இரவோடு இரவாக தேவையான உபகரணங்களை வரவழைத்து ஷ்யாம் சுந்தரின் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டான் வெற்றி.
தந்தை சிசிடிவி கேமராக்களை பழுது என்று பொய் சொன்னது முதல் தன்னை திருவண்ணாமலை அனுப்ப முயன்றது வரை சொல்லி, கூடவே தந்தையை உண்மையை சொல்ல வைக்கவே தான் பழியை ஏற்றுச் சரணடைந்ததாகவும் முடித்திருந்தான்.
தான் சொல்லும் முன்பே எந்த இடத்திலும் மிருதுவின் பெயர் வராமல் அவன் அளித்த வாக்குமூலத்தில் மெச்சுதலான பார்வையுடன் கட்டை விரல் உயர்த்தினான் வெற்றி.
சோம சுந்தரம் அய்யாவிடமும் கல்லூரியில் அவ்வப்போது பெண்கள் மயங்கி விழுந்தது. கல்லூரி டிரஸ்டிக்கள் சேர்ந்து முருகானந்தம் பெயரில் கல்லூரியை மாற்றச் சொல்லி தன்னை வற்புறுத்தியது, அதைத் தொடர்ந்து தேஜஸ்வினி மாணவர் போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தியது என்று அவருக்குத் தெரிந்தவற்றை எல்லாம் பதிவு செய்து முடிக்க விடிந்து இருந்தது.
அதுவரையிலும் மிருதுவும் கூடவேதான் இருந்தாள். நள்ளிரவில் திருப்பி அனுப்ப விரும்பாத வெற்றி தன்னுடனே வைத்துக் கொண்டான்.
பொழுது விடிந்ததும் சோம சுந்தரம் கிளம்ப, மிருதுவையும் ஹாஸ்டலில் தானே விட்டுவிடுவதாக கூறவும் மறுக்கவில்லை அவன்.
கொழுந்தியாவின் தலையைப் பிடித்து ஆட்டி, ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தான்.
எல்லாம் நல்லபடியாய் முடிந்திருக்க அவனுக்கு மனைவியைத் தேடியது.
நேற்று அள்ள அள்ள அட்சயப் பாத்திரமாய் அவளில் அமுதுண்ட நினைவு வேறு நேரங்காலம் பாராமல் இம்சிக்க இதழ்களில் வெட்கப் புன்னகை தோன்றி மறைய,
“நீ கொஞ்சநேரம் தூங்கி ரெஸ்ட் எடு ஷ்யாம்” என்றவன் அலைபேசியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தவன் உற்சாகமாய் மனைவிக்கு அழைத்தான்.
விடுமுறையில் இருந்தவள் இன்னும் தூக்கக் கலக்கத்தில் இருக்க, அலைபேசியை எடுத்து ஒலிவாங்கியில் போட்டுவிட்டு கண்ணைத் திறக்காமல் கிடந்தாள் எழிலரசி.
“என்னடி பண்ற என் குண்டு பெருச்சாலி! காதுக்கருகில் ஒலித்தக் கணவனின் குரலில் படக்கென விழி திறந்தாள்.
“ஓரே நாளில் மூஞ்செலி குண்டு பெருச்சாளி ஆகிட்டேனா?” தூக்கத்தோடே சண்டையிட்டாலும், கணவனின் குரலில் இருந்த உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ளத் தவறவில்லை.
“நேற்று தானே என் பொண்டாட்டியோட வெயிட் என்னன்னு தெரிஞ்சிது…” என்றவனின் சிரிப்பில் முகம் சிவந்துவிட, முழுதாய் தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்தாள்.
“நேற்று நெஞ்சில ஏறின பாரம் இன்னும் இறங்கவே மாட்டேன்னு அடம் பிடிக்குது. மூச்சு முட்டுதுடி குண்டூஸ்..” கணவனின் கிறங்கி ஒலித்தக் குரலில் இன்னும் இன்னும் சிவக்க,
“அதுக்குதான்டி சொல்றேன். வீட்லயே இருந்து என் அய்த்த போட்ட சோத்துல இன்னும் குண்டாகிட்டா மாமன் பாவம்ல… ஜாகிங் கீகிங்னு போறது…”
“யோவ்! எஸ் பி, காலைலயே உங்களுக்கு வேலை இல்லையா?” என்றாள் போலி கோபத்துடன்.
