Advertisement

அத்தியாயம் 5
“நான் டீ கூட பிஸ்கேட் கண்டிப்பா சாப்பிடுவேன் இல்லனா எந்த வேலையும் சரியா பண்ண முடியாது” என்பது போலதான்  நேசமணி சரவணன் சார் உறவு. நேசமணிக்கு ஆபீசில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. மேற்பார்வை பார்ப்பது தான் பெரிய வேலை. எல்லா தளத்துக்கும் சும்மா ஒரு விசிட் போட்டாலே போதும். உணவகத்தின் நாளைய உணவை தீர்மானிப்பதிலிருந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு இருக்கா என்பது வரை எல்லா வேலையையும் பார்ப்பார். இந்த வேலையை இவர் பார்க்க வேண்டி கட்டாயம் இல்லை. சில நேரம் வெளி வேலைகளையும் பார்ப்பார். இன்றும் அது போல் வெளியே சென்றிருந்தார். அதனாலயே! சைதன்யனை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தார் சரவணன் இல்லையென்றால் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பார். 
கணனியில் சைதன்யன் மீராவை அணைத்துக் கொண்டிருக்கும் காட்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீராவின் கைகளோ அவனின் தோள் மேல் இருக்க பார்ப்பவர்களுக்கு அது வேறு அர்த்தத்தை கொடுத்தது.
அதே அர்த்தத்தோடு தான் சரவணன் சாரும் பேசினார். “பாரினில் இந்த வேலைய தான் பார்த்தியா? நம்ம குடும்ப பாரம்பரியம் என்ன? உன்ன முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்தது நீ எல்லாத்தயும் கத்துக்கணும்னு தான் இந்த மாதிரி வேலை செய்ய இல்ல” கணணியை காட்டியவாறே “மீராவை உனக்கு கட்டிவைக்க தான் பேசி பழக சொன்னேன் இந்த மாதிரி ஒழுக்கம் கெட்டவிதமா நடந்துக்க இல்ல. அதுவும் என் ஆபீசில். எப்படி பட்ட குடும்பம் நம்மது. நல்லவேளை நேசமணி இங்கில்ல, அவன் தூக்கி வளர்த்த பையன் இப்படினு வருத்தப்பட்டு இருப்பான்” கோவமா? ஆதங்கமா? அவர் குரலில் சைதன்யனால் கணிக்க முடியவில்லை.
பிள்ளைகள் எந்த தவறு செய்தாலும் அதை மூடி மறைக்கும் பெற்றோருக்கு மத்தியில் கண்டிக்கும் சரவணன் நல்ல தந்தைதான். ஆனால் நடந்து என்ன என்று விசாரிக்காமல் அவராகவே முடிவு செய்து பேசுவதும் அவரது பலவீனம்தான்.
“மீராவை ஏற்கனவே தெரியுமா என்று கேப்பார் என்று பார்த்தால் இவர் என்ன கேட்கிறார்? omg  நா மீரா கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா நினைக்கிறாரா! நா தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுறது மாதிரியும் மீரா தடுக்குற மாதிரியும் இல்ல இருக்கு!” நொந்துவிட்டான் சைதன்யன்.
“காலேஜில் எந்த பொண்ணையும் ஆர்வமா பார்த்ததே இல்லை. யாராச்சும் லவ்னு வந்து நின்னவே எனக்கு கல்யாணம் ஆச்சு சிஸ்டர்ன்னு கழண்டு கொண்டதே இவரால். பாரம்பரியம், அம்மாட ஆசனு ஏதேதோ பேசி என்ன லாக் பண்ணிட்டாரு. “என் ஸ்ரீ” “என் ஸ்ரீ” அவ லவ்வ புரிஞ்சிக்காம என்னெல்லாம் பேசிட்டேன்” நெஞ்சை நீவி விட்டவன். “எல்லாம் இவரால் வந்தது” அவன் பேசியவைகளுக்கு தந்தையை சாடியவன் மனதுக்குள்ளே அரற்றியவனாக சோபாவில் தொப்பென்று அமர்ந்தான். தன்னை நம்பாமல் என்ன நடந்தது என்று விசாரிக்காமல் பேசுபவரிடம் எதுவுமே பேசத் தோண்றவில்லை. தன்மேலையே கோவம் கூட வந்தது.
