Advertisement

தீண்டல் – 33

                    ஹாஸ்பிட்டலில் அனைவரும் வெளியில் அமர்ந்திருக்க முனீஸ்வரன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சத்தமில்லாமல் அழுதபடி அமர்ந்திருந்தார் பார்கவி. அவருக்கு துணையாக அம்பிகா.

“சும்மா அழுதுட்டே இருந்தா உங்க உடம்புக்கு ஏதாவதாகிடாம அண்ணி. அண்ணனுக்கு தான் சரியாகிடுச்சே. காய்ச்சலும் குறைஞ்சிருச்சு. இன்னும் கொஞ்சம் நேரத்துல கண்ணு முழிச்சுடுவார்…” அம்பிகா அவரை தேற்ற இன்னுமே கண்ணீர் கொட்டியது.

அவரால் தாங்கமுடியவில்லை. என்னதான் தங்களுக்குள் அப்படி அன்பு பொங்கிவிடவில்லை என்றாலும் மனைவியாய் கணவருக்காக உருகினார் பார்கவி.

வெளியில் சந்நிதி வசீகரனின் தோள் சாய்ந்து அவனிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.

“அப்பாகிட்ட ஒரு வார்த்தை பேசிருக்கனுமோ? என்னால தான் இப்படி ஆகிட்டாரா?…” என அவள் புலம்ப புலம்ப புகழ் வசீகரனையே துளைக்கும் பார்வை பார்க்க,

“சொன்னேனே கேட்டியா?” என்னும் அர்த்தம் கொடுத்த பார்வையில்,

“இவன் ஒருத்தன் என்னை முறைச்சே வருஷமெல்லாம் ஆடி ஆட வச்சுடுவான் போலையே?” என்று பதிலுக்கு அவனை முறைத்துக்கொண்டிருந்தான்.

“அதான் வந்துட்டோமே. சரியாகிட்டார். எழுந்திடுவார்…” என்று ஏகப்பட்ட சமாதானம் வாய் ஓயாமல் சொல்லிகொண்டே இருந்தான்.

“அவளே அழுது முடிச்சுட்டா, நீ ஏன் இன்னும் அவளை சமாதானம் செஞ்சுட்டே இருக்க? போதுமப்பா போதும்…” என்று புகழே கடுப்பாகி சொல்ல,

“உனக்கேன்டா?…” என கணவனும், மனைவியுமாய் அவனிடம் சண்டைக்கு பாய்ந்தனர்.

“அம்மாடி பயந்துட்டேன். அட போங்கைய்யா…” என வெறுத்துப்போனான்.

அதற்குள் குகன் வந்துவிட நீதிமாணிக்கத்திடம் பேசிக்கொண்டிருந்தார். கோமதியும் அபிராமியும் வீட்டிற்கு சென்று அனைவருக்கும் சமைத்துவிட்டு பார்கவிக்கும், முனீஸ்வரனுக்கும் மட்டும் எடுத்துவந்தார்.

மற்றவர்களை வீட்டிற்கு சென்று சாப்பிட சொல்லிவிட அனைவருமே முனீஸ்வரன் கண் விழித்த பின்னர் செல்கிறோம் என்றுவிட்டனர்.

மதியம் மூன்றுமணிக்கு மேல் கண்விழித்தவர் இருக்குமிடத்தை சுற்றி பார்வையிட்டு பார்கவியை தேடினார். அதை புரிந்தவராக,

“உங்களைத்தான் அண்ணன் தேடறார் போல…” என்ற அம்பிகா பார்கவியை முனீஸ்வரன் பக்கத்தில் அழைத்து செல்ல அதற்குள் வெளியில் நின்ற அனைவரும் உள்ளே வந்துவிட்டனர்.

மனைவியையும் சொந்தங்களையும் பார்த்தவர் கண்கள் கலங்கிப்போய்விட்டது. கண்ணீர் லேசாய் வடிய அழுகிறோம் என்றே அவருக்கு புரியவில்லை.

