Advertisement

தன் முன் நின்ற உருவம் தான் சற்றும் எதிர்பாராத விதமாக மூர்ச்சையானதும், அவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

அவர்கள் இருக்கும் கானகம் ஆழி தேசம் மற்றும் வல்லை தேசம் இரண்டையும் பிரிக்கும் எல்லையாக இருந்தது.

கடந்த ஐநூறு வருடங்களுக்கு முன்பு வரை வல்லை தேசத்து மக்களுக்கு எல்லா வளமும் நிறைந்த இந்த கானகம் வாழ்வதரமாகவும், ஆழி தேசத்துக்கு மக்களின் பயணத்திற்கும் பயன்பட்டு தான் வந்தது.

ஆனால் ஆழி அரிமா என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட இளவரசனின் அகாலமரணம், ஐந்து தேசத்திற்கும் அவன் கொடுத்த சாபம் என எல்லா துர்நிகழ்வுகளும் இந்த கானகத்தில் அரங்கேற, அதன்பின்பு மக்கள் யாரும் கானகத்தில் நுழைய துணியவில்லை.

அதை மீறி சென்ற சிலரும் மரணத்தை தழுவ, பல வதந்திகளால், மக்களின் பயத்தால், என பல காரணங்களால், அது ‘தடைசெய்யப்பட்ட கானகம்’ என்று பெயர்சூட்டப்பட்டு விட்டது.

குறிப்பாக நிறைமதி அன்று மக்கள் அந்த கானகம் இருக்கும் பகுதிக்கு கூட செல்ல மாட்டார்கள்.

இந்த கானகத்தில் நிறைமதி நாளில் மட்டும் ஓர் மாயநதி தோன்றும் என்றும், அந்த நதி கரையோரம் தன் மரித்த காதலிக்காக இன்றும் இளவரசன் காத்திருப்பதாக, மக்கள் மத்தியில் வதந்தி உலவுவதையும் அவன் அறிவான்.

அதுவும் இல்லாமல் எதிரில் நின்ற உருவத்தின் உடையை வைத்து, அது ஆணா அல்லது பெண்ணா என்று அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

மேற்கூறிய காரணங்கள் அவனின் சந்தேகத்தை தூண்ட போதுமானதாக இருக்க, இயல்பான பாதுகாப்பு உணர்வு தலைதூக்க, எதிரில் இருந்த உருவத்தை நோக்கி வாளை உயர்த்தி விட்டான்.

ஆனால்

“வாளை கண்டதற்கே மூர்ச்சையாகும் ஒருவரால், இந்நேரத்தில் எப்படி துணிச்சலோடு இங்கு வர முடியும், ஒருவேளை வழி மாறி ஏதும் வந்து இருக்க கூடுமோ????, ஆனால் ஐந்து தேசத்து மக்களும் இந்த கானகத்தை பற்றி அறிவார்களே”

என்று அவனின் மூளை பலதும் யோசிக்க, அவன் தன் கையை இடவலமாக அசைக்க, அவன் கையில் இருந்த நீலநிற நீளவாள், மீண்டும் நீர் துளிகளாக மாறி, மழை நீரோடு கரைந்தது.

மூர்ச்சையாகி கிடக்கும் நபர், யார் என்று அறியும் நோக்குடன், மெதுவாக அந்த உருவத்தை நெருங்கினான் அவன்.

பூரண சந்திரனின் வெள்ளொளியில், அந்த உருவம் ஒரு பெண் என புரிய, அவனின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

அம்மங்கையை உற்று பார்க்க, இன்னதென்று பிரித்தறிய முடியா பல உணர்ச்சிகள் தன்னுள் ஒரே நேரத்தில் பரவுவதை, ஒரு அதிர்ச்சியுடன் உணர்ந்தான் அவன், மாறவர்மன், ஆழிதேசத்து இளவரசன்.

மழை வலுக்க ஆரம்பிக்க, அதைக் கூட உணராமல், கண்கள் மூடி புல்தரையில் உணர்வின்றி கிடந்த அப்பெண்ணின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் அவன்.

எங்கே கண்ணை சிமிட்டினால், தன் முன்னால் இருக்கும் உருவம் மறைந்து விடுமோ என்று அச்சப்படுபவனை போல, நயனங்களை சிமிட்டவும் செய்யாமல், சிலையென நின்று கொண்டிருந்தான் மாறவர்மன்.

