்துக்கிறேன். எனக்கு அப்படி ஏதாவது டேன்ஜர் தெரிஞ்சா உடனே நான் உங்களை கான்டேக்ட் பண்ணிடுறேன் சரியா.” என்றாள் அவள்.

மிகுந்த சிரமத்துடன் அவன் ஒத்துக் கொண்டான். பின்னர் அவளை அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்குச் சென்றான். அவள் போகப் போகும் இடத்திற்குத் தேவையான அனைத்தையும் பார்த்துச் செய்து கொடுத்து விட்டு மீண்டும் அவளுக்குப் பத்திரம் சொல்லிவிட்டு அவன் மட்டும் வீடு திரும்பினான்.

~~~~~~~~~~

அடுத்த நாள் காலையில் எழுந்த ஆதனிற்கு ஏனோ மனம் அடித்துக் கொண்டே இருந்தது. இரவு சாத்விகாவை அனுப்பியதில் இருந்து அவன் மனம் படப்படப்பாக அடித்துக் கொண்டே இருந்தது. சாத்விகாவிற்குத் தன் மேல் இருக்கும் காதலை நினைத்து அவனுக்கு மிகுந்த சந்தோஷம். இருந்தாலும் அந்தக் காதல் அவளது உயிரைக் காவு வாங்கிடுமோ என்று பயந்தான். இருக்கும் எல்லாக் கடவுளிடமும் அவள் பத்திரமாக இருக்க வேண்டுமென உடனே பிரார்த்தித்தான்.

அவன் கடவுளிடம் வேண்டுதல் வைத்த முடித்த அடுத்த நிமிடம் அவனது கைப்பேசி ஒலித்தது. அவனது அம்மா தான் அழைத்திருந்தார்.

ஒரு விதச் சலிப்புடன் எடுத்து,”சொல்லுங்க மா.” என்றான் குரலில் சுரத்தே இல்லாமல்.

“நீ பண்ண வேலையால என் அண்ணன் அவர் பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளைப் பார்க்கிறேன்னு சொல்லிட்டார். இப்போ நான் என்ன பண்ணுவேன்? பாலாஜி மாதிரி நீயும் ஒரு வேலைக்குப் போயிருந்தால் இந்த நிலைமை வருமா? கூடப் பிறந்த என் அண்ணனே உனக்குப் பொண்ணு தர ஒத்துக்கலை. இப்போ உனக்கு நான் எப்படிக் கல்யாணம் பண்ணி வைப்பேன் ஆதன்?” என்று பொரும ஆரம்பித்து விட்டார் ருக்மணி.

“அம்மா போலிஸ் வேலை என்னோட ட்ரீம். அதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியது இல்லை. அதனால எனக்குக் கல்யாணம் நடக்கலைனாலும் நான் கவலைப்பட மாட்டேன். இப்போ நான் இருக்கிற மனநிலையே வேற. இந்தப் பிரச்சனையை எப்படிச் சரி பண்ணனு எனக்குத் தெரியும். ஸோ ப்ளீஸ் அதுவரைக்கும் என்னைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க.” என்று கூறிவிட்டு அவர் பேச வாய்ப்பு அளிக்காமலே கைப்பேசியை வைத்து விட்டான்.

அவன் வைத்த பத்து நிமிடத்துலே மீண்டும் அழைப்பு வர, தன் தாய் தானோ என்ற எரிச்சலுடன் அவன் எடுக்க அழைத்தது கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து.

எதற்கு இப்போது அழைக்கிறார்கள் என்ற யோசனையுடன் அவன் எடுக்க, கமிஷ்னர் அவனைச் சந்திக்க விரும்புவதாக அவர்கள் கூறவும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டு வைத்து விட்டான்.

உடனே எழுந்து அவன் வேகமாகக் கிளம்பி வெளியே வர, செல்வம் நின்று கொண்டிருந்தார். அவரை யோசனையுடன் பார்த்தவன்,”என்ன செல்வம்?” என்று கேட்டான்.

“சார்…” என்று அவர் தயங்க, அவரைப் பார்த்துச் சிரித்தான் ஆதன்.

“இது எல்லாம் பெரிய விஷயம் இல்லை செல்வம். நான் பார்த்துக்கிறேன். நீங்கக் கிளம்புங்க. கண்டிப்பா இதுல இருந்து நான் மீண்டு வருவேன்.”

“சார் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எட்வின் இப்படிப் பண்ணுவார்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை.”

“விடுங்க செல்வம். நானும் யோசிக்கவே இல்லை. சரி என்னைக் கமிஷ்னர் வரச் சொல்லிருக்கார். நான் போயிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவனது வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்றதும் செல்வம் அவனைப் பாவமாகப் பார்த்து,”நல்லவங்களுக்கு தான் சோதனை வருது. ஆண்டவா நீ தான் ஏதாவது பண்ணனும்.”என்று அவரும் வேண்டுதல் வைத்து விட்டுக் கிளம்பினார்.