சைதன்யனுக்கு புரியவில்லை சரவணனின் மனநிலை. மீராவின் மேல் வைத்த அதிகப்படியான பாசமே அவரை யோசிக்கவிடாது பேச வைத்ததென்பது.
தனது குடும்ப பாரம்பரியம், சைதன்யனை அவர்கள் வளர்த்த விதம் என்று மாற்றி மாற்றி சைதன்யனின் காதை பஞ்சர் பண்ண ஒன்னும் பேசாமல் வெளியே செல்ல கதவை நோக்கி நடந்தான். 
“லட்சு கிட்ட என்ன சொல்லட்டும்” என்றவாறு மகனை தீர்க்கமாக பார்த்தார் சரவணன்.
அவரை வலியுடன் பார்த்தவன் “ஷத்ரிய வம்சா வழியில் வந்த ‘அஞ்சா நெஞ்சம்’  நஞ்சூட்டப்பட்டு சாகும் வேளையிலும் ஒரு பெண்ணின் மானம் காக்க கைல இருந்த வாளை குறி பாத்து அவன் கழுத்துக்கே வீசினாரே “விஷ்வதீரன் சௌதாகர்” அவருடைய கொள்ளுப்பேரன் நான் சைதன்யன் சௌதாகர்.” என்று கூறியவன் திரும்பி பார்க்காமலேயே ஆபீசை விட்டே சென்று விட்டான். {அந்த வாள் எங்க சார்}
சைதன்யனின் பதில் ஒன்றே போதுமானது அவன் தப்பானவனில்லை என்று சொல்ல.
நிதானமாக முடிவெடுக்கும் சரவணன் இப்படி அவசரப்பட்டுட்டார். எல்லாம் அன்பு செய்யும் மாயம்.
அவ்வொளித்தட்டை உடைத்து குப்பைக் கூடையில் எறிந்தவர் வேலை செய்ய மனமில்லாது வீட்டுக்கு சென்றார்.
மாலையில் சைதன்யனுக்காக காத்துக்கொண்டிருந்த மீராவை அணுகினான் அமர்வர்மா. அவன் கண்ணில் தான் எத்தனை கனிவு
 “என்ன மீரா தேவ் அண்ணா இன்னும் வரவில்லையா?”
அங்கே அமர்வர்மாவை எதிர் பார்க்காத மீரா ஒரு கணம் தயங்கி “வருவாரு” என்று மாத்திரம் சொன்னாள்.
அவளை கூர்பார்வை பார்த்தவன் “மிஸ்டர் தனஞ்சயுடன் நீயும் லிப்ட் இல் இருந்தாயே! ப்ரோப்லேம் ஒன்னும் ஆகலேயே!” எதையோ தெரிந்துக்கொள்ளும் நோக்கத்துடன் கேள்வியை கேட்டாவன் “நீ பதில் சொல்லித்தான் ஆகா வேண்டும்” என்ற பார்வையோடு நின்றிருந்தான்.
அவசரமாக “இல்ல இல்ல” என்றவள் மொபைலை கையில் எடுத்தவாறு கால் செய்வது  போல் பாசாங்கு செய்ய,
அவளை புன்னகையுடன் ஏறிட்டவன் “சரவணன் சார் மத்தியானமே போய்ட்டாரு, மிஸ்டர்  தனஞ்சயனும் அப்பவே போய்ட்டாரு” என்று கூடுதலான தகவலையும் சொன்னான்.
“சரவணன் சார் அழைத்து என்ன வேல கொடுத்தாரோ தனு சொல்லாமலேயே போய்ட்டார்” என்றது மீராவின் மனது.
தேவின் கார் வாயிலின் உள்ளே நுழைவதைக் கண்டு மீரா அமர்வர்மாவிடம் விடைபெறாமலேயே காரின் அருகில் ஓடினாள். அவளுக்காக முன் இருக்கையின் கதவை திறந்து விட்ட தேவ் இறங்கி அமர்வர்மாவிடம் பேசலானான்.
காரில் அமர்ந்த மீராவுக்கு சைதன்யனை எப்படி தொடர்ப்பு கொள்வது என்ற சிந்தனையே அவனுடைய அலைபேசி என் கூட தெரியவில்லை என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள்.
