மணிமாறனின் காவல் நிலையத்தில் அவன் முன்னால் அமர்ந்திருந்தாள் அலர்விழி மங்கை.
கொலை நடந்த வீட்டில் இருப்பேன் என்றவள் அடுத்த நாளே அங்கிருந்த காவலர்களிடம் கூறிக் கொண்டு ஒரு லாட்ஜில் சென்று தங்கிக் கொண்டிருக்க, அதை அறிந்துக் கொண்ட மணிமாறன் அவள் மீது இருந்த சந்தேகத்தை விடாது, அவளை புரிந்துகொள்ள முடியாமலும் முழித்தான்.
“என்கிட்ட வீராப்பாக பேசியவள் பயந்துட்டாளா? பயந்து நடுங்குறவளா அவள்? எதுக்காக போனா? தலைமறைவாகணும்னு நினச்சா? சொல்லாம கொள்ளாம போய் இருப்பா. எதுக்கு சொல்லிட்டு போனா? நான் அவளை நம்பனும்னு சொல்லிட்டு போய் இருப்பாளா?” அவள் எது செய்தாலும் நான் நம்ப மாட்டேன்” என்று தலையை உலுக்கிக் கொண்டு “இப்போ என்ன புதுத் திட்டம் போடுறான்னு தெரியலையே” என்றவனின் கண்களுக்குள் அவளை சந்தித்த நாள் கண்களில் விரிந்தது.
சில மாதங்களுக்கு முன்
வளமை போல் அன்றும் மணிமாறன் காவல்நிலையத்திற்குள் நுழைய, தொலைபேசி அடித்தது.
“என்ன கிட்னபர்ஸுக்கு பணம் கொடுக்க உங்க பையனோட டீச்சர் போய் இருக்குறாங்களா?” இப்படி ஒரு வழக்கை தான் இதுவரை பார்த்ததே இல்லை என்ற முகபாவத்தை கொடுத்தான் மணிமாறன்.
“காலைல ஸ்கூல் போன பையன தூக்கிட்டோம். பத்து லட்சம் பணத்த உன் பையனோட டீச்சர் கைல கொடுத்து மாலுக்கு அனுப்புன்னு சொன்னான். சார். அப்போவே போலிஸுக்கு போலாம்னு நான் சொன்னேன். இவதான் கேட்கல” கடத்தப்பட்ட பையன் கவீஷீன் தந்தை கமலேஷ் மனைவியை முறைத்தான்.
“போலிஸுக்கு போனா பையன கொன்னுடுவேன்னு மிரட்டினானே! மறந்துட்டீங்களா? ஐயோ என் பையனுக்கு என்ன ஆச்சென்றே தெரியலையே…” கண்ணீரில் கரையலானாள் கவீஷீன் அன்னை சுமதி.
அவர்களிடம் விசாரிக்கும் பொழுதே கவீஷை தேடி அவனது ஆசிரியை எந்த மாலுக்கு சென்றார்கள் என்று அறிந்த உடன் அங்கே கண்காணிக்க ஏட்டு ஏகாம்பரத்தோடு சிலரை அனுப்பி வைத்தவன் மாலுக்கு சென்ற ஆசிரியையை பற்றி விசாரிக்கலானான்.
“அந்த டீச்சர் பெயர் என்ன சொன்னீங்க? உங்க பையன் கிளாஸ் டீச்சர் தானே! எந்த ஸ்கூல்ல உங்க பையன் படிக்கிறான்? எத்தனையாம் வகுப்பு?” ஆசிரியை பற்றிய மேலும் விவரங்களை பாடசாலையிலிருந்து பெற்றுக்கொள்ளலாமென்று இவன் நினைக்க, கவீஷின் பெற்றோர்கள் சொன்ன தகவலில் மாலுக்கு சென்ற ஆசிரியை மீது மாறனின் சந்தேகம் பாய்ந்தது.
“ஐயோ அவங்க என் பையன் கிளாஸ் டீச்சர் இல்ல சார். அவங்க எங்க வீட்டுல ரென்டுக்கு இருக்காங்க. பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்குறதால டீச்சர் என்று பையன் கூப்பிடுவான். நாங்களும் அப்படியே கூப்பிடுவோம்” சுமதிதான் கண்களை ஒற்றியவாறு கூறினாள்.
“என்ன?” சத்தமாகவே கேட்ட மாறன் அவர்களை முறைத்துப் பார்த்தான்.
