மருத்துவ மனையில் இருந்து விஷ்ணு அவசரமாக மேகனுக்கு அழைத்திருந்தான். நல்லுறக்கத்தில் இருந்தவன் அப்போது தான் எழுந்து அமர்ந்து இருந்தான். விஷ்ணுவின் அழைப்பு வரவும் “சொல்லுங்க மாமா”என்று ஆசுவாசமாக கேட்கவும்
“வர்மா நீ ஹாஸ்பிடல் வர முடியுமா இங்கே உங்கத்தை ஏதோ பினாத்திட்டு இருக்கு”என்றான் கடுப்பாக
“என்னவாம் அவங்களுக்கு”என்றவன் வெண்ணிலா உள்ளே வரவும் பல் துலக்கி விட்டு வருகிறேன் காஃபி வேண்டும் என்று சைகையில் கூற சரியென்று தலையாட்டியவளிடம் உதடு குவித்து முத்தமிடுவது போல் காட்டவும் புன்னகையுடன் வெளியேறினாள் வெண்ணிலா
“வெண்ணிலா மாமா வர சொல்றாங்க நான் ஹாஸ்பிடல் கிளம்பறேன். நீ ரெஸ்ட் எடு சரியா… லஞ்ச் செஞ்சு எடுத்துட்டு வந்தா போதும் மார்னிங் டிஃபன் அங்கே பார்த்துக்கிறேன்”என்றவாறே காஃபியை வாங்கிக் கொண்டான்.
“ஏன் இவ்வளவு அவசரமா மாமா நல்லா இருக்காங்க தானே”என்று அவள் பதறிட
“அதெல்லாம் நல்லா இருக்காங்க அத்தை தான் ஏதோ பேசிட்டு இருப்பாங்க போல.அதான் விஷ்ணு மாமா வர சொல்றாங்க. காஃபி நல்லா இருக்கு பொறுமையா குடிக்க தான் நேரம் இல்லை. மதியம் ஆஃபிஸ் வேற போகணும்”என்று பரபரத்தான் அவன்.
“அவங்க பேசலைன்னா தான் அதிசயம். அதுக்காக வேகமா வண்டி ஓட்ட வேண்டாம் மெதுவா போங்க”என்றவளிடம் “இல்லைடா ஓலா புக் பண்ணி இருக்கேன் வண்டி அங்கே தானே இருக்கு”என்றவன் அவசர முத்தம் ஒன்றை தந்து விட்டு வெளியே செல்ல மிகச் சரியாக டிரைவரின் அழைப்பும் வந்துவிட்டது.
“இந்த அம்மா என்னத்த பேசி வைக்குதோ தெரியலை. மாமா மட்டும் வீட்டுக்கு வரட்டும் அப்புறம் இருக்கு அந்த கிழவிக்கு”என்று முணுமுணுத்துக் கொண்டே மதிய உணவுக்கு தயார் செய்தாள்.
வேதா வரலக்ஷ்மி இருவரும் கிளம்பி வரவே அவர்களுக்கு காலை உணவை தர அமைதியாக உண்டு எழுந்தார்கள்.
“நான் வந்து ஹெல்ப் பண்றேன் நிலா.”என்ற வேதா வரலக்ஷ்மியை படுக்க செல்லுமாறு கூற
“நாம ஹாஸ்பிடல் போகலாம் வேது. எனக்கு அப்பா கிட்ட இருக்கணும்”என்றார் வரலக்ஷ்மி பிடிவாதமாக.
“சமைச்சிடறேன் அத்தை சேர்ந்தே போகலாம்”என்று வெண்ணிலா கூற
“இல்லை எனக்கு மனசு படபடப்பாக இருக்கு ஹாஸ்பிடல் போகணும் மா “என்றவர் மகளை பரிதாபமாக பார்க்க, வேறு வழியின்றி இருவரும் மருத்துவமனைக்கு கிளம்பி விட்டனர்.
இங்கே மருத்துவமனையிலோ மங்கை வாய் ஓயாமல் தர்மதுரையை திட்டிக் கொண்டிருந்தார்.
“நான் என்ன தான் செய்யட்டும் மங்கை.”என்று சலிப்பாக கேட்டார் தர்மதுரை.
