வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. ஷாலினி குடையாக வலது கையை தலைக்கு வைத்தவாறு மறு கையால் காலேஜ் பேக் நனையாதவாறு பிடித்துக் கொண்டு வேக எட்டுக்களை எடுத்து வைத்தவள் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்தாள்.
அந்த கட்டிடம் எவ்வளவு நீளமானது என்று தெரியவில்லை. அது கம்பியூட்டர் லேப்பா? அல்லது லைப்ரரியா? என்று கூட புரியவில்லை.
நடுவில் லைப்ரரி போன்று புத்தகங்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்த கப்போர்டுகள் இருந்ததோடு இரண்டு பேர் எதிரெதிரே அமர்ந்து படிக்கக் கூடிய சிறிய மேசையோடு கூடிய இருக்கையும் இருந்தது.
காபோர்டுகளும் ஐந்து அடிகளுக்கு குறைவான உயரமே இருக்க, யார் நின்றிருந்தாலும் எவ்வளவு தூரம் என்றாலும் தென்படக் கூடிய விதத்தில் இருந்ததன.
கணணிகளும் இடையிடையே போடப்பட்டிருந்ததோடு நான்கு கண்காணிப்பாளர்கள் நான்கு இடத்தில் அமர்ந்து வேலைபார்க்க கூடிய விதத்தில் இருந்தனர்.
உள்ளே வரவும் வெளியேறவும் ஒரே ஒரு கதவு மட்டுமே அதுவும் இலெக்ரிக் லோக் பொருத்தப்பட்ட கதவாக இருக்க, சென்னையில் இப்படி ஒரு காலேஜா வியந்தவாறு ஷாலினி உள்ளே சுற்றிப் பார்கலானாள்.
காற்று அடித்ததாலா தெரியவில்லை கதவு மூடிக்கொள்ள ஷாலினி பயந்து விட்டாள்.
“ஹலோ… ஹலோ… உள்ள யாராவது இருக்கீங்களா?” மெதுவாக குரல் கொடுக்க, அங்கே மயான அமைதி நிலவியது.
“என்ன இது? உள்ள ஒருத்தரையும் காணோம். எல்லாரும் மாயமா மறைஞ்சிட்டாங்களா?” கண்ணுக்கு எட்டிய தூரம் யாரையும் காணாமல் வெளிய போக கதவை திறந்தால் அது திறந்துகொள்ளவில்லை.
“என்ன இது திறக்க மாட்டேங்குது? பாஸ்ட் இயற் ஸ்டூடன்ட் என்றதும் ரேகிங் பண்ணுறாங்களா? இது பிராண்க் பண்ணுறது மாதிரி இருக்கு” தனக்குள் முணுமுணுத்தவள் “கதவை திறங்க கதவை திறங்க” கதவை தட்ட ஆரம்பித்தாள் ஷாலினி.
அவள் தோளில் ஒரு கை வந்து விழவும் கத்தியவாறு திரும்பியவள் அங்கே நின்றிருந்தவனைக் கண்டு “யார் நீ… இங்க என்ன பண்ணுற? உள்ள எப்படி வந்த?” நா குழற கேட்க,
“இதெல்லாம் நான் கேட்கணும். இலெக்ட்ரிக் லோக் ஜமாக்கிருச்சு போல. உள்ள இருந்து திறக்க முடியல. வெளிய இருந்து யாராவது திறந்தா தான் உண்டு. நானும் யாராவது திறப்பாங்கனு ரொம்ப நேரமா வைட் பண்ணேன். யாரும் வரல”
“நான் தான் உள்ள வந்ததும் சத்தம் போட்டேனே அப்போ பேசாம இப்போ பின்னாடி வந்து நிக்குற?” அவனை சந்தேகமாக பார்த்தவள் ஒருவேளை அவன் ஆவியாக இருப்பானோ, அவனுக்கு கால்கள் இருக்கிறதா என்று அவன் பாதங்களை நோக்க, அவள் எண்ணங்களை ஊகித்தவன் சட்டென்று சிரித்து விட்டான்.
“ஹெட்செட் போட்டுக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டு இருந்தேன். அதான் கேக்கல” அவன் சொல்வது உண்மை போலும் ஹெட்செட் கழுத்தில் தான் இருந்தது.