‘சந்துரு அண்ணா’ என்று முணுமுணுத்தவள் ‘அவரிடம் கேட்போம்’ என்று தனக்குள்ளே பேசியவள், பின்னாடி அமர்ந்திருந்த ப்ரியாவை கவனிக்கவில்லை.
ப்ரியாவும் அலைபேசியில் தனக்கு வந்த மெயில்களை பார்வையிட்டுக் கொண்டு இருந்ததனால் மீராவிடம் பேசவில்லை.
அமர்வர்மாவிடம் விடைபெற்று தேவ் வரவே சந்துருக்கு பிறகு பேசலாம் என்று முடிவெடுத்தவள் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
வண்டியில் ஏறியதிலிருந்து வீடுவரை வாய் ஓயாது பேசும் மீராவின் அமைதியை வித்தியாசமாக பார்த்த தேவ் “என்ன டா தலைவலிக்குதா” என்று கேட்க,
தனது வேலையை முடித்துக் கொண்ட ப்ரியாவும் மீராவை ஆராயச்சியாய் பார்த்தாள். இந்த இரண்டு, மூன்று நாட்களாக மீரா ஏதோ சிந்தனையில் உழன்றவண்ணம் இருக்கின்றாள். அவளுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்று நினைத்தாலும் அதிகப்படியான வேலையால் நேரம் கிடைக்கவில்லை.
 “நாம ஐஸ் கிரீம் சாப்பிட்டுட்டு போலாம் தேவ்” என்று ப்ரியா சொன்னதே! மீரா வினு இல்லாமல் ஐஸ் கிரீம் சாப்பிடமாட்டாள் என்பதால். “வினு இல்லாம நா வரல” என்று அவள் சொல்வாளென்று எதிர் பார்க்க மீராவின் அமைதி இருவருக்கும் ‘ஏதோ சரியில்லை’ என்று தோன்றியது. 
கண்ணாடி வழியாக இருவரினதும் கண்கள் சந்தித்துக்கொண்டன. தேவின் மனதில் பயப்பந்து உருள ஆரம்பிக்க வண்டியை ஓரமாக நிறுத்தியவன், மீராவின் தோளை தொட, கண்ணை திறந்தவள் கேள்வியாக தேவ்வை பார்த்தாள்.
சூழ்நிலையை கையில் எடுத்த ப்ரியா “என்ன மீரா ரொம்ப டயடா” என்று கேட்க அப்போது தான் ப்ரியாவை பார்த்தாள் மீரா.
தன்னையே நொந்து கொண்டவள். ‘ஹிஹிஹி’ என்று இளித்தவாறு “கொஞ்ச நேரம் அமைதியா இருக்கலாம்னா விடமாட்டிங்களே!” என்று சமாளித்தாள்.
அர்த்தமான பார்வையை மாற்றிக்கொண்டனர் ப்ரியாவும் தேவும். வண்டி வீட்டை நோக்கி பறந்தது.
தேவிடம் விடைபெற்று வந்த அமர்வர்மா லிப்ட்டினுள் நடந்த காட்சியின் காணொளியை ஓடவிட்டு பார்த்துக் கொண்டு இருந்தான். ஆறு வருடங்களுக்கு முன் மீராவை சந்தித்த நாளும் நியாபகம் வந்தது. அவனது முகம் வேதனையை காட்டியது.
அமர்வர்மா ‘எஸ்.எஸ் குரூப் ஒப் கம்பெனிகளின் சீப் சிகியூரிட்டி ஒபிஸ்ர்’ என்பது தற்போதைய அடையாளம். உண்மையில் அவன் ‘ஸ்பெஷல் கிரைம் பிரென்ச்’  இல் டெக்னீஷியனாக பணியாற்றுபவன். அவனுடைய உண்மையான பெயர் தீரமுகுந்தன். தற்போதெல்லாம் வித விதமாக குற்றங்கள் நடக்கின்றன. அதிலும் cctv  பொருத்தி இருந்தால் அதை அமர்த்துவதும், சாட்சிகளை இல்லாமல் ஆக்க எவ்வழியிலேயோ காட்சிகளை இல்லாமல் செய்வதும் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இவைகளை தடுக்கவென அவன் கண்டுபிடித்த சிஸ்டெம் தான் ‘ஐம் வாட்சிங் யு’  தற்போது எல்லா இடத்திலுள்ள cctv யிலும் இது அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதை பொருத்தியவர்களுக்கே தெரியாமல். cctv ஆப் பண்ணாலும் காட்சிகளை அழித்தலும் அவனது சிஸ்டத்தில் அது என்றும் பத்திரமாக பாதுகாக்கப்படும்.