“பொண்ணு வீட்டுல சீராடி முடிஞ்சிருச்சா? உடம்புக்கு முடியலனாதான் வருவியோ? இந்த காச்சல் சனியன் இப்ப வந்ததுக்கு முன்னவே வந்துருந்தா நீயும் வந்திருப்பல. என்ன கருமமோ அது கூட வரமாட்டிக்கு. இந்தா கண்ணு மசமசன்னு வருது. என்னன்னு துடைச்சு விடு. எல்லாத்தையும் சொல்லி சொல்லித்தான் செய்வியோ?…”

குரல் கரகரக்க அதட்டலான அவரின் வழக்கமான முரட்டு பேச்சில் பார்கவிக்கு பாவமாகிபோனது. யாருமில்லாமல் அவர் தன்னை எதிர்பார்த்திருக்கிறார் என்னும் நினைப்பே அவருக்கு இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்துவிட்டதை போல மகிழ்ந்துபோனார்.

தன் சேலைத்தலைப்பால் அவரின் கண்ணீரை துடைக்க பார்த்திருந்தவர்களின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.

“பார்ரா உன் சித்தப்பா பர்பாமென்ஸ? மனுஷன் பின்றாரே? ஆனாலும் இந்த காய்ச்சலுக்கெல்லாம் இத்தனை அலப்பறை தேவையில்லை…” வசீகரன் கேலி பேச,

“இப்ப உனக்கு பொறுக்கலை போல? இதெல்லாம் முரட்டு மனசுடா. உனக்கு புரியாது…” புகழும் கெத்தாய் சொல்ல,

“இப்ப உடம்புக்கு பரவாயில்லைங்களா அண்ணே?…” என அம்பிகா வரவும் முனீஸ்வரனுக்கு அவரின் முகத்தை பார்த்து பேசவே முடியவில்லை.

“காலையில உங்களுக்கு சப்ரைஸ் குடுக்கலாமேனு குடும்பமா கிளம்பி வந்தோம். பார்த்தா நீங்க முடியாம இருக்கீங்க. மனசே சங்கடப்பட்டு போச்சு. இப்ப நல்லா இருக்கீங்க. அது போதும்…”  என்றவரின் கள்ளம் கபடமற்ற பேச்சில் கரைந்துபோனார் முனீஸ்வரன்.

“நல்லா இருக்கீங்களா?…” குகனும் வந்து விசாரிக்க தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக்கொண்டது.

“ஒன்னும் கவலைப்படாதீங்க, நாங்க எல்லாருகே இருக்கோம். தைரியமா இருங்க. இன்னைக்கு ஒரு நாள். நாளைக்கே வீட்டுக்கு போய்டலாம்…” குகன் சொல்ல அவரின் கையை பிடித்துக்கொண்டார் முனீஸ்வரன்.

ஆயிரம் மன்னிப்பும், வார்த்தைகளும் உணர்த்தாததை அந்த தொடுகையும், நடுக்கும் விரல்களும் உணர்த்தியது. அவரின் கை மேல் தன் கையை வைத்து தட்டிகொடுத்த குகனுக்குமே மனதில் இருந்த ஏதோ ஓன்று விலகியதை போல இலகுவாகியது.

முனீஸ்வரனின் பார்வை இப்பொழுது இவர்களை தாண்டி சந்நிதியிடம் சென்று நிற்க,

“சிறுசு…” என்ற அழைப்பிலேயே அழுதுவிட்டாள் அவள்.

“இந்தா என்னத்துக்கு கரையிற? ஏ கழுத, நல்லா தான இருக்கேன். அழாத…” என அதட்டி பேசியவர் வசீகரனை பார்க்க அவனும் தன் உடல்நலனை விசாரிக்க போகிறான் என்று நினைத்திருக்க,

“என்ன மாமா ஆடில பாதி நாள் போகலை, அதுக்குள்ளே ஆளே அடையாளம் தெரியாத மாதிரி ஆகிட்டீங்க?. நான் கூட என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னு என்ஜாய் பண்ணுவீங்கன்னு நினைச்சேன். அந்த காலத்துல ஏழு மலை தாண்டி தான் உயிரை வச்சிருப்பாங்கன்னு பார்த்தா நீங்க அத்தைக்குள்ள வச்சிருக்கீங்கன்னு இப்ப தான் எனக்கு தெரியும்…” என்று கிண்டல் பேச அனைவருக்குமே ஒரு நிமிடம் திகைப்பு.

