Advertisement

ஆதனும் சாத்விகாவும் பீச்சிலிருந்து கிளம்பினார்கள். காரில் ஏறி அமர்ந்ததும் ஆதன் சாத்விகாவிடம்,”பேபி இப்போ வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறோம்? ஒன்னும் பண்ணப் போறது இல்லை. அதுக்கு நாம எங்கேயாவது அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டு அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போகலாமே!!” என அவன் கூற, சாத்விகா யோசித்தாள். அவன் சொல்வது போல் வீட்டிற்குச் சென்று ஒன்றும் செய்யப் போவது இல்லை. அதற்கு ஆதனுடன் நேரம் செலவழிக்கலாம் என்று தீர்மானித்து சரியென்று கூறினாள்.

அவள் சம்மதித்தது ஆதனுக்குப் பயங்கர சந்தோஷம். ஆனால் எங்குச் செல்வதெனப் புரியவில்லை. அதனால் அவளிடமிருந்து அவன் கார் சாவியை வாங்கிக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் ஆதன்.

“நானே ஓட்டுறேன் பேபி. அப்படியே ஒரு லாங் ட்ரைவ் போகலாமா?” என்று அவன் கேட்க, அவளும் தலையசைத்து சரியென்று கூற, ஆதன் விசிலடித்துக் கொண்டே வண்டியை இயக்கினான்.

ஆதன் ஒரு கையால் வண்டியின் ஸ்டீயரிங்கை பிடித்துக் கொண்டு மறு கையைச் சாத்விகாவின் விரல்களோடு கோர்த்துக் கொண்டு வண்டியை ஓட்டுக் கொண்டிருந்தான். சாத்விகா முதலில் சாலையைப் பார்த்து உட்கார்ந்திருந்தவள் சற்று நேரத்திலே அவனைப் பார்க்கும் படித் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். முதலில் அதைக் கண்டு கொள்ளாத ஆதன் அவள் அப்படியே உட்கார்ந்திருக்கவும் அவளிடம்,”ஓய் என்ன இப்படி உட்கார்ந்திருக்க? கழுத்து இடுப்பு எல்லாம் வலிக்குப் போகுது பேபி. நேரா உட்காரு டா.” என்றான் ஆதன்.

“ப்ச் அதெல்லாம் எதுவும் வலிக்காது நிவாஸ். எவ்ளோ நேரம் தான் ரோட்டையே பார்த்துட்டு இருக்கிறது அதான் ஒரு செய்ஞ்சுக்கு உங்களைப் பார்க்கிறேன்.”

“அடேய் இதெல்லாம் ஓவரா இல்லை உனக்கு? ஆனால் நீ இப்படிப் பார்க்கிறது எனக்கு டிஸ்டெர்பென்ஸா இருக்கு டா. என்னால சரியா வண்டி ஓட்ட முடியாது. அப்புறம் எங்கேயாவது கொண்டு போய் விட்டுட்டுவேன்.”

“பரவால நிவாஸ். உங்களோட எங்கே வேணாலும் வருவேன். அதே மாதிரி பரலோகம் போகனும்னாலும் வருவேன்.” அவள் சாதாரணமாகத் தான் கூறினாள். ஆனால் கேட்ட ஆதனுக்கு எப்படி செயலாற்றுவது எனப் புரியவில்லை. அவளது கையை அப்படி வாயருகே எடுத்துச் சென்று முத்தம் ஒன்று வைத்தான் ஆதன். ஒன்று மட்டும் மனதில் வந்து போனது ஆதனிற்கு, சாத்விகாவை தன் கடைசி உயிர்மூச்சு போகும் வரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று.

அவர்கள் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுக் கொண்டு வந்ததில் ஊரை விட்டு சில கிலோ மீட்டர் தூரம் வந்திருக்க, பின்பு தான் சுயம் பெற்று இவ்ளோ தூரம் வந்துவிட்டோம் என்றே தோன்றியது ஆதனிற்கு. சரி என்று அப்படியே வண்டியைத் திருப்பி மீண்டும் ஊருக்குள் வந்தான். இதிலே இரவு எட்டு மணியாகி விட, சரி சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து உணவகத்திற்கு வந்தார்கள்.

இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சாத்விகா வீடு வந்ததும் இருவரும் இறங்கினார்கள்.

“நிவாஸ் நீங்க காரை எடுத்துட்டு போங்க. நாளைக்கு மார்னிங் கொண்டு வந்து தாங்க, இல்லாட்டி நீங்க எப்போ ஃப்ரீயோ அப்போ கொண்டு வாங்க.” என்று அவள் கூற, அவன் மறுத்துத் தலையசைத்தான்.

“இல்லை பேபி, கார் இங்கேயே நிற்கட்டும். எனக்குக் கொஞ்சம் ஹெவியா சாப்பிட்ட ஃபீலிங் வருது. அதனால நான் அப்படியே நடந்து போயிடுறேன். இன்னைக்கு நான் எக்சர்சைஸூம் பண்ணவே இல்லை.” என்று அவன் கூற, அவள் அவனை வற்புறுத்தவில்லை.

“ஓகே நிவாஸ். நாளைக்கு மீட் பண்ணலாம்.” என்று அவள் கூற, ஆதன் சாத்விகாவை நெருங்கி வர, அவளோ பயமில்லாமல் அப்படியே நிற்க, அவளை அணைத்துக் கொண்டான் ஆதன். பின்பு அவளை விடுவித்து அவளது நெற்றியில் தன் முத்திரை ஆழமாகப் பதித்து விட்டு அவளிடம் விடைபெற்றுச் சென்றான் ஆதன்.

போகும் அவனையே சாத்விகா பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். ஏனோ அவளது மனம் வேகமாகத் துடித்தது. ஏதோ நடக்கக் கூடாதது நடப்பது போல் தோன்றியது. அவன் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றவள் அவன் போனதும் தான் உள்ளே சென்றாள்.

வீட்டிற்கு வந்த ஆதனிற்கு ஏனோ சாத்விகா நினைவு வராமல் காவல் நிலையத்தில் இருக்கும் ராஜா நினைவு தான் வந்தது. சரி அவனை ஒரு முறைப் பார்த்துட்டு விட்டு வரலாம் என்று எண்ணி வேகமாக வெளியே வந்து அவனது வண்டியை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றான் ஆதன்.

காவல் நிலையத்தை அடைந்த ஆதன் வண்டியை நிற்பாட்டி விட்டு உள்ளே நுழைந்தான். அங்கு அன்று இரவு நேரத்தில் பணியாற்ற வேண்டிய தியாகு, எட்வின் மற்றும் இன்னொரு காவல் அங்கு இருந்தனர். அந்த நேரத்தில் ஆதனை அங்கு எதிர்பார்க்கவில்லை அவர்கள். அதே போல் எட்வினை ஆதன் எதிர்பார்க்கவில்லை.

“என்ன எட்வின் இன்னைக்கு உனக்கு நைட் ட்யூட்டி இல்லையே அப்புறம் எதுக்கு இங்க இருக்க?” எனச் சந்தேகமாகக் கேட்டான் ஆதன்.

“இல்லை சார் மூர்த்திக்கு தான் நைட் ட்யூட்டி. அவரோட தூரத்து உறவுக்காரங்க யாரோ இறந்துட்டாங்களாம். அதனால் அவர் போகனும்னு என்னை மாத்திவிட்டு போனார் சார்.”

“ஓ அப்படியா!! ஓகே. ராஜாவைப் போய் பார்த்தியா? அவனுக்குச் சாப்பாடு எல்லாம் கரெக்ட்டா போகுதா?”

“எஸ் சார். இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சாப்பாடு கொடுத்துட்டு வந்தேன்.”

“ஓகே நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்று கூறிவிட்டு ராஜா இருக்கும் அறைக்குச் சென்றான் ஆதன். அங்கு ராஜா தெனாவட்டாக உட்கார்ந்திருந்தான். ஆதன் உள்ளே வந்தும் அவன் அப்படியே அமர்ந்திருக்க, ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு அவனுக்கு உணர்த்தியது. ஆனால் எதுவும் பேசாமல் அப்படியே வெளி வந்தான்.

