மறுநாள் விடிந்ததுமே, ஒரு பத்திரிக்கை டிவி விடாமல் செழியனால் திட்டமிட்டு பரப்பபட்ட நியூஸே, ஒலிபரப்பப் பட்டது. செழியனை ரேப்பிஸ்ட்டாக சித்தரிக்கப்பட்டிருந்த அந்த செய்தி, திவ்யபாரதி பணிபுரியும் பத்திரிக்கையிலும் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
செழியனின் நேரடி ஆணையால் அனைத்து பத்திரிக்கையிலும் இரவோடு இரவாக பிரசுரிக்கப் பட்டிருந்த படியால், இந்தச் செய்தி அலுவலகம் வந்த பின்பே திவ்ய பாரதியின் கண்களில் சிக்கியது.
திவ்ய பாரதி அலுவலகம் வந்து அமர்ந்ததுமே, நகுலன் ஒரு பத்திரிக்கையை எடுத்து வந்து அவளிடம் நீட்ட, வாங்கி பிரித்துப் பார்த்தவள், அதிலிருந்த தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்தாள்.
கையிலிருந்த பத்திரிக்கையை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தவள் கண்ணீர்விட்டு கதறவும் இல்லை, மற்ற பெண்களைப் போல் புலம்பவும் இல்லை. மவுனத்தை தத்தெடுத்து தனக்குள் இறுகிப் போயிருந்தாள், திவ்யபாரதி.
நகுலனுக்கு அவள் தோழியின் நடவடிக்கை பயத்தைக் கொடுத்தது. தனியே விட்டுச் செல்ல விருப்பம் இல்லாமல் அங்கேயே நின்றிருந்தான்.
திவ்ய பாரதிக்கு அதற்கு மேல் வேலை செய்யமுடியும் என்று தோன்றவில்லை. அவளுக்கு தனிமை தேவைப்பட்டது, விடுமுறை எழுதிக் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டாள். தோழியின் மனநிலை புரிந்து, கூட வருவதாகச் சொன்ன நகுலையும் தடுத்துவிட்டு, தன் கருப்பு நிற வெஸ்பாவை எடுத்துக்கொண்டு கிளம்பியவள், எங்கு செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் சுத்திக் கொண்டிருந்தாள். மனது ஒருநிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அவள் அலைப்புறுதல் அந்த வானத்திற்கும் புரிந்ததோ என்னவோ, நான் இருக்கிறேன் உனக்கு என்று ஆரவாரமாக அணைத்துக் கொண்டது. மழையின் வேகத்தாலும், திவ்யபாரதியின் பயணத்தை நிறுத்த முடியவில்லை போலும்.
திவ்யபாரதியிடம் தோற்றுப் போய், அந்தத் தோல்வியை தாள இயலாமல், இன்னும் அதிகமாக அழுது கரைந்தது. கொட்டும் மழையிலும் இலக்கின்றி பயணித்துக் கொண்டிருந்தாள் பாவையவள்.
நீரில் நனைந்த பாவையவளின் ரோஜா இதழ்களோ, “இதுக்குதான் சொன்னேன் டிஎஸ்பி. உனக்கும் எனக்கும் என்னைக்குமே செட் ஆகாதுன்னு.” என்று தானாகப் புலம்பியது.
கண்கள் ஒளி குன்றி வெளிற, விரும்பத்தகாத நிகழ்வு நடக்கப் போவதாக அவளது மனம், அறுதியிட்டுக் கூறியது. ஆடி ஓடி, தனக்கு ஆறுதல் தரும் இடத்தைத் தேடி, தன்னையும் அறியாமல் வந்து சேர்ந்திருந்தாள், செழியனின் பாரதி.