கோபத்தில் பேசுகிறானோ என்று பார்த்தால் அவனின் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. அடுத்து எங்கே முனீஸ்வரன் கோபித்துக்கொள்வாரோ என்று பார்த்தால் அவரின் முகம் பரிதாபமாக இருந்தது.

அவர் கவலை அவருக்கு. எங்கே மீண்டும் கோபப்பட்டு பேசி மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டால் என்ன செய்வதென்பது தான் அவரின் தலையாய கவலையாய் இருக்க கம்மென்று இருந்துகொண்டார்.

“சும்மா இரேன்டா…” புகழ் அவனின் காதை கடிக்க முனீஸ்வரன் முகம் மாறாமல் இருக்க பட்ட பாட்டில் அனைவருக்குமே புன்னகை.

விஷ்வாவும் அதே நேரம் கால் செய்துவிட அனைவரும் பேசி முடித்த பின்பு தான் முனீஸ்வரனுக்கு மொபைலை கொடுத்தனர். திரையில் சந்தியாவின் கண்ணீர் சுமந்த முகம் அவரை அசைத்தது. பேசாமல் விசும்பலுடன் இருக்க,

“சரி சரி கண்ணை துடை. நல்லா தான் இருக்கேன்…” என்றார் பொறுக்கமுடியாமல்.

“நானே இன்னைக்கு ஈவ்னிங் கால் பண்ணலாம்னு இருந்தேன். காலையில தான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தோம்…” என சந்தியா சொல்ல பார்கவி வாங்கிகொண்டவர்,

“என்னம்மா யாருக்கும் எதுவும் முடியலையா?…” என்றதும் சந்தியாவின் முகத்தில் வெட்கபூக்கள். அதை கண்டதும் தாயின் மனம் புரிந்துகொண்டது.

“நிஜமாவா தியா?…” என சந்தோஷத்துடன் கேட்க,

“அவ வாயை திறக்கமாட்டா. நானே சொல்றேன் அத்தை. இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போய்ட்டு கன்பார்ம் பண்ணிட்டு இப்போ தான் வீட்டுக்கு வந்தோம். ட்ராவல் பன்றது இப்போ நல்லதில்லைன்னு சொல்லிட்டாங்க. அதான் வரலை…” என விஷ்வா சொல்ல அனைவருமே மாற்றி மாற்றி அவர்களுக்கு வாழ்த்து சொல்ல முனீஸ்வரன் கடைசியாக,

“பார்த்து கவனமா இரு. கீழே பார்த்து நட. ஒழுங்கா சாப்பிட்டு உடம்பை பார்த்துக்க…” என்று அவரின் கட்டளை குரலில் சொல்ல சொல்ல அவரின் முகத்தில் தெரிந்த பாவனைகள் பார்த்தவர்களை ஆச்சர்யப்படுத்தியது.

அத்தனை பரவசம், தாத்தாவாகிவிட்ட மிடுக்கு. சட்டென்று உடல் சரியாகிவிட்டது போல ஒரு புத்துணர்ச்சி. முனீஸ்வரன் புதுவிதமாய் தெரிந்தார்.  எப்பொழுதும் பேசினாலும் அவரிடம் பெரிதாய் மாற்றமில்லை என்றாலும் உணர்கிறார் என்ற ஒன்றே போதுமானதாக இருந்தது மற்றவர்களுக்கு.

ஒன்றரை வருடத்திற்கு பின் ….

பாண்டிச்சேரியில் அதே திருமணமண்டபம். ரேவதி பிரபு திருமணம் நடந்த அதே மண்டபம்.

புகழுக்கும் தர்ஷினிக்கும் திருமணம். தர்ஷினி பிரபுவின் சொந்தத்தில் ஒரு பெண். புகழுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று அம்பிகா தான் முன்னின்று இதை பேசி முடித்தார்.

அப்பொழுது தான் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. மறுநாள் திருமணம். சொந்தங்கள் மொத்தமும் குழுமியிருக்க அத்தனை கொண்டாட்டமாய் இருந்தது அவ்விடமே.

