அத்தியாயம் – 28

திரையன் அரிமா, மூவரையும் அழைத்துவரச் சொல்லி ஆள் அனுப்பி இருந்தார். செய்தி கொண்டு வந்தவன் சொல்லி விட்டுச் சென்றதும்.

கார்த்தியோ, “பாரதிய அங்க கூட்டிப் போகணுமா, செழியா” என்று சற்றே தயங்கியபடி கேட்க,

வல்லன் மூலம் விசயமறிந்திருந்த செழியன், “கண்டிப்பா” என்றவனின் கண்கள் சிவந்து காணப்பட்டது.

கார்த்திக்கும் அதுவே தான் விருப்பம். இருந்தும் செழியன் அதை விரும்பமாட்டானோ என்றுதான், அவன் விருப்பத்தை தெரிந்து கொள்வதற்காகக் கேட்டிருந்தான்.

உள்ளே சென்ற செழியன் பாரதியிடம் எதுவும் தெரிவிக்காமல் “பாப்பு..! நாம ஒரு இடத்துக்குப் போகணும். வா போலாம்.” என்றழைத்தான்.

“இப்போவா..?” என்று கேட்டவள், “குளிச்சிட்டு வரவா..?” என்று கேட்க.

“இப்போவே அழகா, கம்பீரமாதான் இருக்க, மூஞ்சை மட்டும் கழுவிட்டு வாடி! சீக்கிரம் போகணும்.” என்றான்.

விரைவாகவே முகம் கழுவி வந்தவளை அழைத்துக் கொண்டு, செழியன் அந்த ஊரின் பஞ்சாயத்து நடக்கும் பெரிய புளியமரத்தின் அடியில் கூடியிருந்த கூட்டத்தை நோக்கிச் சென்றான். அவர்களுக்கு முன்பே, கார்த்தி அவன் சகாக்களுடன் வந்து சேர்ந்திருந்தான்.

அங்கு ஊருக்கு நடுவே இருந்த புளிய மரத்தோடு சேர்த்து ஒருவனை கட்டி வைத்திருக்க, ஒருபக்கம் பச்சை குத்தும் மூலிகை மற்றும் ஊசியோடு வயதான பாட்டி ஒருவர் தயாராக இருந்தார்.

(இப்போதுதான் மக்களே இயந்திரம் கொண்டு டேட்டூ என்ற பெயரில் பச்சைக்குத்திக் கொள்கிறார்கள். அப்போதெல்லாம் விஷேச ஊசியும், ஒருவித பச்சை மூலிகை கொண்டுதான் குத்துவார்கள்).

இன்னொரு பக்கம், ஒரு மண் கலயத்தில் (சிறிய அளவிலான மண்பானை) அந்த ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் எல்லாம் ஒருவர் மாத்தி ஒருவர், சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

“புளியம் விளார கொண்டு வாங்கடே! (புளிய மரத்தின் வளையும் தன்மையுடைய இளம் கிளை)” என்று திரையன் அரிமா தன் ஆகிருதியான குரலில் சத்தமாகக் குரல் கொடுக்க.

அந்த குரலுக்காகவே காத்திருந்த ஒருவன், கடகடவென்று ஓங்கி வளர்ந்த அந்தப் புளிய மரத்தில் வேகமாக ஏறி, நன்றாக வளையும் இளம் கிளையாகப் பார்த்து ஒடித்துக்கொண்டு கீழிறங்கினான்.

அவன் கீழிறங்கவும், மற்றொருவன் அதை வாங்கி இலைகளை கழித்து, நல்ல நீண்ட சாட்டைபோல் கத்தியைக் கொண்டு செதுக்கி எடுத்திருந்தான்.

இவ்வளவையும் என்ன நடக்கிறது என்று புரியாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த திவ்யபாரதி! அப்போதுதான் மரத்தில் கட்டிவைக்கப் பட்டிருந்தவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து அதிர்ந்தாள்.