அப்போது தனக்கு பின்னால் யாரோ ஓடி வரும் ஓசை கேட்க, இளவரசனின் பாதுகாப்பு உணர்வுகள் விழித்துகொள்ள, அப்பெண்ணை விட்டு பிரியமாட்டேன் என்று அடம் பிடித்த புலன்களை, ஓசை வரும் திசையை நோக்கி திரும்பினான் மாறவர்மன்.

மரங்களுக்கு இடையில் இருந்து வெளிவந்த குணசிம்மன், இவனை பார்த்து முறைத்தப்படி,

“மாறவர்மா, உன்னை இங்கு வர வேண்டாம் என்று உரைத்தும்….”

என்று பேசிக்கொண்டே சென்றவன், அப்போது தான் நண்பனின் அருகில் இருக்கும் உருவத்தை பார்த்தவனாக,

“என்னவாயிற்று”

என்று கேட்டபடிய நெருங்கினான்.

தன் கைகளை கீழ் இருந்து மேலாக மெதுவாக உயர்த்த, அவனின் கைசைவிற்கு ஏற்றவாறு, நறுமுகையின் உடலும் தரையில் இருந்து, காற்றில் எழும்பியது.

நறுமுகையின் கால் தரைக்கு சற்று மேலே அந்தரத்தில் நிற்க, அவளின் உடல் செங்குத்தாக நின்றது.

சற்று நெருங்கி அவளை உற்று பார்த்து குணசிம்மன், மாறவர்மனிடம்,

“யாரிது மாறவர்மா”

என்று கேட்க, மற்றவனோ கேட்டவனுக்கு பதில் சொல்லாமல், இன்னும் தன்னை ஆட்டிப்படைக்கும் புது விதமான உணர்வில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தப்படி நின்றான்.

நண்பனின் இவ்விசித்திரமான நிலையை கண்ட குணசிம்மன்,

“மாறவர்மா”

என்று உரக்க அழைத்தவன், அவன் காவனம் தன் பக்கம் திரும்பியதும், தாங்கள் இருவரும் மழையில் நனைந்து கொண்டிருப்பதை கைகளால் சுட்டி காட்டினான்.

அதற்குள் ஓர் அளவுக்கு, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந்த மாறவர்மனுக்கு, அப்போதும் சில வினாடிகள் பிடித்தது குணசிம்மனின் குறிப்பை புரிந்து கொள்ள.

முக்கால்வாசி தன் இயல்புக்கு திரும்பி இருந்த மாறவர்மன், தன் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, கைகளால் காற்றில் ஒரு வட்டம் போட, அந்த வட்டத்திற்குள் மட்டும் மழை பெய்யவில்லை.

குணசிம்மன் நறுமுகையை நெருங்க போக, அதற்கு முன்பு, காற்றில் மிதந்து கொண்டிருந்த நறுமுகையை, தன் கையில் அள்ளி எடுத்து கொண்டான் மாறவர்மன்.

நறுமுகையின் உடலிலும், உடையிலும் இருந்த சேர், சகதி எல்லாம் தன் பட்டு உடையில் படுவதை பற்றி கவலைப்படுதற்கான எந்த அறிகுறியும், மாறவர்மன் முகத்தில் கிஞ்சித்தும் இல்லை.

நண்பனின் செயலை வித்தியாசமாக பார்த்த குணாசிம்மனுக்கு, அவனின் முகத்தில் இருந்த பாவம் எதையோ உணர்ந்த, எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக அவனை பின்தொடரந்தான்.

அரைசாமம்(ஒன்னரை மணி நேரம்) அந்த அடர்ந்த கானகத்தின் மரங்களுக்கு இடையே நடந்து வந்த பிறகு, மூவரும் கடற்கரை ஓரம் இருந்த, ஒரு சிறு மாளிகைக்கு வந்தனர்.

அம்மாளிகையின் முன்புறம் ஆட்கள் நடமாடும் ஓசை கேட்க, ஆள் அரவமின்றி இருந்த மாளிகையின் பின்புறமாக உள்ளே நுழைந்து, முதலில் இருந்த அறைக்குள் சென்றான் மாறவர்மன்.