“நீங்க என்னத்த செய்வீங்க இதுவரைக்கும் என்ன தான் செஞ்சு இருக்கீங்க. அந்த குடும்பத்துக்கு மாடா உழைச்சு ஓடா தேஞ்சீங்க. ஆனா உங்க பொண்டாட்டி நான் அடிபட்டு கெடக்கேன் எனக்கு வந்து பார்க்க ஆளில்லை. இந்த தாமரை ஒரு நாள் வந்துட்டு ஓடிட்டா”என்று பொருமி தள்ளினார். அவரால் தனியே கழிவறை செல்ல முடியாமல் போக அந்த ஆதங்கத்தை எல்லாம் கணவனைத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்.
“நான் என்ன தான் செய்யட்டும் மங்கை.”என்றவர் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வெளியேற அதற்குமே மங்கை வசைபாட தான் செய்தார் .
விஷ்ணுவிடம் தர்மதுரை புலம்ப அவனோ மேகன் வந்தால் தான் மங்கை வாயை மூடுவார் என்றெண்ணி அவனை வரவழைத்து விட்டான்.
வேலவன் வேறு இரவில் இடையிடையே வரு வர்மா என்று அழைத்துக் கொண்டே இருக்க ஒரு இரவை தாண்டுவதே பெரும்பாடாகிப் போனது விஷ்ணுவிற்கும் தர்மதுரைக்கும்.
“வராவை இல்லாட்டி வேதுவையாவது வர சொல்லி இருக்கலாம்ல தம்பி. இவ பேசுற பேச்சை கேட்க முடியலை”என்று தர்மதுரை பாவமாக கூற
“முன்னவே சொல்லி இருக்கலாமே பெரியப்பா”என்றவன் “கொஞ்ச நேரம் பொறுத்துக்கங்க அவங்களே வந்திடுவாங்க அதுவரைக்கும் ரூம்க்கு போகாதீங்க”என்றான் விஷ்ணு.
மேகன் வந்ததுமே “என்னாச்சு மாமா”என்று பதற விஷ்ணு நடந்ததைக் கூறினான்.
“அப்பவே சொல்லி இருந்தா அம்மாவை கூட்டிட்டு வந்திருப்பேனே”என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வேதாவும் வரலக்ஷ்மியும் பிள்ளையோடு வந்தார்கள்.
தர்மதுரைக்கு உயிரே வந்தது போல் இருந்தது.
“வேதா நல்ல வேளை நீ வந்த”என்றவர் “உங்கத்தையை போய் ஒரு நிமிஷம் பாரும்மா”என்றார் பரிதாபமாக.
வரலக்ஷ்மியை வேலவனைப் பார்க்க அனுப்பி வைத்தான் மேகன். அதற்குள் அலுவலகத்தில் இருந்து வேறு அழைப்பு வந்து கொண்டேயிருக்க வேறு வழியின்றி விஷ்ணுவிடம் கூறி விட்டு கிளம்பியிருந்தான்.
சற்று நேரத்தில் அகிலா சஞ்சயுடன் வெண்ணிலா மதிய உணவை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“அண்ணன் எப்படி இருக்காங்க தம்பி மாப்பிள்ளை எங்கே”என்று கேட்டபடியே அகிலா வரவும்
“நல்லா இருக்காங்க சித்தி. டாக்டர் வந்து பார்த்தாங்க பல்ஸ் நார்மலா இருக்குன்னு சொல்லிட்டாங்க. மத்தபடி சரியான ஞாபகம் வரலை அவருக்கு”என்றான் விஷ்ணு.
“தலையில் அடிபட்டு இருக்குல்ல ண்ணா அதனால இருக்கும் சரி ஆகிடுவார்”என்ற சஞ்சய் “நாங்க பார்க்க முடியுமா”என கேட்க
“போகலாம் சஞ்சு.இவ்வளவு நேரம் நான் உள்ளே இருந்துட்டு தான் வந்தேன். ஐசியூவில் இருந்து வெளியே கூட்டிட்டு வந்துட்டாங்க காலையில்”என்றவன் அவர்கள் மூவரையும் அழைத்துச் சென்றான் வேலவன் புதிதாக மாற்றப்பட்ட அறைக்கு.
வேலவன் உறங்கிக் கொண்டிருக்க அருகில் வரலக்ஷ்மியும் வேதாவும் அமர்ந்து இருந்தனர்.
“வாங்கத்தை வா சஞ்சு”என்று வேதா வரவேற்க தலையாட்டினார் அகிலா.