ஒவ்வொரு இடத்தையும் ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான் வசீகரன். இங்கு வைத்துதான் சந்நிதியை பார்த்தான். இங்கே தான் மனதை தொலைத்தான். இங்கு தான் அவனின் வாழ்க்கையின் முக்கிய பயணம் ஆரம்பமாகியது.

நினைத்து பார்க்க இப்பொழுது நடந்ததை போல இருந்தாலும் அதற்குள் இத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. எத்தனை பிரச்சனைகள், சண்டைகள் சங்கடங்கள்.

அன்று மட்டும் தான் இங்கே வராமலே போயிருந்தால்? நினைக்கவும் விரும்பவில்லை அப்படி ஒரு தருணத்தை. நிதி இல்லாத ஒரு வாழ்க்கை தனக்கு சுகித்திருக்குமா என்றால் நிச்சயம் இல்லை.

அனைத்தும் கடந்து இதோ அவனவள் அவனின் உயிர் சுமந்து இங்குமங்கும் தேவதையென நடமாடிக்கொண்டிருக்கிறாள். அவனை தேடி வந்துகொண்டிருந்தாள்.

“இந்தா சிறுசு, இங்கயும் அங்கயும் ஓடிட்டு. ஒரு இடத்துல இருக்கமாட்டியா? உன்னை முன்னாடி வரிசையில தான உட்கார சொன்னேன். இங்க என்ன பன்ற?…” என சந்நிதியை நிறுத்தி கேள்விகேட்டுக்கொண்டிருக்க,

“டாக்டர் நடந்தா நல்லதுன்னு சொல்லியிருக்கார். இவ தான் வீட்டுல வாக்கிங் கூட போறதில்லை. இங்கையாச்சும் நடக்கட்டும். நீங்க என்ன ஒண்ணுமே செய்யக்கூடாதுன்னு சொல்றீங்க?…” என்று வசீகரன் வந்து நிற்க,

“வாக்கிங் போக சொன்னா போகமாட்டியா சிறுசு? அவர் பேச்சை கேட்டு நடக்கனும்னு எத்தனவாட்டி சொல்ல உனக்கு?. ஒருத்தரும் சொன்ன பேச்சை கேட்கிறதில்லை…” என்று அதற்கும் கத்திவிட்டு நகர,

“உன் அப்பா மாறவேமாட்டார்…” என வசீகரன் சந்நிதியிடம் சிடுசிடுக்க,

“நீங்க மட்டும் என்னவாம்? அவர் எங்கியாச்சு குரலை உசத்திட்டா உடனே வந்து நியாயம்டா தர்மம்டான்னு ஆரம்பிச்சிடவேண்டியது…”

“அப்ப நான் மாறனும்னு சொல்வியா?…”

“அவரும் மாறவேண்டாம், நீங்களும் மாறவேண்டாம். ரெண்டு பேருமே இப்படியே இருங்க சாமி. என்னைவிடுங்க…” என நகர போக,

“நில்லு நிதி…” என்றவனின் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.

“ஹ்ம்ம் அப்பறம், மேடம் முகம் மின்னுதே? என்ன விஷயம்?…” என சரசமாக கேட்க அவன் கேட்க வருவதை புரிந்தவள்,

“இந்த ஸார் முகம் கூட தான் பெட்ரோமாக்ஸ் லைட் மாதிரி மின்னுது. இங்க என்ன விஷயமோ அதே விஷயம் தான்…” அவனுடன் இழைந்துகொண்டு அவளும் சொல்ல இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்வையில் கவர்ந்துகொள்ள,

“என் அம்மா சொன்னாங்க, என் பேர்ல தான் வசி இருக்கு, என்னால ஒருத்தரையும் வசியம் செய்ய முடியாதுன்னு. உண்மையாகிடுச்சோ? இப்ப இந்த பொண்ணுக்கிட்ட தோத்துட்டேனோ?…” அவளை அணைத்துப்பிடித்து கேட்க,

