மூன்று வருடங்களுக்கு பிறகு….  

சிவசக்திபாலன் பனிமலர் வீடே கலகலத்திருந்தது சொந்தங்களால்…..ஆம் தனதன்னை வாழ்ந்த வீட்டை மேலும் புணரமைத்து மேலே இருந்த ஓடுகளை அகற்றி விட்டு மாடியாக மாற்றி இருந்தாள். 

சிறிது சிறிதாக பணம் சேர்த்து இருவரின் மொத்த உழைப்பையும் போட்டு வீட்டை கட்டி முடித்திருந்தனர். 

புதுமனை புகுவிழா நடத்தி இருந்தாள் அனைவரையும் அழைத்து…  

“ராஜா கண்ணு ஒரு வாய் டி…. அப்பாயியால ஓடியார முடியலைடி தங்கம் இல்ல… மத்தது எல்லாம் எப்படி ஊட்டிக்கிது நீ மட்டும் தான் வம்பு பண்ற…. “என புலம்பியபடி தட்டில் வைத்திருந்த இட்லியை சாம்பாரில் பிசைந்து கொண்டு பேரனின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார் சித்திரை செல்வி. 

“வேணா ப்பாயி…. இந்த இட்லி நல்ல… நல்லாவே இல்ல… “முகம் சுளித்தான் சிவசக்திபாலனின் மைந்தன் ப்ருத்விராஜன்…

  

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியே வந்த சிவாவோ…” டேய் சின்ன வாண்டு ஏன் டா வயசான காலத்தில் எங்க அம்மாவை ஓட வைக்கிற ஒரு எடத்துல நின்னு சாப்பிடு டா…. “என்று மிரட்ட

அவனோ .,”ம்ம்ம்ஹ்ம் ம்ம்ம்ஹ்ம்”என்று சுளித்தவன்…. “ப்பா எனக்கு எங்க அம்மா தான் ஊட்டணும் உங்க… உங்களுக்கு வேணும் னா உ… உங்க அம்மா கிட்ட நீங்க ஊட்டுங்க “என்றான் சுற்றி சுற்றி ஓடியபடி… 

“அடேய் ஆனா உன் வாய் இருக்கே… எவ்வளவு தைரியம் பாரு… எதித்து பேசுது… இருடா இந்தா வாரேன்” என்றவன் ,”பனி, தம்பி நீ தான் ஊட்டணும் னு சொல்றான்”என முழுதாய் முடிக்கவில்லை… அதற்குள் சமத்து பையனாக சித்திரை செல்வியின் கையிலிருந்த தட்டை வாங்கி வைத்து விட்டு கையை கழுவி விட்டு ஓடி வந்தவன், அழகாய் அமர்ந்து உணவருந்த ஆரம்பித்தான். 

“ம்மா பாத்தல்ல”என்று தன் தாயிடம் கண் காட்டவும் அவர் சிரித்தார்.  

“பாம்பு மகுடிக்கு மயங்குமாம் யானை பாகனுக்கு அடி பணியுமாம் அந்த கதையா இருக்கு… உன் மவன் கூத்து… அம்மா பேர சொன்ன உடனே சாப்பிடுறதைப் பாரு… “என்று சொல்ல சிவா சிரிப்புடன் அங்கிருந்து சென்றான். 

“எதுக்கு கூப்பிட்டிங்க… ??”என்றபடி வந்தவளை,  அழைத்து கொண்டு உள்ளே சென்றான் மகனின் லீலைகளை கூறியபடி.. 

ஜெயச்சந்திரன் கருப்பசாமியின் வயிற்றில் காலை போட்டு சுகமாய் உறங்கி கொண்டிருந்தான்.

சூர்யா அவனை தூக்க போக கருப்பசாமியோ… “ஸ்ஸ்ஸ் ஆயா வேணாம் இப்ப தான் தூங்க ஆரம்பிச்சு இருக்கான்… எழுந்தா அவ்வளவு தான் உன்னை தொல்லை பண்ண ஆரம்பிச்சுடுவான்… போ நான் பார்த்துக்கிறேன் “என மருமகளை அனுப்பி விட்டார். 

தனஞ்செயன் அறைக்குள் அமர்ந்தபடி சூர்யாவை ஏலம் விட்டு கொண்டிருந்தான். 

“அடடா ஏன் இப்படி ஏலம் விடுறீங்க… ?” சலித்துக் கொண்டவள், உள்ளே வரும் போதே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கதவை அடைத்து அவசர முத்தமொன்றை வைத்து கையில் கவரை கொடுத்தான் தனஞ்செயன். 

