Advertisement

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
சிறகு – 7

தை மாதத்தின் அற்புதமான பகல் பொழுதில் முதுகுளத்தூர் கிராமத்தின் அந்த குறிப்பிடத்தகுந்த வயல்வெளி…. இயற்கை அன்னை எழில்கொஞ்சும் தன் மேனியில் பச்சை ஆடைகட்டிக் கொண்டனளோ என்னும் அளவிற்கு நிலமெங்கும் செழித்து கொழித்து தலைத்திருந்த பசும் நெல்லில் தங்கத்தில் செய்து அலங்கரித்தது போல சிறு சிறு முத்துக்களாக நெல்மணிகள்…..

வரப்புகளை ஒட்டி சலசலத்து பாய்ந்தோடும் வெண்நுரையாக குளுமையான வாய்க்கால்கள்…. அவை சென்று பாயும் இடமெல்லாம் சகதிகளாக ஆன நிலத்தில் பின்கொசுவ சேலை கட்டி, சம்பங்கி, அரளி, சாமந்தி பூச்சூடிய பூவையர்கள் முழங்கால்கள் வரை வழித்து சுருட்டிய ஆடைகளை சேறு நனைத்து விடாதபடியும், லாவகமாய் ஒருவர் மற்றவரை இடையூறு செய்யாமலும், நேர்த்தியாய் நாற்று நட்ட பாங்கிற்கு ஈடு இணையில்லை…..

மறு வரப்பில் காங்கேயம் காளைகள் ஏரில் பூட்டி அழுந்த உழுது கொண்டிருந்த முண்டாசு கட்டிய ஆண்கள், தங்கள் சோர்வை மறக்க, காளைகளை உற்சாகமூட்ட, தங்களுக்கு தெரிந்த மெட்டில், கரகரத்த குரலில்…..

” காங்கேயம்ம்மம்… காளை பூட்டி…
  கருக்கல்லிலே வந்தேன் புள்ளே….
  உச்சிவெயில் வேளையில…
  குச்சி கருவாடு சுட்டு…
  கஞ்சி கொண்டு வர்றா புள்ளே….””

அதற்கு பதில் பாட்டு ஏரிக்கரை மேட்டில் தலையில் சோற்று கஞ்சி சட்டி சுமந்தபடி, இடுப்பில் கூடையை வைத்துக்கொண்டு  காலில் அணிந்திருந்த சிலம்பு சிணுங்க ரவிக்கை அணியாத மேனியை ஆறுமுழ புடவையில் அனாயாசமாக மறைத்தபடி வரும் பெண்களில் ஒருத்தி பாடினாள்….

“சீமக்காளை ரெண்டு பூட்டி
முண்டாச தலையில் கட்டி
செட்டியாரு போல வயித்தை தள்ளிகிட்டு
சேத்துக்குள்ள யாரு மாமா….
நீங்க வேர்த்தது போதும்
சீக்கிரமா வாங்க…. உங்க
வயித்தக் காயப்போடலாமா”….

என்று பாடினாள்…. பெரிய வேப்பமர நிழலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி நடப்பதையெல்லாம் கவனித்து கொண்டிருந்தார் இசக்கி சாமி….. தடித்த உருவம்… பெருத்த மீசை, காதுகளில் சிவப்பு கல் கடுக்கன் போட்டுக்கொண்டு, சுருண்ட அடர்ந்த முடியை அவ்வப்போது கோதி விட்டுக் கொண்டிருந்தார்…. பார்வையில் இருந்த மிடுக்கும், புஜங்களில் தெரிந்த பருமனும் இந்த மனிதன் சுமாராகவே 5 வலிமை வாய்ந்த ஆண்களை ஒரே சுழற்றில் வீழ்த்திவிடுவான் என்பார்களே அப்படி ஒரு தோற்றத்தில் இருந்தார் இசக்கி சாமி….

ஏலே…..ய்… சுப்பாத்தா…. ஏண்டியம்மா… இம்புட்டு கரிசன புருஷன் மேலே… என்று வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த இளம் பருவத்து பெண்ணொருத்தி பாட்டு பாடியவளை வம்புக்கு இழுத்தாள்…..

ஏண்டியம்மா… வயசுக்காரி…. வக்கணயா கஞ்சி காச்சி, கருவாடும் மீனும் வறுத்து கொடுத்து, கருப்பா இருந்தாலும் பரவா இல்லேன்னு… சனிக்கிழமை எண்ணை தேச்சு குளிப்பாட்டி, கொஞ்சம் நெறமாக்கி மனுஷன களத்துக்கு சோளிக்கு அனுப்புனா…. நீ பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்து மாமான்னு வளைக்க பாக்குறியாக்கும்… என்றாள் பாடியவளும் கிண்டலாக….

ஆத்தாடி சுப்பாத்தா… உன் மாமனுக்கு உன்மேலே தாண்டியம்மா கிறுக்கு. உச்சியில் சூரியன் நின்னா போதும்… மாட்ட ஓட்டாம உன்னையவே தேடுது இந்த சீவன்… இத நான் பார்த்துட்டாலும்… என்று நாற்று நட்டவளும் பதில் பேச எல்லோரும் ஒரே நேரத்தில் சிரித்த படி உணவருந்த வரப்பு மேடுகள் நோக்கி போனார்கள்.


இசக்கி சாமி ஏரி மேட்டை உற்றுப் பார்த்தார்… அவரின் முகம் புன்னகை பூத்தபடி பிரகாசமானது… அவரது வயிறும் உணர்வும் இப்போது மகிழ்வால் துள்ளியது….

ஆம் ஏரிக்கரை மேட்டிலிருந்து குமணன் இப்போது வரப்பில் ஓடி வந்து கொண்டிருந்தான்…

சிறகுகள் விரியும்

Advertisement