அப்படித்தான் லிப்ட்டில் நடந்ததையும் பார்த்துக்கொண்டு இருக்கிறான். அதை ஒரு பென்ட்ரைவில் ஏற்றியவன் பத்திரமாக எடுத்து வைத்தான்.
வீடு வந்தவர்களை சரஸ்வதியின் ஹை பிச் குரலே வரவேற்றது. வினு குட்டி பாட்டிக்கு பயந்து ஒரு மூலையில் கையை பிசைந்தவாறு நின்றுகொண்டிருந்தாள். எதுக்கு இந்த அம்மா இப்படி கத்துறாங்கனு பாத்தா இந்த குட்டிப்பொண்ணு பண்ண வேலை அப்படி.
ரவிக்குமார் அவருடைய மிலிட்டரி நண்பர் ஒருவர் தரும் பார்ட்டிக்கு சென்றிருந்தார். வினுவை போட்டிக்கில் வைத்துக் கொண்டிருந்த சரஸ்வதிக்கு ஹெல்ப் பண்ணுறேன் என்ற பேரில் கத்தரிக்கோலால் துணிகளை வெட்டி விட்டிருந்தாள். கடுப்பான சரஸ்வதி அம்மா வீட்டுக்கு அழைத்து வந்து தொலைக்காட்சியில் கார்ட்டூன் சேனலை வைத்து பார்க்குமாறு போட்டிக் பக்கம் நகர்ந்தவுடன்,
பிரிஜ்ஜெய் திறந்து சாப்பிட என்ன இருக்குனு தேடி எல்லாவற்றையும் வெளியே சிதற விட்டாள். பின்பு ஆப்பிளை கழுவித்தான் சாப்பிடணும்னு குழாயை திறந்து விட்டு வந்து விட்டாள். அங்கே சமையலறை வெள்ளத்தில் மூழ்கியது. ஆப்பிள் கழுவும் போது போட்டிருந்த ஆடை நனைந்ததால் ஆடை மாற்றவென அறைக்கு சென்றவள் அலுமாரியிலிருந்த துணிகளை பறக்க விட்டாள். வெளியே வந்து சமத்தா தொலைக்காட்சியை தான் பார்த்துக் கொண்டு ஆப்பிள் சாப்பிட்டாள்.{ நல்லவேளை ஆப்பிளை கட் பண்ணி தான் சாப்பிடணும்னு யாரும் சொல்லல}
வீட்டில் அத்தனை வேலைகளையும் சரஸ்வதி அம்மாவே பார்ப்பார். சமையலுக்கும் ஆள் வைக்க விரும்பாதவர். ஒரு பொழுதுபோக்குக்காகவே இன்னும் போட்டிக்கை நடாத்தி வருகிறார். நான்கு, ஐந்து பேர் தைப்பதற்கு இருந்தாலும் துணி வெட்டுவதை அவரே செய்வார். நல்ல வருமானம் வரும் என்றாலும் அதை விரிவுபடுத்த முயற்சிக்கவில்லை. தேவும் சொல்லிப் பார்த்து விட்டான். “இது போதும்பா” என்று விட்டுவிட்டார்.