“இ..இவன் காலையில் அந்த நியூஸ்ல பார்த்தவன் தானே” என்று செழியனின் சட்டையின் முனையை பிடித்துக்கொண்டு கேட்க…

“ஆம்” என்று கண்களை மூடித்திறந்த செழியன், அவள் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, எதிர் திசையில் கண்காட்டினான்.

செழியன் சுட்டிக் காட்டிய திசையில், கையில் மூலிகை மருந்தை வைத்திருந்த அந்த மூதாட்டி, கட்டி வைக்கப் பட்டிருந்தவனின் நெற்றியில் ‘காமூகன்’ என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தார்.

அதில் நெகிழ்வுற்ற திவ்யபாரதி செழியனின் முகத்தைப் பார்க்க, அவன் பார்வையிலும் அதே நெகிழ்ச்சி இருந்தது.

பிடித்திருந்த செழியனின் கையை விட்டுவிட்டு ஓடிச் சென்ற திவ்யபாரதி, தன் நிகழ்காலத் தந்தையான திரையன் அரிமாவை கட்டிக்கொண்டாள், நன்றியுடன்.

அவள் தலையில் தடவிக்கொடுத்த திரையன் அரிமா, “இந்த நாட்டுக்கு வேணும்னா, என் பொண்ணு சொன்னதை செய்ய ஆயிரம் தடை இருக்கலாம். ஆனா…. இந்த காட்டுக்கு என் பொண்ணுதான் இளவரசி! அவ சொன்னது இங்கே சட்டமாகும்.” என்றார் மகிழ்வுடன்.

அதில் நெகிழ்ந்த திவ்யபாரதி! உணர்ச்சிப் பெருக்கில் “நன்றிப்பா” என்றவள், இதற்கெல்லாம் காரணமான செழியனை திரும்பிப் பார்க்க. கண்களை மூடித்திறந்த செழியனோ கார்த்தியை கை காட்டினான்.

“இதுக்குக் காரணம் நான் இல்ல. உன் ப்ரண்ட் கார்த்தி தான்.” என்பது போல்.

ஆம்! அந்தச் சம்பவம் நடந்த ஒருமணி நேரத்திலேயே, அந்தக் கயவனை அந்த ஊர் மக்கள் சிறைப்பிடித்திருந்தனர். இது சிட்டி இல்லையே குற்றம் செய்துவிட்டு மறைந்துகொள்ள.

அவன் அந்த ஊரில் குடும்பத்தோடு பிழைக்க வந்திருந்தவன். அந்த ஊரின் கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் தெரியாமல், 11ஆம் வகுப்புப் பெண்ணிடம் வீட்டுக்கு செல்லும் வழியில் தன் விளையாட்டை ஆரம்பித்திருந்தான். அது பள்ளி ஆசிரியரின் மூலமாக செய்திச் சேனலுக்குப் பரவியிருந்தாலும், போலீஸ் வரும் முன் அவனை சிறைச் செய்து அடைத்து வைத்திருந்தனர், அந்த ஊர் மக்கள்.

இந்த விசயம் நேற்றைய இரவே கார்த்திக்குத் தெரியும். இரவோடு இரவாக அவனை நையப் புடைத்திருந்தான்.

திரையன் அரிமாதான் கார்த்தியை பெரும் பாடு பட்டுத் தடுத்திருந்தார்.

“நாளை ஊரின் முன்னிலையில் அவனுக்கு தண்டனை வழங்கப்படும். அதுக்கு முன்னாடி போலீஸ் கிட்ட ஒப்படைக்க மாட்டோம். இதுதான் இந்த ஊரில் வழக்கமாக இருக்கும் கட்டுப்பாடு. செழியன் தம்பி ஏற்கனவே இங்க வேலை பார்த்ததால, இது அவருக்கும் தெரியும்.” என்று சொல்லி தடுத்து வைத்திருந்தார்.

அந்த ஊரில் வழக்கமாக குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கும் தண்டனையோடு சேர்த்து, பாரதி கோர்ட்டில் சொன்ன ஆசையையும் திரையன் அரிமாவிடம் சொல்லி இருந்தான், கார்த்தி. அதைத்தான் இப்போது திரையன் அரிமா நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

கார்த்தியை நன்றியோடு திவ்யபாரதி பார்க்க, இரு பெருவிரல்களையும் தூக்கிக் காட்டி, தம்ஸ் அப் சொல்லிச் சிரித்தான், கார்த்தி.