“என்ன மாமா இது..?” என்று பிரித்தவளுக்கு விழிகள் விரிந்தது. 

“மாமா நெசமாவே நான் படிக்க போகவா…!!!” ஆர்வம் மின்ன கேட்க, தனஞ்செயன் சிரிப்புடன் ,”ஆமா படிப்பாளி நீ படிக்க போ தம்பியை நாங்க பார்த்துக்கிறோம் அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் இனிமே டீச்சர் எப்படி..?” என்று சிரித்தான். 

சூரியகாந்திக்கு பி. எட் அட்மிஷன் போட்டு வந்திருந்தான் தனஞ்செயன். அது தான் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. 

மாலை நேரம் செண்பகவல்லி ஆச்சி தன் பேரனோடு கோவிலுக்கு சென்றிருந்தார்.  

அனைவரும் விழா முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி இருக்க மலரும் சிவாவும் மட்டும் அமர்ந்திருந்தனர்.  

தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் ,” பனி டீ குடிக்கலாமா?” என்று திரும்பும் போதே  சுக்கு காபி மணம் அவனது நாசியை துளைத்தது. மெலிதாய் புன்னகைத்தான். 

“என்ன சமூக சேவகரே இதை தானே கேட்க வந்தீங்க…?” நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். 

“வா இங்க வந்து உட்காரு… ” என்றதும் மறுப்பேதும் தெரிவித்திடாது அமர்ந்து கொண்டாள். 

ஒரு டம்ளர் சுக்கு காபி இருவரும் குடித்தபடியே அந்தி மாலை நேரத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். 

*********

வழக்கம் போல பேருந்து நிலையத்தில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள் குழு. முருகனும் அவர்களோடு நின்றிருந்தார்.

“ஏன் முருகு அண்ணே, நீங்க இந்த ஊருக்கு எவ்வளவு நல்லது பண்ணி இருக்கீங்க… உங்களுக்கு ஒரு சமூக ஆர்வலர் விருது தரக் கூடாது கலெக்டர் கிட்ட அடுத்த மனு அது தான்”என்றான் சிவா. 

“அட நீ வேற சிவா…. விருது வாங்குறதுக்கா இவ்வளவு பாடுபடுறோம்… நாம பிறந்த மண்ணு… செழிப்பா இருக்க ஆசை அதை செய்ய தான் இவ்வளவும்…. மத்தபடி வீட்டுல அலங்காரத்துக்கு வைக்கிற பொருள் மேல எல்லாம் ஆசை இல்லை ப்பா… “என்றார் முருகன். 

“ஆனாலும் அநியாயத்துக்கு நல்ல பையனா இருக்கண்ணே”என்றவன் பேருந்தைப் பார்க்க மலர் இறங்கி வந்தாள்.  

முதன் முதலில் அவளை எவ்வாறு பார்த்தானோ அதே பார்வை தான் இப்போதும்… அவளைக் கண்டால் மட்டும் கால்கள் தானாய் எழுந்து நின்று கொள்கிறது அவனுக்கு.. 

“ஆரம்பிச்சுட்டான் டா… கட்டுன பொண்டாட்டியை பஸ் ஸ்டாண்டில் வந்து ரசிக்கிறது இவனா தான் இருப்பான்”என்று வெற்றி சொல்லவும் மற்றவர்கள் நகைத்தனர். 

மலரோ சிவாவை ஒரு முறை முறைத்தவள் வேகமாக எட்டு வைத்து நடந்தாள். 

“இன்னைக்கு எதை டா மறந்த …தங்கச்சி முறைச்சுட்டு போகுது…”என்ற வீரமலையிடம் தலையில் கை வைத்தபடி .,”அச்சோ பங்கு…. கண்வலிக்கிழங்கை திண்டுக்கல் கொண்டு போக சொன்னாடா மறந்து போயிட்டேன்… அதான் மொறைச்சுட்டு போறா நான் போறேன் டா…. “என வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்தான். 

“ஒனக்கு நெதம் இதே பொழப்பு டா… இன்னைக்கு டீச்சர் முட்டி போட வைக்கப் போகுது போ”என்று நக்கல் செய்ததை கூட காதில் வாங்காமல் சென்றான் சிவா. 

இங்கே வெற்றியையும் , வீரமலையையும் இடுப்பில் கை வைத்து கொண்டு இரு பெண்கள் முறைத்து கொண்டு நின்றனர். 

