லட்சத்திற்கு மூவாயிரம் குறைவாக வந்த வட்டியை கட்ட பேங்கிலிருந்து அதாவது மகன் தந்து விட்டு போன பேங்க் புக்கை பயன்படுத்தி எடுத்து வந்த பணத்தை ஆறேழு முறை எண்ணிக் கொடுத்த வரலக்ஷ்மிக்கு கண்ணெல்லாம் கலங்கியது.

‘இவ்வளவு பணத்தை அதுவும் லட்சத்தில் மாதவட்டி கட்டும் அளவிற்கான பணத்தை எதற்காக வாங்கி இருப்பார்’என்ற சிந்தனை மேலெழும்பினாலும் ‘இந்தப் பணத்தை எதற்காக எப்போது வாங்கினேன்’என்று யோசித்து குழம்பி தன் ரத்த அழுத்தத்தை உயர்த்திக் கொண்ட வேலவனை இனியும் கேள்வி கேட்க கூடாது என்று தீர்மானித்த வரலக்ஷ்மி இப்போதைக்கு இது குறித்து மகனிடம் பேசலாம் என்று எண்ணி இருந்தார்.

மகன் லட்சத்தில் தான் சம்பாதிக்கிறான் வெளிநாட்டு வேலை அது இதுவென அவ்வபோது பறந்தாலும் பொறுப்பான பிள்ளையாக இரண்டு அடுக்கு மாடி கட்டி அதுவும் இப்போதைக்கு இருக்கும் சென்னையில் இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி அக்கா வேதாவுக்கு தேவையான சீர் வரிசை செய்து மங்கையின் குடும்பத்திற்கும் தேவையானதை செய்து என்று அத்தனை இருந்தாலும் ஒரு பைசா அநாவசியமாக செலவு செய்ய மாட்டான். தந்தையின் வருமானத்தில் வீட்டுச் செலவும் தனது வருமானத்தில் சிறிது வருங்கால சேமிப்பு ஹவுசிங் லோன் என்று கட்டி வந்தாலும் மிடில் கிளாஸில் இருந்து தங்கள் வாழ்வை அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு உயர்த்தி இருந்தான் மேகன். அவன் வாங்கும் சம்பளமே இந்த மாத வட்டிக்கு போகும் அளவுக்கு ஏன் வேலவன் கடன் வாங்கினார் என்று உறுத்தினாலும் அவ்வளவு செலவா திருமணத்தில் ஆனது என்ற கேள்வி எழுந்தாலும் நிதர்சனம் அதைத்தானே உரைக்கிறது. வட்டிக்காக பணத்தை சுளையாக எண்ணிக் கொடுத்த நிஜம் வரலக்ஷ்மிக்கு நிதர்சனத்தை உணர்த்தி இருந்தது.

மகனிடம் கடன் பற்றி பேசலாம் என்றால் மங்கை வேண்டாம் என்று குறுக்கே பாய்கிறார்.

யாரிடம் பேசுவது என்ன பேசுவது எதைச் சொல்வது என்று யோசித்தே அரை உடம்பு வந்திருந்தார் வரலக்ஷ்மி.

வெண்ணிலா அழைக்கிறாள் தான் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று பேசுகிறாள் தான். ஆனால் அவளிடமும் சொல்ல முடியவில்லை. மங்கை எப்போதும் கூடவே இருக்க கடன் வாங்கியதை அங்கே சொல்லி வெண்ணிலாவின் வீட்டில் தெரிந்தால் மானம் போய் விடும் அதோடு இவ்வளவு கடன் இருக்கிறது என்று தெரிந்தால் தன் மகள் தான் கஷ்டப்படுவாள் என்று யோசித்து அவளை இங்கே அனுப்பவதற்கு மறுத்தால் என்ன செய்வாய் என்று கேட்டிருக்க அங்கேயும் எதுவும் சொல்ல முடியாத நிலை. வேதாவிடமும் கூற முடியாது. வேதாவிடம் கூறினால் நிச்சயம் விஷ்ணுவிடம் பகிர்வாள் அது இன்னும் தலையிறக்கமாக போய் விடும் என்று அந்த யோசனையையும் கைவிட்டு விதி விட்ட வழி வர்மன் வந்ததும் சொல்லிக் கொள்வோம் என எல்லாவற்றையும் மனதில் பூட்ட அது மன அழுத்தத்தை கொடுத்தது அவருக்கு.

