திவ்யபாரதி தூங்கியதும் மெதுவாக வெளியில் வந்த செழியன், பிரேமிட்ட போட்டோ முன் நின்று, “உன்னை சீக்கிரமா தேடி வருவேன், உன்னை என்னைக்கு போடுறேனோ, அன்னைக்கு தான், என் மனசு சாந்தி அடையும்.” என்று சபதமிட்டுக் கொண்டிருந்தான்.
பின்னால் “க்கும்… க்கும் ” என்று இருமும் சத்தம் கேட்கவும், அவசரமாக அலமாரியை மூடிவிட்டு திரும்பிப் பார்க்க, பின்னால் நக்கலான பார்வையும் நமட்டுச் சிரிப்புமாக நின்றிருந்தான், கார்த்தி.
“எத்தனை நாளைக்குத்தான் உன் போட்டோவையும், அந்த அலமாரில இருக்க, இத்துப் போன யூனிஃபார்மையும் பார்த்து உன்னைப் போடாம விடமாட்டேன்.. போடாம விட மாட்டேன்னு சபதம் போட்டுகிட்டு இருப்ப….” என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்க.
“எல்லாம் என் நேரம்டா, உன்னையெல்லாம் ஜெயில்ல போடாம விட்டதுக்கு, இன்னைக்கு நான் என் யூனிஃபார்மக் கூட போட முடியாம தவிக்கிறேன்.” என்றான் ஆற்றாமையாக.
“எங்க தைரியமிருந்தா, என்னைய போட்டுத்தான் பாரேன்.” எனவும், பின்னால் வரிசை கட்டி நின்றிருந்தனர், ஹென்றி, பைரவ், ராக்கி மற்றும் மாறன்.
“இவனுங்க வேற…” என்று சலித்துக் கொண்ட செழியன், “இவ ஒருத்திய கட்டிக்கிட்டு, நான் ஒன்பது பேர சமாளிக்க வேண்டி இருக்கு.” என்று வெளிப்படையாகவே நொந்து கொண்டான், செழியன்.
“என்ன சலிப்பு” என்ற கார்த்தி “அதான் உன்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்கள்ல. அப்புறமும் ஏன் தொலைஞ்சு போன காதலியப் பார்த்து பெருமூச்சு விடுற மாதிரி, காக்கி சட்டையோட இருக்க உன் போட்டோவப் பார்த்து, தினமும் பெருமூச்சு விடுற”
“டேய்…!” என்று கை நீட்டி மிரட்டிய செழியன், “ட்ரைனிங்லருந்து பாதியில ஓடி வந்தவனெல்லாம், அதப்பத்தி பேசக்கூடாது. மரியாதையா இங்கிருந்து ஓடிரு.” என்றான்.
நக்கல் பார்வை பார்த்த கார்த்தி “நேத்து சாருக்கு DGP அலுவலகத்துலருந்து ஓலை வந்தா மாதிரி இருந்துதே!” எனவும் ஓடி வந்து கார்த்தியின் வாயைப் பொத்திய செழியன்,
“இப்போ தாண்டா அப்படி இப்படின்னு அவளை தேத்தி வச்சிருக்கேன், ஊடால புகுந்து கெடுத்துராதடா. இன்னும் வாழ்க்கையில ஒன்னும் அனுபவிக்கல. இதை வேற அவகிட்ட சொல்லி, என் வாழ்க்கைய அழிச்சிராத ராசா.” என்றான் கெஞ்சாத குறையாக.
“ஒரு வருஷமா பொண்டாட்டிய கரெக்ட் பண்ண துப்பில்லை, நீயெல்லாம் ஒரு DSP.” என்று துப்பாத குறையாகச் சொல்ல..
அதிர்ந்து விழித்த செழியனோ, “மூனு… மாசம் தானேடா ஆச்சு.” எனவும்,
“அது ஒரு ஃபுளோல சொல்றதுதான். இத மட்டும் நல்லா கேளு. மத்ததுல ஒன்னும் லாயக்கு இல்லை.” என்று கார்த்தி சலித்துக்கொண்டான்.