இதற்குள் அந்த மூதாட்டி பச்சை குத்தி முடித்திருக்க, அந்த புளியமரத்தின் விளாரில் செய்யப்பட்ட சாட்டையை கையில் வாங்கிய திரையன் அரிமா! அதை திவ்யபாரதியின் கையில் தந்து “போ” என்று தலையாட்டினார்.

கையில் சாட்டையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட திவ்யபாரதி! அந்த கொடியவனை நோக்கி முன்னேறினாள். போகும் பாரதியையே செழியனும் கார்த்தியும் ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவன் அருகில் சென்ற திவ்யபாரதியோ, சற்று தொலைவில் தலைகுனிந்து நின்று அழுது கொண்டிருந்த பாதிக்கப்பட்ட அந்த மாணவியிடம் சென்றவள், ‘பளார்’ என்று அறைந்திருந்தாள்.

திவ்ய பாரதியின் செயலில் செழியன் முதற்கொண்டு அனைவரும் அதிர்ந்து பார்த்திருந்தனர்.

இந்தப் பெண் என்ன குற்றம் செய்தவனை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை அறைகிறாள் என்று அதிர்சியுடன் நினைத்திருந்தனர் சுற்றியிருந்த ஊர் மக்கள்.

அசராத திவ்யபாரதியோ, அந்தப் பெண்ணின் கண்ணீரை விரல் கொண்டு துடைத்தவள், அந்தப் பெண்னை கட்டி அணைத்து “இதைத்தான் நான் உனக்கு சொல்லிக்குடுத்தேனா? எந்த சூழ்நிலை வந்தாலும், எப்படி நிமிர்ந்து நிக்கனும்னு சொல்லி இருக்கேன் தானே? அசிங்கப்பட்டு தலை குனிய வேண்டியது அந்த நாய் தானே தவிர, நீ இல்ல.” என்றவள் சாட்டையை அந்தப் பெண்ணின் கையில் திணித்தாள்.

செழியனோ, பாரதியின் மாறுபட்ட மனநிலையில் அதிர்ந்தவன்,  ‘நாமளும் காலையில இதைத்தான் பண்ணி இருக்கணுமோ? இவளும் தானே, காலையில இந்தச் செய்தி கேட்டு என்னவெல்லாம் பண்ணப் பார்த்தா’ என்று யோசித்திருந்தான்.

‘என்னதான் பெண்கள் வெளியே தைரியமா இருந்தாலும், இப்படிப்பட்ட சூழ்நிலையை மனதாரக் கடந்து வருவது எவ்வளவு கடினம்.’ என்று திவ்யபாரதியை வைத்துப் புரிந்து கொண்டான்.

மற்ற பெண்களுக்கு என்று வரும்போது துணிச்சலாக செயல்படும் திவ்யபாரதி, உள்ளுக்குள் இன்னமும் அந்த நடுக்கத்தை கொண்டிருப்பதை வேதணையுடன் நினைத்தவன், இதே தைரியம் தானே அமுதாவைக் காப்பாற்ற கொலை செய்யும் அளவுக்கு, திவ்யபாரதியை தூண்டியது என்றும் நினைத்தான்.

இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெறும் மருத்துவரின் கவுன்சிலிங் மற்றும் போதாது, குடும்பத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியம் என்று தெளிவாக அறிந்து கொண்டிருந்தான்.

திவ்யபாரதியிடம் இருந்து, கையில் சாட்டையை வாங்கிய அந்தப்பெண், தன் கை வலிக்கும் வரை அடி பின்னி எடுத்தாள்.

சாட்டையில் அடிப்பதைவிட, இந்த புளியம் விளார் பல மடங்கு வலியைக் கொடுக்கும். பதிந்த இடத்திலெல்லாம் இரத்தத்தை சுண்ட வைக்கும்.