இதில் வேலவன் வேறு வாலன்டரி ரிட்டயர்மென்ட் வாங்கியதையே மறந்து விட்டு வேலைக்குச் செல்கிறேன் என்று நிற்கிறார். அவரை சமாளித்து வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது அவருக்கு.

தர்மதுரை மனம் கேளாமல் மங்கையிடம் கடன் பற்றி கேட்க

“வாயை மூடிக்கிட்டு இருக்கணும் எனக்கு தெரியாதா அது அதிக தொகை னு… பேசாம எடத்தை அங்கே குடுத்துட்டு ஓட்டாண்டியா நிற்போமா”என்று அவரை உலுக்கியதில் மனிதர் ஒரு வாரம் தம்பியின் வீட்டிலேயே அடைக்கலம் ஆகிவிட்டார்.

பவேஷை வேறு படிப்பு கெட்டு விடும் என்று தற்காலிகமாக பள்ளி விடுதியில் சேர்த்து விட்டிருந்தார்.

அவனோ மங்கையிடம் பேச்சு வாங்குவதற்கு பள்ளி விடுதியே தேவலாம் என்று கிளம்பி விட்டான்.

மேகன் தினமும் அழைப்பவன் வேலை பளுவின் காரணமாக வாரம் ஒரு முறை தான் வரலக்ஷ்மி வெண்ணிலா இருவருக்குமே அழைக்கிறான்.

வெண்ணிலாவிற்கோ நாட்கள் கடந்ததில் தன் உடலின் மாற்றங்களும் மாதவிடாய் வராத காரணமும் புரிபட மெல்ல அன்னையிடம் பகிர்ந்து கொண்டாள்.

“ம்மா எப்படியும் ரெண்டு மாசம் ஆகி இருக்கும். இன்னும் வரலை”என்றாள் சூசகமாக.

“என்னடா சொல்ற போன மாசமே சொல்றதுக்கு என்ன? நான் ஒருத்தி கவனிக்காம விட்டுட்டேன்”என்றவர் பூரிப்புடன் “ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு அப்புறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் டா”என்றார்.

‘ஒண்ணு ரெண்டு தடவைக்கு எல்லாமா பாப்பா வந்திடும்’சந்தேகத்துடன் சென்றாலும் மனதின் ஓரத்தில் குழந்தையாக இருக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது வெண்ணிலாவிற்கு.

நரசிம்மன் வரவும் அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்ப அவர் தானும் வருவதாக கிளம்பினார்.

மருத்துவமனையில் கழித்த சில மணித்துளிகளில் தெரிந்து போனது வெண்ணிலாவின் தாய்மை. பெற்றவர்கள் மனம் பூரித்து நிற்க வெண்ணிலாவின் மனம் கொண்டவனை வெகுவாக தேடியது.

இதைச் சொல்லும்போது அவன் வதனம் எப்படி இருக்கும். நேரில் இருந்தால் என்ன செய்வான் கட்டிக் கொள்வானோ கொண்டாடித் தீர்ப்பானோ என்ன செய்வான் என்றெல்லாம் நினைக்கும் போதே மனம் ததும்பி நிறைந்தது சந்தோஷ சாரலில்.

*************

வரலக்ஷ்மி பாதியாக இளைத்து விட்டிருந்தார். மகனிடம் உண்மையை மறைப்பது கணவனுக்கு எல்லாம் செய்வது கூடவே மங்கையின் குடும்பத்திற்கு செய்வது என்று ஆளே ஓய்ந்து போயிருந்தார். ஏதோ உடலில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கிறது என்பது போலான தோற்றம்.

“வரா இன்னைக்கு இடியாப்பமும் கடப்பாவும் செஞ்ஞிடு கூடவே தேங்காய்ப் பாலும் புழிஞ்சிடு”என்று காலையில் எழுந்து வந்தவர் பல் கூட தேய்க்காமல் சொல்லிக் கொண்டிருக்க “அரிசி மாவு இல்லண்ணி. நேத்து அரைச்ச மாவு இருந்தது தோசை ஊத்தலாம்னு எடுத்து வச்சிருக்கேன்”என்றார் வரலக்ஷ்மி.