திட்டம் போட்டு கடத்தியதே இவர்கள் கூறும் அந்த டீச்சராகத்தான் இருக்க வேண்டும். குழந்தையை கடத்தியதோடு பணத்தோடு அந்த டீச்சரம்மா தலைமறைவாகியிருப்பாள் என்று தான் மாறனுக்குத் தோன்றியது. அதை கூறி இவர்களை கலவரப்படுத்த விரும்பாதவன்
“அந்த டீச்சர் ரென்டுக்கு வந்த டாகியுமன்ட்ஸ் கொடுத்திருப்பாங்கள்ல அதை கொஞ்சம் கொண்டு வாங்க” திட்டம் போட்டுக் கடத்தியவள் உண்மையான ஆவணங்களை கொடுத்திருக்க மாட்டாள், அவளது புகைப்படமாவது கிடைக்கும் என்றுதான் கேட்டிருந்தான் மாறன்.
“டாகியுமன்ஸா?… அப்படி எதுவும் கொடுக்கலையே… அவங்க இவருக்கு தெரிஞ்சவங்கன்னுதான் இவர் கூட்டிட்டு வந்தாரு” சுமதி மாறனை ஏறிட
“தெரிஞ்சவங்களா?” காமலேஷை ஏறிட்டான் மாறன்.
“ஆமா சார். என் ஸ்கூல் பிரெண்டு ஒருத்தன சந்திச்சேன் அவன்தான்…” என்ற கமலேஷ் யோசனைக்குள்ளானான்.
பல வருடங்கள் கழித்து சந்தித்த நண்பன் உதவி என்று கேட்டதும் மறுக்கத் தோன்றாமல் சரியென்றிருக்க, நண்பனின் அலைபேசி எண்ணை கூட வாங்காமல் வந்திருந்தான். மணிமாறன் தோண்டித் துருவி விசாரிப்பதை பார்த்த கமலேஷுக்கு குழந்தை காணாமல் போனதில் நண்பனின் மேலையே சந்தேகம் வந்திருந்தது.
அதை கூறினால், மனைவி தன்னை உண்டு, இல்லையென்று ஒரு வழி செய்துவிடுவாளே என்றெண்ணியவனுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது. ஆனால் அவன் மனைவி சுமதி அவன் எண்ணத்தை சரியாக, தவறாகத்தான் கணிப்பாள் என்று அவனுக்குத்தான் புரியவில்லை.
கமலேஷ் யோசிப்பதை சந்தேகமாக பார்த்த மாறனின் மனதில் “இவன் சொல்லும் டீச்சர் அம்மாவோடு இவன் கள்ளத் தொடர்பில் இருக்க வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருப்பானோ! அவள் இவனை விட கேடியாக இருந்து இவன் பிள்ளையை கடத்தி பணம் பறித்திருப்பாளோ!” என்றுதான் தோன்றியது.
“அவ யாரு என்னன்னு தெரியலையா? இல்ல சொல்ல விருப்பம் இல்லையா?” சுமதியின் வார்த்தைகள் தடித்து விழ, மனைவியை புரியாமல் ஏறிட்டான் கமலேஷ்.
“பின்ன… அவகிட்ட நீங்க வழியிறதும், குழையிறதும் எனக்கு தெரியாதுன்னா நினைச்சீங்க? எனக்கு சக்காளத்திய கூட்டிட்டு வந்ததுமில்லாம, கூடவே வச்சிருந்தீங்களா? சொல்லுங்க, என் பையன அவ கூட எங்க அனுப்பி வச்சிருக்குறீங்க? என்ன கொன்னுட்டு அவ கூடவே போய்டலாம்னு திட்டம் போடுறீங்களா?” மாறனின் மனதை படித்தது போல் சுமதி கமலேஷின் சட்டையை பிடித்து உலுக்கலானாள்.
தன்னை தவிர வேறு எந்தப் பெண்ணையும் பார்க்கக் கூடாது என்று எண்ணும் மனைவி என்பவள் கணவனானவனை சந்தேகப்படாமல் இருந்தால்தான் ஆச்சரியம்!
ஒன்றும், ஒன்றும் இரண்டு என்று சட்டென்று கணக்கு போட்டதுமில்லாமல், சந்தேகம் கொண்டு சட்டையை பிடித்து விட்டாள் சுமதி.