சிரிக்கும் பொழுது அழகாக இருந்தான். கையில் இருந்த புத்தகங்களை பார்த்தவள் “ஸ்டூடண்டா…” என்றவாறே அவன் பெயரை பார்க்க அவன் விரல்களுக்கிடையில் ‘மாறன்’ என்று தென்படவும் “நல்லாத்தான் இருக்கு”
“எது இப்படி ஒரே ஹால்ல நாம ரெண்டு பேரும் அடஞ்சி கிடக்கிறதா? கடுப்படிக்காதீங்க. ரெண்டவரா உள்ள மாட்டிகிட்டு முழிக்கிறேன். செம்ம பசி வேற” படபடவென பொரிந்தான்.
தனது பையை துழாவி ஷாலினி ஒரு சாக்லட் பாறை எடுத்து நீட்ட, வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்ட மாறன் அதை சாப்பிட ஆரம்பித்தான்.
“தண்ணி வேணுமா?” காலையும் சாப்பிட்டிருக்க மாட்டான் போலும். பார்க்க பரிதாபமான தோற்றம் எது என்றால் பசி வெறியில் வேகமாக சாப்பிடுவதுதான் என்பாள் ஷாலினி.
“இங்க இருக்கு” தண்ணீர் குடிக்க வசதி செய்யப்பட்டிருப்பதை காட்டியவன், “நீ சாப்டியா? அநேகமா இது உன் லன்ச்சாகத்தான் இருக்கணும்” என்றவன் பாதியை அவளுக்கு கொடுத்தான்.
“ஆமா எப்படி கரெக்ட்டா சொல்லுற?” அவன் பேச்சு ஷாலினிக்கு சுவாரஸ்யத்தை தூண்டி இருந்தது.
“நம்மள மாதிரி காலேஜ் போற பசங்க நிறைய பேர் ஹாஸ்டல்லதான் தங்கி படிக்கிறாங்க. ஒழுங்கான சாப்பாடு கிடைக்காது ஒரு பக்கம் இருக்கட்டும். உன்ன பார்த்தா நியூ ஸ்டூடண்ட்னு நல்லாவே தெரியுது. புது ஊரு, புது இடம் என்றதும் தூக்கம் வராது. அப்பொறம் கிளாஸ் ரூம்ல தூங்கி வழிய வேண்டியது. இதுல நல்ல சாப்பாடு உள்ள போனா…. கொட்டாவி வந்துகிட்டே இருக்கும். லெக்ச்சர் சொல்லுறது தாலாட்டு பாடுறது மாதிரிதான் கேட்கும். அப்பொறம் தூங்கிடுவோம்.
பசி ஓவறானா கூட தூக்கம் வரும், டயட்ல மூள படிக்கிற எதையும் ஒப்சர்வ் பண்ணாது. சாக்லட் சாப்பிட்டா தேவையான எனர்ஜியும் கிடைக்கும், வயித்துக்கு ஹெவியான சாப்பாடும் விழாது. சோ தூக்கம் வராது”
“குட். இவ்வளவு விஷயம் தெரிஞ்சி வச்சிருக்க. ஐம் ஷாலினி பாஸ்ட் இயற் நீ…” வலது கையை நீட்ட
“ஐம்….”
“புக்ல பார்த்தேன் மாறன். நைஸ் நேம்”
“தாங்க்ஸ். நான் பைனல் இயற்”
“கிரேட் கிரேட் கிரேட் சீனியரா…”
“அதென்ன கிரேட் கிரேட் கிரேட் சீனியர்” மாறன் புருவம் நீவ
“பைனல் இயற் இல்ல” புன்னகைத்த ஷாலினி “அதென்ன சீனியர் இந்த லைப்ரரி இப்படி இருக்கு? “
“எப்படி? அமைதியாகவா?” என்ற மாறன் சுற்றிமுற்றி பார்த்தான்.
