Advertisement

தீண்டல் – 34(1)

              திருமண வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து அவ்வளவாய் உறக்கமில்லாமல் இருந்தவருக்கு அலைச்சலில் அசதியாய் உறங்க சூர்யா வந்ததும் தெரியவில்லை. தன்னை அணைத்ததும் தெரியவில்லை.

ஏசி அறையில் குளிருக்கு இதமாய் அவர் உறங்க இவனோ கையை வைத்துக்கொண்டு இருக்கமுடியாமல் உறக்கமும் வராமல் அவரின் முகத்தை விரல்களால் அளந்துகொண்டிருந்தான். அறையில் கசிந்துகொண்டிருந்த மெல்லிய விளக்கொளியில்,

“செல்லமே உன்னோட அழகே உன் மீசை தான்…” என்று பிதற்றலோடு அரை உறக்கமும் முழு போதையும் அவனை படுத்தியது.

வசீகரன் தனது அறைக்கு செல்ல அங்கே அனுபமாவும் சந்தியாவும் பேசிக்கொண்டிருக்க சந்தியாவின் மடியில் சந்நிதி உறங்கியிருந்தாள். ரேவதி அவளுக்கு பக்கத்தில் சந்தியாவின் குழந்தையுடன் விழித்திருக்க,

“ஹேய் இங்க என்ன இன்னும் அரட்டை? இவ என்ன அதுக்குள்ளே தூங்கிட்டா? இப்போ தானே கால் பண்ணினா…” என வசீகரன் கேட்க,

“ஐயோ மெதுவா பேசுங்க. இவ தூங்காம இருந்ததுக்கு தான் உங்க அம்மா திட்டிட்டு போனாங்க. ஏற்கனவே நல்ல தூக்ககலக்கத்துல இருந்தா, கால் பண்ணினதும் மடியில படுத்து தூங்கிட்டா. எங்களுக்கு தூக்கம் வரலை. அதான்…” தியா பேச,

“அது சரி, அதான் அவங்கவங்களுக்கு ரூம் குடுத்திருக்காங்கள்ள. போய் தூங்காம ஒரே ரூம்ல பேச்சு. போங்க முதல்ல…” என விரட்ட,

“வீட்ல கூட தான் தனி ரூம். இங்க வந்த இடத்திலையுமா? போங்கத்தான். இதுதான் ஜாலியா இருக்கு. ரூம் எல்லாம் மாத்தியாச்சு. அவங்கவங்க லக்கேஜ் அந்தந்த ரூம்ல தான் இருக்கு. தூங்கறது மட்டும் மாத்திக்கிட்டோம்…” ரேவதி சொல்ல,

“இது எப்போ?…” என வசீகரன் கேட்டுகொண்டிருக்கும் பொழுதே விஷ்வாவும் வந்துவிட,

“அம்மா தான் அம்பிகாத்தையை, கோமதி பெரியம்மாவை, பார்கவி பெரியம்மாவை கூட்டிட்டு போய்ட்டாங்க. அவங்க எல்லாம் ஒரு ரூம். என் அப்பாவும், நீதி பெரியப்பாவும் தியா ரூம்ல. மத்த ரெண்டு ரூமும் உங்களுக்கெல்லாம்…” ரேவதி சொல்லவும்,

“இதை முதல்ல சொல்லமாட்டீங்களா? எப்ப தூங்கி எப்போ எழுந்துக்க?…”விஷ்வா கடுப்பாகி தியாவை முறைக்க,

“திடீர்ன்னு கெஸ்ட் வந்துட்டாங்க. அபிராமி அண்ணி அப்பாம்மா காலையில தான் வரதா இருந்து திடீர்ன்னு இன்னைக்கு வந்துட்டாங்க. அவங்களுக்கும் குடுக்கனும்ல. எக்ஸ்ட்ரா இருந்த ரெண்டு ரூமும் ஃபுல். அதான் இந்த அட்ஜஸ்ட்மென்ட்…” தியா சொல்லவும்,

“அனு உன் ரூம்ல நாங்க படுத்துக்கறோம். புகழ் அவனுக்கான ரூம். புவன் பிரபு கூட ஷேர் பண்ணிக்கட்டும்…” என வசீகரன் திரும்ப போக,

“அங்க அப்பா தூங்கறாங்க. அப்பா கூட யாரும் ஷேர் பண்ணிக்கலை. அதான் இன்னொரு எக்ஸ்ட்ரா ரூம் இருக்கே?…” தியா  சொல்லவும் வசீகரனுக்கும், விஷ்வாவுக்கும் அதிர்ச்சியானது.

