சாய்ராம்…

அத்தியாயம் : 1

“ஹேய் அம்முகுட்டி செம்மயா இருக்க!”

தன் காதுக்கருகில் கேட்ட குரலில், தங்கையிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அம்மு எழிலரசி திரும்பினாள்.

அவள் மாமன் கார்த்திதான் அவளை செல்லமாக அம்முக்குட்டி என்றழைப்பான். 

‘வேறு யார்?’ இந்த கரகரத்த குரல் தன் மாமனுடையது இல்லை என்றதும் அலைபேசியில் பேசிக்கொண்டே விழிகளால் துழாவினாள்.

“என் செல்ல அம்மு! என் பட்டு அம்மு!” மெரூன் நிற ஜெர்கின் அணிந்த ஒருவன், அவளுக்கு முதுகுக் காட்டி நின்றபடி குழந்தை ஒன்றிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

‘உலகத்துலயே அம்முன்னா நீதானா? உன் வாய்க்கு ஒரு பைய உன்னைக் கொஞ்சமாட்டான்.’ அவள் மனசாட்சி மானங்கெட்ட கேள்வி கேட்டது. 

தாயின் கைப்பிடித்து நின்ற சிறுமியிடம் சாக்லெட் ஒன்றைத் திணித்து “க்யூட் கேர்ள்” என கன்னத்தைக் கிள்ளி அவன் முத்தம் வைக்க, கொழு கொழு பப்பாளியாய் இருந்த அந்தக் குழந்தையை இரசித்தபடி விலகி நடந்தாள். 

 “ஏய் மிரு! வந்துட்டியா டி? இன்னும் பத்துநிமிஷத்துல ஏர்போர்ட்லருந்து வெளில வந்துடுவேன்.” தங்கையிடம் பேச்சைத் தொடர்ந்தபடி நடையை எட்டிப் போட்டாள்.

“ஆமா உன்னைய பிக்கப் பண்ணத்தான் என்னைய நேர்ந்து விட்ருக்காங்க பாரு. ஆட்டோ பிடிச்சி வாடி!” தங்கை அந்தப் பக்கம் வாயடிக்க, “கொஞ்சமாச்சும் அக்காங்கிற பாசம் இருக்கா உனக்கு? பாசம்தான் இல்ல போலீஸ்காரிங்கிற பயமாச்சும் இருக்கா?” என்றதும் அந்தப்பக்கம் கேலியாகச் சிரித்தாள் அவளது தங்கை மிருத்யூஸ்ரீ.

“இன்னும் ட்யூட்டில ஜாய்ன் பண்ணவே இல்ல அதுக்குள்ள இந்த அலப்பறையா? போடி சர்தான்!” உனக்கு நான் சளைத்தவள் அல்ல என சரிக்குச் சரி நின்றவளில் புன்னகை எழும்பியது.

“இருடி உனக்கு வீட்டுக்கு வந்து வச்சிக்கிறேன்” என்று தன் உடமைகள் அடங்கியப் பெட்டியைத் தள்ளிக்கொண்டு நடந்தவள் “எக்ஸ்க்யூஸ்மீ மேடம்” என்ற குரலில் திரும்பினாள்

அவனேதான் மெரூன் நிற ஜெர்க்கின் பார்ட்டி. சென்னை வெயிலில் ஜெர்கினா? என்று இவள் மிரள அவளிடம் கையிலிருந்த சாக்லேட் ஒன்றை நீட்டினான். சட்டென அவள் முகம் மாறியது.

கண்ணில் அணிந்திருந்த குளிர் கண்ணாடி முகத்தில் பாதியை மறைத்திருக்க மீதி முகத்தை தாடிக்கும் மீசைக்குமாய் குத்தகைக்கு விட்டு அதை சர்வ நேர்த்தியாய் பராமரித்திருந்தவனை

பார்வையால் அளந்தபடி ‘என்னவென’ விழியுயர்த்தினாள். 

அதில் ‘யார் நீ?’ என்ற கேள்வியும் அதிகாரமாய் தொக்கி நின்றது.

ஏன்? எதற்கு? என்ற ஆராய்ச்சி இல்லை. குறைந்தபட்சம் பிறந்தநாளாக இருக்குமோ? என்ற ஆர்வமும், கணிப்பும் இன்றி நீ முதல் பதில் சொல்! என்ற கண்டிப்பு இருந்தது அவள் பார்வையில். அந்த ஆளுமையில் ஒருநிமிடம் அசந்து நின்றான்.