“வா அகிலா சஞ்சு”என்று வரலக்ஷ்மியும் அழைத்தவர் கணவனின் முகம் பார்த்து அமர
வெண்ணிலா உணவுக்கூடையை வைத்து விட்டு “சாப்பிடுங்க அத்தை காலையிலும் அவசரமா சாப்பிட்டு வந்துட்டீங்க வேதாக்கா நீங்களும் வாங்க.”என்றவள் பிள்ளையை வாங்கிக் கொண்டாள்.
“விசிட்டர் ரூம் போயிட்டு சாப்பிடுங்க நாங்க இங்க இருக்கோம்”என்று விஷ்ணு அனுப்பி வைக்கவும் இருவரும் அங்கிருந்து செல்ல அகிலாவுக்கோ வரலக்ஷ்மியின் சரியாக பேசாத தன்மை மனதை பிசைந்தது. இப்போதைக்கு சகஜமான பேச்சை எதிர்பார்க்க முடியாது என்றாலும் இவ்வளவு இறுக்கமாக வேண்டியதில்லையே வேலவன் தான் நன்றாக இருக்கிறாரே பிறகென்ன என்ற எண்ணம் அகிலாவுக்கு.
“அவர் எங்கண்ணா”என்று மேகனைப் பற்றி கேட்டாள் வெண்ணிலா.
“ஆஃபிஸ் ல இருந்து அத்தனை கால்ஸ் மா அவனுக்கு. அதான் கிளம்பிட்டான். பாவம் அவ்வளவு அலைச்சல் அவனுக்கு.”என்று விஷ்ணு சொல்லி விட்டு வருத்தம் கொள்ள “ஹ்ம்ம் ஆமாம்”என்று ஆமோதித்தாள் வெண்ணிலா.
சற்று நேரத்தில் மருத்துவர் வரவும் இவர்கள் வெளியே வந்து விட்டனர்.
தர்மதுரை வெளியே இருந்தவர் “பவேஷ் ஸ்கூல் போயிட்டானாம்மா”என்று வெண்ணிலாவிடம் கேட்டுக் கொண்டார்.
“கிளம்பிட்டான் பெரியப்பா எக்ஸாம் இருக்குல்ல சீக்கிரம் கிளம்பிட்டான்”என்று வெண்ணிலா பேசிக் கொண்டிருக்க தர்மதுரையின் தம்பி அவருக்கு அழைத்து விட்டார்.
பேசி முடித்த தர்மதுரை “ம்மாடி என் தம்பி மகளோட மங்கையை பார்க்க வர்றானாம். நான் போய் கூட்டிட்டு வர்றேன்”என்று போக வெண்ணிலா விசிட்டர் அறைக்கு சென்றாள்.
அவர்கள் உணவு உண்டு விட்டு உள்ளே வரவும் தர்மதுரை தாமரை தீபாவுடன் நின்று வேலவனின் உடல்நலம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் கண் விழித்த வேலவன் “எனக்கு எதுவும் இல்லைமா பாப்பா சரியாகிடுவேன் கவனமா போகலை போல நான்”என்று சொல்லிக் கொண்டிருக்க தீபாவோ அவரிடம் சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாள்.
மங்கை காலை விந்தி விந்திக் கொண்டு அங்கே வந்து விட்டார்.
“உனக்கு இப்படி ஆகிடுச்சேன்னு அவளுக்கு ஒரே அழுகை வேலா. கண்ணெல்லாம் பாரு எப்படி வீங்கி கிடக்குன்னு”என்று தீபாவை தூக்கி வைத்து பேசினார் மங்கை.
“இருக்காதா பின்ன.”என்றவர் “என்னால”எனும் போதே வரலக்ஷ்மியுடன் அகிலா வெண்ணிலா சஞ்சய் மூவரும் உள்ளே வந்தனர்.
அவர்களைக் கண்டதும் வேலவனின் முகம் மலர்ந்து விட “வாம்மா அகிலா…அடடே நிலாம்மா நீயும் வந்திருக்கியா… ஊருக்கு வந்துட்டு உன்னைப் பார்க்கவே முடியலை அன்னைக்கு.”என்றவர் சிறிது கண் அசர மற்றவர்களுக்கு அதிர்வாய் இருந்தது.