“என்ன? சூர்யா ரூம்ல மாம்ஸா?…” என இருவரும் ஒரே குரலில் கத்த உறக்கத்தில் இருந்த சந்நிதி பதறி எழுந்தாள்.

“என்னாச்சு?…” என படபடப்புடன் கேட்க வேகமாய் அவளை வசீகரன் நெருங்க ரேவதி கட்டிலில் இருந்து எழுந்துகொண்டாள். சந்நிதியிடம் வந்தவன்,

“நத்திங், நத்திங். பேசிட்டிருந்ததுல கொஞ்சம் சத்தமாகிடுச்சு. சும்மா தான்டா பேசிட்டு இருக்கோம். நீ தூங்கு….” என அவளை அமைதிப்படுத்தியதும் நிதி மறுபுறம் திரும்பி தியாவின் குழந்தையை அணைத்துக்கொண்டு தூங்கிவிட்டாள்.

“அனு முன்னாடியே சொல்லமாட்டியா?…” என்று கடிந்துவிட்டு திரும்ப புகழும் புவனும் வந்துவிட்டார்கள்.

“என்னடா தூங்காம ரூம் வாசல்ல நின்னு பேசிட்டு இருக்கீங்க?…” என்ற புகழை தள்ளிவிட்டு சூர்யா இருந்த அறை நோக்கி சென்றனர். அங்கே சூர்யாவோ,

“முனீஸ்…” என,

“ம்ம்ம்” முனங்கினார்.

“முனீஸ்…”

“ம்ம்ம்…” முனீஸ்வரனுக்கு யாரோ அழைப்பதை போன்று மெல்லியதாக சத்தம் கேட்க அவர் விழிக்காமல் இருப்பதை பார்த்தவன்,

“முனீஸ் செல்லமே….”  என அழைத்துக்கொண்டே மீசையை பிடித்து நன்றாய் இழுத்துவிட வலியில் கத்திக்கொண்டே முனீஸ்வரன் பதறி விழிக்க பார்த்தவரின் கண்கள் தெறித்துவிடும் போல் ஆனது. “இவனா” என்ற பார்வையுடன்,

“டேய். விடுடா…” என்ற அலறல் குரல் அறைக்கு வெளியே கேட்க கதவை திறந்துகொண்டு அத்தனைபேரும் நுழைந்தனர்.

“செல்லமே…” என மீசையை விட்டுவிட்டு அவரை கீழே தள்ளி பாய்ந்து கட்டிக்கொள்ள,

“டேய் விடுடா, விடுடா…” என்று அவனின் அணைப்பிலிருந்து விடுபட அவர் திமிறி திணற வசீகரன் சிரித்துவிட்டான்.

“அடேய் சிரிக்காத முதல்ல இவனை அவர்ட்ட இருந்து தூக்குடா…” என விஷ்வா வசீகரனின் கையில் கிள்ள இருவருமாய் சேர்ந்து சூர்யாவை முனீஸ்வரனிடம் இருந்து பிய்த்து எடுத்தனர்.

அப்பொழுதும் அவரின் முகத்தை விடாமல் இரு கைகளாலும் அழுத்தமாய் பற்றிகொண்ட சூர்யா,

“முனீஸ், மை முனீஸ்…” என்று முத்தம் கொடுப்பதை போல உதட்டை குவிக்க,

“இவன் இன்னைக்கோட முத்தத்தை மறந்திடுவான்டா. பையன் நவரசத்தையும் சொட்ட சொட்ட கொட்டுறான் பாரேன்…” விஷ்வா சொல்ல,

“இதத்தான் காதல் ரசம்னு சொல்லுவாங்களோ?. கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்னு சும்மா பிச்சுக்குது…”  என்று வசீகரன் சொல்ல அவனின் தலையில் நங்கென்று பலமாய் கொட்டினாள் அனு.