அவன் முகத்துக்கு நேராக சொடக்கிட்டவள், “ஹலோ! கூப்பிட்டா பேசணும் பட்டினிக்காரன் பிரியாணியப் பார்த்தா மாதிரி எட்டிப்பார்க்கக் கூடாது. எதுக்காக என்னை நிறுத்துனீங்க?” என்றாள். பட்டாசாகப் பொரிந்தாலும், அதில் அதிகாரத்தைக் காட்டினாள்.

அதுவரை, எச்சரித்து எட்டி நிறுத்தும் அவளது விழிகளையே ஆர்வமாகப் பார்த்திருந்தவன் சுயம் கலைந்தான். 

“பட்டினிக்காரன் முன்னாடி பிரியாணிய வச்சது உங்க தப்புதானே மேடம்?” சன்னமாய் சிரித்தவனின் பார்வை பெண்ணவளின் அழகிய வதனத்தில் நிலைத்திருந்தது.

அவன் அணிந்திருந்த பெரிய குளிர் கண்ணாடி அவனின் முகத்தை மட்டுமில்லாது, அவன் பார்வையின் தடத்தையும் ஆராய வழியின்றி முற்றிலுமாய் மறைத்திருக்க, தன்னைத்தான் பிரியாணி என்கிறான் என்பது மட்டும் புரிந்து தீயாய் முறைத்தாள். 

“நான் யாருன்னு தெரியாம வாயைவிட்டு வாங்கிக் கட்டிக்காதீங்க மிஸ்டர்!” என்றாள் எச்சரித்து.

“எப்படி? கொஞ்சம் முன்ன உங்க தங்கைக்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டீங்களே அதுபோலவா?”அவனின் இதழ்கள் மெல்லிய சிரிப்பில் துடித்தது.

அவளது கோபப் பார்வையில், “சாரி! நீங்க யாருன்னு வீராவேசமா உங்க தங்கைகிட்ட சொல்லும்போதே கேட்டுட்டேன்!”

என்றவனின் இதழ்கள் புன்னகையை அடக்கப் படாதப் பாடு பட்டான்.

இது ஏர்போர்ட் என்ற காரணமும் வரும்போதே பிரச்சனையை இழுத்திட்டு வந்தியா? என்ற தாயின் வசவுக்காகவும் பொறுமையைக் கடைப்பிடித்தாள். 

“ஒட்டு கேட்கிறது ரொம்ப நல்ல பழக்கம். கீப் இட் அப்! என்றவள், பிரச்சினையின்றி அவனை தவிர்த்து விட முயன்று வேகமாய் நடந்தாள்.

“நானா கேட்டாத்தான் தப்பு மேடம்! உங்க போன்தான் ஊருக்கே சொல்லுதே!” என்று அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்தவனின் பார்வை அவள் கையிலிருந்த பழைய மாடல் அலைபேசியில் பதிந்தது.

“போனை எனக்கு பண்ணிட்டு அங்க யார்கிட்டடி பேசிட்டு இருக்க எரும எரும…” அக்கா யாரிடமோ பேசுகிறாள் என்றெண்ணி அதுவரை அலைபேசியில் பொறுமை காத்த அவளது தங்கை, பொறுமையிழந்து கத்தினாள். அது அலைபேசியைத் தாண்டி வெளியில் வரை கேட்டது. 

அவனின் சிரிப்பு கூடிப்போக அவள் காணாது முகத்தை அந்தப் பக்கமாய் திரும்பிக்கொண்டான்.

“கத்தாதடி! திருப்பி கூப்பிடுறேன் வை” என துண்டித்து கையிலிருந்த அலைபேசியை கடுப்பாய் முறைத்தாள். ‘ட்ரெய்னிங் முடிஞ்சி உன் சம்பளத்துல வாங்கிக்க’ என்ற தாயின்மேல் சம்மந்தமே இல்லாமல் கோபம் வந்தது. 

தங்கைக்காகச் சண்டையிட்டு சமீப ரக அலைபேசியை வாங்கிக் கொடுத்தவளால், தனக்காக வாங்கிக் கொள்ள தோன்றவில்லை. தாய் சொன்னதுபோல் தன் சம்பளத்தில் வாங்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்துவிட்டாள்.

அவனின் இதழோரம் இன்னும் சிரிப்பில் துடிப்பதைக் கண்டவள் ‘எல்லாம் என் நேரம்’ என்றபடி அவனைத் தாண்டிக்கொண்டு நடந்தாள்.