“என்ன உடம்பு சரியில்லாதவனுக்கு தோசை தர்றியா…மாவு இருக்கா இல்லையான்னு கூட பார்க்க மாட்டியா என்ன நீ”என்று அதட்டியவர் “பவேஷ் கிட்ட காசு கொடுத்து வாங்கிட்டு வரச் சொல்லு. இடியாப்பம் தான் இன்னைக்கு செய்யணும் கொஞ்சம் கூட வேலன் உடம்பு மேல அக்கறை இல்லையே உனக்கு”என்றார் வேகமாக.

வரலக்ஷ்மிக்கு கண்ணே கலங்கி விட்டது. இத்தனை காலம் போயும் இன்னும் இவருக்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறமே என்ற ஆதங்கம் மேலிட்டாலும் கணவன் உடல் நிலை என்று வரவும் அமைதியாக பவேஷை அழைத்து அரிசி மாவு வாங்கி வரும்படி கூற அவனோ “அத்தை அப்படியே எனக்கு ஒரு நோட்ஸ் வாங்கணும் அதையும் வாங்கிக்கவா”என்று கேட்க

படிக்கும் பிள்ளை கேட்பதை மறுக்க முடியாதே அதனால் இருந்த பணத்தைக் கொடுத்து அனுப்பினார்.

மங்கையின் இறுமாப்பு கூட வரலக்ஷ்மியை கேலிப்பார்வை பார்த்து விட்டு டிவியை போட்டு அமர்ந்து விட்டார்.

சதா சர்வ காலமும் சீரியலை பார்த்துக் கொண்டு தம்பியிடம் அதையும் இதையும் பேசிக் கொண்டு நாட்களை நகர்த்தியவர் சத்தம் இல்லாமல் வீடு கட்டும் வேலையிலும் இறங்கி இருந்தார்‌.

காலையில் மங்கை கூறியது போலவே இடியாப்பமும் கடப்பாவும் செய்து வைத்தார் வரலக்ஷ்மி.

வேலவன் நன்றாக உண்டாரோ இல்லையோ உப்பு போதலை கொஞ்சம் கொதித்து இருக்க வேண்டும் என்று சொல்லியபடியே ஒரு ஈடு இடியாப்பத்தை ஒன்றாய் விழுங்கிய மங்கை வேலை இருக்கிறது என்று வெளியே கிளம்பி இருந்தார் மதிய உணவிற்கும் லிஸ்ட் கொடுத்து விட்டு செல்ல ஆயாசமாக இருந்தாலும் அந்த வேலையில் இறங்கி விட்ட வரலக்ஷ்மியை நிகழ்வுலகிற்கு இழுத்து வந்தது வெண்ணிலாவின் அழைப்பு.

“ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க மாமா எப்படி இருக்காங்க”என்று எடுத்ததுமே விசாரித்தவளை நினைத்து உள்ளூர மனது வெம்பியது அவருக்கு. சற்று நேரம் அமைதியாக இருந்தவர் “நல்லா இருக்கேன் டா”எனும் போதே அவரே அறியாமல் விசும்பி விட்டார்.

“அத்தை என்னாச்சு ஏன் ஏன் அழறீங்க மாமாவுக்கு ஒண்ணும் இல்லையே நல்லா இருக்கீங்க தானே அத்தை”என்று பதறியவள் இணைப்பைத் துண்டித்து விட்டு வீடியோ காலில் வந்தாள்.

அதை எடுக்காமல் விட்டாலும் சங்கடம் கொள்வாள் என்று அழைப்பை ஏற்க வரலக்ஷ்மி யின் உருவத்தைப் பார்த்து அதிர்ந்தே போனாள் வெண்ணிலா.

“ஏன் அத்தை இப்படி மெலிஞ்சு போய் இருக்கீங்க”என்றவள் மனம் தாளாமல் அகிலாவை அழைத்துக் காண்பித்து விட அவருக்கு திக்கென்றானது.