மீராவிடம் எந்த வேலையும் வாங்க மாட்டாங்க. ப்ரியா தானாய் வந்து செய்தாலும் பிடிக்காது. தம்பி மனைவி சகுந்தலாவின் மேல் அளவுக்கதிகமா பாசம் வைத்துவிட்டார். அதே பாசம் மீராவின் மேல் இம்மியளவும் குறையாமல் இருந்தது. தேவ்வை மீராவுக்கு கட்டிக் கொடுக்கும் எண்ணம் எல்லாம் இருந்ததில்லை. எப்போ சகுந்தலா எக்சிடெண்டில் உயிரை விடும்போது “அண்ணி என் பொண்ண அம்மாவா பாத்துக்கோங்க” என்று கேட்டாளோ! அக்கணம் எடுத்த முடிவுதான் தேவ் மீரா திருமணம். இடையில் மீரா எக்சிடெண்ட் ஆகா அவரது முடிவோ உறுதியானது. தேவ் ப்ரியாவை காதலிப்பதாக வந்து நின்றதும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தேவ்வை விட மீராதான் பிடிவாதம் பிடித்து தேவுக்கும் பிரியாவுக்கும் திருமணம் செய்து வைத்தாள். மீராவின் பிடிவாதம் தான் வென்றது.
ப்ரியாவிடம் முகத்திருப்பாளாலும், ஜாடைமாடையான பேச்சுக்களாலும் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்துவார். வினு தன் பேத்தி என்ற பாசம் தலை தூக்கினாலும், அவள் செய்யும் குறும்பு இவர் இரத்த கொதிப்பை உயர்த்தி விடும். ப்ரியாவின் அச்சு அசலாக பிறந்ததினாலேயே வினுவிடமும் அவரின் கோபம் வெளிப்படும்.
ப்ரியாவும் தேவும் வேலைக்கு போகும் பொழுது வினு மீராவுடன் ஐக்கியமாகினாள். இப்பொழுது மிராவும் செல்வதால் ரவிக்குமார் பார்த்துக்கொள்கிறார்.
போட்டிக்கில் வேலை இழுத்துக்கொள்ள இரண்டு மணித்தியாலத்துக்கு பின் தான் வினுவின்  நியாபகம் வந்தவராக “ஐயோ புள்ள என்ன செய்யுதோ” என்று பதறியவராக வீட்டுக்கு வந்தவரை வெள்ளத்தில் மூழ்கிய வீடே வரவேற்றது.
ப்ரியாவின் மேல் இருந்த வெறுப்பும், மனதிலுள்ள கவலையும் வாய் வார்த்தையாக வெளிப்பட்டு ஹை பிச்சில கத்த தொடங்கினார். பயந்து போன வினுக்குட்டி கதிரையிலிருந்து துள்ளி எழுந்தவள் ஒரு மூலைக்குள் தஞ்சமடைந்தாள்.
பாட்டி எதுக்கு கத்துறாங்கனு தெரியாத மூன்று வயதேயான சுட்டிப்பொண்ணுக்கு தான் செய்து வைத்திருக்கும் வேலையின் பாரதூரம் புரியவில்லை.
காரை நிறுத்திய தேவிற்கு சரஸ்வதி அம்மா ப்ரியாவை திட்டுவதே காதில் விழுந்தது. ப்ரியாவை ஒரு பார்வைப் பார்த்தவன் வீட்டினுள் ஓட, ப்ரியாவும் ஓடினாள். உள்ளே வந்தவர்களுக்கு என்ன நடந்ததென்று நொடியில் புரிந்தது. வினுவை தூக்கி அணைத்தவான் ப்ரியாவிடம் தந்து அறையினுள் செல்லுமாறு கண்ணாலேயே சொல்ல ப்ரியாவும் குழந்தையுடன் சென்றாள். ப்ரியாவை கண்டவுடன் இன்னும் சரஸ்வதி அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்தது.
தேவோ அம்மா மேல் வந்த கோபத்தை அடக்கியவாறு சுத்தம் செய்ய ஆரம்பித்தான். சாவகாசமா வீட்டினுள் நுழைந்தாள் மீரா. அவள் சிந்தனையில் சைதன்யனே நிறைந்திருந்ததால் சரஸ்வதியின் குரல் கூட அவள் காதுகளில் எட்டவில்லை. மீராவை கண்டபின்பு அமைதியானவர் சமையலறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். மீரா தனக்குள் உழன்றவாறே அவளறைக்கு சென்றாள்.
மீராவின் நடவடிக்கையை வலியோடு பார்த்திருந்தான் தேவ். இந்நேரம் சரஸ்வதி அம்மாவை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணியிருப்பாள். அவளோடு தனிமையில் பேச வேண்டும் என்று முடிவெடித்தவனாக வேலையில் கவனமானான்.