“போலீஸ்னா அழக பாராட்டக்கூடாதுன்னு உங்க சட்டம் எதும் சொல்லுதா மேடம்?” மீண்டும் நெருங்கி வந்து வம்பிழுத்தான். அவளது பொறுமை பறந்திருந்தது.

ட்ராலியை ஓரமாய் விட்டுவிட்டு, நிதானமாய் நின்று திரும்பினாள். 

“பிரியாணியை எப்போ அழகுல சேர்த்தாங்க? எனக்குத் தெரியாதே!” என்றவள் அணிந்திருந்த பிங்க் நிற முழுக்கை டீ சர்ட்டை லேசாக கை முட்டி வரை இழுத்துவிட்டு கைகள் இரண்டையும் நெஞ்சில் மடக்கி வைத்துக்கொண்டு நின்றாள்.

“இப்ப என்ன உங்க பிரச்சனை? ம்ம்… சொல்லுங்க?”

அவள் கேட்ட தோரணையில், ‘நீ செத்தடா மகனே’ என்று படபடத்தாலும், இதயத்திலும், அடிவயிற்றிலும் ஒருசேர மின்னல் தாக்கியதை நிச்சயம் உணர்ந்தான். 

அவள் நின்றிருந்த தோற்றம் அவனது இரசனையைக் கூட்ட, 

மெல்லிய சிரிப்புடன், “ஓகே லீவ் இட் மேம். நான் அதுக்காக வரல! என் நோக்கமும் அது இல்ல. உங்க தங்கச்சிட்ட பேசினது கேட்கவும் என்னையறியாம கொஞ்சம் கலாய்ச்சுட்டேன். சாரி!” என்று சட்டென்று பின்வாங்கியவன், 

“இது நாங்க மார்கெட்ல புதுசா அறிமுகப்படுத்தற சாக்லெட். மக்கள் கிட்ட பிரபலப் படுத்தறதுக்காக இன்னைக்கு எல்லாருக்கும் ஃப்ரீயா குடுத்துட்டு இருக்கோம். இதை குடுக்கத்தான் வந்தேன். வாங்கிக்கங்க ப்ளீஸ்…”  மீண்டும் பெண்ணவளிடம் சாக்லெட்டை நீட்டி அழகாய் புன்னகைத்தான் அவன்.

குரலில், நீ வாங்கியே ஆக வேண்டும் என்ற கெஞ்சல் இருந்தது.

‘அடப்பாவி சேல்ஸ்மேனாடா நீ?’ என்றிருந்தது அவளுக்கு. அவர்கள்தானே வேண்டாம் என்றாலும் பேச்சு சாமர்த்தியத்தைக் காட்டுவர்.

“இன்னும் கொஞ்சம் பேசி இருந்தீங்க, பல்ல கழற்றி கைல குடுத்திருப்பேன். தப்பிச்சிட்டீங்க மிஸ்டர்!” என்றவளை குறுநகையுடன் பார்த்திருந்தவன்,

“நீங்க கழற்றுவதாக இருந்தா பல் என்ன மேடம் இதயத்தைக்கூட கழற்றிக்க சொல்வேன்!” கைகளை விரித்து இதயத்தை எடுத்து அவளிடம் தருவது போல் குவித்துக் காட்ட, அவளுக்கு ஆயாசமாக வந்தது.

‘எங்கிருந்துடா வந்த? தாய்க்குலத்துக்காக பிரச்சனை வேணாம்னு பாரத்தா, விடமாட்றானே! பல்லைக் கடித்தாள்.

 “அப்போ, கழற்றிட வேண்டியதுதான்” என்றவள் சூட்கேஸை நிறுத்திவிட்டு கைகள் இரண்டையும் சூடு பறக்கத் தேய்க்க, “அச்சோ மேடம்! அது சும்மா லுலுலாய்க்கு” சமாதானக் கொடியை மீண்டும் அவசரகதியில் பறக்க விட்டான்.

“பின்ன என்ன மேடம் ஏதோ காசு குடுத்து சாக்லட் வாங்கச் சொல்ற மாதிரி… ஃப்ரீ சாம்பிள்தானே மேடம்!

அங்கப் பாருங்க ஊருக்கே குடுத்துட்டேன்” என்றதும் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். 

அவன் பொய் சொல்ல வில்லை. பயணப்பொதிகளுடன் விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்லும் அனைவரின் கைகளிலும் அவன் கொடுத்த சாக்லேட் இருந்தது. அந்தக் குழந்தைக்கும் கொடுத்ததை நேரில் கண்டதில் மனம் சமாதானமாக, இன்னும் நிறுத்தவில்லை அவன். 