“நான் என்னடா பண்ண, டாக்டர் ஒகே சொல்லிட்டார் தான், ஆனா, அவளைக் கண்டாளே எனக்கு நடுங்குதே.”
“த்து.” என்று செய்கை காட்டிய கார்த்தி, குனிந்து எதையோ தேட…
“என்னடா தேடுற, சொன்னின்னா நானும் சேர்ந்து தேடுவேன்ல”
“இல்லை, மீசைய முறுக்கிக்கிட்டு கெத்தா ஒரு பய சுத்திக்கிட்டு இருந்தான். அவனைத்தான் கொஞ்ச நாளா காணலை. அதான் தேடிக்கிட்டு இருக்கேன்.” என்று கார்த்தி கிண்டலில் இறங்கினான்.
“இதைத்தாண்டா சொல்வாங்க. யானை படுத்துக்கிச்சினா, எலி அது மேல ஏறி குத்தாட்டம் போடுமாம்.”
“நீ ஏண்டா இப்படி அவ விஷயத்துல மட்டும் தப்பு தப்பாவே யோசிக்கிற..? காக்கி சட்டையில உன்னைப் பார்த்து தான் காதலிச்சா, அந்த சட்டையப் போட்டுகிட்டு, நீ செய்ற வேலையில மயங்கித்தான், அவளையும் மீறி உன்னை ஏத்துக்கிட்டா. நீ என்னடான்னா, காக்கிச் சட்டையப் பார்த்தா எங்க பழைய ஞாபகங்கள்ல இருந்து வெளிய வர மாட்டாளோன்னு பயந்து, நீயா சஸ்பென்சன் கேட்டு வாங்கிட்டு உக்காந்து இருக்க.”
“இல்ல கார்த்தி! மறுபடியும் காக்கி சட்டையப் போட்டுகிட்டு அவ முன்னாடி நின்னா… அவளுக்கு, தான் பண்ண கொலையும் அதைத் தொடர்ந்த அந்த மோசமான சம்பவுமும் தான் டா ஞாபகம் வரும்.” என்று வருத்தம் கலந்த குரலில் செழியன் சொல்லவும்..
“ஒன்னு புரிஞ்சிக்க செழியா, நீ எப்படி தைரியமா எதையும் கையாள்ற பாப்புவ விரும்பறியோ, அதே போலத்தான் அவளும் மீசைய முறுக்கிட்டு திரியுற அந்தச் செழியன விரும்புறா.”
“சரி! அவளுக்காகன்னு நீ உயிரா நேசிக்கிற இந்த காக்கிச் சட்டைய போடாம இருந்துருவியா என்ன..?” என்று செழியனின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சினான், கார்த்தி.
அவன் கேள்வியில் அதிர்ந்து விழித்த செழியன் மௌனமாய் தலை குனிய. “உன்னால முடியாது, அப்படி நீ செஞ்சீனா, உன் காதல் கொஞ்சம் கொஞ்சமா செத்துப்போகும். எனக்கு நல்லா தெரியும். நீ எந்த அளவுக்கு பாரதியை காதலிக்கிறியோ, அதே அளவு குறையாம அந்த காக்கி யூனிஃபார்மையும் காதலிக்கிறன்னு.”
“ஏன் பாரதிக்கும் அது தெரியும். இவ்ளோ நாள் நீ சஸ்பென்ஷன்ல இருக்கன்னு நினைச்சிட்டுதான், அமைதியா இருக்கா. ஆனால், அந்த சஸ்பென்ஷனே நீயா கேட்டு வாங்கினதுன்னு அவளுக்கு தெ..தெரி..தெரிஞ்சிதுன்னா….” என்று கார்த்தி வார்த்தையால் தந்தியடிக்க ஆரம்பிக்க…
நன்றாக பேசிக்கொண்டிருந்தவன் திடீரென திக்கவும்,
கார்த்தியை நிமிர்ந்து பார்த்த செழியன், அவன் பார்வை போகும் திசையில் பார்வையைத் திருப்ப, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவனைத்தான் முறைத்துக் கொண்டு இருந்தாள், திவ்யபாரதி.