“ப்ச்… இல்ல. கம்பியூட்டர் லேப் அண்ட் லைப்ரரியா இருக்கு”
“யாரு இப்போ லைப்ரரில புக் படிக்கிறாங்க. காலேஜ் புக்கையே படிக்க மாட்டேங்குறாங்க. இப்போ எல்லாத்தையும் கம்பியூட்டர்ல வச்சிருக்காங்க. சிலப்பர்ஸ், நோட்ஸ் என்று பென்ட்ரைவுல போட்டுகிறாங்க. இந்த ஜெனரேஷன் புத்தகங்கள் வாசிக்காம போய்ட கூடாது என்ற எண்ணத்துல இப்படி லைப்ரரியையும் கம்பியூட்டர் லேப்பப்பையும் ஒண்ணா வச்சிருக்காங்க”
“ம்ம்.. கிரேட் ஐடியா..”
“நல்லா பாரேன் கம்பியூட்டர்ஸ் எத்தனை இருக்கு? எத்தனை ஸ்டூடன்ட் ஒரு கிளாஸ்ல இருக்காங்க. ஒரே நேரத்துல உள்ள வந்தா எல்லாரும் கம்பியூட்டர் யூஸ் பண்ண முடியுமா? பாதி பேர் சும்மா உக்காந்து இருக்கணும். அந்த நேரத்துல இந்த புக்ஸ் படிப்பாங்க இல்லையா? மேனேஜ்மண்ட் இப்படி ஒரு நல்ல முடிவெடுத்து இப்படி ஒரு கட்டிடத்த கட்டி இருக்காங்க”
“என்ன ஒரு இனிமையான கனவு. ஆஹா… ஆஹா.. காலையிலே ஷாலினியோட சிரித்த முகம் இன்னக்கி நாள் ரொம்ப நல்ல நாளா அமைய போகுது” கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்த மாறன் ஜோக்கிங் செல்ல ஆயத்தமானான்.
“ஆமாடா… எதோ முக்கியமான ஆபரேஷன்னு போய்ட்டாரு” மகனின் கிண்டல் புரியாமல் லதாவும் பதில் சொல்ல,
“அவரு விடிய காலைல கிளம்பி போறாரு மிட்நைட்டுல வீட்டுக்கு வராரு. என்னனு ஒரு வார்த்த கேக்குறியா? நா லேட்டா வந்தா மட்டும் என்ன திட்டித் தீர்க்குற” இட்லிக்கு சட்னியை வைத்தவாறே தனது வழமையான பேச்சை ஆரம்பித்தான் மாறன்.
“என்னடா… வர வர வாய் ரொம்ப நீளுது. உன்ன அடக்க ஒருத்தி வராமலா போவா… போலீஸ் ஸ்டேஷன் கதினு இருந்தா எவ வருவா? திருடியும், கண்ட தொழில் பண்ணுறவளையும் மருமகளா கொண்டு வந்துடுவியோன்னு நான் எத்தனை ராத்திரி தூங்காம இருந்தேன் தெரியுமா?”
“என்னது… உன் பையன பத்தி ரொம்ப உயர்வா நினைக்கிறம்மா… நினைக்கிற…” நடிகர் சிவாஜி கணேசன் போல் நெஞ்சில் அடித்தவாறே மாறன் கூற
அவனை வினோதமாக பார்த்த லதா “நீயும் யாரையும் லவ் பண்ண மாட்டேங்குற, நான் பாக்குற பொண்ணையும் பிடிகலனு சொல்லுற, எந்த மாதிரி பொண்ணு வேணும் என்றாவது சொல்லுடா…”
“நான் பொண்ணு பார்த்துட்டேன்” சாதாரணமாக சொன்னவன் உணவில் கவனமானான்.
“ஆகா… ஷாலுகிட்ட பேசி ஒரு முடிவுக்கு வராம இவங்க கிட்ட வாய கொடுத்துட்டேன். இவங்க போய் அவள மீட் பண்ணா குட்டைய குழப்பிடுவாங்களே” அன்னையை பாத்திருந்த மாறன் “கனவுல பார்த்துட்டேன். இன்னும் நேர்ல பார்க்கல பார்த்த உடனே சொல்லுறேன். போய் பொண்ணு கேக்கலாம்” விரல்களை சூப்பியவாறே எழுந்துகொள்ள
அவன் முதுகுலையே இரண்டு அடியை கொடுத்த லதா “கொழுப்புடா உனக்கு. உடம்புல உனக்கு கொழுப்பு இல்லனு பார்த்தா உன் மூள நிறைய கொழுப்புடா.. எல்லாம் உன் பேச்சா… வெளிய வருது”
சட்டென்று திரும்பிய மாறன் அன்னையின் கையை பற்றி தடுத்து உன் மகன் இல்லையா… உன்ன மாதிரிதான். கத்தி மாதிரி மத்தவங்கள காயப்படுத்திதான் பழக்க. நீ அப்பாவ காயப்படுத்தினது போல” என்று விட்டு கைகழுவ செல்ல, லதா அதிர்ச்சியில் அமர்ந்து விட்டாள்.