“ஹேய் என்னை எதுக்கு கொட்டுற?….” என கட்டிலை பார்க்க முனீஸ்வரன் இல்லை.

“எங்க அவரு?…” வசீகரன் கேட்க,

“நாம பேசிட்டிருக்கும் போது தான்  துண்டை காணோம் துணிய காணோம்னு ஓட்டமெடுத்தார். பார்க்கலையா?…” விஷ்வா கேட்க பிடித்து நிறுத்தியிருந்த சூர்யாவை பொத்தென்று கட்டிலில் போட்ட வசீகரன் அவனின் மீதேறி மொத்த ஆரம்பித்தான்.

“குடிக்காதன்னு சொன்னா கேட்டியா கேட்டியா?…” என்று அடிக்க,

“எங்கடா செல்லத்த? டேய் தூக்கிட்டு வாங்கடா என் செல்லத்த…” என இன்னுமின்னும் உளறி கொட்ட விஷ்வாவும் சந்தியாவும் ரேவதியும் அடக்கமாட்டாமல் சிரித்தனர்.

“எல்லாம் உன் புருஷன் பண்ணின வேலை. சும்மா இருந்தவனை ஆசைகாமிச்சுட்டான்…” புகழ் வேறு ரேவதியிடம் போட்டுக்கொடுக்க,

“நாளைக்கு இருக்குது அவங்களுக்கு….” என ரேவதி சூளுரைத்துக்கொண்டாள்.

“என்ன மனுஷன்யா நீ?…” என்று அனு அவனை அடிக்க அடிக்க,

“பாமா உன் மீச எங்க?…” என்றுவேறு கேட்டு இன்னும் அடிகளை வாங்கிக்கொண்டான்.

“தியா போய் தூங்குங்க. காலையில பேசிக்கலாம். அனுவை கூட்டிட்டு போங்க. ரேவதி, உன் சண்டையை வீட்ல வச்சுக்கோ. இங்க வச்சு பிரபுவை எதுவும் பேசக்கூடாது…” அண்ணனாய் புவன் அறிவுரை சொல்ல கோபத்துடன் ரேவதி அவனை முறைத்துவிட்டு சென்றாள்.

“நீங்க போங்க, நான் இங்கயே இருக்கேன்…” அனு கடுப்புடன் சொல்ல,

“ஹேய் அனு, அவன் என்ன வேணும்னா பண்ணினான். இதுக்கெல்லாம் கண்ணு கலங்கிட்டு. போடா…” வசீகரன் சொல்ல,

“அனு இப்ப நீ இருந்தாலும் அவனை என்ன சொல்ல முடியும்? நாளைக்கு வச்சு செய்வோம். இப்ப போய் தூங்கு…” விஷ்வா சொல்ல,

“ஆமா அனு, நீ இங்கயே இருந்து நாங்க போய்ட்டா அவன் பாட்டுக்கு எழுந்து செல்லமேன்னு செல்லத்தை தேடி போய் கிஸ் பண்ணினாலும் பண்ணிடுவான். உன்னால சமாளிக்க முடியுமா?…” புகழ் கலாய்க்க,

“டேய் சும்மா இருக்க மாட்டியா?…” என அதட்டிய புவன்,

“தியா அனுவை கூட்டிட்டு போ…” என சொல்லி,

“இதெல்லாம் பெருசா எடுத்துக்காத அனு. இதை நினச்சுட்டு பீல் பண்ணிட்டு இருக்க கூடாது…” என்று புவன் சொல்ல அமைதியாக தலையசைத்துவிட்டு செல்லவும் கதவை அடைத்துவிட்டு திரும்ப மீண்டும் சூர்யா செல்லமே என்றதும் வெடித்து சிரித்தனர்.

“ஆனா இவன் இந்த பாடு படுத்த கூடாதுடா அந்த மனுஷனை…” என விஷ்வா சொல்ல,

“நாளைக்கு பாரு இவனை பார்த்து அவர் ஓடறதும், அவரை பார்த்து இவன் ஒளியறதும் ஊடால பிரபு மண்டையை பொளக்க இவன் தேடறதும் செம்மையா போக போகுது…” வசீகரன் சொல்ல அனைவருமே விழுந்து புரண்டு சிரித்தனர்.

