Advertisement

சத்ரிய வேந்தன் – 10 – வீரம் போற்றல்

விஜயபுரி நகரம், எத்தனை இன்னல்களைக் கடந்தாலும் தன் எழிலில் சற்றும் குறைவின்றி அன்றலர்ந்த மலர் போன்று இருந்தது. வெள்ள பாதிப்புகளும், ஆறு மாத காலமாக போருக்காக காத்திருந்து நடைபெற்ற கடும் போரும், அந்த போரின் தாக்கங்களும் கண்களுக்கு புலப்படாத அளவு, ஒரு வித மாயையை அந்த நாட்டின் அழகு தோற்றுவித்தது.

மருத தேசத்தின் சக்ரவர்த்தி வீரேந்திர மருதர் விஜயபுரி நகரத்தின் எழில் மிக்க சாலையில் தம் மந்திரிகள் சிலரோடும், வைத்திய குழுக்களோடும், படை வீரர்களோடும் விஜயபுரி அரண்மனையை அடைந்தார். அவருக்கு, விஜயபுரி நகரத்து அரச குடும்பத்தினரும், நாட்டு மக்களும் ராஜ வரவேற்பினை கொடுத்தனர். அவர்களின் முகத்தினில் இருந்த சோகமே நாட்டின் நிலைமையை தெளிவுற உணர்த்தியது.

போரினில் அடைந்த வெற்றியைக் கூட கொண்டாட இயலாத வண்ணம் ஏற்பட்ட இழப்புகளும், மன்னரையே இழந்து விடுவோமோ என்கிற அச்சமும் மக்களை வாட்டி விட்டது. மன்னர் அபாய கட்டத்தை கடக்கும் வரையிலும் அனைவரும் அடைந்த வேதனைகளும், மேற்கொண்ட பிரார்த்தனைகளும் அளவே இல்லாதது.

விஜயபுரி நகரத்து அரண்மனையில், வைத்திய சிகிச்சையில் இருக்கும் அரசர் வேலவரைக் காண சக்ரவர்த்தி வீரேந்திர மருதர் சென்றார்.

ஜீவசுடர் நதியினோரம் நடந்த கடும் போரினில் அரசர் வேலவர் பெரும் காயமடைந்த போதிலும், மலைக்கள்ளர்கள் கூட்டத்தை முற்றிலும் அழித்து விட்ட பெருமிதமே அவருடைய முகத்தினில் நிறைந்திருந்தது. அதிலும் அவரைக்காண சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் வந்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி.

தம் உடல் நிலையையும் மறந்து, புன்னகை நிறைந்த முகத்தோடு சக்ரவர்த்தியை வரவேற்றார். “விருந்தோம்பல் இருக்கட்டும் வேலவரே! தங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது?” முகத்திலும் மார்பிலும் பல காயங்களோடு படுத்த படுக்கையாய் இருந்தவரைக் காணும் பொழுது, காண்பவர் நெஞ்சம் கனத்து விடும்படியான தோற்றத்தில் இருந்தவரிடம் வீரேந்திரர் நலம் விசாரித்தார்.

“நான் நலம் அரசே! தாங்கள் நலமாக இருக்கிறீர்களா? இவ்வளவு நெடும்தூரம் பயணம் செய்து என்னைக் காண வந்திருக்கிறீர், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியோடு வேலவர் கூறினார்.

“நானும் நலமாக இருக்கிறேன் வேலவா. முதலில் நீங்கள் ஓய்வெடுத்து விரைவில் குணமடையுங்கள். நான் மருத தேசத்தில் உள்ள சிறந்த வைத்தியர்களை அழைத்து வந்திருக்கிறேன். உங்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். எவ்வளவு சிறந்த வேலையினை செய்திருக்கிறீர்கள். நான் அகம் மகிழ்ந்து போனேன்.

அவ்வளவு கொடூரமான மலைக்கள்ளர்கள் கூட்டத்தை, கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் காத்திருந்து அழித்திருக்கிறீர்கள். இடையினில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும் பொருட்படுத்தாது வென்று காட்டியிருக்கிறீர்கள். இது தேசத்திற்கு நீங்கள் செய்த பெரும் சேவை தெரியுமா? உங்களால் பல நாடு, நகரங்கள் பலன் அடைந்துள்ளது.

