Advertisement

தீண்டல் – 34(2)

“இப்போ தான் கொஞ்சம் முன்னாடி. நீங்க என்ன இங்க?…” அஷ்மியும் அவனிடம் கேட்க,

“இது என் பெரிய மாமனார் பையன் கல்யாணம். இப்போ வேகமா போனாரே அவர் தான் என் மாமனார்…”

“வாவ்…” என சொல்லிய விதம் வசீகரனுக்கு புரிந்துபோனது. அதற்கு புன்னகைத்தவனிடம்,

“இவர் என்னோட ஹஸ்பண்ட் பிரசாத்…”

“ஹலோ பாஸ்…” என்று அவனிடம் கை குலுக்க பிரசாத்திடம் திரும்பியவள்,

“இவர் பேர் வசீகரன். இவர்கிட்ட தான் நம்ம மேரேஜ்க்கு இன்விடேஷன் பிரிண்ட் பண்ண குடுத்திருந்தோம். நம்ம பேமிலி பங்க்ஷன் எல்லாத்துக்கும் இவங்கட்ட தான் குடுப்போம். அது இவங்கப்பா நடத்தறது. வசீகரன் தனியா ஆட் கம்பெனி வச்சு நடத்தறார். நிறைய விளம்பர படங்களை எடுத்திருக்கார்…” என கணவனுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்க,

 “பெரிய நீளமான அறிமுகம்ங்க. உங்க மேரேஜ்க்கு நாங்க பேமிலியா வந்திருந்தோம். ஸார அப்போ பார்த்திருக்கேன்…” வசீகரன் சொல்ல,

“ஆனா உங்க மேரேஜ்க்கு எங்களுக்கு இன்விடேஷன் இல்லை. ரிசப்ஷனுக்கு கூட அப்பாவுக்கு மட்டும் தான் இன்விடேஷன். அதிக்கு கூட…” அஷ்மி வேண்டுமென்றே கேட்க,

“அச்சோ அப்படியெல்லாம் இல்லை. அப்பாவுக்கு வச்சிருந்தோம். அங்க தேடிவந்து வைக்க…”

“சமாளிக்கவெல்லாம் வேண்டாம். உங்க வொய்பை காமிக்கலாம் இல்லையா?…”

“கண்டிப்பா. வாங்க. இங்கயே நின்னு பேசிட்டிருக்கோம்…” என்று அவன் கூட்டிசெல்ல அங்கே நிதி அமர்ந்திருக்க அங்கே சென்றவன் அவள் இவனை பார்த்ததும் எழுந்துகொள்ள பார்க்க அவளின் வயிற்ரை பார்த்த அஷ்மி,

“உட்காருங்க, உட்கார்ந்தே பேசலாம்…” என்று தங்களுக்கும் சேரை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டாள் உடன் பிரசாத்தும்.

“எத்தனை மாசம்…” என கேட்டுகொண்டவள் அவளின் உடல் நலனை விசாரித்து முடிக்க,

“நிதி இவங்க…” வசீகரன் முடிக்கும் முன்னே,

“நான் அஷ்மிதா. இவர் என் ஹஸ் பிரசாத். நான் சென்னை தான். இருக்கிறது குறிஞ்சியூர். இவரோட ஊர்…” அவள் தானே அறிமுகம் செய்துகொள்ள அவளின் படபட பேச்சில் சந்நிதி பதில் பேச முடியாமல் திகைக்க,

“அவ கொஞ்சம் ஷை டைப்…” என்றான் வசீகரன்.

“அதான் கல்யாணம் எங்களுக்கு சொல்லாமலே போல?…” மீண்டும் அவள் கேட்க,

“வேணும்னா இன்னொருக்க மேரேஜ் வச்சிடலாம்ங்க. கண்டிப்பா உங்களுக்கு சொல்லி செய்யலாம். என்ன நிதி?…” என வசீகரன் அஷ்மிதாவிடம் சொல்லி நிதியிடம் கேட்க,

“இதை எதிர்பார்த்து இருக்கற மாதிரி தெரியுதே? உங்க ஆசைக்கு நாங்க ஊறுகாயா?. லவ் மேரேஜா?…”

“ஹ்ம்ம் அப்படியும் சொல்லலாம்…” வசீகரனின் முகம்கொள்ளா புன்னகையில் பிரசாத்தும், அஷ்மியும் சிரிக்க வெட்கத்துடன் நெளிந்தாள் சந்நிதி.