“வேலை இல்லன்னா இப்படியா பொண்டாட்டிக்கிட்ட போன்ல கடலை போடுவேன், இந்நேரம் என் பொண்டாட்டியத் தூக்கிக் கட்டில்ல போட்டிருக்க மாட்டேன்…”
“ரொம்ப ஓவரா போறிங்க எஸ் பி!” என்றாள் அலைபேசியில் முறைக்க முடியாமல்.
“ஓவரா போக முடியலையேன்னு தான்டி குண்டூஸ் மாமனுக்கு வருத்தமே…” விடாமல் வம்பிழுக்க, “யோவ், போலீஸ் மாமா…” என்றவள் அதற்கும்மேல் முடியாது அலைபேசியை துண்டித்துவிட்டாள்.
“குண்டூஸ்… வெற்றி.. குண்டூஸ்..” வெற்றியை சரியாகக் காணாத ஏக்கத்தில் அலைபேசியில் அவன் குரலைக் கேட்ட மயிலா அவன் சொன்னதையே திரும்பச் சொல்லிக் குதிக்க, “அவனுக்கும் மேல கொழுப்புடி உனக்கு” என்றவள் எழுந்து ஆளுயுரக் கண்ணாடியில் தன் முழு உருவம் கண்டாள்.
‘அப்படி ஒன்னும் குண்டா இல்லையே’ என்று உடலை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தவள் நிச்சயம் உயரத்திற்கு ஏற்ற அளவில் அம்சமாகத்தான் இருந்தாள்.
ஆனாலும் அந்த குண்டூஸ் உறுத்த ஷூ சாக்ஸ் அணிந்துக் கொண்டு காலை ஓட்டத்துக்கு கிளம்பி இருக்க,
விடியும் விடியாத காலை வேளையில் வெற்றியின் கட்டளையின் பெயரில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த லீலாவின் மகனை அப்படியே குண்டு கட்டாகத் தூக்கிவர,
லீலாவும் அவளது கணவரும் பதறிக்கொண்டு வர, “எதுவா இருந்தாலும் எஸ் பி சார் கிட்ட பேசிக்கோங்க” என்றுவிட்டு வந்திருந்தனர்.
“கஞ்சா… கேஸ் மேடம்… புரியல கஞ்சா..கஞ்சா” என்றவன் நக்கலாய், “கஞ்சா வேணும்னு கேட்டு அடம் பண்ணி தெருவுல சண்டை போட்டிருக்கான் உங்க பையன்” என்றான்.
“சார் என் பையன் அப்படிப் பட்டவனில்ல. இப்போதான் ப்ளஸ் டூ வே முடிச்சிருக்கான். நீங்க எதோ தெரியாம… சின்னப் பையன் சார் அ…” முடிக்கும்முன் கோவத்தில் நாற்காலியைத் தள்ளிக்கொண்டு முன்னால வந்தான், வெற்றி.
“மிருதுவ பார்த்தா சின்னப் பிள்ளையா தெரியலையோ?” என்று உறுமியவனின் கோவத்தில் மிரண்டாள் அவள்.
பையனைத் தூக்கியது எதற்காக என்று புரிந்துவிட காவல்துறை நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற பயத்தில் தனக்குத் தெரிந்த அனைத்தையும் உளறிக் கொட்டினாள் லீலா.
“என் பையனுக்கு டாகடர் சீட் வாங்கித் தரேன்னு சொன்னதாலதான் சார் தெரியாம தப்புப் பண்ணிட்டேன்” என்றவள் கெஞ்ச, சின்னப் பையன் என்பதால் சிறையில் கூட அடைக்காமல் அங்கிருந்த பெஞ்சில் அமரவைத்திருந்தப் பையனிடம் “போ” என்று தலையசைத்தான்.