“பத்த வச்சிட்டியே பரட்ட” என்ற செழியன், கார்த்தியின் பின்னால் ஒளிந்து கொள்ள,
கார்த்தியோ, “வந்துட்டா ராட்சசி” என்று ஓடப்போனவனை, கழுத்தில் கைபோட்டு பிடித்துக்கொண்டான், செழியன்.
“டேய் விட்டுறு! உன் பொண்டாட்டியோட கதா காலட்சேபத்தை கேட்க, எனக்கு இப்போ நேரம் இல்லை.”
“நீதான மாட்டிவிட்ட, அப்போ நீயும் கூட இரு.” என்று செழியன் விடாமல் பிடித்துக் கொள்ள…
திவ்யபாரதியோ, ஏற்கனவே காலையில் நடந்த நிகழ்வில் மனச் சஞ்சலத்தில் இருந்தாள்.
கார்த்தி சொன்ன செய்தியில் முதலில் கோபம் தலைக்கேறினாலும், செழியன் தனக்காக இன்னும் என்னவெல்லாம் தான் செய்வான் என்று, அவன் காதலில் உறைந்து நின்றாள்.
ஆராய்ச்சியாய் பார்த்த கார்த்தி, “ஏண்டா, அதிசயமா மந்திரிச்சி விட்டா மாதிரி நிக்குறா உன் பொண்டாட்டி, இல்லனா இந்நேரம் கல்யாணம் பண்ணு, கருமாதி பண்ணுன்னு என்னைய தாளிக்க ஆரம்பிச்சிருப்பாளே!” என்று செழியனின் காதில் ஓதிக் கொண்டிருந்தான்.
உணர்வு வந்து செழியனின் அருகில் வந்த திவ்யபாரதி, “கார்த்தி சொல்றது உண்மையா? நீங்களாதான் சஸ்பென்ஷன் ஆர்டர் கேட்டு வாங்குனீங்களா, செழியன்..?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லடி! இவன் ஏதோ உளறிட்டு இருக்கான். நம்ம கதைய நாம அப்புறம் பேசிக்கலாம். நீ வழக்கம் போல இவனை என்னன்னு கேளு, நாளைக்கு பொண்ணு பார்க்க போகலாம்.” என்று திவ்ய பாரதியை கார்த்தியின் பக்கம் திசை திருப்பினான்.
திவ்யபாரதி கார்த்தியின் பக்கம் திரும்ப, “திருப்பி கோர்த்து விடறியா பக்கி.” என்று செழியனை முறைத்த கார்த்தி, உடம்பை உதறி செழியனின் பிடியிலிருந்து விடுபட்டவன்…
“இங்க பாரு பாரதி! உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு சொல்றதுதான் கடைசி. என்னோட அம்மு என்னைய விட்டுப் போன அன்னைக்கே, என்னோட வளர்ச்சி நின்னு போச்சி. நான் எப்பவும் அந்த எட்டு வயசு கார்த்தி தான். இதுக்கு மேல கல்யாணம் பண்ணு, கருமாதி பண்ணுன்னு எங்கிட்ட ஏதாவது வந்திச்சி..” என்று நிறுத்தியவன்,
“நான் இங்கிருந்து போய்க்கிட்டே இருப்பேன். என்னைய பொறுத்த வரைக்கும் நீங்கதான் என் குடும்பம். எனக்குன்னு தனிக் குடும்பம் வேண்டாம். புரியுதா?” என்றவன்..
“ஏம்மா பாரதி, நீ உன் புருஷன் கிட்ட குறுக்கு விசாரணையை ஆரம்பி.” என்று ஏத்தி விட்டுவிட்டு “ஆள விடுங்கடா சாமி! மாட்டுக்கு தண்ணி வைக்கணும்.” என்று வெளியேறினான்.