மாறன் விவரம் அறியும் வயதில் தந்தை எங்கே என்று கேட்டவன்தான் லதா உண்மையை உள்ளபடியே கூறினாள். எதையும் கூட்டியோ குறைத்தோ பூபதியை பற்றி கூறவில்லை. அவள் கூறாமல் மறைத்த ஒரே விஷயம் மாறனோடு பிறந்த இரட்டையை பற்றி மட்டும்தான்.
அப்படி இருக்கையில் மகனின் இந்த பேச்சுக்கு என்ன காரணம்? கணவன் ஏதாவது கூறி இருப்பாரோ? நிச்சயமாக இருக்காது. அவருக்கு மருத்துவமனையை கட்டி அழுகவே நேரம் பத்தவில்லை. காலை உணவின் பொழுதுதான் குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக சந்தித்துக்கொள்வதே. தனியாக மாறனும் பூபதியும் அதிகநேரம் பேசிக்கொள்வதே இல்லை. அப்படி பேசினாலும் பொதுவான விஷயங்களும் அவன் உடல்நிலை பற்றியும் இருக்க, கடந்த காலத்தை பற்றி பூபதி பேச வாய்ப்பே இல்லை.
“என்னம்மா… சாப்பிடாம உக்காந்துட்ட…” கையை கழுவிக்கொண்டு வந்த மாறன் எதுவுமே நடக்காதது போல் பேச, மேலும் அதிர்ந்தாள் லதா.
கைக்கடிகாரத்தை பார்த்தவன் “எனக்கு நேரமாச்சு. சி யூ ..ம்மா..” லதாவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு காவல்நிலையம் சென்றான்.
பார்க்க வேண்டிய வேலைகளை அவசரமாக முடித்தவன். ஏவ வேண்டிய வேலைகளையும் சொல்லிவிட்டு துணி மாற்ற சென்றான்.
ஷாலினியின் அக்கா மாலினியின் தற்கொலை சம்பந்தமாக அவளை சந்தித்தே ஆகா வேண்டும் என்ற அவசியம் மாறனுக்கு இல்லை. இருந்தாலும் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் ஊற கிளம்பி விட்டான்.
அவளை சந்திக்க காரணம் சொல்ல வேண்டுமல்லவா மாலினி திருமணம் செய்ய இருந்த ராகவேந்திரனை சந்திக்கலாம் வா என்றுதான் அழைத்தான்.
“அதுக்கு நான் எதுக்கு? அட்ரஸ் தரேன் நீ போ” என்றாள் ஷாலினி.
“அட்ரஸ் கண்டு பிடிக்கிறது எனக்கென்ன கஷ்டமா? என் பீலிங்க்ஸ்ஸ புரிஞ்சிக்க மாட்டேங்குறாளே” தனக்குள் முணுமுணுத்தவன் “போலீஸா போய் நிக்கிறதா விட உன் ப்ரெண்டா போய் நிக்கிறதுதான் நல்லது அப்போதான் கேசுவலா பேசுவாரு. வாம்மா…”
மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பூபதி பாண்டியன் மனைவி தான் வந்ததையும் கவனிக்காது எதோ ஒரு யோசனையில் அமர்ந்திருப்பதைக் கண்டு குளிக்க கூட செல்லாமல் அவள் அருகில் அமர்ந்தவர் என்ன? ஏது? என்று வினவினார்.
மாறன் பேசிய விதத்தையும், அவன் பேசும் பொழுது அவன் தோரணை மாறிப்போனதையும், இதற்கு முன்பு அவன் இவ்வாறு பேசியதே இல்லை என்றும் கூறியவள் மறந்தும் கணவனிடம் என்னை பற்றி மகனிடம் குறை கூறினீர்களா? என்று கேட்கவில்லை.