“பார்த்தாலே தெரியுதே. அதான் இன்னொருமுறை கல்யாணம் செய்யலாம்னு சார்க்கு தோணுது போல. முதல்ல அவங்களை பேச விடுங்க…” என பிரசாத் சொல்லவும்,

“அப்படியெல்லாம் இல்லை. நான் பேசுவேன்…” என்று நிதியும் சொல்ல,

“ஹ்ம்ம் மேட் பார் ஈச் அதர்…” அஷ்மி சொல்ல,

“டைனிங் ஹால் பக்கத்துல பார்த்தீங்கள்ள அவரோட ரெண்டாவது பொண்ணு. சந்நிதி. என் வொய்ப்…” என சொல்ல,

“அந்த அழகு தெய்வத்தின் மகளா இவள்?…” என்று வழக்கமான குரலில் அஷ்மி சொல்லிவிட சந்நிதிக்கு புரியவே இல்லை. வசீகரன் சங்கடமாய் பார்க்க,

“அஷ்மி ஆரம்பிச்சிட்டியா? அந்த பொண்ணு பாவம்…” பிரசாத் முணுமுணுக்க,

“உங்க அப்பாவை பார்த்தோம். உங்களை மாதிரியே இருக்கார்…” அஷ்மி சொல்ல,

“கரெக்ட்டா சொன்னீங்க…” என்ற வசீகரன் உற்சாகமாகி,

“பாரு பார்த்ததும் அவங்க கூட உன்னை மினியேச்சர் முனீஸ்ன்னு கண்டுபிடிச்சுட்டாங்க…” என்றதும் அவனை முறைத்தவள்,

“நீங்க தர்ஷினிக்கு சொந்தமா?…” நிதி கேட்ட பின்பு தான் வசீகரனுக்குமே தோன்றியது.

“சொந்தம் இல்லை சந்நிதி. தர்ஷினி அம்மா சரோஜினி நான் சென்னையில் வேலை பார்த்த ஹாஸ்பிட்டல்ல டீன். நாங்க ரொம்ப க்ளோஸ் கூட. கண்டிப்பா வரனும்னு ஆடர். அப்பாவாலயும் வர முடியலை. நாங்க வந்தோம். இன்னும் கொஞ்சம் நேரத்துல கிளம்பிடுவோம்…” என சொல்ல,

“நீங்க டாக்டரா?…” என்றாள் சந்நிதி.

“பார்த்தா தெரியலையா?…” என அஷ்மி கேலியாக புன்னகையுடன் கேட்க,

“அச்சோ அப்படி இல்லை. சும்மா தான்…” என்றவளுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில்,

“வந்து நேரமாச்சு, நாங்க கிளம்பனும். பையனை அப்பாக்கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்…” என்று சொல்லிவிட்டு,

“நான் போய் மேமை பார்த்து சொல்லிட்டு கிளம்பறேன். பை. டேக் கேர்…” என்றுவிட்டு எழுந்து செல்ல சந்நிதியின் புன்னகை முகத்தில் லேசான மாற்றம்.

“நிதி…” பார்த்ததுமே கண்டுகொண்டவன், “என்னாச்சு நிதி?…” என பதற,

“என்னவோ வலியா இருக்கு. வாஷ் ரூம் போகனும். மேல கூட்டிட்டு போங்களேன்…” என்றவளை தூக்க பார்க்க,

“எல்லாருமே என்னன்னு கேட்க போறாங்க. நான் மெதுவா நடந்து வரேன்…” என்றவளின் கண்கள் கலங்கிவிட வசீகரனுக்கு அவளின் வலி மனதை பிசைந்தது.

“என்ன பண்ணுது நிதி? எனக்கு பயமா இருக்கு…” என புலம்பிக்கொண்டே மாடிப்படி வரை சென்றவன் அங்கிருந்து அவளை கையில் அள்ளிக்கொண்டான்.