ஏற்கனவே, திட்டமிட்டபடி அன்றைய இரவு செழியனின் வீட்டில், வேண்டுமென்றே வெளிக்காவலை தளர்த்தியிருந்தான், செழியன். அவனின் பாதுகாப்புக்காக, படுக்கை அறையில் கூடுதலாக இரு காவலர்கள் துப்பாக்கியுடன் மறைந்திருந்தனர். செழியன், தனக்கு எந்த பாதுகாப்பும் தேவையில்லை, தான் பார்த்துக்கொள்வதாக எவ்வளவு மறுத்தும், ஒத்துக்கொள்ள மறுத்த டிஜிபி, அவன் பாதுகாப்பு கருதி துப்பாக்கியுடன் இரு காவலர்களை பதுங்கி இருக்கச் செய்திருந்தார்.
அன்றைய இரவு நடுநிசி வரை, எந்த வித அசம்பாவிதமும் இன்றிக் கடக்க, ஒருவித அலைப்புறுதலுடன் காத்திருந்தான், செழியன்.
அன்றைய இரவு வெகுநேரம் தாண்டியதும், பின் இரவு நேரத்தில் யாரோ காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிக்கும் அரவம் கேட்டது. அந்த சத்தத்தில் செழியன் முதற்கொண்டு அனைவரும் அலர்ட் நிலையில் காத்திருக்க, அவன் அறையின் பால்கனி வழியாக, மெதுவே நுழைந்தது அந்த உருவம்.
அறை முழுவதும் மை இருட்டாக இருக்க, அந்த உருவம் மெல்ல மெல்ல நடந்து செழியனின் படுக்கையை நெருங்கியது. சரியான தருணத்துக்காக மறைந்திருந்த காவலர்கள் துப்பாக்கியோடு காத்திருக்க, செழியனின் பெட்சீட்டை உருவிய அந்த நொடி, சட்டென்று எழுந்த செழியன் அந்த உருவத்தின் கையை மடக்கிப் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியை அதன் நெற்றிப்பொட்டில் வைத்திருந்தான்.
செழியனின் உத்தரவின் பேரில் மறைந்திருந்த காவலர்களின் உதவியால், லைட் போடப்பட்டு அறைக்குள் வெளிச்சம் பரவியது.
வெளிச்சத்தில் அந்த உருவத்தின் முகத்தைப் பார்த்த செழியன், அடுத்த நிமிடம் அதிர்ந்துவிட்டான். கண்கள் அந்த உருவத்தில் நிலைக்குத்தி இருக்க, துப்பாக்கி ஏந்திய அவன் கைகள் நடுங்க ஆரம்பித்தது.
இது எப்படி சாத்தியம் என்ற அதிர்ச்சியில் உறைந்தவனின் அந்த ஒரு நொடியை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த உருவம், ஒரே தட்டில் துப்பாக்கியை தன் கைகளுக்கு மாற்றிக்கொண்ட அதே வேளையில், செழியனின் பின்னங் கால்களில், தன் காலால் தட்ட, தடுமாறிய செழியனை மண்டியிடச் செய்திருந்தது.
அப்படியே அவன் கையை வளைத்துத் திருப்பி, அவன் முதுக்குக்குப் பின்னால் கொண்டு வந்து, அவன் பின் மண்டையில் துப்பாக்கியை வைத்து, மறைந்திருந்த இரு காவலர்களையும் அசையாமல் இருக்கச் சொல்லி, பார்வையால் பணித்தது.
கருப்பு நிறத்தில் ஜெர்கின் அணிந்திருந்த அந்த உருவம் தன் தலையில் மாட்டியிருந்த தொப்பியை கழற்றிக்கொண்டே, கடகடவென பேய் சிரிப்பு சிரித்தது. தொப்பியை கழற்றியதும், பார்த்திருந்த காவலர்களுக்குமே அதிர்ச்சிதான்.
கண்ணீர் வரும் அளவுக்கு சிரித்த அந்த உருவம், “என்ன அதிர்ச்சியா இருக்கா.. DSP..? இதை நீ எதிர்பார்க்கல இல்ல..? இப்படி ஒரு நாள் உன் வாழ்க்கையில வரும்னு நீ எதிர்பார்த்திருக்கவே மாட்டல்ல..” என்று சொல்லி மீண்டும் மீண்டும் சிரித்த அந்த உருவம்,
“ஆனா, நான் எதிர்பார்த்தேன் DSP..! என்னைக்கா இருந்தாலும், நாம எதிர் எதிரா சந்திக்க வேண்டிய நாள் வரும்னு எதிர் பார்த்தேன்.” என்று பேசிக்கொண்டு இருக்கையிலேயே, காவலர் ஒருவர் கையில் இருந்த துப்பாக்கியால் சட்டென்று குறி பார்க்க, பார்வையால் அந்தக் காவலரை தடுத்திருந்தான், செழியன்.