வெளியே வந்தவன் அவனது அறைக்குச் சென்றான். எட்வின் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆதன் உள்ளே நுழைவதற்கு முன்பு எட்வினை வரும்படி சைகைச் செய்து விட்டுத் தான் உள்ளே நுழைந்தான். அதனால் எட்வினும் அவன் பின்னேயே உள்ளே வந்தான்.

எட்வின் உள்ளே நுழைந்ததுமே அவனை உட்காரச் சொன்னான் ஆதன். எட்வின் அமர்ந்ததும் ஆதன் அவனிடம்,”யாராவது ராஜாவைப் பார்க்க வந்தாங்களா?” என்று கேட்டான்.

“இல்லையே சார். யாருமே பார்க்க வரலை, அதை விட அவன் இங்க இருக்கிறதே யாருக்கும் தெரியாதே!!” எட்வின் கூறியதும் தான் ஆதனுக்கும் ஞாபகம் வந்தது. அவன் இங்கு இருப்பது யாருக்கும் தெரியாது.

“ம்!! எட்வின் நீ எதுக்கும் ஜாக்கிரதையா பார்த்துக்கோ!! எனக்கு என்னமோ ஏதோ தப்பா நடக்கிறது போலவே தோனுது. நானும் யோசிச்சு பார்த்துட்டேன் என்னன்னு தான் பிடிபடலை!! பேசாமல் நான் நைட் இங்கேயே இருந்துடலாம்னு இருக்கேன்.” என்று அவன் கூறியது தான் தாமதம் எட்வின் வேகமாக,”நோ சார்.” என்றான்.

அவனது இந்தச் செயல் ஆதனிற்குச் சந்தேகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவன் எட்வினைப் பயங்கரமாக நம்பினான். அதனால் அவனது இந்தப் பரபரப்பு அவனுக்கு வித்தியாசமாகப் படவில்லை.

“ஏன் எட்வின்?”

“இல்லை சார் இவனைப் பிடிக்கிறதுக்காக இத்தனை நாள் நீங்க முழிச்சு இருந்தீங்க. இன்னைக்கும் முழிச்சு உங்க உடம்பைக் கெடுத்துக்க வேண்டாம். நீங்கக் கிளம்புங்க சார், நான் தான் இருக்கேன்ல நான் பார்த்துக்கிறேன்.” என்று எட்வின் கூற, ஆதனுக்கும் உடம்பு அசதியாக இருக்க, எட்வின் பார்த்துப்பான் என்று நம்பி வீட்டிற்குக் கிளம்பினான் ஆதன்.

அவன் கிளம்பிச் சென்றதும் தான் எட்வினிற்கு நிம்மதியாக இருந்தது. வேகமாக அவனது கைப்பேசியை எடுத்து பாண்டிக்கு அழைத்து என்ன செய்ய வேண்டுமென்பதைப் பேசிவிட்டு உள்ளே நுழைந்தான். சரியாக இரண்டு மணிநேரம் கழித்து எட்வின் தியாகுவிற்கு கண்ணைக் காட்ட, அவர் உடனே எழுந்து சோம்பல் முறித்து,”இப்போ ஒரு டீ குடிச்சா சரியிருக்கும். எட்வின் உனக்கு வேணுமா?”

“இல்லை சார் எனக்கு வேண்டாம். நீங்க போய் குடிச்சுட்டு வாங்க. அப்படியே இவரையும் கூட்டிட்டு போங்க. பாருங்க எப்படித் தூங்கி வழியிறார்னு.” என்று எட்வின் கூற, தியாகு அவர்கள் உடன் இருந்த இன்னொரு காவலரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.

அவர்கள் சென்றதும் காவல் நிலையத்திலும் யாருமில்லை வெளியேவும் மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை நன்றாகப் பார்த்து விட்டு பாண்டிக்கு அழைத்தான். அவன் இவனது அழைப்புக்குக் காத்திருந்தவன் வேகமாக அதை எடுத்து எட்வினிடம் யாரும் காவல் நிலையத்தில் இல்லை என்ற தகவலைப் பெற்றுக் கொண்டு கல்யாண் மற்றும் வேலுமணியோடு ஆதனின் காவல் நிலையத்திற்கு வந்தான் பாண்டி.