“டேய் அடுத்த சிக்னல் உங்களுக்கு தான் டா ஓடுங்க”என முருகன் சொல்லி விட்டு அங்கிருந்து அகல, முறைத்து கொண்டிருந்த இரு பெண்களும்….” மண்எண்ணெய் வாங்கியாச்சு போல !!”என்று சிலுத்துக் கொண்டு சென்றனர். 

“டேய் வீரா இன்னைக்கும் மண்எண்ணெய் வாங்க மறந்தாச்சு டா வா போகலாம்… தேடிப் பிடித்து டீச்சர்களை கட்டினாலும் கட்டினோம் தினம் திட்டு வாங்குறதே பொழப்பா வச்சிருக்கோம்”என்று புலம்பி கொண்டு தத்தம் மனைவிகளை சமாதானம் செய்ய சென்றனர். 

ஆமாம் பனிமலருடன் வேலை பார்த்த பக்கத்து ஊர் பெண்கள் இருவரையும் வெற்றி , வீரமலை இருவரும் மணம் முடித்து இருந்தனர். 

வீரமலை  ஊரிலேயே  விதைநெல்லும் இயற்கை உரங்களை தயார் செய்தும் விற்பனை செய்து வருகிறான்  கூடவே தந்தையுடன் இணைந்து விவசாயமும் செய்து காய்கறிகளை திருச்சி மார்க்கெட்டில் போட்டு வருகிறான் .

வெற்றியோ வழக்கம் போல தனது காரை ஓட்டி கொண்டும் கூடவே சிறியதாக ஒரு மெக்கானிக் ஷாப்பையும் வைத்திருக்கிறான்.  குட்டியானை எனும் டெம்போவை காய்கறி மார்க்கெட் செல்வதற்காக வாங்கி வாடகைக்கு விட்டு இருக்கிறான்.  அதன் மூலமாக தங்கள் வருமானத்தைப் பெருக்கி கொண்டுள்ளனர்.  வெற்றியின் தந்தையையும் வெளிநாட்டிற்கு போக வேண்டாம் என்று கூறி இருக்க வைத்து விட்டான். 

வெற்றி வீரமலை இருவருக்கும் மலரின் பள்ளியில் வேலை பார்த்த பக்கத்து ஊர் பெண்கள் இருவரையும் பேசி முடித்தனர்.  மலரின் வளைகாப்பிற்கு வந்த போது பார்த்து அதன் பிறகு மலர் மூலமாகவே திருமணமும் முடிந்திருந்தது இருவருக்கும். 

சிவசக்தி திருச்சியில் உள்ள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட தனஞ்செயன் சொன்னது போலவே ஊரில் ஒரு மளிகைக்கடை போட்டு அமர்ந்து விட்டான். அவன் மளிகைக்கடை போட்டது யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ  வேலுத்தம்பிக்கும்  ஜெய் ப்ருத்வி இருவருக்கும் கொண்டாட்டம் தான் பின்னே  பட்டணம் பொடிக்கும் சுருட்டுக்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை வேலுத்தம்பிக்கு… சிறுவர்களுக்கு அம்மாவுக்கு தெரியாமல் அடிக்கடி இனிப்பு கிடைத்து விடும் அதனால் தான். 

சரி வாங்க கோவமாப் போன மலரும் சிவாவும் என்ன பண்றாங்கனு பார்க்கலாம். 

*************

“என்ன பாப்பா ஊருக்கு புதுசா… ? ஏன் நடந்து போறீங்க…?  எங்க போகணும் னு சொன்னா நாங்க இறக்கி விடுவோம் இல்ல … !!, எங்களுக்கு சமூக சேவை செய்றதுனா ரொம்ப பிடிக்கும் “என்று மலரின் முன்பு வண்டியை நிறுத்தினான் சிவா. 

முதன் முதலில் அவளைப் பார்த்து பேசிய வார்த்தைகளை இன்று உதிர்த்து கொண்டிருந்தான்.

“நாங்க முன்ன பின்ன தெரியாத ஆள் கூட எல்லாம் வண்டியில போறதில்லை “என்றபடி நடந்தாள் தன் நாணம் மறைத்து . 

வண்டியை விட்டு இறங்கியவனோ “பனி இன்னைக்கு சனிக்கிழமை. பசங்களும் இருந்தாங்களா அதான் பேசிட்டு இருந்ததுல மறந்துட்டேன் மா…” என்றான் பணிவாக. 