பூபதிக்கு மனைவி சொல்ல சொல்ல சற்று அதிர்ச்சிதான். வெற்றியின் குணத்தை நேரில் பார்த்திருந்தவர் தானே. வெற்றியின் மூளையை பொருத்தியதால் வந்த மாற்றமோ?
எலி, பூனை, முயல் என்று பொருத்தி வெற்றி அடைந்தவருக்கு மனித மூளையை பொருத்தியது இதுவே முதல் தடவை. மனிதர்களுக்காகத்தான் இந்த ஆராய்ச்சியையே மேற்கொண்டார். ஆனால் அவர் ஆராய்ச்சு வெற்றி பெற்றாலும் மனித மூளை மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
காரணம். எந்த மாதிரியான விளைவுகளை அது ஏற்படுத்தும் என்று அறியாமல் அதை செய்ய உள்நாடு மட்டுமல்ல, அமேரிக்கா கூட முன் வரவில்லை. மாறாக அவரது ஆராய்ச்சியை தங்களுக்கு கொடுத்துவிடும்படி நச்சரிக்க, பூபதி ஆராய்ச்சியையே கைவிட்டார்.
இருபத்தி எட்டு வருடங்கள் கழித்து அவர் செய்த ஆராய்ச்சிக்கு உயிர் கொடுக்க, தான் பெற்ற பிள்ளைகளையே பலி கொடுத்து அதன் விளைவுகளை கண்டு பிடி என்று கடவுள் அவர் கையில் பொறுப்பை கொடுத்து விட்டான் போலும்.
வெற்றியின் மூளையின் ஒரு பகுதியை மாறனுக்கு பொறுத்தினாலும், அவனது மூளையின் செயல்பாட்டின் காரணமாகத்தான் மாறன் இவ்வாறு நடந்துகொண்டான் என்று மனைவியிடம் எவ்வாறு கூறுவது? பூபதிக்கு தயக்கத்துக்கு மேலாக அச்சம்தான் வந்தது.
“போலீஸ்காரன் இல்லையா ஏதாவது கேஸ்ல சிக்கி இருப்பான் அந்த காண்டுல பேசி இருப்பான். ரொம்ப யோசிக்காதமா.. எனக்கு ரொம்ப பசிக்குது. நா குளிச்சிட்டு வரேன் சாப்பாடு எடுத்து வைக்கிறியா?”
“ஐயோ நா ஒருத்தி… சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க சூடாகவே சாப்பிடலாம்”
எதை சொன்னால் மனைவி மனம் மாறுவாள் என்று அறிந்து வைத்திருந்த படியால் அதையே கூறி குளிக்க சென்றார் பூபதி.
பாடசாலை நடத்துபவன் என்றால் மாளிகை போன்ற வீட்டில் இருப்பான் என்று மாறன் எதிர்பார்க்க ராகவேந்திரரின் வீடு இரண்டு மாடிகளைக் கொண்ட சாதாரண வீடுதான்.
ஷாலினியை கண்டதும் காவலாளி வாயிலை திறந்து விட்டார். ராகவேந்திராவின் பி.ஏ. செல்வமணி அவர்களை அழைத்து சென்று அமர சொன்னான்.
“இல்ல கொஞ்சம் வீட்டை சுத்தி பார்க்கலாமா?” மாறன் கேட்க
செல்வமணி மறுத்து பேச போக, “அதுக்கென்ன என் மாமா வீடுதான் நானே கூட்டிட்டு போறேன்” என்ற ஷாலினி அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.
ஒவ்வொரு அறையாக சென்றவர்கள் ராகவேந்திரனின் அறைக்கும் சென்றார்கள்.
ராகவேந்திரன் தினமும் அழுதத்திற்கு அடையாளமாக கண்கள் சிவந்து, தூங்காத காரணத்தால் கருவளையம் சூழ்ந்த கண்களும், தேகம் கருத்து, மெலிந்து ஒரு பாடசாலையை நடத்துபவன் போல் இல்லாமல் ரொம்பவே உடைந்து போய் இருந்தான்.