“போலீஸ்னா மக்கள் நண்பன் இல்லையா மேடம்? நீங்களே எனக்கு உதவி பண்ணாட்டி எப்படி? என்னவோ உங்களுக்கு மட்டும் குடுத்து லவ் ப்ரோப்போஸ் பண்ண மாதிரி ரொம்பத்தான் பண்றீங்க!” 

அவன் சொன்ன கடைசி வரிகளில் அதிர்ந்து நிமிர்ந்தாள். “வாட்?” என்றவள் முறைக்க,

“அதான் ப்ரப்போஸ் பண்ணலை இல்ல மேடம்” என்றவன் சற்றே பயந்தது போல் நடித்து பின் வாங்கினான்.

உடல் மொழியில் அவன் காட்டும் பயம் நிச்சயம் அவனிடம் இல்லை என்பதை அவன் உதட்டோரப் புன்னகை கள்வனாய் காட்டிக் கொடுக்க, கடுப்புடன் நகர முயன்றாள். 

எங்கே? அவன் வழிவிட்டால் அல்லவோ அவள் தாண்டிக்கொண்டு செல்ல. இயல்பாக நிற்பதுபோல் தோன்றினாலும், வாங்காமல் விடமாட்டேன் என்பதுபோல் இலாகவமாக வழியை மறித்தபடி நின்றான்.

“சார் ஏர்போர்ட் ஆஃபீஸர்ஸ் தவிர எல்லாருக்கும் குடுத்து முடிச்சாச்சி” பவ்யமாய் அந்த நெடியவனிடம் சொல்லிவிட்டு விலகிநின்றான் ஒருவன்.

அவள் நினைத்தது போல் அவன் விற்பனையாளன் இல்லை என்பதை விலகிநின்றவனின் பணிவு உணர்த்த, அவள் புருவம் வளைந்தது. 

அவ்ளோ பெரிய அப்பா டக்கரு எதற்கு தன்னிடம் விடாமல் வம்பிழுக்க வேண்டும்? அவள் யோசித்து முடிக்கும் முன்,

“இந்த ஒரு சாக்லெட்ட மேடம்ம வாங்கவைக்க முடியல. இனி இந்த தமிழ்நாட்டுல என் சாக்லட்டை வித்து என்ன புண்ணியம்” என்று அவனது பணியாளிடம் கேட்டபடி அவளருகில் நெருங்கியவன், மற்றொருவனை வேறுபக்கம் திசை திருப்பினான்.

“அங்கப்பாரு மொத்தமா வராங்க! என்று 

அவன் சுட்டிக்காட்டிய திசையில் நாலைந்து விமான நிலைய அதிகாரிகள் உள் நுழைந்து கொண்டிருக்க, “அவங்களுக்கு நீ போய் குடு! என்று அருகிலிருந்தவனை அனுப்பிவிட்டு இவளிடம் திரும்ப, அவளுக்கு பொறுமை பறந்தது.

“மேடம் ப்ளீஸ்” என்றவனின் குரல்தான் கெஞ்சியதேத் தவிர அவன் பாவனையில் வாங்கவைத்தே தீருவேன் என்ற தீவிரமும் அடம்பிடிக்கும் சிறுபிள்ளையின் பிடிவாதமும்.

“நிஜம்மா இது ப்ரோபோஸல் இல்ல மேடம்”

ப்ராமிஸ் என்பது போல் தன் தொண்டையை இரு விரல்களால் பிடித்தவன், “அதை அப்புறமா தனியா வச்சிக்கிறேன்! இப்போ இது நம் நட்புக்காக ப்ளீஸ்” என்றான் இதழ்க்கடை சிரிப்புடன்.

அவன் ஆகிருதிக்கும் கெஞ்சலுக்கும் சம்மந்தமே இல்லாததைக் கண்டவள், அதை அப்புறமா வச்சிக்கிறேன் என்றதும், அவளையும் மீறி மெல்லிய சிரிப்புவர அடக்கியவளைக் கண்டுகொண்டான் அவன். 

“ஐ மேடம் சிரிச்சிட்டாங்க இந்தாங்க பிடிங்க சாக்லட்டை” துணிந்து அவள் கைகளில் திணித்தவன்,

அவள் வலது கரத்தின் உட்புறம் கண்டு, “ஓ மேடம் அல்ரெடி எங்கேஜ்ட்டா?” என்றான் ஏமாற்றமும் அதிர்ச்சியுமாய்.