அடுத்து எங்கே தூங்க? பேச்சுக்கள் தான். பொட்டு தூக்கம் இவர்களின் கண்களை அண்டவில்லை. சூர்யா வேறு அவ்வப்போது உறக்கத்தில் புலம்ப கேட்டு கேட்டு அதை வைத்து பேசி சிரித்தனர்.

மறுநாள் காலை விடிந்த பின்புதான் முகூர்த்தம் என்பதால் சற்று நிதானமாகவே கிளம்பினாலும் திருமண மண்டபத்தில் பரபரப்பிற்கு குறைவில்லை.

காலை எழுந்ததுமே அனு சூர்யாவை தேடி வந்துவிட மற்றவர்கள் சத்தமின்றி கிளம்பிவிட்டனர். கோபத்தில் அவனை அடித்து எழுப்ப தலையை பிடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தவன்,

“தலையெல்லாம் வலி தாங்கமுடியல அனு…” என்று முணங்க முதல் நாள் கோபம் மொத்தத்தையும் அவன் மீது இறக்கியவள் நடந்ததை சொல்ல சொல்ல சூர்யாவின் இதயத்தினுள் குண்டு பாய்ந்ததை போல இருந்தது.

“ஹேய் சத்தியமா எனக்கு தெரியாது அனு. அந்த பிரபு தான் குடிக்க சொன்னான்…” என்று மன்றாட,

“உங்களுக்கு அறிவில்லையா என்ன? குடின்னா குடிச்சிடுவீங்களா? நீங்க என்ன பாப்பாவா?. கருமம். அவர் என்ன நினைப்பார் உங்களை பத்தி. இதுல எல்லாருமே நீங்க விழுந்து கட்டி புரண்டதை வேற பார்த்துட்டு போனாங்க. என் மானமே போச்சு…”

“நான் கூட அனுவுக்கு எப்ப மீசை முளைச்சதுன்னு யோசிச்சேன் தெரியுமா?…” என சமாதானம் செய்ய பார்க்க,

“கொலையே விழும். எனக்கும் அவருக்கும் வித்யாசம் தெரியாதா என்ன? அதுவும் வார்த்தைக்கு வார்த்தை முனீஸ் முனீஸ்ன்னு அப்படி கொஞ்சறீங்க. அவர் வயசென்ன உங்க வயசென்ன?…”

“அனு சத்தியமா ஸாரி சொல்றேன். இனி தொடவேமாட்டேன்…” அவளின் பின்னேயே சுற்ற, அவள் கிளம்பும் வரை சுற்றிக்கொண்டே இருந்தான்.

வசீகரன் வந்து கிளம்பி வா என்று சத்தம் போட்ட பின்பு தான் குளிக்கவே சென்றான். அங்கே ரேவதி வேறு பிரபுவை உண்டில்லை என்று ஆக்கிக்கொண்டிருந்தாள்.

அவனுக்கு அவளை சமாளிப்பதை விட சூர்யாவிடம் சிக்காமல் இருக்கவேண்டுமே என்னும் வேண்டுதல் மட்டுமே. அமளிதுமளியாக அனைவரும் ஒருவழியாய் கிளம்பி கீழே செல்ல கோவிலுக்கு செல்ல தயாராக நின்றனர்.

கோவிலில் வைத்து திருமணம் முடிந்து மண்டபத்திற்கு அனைவரும் வந்து சேர வாழ்த்துபவர்கள் வரிசையில் நின்று பரிசுப்பொருட்களை கொடுத்து வாழ்த்த ஆரம்பித்தனர்.

“ஏன்டா இன்னைக்கு கூட தான் தாலிகட்டறதை உன்னால பார்க்க முடியலை. ஆனா கோவிலுக்கு வந்தியே. நான் அன்னைக்கு கூப்பிட்டப்ப மட்டும் வரலை…” என அம்பிகா வசீகரனின் காதை திருகிவிட்டு சென்றார்.

அவர் சென்றதும் சிரிப்புடன் சந்நிதியை பார்த்தான். அலைச்சலில் முகத்தில் அயர்வு தெரிய அதையும் மீறிய தாய்மையின் பூரிப்பு அவளின் முகத்தை மின்ன செய்தது. காலையில் அவன் வேறு அவளை படுத்தி எடுத்துவிட்டான்.