மாலினி அவனுடைய பாடசாலைக்கு மாற்றலாகி வந்து ஒரு வருடங்கள் தான் இருக்கும். ஒரே வருடத்தில் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு காதலா? மாறன் ஆச்சரியமாக பார்க்க அவன் மனசாட்ச்சியோ “நீ மட்டும் பார்த்த நொடியிலிருந்து ஷாலினி பின்னால போற? காதல்னா அப்படிதான் மாமு” என்றது.
“என்ன இளவெடுத்த காதலோ டீன் எஜூலதான் காதலி பின்னால சுத்துறாங்கன்னா… நான் இந்த வயசுல சுத்திகிட்டு இருக்கேன்” தன்னையே நொந்துகொண்டான் மாறன்.
“சுத்தினா தான் என்ன? சின்ன வயசுல அம்மா முந்தானைய பிடிச்சிக்கிட்டு சுத்தினோம், டீன் எஜுல காதலி முந்தானைய பிடிச்சிக்கிட்டு சுத்துறோம்”
“அவளுங்க எங்க துப்பட்டா போடுறாங்க?” அவன் மனம் கூவ
“சரி விடு கைய பிடிச்சிக்கிட்டு சுத்தினோம்”
“கல்யாணத்துக்கு அப்பொறம் பொண்டாட்டி கால பிடிச்சி கெஞ்சுறோம்”
“பொண்ணு பொறந்தா அவள தூக்கி பைக்கை வச்சி ஊர் பூரா சுத்துறோம்”
“தனியாவா? ப்ளூடூத்தில போன் பேசிகிட்டு இருக்கேன்” சமாளித்தவன் “வா உள்ள போலாம்” அவளை முன்னால் அனுப்பியவன் பின்னால் சென்று அமர்ந்துகொண்டான்.
ராகவேந்திரனை பார்த்தால் நடிப்பது போலும் தெரியவில்லை. தன்னையே ஏமாற்றுபவன் கைதேர்ந்த நடிகனாக இருக்க வேண்டும். அதனால்தான் காக்கிச்சட்டையில் வராமல் ஜீன்ஸ் டீஷர்ட்டில் வந்திருந்தான்.
ஷாலினி “இவரையா நீ சந்தேகப்பட்ட” எனும் விதமாக மாறனை பார்த்தாள்.
அவள் புறம் திரும்பாமலையே அவள் முறைத்துக் கொண்டிருப்பது தெரிய ராகவேத்திராவுக்கு ஆறுதல் சொன்னவன் “சார் உங்க போன் நம்பர் கொடுங்க நான் உங்க கிட்ட அடிக்கடி பேசுறேன். உங்க நம்பரையும் கொடுங்க சார் போன் ஆன்சர் பண்ணலைனா உங்களுக்கு பேசுறேன்” என்று ராகவேந்திராவின் பி.ஏவின் அலைபேசி என்னையும் வாங்கிக் கொண்டவன் “இது சாரோட பெர்சனல் நம்பர் தானே” என்றும் கேட்டான்
“இந்த கார்டுல சாரோட எல்லா நம்பரும் இருக்கு. கடைசியா இருக்குற நம்பர் என்னோட நம்பர்” என்றவாறே பி. ஏ கார்டை கொடுக்க அதை வாங்கி பத்திரப்படுத்தியவன் அவர்களிடமிருந்து விடைபெற்று ஷாலினியை அழைத்துக் கொண்டு ஜீப்புக்கு விரைந்தான்.
“உன்ன என்னமோன்னு நினச்சேன். என் மாமாகிட்ட ஆறுதலா பேசின பாரு ஐ லைக் யூ” ஷாலினி பட்டென்று சொல்லி விட்டாள்.
“என்ன…” ஒரு நொடி பரவசமான மாறன் ஷாலினியின் புறம் திரும்ப இருவரினதும் தலை பலமாக மோதிக் கொண்டது.
ஷாலினி வலியில் தலையை தடவியவாறு மாறனை முறைத்துக் கொண்டிருக்க, சுதாரித்த மாறன் யாரையோ அழைத்து “நான் சொல்லுற நம்பரை எல்லாம் குறிச்சிக்கோங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எல்லா டீடைலும் கொடுங்க” என்று விட்டு அலைபேசியை துண்டித்தான்.
தாங்கள் இருவரும் விரலை இவ்வாறு கொக்கி போட்டு விளையாடுவதாக ஷாலினி கூற அதிர்ந்தான் மாறன்.