உங்கள் முயற்சியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உங்களுக்கும் நாட்டிற்கும் என்ன உதவி வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள் மருத தேசத்தின் உதவி எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும், அதோடு இனி வரும் ஐந்து வருடங்களுக்கு எந்த கப்பமும் கட்ட வேண்டாம். நான் வெள்ள பாதிப்பு நடந்த இடங்களையும், போர் நடந்த இடங்களையும் மேற்பார்வையிட்டு என்ன தேவையோ அதை செய்து விட்டு செல்கிறேன்” என்றவரது முகத்தில் விஜயபுரி நகரத்தை நினைத்து பெருமிதம் நிறைந்திருந்தது.

“அரசே! வெள்ளம் வந்த பொழுதே, மருத தேசத்தின் மந்திரி பெருமக்கள் வந்து மேற்பார்வையிட்டு பெரும் உதவி செய்திருந்தனர். இப்பொழுது மக்கள் அனைவரும் இயல்புக்கு திரும்பி விட்டனர். நீங்கள் கேட்டதே சந்தோசமாக இருக்கிறது” என்றவர் மேலும் தொடர்ந்து,

“ஆம்! அரசே மலைக்கள்ளர்களை அழித்ததில் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இந்த போர் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தது படைத்தளபதி ரூபன சத்ரியர் தான். அவருடைய வேகமும், வீரமும், திறமையும் இந்த போரினை சிறப்பான முறையில் வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தது அரசே!” என பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க வேலவர் கூறினார்.

“ஆம் வேலவரே, உங்கள் நாட்டு மந்திரி பெருமக்களும், தலைமை குருவும் ஏற்கனவே என்னிடம் ரூபனனின் வீரத்தையும், அவன் கொடுத்த போர் பயிற்சியினையும், அவன் தலைமை தாங்கியதையும், உங்களுக்கு ஏற்பட்ட காயத்தின் பிறகும் மனம் தளராமல் அவர்கள் கூட்டம் முழுவதையும் அழித்ததைப் பற்றியும் கூறினார்கள். நான் அந்த மாவீரனையும் காண வேண்டும். அவனை மருத தேசத்திற்கு விருந்திற்கும் அழைப்பு விடுக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு சம்மதம் தானே!” என கேட்டு மன்னர் வேலவருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தார்.

“என்ன அரசே இதனை தாங்கள் என்னிடம் கேட்க வேண்டுமா? தாராளமாக விருந்து கொடுங்கள். இது அவனுக்கான கௌரவம், யாருக்கும் எளிதினில் கிடைக்கப்பெறாத பாக்கியம் அவனுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதை நான் மறுப்பேனா?” என உவகையோடு கூறினார். வேலவருக்கு ரூபனன் மகனைப் போன்று. அவனை அதிகம் நேசிப்பவர்களில் மன்னர் வேலவரும் ஒருவர், அவனுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது அதுவும் மருத அரசரின் மூலம் என்பதை நினைக்கவே அவருக்கு தித்திப்பாய் இருந்தது.

“நல்லது வேலவரே. நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் நகர்வலம் சென்றுவிட்டு வந்து உங்களைப் பார்க்கிறேன்” என்றபடி வேலவரிடமிருந்து விடை பெற்றார்.

அதன் பிறகு ஏற்கனவே தமது மந்திரிகளால் மேற்பார்வையிடப்பட்டு இருந்த போதிலும், வெள்ள பாதிப்பினால் வயல்களில் ஏற்பட்ட சேதங்களையும், மக்களையும் நேரில் சென்று பார்த்தார். நிவாரணங்கள் அனைத்தும் சரியாக வந்தடைந்ததா என கேட்டு தெரிந்து கொண்டார்.

போரினில் உயிர் துறந்த மாவீரர்களின் குடும்பத்திற்கு, நிதியும் வேலையும் கிடைக்கும் படி உத்தரவு பிறப்பித்தார். உயிர் துறந்த மாவீரர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அரசராக இருந்த போதிலும் மக்களோடு மக்களாகவே இருந்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து, வீரேந்திரர் செயல்படும் விதமே அவரை மக்கள் மனதினில் நீங்கா இடம் பிடிக்க வைத்திருந்தது.

நகர்வலம் முடித்து, போர் நடந்த இடத்தினை மேற்பார்வை செய்வதற்காக போர் நடந்த இடத்திற்கு, மந்திரி பெருமக்களோடு சென்றார். அவருடைய அனுபவத்தில் இதுவரை பல போர்களை கடந்தவர்தான். அதிலும் சில போர்கள் வாரக்கணக்கில் இழுத்து, பல உயிர்களை பலி வாங்கி தனது கோர முகத்தை காட்டிச் சென்றிருக்கிறது.