“ஆமா நீ பத்தாதென்று இன்னொருத்தியை வேற கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தணும் என்று என் தலையெழுத்துப் பாரு” கடுப்பாகவே சுமதியின் கைகளை உதறிய கமலேஷ் மணிமாறனிடம் திரும்பி
“பையன கடத்திட்டாங்க, பணத்தை உடனே எடுத்து வர சொல்லுறாங்கன்னு சொன்னப்போ… விழி நாம உடனே போலிஸுக்கு போலாம். இது யாரோ நல்லா தெரிஞ்சவங்க பண்ண கிட்னப் என்றுதான் சார் சொன்னா. இவதான் வேணாவே வேணாம்னு சொன்னா. பையன பத்தியும் எந்த தகவலும் இல்ல. ஒன் ஹவரா போன விழியையும் காணோம், என்றுதான் சார் நான் போலிஸுக்கு போன் பண்ணேன்”
கமலேஷுக்கு என்ன நடக்கிறது? யாரை நம்புவது என்றே புரியவில்லை. என்ன நடந்ததென்று மாறனிடம் தெளிவாகக் கூறினால், பையனை கண்டு பிடித்துக் கொடுப்பானென்ற நப்பாசையில் ஒப்பித்தான்.
“உங்களுக்கு பையன விட அவளுக்கு என்ன ஆச்சோன்னுதானே கவலை. என் பையன் மட்டும் கிடைக்கட்டும் அவள வீட்டை விட்டு துரத்துறேன்” எரிந்து விழுந்தாள் சுமதி.
“இவ ஒருத்தி சம்பந்தம் சம்பந்தமில்லாமலையே பேசுவா. நீ என்ன நானே போகச் சொல்ல போறேன்” கமலேஷ் கடுப்பாக மொழிந்து கொண்டிருக்க, வாசலில் போலீஸ் வண்டி வந்து நின்றது.
அதிலிருந்து அழுதவாறே கவீஷ் இறங்க, கூடவே இருந்த பெண்ணைத்தான் ஏறிட்டான் மாறன்.
பார்த்தால் மீண்டும் பார்க்கத் தோன்றும் கலையான முகம்தான். சுருட்டை முடி காற்றில் ஆட அமைதியாக இறங்கியவள், மெதுவாக அடியெடுத்து வைத்து மாறனின் மனதினில் நுழைந்தாள். குழந்தையை தேடி அலைந்ததில் முடி கலைந்ததா என்று தெரியவில்லை. சோர்வாக தெரிந்தாள். அவளின் அமைதியான அழகை அவள் சுடிதாரும் அழகாக்கிக் காட்ட அவளை ரசித்த மாறனின் கண்களை அவன் மூளை எச்சரிக்கவே காவலன் விழித்துக் கொண்டான்.
அப்பாவியாக நடிக்கும் எத்தனை பெண் குற்றவாளிகளி பார்த்திருக்கின்றான். இவளும் அதில் ஒருத்திதானென்று அவளை கூர்ந்து கவனிக்கலானான். அவள் கண்களில் கலக்கமும் இல்லை. கவலையும் இல்லை. அச்சம் கிஞ்சத்திற்கும் இல்லை. ஆக மொத்தத்தில் அவள் பெண்ணே இல்லை ராட்சசி என்ற எண்ணம்தான் மாறனின் பார்வையில் இருந்தது.
கவீஷ் பெற்றோரை கட்டிக் கொண்டு அழ, வெறுமையாக பார்த்திருந்தவளிடம் “ஏய் டீச்சரம்மா உன் பேரென்ன?” என்று கேட்டான் மாறன்.
சலனமே இல்லாமல் அவனை பார்த்தவள் “அலர்விழி மங்கை” என்றாள்.
அவள் பெயரை கூறியதும் மாறன் நம்பி விடுவானா? “உன் ஐ.டி கார்ட் எங்க?” அவனோ அவள் புறம் கையை நீட்டியிருக்க,
“எதுக்கு?” ஒற்றை சொல் கொண்டு அவனை ஏறிட்டாள் மங்கை.
“நீ யாரு என்று தெரிஞ்சிக்கத்தான்” மாறன் கூறிய விதமும், பார்த்த பார்வையும் அவன் அவளை சந்தேகமாக பார்ப்பது விழிக்கு புரியவே
“கவீஷ காப்பாத்தி கூட்டிகிட்டு வந்ததுக்கு நன்றி சொல்லலைனானும் பரவால்ல, அக்கியூஸ்ட் கிட்ட பேசுறது போல பேசாதீங்க” அவள் கூர்விழிகளை மேலும் கூர்மையாக்கி அவனை முறைத்தாள்.