கதவு நிலையருகில் போனவனிடம் “IPS படிச்சவன் மாடு கூட மல்லுக் கட்டுறதப் பார்த்தியா..?” என்று செழியன் மீண்டுமாய் கலாய்க்கவும்,
நின்று திரும்பிப் பார்த்தவன் “ஏன் IPS முடிச்சவன் மாடு மேய்ச்சா, மாடு ‘மா’ ன்னு கத்தாம ‘மாமான்னா’ கத்தும். போடா! வேலையப் பார்த்துகிட்டு. போய் முதல்ல உன் பொண்டாட்டிய சமாளிக்கிற வேலையப் பாரு.” என்றவன் வெளியில் கிளம்பிவிட்டான்.
இப்போது திவ்யபாரதியை பார்த்த செழியன், அவள் இன்னும் முறைத்துக் கொண்டே கலங்கிய கண்களுடன் நிற்கவும்.
“இப்போல்லாம் நீ ரொம்ப உணர்ச்சி வசப்படுறடி, என் பாப்புவ அப்பப்போ எங்கயோ ஒளிச்சு வச்சிர்ற.” என்றவன் அவள் தோளில் கைபோட்டு உள்ளே அழைத்துச் சென்று மெத்தையில் அமர வைத்தான்.
அருகில் அமர்ந்து அவள் கைகளை தன் கரங்களுக்குள் எடுத்துக்கொண்டவன், “நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லடி, எனக்கும் ஒரு ப்ரேக் தேவைப் பட்டுச்சி இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கிட்டேன் அவ்வளவுதான்.” என்று சொல்லி அவள் நெற்றியில் முட்டினான்.
அப்போதுதான் அவனின் நெருக்கம், திவ்யபாரதிக்கு அவன் முத்தமிட்டதை நினைவுபடுத்த, மற்ற அனைத்து நிகழ்வுகளும் பின்னுக்குப் போக, முகம் செவ்வானமாய் சிவந்துவிட்டது.
அவள் முகச்சிவப்பை பார்த்தவனுக்கும், காலையில் நடந்த நினைவுகள் தாக்க, அவள் முகத்தை இரு கைகளில் தாங்கியவன் அவள் முகத்தருகே நெருங்க, உள்ளுக்குள் சிறு நடுக்கம் ஓடினாலும், விழிகளை இறுக்க மூடிக்கொண்டாள் திவ்யபாரதி.
மூடிய விழிகள் சம்மதத்தை தெரிவித்தாலும், அவன் பிடித்திருந்த விரல்களில் நடுக்கத்தை உணர்ந்த செழியன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு…
“இன்னைக்கு காலையில ஏன் கண்ணம்மா அப்படி நடந்துகிட்ட” என்றான் மிக மெல்லிய குரலில்.
அவள் எதிர்பார்த்தது நடக்காமல் போனதில் ஆசுவாசம் அடைந்த திவ்யபாரதி மூச்சை நன்றாக இழுத்துவிட்டு, “செய்தியில் சொன்ன சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொண்ணு, என்னுடைய ஸ்டூடண்ட்..” என்றாள் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து.
ஒற்றை விரலில் அவள் நாடியைப் பற்றி நிமிர்த்தியவன் “கவுன்சிலிங் அப்புறம் இந்த மாதிரி நியூஸ் நீ கேட்டு ரியாக்ட் பண்ணாம இருந்திருக்கியேடா, அதுலதானே நீ சரியா ஆகிட்டன்னு நான் நம்பிட்டு இருந்தேன். நீ இன்னைக்கு நடந்துகிட்டத பார்த்தா, இது முதல் முறை மாதிரி தெரியல, இதுக்கு முன்னாடியும் இப்படி பண்ணி இருக்கியா.” என்றான் நெஞ்சில் பதற்றம் சுமந்து.
“ம்..ம்ம்…” என்று மேலும் கீழுமாக தலையாட்டியவள் “எப்போதாவது, அதிக உணர்ச்சி வசப்பட்டா என் கைய நானே கடிச்சிப்பேன், வளர வளர இந்தமாதிரி நியூஸ் கேட்டாலே காதை மூடிக்கிட்டு ஓடிடுவேன். பத்திரிக்கையில வேலை பார்க்கும் போது கூட, இந்த மாதிரி செய்திகள் சேகரிக்கப் போக மாட்டேன்.