முதல் எழுத்து மட்டுமே பெரியதாய் தெரிய, “யாரு மேடம் அந்த V? V ஃபார் விக்டர்?” 

அவள் உட்புற கையில் V என்ற பெரிய ஆங்கில எழுத்தின் அடியில் இன்னும் சில ஆங்கில எழுத்துக்களை குட்டியாய் சேர்த்து ‘Victory’ என்று டாட்டூ குத்தியிருந்தாள். 

“எஸ் கண்டுபிடிச்சிட்டேன் வி ஃபார் விக்டரி! வெற்றி ரைட்? அவருக்காகத்தான் என்கிட்ட சாக்லெட் வாங்கத் தயக்கமா?” 

அவன் சொல்லி முடிக்கும் முன் “மண்ணாங்கட்டி” என்றவள், அவன் கையிலிருந்து வெடுக்கென சாக்லட்டைப் பறித்தெடுத்திருந்தாள்.

“வாங்கிட்டேன் போதுமா? இப்போவாச்சும் வழிய விடுங்க!” முகம் சுருங்க எரிச்சலாக மொழிந்தாள்.

எரிச்சல் அவன் மீதா இல்லை அவன் உச்சரித்தப் பெயரின் மீதா? என்பதை அறியாதவன், “இப்போ நீங்க தாராளாமா போகலாம் மேடம்” என்று இடைவரை குனிந்து சல்யூட் ஒன்றை வைத்து விலகி வழிவிட்டான்.

“இடியட்” எரிச்சலாய் மொழிந்துவிட்டு விறுவிறுவென நடந்தவளின் கோபம் உருட்டிச் சென்ற பெட்டி தரையில் உதைபடுவதில் தெரிய, வந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றிருந்தவன், அவனுடன் வந்த மற்றொருவனுக்கு கட்டை விரலைத் தூக்கிக் காட்டினான்.

‘கட்டினா இவளை கட்டணும்டா..இல்ல இவ கட்டினவன் கழுத்தை பிடிக்கணும்டா’ என்று வாய்க்குள் முனுமுனுத்தவனுக்கு உண்மையில் அவளைக் கட்டப்போகிறவன் யாரெனத் தெரியாது. தெரிந்திருந்தால் முனுமுனுக்கத் தோன்றி இருக்காது.

அவன் கழுத்தை இவன் பிடிப்பானோ இல்லை இவன் கழுத்தை அவன் பிடிப்பானோ?

அங்கே ஒருத்தி, கோபத்தில் தன்னையும் மீறி சாக்லட்டை வாங்கிக் கொண்டதில், ‘என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் அவன்?’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

‘அந்தப் பெயரை உச்சரித்தாலே சுயம் இழந்து தடுமாறிப் போகிறோம்’ தன்னையே நொந்து கொண்டு நடந்து வந்தவளை விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் வரிசையில் நிற்கவைக்க அன்றைய தினத்தின் உட்சபச்ச எரிச்சலுக்குள்ளானாள் அம்மு எழிலரசி.

‘செக்கின் தான் முடிச்சாச்சே! திரும்ப என்ன?’

ஏற்கனவே அவன் வழிமறித்து படுத்தியப் பாட்டில் நேரமாகிவிட்டிருக்க, தங்கை வேறு தன்னை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென்பதில் வேறு வழியின்றி தன் போலீஸ் ஐடியை காண்பித்து சோதனையின்றி விரைவாக வெளிவந்திருந்தாள்.

“ஏய் எரும விளையாடுறியா? பத்து நிமிஷத்துல வர்ற இலட்சணத்தைப் பாரு! உனக்காக வண்டி எடுத்துட்டு வந்தேன்ல என்னை சொல்லணும்! இதுல மூஞ்சை வேற ஒன்னரை முழத்துக்கு தூக்கிட்டு வர்ற. உனக்கு சிரிக்கவே தெரியாதாடி! போலீஸ்காரின்னா சிரிக்கக் கூடாதுன்னு உங்க சட்டம் சொல்லுதோ?” 

தாமதமாக வந்ததும் இல்லாமல், வெளியில் வந்த தமக்கையின் முகம் கோபமாக இருக்கவும் கடுகடுத்தாள் மிருத்யூ.