“பார்த்தா எப்படி தெரியுது?…” அவனின் பிடியிலிருந்து விலக முயன்றுகொண்டே அவளும் பேச,

“இந்த பொண்ணுக்கிட்ட நான் தான் வசியப்பட்டு நிக்கறேன்னு தோணுது. பார்த்த அன்னைக்கே கவர் பன்றேன் பன்றேன்னு நான் தான் மொத்தமா கவராகி நிக்கறேன். இப்போ என் உலகத்துல எங்க சுத்தியும் நிதி செய்த மாயம். எங்கும் இந்த சந்நிதி மயம்…” என்று பிதற்ற,

“உங்களுக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சு. இங்க வந்ததுல இருந்தே இப்படித்தான் ஆகிட்டீங்க…”

“ஹ்ம்ம், நிதி…” என்றவனின் கிறங்கிய குரலில் அவள் தான் அரண்டுவிட்டாள்.

“அடேய் அடேய்களா இதெல்லாம் நல்லா இல்ல பார்த்துக்கோ. உங்களை ஆளை காணோமேன்னு மண்டபம் முழுக்க தேடிட்டு வந்தா இங்க என்னடா பன்றீங்க?…”

அப்பொழுதான் பார்க்கிங்கில் நிற்பதை உணர்ந்தனர் இருவருமே. அசடுவழிய வசீகரன் புன்னகைக்க வெட்கத்துடன் நிதி அவனின் பின்னே மறைந்தாள்.

“இப்பலாம் இந்த புள்ளைய ரொம்ப வெட்கப்படுத்தறடா…” என்ற விஷ்வா,

“உன்னை உன் அப்பா புள்ளைய காணோம் காணோம்னு தேடவிட்டிருக்காரு. மேடையில நின்ன புகழ் கூட உன்னை காணோம்னு தேடி இறங்கிட்டான். நீ போம்மா முதல்ல…” என்றதும்,

“இப்ப அவர்ட்ட பேசிட்டு தானே இவளை இங்க கூட்டிட்டு வந்தேன். அதுக்குள்ளே மனுஷனுக்கு பொறுக்கலையா?…”என வசீகரன் எகிற,

“ஐயோ பேசாம இருங்களேன். ஒரு இடத்துலையும் விடறதில்லை உங்க சண்டையை. நான் போய் பார்க்கறேன்…” என்று நிதி கிளம்பிவிட வசீகரனை முறைத்தான் விஷ்வா.

“நிஜமா தான்டா. இப்ப அவர்ட்ட சண்டை போட்டு அனுப்பிட்டு தான் நிதியோட பேசிட்டே இங்க வந்தேன்…” என சொல்லிக்கொண்டே நிதியின் பின்னால் விஷ்வாவுடன் நடந்து மேடைக்கருகில் சென்றான்.

அங்கே நிதியிடம் அனைவரும் எங்கே சென்றாய் என்பதை போல கேள்விகள் எழுப்ப பார்கவியிடம் எதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

“நீ உட்காருடா…” என விஷ்வாவுடன் அங்கே அமர்ந்துகொண்டவன் மேடையில் நின்ற நிதியை பார்வையிட்டான்.

“விஷ்வா…”

“ம்ம் சொல்லு…”

“இங்க தான்டா அவளை பார்த்தேன். பர்ஸ்ட் டைம் நான் பார்த்தப்ப எப்படி இருந்தா தெரியுமா?. விஷ்வா கேட்கறியா?…”

“அடேய் அடேய் இங்க வந்ததுல இருந்து இத்தோட எத்தனைதடவை தான் சொல்லுவா? என் காதுக்கு வாயிருந்தாலும் அழுதுடும்…” என்று அவன் அழுவதை போல சொல்ல சிரித்துக்கொண்டான் வசீகரன்.

பார்வை மொத்தமும் அவளிடமே. சந்நிதியும் அங்கே இருந்து இவனின் அலம்பலில் சிரிப்பும் முறைப்புமாய் சிவந்து நின்றாள். அவளுக்கும் முதல்சந்திப்பின் நினைவுகள் தான்.