இப்பல்லாம் நீங்க அருகில் இருக்க தைரியம், என்னால ஈஸியா இதையெல்லாம் கடந்து போக முடியுது. ஆனால் இந்தப் பொண்ணு என்னுடைய ஸ்டூடண்ட். அதுவும் நான் தினமும் போய்ட்டு வர வழிலதான் நடந்திருக்குன்னவும், கொஞ்சம் பதற்றம் அதிகமாயிருச்சி செழியன், மன்னிச்சிருங்க.” என்று குற்ற உணர்ச்சியில் கண் கலங்கினாள்.
அவள் கலங்கவும் இழுத்து மார்போடு அணைத்துக் கொண்ட செழியன், அவள் தலையில் தன் நாடியைக் குற்றியபடி, “இங்க பாரு கண்ணம்மா, இந்த மாதிரி செய்திகளை நாம கேள்விப்படாமல் இருக்க முடியாது. எங்கோ ஓர் மூலையில இது நடந்துகிட்டுதான் இருக்கும். நம்மளால செய்ய முடிஞ்சது, நம்மை சுத்தி இருக்க சமூகத்தை மாத்த முயற்சி பண்றதுதான்.
அதைத்தான் என் பாப்பு வெற்றிகரமா செஞ்சிட்டு இருக்காளே. இங்க இருக்க பள்ளியில் படிக்கிற பெண் பிள்ளைகளுக்கு, உனக்கு தெரிஞ்ச தற்காப்புக் கலையை இலவசமா கத்துத் தர்ற, வாரத்தில் ஒரு நாள் அவங்க வாழ்க்கைய எதிர்கொள்ளவும், எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எப்படி சமாளிக்கனும், எப்படி தைரியமா இந்த உலகத்தில் தடம் பதிக்கணும்னு கவுன்சிலிங்க் குடுத்துட்டு வர்ற..
பத்தாக்குறைக்கு, இதில் ஆண்பிள்ளைகளின் வளர்ப்புக்கும் சரிவிகித பங்கு இருக்குன்னு நீ சொன்ன ஓரே காரணத்துக்காக, நம்ம கார்த்தியும் அவன் கூட்டில் இருந்து வெளிய வந்து, ஆண் பிள்ளைங்களுக்கு நீ செய்யற அதே விசயத்தை கத்துத்தரான்.
எப்படி பெண் பிள்ளைகள் கிட்ட நடந்துக்கணும், வீட்டை விட்டு வெளிய வர்ற ஒவ்வொரு பெண்குழந்தையோட பாதுகாப்பும், ஒவ்வொரு ஆண்கள் கையில இருக்குன்னு பாடம் எடுக்கிறான். இதத்தானேடா நீங்க ரெண்டுபேரும் தாரக மந்திரமா வச்சி செயல்படுறீங்க. அப்புறம் பாடம் எடுக்கிற டீச்சரே இப்படி நடந்துக்கலாமா?” என்று கேட்டு காலையில் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக, நெற்றியில் கொஞ்சம் வேகமாக முட்டிவிட்டான்.
சிறிதே நெற்றியை தேய்த்துக் கொண்டவள், “சாரிப்பா, இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன். ‘செழியன் ப்ராமிஸ்’” என்றவள், தன் கழுத்தில் கிள்ளி சத்தியம் செய்தாள்.
சத்தமாகச் சிரித்த செழியன் “அது என்னடி, ‘மதர் ப்ராமிஸ்’ தான் கேள்விப்பட்டு இருக்கேன் இது என்ன புதுசா ‘செழியன் ப்ராமிஸ்’” என்றவனின் மூக்கைப் பிடித்து ஆட்டிய திவ்யபாரதி,
“அப்படின்னா எனக்கு அம்மா, அப்பா எல்லாம் என் புருஷன்தான்னு அர்த்தம்.” என்று மனதாரச் சொன்னவளிடம்…
“அதெல்லாம் இருக்கட்டும், அந்த டாக்டர வேணும்னா வர வைக்கட்டுமா… சும்மா கொஞ்ச நாளைக்கு…” என்று சற்றே தயங்கியபடி கேட்டான். அவள் செயல் இன்னும் உறுத்திக் கொண்டிருந்தது செழியனை.