காவல் நிலையத்தின் வாசலில் நின்றிருந்த எட்வின், இவர்கள் வருவதைப் பார்த்ததும் வேகமாக அவர்களிடம் வந்து அவன் கையிலிருந்த சாவியைப் பாண்டியிடம் கொடுத்து,”இது ராஜா இருக்கிற ரூம்மோட சாவி. அப்புறம் இன்னொரு விஷயம் சத்தம் வெளியே வரக் கூடாது. வந்த வேலையைச் சீக்கிரம் முடிச்சுட்டு அப்படியே கிளம்பிடுங்க. ஸ்டேஷனுக்குப் பின்னாடி தான வண்டியை நிப்பாட்டி வைச்சுட்டு வந்தீங்க?” என்று கேட்டான் எட்வின்.

“ஆமா, நாங்க வரதை யாரும் பார்க்கலை.”

“சந்தோஷம். சரி அப்படியே நிற்காமல் உள்ள போய் சட்டுப்புட்டுனு வேலையை முடிச்சுட்டு கிளம்புங்க.” என்று எட்வின் கூற, மூவரும் உள்ளே சென்றார்கள்.

சரியாக முக்கால் மணிநேரம் கழித்து வெளியே வந்தார்கள் மூவரும். எட்வின் அது வரை காவல் நிலையத்தின் வாசலில் தான் நின்றிருந்தான் யாரும் வருகிறார்களா என்று பார்க்க. இவர்கள் மூவரும் வருவதைப் பார்த்தவன்,”என்ன முடிஞ்சதா?”

“ம் ஆள் க்ளோஸ். மத்ததை நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறிவிட்டு பாண்டி கிளம்ப, கல்யாணும் வேலுமணியும் நாய்க்குட்டியைப் போல் பாண்டிப் பின்னாலே சென்றார்கள்.

அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளே வந்தான் எட்வின். வந்தவன் ராஜா இருந்த அறைக்குச் சென்று பார்க்க அவன் உடல் முழுவதும் இரத்தத்துடன் கண்கள் சொருகி தொய்ந்து போய் உயிரற்று இருந்த அவனைப் பார்த்ததும் தான் எட்வினிற்கு நிம்மதி வந்தது.

எதுவும் நடவாதது போல் அறையைச் சாற்றி விட்டு அவனது இருக்கையில் வந்து அமர்ந்தான். சரியாக தியாகுவும் இன்னொரு காவலரும் டீ குடித்து விட்டு அப்போது தான் உள்ளே வந்தார்கள்.

அரைமணி நேரம் கூடக் கடந்திருக்காது, காவல் வாகனத்தின் சத்தம் வெளியே கேட்க, மூவரும் அவசரமாக வெளியே வந்து பார்க்க, அங்கு கமிஷ்னர் வந்திருந்தார். மூவரும் அவருக்கு சல்யூட் வைத்து அவர்கள் மரியாதையா அவருக்குக் காட்ட, அவரோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வேகமாக உள்ளே நுழைந்தார்.

“இங்க என்ன நடக்குது?” என்று சத்தமாகக் கேட்டார் அவர். மூவருக்கும் அவர் எதைக் கேட்கிறார் என்று ஒன்றும் புரியவில்லை.

“சார் நீங்க என்ன கேட்கிறீங்க? எங்களுக்கு எதுவும் புரியலை!!” என்று தியாகு அவரிடம் கேட்டார்.

கமிஷ்னர் பதில் சொல்வதற்கு முன்பு வேகமாக அங்கு வந்தான் ஆதன். கமிஷ்னர் அவர் கிளம்பும் போதே ஆதனிற்கும் அழைத்து அங்கு வரச் சொல்லிவிட, அடித்துப் பிடித்து வந்தான் ஆதன்.

வேகமாக உள்ளே வந்தவன் எட்வினை ஒரு பார்வை பார்த்து விட்டு கமிஷ்னரிடம் சல்யூட் வைத்தான்.