‘போலீஸ்காரின்னா அழக பாராட்டக் கூடாதோ?’ அவனின் கேள்வி நினைவில் வர தங்கையை திரும்பி முறைத்தாள். “உனக்குதான் காலேஜ்ல புல்லு புடுங்கிற வேலை இருக்கு வரமாட்டேன்னல்ல, ஏன்டி வந்த?” மருத்துவம் படிக்கும் தங்கையை இவளும் பதிலுக்கு வாரினாள்.

“எல்லாம் அக்கா பாசம்தான்!” என்றவள், “ஐ சாக்லெட்டு” என்றாள் கண்கள் மின்ன.

“என் செல்ல அக்கா!” தமக்கையின் கையில் சாக்லெட்டை கண்டதும் தலைகீழாக மாறியவள், ஓடிப்போய் தமக்கையை அணைப்பதுபோல் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டவள் அவள் கையிலிருந்த சாக்லெட்டையும் நைஸாக புடுங்கிக் கொண்டாள்.

“நீயெல்லாம் ஒரு டாக்டர்! வெளிய சொல்லாதடி வெட்கக் கேடு” “டிக்கியத் தொற” என்றாள் எழிலரசி.

அவளோ சாக்லெட்டின் கவரை பிரிப்பதில் மும்மரமாயிருக்க, தங்கையின் செயலில் தலையில் அடித்துக்கொண்டு, அவள் கையிலிருந்த காரின் கீயை புடுங்கித் தானே திறந்து தன் உடமையை அதற்குள் திணித்தாள்.

“நீ ஓட்டுறியா நான் ஓட்டட்டுமா?” தங்கை கார் ஓட்ட விருப்பப்பட்டே காலங்காலையில் தன்னை அழைக்க வந்திருப்பது தெரிந்தே கேட்டாள். 

மிருவோ இன்னமும் அந்த கவருடனயே போராடிக் கொண்டிருந்தவள், “இது என்னடி பிரிக்கவே வரல. நான் திங்கக்கூடாதுன்னே ஒட்டி வச்சிருக்கியா?” அதனுடன் போராட்டத்தை நிறுத்தாமலே கேள்வி கேட்டாள்.

“பிரிக்க முடியலைன்னா தூக்கித் தூர போட்டுட்டு வண்டிய எடுறி! நாய் கூட திங்காது அத” என்று நிமிர்ந்தவளின் முன்னால் கைக்கட்டிக் கொண்டு நின்றிருந்தான் அவன். 

தன் மெரூன் நிற ஜெர்கினுள் கைவிட்டபடி அதே புன்னகை மாறாமல் இருவரையும் நெருங்கினான்.

‘இவன் எங்க இங்க வந்தான்?’ அவன் வம்படித்ததிலேயே, கடுப்பாய் சொன்னவளின் முகத்திற்கு நேராக கொஞ்சமும் கோபமின்றி சிரித்தபடி நின்றிருந்தவன், “இங்க குடும்மா நான் பிரிச்சித் தரேன்” மிருனாவிடம் கை நீட்ட, ‘யாருடா நீ?’ என்று பார்த்து வைத்தாள் அவள்.

‘அக்காவும் தங்கச்சியும் கோபத்தில ஒரே மாதிரி இருக்காளுங்க’ மிருவின் முறைத்த பார்வையில் மனதுக்குள்ளாக நினைத்தவன், “உன் அக்காவுக்கு இந்த சாக்லட்டைத் தந்தவன்” என்று சிறியதாய் கண்ணடிக்க, அதிர்ந்து நெஞ்சில் கை வைத்த மிருவோ நிமிர்ந்து அக்காவைப் பார்த்தாள்.

‘அதுக்கு எங்கக்கா ஒர்த் இல்லையே’ மிரு அதிர்ந்து அக்காவின் முகத்தை ஆராய்ந்த நிமிடத்தில் அவளிடமிருந்த சாக்லெட்டை லாவகமாகக் கைப்பற்றி இருந்தான் அவன்.

“இது ஏதோ மேனுஃபேக்சரிங் ஃபால்ட்” தானும் பிரிக்க முயற்சித்து முடியாததில் அதை தன் ஜெர்கினுக்குள் திணித்துக் கொண்டான்.

“இந்தா ஒன்னுக்கு இரண்டா வச்சிக்கோ!” அதே ஜெர்கினிலிருந்து வேறு இரண்டை எடுத்து மிருவின் கைகளில் திணித்து, “ஆமா உங்க அக்காக்கு விக்டரின்னா… ஐ மீன் வெற்றின்னா ரொம்பப் பிடிக்குமா?” மிருத்யூவிடம் இரகசிய குரலில் கேட்டு புன்னகைக்க, வேகமாய், “மண்ணாங்கட்டி” என்றாள் மிருத்யூஸ்ரீயும்.