“விடுங்க ப்ளீஸ்…” என்றவளின் குரலை கண்டுகொள்ளவே இல்லை. அறைக்குள் நுழைந்ததும் பாத்ரூம் செல்ல வசீகரன் அம்பிகாவிற்கு அழைத்துவிட்டான். அவர் மாடிக்கு வரும் முன்னே நிதி வலி தாங்கமுடியாது அனத்த ஆரம்பித்தாள்.

நொடியில் அனைவருக்கும் விஷயம் தெரிய எல்லோரும் பதறிக்கொண்டு மேலே வந்தனர். அவர்களுடன் சரோஜினியும், அஷ்மிதாவும் சேர்ந்து வந்துவிட மற்றவர்களை வெளியே நிற்க சொல்லிவிட்டு சந்நிதியை பார்த்தனர்.

வெளியில் அனைவரும் பதட்டமாய் நிற்க முனீஸ்வரனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

“நான் சொல்லிட்டே இருக்கேன் ஒரு இடத்துல உட்காருன்னு, கேட்கவே இல்ல. இங்கயும் அங்கயும் அலைஞ்சுட்டு இருக்கறதுக்கு இங்க வராமலே இருந்திருக்கலாம். வீட்டுல இருந்தாலாச்சும் நிம்மதியா இருந்திருப்பா…” என்று பேச,

“சித்தப்பா இப்ப இதை பேசவேண்டிய நேரமா? பேசாம இருங்க. பார்த்திட்டு இருக்காங்கல்ல…” ரேவதி பேச,

“என்னத்த பார்த்தாங்க? போய் எம்புட்டு நேரமாச்சு? ஒழுங்கா என்னன்னு வந்து சொல்லிருக்காங்களா? இதுக்கு தான் இங்க பக்கத்துல ஹாஸ்பிட்டல் போகலாம்னு சொன்னேன். சிறுசுக்கு எதாச்சும் ஆச்சு நடக்கறதே வேற…” கோபமாய் பேச,

“சித்தப்பா என்ன பேசறீங்க நீங்க? நிதியை பார்க்கறது சென்னையிலையே பெஸ்ட் டாக்டர் சரோஜினி. கூட இன்னொரு டாக்டரும் இருக்காங்க. சரோஜினி இப்ப நம்ம புகழோட மாமியார். பார்த்து பேசுங்க…” புவன் அதட்ட,

“யாரா இருந்தா எனக்கென்ன? எனக்கு என் பொண்ணுதான் முக்கியம். சிறுசு முகத்த பார்த்தல. வலியில என்னமா துடிக்குது. புள்ளைய சுமந்துட்டு இருக்கு. பொறுப்பில்லாம பேசுற?…” அவனிடம் பாய்ந்தார்.

“மாமா, நீங்க கொஞ்சம் பேசாம் இருங்க. அவங்க பார்த்துட்டு வருவாங்க…” வசீகரனும் அமைதியாய் சொல்ல அவனின் முகமே கலங்கி போய் இருந்தது. பிரசாத் கோபமாக நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு இப்பொழுது பேசினால் தேவையில்லாமல் பிரச்சனையாகிவிடுமே என்கிற எண்ணம்.

“நீங்க சும்மா இருங்க மாப்பிள்ள. இந்த டாக்டருங்களே இப்படித்தான். நம்மளை தவிக்கவிட்டு தான் விஷயத்தை சொல்லுவாங்க. டாக்டருக்கு உள்ள இருக்கறது சொந்தமா பந்தமா?…” என சொல்ல படக்கென அறையின் கதவு திறக்க முறைப்புடன் வந்தாள் அஷ்மி.

“இந்தாங்க இந்த ப்ரிஸ்க்ரிப்ஷன்ல இருக்கற மெடிசினை வாங்கிட்டு வாங்க. ஒரு இன்ஜெக்ஷன் போடனும் அவங்களுக்கு…” என்றதும் வேகமாய் வாங்கிக்கொண்டு சூர்யாவும், பிரபுவும் சென்றனர்.

“அஷ்மிதா நிதி…” வசீகரன் தவிப்புடன் கேட்க,

“நத்திங் டூ வொரி வசீகரன். ஜஸ்ட் பால்ஸ் பெய்ன் தான். கொஞ்சம் அலட்டிகிட்டாங்க இல்லையா. அதான். மேடம் பார்த்திட்டிருக்காங்க. கொஞ்சம் நேரம் எல்லாரும் இங்கயே இருங்க. நிதி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும்…” என்றவள் முனீஸ்வரன் பக்கம் திரும்பியதும் பிரசாத்தின் முகத்தில் குருஞ்சிரிப்பு.