“என்ன நடக்குது ஆதன்? நான் கேள்விப்பட்டது உண்மையா?”

“என்ன சார் எனக்கும் எதுவும் புரியலை?” என்று அவன் அவரிடம் கூறிவிட்டு எட்வினைப் பார்த்து என்ன என்று பார்வையாலே கேட்க, அவனோ தனக்கும் எதுவும் தெரியாது என்று கூறினான்.

“என்ன ஆதன் புரியாத மாதிரி நடிக்கிறியா? இல்லை நிஜமாவே புரியலையா?”

“சார் நிஜமா நீங்க என்ன கேட்கிறீங்கனு எனக்குப் புரியலை.” என்று கூறினான் ஆதன்.

“ராஜானு யாரையாவது அரெஸ்ட் பண்ணீங்களா?” என்று கமிஷ்னர் கேட்க, ஆதனுக்கு அதிர்ச்சி. இவருக்கு எப்படித் தெரியும் என்று அவன் யோசிக்க, கமிஷ்னரே மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்.

“என்ன ஆதன் எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறியா?” என்று கேட்டார் அவர்.

“சார் அது வந்து… அவன் ரம்யா கேஸ்ல…” என்று சொல்ல வந்த ஆதனை தடுத்தார்.

“இப்போ ராஜா எங்க?” என்று கேட்டார் கமிஷ்னர்.

ஆதன் வேகமாக அவன் இருக்கும் அறையைக் கை காட்ட, கமிஷ்னர் அந்த அறையின் சாவியைக் கேட்க, எட்வின் அதை ஆதன் அறையிலிருந்து எடுத்து வந்து கொடுக்க, கமிஷ்னரின் உதவியாளர் அந்தக் கதவைத் திறக்க, அனைவரும் உள்ளே சென்றனர்.

உள்ளே ராஜா இரத்த வெள்ளத்தில் உயிரற்ற சடலமாக இருக்க, அதைக் கண்ட ஆதனுக்குப் பயங்கர அதிர்ச்சி. இதைச் சுத்தமாக அவன் எதிர்பார்க்கவில்லை.

“இதுக்கு என்ன சொல்ல போற ஆதன்?” என்று கமிஷ்னர் கேட்க, முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் தான் இருக்கும் சூழ்நிலை அவனது நினைவில் வர, அவர் கேட்டதன் அர்த்தம் புரிந்தது.

“சார் எனக்கும் தெரியாது இது எப்படி நடந்துச்சுனு. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து பார்க்கும் போது கூட நல்லா தான் இருந்தான் சார்.”

“இங்கப் பார் ஆதன் இது எவ்ளோ பெரிய சீரியஸ் இஸ்ஸூ தெரியுமா? இது ஒன்னும் சாதாரண சாவுக் கிடையாது. இட்ஸ் லாக்அப் டெத். அதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை. இவன் குற்றவாளி தான் அதுக்காக நீ இவனை இப்படி அடிச்சே கொல்லாமா?” என்று அவர் கேட்க, ஆதனிற்கு அதிர்ச்சி.

“சார் நான் நெஜமா எதுவும் பண்ணலை. ஐ டின்ட் கில் ஹிம்.” என்று அவன் தரப்பு நியாயத்தை அவன் கூற, அதைக் காது கொடுத்துக் கேட்க கமிஷ்னர் தயாராக இல்லை.

“உன்னை நான் வேற மாதிரி நினைச்சேன். ஆனால் நீ வேற மாதிரியா இருக்க. சரி எஃப்.ஐ.ஆர். எதுவும் போட்டியா?”

“நோ சார்.”

“அப்போ இவனை இங்கக் கொண்டு வந்தது யாருக்கும் தெரியாது தான?”

“எஸ் சார்.”