தாயைத் திரும்பியும் கூட பாராது தந்தையின் அருகில் வந்த அந்தச் சிறுவன், “அப்பா, என் திறமைக்கே அந்த டாக்டர் சீட் கிடைச்சாலும் இனி நான் அதைப் படிக்கப் போறதில்ல. எனக்கு வேற எதாச்சும் கோர்ஸ்ல சேர்த்து விடுங்க. முக்கியமா ஹாஸ்டல் இருக்க காலேஜ்ல” என்றான் திடமாக.
வெற்றி சிறுவனை மெச்சியப் பார்வைப் பார்க்க, பதறி திரும்பிய லீலா, “பைத்தியமாடா பிடிச்சிருக்கு உனக்கு? உங்கப்பா டாக்டர், நானும் டாக்டர். நீ வேற படிப்பியோ?” என்றாள் கோவத்தில்.
“பைத்தியம் எனக்கில்லம்மா. உங்களுக்குதான் பிடிச்சிருக்கு. ஒருவேளை நீங்க காட்டிகுடுத்த அக்காக்கு எதும் நடந்திருந்தா என்னமா பண்ணிருப்பீங்க?” அதுவரை தாயின் வாக்குமூலத்தைக் கேட்டிருந்தவன் தாயிடமே கேள்விக் கேட்டான்.
“டாக்டர் ஆகறதுக்கே ஒருத்தங்கள கொன்னுதான் நான் அதைப் படிக்கணும்னா, நான் எப்படிம்மா உயிரைக் காப்பாத்துற டாக்டர் ஆக முடியும்? ஐ கான்ட் டைஜஸ்ட் வாட் யூ டிட். எனக்கு இனி உங்க முகத்தைப் பார்த்தாலே செத்துப் போன அந்தக்கா ஞாபகம்தான் வரும்.” என்றவன் தந்தையிடம் திரும்பி, “ஹாஸ்டல்ல சேர்க்கிற வரை என்னைப் பாட்டி வீட்ல விட்டுருங்கப்பா” என்றவன் வெளியில் நடக்க விக்கித்து நின்றாள் அவனது தாய்.
வெற்றிக்கு சபாஷ் போட தோன்றியது. உறவுகளுக்காக குற்றம் புரிவதை அந்த உறவுகளே மறுத்துத் தண்டித்துவிட்டால் அதைவிடப் பெரிய தண்டனை என்ன இருக்கிறது.
அப்போது வெற்றியின் அலைபேசி அலற அவன் முகம் இருண்டது. சோம சுந்தரத்தைத் தாக்கிவிட்டு மிருதுவை கடத்தி இருந்தனர்.
அதேநேரத்தில் அம்மு ஓட்டத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்க, எதிர் திசையில் ஓட்டத்தில் வந்துக்கொண்டிருந்த ஒரு ஆணும், பெண்ணும் ஓரே நேரத்தில் அம்முவின் முகத்தில் எதையோ ஸ்ப்ரே செய்துவிட்டுக் கடந்து செல்ல, மயக்கமடைந்திருந்த அம்மு எழிலரசியும் கடத்தப் பட்டாள்.
“அட நம்ம போலீஸ்காரக் குட்டி. வாம்மா வா..வா! நீ என் ஸ்பெஷல் கெஸ்ட் ஆச்சே” முகமூடி அணிந்திருந்த சங்கரும், மோனியும் ஆளுக்கொரு கையைப் பற்றியிருக்க, இன்னும் தெளிந்தும் தெளியாமல் அரை மயக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த அம்முவை ஆர்ப்பாட்டமாய் வரவேற்றார் சுயம்புலிங்கம். அது அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய கருப்புக் கோட்டை.
“என்னடா பிள்ளை முகம் வாடிக்கிடக்கு மயக்க மருந்த அதிகமா அடிச்சிட்டீங்களோ?” என்று பக்கவாட்டாகத் திரும்பி கோபித்துக் கொள்ள, அம்மு நிமிர்ந்து கண்ணை உருட்டினாள்.
அன்று போலவே ஒருபக்கச் சுவற்றில் ஒற்றைக் காலை மடக்கி சுயிங்கத்தை மென்றபடி சாய்ந்து நின்றிருந்த விக்டர்தான் முதலில் அவள் கண்ணில் பட்டான்.
அவள் தன்னைப் பார்க்கவும், “ஹாய்” என்றான் தன் கரகரத்தக் குரலில்.