“இதென்ன வரு இப்படி இருக்க… என்னாச்சு உனக்கு கடவுளே”என்று அகிலாவும் பதற

“அடடா எனக்கு எதுவும் இல்லை. கொஞ்சம் வேலை ஜாஸ்தி அதான் உடம்பு இறங்கிடுச்சு இதுக்கு ஏன் அம்மாவும் பொண்ணும் பதறி பேசறீங்க”என்று தன்னை சுதாரித்துக் கேட்டாலும் வரலக்ஷ்மிக்கு அவர்களின் பதற்றம் கூட இதமாய் இருந்தது.

“போங்க நீங்க உடம்பை இளைக்க வச்சுட்டு”என்று குறைபட்டுக் கொண்ட வெண்ணிலா”உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் அதுக்கு தான் அத்தை கூப்பிட்டேன்”என்றாள் நாணமாக.

“என்ன நிலா”என்றவருக்கு மருமகளின் முகம் வெட்கத்தில் இருந்தது கண்டு குறுகுறுப்பு தான்.

அகிலாவுக்கு ஏனோ வரலக்ஷ்மி யின் முகமும் உடலும் கவலையை ஏற்படுத்த “இரு நிலா சொல்லிக்கலாம்”என்று மகளைத் தடுத்தவர் “என்னன்னு சொல்றேன் வரு. ஆமாம் என்ன சமையல் அண்ணன் எங்கே தூங்கறாங்களா”என்று பேச்சை மாற்ற

“ஆமாம் இப்போ தான் இடியாப்பம் குடுத்தேன் சாப்டாங்க. மதியத்துக்கு சமைக்கணும். நீங்க என்ன பண்றீங்க வர்மன் கூப்பிட்டு பேசினானா நிலா”என்றார் ஆவலாக.

“பேசினாங்க அத்தை. இன்னைக்கு வத்தக்குழம்பு சாப்பிட தோணுச்சு அதான் அம்மாவை செய்ய சொன்னேன் அப்பளம் மட்டும் போதும் னு சொல்லிட்டேன்”என்றவள் “நீங்க”என்றாள்.

“இங்கேயா”என்று இழுத்தவர் கல்யாண விருந்து போல ஒரு லிஸ்டை கொடுக்க அயர்ந்த வெண்ணிலா வாய்விட்டே கேட்டு விட்டாள்.

“எதுக்கு அத்தை இத்தனை சாப்பாடு யாரும் விருந்தாளி வர்றாங்களா”என்று கேட்க

“அதெல்லாம் இல்லை மா மங்கை அண்ணி சமைக்க சொன்னாங்க. அவங்க இங்கே என் கூட தானே இருக்காங்க எல்லாருக்கும் சேர்த்து தான்”என்று பேச்சுவாக்கில் எல்லாம் சொல்லி விட வெண்ணிலா துணுக்குற்றவள் யோசனையாக அகிலா முகம் பார்த்தாள்.

“பேசிக்கலாம் இரு”என்று முணுமுணுத்த அகிலா “நாங்க இன்னைக்கு அண்ணனைப் பார்க்க வர்றோம் வரு. ரெண்டு நாள் அங்க தங்கறதா ப்ளான். வீட்டுக்கு வந்ததும் முக்கியமான விஷயம் பேசணும் உன் கிட்ட வரும் போது விசாலம் பெரியம்மாவையும் கூட்டிட்டு வர்றேன்”என்று சொல்ல

“என்ன திடீர்னு அகி? நிஜமாவா”என்று ஒரு நிமிடம் வியப்பாய் கேட்டாலும் யாரேனும் வந்தால் தேவலாம் என்று தான் நினைத்தார்.

“ஆமாம் நிஜமாவே தான் வர்றோம். அண்ணன் கிட்ட வழக்கம் போல அவரைப் பார்க்க வந்ததா சொல்லிக்கலாம். விசாலம் பெரியம்மா ஒரே அழுகை நேத்து கோவில்ல பார்த்துட்டு . அவங்கள பார்க்க வர வேணாம் னு மங்கை சொன்னதா சொன்னாங்க. ரொம்ப வருத்தப்பட்டு பேசினாங்க.”என்றவர் தீர்மானமாக தாங்கள் வருவதாக சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.

சொன்னது போலவே மறுநாள் காலையில் சென்னையில் வேலவன் வீட்டில் வந்திறங்க மங்கை பேரதிர்வாய் நின்றார்.

…… தொடரும்.