‘எங்களோடது கொலைகார நட்பு நண்பா!’ என்று சொல்லிச் சிரித்த கார்த்தி, தனக்கும் பாரதிக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பைப் பற்றியும், அவர்களது நட்பு பற்றியும், செழியனிடம் விவரிக்க ஆரம்பித்தான்.
பாரதியை நினைத்த கார்த்தியின் மனதில் மெலிதான புன்னகை தோன்ற, “எங்க நட்பே, அந்த நாகராஜை கொலை பண்ணப்போன இடத்தில் தான் ஆரம்பிச்சது.” என்றவன்,
“எதிர்பாராத விதமா, இரண்டு பேருமே ஒரே சமயத்துல அந்த நாகராஜை கொலை செய்யப்போனோம். அவனை ‘நான் தான் போட்டுத் தள்ளுவேன்னு’ அடம்பிடிச்சா பாரதி, அவளோட கதையை கேட்ட எனக்கு, அவ மனசால ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கான்னு புரிஞ்சிது. அந்த நாகப்பாம்பை அவ கையாலயே அடிச்சி கொன்னாதான், கொஞ்சமாவது ஆறுதலை அடைவான்னு தோனுச்சி அதான் விட்டுக் கொடுத்துட்டேன்.” என்ற கார்த்தி, செழியனின் மனதில் உயர்ந்து நின்றான்.
“நான் விட்டுக் கொடுத்ததுக்கு இன்னொரு காரணம், நான் அதுக்கு முன்னாடியே, அம்முவோட மாமா அந்த சங்கரையும், சுந்தர பாண்டியனையும் தேடிப் பிடிச்சி, நார் நாரா கிழிச்சி, தோலை உரிச்சி தொங்க விட்டுட்டேன். இவனையும் நான் கொன்னுட்டா, பாரதியால என்னைக்குமே அவளை பாதிக்கிற நினைவுகளில் இருந்து வெளிய வர முடியாதுன்னு தெரிஞ்சிதான், அவ கொல்லும்போது பக்கத்தில இருந்து இரசித்தேன்.” என்று சற்று நிறுத்தியவன்,
“இல்லைனா, அந்த நாய என் கையாலயே வெட்டி கண்ட துண்டமாக்கி இருப்பேன்.” என்று சொன்னவனின் கண்கள் சிவந்து பழி வெறியில் துடித்தது. அவன் கைகளில் இருந்த தட்டு அந்த இரும்புக் கரங்களில் நெறிபட்டு வளைந்து போனது.
கார்த்தியின் மனநிலை அறிந்து இருக்கையிலிருந்து எழுந்த செழியன், கார்த்தியின் தோளில் தட்டிக்கொடுத்து, அவன் கையில் காலியாகியிருந்த தட்டையும் வாங்கிக் கொண்டான்.
தன் தட்டிலிருந்த மீதத்தை ஹென்றிக்கும் அவன் சகாக்களுக்கும் பிய்த்து போட்டுவிட்டு, சமையல் அறையைத் தேடி தட்டை சிங்கில் போட்டவன், குடிப்பதற்கு தண்ணீரும் எடுத்து வந்தான். ஏனோ கார்த்தியின் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தோன்றியிருந்தது செழியனுக்கு.
தன்னவளின் நிலையும் கண் முன் காட்சியாய் விரிய, தான் அந்த இடத்தில் இருந்தாலும், இதைத்தான் செய்திருப்போம் என்று நினைத்துக் கொண்டான். ஏன் நாகராஜ் மட்டும் இப்போது உயிரோடிருந்தால், தன்னவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்கு நரகத்தை காட்டி இருப்பான்.
தண்ணீரை கார்த்தியிடம் கொடுத்து விட்டு திரும்பிப் பார்க்க, போட்ட ப்ரெட்டை திரும்பிக் கூட பார்க்காமல் வைத்திருந்தார்கள், கார்த்தியின் நண்பர்கள்.
‘நல்ல ட்ரெயினிங் தான்..’ என்று நினைத்துக்கொண்டவன் ‘அது சரி, இல்லைன்னா இவங்களை வச்சிக்கிட்டு கொலை பண்ண முடியுமா..?’ என்று மெச்சிக்கொண்டான் கார்த்தியை.
வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த கார்த்தியிடம் தண்ணீர் பாட்டிலை நீட்ட, நன்றி உணர்வுடன் செழியனிடமிருந்து நீரை வாங்கி அருந்தி முடித்த கார்த்தி, தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களுக்கு கண்காட்ட, அடுத்த நொடி அவர்கள் முன் வைக்கப்பட்ட உணவு காலியாக்கப்பட்டது.