“இதுக்குதான் சொன்னேன் இவனுங்க அக்கபோரு தாங்காது, காலையில போகலாம்னு. கேட்டாளா? கன் வேற எடுத்துட்டு வரலை…”

“வந்திருந்தா மட்டும்? போ போ போய் உன் பிள்ளைக்கு டயப்பர் மாத்து. சீரியஸா சைட் அடிக்கும் போது சிரிப்பு காட்டிட்டு. கன்னாம் கன்? நாங்கல்லாம் கண்ணுலையே கன் வச்சிருக்கறவங்க…”

“என் நேரம்டா…” என தலையிலடித்துக்கொண்டான் விஷ்வா. வசீகரன் சொல்லிய நேரமோ என்னவோ சந்தியா அவளின் குழந்தையுடன் வந்துவிட்டாள்.

“என்னங்க மாடில போய் இவனுக்கு டயப்பர் சேஞ்ச் பண்ணிட்டு வாங்களேன். அதுக்குள்ளே நான் போய் சாப்பிட்டு வந்துடறேன்…” என்றதும்,

“தியா…” என்று விழிபிதுங்க பார்த்த விஷ்வாவை கண்டு வயிற்ரை பிடித்துக்கொண்டு வசீகரன் சிரிக்க,

“என்னடா ஒரே கலகலப்பா இருக்கீங்க போல? எனக்கும் சொல்லுங்க…” என்று வந்தமர்ந்தான் சூர்யா. கொலைவெறியுடன் விஷ்வா பார்க்க,

“ஐயோ, இல்லையா? சும்மாவா?…” என்று அலார்ட் ஆக,

“வர நேரத்தை பாரு. ஏற்கனவே நீ இன்னும் வரலைன்னு புகழ் கோபமா இருந்தன. வந்ததும் இல்லாம பேச்சை பாரு. எங்கடா அனு?…” விஷ்வா காய,

“நாங்க அங்க போய் அட்டனன்ஸ் போட்டுட்டு தான் வந்திருக்கோம். அனு நிதியோட இருக்கா…”

“வரட்டும் அனுக்கிட்ட பேசிக்கறேன்…” அதற்கும் மிரட்ட,

“போலீஸ்க்கார், ஏதோ சொல்லமுடியாத அவஸ்தையில் இருக்கீங்கன்னு தெரியுது  போலீஸ்க்கார். புள்ளப்பூச்சி பொழைச்சு போகட்டும்ன்னு விட்டுடுங்க போலீஸ்க்கார். உங்க லா அன்ட் ஆடரை உங்க ஸ்டேஷனோட கழட்டிபோட்டுடு வந்துடுங்க…” என சரண்டர் ஆனவன்,

“ஏன்டா மண்டபத்துல சாருக்கு மட்டும் கஞ்சியா? டிபன் போடலை? பாரு விறைப்பையும் முறைப்பையும்…” என வசீகரனிடம் வாய்விட விஷ்வா பேசும் முன்,

“தல வாங்க தல…” என சூர்யாவின் பின்னால் இருந்து ஆர்ப்பாட்டமாய் தட்டினான் பிரபு.

“அய்யோ, இவனா?…” என எழுந்து போக பார்க்க அவனின் பதட்டத்தில் வசீகரனும் விஷ்வாவும் சிரிக்க,

“இனி நீங்க எங்க போய் மாத்த போறீங்க? நானே ரூம்ல போய் மாத்திக்கறேன்…” என்று சந்தியா சலிப்புடன் நகர்ந்துவிட்டாள்.

“ஹேய் தியா தனியாவா போற? இரு வரேன்…” விஷ்வா எழுந்துவிட அனைவரும் ஓவென கத்த,

“அடங்குங்கடா. எல்லாரும் திரும்பி பார்க்கறாங்க…” விஷ்வாவின் கெஞ்சலில் மீண்டும் ஒரு ஓ போட,

“ஒன்னும் வேண்டாம், நான் ராதா சித்தியை கூட்டிட்டு போறேன்…” என சந்தியா ஓடியே போனாள்.

புகழும் புவனும் வந்துவிட அதன்பின் மண்டபத்தின் ஒருவரையும் கண்டுகொள்ளவில்லை அவர்கள். பிரபுவின் ப்ரெண்ட்ஸ், புகழின் ப்ரெண்ட்ஸ்  என்று சிலர் வந்திருக்க அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.