“அப்படிப் போடு” என்றவனோ “அப்போ எனக்கு இன்னும் சான்ஸ் இருக்குதானே பேபி?” தங்கையிடம் சொல்லிவிட்டு 

இம்முறை அக்காவைப் பார்த்து கண்ணடிக்க, “ஏய்” என்று அக்காவும் தங்கையும் ஒரு சேர மிரட்டலாய் குரல் கொடுத்தனர்.

“கண்ணா இரண்டு லட்டு திங்க ஆசையா…” கைகளை விரித்து சத்தமாய் சிரித்தவனின் அருகில் மின்னல் வேகத்தில் உயர் ரக அவுடி கார் வந்து நிற்க, “வர்ட்டா பேபீஸ்” என டாட்டா காட்டிவிட்டு நொடியில் அதில் ஏறி பறந்திருந்தான்.

“யார்டி அவன்?” அதிவேகத்தில் பறக்கும் காரை பார்த்தபடியே கேட்டாள் மிருத்யூ.. 

“யாருக்குடி தெரியும்” என்ற தமக்கையை வித்யாசமாகப் பார்க்க, “ஏய் என்ன அப்படி பார்க்கிற? சத்தியமா தெரியாதுடி. ஏதோ சாக்லெட் விக்கிறவன். அவ்ளோதான் தெரியும் எனக்கு!” முன்பக்க சீட்டில் அமர்ந்து சீட்பெல்ட்டை போட்டபடியே பேசியவள் தங்கையின் முகம் இன்னமும் தெளியாததில்,

“மிரு, சத்தியமா தெரியாதுடி. அவன் மூஞ்சிகூட எப்படி இருக்கும்னு தெரியல. மூஞ்சில பாதிய மறைச்சி தாடிய வச்சிக்கிட்டு முள்ளம்பன்றிக்கு கண்ணாடி போட்டா மாதிரி நிக்கிறான். இதுல எங்கடி அவன் மூஞ்சைப் பார்க்க?”

அக்கா கூறிய உவமையில் சிரித்துவிட்டவள், “நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டன்னுதான் தெரியுமே!” என்று புன்னகையுடன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தாள். “ஆனா அவன் ஆளு ஒரு மார்க்கமாதான் இருக்கான். என் செல்ல அக்காவ கொத்திட்டு போகாம இருந்தா சரி!” என்றாள் புன்னகைத்து. 

“இவ்ளோ பேசற. ஆனா, அவன் குடுத்த சாக்லட்ட மட்டும் கீழ போட்டியா பார்த்தியா! அங்க நிக்கிறா என் தங்கச்சி” சீட்டில் அமர்ந்தும் காரை எடுக்காமல் சாக்லட்டை பிரித்தவளைப் பார்த்து அம்முவும் புன்னகைக்க, இருவருக்கும் அவன் சொல்லிச்சென்ற ‘கண்ணா இரண்டு லட்டுத் திங்க ஆசையா’ என்ற வாசகம் ஒரு சேர நினைவில் வர “நம்மைப் பத்தி தெரியல அவனுக்கு” இருவரும் ஹைஃபை அடித்துச் சிரித்தார்கள்.

இவர்களுக்குதான் அவனைப்பற்றி தெரியவில்லை என்பதை அங்கு காரை மறித்தபடி நின்ற விமான நிலைய அதிகாரிகள் சற்று நிமிடத்தில் புரிய வைத்திருந்தார்கள்.

அதேநேரத்தில் அந்த அவுடி காரில், “என்ன ஆஃபீஸர்ஸ்! அங்க என்ன தேடினாலும் கிடைக்காது. உங்க கண்ணு முன்னாடியே இந்த ராஜாளி எஸ்கேப்ட்…பொருளும் பக்கா சேஃப். எப்படின்னு யோசிச்சு வைங்க!” என்று கட கடவெனச் சிரித்தவன், சிம்கார்டை கழற்றித் தூக்கி காருக்கு வெளியில் எறிந்தான். மற்றொருவனும் வாகனத்தை ஓட்டியபடியே திரும்பி புன்னகைக்க, இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டார்கள். 

“செம்ம ப்ளான் டா. எப்படி டா சிக்கினாளுக?” என்றான் வாகனத்தை வளைத்துத் திருப்பியபடி. சற்று முன்பு விமானநிலையத்தில் அந்த இராஜாளியின் முன்பு பவ்யமாய் நின்றிருந்தவனும் இவனே!