“உனக்கு எப்போ தான் பொறுப்பு வரப் போகுதோ தெரியலை சக்தி….” என்றாள் சற்று கோபத்துடன்.

“செந்நிறபூமியில் சிவந்த மலரே உங்க கோப சிவப்பில் ஏற்கனவே சிவப்பா இருக்க செம்மண் இன்னும் சிவந்திடப் போகுது… வாங்க வீட்டுக்கு போகலாம் அங்க போய் பனிஷ்மென்ட் குடுங்க”என்று சொல்ல , மலர் சிரித்தபடி… “பேசியே என்னை சரி கட்டிடு…” என்றவள் வண்டியில் ஏறிக் கொண்டாள். 

“இல்லாட்டி டீச்சரம்மாவை சமாளிக்க முடியுமா…?”  கிண்டல் செய்தான். 

“சமூக சேவகரே வர வர வாய் கூடிருச்சு உங்களுக்கு…!!” என்றாள் தோளில் தட்டியபடி 

“ஆமா நான் திண்டுக்கல் போகலைனு எப்படி கண்டு பிடிச்ச பனி…????”

“ம்ம்ம்ஹ்ம் அந்த டீலர் ஃபோன் பண்ணி கேட்டாரு…” என்றாள். 

“ஓஓஓ இது அந்தாள் பார்த்த வேலையா !?”என்றவன் வீட்டில் இறக்கி விட்டதும் பிருத்வி ஓடி வந்தான்.  

“ப்பா… நான் கேட்டது”என கையை நீட்டினான். 

“அப்பா மறந்துட்டேன் டா சரி வா நாம கடைக்கு போகலாம்.. “என்றவன் மலரை பார்க்காமல் தன் மகனை முன்னே அமர்த்திட, அவளோ வண்டி சாவியை பிடுங்கி கொண்டாள்.

“பனி… இந்த ஒரு தடவை மட்டும் தான் இதுக்கு மேல வாங்கி தர மாட்டேன்… சாவி குடும்மா …”என்க 

“இதே தான் ரெண்டு நாளைக்கு முன்னாடியும் ரெண்டு பேரும் சொன்னீங்க ஞாபகம் இருக்கிறதா…?சாக்லேட்டா சாப்பிட்டு சாப்பிட்டு பல் எல்லாம் பாரு…  “என்று முறைப்புடன் சொல்ல ,அங்கே ஓடி வந்த ஜெயச்சந்திரனோ.,”பெரிம்மா நான் சாக்கி சாப்பிடவே இல்லை… நானு குடு பாயி… “என்றான். 

“நீ நல்ல பிள்ளையாக்கும் சமத்து… இங்க யார் எல்லாம் சமத்துப் பையன் “என்று ஜெய்யை தூக்கி கொண்டு ப்ருத்வியை பார்க்க, அவனோ வேகமாக வண்டியில் இருந்து கீழே இறங்கினான். 

“அம்மா நானும் நல்லப் பையா “என்றிட சிவா “டேய் நீயெல்லாம் நல்லா வருவ டா… “என்று புன்னகைக்க …. 

சித்திரை செல்வி “ஆயா மலரு… சீக்கிரம் வா அந்த காண்ட்ராக்ட் காரன் போன் பண்ணிக்கிட்டே கெடக்கான் “என்றதும் உள்ளே வந்தாள்.

“இதோ வந்துட்டேன் அத்தை.. “என்றவள் அலைபேசி வாங்கி பேசினாள். 

“இல்லண்ணா இந்த தடவை மெசின் வேணாம்… நாங்க ஆளை விட்டு அறுவடை பண்ணிக்கிறோம்… இல்ல நாங்களே பார்த்துக்கிறோம் நான் நேரடியாகவே சொல்றேனே உங்க கிட்ட கூலி அதிகமா இருக்கு…. விளைச்சலே சுமாரா தான் வருது… அதுல உங்க கூலியே முக்கால் வாசி போகுது… அப்புறம் மத்த கூலி எல்லாம் நான் எங்கிருந்து தருவேன்… உழுதவனுக்கு கலப்பை தான் மிச்சம் ங்கிற மாதிரி ஆகிப் போச்சு பொழப்பு… இல்லண்ணே இந்த தடவை வண்டி வேணாம் “என்று உறுதிபட கூறி விட்டு இணைப்பை துண்டித்தாள்.