அடர் சிகப்பு நிறத்தில் தங்க ஜரிகைகள் ஜொலிக்கும் பட்டுப்புடவையை கொடுத்து அவளை அதை கட்டியே ஆகவேண்டும் என்று படுத்தி எடுத்தான். அதற்கு மேட்சாக தானும் சட்டையும், வேஷ்டியும் உடுத்திக்கொண்டான்.

இப்பொழுதும் அந்த புடவையில் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். அதே இடத்தில் அமர்ந்து. மேடையில் நின்று சந்நிதி முறைக்கவும் காலை நீட்டி கைகளை பின்னந்தலையில் கட்டிகொண்டு அவளை பார்த்து அட்டகாசமாய் புன்னகைக்க அவனின் செய்கையில் இன்று மனதார அவனை ரசித்து பார்த்தாள்.

முதல் முறை அவளை கவர்ந்த அவனின் இந்த தோன்றம் இன்றும் படமாய் கண் முன் விரிய எந்த தடைகளும் இன்றி இருவரின் பார்வை ஒருவரை ஒருவர் தீண்டிக்கொண்டே தான் இருந்தது.

முதல்நாள் பேசியதை போல தான் நடந்தது. சூர்யாவை பார்த்த முனீஸ்வரன் அவனை முறைத்தாலும் அருகில் வரவே அஞ்சினார். இதில் பிரபு வேறு ரேவதி சொல்லியதில் இருந்து சூர்யாவின் கண்ணில் படாமல் தப்பித்துகொண்டிருந்தான்.

முனீஸ்வரனுக்கு மருமக்கள், மகள்கள் முன்பு அப்படி இருந்தது சங்கடமாக இருக்க ஒருவரையும் ஏறிட்டு பார்க்க முடியாது கோபத்தை காட்டவும் முடியாது சுற்றிகொண்டிருந்தார்.

இரண்டு மூன்று முறை மண்டபத்தில் பாட்டு போடுபவனிடம் போய் பிரச்சனை வேறு செய்து வர அவனோ கண்டுகொள்ளாமலே இருந்தான்.

ஹே எத்தன சந்தோசம் தெனமும் கொட்டுது உன் மேல

நீ மனச வச்சுப்புட்டா ரசிக்க முடியும் உன்னால

என்று பாடல் அலற வேகமாய் அங்கே சென்றவர் அவனின் பின்னந்தலையில் கோபமாய் அடித்துவிட,

“எதுக்கு ஸார் அடிச்சீங்க?…” என்று கண்ணீருடன் அவன் கேட்டான். முனீஸ்வரன் வந்து அதட்டி செல்லும் பொழுதெல்லாம் ஏதோ பேசுகிறார் என்று விட்டுவிட்டவன் திடீரென்று அடிக்கவும் பயந்துபோனான். கோவம் வேறு.

அந்த பெரிய டைனிங் ஹாலின் மறுபுறம் ஒரு இடத்தில் இருக்க சாப்பிட்டு கையை கழுவிவிட்டு அந்த வழியில் தான் அனைவரும் கடந்து செல்வர். காலை உணவு முடிந்து வெகு நேரம் ஆகிவிட்டதால் ஒரு சிலர் மட்டுமே வந்து சென்றுகொண்டிருந்தனர். அதனால் முனீஸ்வரன் அடித்தது யாருக்கும் தெரியவில்லை.

“எதுக்கா? நா ஒருத்தன் அப்ப இருந்து சொல்லிட்டே இருக்கேன். நீ கொஞ்சமும் மதிக்கமாட்டிக்க. நான் யாரு தெரியுமா?…” என்று அவனிடம் எகிற,

“என்கிட்டே சொல்லுங்களேன் நீங்க யாருன்னு?…” என அவரின் சட்டென முன்னே வந்த பெண்ணை பார்த்து முறைத்தவர்,

“யாரும்மா நீ? எதுக்கு உன்கிட்ட சொல்லனும்? இவன்கிட்ட நேத்துல இருந்து படிச்சு படிச்சு சொல்லுதேன். குடும்பமா இருக்காங்க. ஒழுங்கா பாட்ட போடுன்னு. ஒரு மாதிரியான பாட்டா போடறான் இவன்…” என அவளிடமும் எகிற,

“இப்ப போட்ட பாட்டு அத்தனை மோசமில்லையே. உங்களுக்கு தான் தப்பா தெரியுது. அதுக்குன்னு அடிப்பீங்களோ?…” என்றாள் அவள்.