“என்ன சொன்னீங்க? பொறுப்பில்லாமல் இருக்கோமா? அப்படி எத்தனை டாக்டரை நீங்க பார்த்தீங்க பொறுப்பில்லாம? உங்களுக்கு முடியலைன்னு போனதும் சும்மா ஹாயா உட்கார்ந்துட்டு நீங்க அவஸ்தை படறதை வேடிக்கை பார்த்துட்டு பொறுமையாவா உங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்த்தாங்க…”

“அஷ்மிதா ஸாரி அவருக்காக நான் கேட்டுக்கறேன்…” வசீகரன் தன்மையாக சொல்ல,

“என்ன ஸாரி வசீகரன்? என்ன வேணும்னாலும் பேசிடுவாரா? சப்போஸ் இங்க நாங்க இருக்க போய் உடனே பார்த்துட்டோம். யாருமே இல்லாத இடத்தில் என்ன செய்வார்? இவர் இஷ்டத்துக்கு நினைச்சதை பேசிடலாமா? எங்களை எங்க பிரபஷனலை பேசிட்டார். அப்ப நான் பேசறதை கேட்டு தான் ஆகனும்…”

“இங்க பாருங்க ஸார், நான் இந்த வயசு வித்யாசம் எல்லாம் பார்க்க மாட்டேன். தப்புன்னா பேசிட்டு போய்ட்டே இருப்பேன். இப்ப என்ன உங்க பொண்ணுக்கு என்னன்னு உடனே வந்து உங்ககிட்ட சொல்லி உங்களை ஆறுதல்படுத்திடு அதுக்கப்பறம் போய் உங்க பொண்ணுக்கு மெதுவா ட்ரீட்மென்ட் பார்க்கனும்னு சொல்றேங்களா?…”

“இந்தா பொண்ணே…” முனீஸ்வரன் முறைக்க,

“நான் பொண்ணுன்னு நான் பொறந்தப்பவே தெரியும். நீங்க அடிக்கடி இதை சொல்ல வேண்டாம். பேசுறதுக்கு முன்ன யோசிச்சு பேசுங்க. நாங்க பார்க்க வேண்டாம்னா இப்பவே தாராளமா நீங்க உங்க பொண்ணை கூட்டிட்டு போகலாம்…” என்று சொல்லிக்கொண்டிருக்க சூர்யா வந்துவிட்டான்.

அங்கிருந்தவர்கள் யாருக்குமே அஷ்மியை பேச தைரியமில்லை. பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணை இப்படி பேசிவிட்டாரே என்று முனீஸ்வரன் மேல் தான் வருத்தம்.

“மண்டபத்துக்கு பக்கத்துலையே இருந்துச்சுடா. வந்துட்டோம்….” என மருந்தை அவளிடம் கொடுக்க வாங்கிகொண்டவள் முனீஸ்வரனை முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

“பேசாம இரேன் தம்பி…” நீதிமாணிக்கம் கடிந்துகொள்ள அனைவருக்குமே முனீஸ்வரன் மேல் கோபம். முனீஸ்வரன் வசீகரனுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த பிரசாத்தை பார்க்க “உனக்கு தேவையா? இது கம்மி தான்” என்னும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் சரோஜினியும் அஷ்மிதாவும் வெளியே வந்தனர். அனைவரின் முகத்திலிருந்த பதட்டத்தை பார்த்த சரோஜினி மிதமான புன்னகையுடன்,

“எதுக்கு இத்தனை பதட்டம்? இது நார்மலா எல்லாரும் பேஸ் பன்ற விஷயம் தானே? இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். அவங்களை ரிலாக்ஸா விடுங்க…” என்றவர் வசீகரனிடமும், அம்பிகாவிடமும்,

“நெக்ஸ்ட் வீக் சென்னை வந்துடுவேன். ஒரு தடவை செக்கப்க்கு கூட்டிட்டு வாங்க அபி அக்கா. நான் பார்த்திடறேன்…” என்று சொல்லிவிட்டு முனீஸ்வரனை பார்த்தவர்,