உன் வேலையை நீ ஒழுங்காக பார்க்கவில்லையென்று குற்றம் சாட்டுவது போல் அவள் பேச்சின் தொனி இருக்க, மாறனுக்கு சுறுசுறுவென கோபம் வந்தது.
“கான்ஸ்டபுள் இந்த டீச்சரம்மாவ வண்டில ஏத்துங்க விசாரிக்கணும்” கடுகடுவென முகத்தோடு கூறியவன் “கமலேஷிடம் திரும்பி நீங்க கம்பளைண்ட் கொடுக்குறீங்களா?” என்று கேட்டான்.
என்ன நடக்கிறது என்று அலர்விழி அவர்களை புரியாது பார்க்க, பெண் காவலாளி அவளை இழுக்காத குறையாக வண்டியில் ஏற்ற முயன்றாள்.
“இன்ஸ்பெக்டர் என்ன பண்ணுறீங்க?” விழி கோபமாக மாறனை முறைக்க,
“என்ன பாக்குறீங்க? இவளை எப்படி காப்பாத்துறதென்றா?” சுமதி கமலேஷை முறைத்ததாள்.
ஏற்கனவே சுமதி சந்தேகம் கொண்டு கண்டபடி பேசியிருக்க, அலர்விழியின் பக்கம் பேசினால் தங்களுக்குள் பிரச்சினையாகும் என்று எண்ணிய கமலேஷ் “நீங்க விசாரிங்க சார்” என்று விட,
“உங்களுக்கு உதவணும்னு நினைச்ச என்ன சொல்லணும்” அவள் வாழ்க்கையில் சந்தித்தவர்களும், அவளை சுற்றி நடக்கும் சம்பவங்களும் அவ்வாறிருக்க, யார் விஷயத்திலும் மூக்கை நுழைக்க மாட்டாள்.
குழந்தையை கடத்தி விட்டார்கள் என்றதும் காவல்நிலையம் செல்லலாம் என்றவளிடம் கெஞ்சி, மன்றாடி பணத்தைக் கொடுத்து அனுப்பியவர்களே சந்தேகம் கொண்டால் என்ன செய்வதாம்? அவன் மீது கண்டனப் பார்வையை வீசிய அலர் அமைதியாக காவல் நிலையம் சென்றாள்.
“சொல்லு… உன் கூட்டாளிங்க பணத்தை எடுத்துக்கிட்டு எங்க தலைமறைவாகி இருக்காங்க? எல்லாரும் எங்க? எப்போ? சந்திக்க திட்டம் போட்டு இருக்கிறீங்க?” கான்ஸ்டபுள் மாலதி விழியின் முகத்துக்கு நேராக நின்று உருமலானாள்.
உள்ளே நுழைந்த உடனே கான்ஸ்டபுள் மாலதி விசாரணையை ஆரம்பித்திருந்தாள். ஒரு நொடிக் கூட வீணாக கூடாது சீக்கிரம், குற்றவாளியாலை கண்டு பிடிக்கவும் வேண்டும். பணத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பது மாறனின் உத்தரவு.
அலரோ அவளை அமைதியாக அலட்ச்சியப்படுத்தினாள்.
விழியின் அமைதியும், அலட்ச்சியமும் எல்லாவற்றையும் செய்து விட்டு, உங்களால் என்னை ஒன்றும் செய்து விட முடியாது என்று அமர்ந்திருப்பது போலவே தோன்ற கான்ஸ்டபுள் மாலதி அவளை அடிக்கக் கையோங்கி இருந்தாள்.
கான்ஸ்டபுள் மாலதியின் கையை சட்டென்று தடுத்த விழி “விசாரணை கைதியை அடிக்கக் கூடாது என்று போலீஸான உங்களுக்குத் தெரியாதா?” அமைதியாக மிரட்டினாள்.
“ஓஹ்… சட்டம் படிச்சிருக்குறியா? அதான் எங்கெங்கே ஓட்ட இருக்குன்னு சரியா நுழையிற” அவளை முறைத்த மாறன் “ஒழுங்கா கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு” கோபத்தை அடக்கியவாறு அடிக்குரலில் சீறினான்.