“ஏத்தா வண்டி வேணாம்னுட்ட… நாம எறங்கி கருது அறுக்க முடியுமா சொல்லு”என்ற செல்வியிடம்… 

“இல்லத்தை இந்த முறை நாம தான் செஞ்சாகணும் போன தடவை வெறும் ரெண்டு மூட்டை நெல்லை கொண்டு வந்தோம் நினைவிருக்கா… நாம விதைக்கிறதே ஒரு வயல் ரெண்டு வயல் தான் அதையும் வீட்டுக்கு இல்லாம கூலி கொடுத்திட்டா என்ன செய்ய… அதிலும் நெல் மூட்டைக்கு கிடைக்கிற விலை கேட்கவே வேண்டாம் நாமளே பார்த்துப்போம் “என்றாள். 

“ஆமா அத்தை…. அதான் இத்தனை பேர் இருக்கோம் ல நாம பார்த்துக்கலாம்”என்றாள் சூர்யாவும். 

தோட்டத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டு தைப் பொங்கல் திருநாளை சிறப்பாக முடித்தனர்.

மறுநாள் கோமாதாவிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கலையும் முடித்தவர்கள் ஒரு வாரம் கழித்து தான் அறுவடையை துவங்கியிருந்தனர். வடிவரசியுடன் வந்து சேர்ந்தான் சங்கரபாண்டி. 

“குட்டிமா இந்த நெழலுல உட்காருங்க… அப்பன் பெரியப்பனுக்கு ஒதவி செஞ்சுட்டு வருவேனாம்… ஏம்ல அரசி நீ இங்கன இரு… அந்த பைக்குள்ள இருக்க ஜூஸை குடி…. மறந்துட்ட தோலை உரிச்சுப்புடுவேன்ல “என ஐந்து மாதமாக இருக்கும் மனைவியை பாசத்தை மிரட்டலாக காட்டி விட்டு தலையில் துண்டை கட்டி கொண்டு வேட்டியை மேலே இறுக்கி மடித்து கொண்டு சென்றான். 

“ஏன் யா நீ வேற இந்த வெயில்ல.. போய் உட்காரு சகல நாங்க வேலையை பார்த்துக்கிறோம்…. “என்ற தனஞ்செயனிடம்… “நம்ம வூட்டு சோலியை நாம தான் ல பார்க்கணும்… வா வா… நம்மளை வேத்தாளா நினைக்காத… எங்க சண்டிராணி வீட்டுக்காரரை காணலை … “என்றபடி கதிர் அரிவாளை கொண்டு நெல்மணிகளை அறுத்தான். 

“கண்வலிக்கிழங்கை கட்டி எடுத்து வச்சுட்டு இருக்கான்… ஆமா ஹார்பரில் எல்லாம் எப்படி போகுது.. ??” 

“அது போகுதுயா ஒரு மாதிரி… இந்த தடவை டெண்டர் எடுக்க வேணாம் னு பார்க்கிறேன்… அரசி மாசமா இருக்கா… கூட இருக்கலாம் னு இருக்கேன் அப்புறம் வேற ஏதாவது வியாபாரம் பண்ணலாம் நினைக்கேன்…. ஹார்பருக்கு போனா எப்படியும் ஊத்தி விட்டுர்றானுவ என் மவ வாடை அடிச்சா மொகத்தை சுளிக்குது…. நானும் அந்த கருமத்தை தொட வேணாம் னு பார்க்கிறேன் … வேலை செய்ற அலுப்புல குடிச்சிடுறேன்… அதுலயும் என் மவளுக்கு பேச வந்திடுச்சா…. அது கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியலை ல… அது பெரியம்மா கொணத்தை கொண்டு வந்து மூளையில வச்சிருக்கான் ஆண்டவன்….பார்க்கிற பார்வையிலேயே பஸ்பமாக்கிடனும் நானு “என்றான் மெதுவாக. 

“அது சரி … குடிக்காத சகல… மவளுக்காகனு இல்ல ஒன் உடம்பை பார்த்தா தான்… நீ உன் குடும்பத்தை பார்க்க முடியும்… “என்றான் தனஞ்செயன். 

இருவரும் பேசியபடியே நெற்கதிர்களை அறுத்தனர். 

ஆட்கள் போதவில்லை தான் இருப்பினும் சமாளித்து அறுவடையை முடித்தனர். 