“பொண்ணுக்கு ஒண்ணுன்னா பதட்டம் வரது சகஜம் தான். நான் எதுவும் தப்பா நினைக்கலை…” என சிரிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்ததும் அஷ்மி வசீகரனிடம்,

“தூங்கட்டும் கொஞ்சம் நேரம். யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். கூட ஒரு ஆள் இருங்க போதும். இன்னொன்னு சும்மா சும்மா டென்ஷன் ஆகி எல்லாரையும் டென்ஷன் பண்ணாம இருக்க சொல்லுங்க. நாங்க கிளம்பறோம்…” என்று சொல்லிவிட்டு பிரசாத்துடன் அவள் நகர,

“தேங்க்ஸ் அஷ்மிதா…” என அவனும் சொல்ல,

“பேசாம எல்லாரையும் அனுப்பிட்டு நிதி கூட நீங்க மட்டும் இருங்க. இந்த தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் மேன். பை…” என புன்னகையுடன் சொல்லிவிட்டு கிளம்பவும் பிரசாத்தும் சிறு தலையசைப்புடன் நகர்ந்து,

“கலக்கிட்ட வெள்ளெலி…” என அவளின் கை கோர்த்துக்கொண்டான் பிரசாத்.

அனைவருமே சத்தமில்லாமல் சந்நிதியை பார்த்துவிட்டு செல்ல எல்லோரும் சென்ற பின்னர் கதவை அடைத்துவிட்டு வந்து சந்நிதியின் அருகே அமர்ந்துகொண்டான்.

இப்பொழுதிருந்தே கவலை அவனை அரிக்க ஆரம்பித்திருந்தது. யோசனை முழுவதும் அவளின் பிரசவத்திலேயே இருக்க ஒரு மணிநேரம் சென்ற பின்னர் தான் சந்நிதி கண் விழித்தாள்.

“நிதி…” என்றபடி அவளை தன் மீது சாய்த்து அமர்த்திக்கொண்டவன்,

“பயந்துட்டேன் நிதி…” என குரல் நடுங்க சொல்லிகொண்டே அவளின் முகமெங்கும் முத்தமழை பொழிய அவனின் தவிப்பிற்கெல்லாம் வடிகாலானாள் சந்நிதி.

“என்ன இது? இது நார்மல்ன்னு சொன்னாங்க தானே?…” அவனை தேற்ற பார்க்க,

“இப்பவே இந்த வலியே உன்னால தாங்க முடியலை. இதுல டெலிவரி பெய்ன்…”

“ஏன் இதுவரைக்கும் யாருமே டெலிவரி பண்ணிக்கலையா?…” களைத்த முகத்துடன் அவள் கேட்டாலும் குரலில் அத்தனை   கேலி.

“அவங்களாம் நிதி இல்லையே…” என்றான் அவளின் வாயடைக்கும் பொருட்டு.

அதற்குள் மூக்கு வேர்த்தது போல முனீஸ்வரன் வந்து கதவை தட்ட எழுந்து கதவை இவன் திறக்க அதன் பின் ஒருவர் பின் ஒருவராக சந்நிதியை வந்து பார்ப்பதும் நலம் விசாரிப்பதுமாக இருக்க பதில் சொல்லி சொல்லியே மீண்டும் களைத்து போனாள் சந்நிதி.

அவனின் கோபம் புரிந்த குகன் மகனை அழைத்து நிதியுடன் வெளியில் எங்காவது சென்றுவருமாறு சொல்ல அவன் அம்பிகாவிடம் கேட்க,

“கேட்கிறதுக்கேல்லாம் கேட்டுடாத. இதுக்கெல்லாம் கேட்டுட்டு நிப்ப? கூட்டிட்டு போடா. ட்ரைவ் பண்ணும் பொது கவனம். பேசனும்னா எங்கையாச்சும் ஓரமா நிப்பாட்டிட்டு பேசு. கார் ஓட்டிட்டே பேசாத…” என அவர் பங்குக்கு அட்வைஸை சொல்லி செல்ல புன்னகையுடன் நிதியை கிளப்பினான்.

“புடவையை மாத்து நிதி. வேற ட்ரெஸ் போட்டுக்கோ…” என அவளை கிளப்பி கீழே வர முனீஸ்வரன் பிடித்துக்கொண்டார்.