அந்தக் குரலில் முழுதாகத் தலையை உதறிக் கொண்டவள் தன்னைச் சுற்றிப் பார்வையிட, எதிரில் சுயம்பு லிங்கமும், பக்கவாட்டில் தெரிந்த நீள் இருக்கையில் முருகானந்தமும் அமர்ந்திருந்தனர். கூடவே சில தடித்தாண்டவராயன்களும்.
மீண்டும் பார்வையை விக்டரின் பக்கமாய்த் திருப்பியவள் தீயாய் முறைத்துவிட்டு சுயம்புலிங்கத்தை ஏறிட்டாள். நாட்டின் கல்வி அமைச்சரைத் தெரியாமல் இருக்குமா?
அவள் பார்வைச் சுருங்க, “டேய் பாப்பா தெளிஞ்சிருச்சிப் பாரு ஜூஸ் கொண்டாங்கடா” எனவும், புன்னகையுடன் விக்டர் அவள் உதட்டின் அருகில் ஆரஞ்சுப் பழச்சாறை கொண்டுவர, அவள் பார்வையில், “சார் மேடம்க்கு ஆரஞ்ச் பிடிக்காது போல” என்றான் கேலியாக.
“அட நீ வேற! பாப்பா எதும் கலந்திருப்போம்னு சந்தேகப்படுது. இங்க குடு நான் குடிச்சிட்டுத் தரேன் பாப்பா குடிக்கும்” என்றவர் வெடிச்சிரிப்புடன் கை நீட்ட,
“உங்களுக்கு சுகர். நானே குடிச்சிக் காமிக்கிறேன்” என்றவன் மடக் மடக் என இரண்டு சிப் அருந்திவிட்டு அதே கேலிப்புன்னகையுடன் அவள் உதட்டருகில் கொண்டு செல்ல, அவனை அழுத்தமாகப் பார்த்தவள், மறுக்காது, ஒரே மடக்கில் குடித்து முடிக்கவும் விக்டரின் விழிகள் விரிந்து கொள்ள,
“அஸ் அ ஐபிஎஸ் நீங்க கூப்பிட்டு அனுப்பி இருந்தாலே வந்து பார்த்திருப்பேனே. கல்வி அமைச்சர் கூப்பிட்டு நோ சொல்ல முடியுமா?” என்றாள் தன் பக்கவாட்டில் பிடித்துக் கொண்டிருந்த இருவரையும் பார்வையால் சுட்டி.
அதில் கடத்தி வரவேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியும் இருக்க, அதைக் கண்டு கொள்ளாமல், “என் ஆறாப் பகை முடிக்கவந்த கொலசாமிக்கு தெளிஞ்சிருச்சி டா” என்று குதூகலித்தார் சுயம்பு லிங்கம்.
“நீங்க இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லல” என்றவளை இடைமறித்து, “நீ முதல்ல என் பையன் எங்க இருக்கான்னு சொல்லுடி” என்று முருகானந்தம் எகிற,
“இருய்யா, பாப்பா என்னவோ கேட்குதுல்ல! மும்பை போனதும் திரும்பி வருமோ வராதோ, எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டே போகட்டும். அப்போதான எனக்கும் பழிவாங்கின திருப்தி கிடைக்கும்” என்று வெடிச் சிர்ப்பு சிரித்த சுயம்பு லிங்கம்,
“எல்லாத்துக்கும் உன் அப்பன் தான்டி காரணம். அவன் கிட்டப் போய்க் கேளு! ஒரு கொலைகாரிய ஏன் கட்டினன்னு” என்றார் சீற்றமாக.
அம்மு திகைத்து விழிக்க,
“உன்னை ஏன் தூக்கிட்டு வந்தேன்னு தான தெரியனும். உன்னை மட்டுமில்ல உன் குடும்பத்தையே கருவறுப்பேன்.