அறைக்குள் வந்த ப்ரியா வினுவை பேசி திசை திரும்பியவரே அவளுடன் சேர்ந்து துணிகளை மடித்து அடுக்கலானாள்.
சரஸ்வதி அம்மா சமையலை முடித்து தனதறைக்கு புகுந்துக்கொண்டவர் மீரா தன்னிடம் பேசாதது உறுத்தவே தான் பேசியது அதிகப்படி என்று மனம் வருந்தினார்.
வீட்டில் நடந்த சம்பவம் மீராவின் கவனத்தில் இல்லை ப்ரியா அழைத்ததும் சாப்பிட்டவள், தனதறைக்கு புகுந்து சந்துருவை அழைத்து சைதன்யனின் நம்பர் வாங்கி அவனுக்கு அழைக்க அது அணைக்கப்பட்டுள்ளது என்று வரவும் மேலும் தன்னுள் ஒடுங்கியவளாக அமர்ந்திருந்தாள்.
வினுவை தூங்கவைத்து தேவ்வை தேடிய ப்ரியாவுக்கு தோட்டத்தில் அமர்ந்து வானத்தை வெறித்துக்கொண்டிருந்த தேவ் தென்பட்டான். “தேவ் தூங்கலையா?”
ப்ரியாவை கண்டவன் கசந்த புன்னகையை சிந்தியவாறே “ஏன் ரியா உனக்கு அம்மா மேல கோவம் இல்லையா?”
 “எனக்கு உங்கமேலதான் தேவ் கோவம் கோவமா வருது பெரிய மனோதத்துவ டாக்டர் என்று பேர் அவங்க அம்மா மனச புரிஞ்சிக்க முடியலையே!” கண்ணை உருட்டி மிரட்டி ஆரம்பித்தவள் குறும்பாக முடிக்க, அவளை புரியாத பார்வை பார்த்தவனை “மிஸ்டர் தேவேந்திரன் உங்க அம்மாக்கு என் மேல எந்த கோவமும் இல்ல. டாக்டரே! அவங்க மீரா மேல வச்ச பாசம் தான் அவங்கள  இப்படி பேசவைக்குது. வினு பிரசவிக்கும் போது எங்கம்மாக்கு ஹார்ட் ஆபரேசன் பண்ணதால அத்த தானே  என்னையும் பாபாவையும் பாத்துக்கிட்டாங்க”
 “உனக்கு மீரா மேல எந்த வருத்தமும் இல்லல” ஒருத்தி எத்தனை நாள்தான் பொறுமையாக இருப்பாள். ஒரு கட்டத்துக்கு மேல் அவள் பொறுமையின் எல்லை கோட்டைக் கடந்து கோபம் தலை தூக்கினால் உறவுகளுக்கு எவ்வாறான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று தேவ்வுக்கு நன்றாகவே தெரியும். அந்த அச்சம்தான் மீண்டும் மீண்டும் அவனை மனைவியிடம் கேள்வியாக கேட்க வைத்திருந்தது.   
 “ஹாஹாஹா போங்க தேவ் காமடி பண்ணிக்கிட்டு,  அவ உங்களுக்கு மூத்த பொண்ணு, எனக்கும் தான்” என்றாள் கண்ணில் நீர்கோர்க்க.
அவளை இழுத்து அணைத்தவன். “உன்ன மொத மொத கோவில்ல மீரா அறிமுகப்படுத்தினாலே அப்போ ஒரு வெட்கப்புன்னைகையோடு என்ன பாத்தியே அப்பப்பா செமயா இருந்தடி இன்னைக்கும் அது என் கண்ணுக்குள்ளயே நிக்குது” ஆசையாகவே கூறினான் தேவ்.
வெக்கப்பட்டு அவன் கன்னத்தை மெதுவாக கடித்த ரியா “நா உங்கள மொத மொத எப்போ பார்த்தேன்னு தெரியுமா?” கணவனின் முகம் நோக்கி நிற்க
“கொசுவாத்திய சுத்தப்பொறியா?”
“போங்க தேவ்” அழகாக வெட்கப்பட்டாள் ப்ரியா.
புக் ஷாப்பில் நுழைந்த ப்ரியா தனக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு பில் கட்டும் போது இரண்டு பெண்கள் பேசுவதை தற்செயலாக கேட்டாள்.