“அவளேதான், போலீஸ்காரின்னு வாயவிட்டா…” என்று சிரித்த மெரூன் ஜெர்கின், தன் பாக்கெட்டிலிருந்து மிருவிடம் வாங்கிய சாக்லெட்டை கையிலெடுத்தான். 

நல்ல பெரிய (ஃபேமிலி பேஃக்) அளவில் இருந்ததை காரின் டேஷ்போர்டிலிருந்த ப்ளேடைக் (Blade) கொண்டு பிரிக்க, “நம்ம ப்ளான்படி குழந்தைகிட்ட குடுத்திருந்தா கூட சிக்கி இருப்போம்டா” காரை செலுத்தியபடி திரும்பிச் சொன்னவனின் கண்கள் இராஜாளியின் கைகளில் இருந்த பொருளைக் கண்டு சுருங்கியது.

“என்னடா வைரம்னு சொன்ன, பழுப்பு கலர்ல இருக்கு. கற்கண்டா? இதுக்கா இவ்ளோ ரிஸ்க் எடுத்தோம்?” பாதாமும் முந்திரியும் உடைத்துத் தூவி விட்டது போல் பழுப்பு நிற படிகாரக் கற்கள் அந்தப் பெரிய சாக்லெட் பார் முழுவதிலும் சிறிதும் பெரிதுமாய் ஒட்டி இருந்ததைக் கண்டு அங்கலாய்த்தான் அவன்.

“கற்கண்டா?” வாய்விட்டு சிரித்தவன், “இதோட மதிப்புத் தெரியுமா உனக்கு? பல கோடிகள்! அத்தனையும் பட்டைத் தீட்டப்படாத வைரம். இந்தியால வைரங்களுக்கு அவ்ளோ டிமாண்ட் இல்ல. ஆனா இதை பட்டைத் தீட்டி பள பளப்பாக்கினோம்னு வை, சீனா ரஷ்யா மேற்கு ஆசியால்லாம் போட்டி போட்டு வாங்குவான். இதுக்குன்னு தனி மாஃபியா உலகமே இருக்கு!”

புன்னகையுடன் மீண்டும் அதை ஜெர்கினுக்குள் திணித்தவனின் பார்வை நொடியில் இரத்த நிறம் காண, “யார்டா அது நமக்குள்ள? கஸ்டம்ஸ்ல எல்லாம் நம்ம ஆளுங்க தானே? செக்கின் முடிச்சி வெளில வந்தப்புறம் சுத்தி வளைக்கிறானுங்கன்னா கண்டிப்பா யாரோ இன்ஃபர்மேஷன் குடுத்திருக்கணும்” கோபத்தில் அவன் பற்கள் அரைபட்டது.

இதற்காகவே வடக்கே போலியான சாக்லெட் தொழிற்சாலை இருப்பதாகக் காண்பித்து அவன் போட்ட திட்டங்களைத் தகர்க்கப் பார்ப்பது யார்? அவன் எண்ணங்கள் அலைபாய்ந்தது.

“எப்படியோ சமாளிச்சாச்சில்ல விடுறா பார்த்துக்கலாம். என் பாஸ் இதுக்கே உன்னைக் கொண்டாடுவார்” என்றதும், “ஒரு ரூபா இரண்டு ரூபான்னு நினைச்சியா விட்டுட்டுப் போக… இன்னைக்கு அவ மட்டும் சிக்கி இருக்கல டப்பா டான்ஸ் ஆடி இருக்கும்” என்றவனுக்கு அம்முவின் நினைவுவர, அவன் இதழ்கள் இலேசான புன்னகை கண்டது. பெயரைக் கூட கேட்காததில், அவளைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஜெர்கினின் சிரிப்பில், “அந்தப் பொண்ண கஸ்டம்ஸ்ல போட்டும் குடுத்தட்ட போல” என்றான் கேலியாய். சற்றுமுன் விமானநிலைய அதிகாரிகளுக்கு தான் தப்பித்ததை ஒலிபரப்பியதை நினைவூட்ட அதற்கும் மீசைக்குள் சிரித்தான் அவன்.

அதைக் கவனித்தவன், “ஹேய் மச்சான்… என்ன ஓடுது மண்டைக்குள்ள” என்று கலாய்த்துத் தள்ள அவன் நினைவுகளுக்கு உரியவளோ, விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிச் சின்னபின்னமாகிக் கொண்டிருந்தாள்.