பிள்ளை இல்லாம பலநாளா எங்கக்கா தவமிருந்து பெத்தப் புள்ளடி என் மருமகன். அவனைக் கொன்னு, நான் ஜெயில்ல இருந்து வரதுக்குள்ள என் குடும்பத்தையே நிர்மூலமாக்கிட்டு அதுக்குக் காரணமானவளையே கட்டி இரண்டு பிள்ளையையும் உன் அப்பன் பெத்து வச்சிட்டா விட்டுருவேனா நான். ஆனா சும்மா சொல்லக் கூடாது, உங்கம்மாவ, அடையாளமே தெரியாம உருமாத்தி வச்சிருந்தான்.
அவள என் கண்ணுல காட்டிக் குடுத்த குலசாமியே நீதான்.” என்றதும் அம்மு அதிர, பார்வை ஒருமுறை விக்டரைத் தீண்டி மீண்டது.
“அன்னைக்கு பட்டமளிப்பு விழாவில குடுத்த பார்த்தியா ஒரு ஸ்பீச், “என் தங்கச்சி சின்ன வயசுல எங்க அம்மா இருந்தா மாதிரியே இருப்பா, அதனாலயே அவளை எனக்கு ரொம்பப்புடிக்கும். அவளை இந்தத் தருணத்தில் ரொம்ப மிஸ் பண்றேன்” அன்று அம்மு எழிலரசி பேசியதைப் போலவே கேலியாகப் பேசிக் காண்பித்தார் சுயம்புலிங்கம்.
“அன்னைக்கு கல்வி அமைச்சர்ங்கிற முறையில சீஃப் கெஸ்ட்டா வந்ததே நான் தான்டி. ஏற்கனவே வளைஞ்சே குடுக்காத உங்கப்பனைப் புடிக்காது. அதே குரோதத்தில மேடையில என் பக்கத்தில் உடகார்ந்திருந்த உன் அப்பனை பார்த்திட்டு இருக்கும்போதுதான் பக்கத்து சீட்ல உட்கார்ந்திருந்த உன் அம்மா கண்ல பட்டா.
என் ஓரே மருமகனைக் கொன்னவள கனவுலயும் மறக்க முடியுமா? பார்த்ததுமே சின்ன அதிர்ச்சி. ஆனா அவதானான்னு சுத்தமாத் தெரியல. அப்போதான் உன்னோட இந்த ஸ்பீச் கேட்டதும் உன் தங்கச்சி யாருன்னு பசங்கள வச்சி வலைபோட்டுத் தேடினேன்.
அவ போட்டோவோட ஜாதகத்தையே கொண்டு வந்து நீட்டிட்டானுங்க. சும்மா சொல்லக்கூடாது. உன் தங்கச்சி சின்ன வயசு திவ்யபாரதிய 75% உரிச்சு வச்சிருந்தா. இருந்தாலும் சந்தேகம் தீரணுமே…
உன் தங்கச்சிப் படிச்ச காலேஜ்லதான் என் சொந்தக்காரப் பொண்ணு லீலா ப்ரோஃப்ஸரா இருந்தா, அவகிட்ட சொல்லி, பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிக்கிட்ட யாராவது குடும்பத்தில இருந்தா அப்போ இப்போன்னு இரண்டு போட்டோவையும் கொண்டு வரச் சொல்லுன்னேன். அவளும் அதை சந்தேகம் வராதமாதிரி எல்லா ஸ்டூடண்ட்ஸ் கிட்டயும் கேட்க, லட்டா உன் அம்மா போட்டோவக் கொண்டு வந்துக் குடுத்தா உன் தங்கச்சி.
அதில இருந்த லேட்டஸ்ட் போட்டோவத்தான் கூலிப்படைக்கு அனுப்பி அவளைக் கொல்லச் சொல்லி இங்க வரவச்சேன். ஆனா உன் புருஷன் எப்படியோ கண்டுபிடிச்சி என் கவுண்டர்ல அவனுங்கள சுட்டுக் கொன்னுட்டான்” என்றதும் அதுவரைத் திடமாக நின்றிருந்தவளின் விழிகள் கலங்க, அதைக் காண்பிக்க விரும்பாது பக்கவாட்டில் திரும்ப,
அதே சுயிங்கத்தை மென்றபடி அலட்சியமாகப் பார்த்திருந்தான் விக்டர்.