~~~~~~~~~~

ஆதன் கமிஷ்னர் அலுவலகம் வந்ததும் நேராக அவரைப் பார்க்க அவரது அறைக்குச் சென்றான். அங்கு எட்வின் சாமிக்கண்ணு உடன் நின்று கொண்டிருக்க, அவர்களைப் புரியாமல் பார்த்து விட்டு கமிஷ்னர் முன்பு வந்து சல்யூட் அடித்தான் ஆதன்.

அவர் மரியாதைக்குத் தலையசைப்பைக் கொடுத்து விட்டு,”நீ இப்படிப் பண்ணுவனு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை ஆதன்.” என்று அவர் கூற, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“சார் என்ன சொல்றீங்க? எனக்கும் ஒன்னும் புரியல.”

“நீ பேர் வாங்க என்ன வேணாலும் செய்வியா? சூசைட் கேஸ்ஸை மர்டர் கேஸ்னு மாத்தி அதுக்கு பொய்யான சாட்சியையும் தயார்படுத்திருக்க அப்படித் தான?” என்று கேட்டவுடனே அவனுக்குப் புரிந்தது எட்வின் சாமிக்கண்ணை வைத்து ஏதோ பொய் கூறி இருக்கிறான் என்று.

“சார் நான் எந்தப் பொய்ச் சாட்சியும் தயார் பண்ணலை. இது வரைக்கும் நான் என் வேலைக்கு எந்தத் துரோகமும் பண்ணலை. என்னை நம்புனவங்க தான் எனக்குத் துரோகம் பண்ணிருக்காங்க சார்.” என்றான் ஆதன்.

“இதை எல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை. ரம்யா கேஸ்ஸை நான் க்ளோஸ் பண்ணச் சொல்லிட்டேன்.” என்றார்.

“சார் ப்ளீஸ் என்னை நம்புங்க ரம்யா சூசைட் பண்ணலை. ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க சார்.”

“ஆதன் போதும்!! நான் உன்னை நம்புனதுக்கு. சாமிக்கண்ணு எல்லாத்தையும் சொல்லிட்டான். நீ அவன்கிட்ட அவனைத் தண்டனைல இருந்து காப்பாத்துறேன் சொல்லி பேரம் பேசியிருக்க. அப்படிச் செய்றதுக்கு ரம்யாவைக் கொலை தான் பண்ணாங்கனு சொல்லச் சொல்லிருக்க அப்படித் தான? எனக்கு எல்லாம் தெரியும். ஸோ ஸ்டாப் எவ்ரிதிங். நீ என்ன சொன்னாலும் இனி நான் நம்ப போறது இல்லை. உன்னை ஹானஸ்ட் ஆபிசர்னு தான் நினைச்சேன். பட் ஐ டின்ட் நோ யு ஆர் சச் அ கன்னிங் பெர்சன். உனக்காக நான் கமிஷன்ல பேசனும்னு நினைச்சேன். பட் நாட் நவ். யு கேன் கோ.” என்று அவர் கடுமையாகக் கூற, ஆதனுக்கு அடுத்து என்ன பண்ண என்று புரியவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து வெளியே வந்து விட்டான்.

Advertisement