“அப்போ சரி, எல்லாரும் கேட்டுக்கோங்க ஏற்கனவே நம்ம ஸ்டேட்ல லாக்அப் டெத்னால நிறையா அவமானங்களை இந்த போலிஸ் டிபார்ட்மென்ட் சந்திச்சுருக்கிறது. இவன் கெட்டவனா இருந்தாலும் அது எல்லாம் அந்த ஹ்யூமன் ரைட்ஸ் கமிஷனுக்கு தெரியாது. நம்மைத் தான் தப்புச் சொல்லுவாங்க. இவனை கிரிமனலா பார்க்காமல் ஒரு உயிரா தான் பார்ப்பாங்க. இவனை யாருக்கும் தெரியாமல் டிஸ்போஸ் பண்ணிடுங்க. இங்க இவன் இருந்த தடயமே இருக்கக் கூடாது. க்ளீன் இட் இமீடியட்லி.” என்று கூறிவிட்டு கமிஷ்னர் வெளியே வர, வேகமாக உள்ளே வந்தார் கமிஷ்னரின் ஓட்டுநர்.

“என்னாச்சு?”

“சார் வெளில ப்ரஸ் பீபிள் வந்துருக்காங்க.” என்று அவர் கூறவும் எட்வினை தவிர்த்து அனைவருக்கும் அதிர்ச்சி. இதைச் சுத்தமாக யாரும் எதிர்பார்க்கவில்லை.

“யார் ப்ரஸ்ஸூக்கு இன்ஃபார்ம் பண்ணது!! ப்ச் இது என்ன புது டென்ஷன்?” என்று ஆதனை முறைத்துப் பார்த்துக் கூறிவிட்டு வெளியே பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கச் சென்றார் கமிஷ்னர்.

ஆதன் அப்படியே ராஜாவின் சடலத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சுத்தமாக இப்படி நடக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை. அடுத்து என்ன செய்வதெனப் புரியாமல் மூளை மங்கிய நிலையில் தான் அப்போது இருந்தான் ஆதன்.

வெளியே பத்திரிக்கையாளர்கள் கமிஷ்னரிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டு வாட்டிக் கொண்டிருந்தனர்.

“சார் யாரோ கைதியை அழைச்சுட்டு வந்து போலிஸ் அடிச்சே கொண்ணுட்டதா சொல்றாங்க உண்மையா சார்?” என்று ஒரு நிரூபர் கேட்டார்.

“அந்தக் கைதி யார் சார்?” என்று மற்றொரு நிரூபர் கேட்டார்.

“எதுக்காக அவரைக் கைது பண்ணிக் கூட்டிட்டு வந்தீங்க? அவர் என்ன தப்புச் செஞ்சார்?” இது மற்றொருவர்.

“சார் அந்தக் கைதியை அடிச்ச போலிஸ் ஆபிசர் எங்க சார்?” இது இன்னொருவர்.

“லாக்அப் டெத் நம்ம ஸ்டேட்ல அடிக்கட்டி நடக்குது. இதுக்கு உங்க ரெஸ்பான்ஸ் என்ன சார்?”

“இப்போ நடந்த இன்சிடென்ட்க்கு நீங்க நடவடிக்கை எடுப்பீங்களா இல்லைனா உங்களோட டிபார்ட்மென்ட் நேம்மை காப்பாத்த மூடி மறைக்கப் போறீங்களா?” என்று தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க, கமிஷ்னர் அவரது கையை உயர்த்தி அனைவரையும் அமைதியாக இருக்கக் கூறினார்.

“எல்லாரும் அமைதியா இருங்க, எனக்கே இப்போ தான் விஷயம் தெரிஞ்சு நான் இங்க வந்தேன். நீங்களாம் அதுக்குள்ள எப்படி வந்தீங்கனு தெரியலை. சரி நீங்கக் கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் நாங்க இந்த கேஸ்ல என்ன நடந்துச்சுனு தீர விசாரிச்சு முடிவைச் சொல்றோம். இந்தக் கேஸ்கு தனியா கமிஷன் வைச்சு, முறைப்படி எல்லாம் நடக்கும். கண்டிப்பா எங்க டிபார்ட்மென்ட் ஆள்னு நாங்க பாரபட்சம் காட்ட மாட்டோம். இவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்.” என்று கூறிவிட்டு அவர் உள்ளே சென்று விட, மற்றக் காவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு உள்ளே நுழைந்தார்கள்.

Advertisement