தன் கையில் இருந்த மங்கையை, பூப்போல அங்கு இருந்த பஞ்சணையில் கிடத்திய மாறவர்மன், கண்ணெடுக்காமல் அம்மங்கையை தான் பார்த்தான்.

உடல் மெலிந்து, முகத்தில் இரத்த பசையே இல்லாமல், விழி மூடி கிடக்கும் இப்பெண், தனக்குள் விதைக்கும் உணர்வுகளை புரிந்து கொள்ள முயன்றவனாக, அமைதியாக நின்றான் அவன்.

சில நிமிடங்களுக்கு பிறகு, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன், குணசிம்மனை கையசைத்து, அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தான்.

சிறிது தூரம் நடந்த பிறகு, ஒரு தாழ்வாரம் வர, தன் கையை தட்டிய மாறவர்மன்,

“யாரங்கே”

என்று அழைக்க, அடுத்த நொடி விரைந்து வந்த காவலாளி தலைகுனிந்தப்படி இவனின் உத்தரவிற்காக காத்து நின்றான்.

“அரண்…”

என்று ‘அரண்மனை வைத்தியரை அழைத்து வா’ என்று ஆணையிட நினைத்தவன், பின்பு அதை மாற்றி,

“இருவரை உதவிக்கு அழைத்து கொண்டு, அழகம்மையை உடனே வரச்சொல்”

என்று சொல்ல,

“உத்தரவு இளவரசே”

என்ற அக்காவலாளி தலை குனிந்தபடியே வெளியில் சென்று விட்டான்.

இப்பெண், யார், என்ன என்ற விவரம் தெரியாத போது, அப்பெண்ணை பற்றிய தகவல், மகாராணியாருக்கு கசிவதை மாறவர்மன் விரும்பவில்லை.

அரண்மனையில் முக்கால்வாசி பேர் மகாராணியாரின் கையாள் என்பதால், தன் பணியாட்களை வெகு கவனத்துடனே தேர்ந்தெடுப்பது மாறவர்மனின் வழக்கம்.

அழகம்மை அவனை சிறு வயதில் இருந்தே பார்த்து கொண்டவர் என்பதாலும், அவருக்கு வைத்தியம் பெருமளவுக்கு தெரியும் என்பதாலும் தான் அவரை அழைத்து வர சொன்னது.

காவலாளி செல்லும் வரை அமைதியாக இருந்த குணசிம்மன்,

“அப்பெண்ணை பற்றி என்ன நினைக்கிறாய் மாறவர்மா, தடை செய்யப்பட்ட கானகத்தில், இந்த அகால நேரத்தில் அப்பெண் அப்படி என்ன பணி நிமித்தம் சென்று இருக்க கூடும்”

என்று தனக்கு தோன்றிய கேள்விகளை, தன் நண்பனிடம் கேட்டான். சில நொடிகள் யோசித்த மாறவர்மன்,

“அப்பெண்ணின் உடையை கவனித்தாயா, மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, நான் அறிந்த வரையில் இப்படிப்பட்ட உடையை, ஐந்து தேசத்தில் உள்ள எந்த பிரிவினரும் அணிவது இல்லை”

என்று சொல்ல, ஒப்புதலாக தலையசைத்த குணசிம்மன்,

“மாறவர்மா, யாரென்றே தெரியாத அம்மங்கையை மாளிகைக்கு நாம் கொணர்ந்ததே இருக்க கூடாதோ என்று எனக்கு இப்போது தோன்றுகிறது”

என்று தீவிர யோசனையுடன் சொன்னவன், மற்றவன் அவனை கேள்வியாக பார்க்க, தொடர்ந்து,

“இன்னும் சில திங்களில்(மாதத்தில்) ஆழி தேசத்தின் முடிமன்னரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைப்பெற இருக்கிறது, இந்நிலையில் உனக்கு தீங்கு விளைவிக்க அம்மங்கை எதிரியால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால்????”

என்று தன் உள்ளகிடங்கை மறைக்காமல் வெளிக்காட்டினான் குணசிம்மன்.

அவன் எதிரி என்று சொன்னது மகராணியாரை தான் என்று தனியாக சொல்ல வேண்டியது இல்லை அல்லவா.

இதற்கும் பதில் எதுவும் உரைக்காத மாறவர்மன், யோசனையுடனே இப்படியும், அப்படியுமாக சிறுது நேரம் நடந்தான்.