மலர் வேலையை முடித்து விட்டு செங்காந்தள் மலரை பார்த்து கொண்டிருக்க,  சிவா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவளை பின்னிருந்து அணைத்தபடி.,”டீச்சர் பாப்பா என்ன பண்றீங்க… பொழுது சாஞ்சிடுச்சு… நாளைக்கு ஸ்கூலுக்கு போகணும்… மாமாவும் வேலைக்கு போகணும்… சீக்கிரம் வீட்டுக்கு போகலாமா …? “குழந்தையிடம் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தான். 

“சக்தி… உனக்கு ஏதாவது ஆசை இருக்கா… “என்று கேட்டாள் சம்பந்தமில்லாமல் .

“அதெல்லாம் நிறைய ஆசை இருக்கு டீச்சரம்மா… ஆனா இப்போதைக்கு உள்ள ஒரே ஆசை… உன்னை மாதிரியே ஒரு பொண்ணை பெத்து வளர்க்கணும் னு தான்… பெத்துக்கலாமா… ???”என்றவனை திரும்பி பார்க்க,

அவனோ மெதுவாய் “தம்பிக்கு மூணு வயசு ஆகிடுச்சு !!”என்று ராகம் பாடினான். 

“அதுக்கு என்ன சீக்கிரம் பெத்து தரேன் சிவசக்திபாலன்”என்றவள் அவனது பிடியிலிருந்து விலகி செங்காந்தள் மலரை வருடினாள். 

அவள் கூற்று புரியாது விழித்தவனிடம் .,”வீட்டுக்கு போகலாம் “என மலர் சொல்லும் போதே,  தினகரனும் பாக்யாவும் வந்து விட்டனர் தனது இரண்டு வயது மகன் சஞ்சய் உடன். 

“ஹேய் வாங்க .. வாங்க மருமகனே…. மாமா கிட்ட வா….” என தன் தங்கை மகனை வாங்கி கொண்டு அவர்களை விசாரித்து விட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர். 

நாட்கள் அழகாய் நகர்ந்திட… சிவா கூறியது போலவே முருகனின் சேவையை பற்றி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தான் …. நீண்ட கால முயற்சிக்கு பிறகே அதற்கான பலன் கிடைத்தது. 

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தில் விழா ஏற்பாடு செய்து… முருகனுக்கு பசுமைக்காவலன் என்ற விருதை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். 

“நான் மட்டும் இந்த விருதுக்கு தகுதியானவன் னு சொல்ல முடியாது சார்…எங்க ஊர் இளைஞர்கள் தான் இதுக்கு தகுதியானவங்க… நான் சொன்னதும் என்னை அலட்சியப் படுத்தாம உடனே ஆத்துவாரியில தூர் வாரும் வேலையை செஞ்சாங்க மொத்த செலவையும் ஏத்துக்கிட்டாங்க…. “என சிவா மற்றும் அவர்களது நண்பர்களையும் கை காட்டினார்… “அப்புறம் சின்ன விண்ணப்பம் சார்…. இந்த விருதெல்லாம் கொடுக்கிறதுக்கு பதிலா …. எங்க ஊருக்கு விவசாயம் செய்ய தேவையான வசதிகளை செய்து கொடுத்தா நல்லா இருக்கும் சார்… “என்றார் முருகன் .

“ஓஓஓ ஐ அன்டர்ஸ்டாண்ட் மிஸ்டர் முருகன்… நீங்க ஒரு வாரம் கழித்து என்னை வந்து பாருங்க…. இதை பற்றி பேசுவோம்”என்றார் ஆட்சியர்.  

சொன்னது போலவே ஒரு வாரத்தில் முருகனை அழைத்து பேசியவர் கண்டிப்பாக உதவி செய்வதாக கூறினார். 

முருகன்… அவரிடம் ஏரி குளங்களை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையையும் மரக்கன்றுகள் மேலும் நடுவதற்கு உதவியையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

ஆற்றுவாரி செல்லும் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்யும் வேலைகளை மேற்கொண்டனர் கருத்தம்பட்டி இளைஞர்கள். 

தங்களது சொந்த வேலைகள் இருந்தாலும் பொது சேவைகளையும் செய்தனர் இளைஞர்கள். என்றாவது ஒரு நா

ள் தங்கள் ஊர் ஆறும் , குளமும் நீர் நிரம்பி விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில். 

நாமும் அவர்களோடு காத்திருப்போம் பழையபடி விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில். 

இதுவரை பனிமலர் சிவசக்திபாலன் இருவரின் குடும்பத்தோடு பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல 

         ………. நிறைந்தது……