இயல்புக்கு மாறான அவன் அமைதியே அவர்களை மேற்கொண்டு எதுவும் செய்யாமல் தடுத்திருந்தது.
அவனுக்கு இன்னும் அந்த உருவத்தை நம்பத்தான் முடியவில்லை. தான் காண்பது எல்லாம் கனவா என்று கூட நினைத்துப் பார்த்துவிட்டான்.
ஆனால், தன் கை இன்னமும் அந்த உருவத்திடம் சிக்கி இருப்பதில் இருந்து, நடப்பது எதுவும் கனவல்ல என்று உணர்ந்திருந்தான். ஆனால்.. ஏன் இப்படி, தான் கனவிலும் நினைத்துப் பார்த்திராத காட்சி அல்லவா இது.
அத்தனையும் நொடியில் மனதில் வந்து போக, வாய் திறந்து வார்த்தை மட்டும் அவனிடமிருந்து வரவே இல்லை. என்னவென்று கேட்பான், அனைத்தும் ஸ்தம்பித்து பேச்சற்ற நிலையிலிருந்தான்.
‘இந்த நாள் தன் வாழ்க்கையில் வராமல் இருந்திருக்கக் கூடாதா’ என்று ஏங்கி நின்றான். எத்தனையோ குற்றவாளிகளை எதிர்த்து நின்றவனுக்கு, இத்தனை பேரின் முன்னால் துப்பாக்கியுடன், நிற்கும் உருவத்தின் உண்மைத் தன்மையில், பேச்சற்ற சிலையாகி.. நடக்கும் நிகழ்வுகளுக்கு மவுனச் சாட்சியாகிப் போனான்.
அந்த உருவத்தை அடித்துச் சாய்த்து, தன் கண்ட்ரோலில் எடுக்க அவனுக்கு ஒரு நொடி போதும். ஆனால், அதைச் செய்ய அவனுக்கு பெரும் மனோதிடம் அல்லவா தேவைப்பட்டது.
அந்த உருவமோ, இது எதையும் கருத்தில் கொள்ளாமல் மேற்கொண்டு பேசிக் கொண்டிருந்தது, “இப்படி ஒரு நாள் இவ்ளோ சீக்கிரம் வரும்னு எதிர்பார்க்கல டிஎஸ்பி, எல்லாம் உன் முட்டாள் தனத்தால, அவசர புத்தியால..” என்று கடிந்த அந்த உருவம்.
“என் பயணம் இத்தோடு முடிவதில்லை டிஎஸ்பி, நான் போட்டுத் தள்ள வேண்டிய நாதாரிங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எல்லாம் உன்னால இப்போ நாசமாயிடுச்சி.” என்ற அந்த உருவம், பிடித்திருந்த அவன் கைகளை விலக்கியபடி, துப்பாக்கியை தூர எறிந்து விட்டு “அரெஸ்ட் மீ, DSP சார்.” என்று சொல்லியபடி செழியனின் முன்னால் தன் கரங்களை நீட்டி, மண்டியிட்டு சரணடைந்தது.
தன் முன்னால் நீட்டப்பட்டிருந்த கரங்களைப் பார்த்தவன் கண்கள் கலங்க, தன் இடுப்பில் இருந்த கைவிலங்கை உருவி எடுத்தான்.
கைகள் நடுங்க, தன் முன் நீட்டப்பட்டிருந்த அந்தக் கைகளில் கைவிலங்கிட்டவன், அந்த உருவத்தின் கண்களை ஏறிட, சற்றும் சலனமில்லாத அந்த உருவத்தின் உதட்டில் புன்னகை மட்டுமே. செழியனின் கண்களில் இருந்து இருதுளி நீர் விலங்கிட்ட கைகளில் பட்டுச் சிதற..