நண்பனின் சிந்தனையை கலைக்காத குணசிம்மன், அங்கு இருந்த ஓர் இருக்கையில் அமர, சில நிமிடங்களுக்கு பிறகு, சாளரத்தின் அருகே நின்ற மாறவர்மன்,

“என்னை உளவு பார்க்கவோ, கொன்று புதைக்கவோ திறன் கொண்ட பல ஒற்றர்கள் அவர்கள் வசம் உள்ளனரே குணசிம்மா, அது தான் அவர்கள் நோக்கம் எனில், அதை எப்பொழுதோ செய்து இருக்க மாட்டார்களா”

என்றவன் தொடர்ந்து,

“அதுவும் இல்லாமல் எனக்கு தீங்கு விளைவிக்க, வாளை கண்டாலே மூர்ச்சையாகும் இப்பெண்ணையா அனுப்புவார்கள்”

என்றவன் ஒரு இடைவெளி விட்டு,

“குறிப்பாக நான் நிறைமதிதோரும் தடைசெய்யப்பட்ட கானகத்திற்கு செல்வதை யாரும் அறியமாட்டனரே குணசிம்மா”

என்று சாளரத்தின் வழியே, வானில் உலாவி கொண்டிருந்த முழுநிலவை பார்த்தப்படியே சொன்னான்.

இதைக்கேட்ட குணசிம்மனும் சிந்தனையில் ஆழ, இரு பணி பெண்களுடன் வந்து, மாறவர்மன் முன்பு நின்றார் அழகம்மை.

அவரை பார்த்த மாறவர்மன், எதுவும் பேசாமல் நறுமுகை இருந்த அறையை சுட்டி காட்ட, அந்த பெண்கள் பின் தொடர உள்ளே சென்றார் அவர்.

மஞ்சத்தில் மூர்ச்சையாகி கிடந்த நறுமுகையை பார்த்தவர் மனதிற்குள்,

“ஒரு வழியாக, வர வேண்டிய இடத்திற்கு, வந்து சேர்ந்து விட்டாய் போலவே”

என்று எண்ணியவர், அவளை பார்த்து பல அர்த்தங்கள் பொதிந்த புன்னகை ஒன்றையும், யாரும் அறியாமல் சிந்தினார்.

மிகவும் சாந்தமான முகத்தோடு நறுமுகையை நெருங்கி அவளின் மணிக்கட்டை பிடித்து, கண்களை மூடி நாடியை சோதித்தார்.

பின்பு திரும்பி,

“நீ சென்று மாற்று உடையும், குழலை உலர்த்த கங்கும் கொணர்ந்து வா”

என்று ஒரு பெண்ணிடம் சொன்னவர், இன்னொரு பெண்ணிடம்,

“பின்னால் சென்று, மூக்குத்தி செடியை பறித்து வந்து, பத்து போடுவதற்குரிய பதத்தில் தயார் செய்”

என்றவர், வெளியே சென்று மாறவர்மனிடம்,

“இளவரசே கவலைப்பட ஏதுமில்லை, உடல் மற்றும் மன அழற்சியில் மூர்ச்சையாகி இருக்கிறார், வெகுவாக பலவீனமாகவும் இருக்கிறார், கண்கள் திறக்க சில நாழிகைகள் ஆகலாம்”

என்று தகவல் சொன்னவர், அவன் தலையசைத்ததும், தன் பணியை தொடர அறைக்குள் சென்றார்.

நறுமுகையின் ஈர உடையை கழற்றி, உடல் முழுக்க இருந்த சேர், சகதியை எல்லாம் சுடுநீரில்ல் நனைத்த துணியால் சுத்தமாக துடைத்து விட்டு, உடலை உறுத்தாத மெலிதான பருத்தி உடையை அணிவித்தார்.

பின்பு அவளின் நீண்ட பின்னலை அவிழ்த்து, கங்கு கொண்டு கார்குழலை உலர்த்தினார்.

கைகளில், கால்களில் இருந்த காயங்களை சுத்தமான துணியால் துடைத்து, தயார் செய்திருந்த மூலிகையை வைத்து பத்து போட்டார்.