ஆனால் வெறும் இரண்டே தினங்கள் நடந்த போரினில், அதுவும் இத்தனை குறுகிய கரடு முரடான இடத்தினில் நடந்த போரினில் ஏற்பட்ட சேதம் பெருமளவு இருந்தது.

எத்தனை உயிர் சேதங்கள், எத்தனை வீரர்கள் தமது கை, கால்களை இழந்து முடமாகினர். அனைத்தையும் கடந்து அந்த கொடூரமான மலைக்கள்ளர்கள் கூட்டம் முழுவதும் அழிந்தது ஒரு மன நிறைவையே கொடுத்தது.

இன்னும் மலைக்கள்ளர்களின் உடல்களையும், அதிலிருந்து துண்டாகி விழுந்த தலைகளையும் நெருப்புக்கு இரையாக்கும் வேலை நடந்து கொண்டுதான் இருந்தது. இரண்டாயிரம் உடல்கள் எரியூட்ட வேண்டாமா? அது அத்தனை எளிதானதா? ஆனால் இன்று அந்த வேலையும் முடிந்துவிடும் போலத்தான் இருந்தது.

அனைத்தையும் மேற்பார்வையிட்ட அரசர் வீரேந்திரர், தமது மந்திரி பெருமக்களிடம், “போர் மிகவும் கடினமாக இருந்திருக்கிறது போலும். சரி இங்கே பள்ளிப் படைக்கோயில் (போர்க்களத்தில் உயிர்துறந்த வீரர்களுக்கு நினைவிடம் அமைத்தல்) கட்டிடலாம் தானே மந்திரியாரே? தங்களின் கருத்து என்ன?”

“அரசே! இந்த இடம் நகரத்திலிருந்து பல காத தூரத்தில் இருக்கிறது. இங்கே பள்ளிப் படைக்கோயில் கட்டினால், காலப்போக்கில் பராமரிக்க ஆட்களின்றி சென்றுவிடும்.”

“நீங்கள் கூறுவதும் சரிதான் மந்திரியாரே. ஆனால் இவ்வளவு பெரிய போரினில் தமது உயிரினை இழந்த வீரர்களின் நினைவாக கோயில் எழுப்பாமல் இருந்தால் அது சரி வருமா?”

“அரசே! கோயில் தான் இங்கு வேண்டாம் என்றேன். ஆனால் இவ்விடத்தில், வீரக்கல் நட்டு, நடுகற்கோயில் அமைப்போம். அது இந்த வீரர்களின் நினைவாக இங்கு இருக்கட்டும். மேலும், இந்த மாவீரர்களின் நினைவாக நகரத்தின் எல்லையிலிருந்து அரை காத தூரத்திற்குள் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே பள்ளிப் படைக்கோயில் எழுப்புவோம். நகரத்தின் அருகினில் இருப்பதால், பராமரிப்பு இல்லாமல் போய் விடுமோ என்கிற பயமும் இருக்காது.”

“ஆமாம் மந்திரியாரே இத்தனை தொலைவு வந்து பராமரிப்பு செய்வது என்பது கடினமான காரியமும் கூட. காலப்போக்கில் பராமரிப்பின்றி பாழடையவும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் சொல்வதன்படியே செய்து விடுவோம். மாலை மங்க தொடங்கிவிட்டது, விஜயபுரி அரண்மனைக்கு செல்வோம். இங்கே நடுகற்கோயில் எழுப்புவதற்கான ஏற்பாட்டினையும், நகரத்தின் எல்லையில் பள்ளிப்படை கோயில் அமைப்பதற்கான ஏற்பாட்டினையும் இந்த நாட்டின் முதன்மை மந்திரியாரை செய்ய சொல்லி விடுங்கள்.

அதற்கு தேவையான பொருளுதவியை மருத தேசத்திலிருந்தே கொடுத்து விடுங்கள். ஏற்கனவே போர் பாதிப்பு, வெள்ள பாதிப்பு என்று இருப்பவர்களை மேலும் வருத்தவேண்டாம்.”

“தங்கள் உத்தரவுப்படியே செய்கிறேன் அரசே!” என்று மந்திரியார் பதில் அளித்தார்.