“உங்க அம்மாவக் கொல்ல முடியாத ஆத்திரமெல்லாம் சேர்ந்து அவளை மாதிரியே இருந்த உன் தங்கச்சி மேல திரும்பிச்சி” என்றதும் சுயம்புலிங்கத்தின் மேல் பாய வந்தவளை விக்டரின் கண்காட்டலில் இறுக்கிப் பிடித்தனர்.
“துள்ளாத பாப்பா. இன்னும் இருக்கு” என்ற சுயம்பு லிங்கம்,
“ஏற்கனவே, லீலாவ உன் தங்கச்சி மேல ஒரு கண்ணு வச்சிக்க சொல்லி, சொல்லி இருந்தேன். அவ சொல்லிதான் இந்த ஷியாம் பய உன் தங்கச்சி பின்னாடி சுத்தறது தெரியும்…”
“தெரிஞ்சிதான் மிருதுவை மாட்டிவிட அவளுக்கேத் தெரியாம லீலாவ வச்சி, கொகைன் கேட்டு தேஜூக்கு வாட்சப் அனுப்பச் சொன்னீங்களோ?” என்று வந்து நின்றான் ஷ்யாம். அவனை இருவர் பிடித்துக் கொண்டிருக்க, பின்னாடியே தன் பெரிய உடம்பைத் தூக்கிக் கொண்டு வந்தான் பகவான் தாஸ் பேடி.
“அன்னைக்கேச் சொன்னேன்ல லிங்காஜி. உன் ஆளுதான் பையனை மறைச்சி வச்சிருக்கார்ன்னு. அந்த தேஜஸ்வினி பங்களாலதான் பையனை மறைச்சி வச்சிட்டு நாடாகமாடி இருக்கான் இந்த ஆள்.” என்ற பகவான் தாஸை கண்டு கொள்ளாமல்,
“ஷியாம்” என்று உணர்ச்சிப் பொங்க முருகானந்தம் மகனை நெருங்க, “எங்கம்மாவ கொன்ன மிருகம் நீ!” என்று ஒதுங்கினான் அவன்.
அவர் அதிரவும், “சித்தப்பான்னா இன்னோரு அப்பான்னு அர்த்தம். பொண்ணு மாதிரி வளர்த்தவளைப் போய் ரேப் பண்ணி கொலை பண்ணச் சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சி!” என்று சீறினான்.
“யோவ் என் பையன் அங்க போறான்னு உனக்கு முன்னாடியே தெரியுமா? தெரிஞ்சிதான் அந்த பிள்ளைய கெடுத்து கொல்லச் சொன்னியா?”என்று சுயம்புலிங்கத்திடம் தன் கோபத்தைக் காட்ட,
“அறிவு இருக்காய்யா உனக்கு? இவ தங்கச்சியை கொலை கேஸ்ல மாட்டி விட நினைக்கிறவன் ரேப் பண்ணவா சொல்வேன்?” என்றதும் அம்முவின் விழிகள் அதிர்ந்து விரிந்தது. கணவன் ஏன் இவ்வளவு தூரம் தன்னிடம் மறைக்க முயன்றான் என்று புரிந்தது.
“நான் கொல்ல மட்டும்தான் சொன்னேன். அந்த எச்ச நாய்ங்கதான் கையெழுத்து கூட வாங்க முன்னாடியே அவசரப்பட்டு பாய்ஞ்சி என் திட்டத்தையே சொதப்பிட்டானுங்க. அவளும் தன்னையே எரிச்சிக்கிட்டா” என்றார் தன் திட்டம் சொதப்பிய எரிச்சலில்.
“எரிஞ்ச உடம்புல ரேப் பண்ண தடயத்தைக் கண்டுப் பிடிக்க முடியாதுன்னுதான். ஆளுங்கள விட்டு அந்த மிருத்து வண்டில கொக்கைன் பாக்கெட்ட வைக்கச் சொன்னேன்.” என்றதும் அம்மு திகைத்து நிற்க,
“எல்லாத்தையும் உன் புள்ள பழி ஏத்துக்கிட்டு கெடுத்துட்டான். இல்ல அவளை…” என்று பல்லைக் கடித்த சுயம்புலிங்கத்தைப் பார்த்து, “உன்னால ஒரு ஆணியும் புடுங்கி இருக்க முடியாது” என்றாள் அம்மு எழிலரசி.