“ஊருக்கா”என்று அகிலா கூறி விட்டு திடுக்கிட
“அவருக்கு ஞாபகம் விட்டு விட்டு வருது அத்தை பயப்பட வேண்டாம் கொஞ்ச நாளில் சரி ஆகிடும்”என்று வேதா சமாதானம் கூறினாள்.
“சரி நாம வெளியே இருப்போம் இத்தனை பேர் நின்னா டாக்டர் திட்டுவாங்க”என்றதும் வெளியேறும் நிமிடம் மீண்டும் கண் விழித்தார் வேலவன்.
“வரு… வேதா ஊருக்கு வந்தாளா”என்று கேட்க
“இங்கே இருக்கேன் ப்பா”என்றபடி வேதா அவரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“ஹ்ம்ம் நீயேன்டா பிள்ளைத்தாட்சி இங்கே வந்த அப்பாக்கு எதுவும் இல்லை டா”என்றவர் மறுபடியும் முதலில் இருந்து “நிலாமா நீ எப்படா வந்த.. மாமா பாரு கவனம் இல்லாமல் வண்டியை விட்டுட்டேன்”என்றார் கண்கள் கலங்க.
மறுபடியும் வேறு மாதிரி பேசுகிறாரே என்ற திடுக்கிடல் அவளிடம்.
மங்கை நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் வெண்ணிலாவின் அதிர்ந்த முகத்தைக் கண்டு ஒரு நிம்மதி பரவ உட்கார்ந்து இருந்தார்.
இரண்டு நாள் முன்பு தான் வேலவனை எங்கே அழைத்துச் சென்றீர்கள் எப்படி விபத்து ஆனது எதற்காக காரில் செல்லாமல் வண்டியில் சென்றீர்கள் என்றெல்லாம் அவரைக் கேட்டு துளைத்திருந்தாள்.
பதில் சொல்ல முடியாமல் திணறியவர் மயக்கம் வருவது போல படுத்து விட்டார். அதன் பிறகு வெண்ணிலா வந்தாலே உறங்குவது போல் படுத்துக் கொள்ள வெண்ணிலா வேறேதும் கேட்கவில்லை. ஆனாலும் மங்கைக்கு ஒரு பயம் அவள் மீது இருந்தது. பணம் பற்றிய விசாரிப்பு நடக்குமோ எவ்வளவு என்ன என்று கேட்டால் எப்படி பதில் சொல்ல வேலவன் வட்டி மட்டும் கட்டுகிறேன் என்று கூறி இருந்தாலும் அதுவே அதிக தொகை தானே வரும் அதற்கு வர்மன் பேசுவானோ என்றெல்லாம் பயந்திருந்தார்.
இந்த விஷயம் தானாக தெரிய வரும் போது வரட்டும் என்று எண்ணி இருக்க இப்போதோ வேலவன் பழைய நினைவுகளை மறந்திருக்க மங்கைக்கு அவர் எத்தனை மறந்து இருக்கிறார் என்று தெரிய வேண்டி இருந்தது.
அதற்காகவே வேலவன் இன்னும் பேசினால் தேவலாம் என்று நினைத்திருக்க விதியும் மங்கைக்கு சாதகமாக தான் இருந்தது.
ஆம் வேலவன் சமீபத்திய நினைவுகளை சுத்தமாக மறந்திருந்தார். ஆங்காங்கே சில விஷயங்கள் நினைவிற்கு வரவும் போகவுமாக இருக்க அதில் மேகனின் திருமணம் வெண்ணிலாவுடன் நடந்தது என்பதை முற்று முழுதாக மறந்து போயிருந்தார். ஏனெனில் மேகனின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க செல்லும் போது வண்டியை கீழே போட்டு சிறு சிராய்ப்புடன் ஒரு நாள் முழுவதும் மயக்கத்தில் இருந்து தெளிந்து வந்திருந்தார். அப்போது விழுந்தது தான் அவர் மூளையில் பதிந்திருந்தது. அதன் பிறகு நடந்த எதுவுமே நினைவிற்கு வரவில்லை அவருக்கு.
வெண்ணிலா இப்போது வால்பாறையில் இருந்து தன்னை பார்க்க வந்ததாக தான் நினைத்துக்கொண்டு இருக்கின்றார் வேலவன்.
அவர் மறதியால் வெண்ணிலா வாழ்வில் நடக்க போவது என்ன…?