“ஆள் பாக்க ஹீரோ மாதிரி இருக்காண்டி கொஞ்சம் திரும்பி பாக்குறானான் என்று பாரு”
 “திமிரு புடிச்சவனா இருப்பான்” என்றாள் மற்றவள்
யாரைப்பத்தி சொல்றாங்க என்று தலையே அங்கேயும் இங்கேயும் திருப்பி பார்த்தவளுக்கு தேவ் தென்பட அப்பெண்களின் மேல் கோவம் வந்தது. பசங்க பார்த்தால் பார்க்கின்றான் என்று திட்ட வேண்டியது. பார்க்கவில்லையென்றாலும் திட்ட வேண்டியது. வேறுயாராவதாக இருந்தால் அமைதியாகி சென்றிருப்பாளோ? அது தேவ் என்றதும் பொங்கினாள்
 “ஹலோ அது என் ஆளு பேசாம போய்டுங்க இல்ல அசிங்கமாய் போய்டும்” முகம் வெளிறியவாறு அப்பெண்கள் அகன்றுவிட்டனர். ப்ரியாவும் சும்மா ஒன்றும் அவ்வாறு கூறவில்லை ஒரு முடிவோடுதான் கூறி இருந்தாள்.  
 “ஹாஹாஹா அப்பவே தேவதைகள் அப்படியே ஆகட்டுன்னு வாழ்த்தி இருப்பாங்க” தேவ் இடைமறிக்க
“குறுக்க பேசாதீங்க தேவ்” அவன் வாயில் ஆள்காட்டி விரலைவைத்து தலையாட்டினாள் ரியா.
 “அன்னைக்கு நா அப்படி ஏன் சொன்னேன்னு உங்களுக்கு தெரியாதில்ல தேவ். அதுக்கு முன்னாடி உங்கள மீரா கூட காபி ஷாப்பில் பார்த்தேனா உங்கள நல்ல ரெண்டு அறையணும்னு தான் வந்தேன்” என்று சிரிக்க ஆரம்பித்தாள்.
 “யம்மா தாயே பப்லிக்கில் அப்படி ஏதும் செஞ்சிடாதே” என்று தேவ் கைகூப்ப அவன் கையை இறுக்கிப் பிடித்தவள்
 “அன்னைக்குதான் இந்த தேவ் என் ஆளுனு டிசைட் பண்ணதே” என்று அவனை முத்தமிட அதை அனுபவித்தவன்.
“ஏய் குட்டச்சி அப்படி என்ன பண்ணி உன்ன இம்ப்ரெஸ் பண்ணேன்”
அவனின் மடியில் அமர்ந்து கழுத்தில் மாலையாக கை கோர்த்தவள். அவன் கேட்டதற்கு பதில் கூற, அன்றைய நாளுக்கு பயணித்தாள். 
வண்டியில் வரும் போது போன் வரவே வண்டியை நிறுத்தி பேச ஆரம்பித்தாள் ப்ரியா. அவள் வண்டியை நிறுத்தியது கண்ணாடியிலான முற்றிலும் உள்ளே நடப்பது வெளியே தெரியக்கூடிய ஒரு காபி ஷாப்.
பேசியவாறே உள்ளே பார்த்தவளுக்கு தேவ் மீராவை பின்னாடி அணைத்தவாறு உள்ளே தள்ளிச்செல்வது தெரிந்தது. ஏதோ தப்பாய்பட உடனே போனை கட் செய்து உள்ளே சென்றாள்.
மீராவின் முகம் கலங்கி இருக்கவே ப்ரியா நினைத்தது தேவ் அவளை மிரட்டி அழைத்து செல்கிறான் என்று. உள்ளே சென்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது உள்ளே அவர்களை காணவில்லை.
இங்கே லட்சுமி அம்மா சைதன்யனை காணவில்லை என அவனது மொபைலுக்கு முயற்சி பண்ணிக்கொண்டே இருந்தார்.
அது திரும்ப திரும்ப அணைத்துவைக்கப்பட்டுள்ளது என்றே ஒலித்தது. சைதன்யன் காணாமல் போய் இருந்தான்.

Advertisement