அறை முழுவதையும் அகில் மற்றும் சந்தன மணத்தால் நிரப்பியவர், பிராகசமாக இருந்த அறையின் விளக்குகளை அணைத்து, கண்களை உறுத்தாத மெல்லிய ஒளி மட்டும் வீசும் படி செய்தார்.

எல்லா வேலைகளும் முடியவும் அப்பெண்களை பார்த்தவர்,

“இங்கு இன்று பார்த்த பணியை, இந்த அறையை விட்டு வெளியேறியதும் மறந்து விடுவது தான் தங்களுக்கு உத்தமம்”

என்று பணிப்பெண்களுக்கு எச்சரிக்கை கொடுத்தவர், அவர்கள் பவ்யமாக தலையசைக்க, அவர்களோடு வெளியில் வந்தார்.

மாறவர்மனிடம் சென்று,

“பணியை நிறைவேற்றியாயிற்று இளவரசே”

என்று சொல்ல, இளவரசன்,

“சென்று ஓய்வு எடுத்துவிட்டு பொழுது புலர்ந்ததும் வாருங்கள்”

என்று சொல்ல, குனிந்து தலையசைத்த அழகம்மையும், மற்றவரும் அரண்மனையை விட்டு வெளியே சென்றார்கள்.

உள்ளே நறுமுகைக்கு சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கும் போதே, மாறவர்மன் சென்று தானும் குளித்து உடையை மாற்றி வந்து விட்டான்.

அப்படி வந்த மாறவே ஏதோ சிந்தனையில் மூழ்கி அமர்ந்து இருக்க, அவனை பார்த்தப்படி அமர்ந்திருந்த குணசிம்மனுக்கு மனம் எல்லாம்,

“இம்முறை நிகழவிருக்கும் பஞ்சதேச சங்கம திருவிழாவிலேனும், ஐந்து தேசத்தையும், ஐநூறு ஆண்டுகளாக பீடித்திருக்கும் சாபம் விலக வேண்டும்”

என்ற பிராத்தனை மட்டும் தான்.

ஏனோ அவனுக்கு முன்பு இருந்தே, அந்த சாபம் மாறவர்மனால் தான் முற்று பெரும் என்று ஓர் ஆழ்ந்த நம்பிக்கை.

மாறவர்மனின் திறமையும், செயல்களும் அதை பலமுறை உறுதி செய்ய, ஆழி தேசம் மட்டுமில்லாமல், பிற தேசத்து மக்களிடையும் இந்த நம்பிக்கை பரவி இருப்பதை குணசிம்மன் அறிந்து இருந்தான்.

மக்களின் இத்தகைய நம்பிக்கை, மாறவர்மன் ஆழிதேச மணிமுடியை கைப்பற்ற பெரும் உதவியாக இருக்கும் என்பதும் அவனின் கணிப்பு.

ஆதனாலோ என்னவோ இன்று நடைப்பெற்ற நிகழ்வுகள், அவனுக்கு அவ்வளவு ஏற்புடையவையாக இல்லை.

ஏதோ ஒரு விதத்தில் அப்பெண், மாறவர்மனை பாதிப்பதை, குணசிம்மனால் உணர முடிந்தது.

ஒருவேளை அப்பெண்ணால் சாப விமோசனதில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமெனில், அப்பெண்ணை பலி கொடுக்கவும் குணசிம்மன் சித்தமாக இருந்தான்.

“ஐந்து தேசங்களும், அதன் மக்களுமே முக்கியம், தேசங்களின் சாப விமோசனதிற்காக எதையும் செய்வேன் நான்”

என்று தனக்கு தானே சூளுரைத்தும் கொண்டான் குணசிம்மன்.

ஆனால், மேற்கூறிய எதையும் தன்னால் செய்ய முடியாது என்பதையோ, தாங்கள் அனைவரும் விதியால் ஆட்டி வைக்கப்படும் வெறும் பொம்மை தான் என, அவன் அப்போது அறிந்திருக்கவில்லை.

நறுமுகை தடைசெய்யப்பட்ட கானகத்தின் புல் தரையில் சயனித்திருந்த அதே நேரம், தான் கண்ட சொப்பனத்தினால், முகம் எல்லாம் முத்து முத்தாய் வியர்க்க, வெளிறிய முகத்துடன் எழுந்து அமர்ந்தாள் வல்லை தேசத்து இளவரசி நற்சோணை.

Advertisement