கார்த்தியின் உத்தரவுக்காக காத்திருந்திருப்பார்கள் போலும், ஒரு நொடியில் அனைத்தையும் ஸ்வாகா செய்திருந்தார்கள்.
செழியன் கொடுத்த தண்ணீர் பாட்டிலை கையில் பிடித்து, அதையே கண்கள் கலங்க பார்த்துக்கொண்டிருந்த கார்த்தி,
“அன்னைக்கு நான் தண்ணீர் கொண்டு வரதுக்குள்ள, என் அம்மு என்னை விட்டுப் போய்ட்டா தெரியுமா?” என்றவன், “என் அம்முவ கடிச்சி குதறுன அந்த நாய்கள, அதே மாதிரியே நாயை விட்டு கடிக்க வச்சி, நார் நாரா சிதைச்சேன். அப்புறமும் என் வெறி அடங்கல, இதை மாதிரியே பாதிக்கப்பட்டவங்களோட லிஸ்ட் எடுத்து, வரிசையா போட்டுத் தள்ள முடிவு பண்ணினோம். அப்போ… முதலாவதா மாட்டுனவன் தான், அந்த வட நாட்டுக்காரன். அவனை இங்க வர வச்சது மட்டும் தான் பாரதி, போட்டுத் தள்ளுனது எல்லாம், நானும் என் நண்பர்களும் தான்.” என்று கண்களில் பெருமை பொங்க, தன் நண்பர்களைப் பார்த்து சொல்லிக்கொண்டிருந்தான்.
அந்த எக்ஸ் MLA பையனை, பாரதி கொன்னது விதி. அது நாங்க ப்ளான் பண்ணவே இல்ல. அது எதேட்சயா நடந்தது. அங்க வேலை செய்யற அக்காவோட பொண்ணை, அவன் நாசம் பண்ண முயற்சி பண்ணவும், பாரதி உணர்ச்சி வசப்பட்டு பண்ணிட்டா. மத்தப்படி பார்த்தா, பாரதி கொலை பண்ணினது அந்த நாகராஜ மட்டும்தான்.” என்றவன்,
“அப்போதான் அந்த மந்திரி பையனும், அவன் ஃப்ரண்டும் இதே மாதிரி கேஸ்ல மாட்டி ஆதாரம் இல்லைன்னு வெளிய வந்தானுங்க. நீயும் கேஸுக்குள்ள வந்த…” என்று ஒரு பெருமூச்சுடன் முடித்தான்.
“நீ கேஸுக்குள்ள வந்ததுமே, பாரதி தவிக்க ஆரம்பிச்சா. அதுக்கு ஏத்த மாதிரி, நீயும் மாஸ்டர் ப்ளான் போட்ட. அங்கதான் நான் கொஞ்சம் சறுக்கிட்டேன்.” என்றவனை, கேவலமாக ஒரு லூக்கு விட்டான், செழியன்.
அவன் பார்வையில் கடுப்பான கார்த்தி, “நீ மட்டும் பாரதிய பார்த்து தடுமாறலாம், நான் தடுமாறக் கூடாதா.” என்றான். அதிலிருந்த உண்மையில், செழியன் வாயை மூடிக்கொண்டான்.
“அன்னைக்கு பேப்பர்ல நியூஸ் பார்த்துட்டு, பாரதி ரொம்ப டிப்ரெஸ்டா வந்தா, நானும் அப்போதான் அந்த நியூஸ் பார்த்தேன். பார்த்ததுமே உன்னை கொல்லனுங்கற வெறி..! உங்க அப்பாவ தெரிஞ்ச எனக்கு, நீதான் அவரோட பையன்னு அன்னைக்கு தெரியாது.” என்று சற்று நிறுத்தியவன், “தெரிஞ்சிருந்தா, இன்னைக்கு பாரதிய தவற விட்டுருக்க மாட்டேன்.” என்று பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.
“ஆனால் பாரதி, உனக்காக எவ்வளவோ வாதாடுனா.. ‘நீ அப்படி பட்டவன் இல்ல, இதுல ஏதோ சதி இருக்குன்னா. நான் தான் உன் மேல உள்ள காதல்ல உளர்றதா சொல்லி, அவளை தப்பா நினைச்சிட்டேன்.” என்றவனை செழியன் முறைக்கவும்,
“முறைக்காத, எப்படி பாரதிய பார்த்தா நீ போலீஸ் காரங்கிறத மறந்து போறீயோ, அதே மாதிரி யாரும் குழந்தைங்கள கொஞ்சிறதைப் பார்த்தா, எனக்கு தன்னை மிஞ்சின கோபம் வரும். அது அந்தக் குழந்தையோட அப்பனா இருந்தாலும் சரி, கண்ணு மண்ணு தெரியாம கோபம் வரும். அப்படித்தான், அன்னைக்கும் கோபம் வந்தது.” என்றான்.
அப்போதுதான் செழியனுக்கு ஞாபகம் வந்தது, போலீஸ் ட்ரெயினிங்கில் இருக்கும் போது, அங்கு வேலை செய்யும் பெண்ணின் குழந்தையான கல்யாணியை, செழியன் தூக்கிக் கொஞ்சும் போது, கார்த்தி தூர இருந்தே முறைத்துக்கொண்டு நிற்பான். அந்தக் குழந்தையை திருப்பி ஒப்படைக்கும் வரை, அந்த இடத்தை விட்டு அகலவும் மாட்டான். அதை நினைத்துக்கொண்டவன் “சோ.. நீ என்னை அப்போ இருந்தே தப்பா நினைச்சிருக்க.. ரைட்..?” என்றான்.
“ஆம்” எனும் விதமாய் தலையாட்டிய கார்த்தி, “நீ அப்போலருந்தே அந்தக் குழந்தைய தூக்கி வச்சி கொஞ்சிக்கிட்டே தான இருப்ப, அதுவும் கல்யாணியோட அம்மா இறக்கவும், நீதான் கல்யாணியை வாங்கிட்டுப் போய்ட்டதா கேள்விப்பட்டேன். அதான் உன்னை தப்பா நினைச்சிட்டேன். அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு.” என்றவன், பாரதி கைது செய்யப்பட்ட தினத்தில் நடந்ததை, செழியனிடம் கூற ஆரம்பித்தான்.
“எப்பவுமே பாரதி வந்தா, ஹென்றி எல்லாரையும் கூப்பிட்டுட்டு பின் பக்கமா போய்டுவான். அவ முதல்முறை இங்க வந்தப்பவே, அவளுக்கு நாய் மேல இருந்த பயத்தை தெரிஞ்சிக்கிட்டு, அப்படி ஹென்றிக்கு பழக்கம் பண்ணி வச்சிருந்தேன். பேப்பர்ல நியூஸ் பார்த்த அன்னைக்கு, பாரதி ரொம்ப உடைஞ்சிபோய் இங்க வந்தா, எங்களுக்குள்ள வாக்குவாதம் ஆரம்பிச்சது. என்னதான் நீ கல்யாணி பேரை பேப்பர்ல மாத்திக் குடுத்தாலும், ஆசிரமத்துல நீ வச்சி வளர்க்கறது கல்யாணிதான். எனக்குத் தெரியுமே..! அதனால பாரதி சொன்னத நான் காதுலயே வாங்கிக்கல…” என்று சற்று நிறுத்தியவன், அன்றைய தினத்துக்காக இன்று வருந்தியது அவன் முகத்தில் தெரிந்தது.
அன்று பாரதி எவ்வளவோ தடுத்தும், செழியனை கொல்லக் கிளம்பியவனிடம், “கார்த்தி, ப்ளீஸ்… இது ஒரு சதியாக்கூட இருக்கலாம். எனக்கு செழியனைப்பத்தி நல்லா தெரியும். காதலிக்கிற என்னையே கழுத்தை தாண்டி பார்த்தது இல்ல, இத விட்டுரலாம் கார்த்தி.” என்றவளை,
“என்ன உன் காதலனைக் காப்பாத்த பாக்குறீயா?” என்று கேவலமான பார்வை பார்த்தான்.
“உன்னைய விட, அவனை எனக்கு நல்லாவே தெரியும், அவன் போலீஸ் ட்ரெயினிங்லயே அப்படித்தான், அந்தக் கல்யாணியக் கொஞ்சுவான்.” என்ற கார்த்தி “என்ன சொன்னாலும் சரி, நான் அவனைக் கொல்லாம விடமாட்டேன்.” என்று கிளம்பவும்,
இதற்கு மேல் யார் தடுத்தாலும் கேட்க மாட்டான் என்று நினைத்த பாரதி, “சரி, நானும் உன் கூட வரேன்.” என்றாள்.
“வேண்டாம் நீ அவனைக் காப்பாத்த முயற்சி செய்வ, நான் பாத்துக்கறேன்.” என்று தன் ஜீப்பை எடுத்தான், கார்த்தி.