“இந்தாம்மா இந்த பேச்செல்லாம் என்கிட்டே வச்சுக்காத. நான் யாருன்னு தெரியுமா?. அத விடு, இத நீ ஏன் கேக்குறவ? வந்தமா கல்யாணத்துல சாப்புட்டோமா போனோமான்னு இருக்கனும்…” என்றதும் அவளுக்கு வந்ததே கோபம்.

“நான் யாரா இருந்தா உங்களுக்கென்ன? எனக்கு கூட தான் நீங்க யாருன்னு தெரியாது. உங்க பேக்ரவுண்ட் எல்லாம் தெரிஞ்சு தான் வந்து பேசனுமா என்ன? போயா. யாரா இருந்தாலும் இதான் பேசுவேன். நீங்க அடிச்சதுக்கு கேட்க தான் செய்வேன்…”

“போயாவா? உன்ன. அப்ப நானும் அடிக்க தான செய்வேன். இவனுக்கு என்ன வேலை? பாட்டை போடுன்னா போடனும். அமத்துனா அமத்தனும். நா மாப்பிள்ளை சித்தப்பா. என் பேச்சே எடுபடமாட்டிக்கு…”

“அப்பனா உங்க மகனுக்கு உங்க வீட்டுக்குள்ளயே கல்யாணத்தை வச்சிருக்கனும். உங்கள யாரு மண்டபத்த கூட்டி எல்லாருக்கும் சொல்லி வைக்க சொன்னா? மாப்பிள்ளை சித்தப்பாவாம் சித்தப்பா? சரியான சொத்தப்பா. உன் வீட்டு விசேசத்துக்கு வந்த எனக்கே மரியாதை இல்லை. கல்யாணமா நடத்தறீங்க?. இதை நான் போய் கேட்கட்டா?…” என்று அவளும் எகிற,

“என்ன பிரச்சனை பண்ணனும்னே வந்திருக்கியா?…” என்று அவர் மீசையை முறுக்க,

“அஷ்மி இங்க என்ன பன்ற?…” என அவளின் பின்னே வந்து நின்றான் பிரசாத்.

“இவர் இந்த பையனை அடிச்சுட்டார். ஏன்னு கேட்டா பாட்டு போட்டானாம். அதான் போட்டா என்னன்னு கேட்டதுக்கு என்கிட்டே முறைக்கிறார்…”

“என்ன முறைச்சாரா? உன்னை எதுவும் பேசிட்டாரா?…” என்று பிரசாத் வேஷ்டியை மடித்துக்கட்ட முனீஸ்வரனுக்கு என்னடா இது? என்றானது.

“டேய் தம்பி, நீ போடுடா. என்ன செய்யறார்ன்னு பார்ப்போம்…” என பிரசாத் அடிவாங்கிய பையனை பார்த்து சொல்லி முனீஸ்வரனை முறைக்க,

என்னப்பார் நா கையத்தட்ட உண்டாச்சு உலகம்  

ஹே நா சொன்னபடி நிக்காம சுழலும்

என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும் உள்ளார எப்போதும் உல்லாலா உல்லால

என்று மீண்டும் அலற ஆரம்பிக்க பிரசாத் “இப்பொழுது என்ன செய்வாய்?” என்பதை போல பார்த்து நிற்க அஷ்மி,

“கலக்கறீங்க ஹஸ்…” என்று அவனுக்கு ஹைபை கொடுத்தாள்.  அதில் கடுப்பாகி முனீஸ்வரன் வாயை திறப்பதற்கு முன்,

“ஹாய் அஷ்மிதா, எப்போ வந்தீங்க?…” என கேட்டுக்கொண்டே வந்து நின்றான் வசீகரன். இவனா? என முனீஸ்வரனுக்கு மேலும் பீதியாக அவ்விடத்தை விட்டு வேகமாய் நகர்ந்துவிட்டார்.

Advertisement