“நீங்க முறையா விசாரிச்சா நான் பதில் சொல்லப் போறேன். ஆனா நீங்க நான்தான் அக்கியூஸ்ட் என்றே விசாரிக்குறீங்க” வார்த்தைகளில் எள்ளலை கொட்டினாள் விழி.
அவள் பேச்சு மாறனுக்கு திமிராக மட்டுமே தெரிந்தது. அதில் சீண்டப்பட்டவன் “திட்டம் போட்டு கமலேஷ மயக்கி இருக்க, அவனை வச்சே வீட்டுக்கு ரென்டுக்கு வந்திருக்க. பையனுக்கு பாடம் எடுக்குறதா சொல்லி பையன் கூட க்ளோஸ் ஆகியிருக்க, சந்தர்ப்பம் பார்த்து உன் கூட்டாளி பையன தூக்கி பணம் கேட்டிருக்கான். பணத்தை உன்ன கொண்டு வரச் சொன்னதுலையே தெரியலையா? இது உன் வேலையென்று” அடுக்கடுக்காய் குற்றம் சாட்டலானான்.
குழந்தையை கடத்தினாள் என்று குற்றம் சொல்வதோடு, கமலேஷுடன் தொடர்பில் வேறு இருப்பதாக கூறியதும் அலர்விழிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. காவல்நிலையம் வரும் பொழுது சுமதி பேசியது ஞாபகம் வரவே, தான் நம்பியவர்களே அவ்வாறு பேசினால், காவலர்கள் இவ்வாறுதான் பேசுவார்கள் என்று தலையை உலுக்கிக் கொண்டவள் கண்களுக்குள் தன் வளர்ப்புத் தந்தை வந்து நின்றார்.
அவரும் ஒரு போலீஸ் தான். எவ்வளவு தன்மையாக பேசுவார். சந்தர்ப்ப, சூழ்நிலையில் குற்றம் செய்த எத்தனை பேரை மீண்டும் குற்றம் செய்து விடாதபடி நல்வழிப்படுத்தியிருக்கிறார். எல்லா காவலர்களும் அவரை போல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெண்ணியவள் வளர்ப்பு தந்தை புகட்டிய பாடத்தை கையில் எடுக்கலானாள்.
“ஓகே… நீங்க ஒரு முடிவோடத்தான் இருக்கிறீங்க” என்று அவனை தீர்க்கமாக பார்த்தவள் “நானும் சேர்ந்துதான் குழந்தையை கடத்தினேன்னா, நீங்க சொல்லுற அந்த கூட்டாளி கூட ஒரு தடவையாவது போன்ல பேசி இருப்பேனில்ல. என் கால் ரெகார்ட் எடுங்க. உண்மை என்னானு உங்களுக்கே புரியும்”
அது அவனுக்குத் தெரியாதா? அவன் வேலையை செய்யச் சொல்லி சொல்ல இவள் என்ன என் மேலதிகாரியா? உள்ளுக்குள் கனன்ற கோபத்தை கையை மடக்கி இறுக்கி அடக்கியவன் “ஓஹ்… அப்போ பக்காவா திட்டம் போட்டேன்னு சொல்லாமல் சொல்லுற?” கடத்தலுக்கென்றே வேறு அலைபேசியை உபயோகித்திருப்பாளென்று நினைத்து மாறன் கூற, அது விழிக்கு நன்றாகவே புரிந்தது.
“அப்போ மால் சீசீடிவியை செக் பண்ணுங்க” என்றாள்.
“நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லாத. நீ பண்ண குற்றத்தை ஒப்புக்கொள்ளுற வழியப்பாரு” அடிக்குரலில் சீறினான் மாறன்.
இவன் மாலுக்கு அனுப்பிய காவலர்கள் சென்ற பொழுது அலர்விழி கவீஷை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்க, குழந்தையிடம் விசாரிக்க வேண்டிய நிலை மாறனுக்கு உருவானது. அவன்தான் அலர்விழியை கொஞ்சமேனும் நம்பவில்லையே.
அதிர்ச்சியில் இருக்கும் குழந்தையை சமாதானப்படுத்தி விட்டு அழைத்து வருமாறு கமலேஷிடம் கூறிவிட்டு தான் வந்திருந்தான். கவீஷ் ஆறு வயதுக் குழந்தை. அவன் கூறுவதை முழுதாக நம்பவும் முடியாதே. அலர்விழி என்ன சொன்னாளோ, குழந்தையை என்ன பார்க்கச் செய்தாளோ அதை தானே கூறுவான்.