“எல்லாம் சரியா திட்டம் போட்ட நீ உன் பொண்ணுக்கு நல்ல புருஷனையும் தேடித் தந்திருக்கனும் அமைச்சரே! அந்த பொம்பளைப் பொருக்கி தேஜஸ்வினி பப்ளிகேஷன்ல வேலை செய்ற பொம்பளைங்க கூட நீதிக்கதைகளுக்கும் கொகைனுக்கும் நடுவுல கூத்தடிச்ச வீடியோ இருக்கு பார்க்கிறியா? ஸ்பெஷல் ஷோ! மிட்நைட் மசாலா” என்றாள் கண் சிமிட்டி.
அதிர்ந்த சுயம்புலிங்கம், “உன்னைய காலேஜ்குள்ள கால் வச்ச அன்னைக்கே கொன்னுருக்கனும் டி” என்று பாய்ந்து வர,
அவரின் அடி வயிற்றில் ஓங்கிக் காலால் எட்டி உதைத்தாள் எழிலரசி.
அவர் வயிற்றைப் பிடித்துக்கொண்டு தடுமாற, “ஏய்…” என்று நாற்புறமும் இருந்து பாய்ந்து வந்த தடித்தாண்டவராயன்களுக்கு முன்னால் அம்முவை நெருங்கி இருந்த விக்டர் அவள் ஒருக்கையை முதுகுக்குப் பின்னால் வளைத்து கழுத்தில் கத்தியை வைத்திருந்தான்.
அதற்குள், தடுமாறிய சுயம்பு லிங்கம், ஷியாமின் மீது மோதி நிற்கவும், “எல்லாம் இவனால வந்தது” என்று உணர்ச்சி வேகத்தில் முருகானந்தம் இருப்பதை மறந்து ஷியாமின் கழுத்தைப் பிடிக்க,
“என் பையனை மாட்டி விட்டதும் இல்லாம கொல்லப் பார்ப்பியா நீ” என்ற முருகானந்தம் ஒரு பக்கம் சுயம்பு லிங்கத்திடம் பாய்ந்தார்.
“நீங்க இவங்களைப் பாருங்க, நான் இவளைப் பார்த்துக்கிறேன்” என்ற விக்டர் தடித்தாண்டவராயன்களுக்கு கண்காட்ட,
“யோவ் முதல்ல அவளைக் கொல்லு” என்ற சுயம்பு லிங்கம் மீண்டும் அம்முவிடம் திரும்ப,
“நோ! லிங்கா ஜி! அவ பொன் முட்டை இடுற வாத்து. அந்த முட்டை எனக்கு வேணும்” என்று தடுத்திருந்தான் பகவான் தாஸ்.
“அவளை பத்திரமா அந்த ரூம்ல அடைச்சி வை விக்டர். அப்படியே அந்த வீடியோ ஆதாரம் எங்க வச்சிருக்கான்னு விசாரி. கவனமா ஹேண்டில் பண்ணு. உன் முரட்டுத் தனத்தைக் காட்டாத, மும்பை போற ட்ரக் இப்போ வந்திடும்” என்ற பகவான் தாஸ்,
“நமக்குள்ளயே அடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி?” என்று முருகானந்தம் மற்றும் சுயம்பு லிங்கத்தின் நடுவில் புகுந்தான்.
அம்முவை தனி அறைக்குள் தள்ளிக்கொண்டு வந்தவனோ, “அவர் யாருன்னு தெரிஞ்சுமா அவர் மேல கையை வைக்கிற” என்று அவள் கையை முதுகுக்குப் பின்னால் பிடித்து வளைக்க, “அவன் ஒரு பொருக்கி” என்றாள் உதடு வளைத்து.
“இந்த வாய்க்குதான்டி இவ்ளோ அனுபவிக்கிற. இந்த வாயை என்ன பண்ணினா தகும்” என்றவன் கையை வளைத்துப் பிடித்தே அவள் இதழ்நோக்கிக் குனிய அசராமல் நின்றவளில் விக்டரின் கண்கள் விரிந்தது.