அதன் பிறகு, விஜயபுரி அரண்மனையில் அரசர் வீரேந்திரரும், மற்ற அமைச்சர்களும் ஓய்வெடுத்தனர். வீரேந்திர மருதர் ஓய்வில் இருக்கும் பொழுது, புறா மூலம் ஒரு செய்தி கிடைத்தது, அதைப் படித்தவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பதில் செய்தியினை அதே பறவை மூலம் திருப்பி அனுப்பி விட்டார்.

வீரேந்திர மருதருக்கு, கடந்த இரண்டு வருடமாய் சமுத்திராவிற்கு ஏற்பட்ட திடீர் நட்பின் பேரில் ஒரு சந்தேகம் இருந்தது. சமுத்திரா நட்பு பாராட்டாமல் ஒதுங்கி இருக்கும் குணம் கொண்டவள் இல்லை என்ற போதிலும், பார்க்கும் பொழுது நலம் விசாரித்து கொள்வதோடு சரி. அதையும் தாண்டி அவர்களிடம் அடிக்கடி செய்தி பரிமாற்றங்கள் என்பது அரிதான ஒன்று.

இன்னும் சொல்லப்போனால் ஏதேனும் வாழ்த்து கூறுவது, அழைப்பு விடுப்பது என என்றாவது அவ்வாறு செய்வாள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, தோகையினிக்கு மட்டும் அடிக்கடி தூது அனுப்புவதில் எதுவோ சரியென படவில்லை. ஆகையால் அவளை கண்காணிக்க தொடங்கி இருந்தார்.

அதிலும் சில தினங்களுக்கு முன்பு வேங்கை நாட்டு இளவரசன் சேயோன் அனுப்பிய செய்தியில் ஏதோ இலை மறைவு காய் போன்ற விஷயம் உள்ளடங்கியதாகவே வீரேந்திர மருதருக்கு மனதில் பட்டது. ஆகையால் அந்த மடலில் இருந்த செய்தியை இளவரசி சமுத்திர தேவிகையிடம் தெரிவிக்கும் பொழுது அவளுடைய முகத்திலேயே கவனம் பதித்திருந்தார்.

சக்கரவர்த்தி எண்ணியதைப் போன்றே, சமுத்திராவின் முகம் யோசனையில் ஆழ்ந்து, லேசான வருத்தத்தை வெளிப்படுத்தியது. கணநேர மாற்றமே என்ற பொழுதிலும் அதனை தெளிவாக குறித்துக் கொண்டார். அதோடு அதன் பிறகு, சமுத்திரா வேங்கை நாடு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதில் ஏதோ உறுத்தியது.

வேண்டுமென்றே தனியாக அனுப்ப முடியாது என்பதனைக் கூற, அவளே அண்ணனை அழைத்துச் செல்வதாக சொல்லவும், வீரேந்திர மருதருக்கு எதுவோ புரிந்தது போல இருந்தது.

பொதுவாக மருத தேசத்தில் அரசு அலுவல் விஷயமாக சென்றவர்களை, அந்த பணி முடியும் வரை தொந்தரவு செய்யும் பழக்கம் இல்லை. அப்படி இருக்கும் பொழுதும் தீட்சண்யனை வரச் சொல்கிறாள் என்றால், எதுவோ வீரேந்திரருக்கு பிடி பட்டது போல இருந்தது.

உடனடியாக சம்மதத்தை கொடுத்தவர். அவன் வருவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறியிருந்தார். அவரிடம் இருந்த ஒற்றர்களை தீட்சண்யரையும், சமுத்திராவையும் கண்காணிக்க சொல்லிவிட்டு சில வேலைகளையும் கொடுத்துவிட்டு வந்திருந்தார்.

மன்னரின் ஆணைப்படி, தீட்சண்யரைக் கண்காணித்தவர்கள் அவர் சந்திர நாட்டிலிருந்து கிளம்பியதை அடுத்து, அந்த செய்தியினை சமுத்திராவுக்கு அனுப்பி இருந்தார்கள்.

அதன் பிறகு, தீட்சண்யர் மருத தேசம் வந்து விட்டதையும், இப்பொழுது சமுத்திரையுடன் வேங்கை நாட்டிற்கு மாறு வேடத்தில் புறப்பட்டதையும்தான் செய்தியாக வீரேந்திர மருதருக்கு அனுப்பி இருந்தனர்.