“ரொம்ப எல்லாம் ஃபீல் பண்ணாதீங்க டிஎஸ்பி சார், நானெல்லாம் உங்க கண்ணீருக்கு வொர்த்தே இல்ல” என்றாள், அந்தக் கைகளின் சொந்தக்காரியான திவ்ய பாரதி…!
******************************
இன்றைய கார்த்தி..
தன் அத்தை மகளின் நினைவில் வியர்வை பூக்க, “அம்மு…” என்று அலறிக்கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தான், இன்றைய கார்த்தி.
தன் அடர்ந்த கேசத்தை விலக்கி நெற்றியில் தடவி பார்க்க, அங்கிருந்த தழும்பு நினைவூட்டியது, அத்தனையும் கனவென்று. இன்று நடந்தது போல் பசுமை மாறாமல் இருக்கும் நினைவுகளில் கண்கள் சிவக்க, கோபத்தில் சுவற்றில் ஓங்கிக் குத்தினான்.
தினம் தினம் உயிர் வலியை அனுபவித்தாலும், இந்த நினைவுகள் தான், அவன் வாழ்க்கைக்கான அர்த்தத்தை கொடுக்கின்றன.
எழுந்து ஃப்ரெஷப் செய்து கொண்டவன், கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டான். கிரேக்க சிற்பம் ஒன்று உயிர் கொண்டு வந்தது போல் இருந்தவனின் கண்கள் மட்டும் எப்போதும் தீயாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அவன் புன்னகைத்தால் பூமித்தாயே ஏக்கம் கொள்வாளோ என்று பயந்து, அவன் புன்னகையை மட்டும் தனக்குள் புதைத்துக் கொண்டாள்.
ஜாக்கிங் செல்லத் தயாராகி வந்தவன், வெளியில் வர, அவன் வரவுக்காகவே காத்திருந்ததது போல், அவன் சகாக்களும் தயாராக இருந்தனர். அவனின் ஒற்றை பார்வையில், அவனுடன் இணைந்து நடக்கத் தொடங்கினர்.
தெருவில் இறங்கி ஓடிக்கொண்டிருந்த கார்த்தி, திடீரென நின்று எதிர் வீட்டை நோக்கிச் சென்றான். அவன் சகாக்களும் அவனைப் பின் தொடர்ந்தனர். அந்த வீட்டின் படிக்கட்டில் அம்ர்ந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தவனிடம் வந்தவன், பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று வைத்தான்.
அடி வாங்கியவன் திரு திருவென முழிக்க, மடியில் அமர்ந்திருந்த குழந்தையோ “அப்பா..” என வீறிட்டு அழவும்,
உள்ளிருந்து ஓடி வந்த அவன் மனைவி, குழந்தையை தூக்கிக்கொண்டு, “என்னங்க என்னாச்சு” என்று பதறியபடி கேட்க,
எதுவும் பதில் சொல்லாமல் திரும்பிய கார்த்தி… பார்வையில் அடிவாங்கியவனை எச்சரித்தவன், அலட்சியமாக திரும்பி ஓட ஆரம்பித்தான்.
இன்னமும் ஒற்றைக்கையால் தன் கன்னத்தை பிடித்துக்கொண்டு, அடி வாங்கியதன் காரணம் புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தவனை, கார்த்திக்கின் கூட வந்த சகாக்களில் ஒருவன், விடாமல் கேட் வாசலில் நின்று முறைத்துக் கொண்டிருக்க, நின்று தலை திருப்பிப் பார்த்த கார்த்தி, “ஹென்றி…” என்றழைத்தவன்,
“விடுறா, எங்க போகப் போறான் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றான். இருந்தும் திரும்பி திரும்பி பார்த்து கத்திக்கொண்டே மற்றவர்களுடன் இணைந்து கொண்டான் ஹென்றி, அவனின் உண்மை விசுவாசி.