அவளை சந்தேகப்படுவதால் மட்டும் அவளை கைது செய்து விட முடியாதே! ஆதாரம் வேண்டுமல்லவா அடுத்து என்ன செய்வது என்று அலர்விழியை முறைத்தவாறு அமர்ந்திருந்தான்.
முடிவு செய்து விட்டு பேசுபவனிடம் என்னவென்று விளக்க? அவனை சலனமே இல்லாமல் பார்த்தவள் “ஓகே சார் உங்க வேலைய நீங்க சரியா பாருங்க” கொஞ்சம் நக்கல் கலந்த குரலில்தான் கூறியவள் அமைதியானாள்.
அடுத்த மணித்தியாலங்கள் காவல்நிலையத்தில் பரபரப்பாக நகர்ந்தது. அலர்விழி அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகராமல் வேடிக்கை பார்த்திருந்தாள்.
மணிமாறனின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததாக அலறியது. அலைபேசியை குடைந்தவன் அதிலிருந்த தகவல்களை பார்த்து புருவம் சுருக்கினான். உடனே சென்னையில் இருக்கும் நண்பனை அழைத்தவன் “போட்டோஸ் இல்லையா?” என்று கேட்க,
“என்ன நீ? உன் அப்பா சென்னையிலையே பெரிய நியூரோ சர்ஜன். மீடியாலையே அவர் போட்டோ இருக்கே” என்றான் மறுமுனையில் இருந்தவன்.
“என் அப்பா யாரென்று தெரிஞ்சா நான் எதுக்கு உன்கிட்ட கேட்கப் போறேன்?” அலர்விழியை பார்த்தவாறே மனதில் நினைத்தவன்
ஏதோ வழக்கை பற்றி பேசுகிறான். அது கவீஷின் கடத்தல் வழக்கா? அல்லது வேறு ஏதாவதா? என்பதுதான் அவள் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
தந்தையில்லாமல் வளர்ந்தவன் மணிமாறன். தந்தை எங்கே என்று அன்னையிடம் கேட்ட கேள்விக்கு பதில் வராது போகவே, தாத்தாவை நச்சரித்தான்.
“இப்போ சொன்னாலும் உனக்கு புரியாது காலேஜ் முடிஞ்ச பிறகு பேசலாம்” என்றிருக்க, காவலனாகும் கனவில் இருந்தவன் தந்தையை பற்றி மறந்துதான் போய் இருந்தான்.
கனவு நனவான பின் தன் சாதனைகளை பகிர்ந்துகொள்ள ஆசையாக, ஆவலாக தந்தை இல்லையே என்று தோன்ற தாத்தா தர்மதுரையின் முன்னால் சென்று நின்றான்.
தந்தை உயிரோடு இல்லையென்றால் அன்னை கூறியிருப்பாள். பேசவே பிடிக்காமல் இருக்கின்றாளென்றால் முன்னால் குற்றவாளியாக இருப்பாரோ, அல்லது சிறையில் இருப்பாரோ, அப்படியும் இல்லையென்றால், வேறு குடும்பம் இருக்குமோ என்று பல கேள்விகள் எழுந்து அவன் மனதை குத்திக் கிழிக்க, தாத்தாவின் பதிலுக்கு காத்திருந்தான்.
தர்மதுரை கூறிய கதை முற்றிலும் வேறு பட்டிருக்க, அவன் கூடப் பிறந்த இரட்டையை பற்றி அறிந்த உடன் அதிர்ந்தான். அன்னையின் கோபமும் புரிந்தது. அவள் கோபம் நியாயமானதாகக் கூட இருக்கட்டும். அவன் கூட பிறந்தவனை பற்றி ஒன்றுமே கூறாமல் இருந்ததை எண்ணி கோபம் வர, அன்னையிடம் சண்டையிட முனைந்தவனை தடுத்திருந்தார் தர்மதுரை.