அதற்கு மெல்லிதாகச் சிரித்த திவ்யபாரதி, “ஒன்னும் வேண்டாம், இப்போதானே சொன்னேன். எனக்கு எல்லாம் நீங்கதான்னு, டாக்டரும் நீங்கதான் போதுமா.” என்றவள் “இன்னும் என் மேல நம்பிக்கை வரலியா DSP” என்றாள் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு.
அவள் பாவனையில் சிரித்தவன், “ஓகே டீல்! இனிமே கடிக்கணும்னு தோணிச்சுன்னா, என் கன்னத்தை ஓடி வந்து கடிப்பியாம், சரியா.” என்று சொல்லவும்,
விளையாட்டுப் பேச்சில் நெகிழ்ந்திருந்த திவ்யபாரதியோ, தன்னையும் அறியாமல் சிறுபிள்ளையாய் மாறி இருந்தவள்… “கடிச்சிட்டா போச்சி” என்று அவன் கன்னத்தை கடித்துவிட்டு, வேகமாக வெளியில் ஓட…
தன் நெருக்கம் பாரதியை இந்த அளவுக்கு குறும்பாய் மாற்றும் என்று எதிர்பார்த்திராத செழியன், அவளை துரத்திக்கொண்டு பின்னால் ஓடினான்.
வெளியில் கட்டியிருந்த மாட்டுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த கார்த்தியின் அருகில் நின்று கொண்டிருந்த ஹென்றி, சத்தம் கேட்டு வீட்டுக்குள் பாயவும்.. திவ்யபாரதி வெளியில் ஓட எத்தனிக்கவும் சரியாக இருந்தது.
ஹென்றியைப் பார்த்த பாரதி, பயத்தில் துள்ளியபடி பின்னால் திரும்ப, துரத்திக்கொண்டு வந்த செழியன் மீது மோதி நின்றாள். திவ்யபாரதியோடு சேர்த்து கீழே விழப்பார்த்த செழியன், திவ்யபாரதியை இடுப்போடு பிடித்து தாங்கி நிறுத்தினான். அவள் முகம் அவன் நெஞ்சில் பதிந்திருக்க, அவன் கைகள் அவள் இடுப்பை வளைத்துப் பிடித்திருந்தது.
எதிர்பாராத நெருக்கத்தில் மயங்கிய செழியன், கழுத்தோடு புதைந்து “ஐ லவ் யூடி என் பாப்புக்குட்டி.” என்று சொல்ல.
சற்றே தடுமாறினாலும், “ஐ லவ் யூ டூ” என்றாள் திவ்யபாரதி.
முதல் முறை தன் பாப்புவிடமிருந்து கேட்ட காதல் மொழியில் உற்சாகமடைந்த செழியன், “ஹுர்ரே..” என்று சத்தமாகக் கத்த..
அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவன் பிடியில் இருந்து நழுவி இருந்தாள், திவ்யபாரதி.
பதிலாக எதிரில் நின்றிருந்த கார்த்தியோ, “இப்போதான், ஐ லவ் யூவே சொல்ல வச்சிருக்கியா..? நீ தேற மாட்ட.” என்று தலையில் அடித்துக்கொண்டு மாடி ஏறவும்..
வெளியில் “ஐயா!” என்று அழைக்கும் குரல் கேட்டது.
அந்த குரலில் செழியன், கார்த்தி இருவரும் வீட்டிலிருந்து வெளியில் வர, அவர்களிடம் காதோடு பேசிய அந்த ஊரைச் சேர்ந்த வல்லன்…
கடைசியாக “திரையன் ஐயா, உங்க ரெண்டுபேரையும், கூட பாரதி அம்மாவையும் கூட்டி வரச் சொல்லிச் சொன்னாக.” என்று விட்டுச் சென்றான்.