இவள் என்ன சொல்லுகிறாள். நான் எப்பொழுது இவளின் விரலை பிடித்து விளையாடினேன். குழம்பிய மாறனின் போலீஸ் மூளை விழித்து சந்தேகக் கண் திறந்துகொண்டது.
“என் முழுப்பெயர் என்ன?” ஷாலினியின் கண்களை நேருக்கு நேராக பார்த்தவன் நிதானமாக கேட்டான். அவன் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது.
“மாறன். வெற்றிமாறன். என் காலேஜ் சீனியர்” என்றவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் கொட்டிக் கிடந்தது.
“என்னை வெற்றி என்னு நினைத்துக்கொண்டு பேசுகிறாளா?” மாறனுக்கு பேச்சே வரவில்லை. அவன் எதிர் பார்த்த பதில்தான். இருந்தாலும் இதயம் ஆயிரம் கேள்விகளை அவனிடம் கேட்கலானது. ஷாலினியும் வெற்றியும் காதலித்திருப்பார்களா? என்பதுதான் பிரதானமாக அவனுள் வந்து வந்து போனது. வண்டியை கிளப்பியவன் அமைதியாகவே ஓட்டலானான்.
ஷாலினி மாறனுக்கு மறந்து விட்டதாக நினைத்து வெற்றியை பற்றி வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வர, மாறன் அமைதியாக கேட்டுக்கொண்டு வந்தான்.
அவளை வீட்டில் இறக்கி விடும் பொழுது ஷாலினி “நாங்க மொத மொத எங்க சந்திச்சோம்? என்று தெரியுமா?” என்று மாறனை பார்த்து கேட்டாள்.
மாறனை பொறுத்தவரையில் நேற்றுதான் ஷாலினியை காரியாலயத்தில் வைத்து சந்தித்தான். ஆனால் வெற்றியை எங்கே எப்பொழுது சந்தித்தான் என்று மாறனுக்கு எப்படி தெரியும் “தெரியாது” எனும் விதமாக தலையசைத்தான்.
“காலேஜ் லைப்ரரில சீனியர். அதான் கம்பியூட்டர் லேப் ப்ளஸ் லைப்ரரி சாக்லட் கூட சாப்பிட்டோமே. சுத்தம் உன்ன வச்சிட்டு… போலீஸ்காரனுக்கு நியாபக மறதி நல்லதில்ல மாறா.. டேக் கேயார்” கையசைத்து விடைபெற்று வீட்டுக்குள் செல்ல, மாறன் அதிர்ந்து செல்லும் அவளையே பார்த்திருந்தான்.
தான் இன்று அதிகாலையில் கண்ட கனவு வெற்றியின் இறந்தகாலமா? இது எப்படி சாத்தியம். ஒன்றும் புரியவில்லை. கனவில் கண்டது உண்மையில் நடப்பதாக கேள்விப்பட்டிக்கிருக்கின்றான். நடந்த சம்பவம் கனவாக தோன்றுமா? அதுவும் தந்து இரட்டையின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் தனது கனவில் வருமா? என்ன இது. அவன் உயிரோடு இருக்கும் பொழுது வராத கனவு. அவன் இறந்து பின் ஏன் வருகிறது? இறந்து இவ்வளவு நாட்களுக்கு பிறகு. ஒன்றும் புரியவில்லை.
ஷாலினியை சந்தித்த பின்தான் மாறனுக்கு வெற்றியின் கடந்த காலம் கனவாக வந்ததென்று யார் சொல்வது. மாறனுக்கு வெற்றியின் மூளையின் ஒரு பகுதியையே அறுவை சிகிச்சை செய்து பொருத்தியது மாறனின் குடும்பத்தார் மற்றும் தலைமை மருத்துவரை தவிர யாருக்கும் தெரியவில்லை. ஏன் மாறனுக்கே தெரியவில்லை. அப்படி இருக்கும் பொழுது அவன் கேள்விகளுக்கு யார் விடை கொடுப்பது? போலீஸான மாறன் இதை கண்டு பிடிப்பானா? வெற்றி ஷாலினியை காதலித்தானா? ஷாலினி வெற்றியை காதலித்தாளா?