“உன் அப்பாக்கு நீ உன் அம்மாகிட்ட இருக்குறது தெரிஞ்சும் உன்ன பார்க்க வரலைன்னா என்ன அர்த்தம். நம்மள வேணாம்னு முடிவு பண்ணிட்டார். உன் அம்மாக்கு மட்டும் உன் தம்பிய பார்க்கணும் என்று ஆசை இருக்காதா? அவ பேசாம இருக்குறதால பாசம் இல்லையென்று சொல்லலாமா? மனசுல இருக்குற ரணத்தை மறைச்சிகிட்டு நடமாடிகிட்டு இருக்கிறதே உனக்காகத்தான். நீ வேற பேசி வைக்காத”
தப்பு செய்தது தந்தை. அன்னை மேல் கோபப்படுவதா? முதல்ல தம்பிகிட்ட பேசணும் என்று முடிவெடுத்தவன் தர்மதுரையிடம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்டு அவர்களை பற்றி விசாரிக்குமாறு சென்னையில் இருக்கும் நண்பனான சர்வேஷிடம் கூறியிருக்க, அவன்தான் அலைபேசி அழைப்பு விடுத்திருந்தான்.
“உன் தம்பி என்ன செய்யிறான்னே என்னால கண்டு பிடிக்க முடியல. ஐ மீன் என்ன வேல பாக்குறான்னு. ஒரு கேம் சென்டர் நடத்துறான். முழு நேரமும் அங்கதான் இருப்பான்” உன் தம்பி கொஞ்சம் கூட பொறுப்பிலாதவன் என்ற பாணியிலையே கூறினான் சர்வேஷ்.
“அவன் போட்டோ கூட இல்லையா?” தன் இரட்டையின் புகைப்படத்தையாவது அனுப்பியிருக்கலாம் என்றுதான் நண்பனை கடிந்தான்.
‘எதுக்கு போட்டோ? கண்ணாடில போய் பாரு” உன் இரட்டை உன்னை உரித்து வைத்திருக்கின்றான் என்பதை இவ்வாறு கூற,
“என்ன?” அதிர்ந்தான் மாறன்.
மாறன் அதிர்ந்து விழிப்பதை பார்த்த அலர்விழி “நம்மள பத்தி தெரிஞ்சி அதிர்ந்தானா?” என்று அவனை ஏறிட்டாள்.
அவளை முறைத்தவாறே “சரி அப்போ நான் கூடிய சீக்கிரம் நேர்ல வரேன்” என்று அலைபேசியில் அனைத்திருக்க, சப் இன்ஸ்பெக்டர் மாதவன் வந்து அலர்விழியின் கால் ரெக்கார்டா அடங்கிய கோப்பை கொடுத்திருந்தான்.
ஒரே ஒரு பக்கம் அதுவும் ஒரேயொரு எண்ணுக்குத்தான் அழைத்துமிருந்தாள்.
உதடு வளைத்து புன்னகைத்தவன் அவளை ஏளனமாகப் பார்த்தான். தான் குற்றவாளி இல்லையென்று வாதாடுபவள் இந்த ஆறு மாதங்களில் ஒரே ஒரு எண்ணுக்கு அழைத்திருக்கிறாள் என்றால் நம்பும்படியாகவா இருக்கு? என்றது அவன் பார்வை.
பெற்றோர், கூட பிறந்தவர்கள், நண்பர்கள், கூட வேலை பார்ப்பவர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? அவர்களுடன் உரையாட வேறு எண்ணை வைத்திருக்கிறாளென்றல்லவா அர்த்தம்.
“உன் மற்ற நம்பர் சொல்லு” கடுப்பாகவே கேட்டான் மாறன்.
“எனக்கிருக்கிறது ஒரே ஒரு நம்பர்தான்” அமைதியாகவே பதில் கூறினாள் அலர்.
அவளது வாழ்க்கை வரலாறை கூறப் பிடிக்காமல், “என் சைல்டுஹுட் ப்ரெண்ட் நம்பர்தான் தான் அது. கமலேஷ் ப்ரெண்ட் தான் அவன்” என்ற அலரின் முகம் சாந்தமாக இருந்தது. அவள் குடும்பத்தை எண்ணி மட்டுமல்ல, அவளை நினைத்தும் அவள் அழுது கரைந்திருக்க வேண்டும். வாழ்க்கை கற்றுத் தந்த பாடம். அழுது கரைவதால், எதுவும் மாறாது என்று உணர்ந்து கொண்டதால் அவளுள் வந்த மாற்றம். அதை அவளை நன்கு அறிந்து வைத்திருந்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மாறன் புரிந்துகொள்வானா?