அதற்குள் ஊர் பெரியவர் ஒருவர், பொடிசுகள் சிறுநீர்கழித்த மண் கலையத்தை தூக்கி வர, மற்றொருவன் அந்தக் காமூகனின் வாயை மூடாதபடி அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான். அந்த கலையத்தில் இருந்த சிறுநீர் முழுவதையும் மூச்சு முட்ட முட்ட குடிக்க வைத்தனர், அந்தக் காமுகனை.

இது அந்த ஊரில் வழக்கமாக குற்றம் செய்தவர்களுக்குத் தரும் தண்டனை.

இந்த அவமானம் திரும்ப குற்றம் செய்ய விடாமல் திருந்தி வாழ வைக்கும் என்பது, அவர்களின் நம்பிக்கை. அப்படி திருந்தவில்லை என்றாலும், தப்பு செய்தால் தண்டணை மோசமானதாக இருக்கும் என்ற பயமாவது இருக்கும் அல்லவா.

(மக்களே மேற்குறிப்பிட்ட தண்டனையில் பச்சைக் குத்துவதை தவிர, புளியம் விளார் சவுக்கடியும், சிறுவர்களின் சிறுநீரைக் குடிக்க வைப்பதும் எங்கள் ஊரில், வீட்டில் புகுந்து கொள்ளை அடிக்க வருபவர்களுக்கு கொடுக்கும் தண்டணை. நான் சிறு வயதாக இருக்கும் போது கண்ணாரக் கண்டிருக்கிறேன். இந்த தண்டனை எங்கள் ஊர்ப்பக்கம் மிகவும் பிரபலம். இதற்கு பயந்தே, திருடர்கள் எங்கள் ஊருக்கு வரப் பயப்படுவார்கள். எவனாவது விசயம் தெரியாதவன் மாட்டிக்கொண்டால் இதுதான் கதி.

மனித நல உரிமையாளர்கள் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, தண்டனைகள் கடுமையாக்கப்படும் வரை குற்றங்கள் குறைவதில்லை.)

பாதிக்கப்பட்ட பெண் சாட்டையை கீழே போடவும். இதுவரை கூட்டத்தில் ஒருவனாக  இருந்து அருவெறுப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 10 வயதே நிறைந்த அந்த கயவனின் மகன், சாட்டையை கையில் எடுத்தான்.

தன் தந்தையை நோக்கிச் சென்றவன், தன் பலம் கொண்ட மட்டும் இரண்டு விளாசு விளாசியவன், ஏறிட்டுப் பார்த்த தன் தந்தை முகத்தில் காரி உமிழ்ந்தான். இதை விட ஒருவனுக்கு என்ன தண்டனை இருந்துவிடப் போகிறது.

பின் சாட்டையை தூக்கிப் போட்டு விட்டு, ஓடி வந்து கார்த்தியின் காலை கட்டிக் கொண்டான். ஆம்! அவன் கார்த்தியின் மனவளர் கலை மன்றத்தின் மாணவன். கார்த்தியின் அறிவுரைகளை வாரம் தவறாமல் கேட்டு, அவனிடம் கம்பு சுற்றும் பயிற்சியும் பெற்று வருபவன்.

அவனைக் கட்டி அணைத்துப் பாராட்டிய கார்த்தி, “வெல்டன்! பீ பிரேவ் மை பாய்!” என்று தட்டிக் கொடுத்தான்.

சிறுவனைக் கையில் பிடித்த அந்தப் பொடியனின் தாய், கார்த்திக்கு நன்றி சொல்லிவிட்டு, தன் கணவனைத் திரும்பியும் பாராமல், கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றாள்.

எல்லாம் நடந்து முடிய, பார்த்திருந்த திவ்யபாரதி மனம் நிறைவாக, எல்லையில்லா மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தாள்.

திவ்யபாரதியின் முக மலர்ச்சியை, இரு ஜீவன்கள் நெகிழ்ச்சியுடன் கண் கலங்கப் பார்த்திருந்தனர்.