இளையவர்கள் பட்டாளம் வழக்கம் போல மாடிக்கு சென்றுவிட பேச்சிலர்ஸ் பார்ட்டி அல்லோலகப்பட்டது. சூர்யா அவர்கள் குடிப்பதை பார்ப்பதும் திரும்புவதுமாய் இருக்க வசீகரன் அவனை எச்சரித்துக்கொண்டே இருந்தான்.

நண்பர்களுடன் பிரபுவும் இணைந்துகொள்ள மற்றவர்கள் வெறும் குளிர்பானம் அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தனர்.

“தல எம்புட்டு தில்லு உங்களுக்கு, நீங்க பயந்து போகலாமா? அடிங்க தல…” என்று பிரபு உசுப்பேற்ற சூர்யாவும் முனீஸ்வரன் தான் உறங்க சென்றுவிட்டாரே என்று ஆசையில் ஒரு க்ளாஸை எடுத்து மடக் மடக்கென்று குடிக்க,

“கேட்கவே மாட்டல? என்னவோ போ…” என்று தலையில் அடித்து விட்டுவிட்டான் வசீகரன்.

“அதான் உன் மாமனார் தூங்க போய்ட்டாருல. என்னிய பொத்துனாக்குல கூட்டிட்டு போய் பத்தரமா என்னோட ரூம்ல விட்டுடுடா. நண்பேண்டா…” என்று அணைத்துக்கொண்டவன் மீண்டும் இரண்டு மடக்குகளை குடிக்க வசீகரனுக்கு சந்நிதி அழைத்துவிட்டாள்.

“ஓகே ப்ரெண்ட்ஸ், என்ஜாய் பண்ணுங்க. மேலிடம் அழைச்சாச்சு. குட்நைட். நாளைக்கு மார்னிங் பார்ப்போம்…” என வசீகரன் எழுந்துகொள்ள உடன் விஷ்வாவும் எழுந்துகொண்டான்.

“புவன் சீக்கிரம் முடிச்சுட்டு இவங்களை பத்திரமா ரூம்க்கு அனுப்பிடு. புகழ் சீக்கிரம் தூங்கு…” என்ற வசீகரன் சூர்யாவை பார்க்க,

“நான் அனுப்பிக்கறேன் அண்ணா, நீ போய் தூங்கு…” என பிரபு சொல்ல சந்தேகமாய் பார்த்தான் வசீகரன்.

“இதோ நானும் எழுந்துட்டேன். என் ரூம்க்கு ஆப்போஸிட் ரூம் தான் இவங்களோடது. நானே கூட்டிட்டு போறேன்…” என்றதும் சூர்யாவை எழுப்பினான்.

“உன்னை நம்ப முடியாது, நாங்களும் வரோம்…” என்ற வசீகரன் அவர்களுடன் சேர்ந்தே நடக்க சூர்யாவின் ரூம் வாசலில் சென்று விட்டவன் பிரபுவிடம் சொல்லிவிட்டு நடக்க சூர்யாவும் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டான்.

கட்டிலில் பெட்ஷீட்டை தலைவரை போற்றிக்கொண்டு உறங்கிக்கொண்டிருக்க,

“நல்லவேள இவ தூங்கிட்டா. இல்ல இன்னைக்கு தர்ம அடி தான்…” என சொல்லிக்கொண்டே சூர்யா சத்தமில்லாமல் வந்து படுத்தவன் நேரம் ஆக ஆக போதை தலைக்கேறியது.

நெருங்கி படுத்தவன் ஒரு காலை தூக்கி படுத்திருந்தவர் மேல் போட்டு பெட்ஷீட்டை விலக்கி பார்க்க அங்கே படுத்திருந்தது அனுபமா அல்ல. முனீஸ்வரன்.

“செல்லமே…” என்ற குளறல் குரலில் அழைக்க முனீஸ்வரன் ஆழ்ந்த உறக்கத்தில். அணைத்துக்கொண்டான் சூர்யா.

Advertisement