கமலேஷ் கூறிய ஸ்கூல் ப்ரெண்ட் என்றெண்ணியவாறே மாதவனுக்கு கண்களாளேயே உத்தரவிட்டிருந்தான். மாறன் கூறிய இரண்டையும் சரியாக புரிந்துகொண்ட மாதவன் நகர, கமலேஷ் குடும்பத்தோடு உள்ளே வந்தான்.
அலர்விழியை பார்த்ததும் கவீஷ் ஓடிவந்து கட்டிக் கொண்டான். சுமதி கமலேஷை முறைத்தவாறே குழந்தையை அலரிடமிருந்து பிரிக்க முயல அவளை தடுத்த மாறன் வெளியே அமருமாறு கான்ஸ்டபுள் மாலதியோடு அனுப்பி வைத்தான். சுமதி பிரச்சினை செய்து அதனால் கவீஷ் பயந்து அழுது கரைந்தால், எப்படி விசாரிப்பதாம்?
மாறன் நினைத்தது போலவே கவீஷ் கதை கூறினான். அதில் அலர்விழியை கதாநாயகியாக்கியிருந்தான். அவன் கூறிய கதையை மாறனால் நம்ப முடியாமைக்கு காரணம் அலர்விழி கடத்தல்காரனோடு சண்டையிட்டாள் என்பதுதான்.
கொஞ்சம் பூசினாற் போல உடம்பு. உயரமும் கம்மி. இந்த உடம்பை வைத்துக் கொண்டு அலர் சண்டையிட்டு கவீஷை காப்பாறினாளென்றால் யார்தான் நம்புவது? அமைதியாக கதை கேட்ட மாறன் குழந்தையை சுமத்தியிடம் ஒப்படைத்தான்.
மாறனின் பார்வையிலையே அவன் குழந்தை கூறியதை நம்பவில்லையென்று அலர்விழிக்கு புரிந்தாலும், அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
அவள் அமைதி “ஒருவேளை இது இவள் வேலை இல்லையோ” என்று மாறனின் மனதில் தோன்றுவதற்கு பதில் “இதை நீ செய்திருக்கக் கூடாது” என்று அவன் மனம் வேண்டலானது.
அவன் எண்ணப் போக்கை கண்டு வியந்தவன் “வர வர உனக்கு யார் மேல கரிசனம் வரணும் என்றே புரிய மாட்டேங்குது” மனதை அடக்கினான்.
மாறனின் ஒரே நம்பிக்கை, கடைசி நம்பிக்கை ஷாப்பிங் மாலின் சீசீடிவி காட்ச்சியாக இருக்க, மாதவனை கடியலானான்.
“வந்துகிட்டே இருக்காங்க சார்” என்ற மாதவன் மாலுக்கு சென்ற ஏட்டு ஏகாம்பரத்தை அலைபேசியில் அழைக்கலானான்.
“அலர்…. அலர் ஆர் யு ஓகே” என்றவாறே ஒருவன் உள்ளே நுழைந்து யாரையும் கண்டு கொள்ளாது அவளை ஆராயலானான்.
“ஹேய் ஐம் ஓகே” சட்டென்று எழுந்த அலர்விழி அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.
அவர்களின் அந்நியோன்யத்தை பார்த்து மாறனின் வயிறு பற்றியெறிந்து தணல் நெஞ்சுவரை அடித்திருக்கும் போலும், கோபம் மூக்கின் நுனியில் வந்தமர்ந்திருக்க,
“ஹேய் யார் நீ…. இது போலீஸ் ஸ்டேஷன். உன் ரூம் இல்ல. கொஞ்சிக் குலாவினது போதும். சொல்லு நீதான் இவ கூட்டாளியா?” நீதான் கடத்தல்காரனா என்று குற்றம்சாற்றிக் கேட்டான்.
போலீஸ் என்றாலே ஏடாகூடமாகத் தான் பேசுவார்கள். இவன் மட்டும் விதிவிலக்கா என்ன? நண்பனை கூட்டாளி என்றானா? தப்பார்த்தம் கொண்டு கூறினா என்று ஆராயாமல் வந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
கமலேஷை முறைத்தவாறே தன் பெயர் “யாதவ்” என்றும் அலர்விழி முன்னாள் ஏ,டி,ஜி,பி சத்யதேவின் வளர்ப்பு மகள் என்றும் கூற, உள்ளுக்குள் அதிர்ந்த மாறன் முகத்தை விறைப்பாக வைத்திருந்தான்.