“இப்பத்தான் முடியலைன்னு அத்தனை பாடுபட்டா. இப்ப அவளை கூட்டிட்டு வெளில கிளம்பினா என்ன அர்த்தம்?. டாக்டர் அவளை ரெஸ்ட் எடுத்துக்க சொல்லிருக்காங்க…” என்று குதிக்க,

“அப்பாவும், அம்மாவும் தான் ரிலாக்ஸா நிதியோட வெளில போய்ட்டு வான்னு சொன்னாங்க. இங்க ஒரே டிஸ்டர்பன்ஸ்…” என அம்பிகா, குகனை கை காட்ட வாயை அதற்கு மேலும் திறப்பாரா என்ன?

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அவர்கள் கிளம்பி கடற்கரை பக்கம் வந்து ஓரமாய் காரை நிறுத்தி சந்நிதிக்கு குடிக்க இளநீர் வாங்கி வந்தான்.

“ரொம்ப பயந்துட்டீங்களா?…” என மீண்டும் அவனிடம் அவள் கேட்க அவளின் விரல்களை பற்றிக்கொண்டவன் தனித்தனியே ஒவ்வொரு விரலுக்கும் அழுத்தமாய் முத்தம் பதித்தான்.

“இப்பவும் என்னால நம்ப முடியலை. அப்படி ஒன்னும் நீங்க என்னை லவ் பண்ணின மாதிரி தெரியலை. ஆனாலும் ரொம்ப லவ் பன்றீங்க…”

“எங்க, நீ விட்டா தானே லவ் பண்ண?…” வசீகரனும் அலுத்துக்கொண்ட குரலில் சொல்ல தன் சீட்டை விட்டு அவனின் மடிக்கு மெதுவாய் மாறியவள்,

“இனியும் விடமாட்டேன். என்னையும் விடாமலே லவ் பண்ணுங்க. கண்ணுல கன் வச்சிருந்து என்ன யூஸ்? என்னை எய்ம் பண்ண தெரியலை…”  அவனின் கன்னத்தை வருடியபடி கேலி பேச,

“சோ வாட்? கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம். குழந்தை பிறக்கும் முன்னமே கத்துக்கலாம்…” என அவளின் கன்னம் நிமிண்டி சொல்லியவன்,

“ரொம்பவும் பயந்துட்டேன் நிதி. இந்த விரல்கள் மறுபடியும் என்னை தீண்டும் வரை பயந்துட்டே இருந்தேன்.  ரொம்ப ரொம்ப. உன் விஷயத்துல எப்பவுமே நான் பயந்துட்டே தான் இருக்கேன். உன்னோட இந்த ஸ்பரிசம் எப்பவுமே எனக்கு இருந்துட்டே இருக்கனும். நான் உயிர்ப்போட இருக்க. நான் காதலிக்க. சண்டை போட. இப்படி எல்லாத்துக்குமே நீ வேணும்…”

“முத்திருச்சு…” அவனின் மார்பில் சாய்ந்து அவள் சொல்ல,

“பரவாயில்லை…” என அவளுடன் இழைந்துகொண்டே வசீகரன் அவளின் கழுத்து வளைவில் புதைந்தான்.

“நிதி கூர்க் போவோமா?…” கரகரப்பான குரலில் கிசுகிசுப்பாய் அவளிடம் கேட்க,

“இப்போ வேண்டாம், நெக்ஸ்ட் பேபிக்கு போகலாம்…” அவனை போலவே அவளும் சொல்லி அவனுள் இன்னுமின்னும் தன்னை விதைத்தாள்.

“நீ இருக்க பாரு…” என அவளின் சிரிப்புடன் இணைந்து வசீகரமாய் புன்னகைத்தான் வசீகரன். சந்நிதியின் வசீகரன்.

இனி என்றும் என்றென்று அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அலை தீண்டிக்கொண்டே இருக்கும்.

புத்தம்புது மழை எனை நனைத்தது நெஞ்சம் மட்டும் வேர்க்கும் மாயம் என்ன

நித்தம் இந்த மழை எனை நனைத்திட ஏதோ உள்ளம் ஏங்கும் நியாயமென்ன

இரு கரங்கள் இடையே இருக்க இதமாகுதே

நிறைவு

Advertisement