வீரேந்திர மருதரும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் படிதான் சிறிது நேரத்திற்கு முன்பு பதில் செய்தி அனுப்பி இருந்தார்.

** அதிகாலையின் பொன்னிற கதிர்கள், பூமியை அரவணைக்க தொடங்கியிருக்க, விஜயபுரி நகரத்து வைத்திய சாலையில் ஓய்வில் இருந்த ரூபனர் மெல்ல தம் துயில் கலைந்தார். போரினால் ரூபனருக்கும் அதிக காயங்கள் ஏற்பட்டிருந்தது.

அதற்கான சிகிச்சை பெறவே வைத்திய சாலையில் இருந்தார். அவரது மார்பினில் சில இடங்களில் இருந்த ஆழமான காயங்கள் பார்ப்பவர்களையே பதறச் செய்யும். ஆனால், அந்த காயங்களோடு எப்படிதான் மொத்த கூட்டத்தையும் அழித்தாரோ? என்பதே அனைவரும் வியக்கும் விஷயம்.

மன்னர் வேலவர் மண்ணில் வீழ்ந்ததும், ரூபனரின் கோபம் எல்லை கடந்து விட்டது, தமது படை வீரர்களோடு சென்று மலைக்கள்ளர்களை அழிக்கத் தொடங்க, அவர்களும் விடாமல் பதில் தாக்குதல் செய்தனர், அதில் பெரும் காயங்கள் ஏற்பட்ட பொழுதும், ரூபனர் துளியும் தளர்வடையவோ, ஓயவோ இல்லை. அத்தனை பேரையும் அழித்த பிறகே தமது ஆக்ரோஷம் குறைந்து இயல்புக்கு திரும்பினாrர்.

அதன்பிறகு, வைத்திய சாலையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். சிறிது நேரத்தில் ரூபனரைக் காண சக்கரவர்த்தி வீரேந்திர மருதர் வந்திருந்தார். அவரைக் கண்ட ரூபனருக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய வீரத்தை அறியாதவர்கள் யாரேனும் இருப்பார்களா? வீரேந்திரர் என்றாலே அவருடைய நல்லாட்சியும், நற்குணமும், வீரமும் அனைவரின் மனதினில் வரும் விஷயங்கள்தான்.

ரூபனருக்கு மற்ற இரண்டையும் விட அவருடைய வீர, தீர செயல்களே மனதினில் வந்து போனது. அவரைக் கண்டதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரூபனர், வீரேந்திரர் அவரின் வீரத்தை மெச்சி பேசியதில் சிறகில்லாமல் வானில் பறக்கலானார். போர் காயங்களின் வலி கிஞ்சித்தும் இல்லாது போனது.

ரூபனர் பொதுவாக பாராட்டுகளுக்கு பெரிதாக அகம் மகிழ்ந்ததில்லை. ஆனால், இன்று வீரேந்திரரின் பாராட்டு அவருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதோடு ரூபனரை கௌரவிக்கும் விதமாக விருந்துண்ண அழைத்ததில் பிறவிப் பயனையே அடைந்தாற்போல அவருடைய மனம் மகிழ்ந்தது.

“கண்டிப்பாக வருகிறேன் சக்ரவர்த்தியாரே! தாங்கள் எனக்கு அழைப்பு விடுத்ததில் பெரும் மகிழ்ச்சி” என்று கூறிய ரூபனரின் முகத்தினில் ஆயிரம் சூரியன் ஒருங்கே பிரகாசித்தது.

“சரி வீரனே உன் உடல் நலம் குணம் பெற்றதும் மறக்காமல் வந்துவிடு. உன்னை எதிர்பார்த்து காத்திருப்பேன்” என்றபடி அவனிடமிருந்து விடைபெற்றார்.

கடந்த சில ஆண்டு காலமாக நவிரன் மருத தேசத்தில் செய்யும் குற்றங்கள் யாருக்கும் தெரியாமல், சாட்சி இல்லாமல் பெருகிக் கொண்டிருக்க, நல்லாட்சி புரியும் வீரேந்திரரால் கூட இதனை கண்டறிய முடியவில்லை என்பதே நவிரனுக்கு நல்ல நேரமாக போய்விட்டது.

மாவீரன் ரூபனரின் வருகை நவிரனின் அழிவுக்கு வழி வகுத்திடுமா? மருத மக்களின் துயர் கரைந்திடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement