Advertisement

தீண்டல்  – 31(2)

புவனை கடையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளம்ப முனீஸ்வரன் கடைக்கே வந்துவிட்டார்.

“எங்கடா எல்லாரும்?…” என,

“சென்னை கிளம்பிட்டாங்க சித்தப்பா. பெரிய மாப்பிள்ளையும் தியாவும் வந்தாச்சு. அதான் சாப்பிட்டு அப்படியே கிளம்பிட்டாங்க. ராதா சித்தியும், சித்தப்பாவும் அவங்களோட சேர்ந்துப்பாங்க சென்னையில…” என தகவலாய் சொல்ல,

“ஏன்டா என்கிட்டே யாருமே சொல்லலை? எம்புட்டு நாளைக்குடா இது? நானும் பார்த்துக்கறேன்…” என்று வீம்பாய் சொல்லிவிட்டாலும் அனைவரும் அவரை தள்ளிவைத்தது நெஞ்சை அடைத்தது.

சண்டை போடவேனும் விஷ்வா வந்து பேசுவான் என எதிர்பார்த்து இருக்க அவனும் வராமல் போனது என்னவோ ஒரே நாளில் மிகவும் தளர்வாய் உணர்ந்தார்.

கோபமாய் பேசிவிட்டாலும் அவரின் முகத்தின் மாற்றமும், நடையின் தள்ளாட்டமும் அவருள்ளைத்தை படபோட்டு காண்பிக்க புவனுக்கு வருத்தமாய் இருந்தது.

வசீகரன் காரை முந்திக்கொண்டு சென்ற புகழ் ராதாவையும் கம்பனையும் ஏற்றிக்கொண்டு வசீகரன் இல்லத்திற்கு சென்றுவிட்டான். அங்கே அம்பிகா ஆரத்தி தட்டுடன் தயாராக இருக்க அவரை பார்த்ததுமே கண்கள் கலங்கி போனது சந்நிதிக்கு.

“அத்தை…” என்று அவரை கட்டிக்கொள்ள,  

“அத்தை இங்க தான் இருப்பேன். எப்ப வேணா கட்டிக்கோ. இப்ப உன் புருஷன் கூட நில்லு. ஆரத்தி எடுத்துக்கறேன்…” என்று அவர்களுக்கு சுற்றியவர் அடுத்து பம்பரமாய் தான் சுழன்றார்.

நீதிமாணிக்கம், கோமதி இருவரும் அம்பிகா, குகனிடம் மன்னிப்பை கேட்க பதறிவிட்டார்கள் அவர்கள். சகஜமான பேச்சுக்கள் தொடங்கி மதிய உணவு முடிந்து மூன்றுமணிவாக்கில் அவர்கள் கிளம்ப,

“வசீ, நானும் ராதா வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு, கூப்பிட்டுட்டே இருந்தாங்க. இன்னைக்கு அப்படியே போய்ட்டு வரேன். எல்லாரும் வந்திருக்காங்க. நீயும் நிதியும் ரெஸ்ட் எடுங்க…” என்றவர்,

“என்னங்க பார்த்துட்டே இருக்கீங்க? கிளம்புங்க…” என குகனையும் கிளப்பிக்கொண்டு அவர் செல்ல நிதியின் குடும்பத்தினருக்கு அத்தனை நிறைவு. இருவரும் மனம்விட்டு பேசட்டும் என அம்பிகா செய்தது அனைவருக்கும் பிடித்துப்போக,

“உன் மகன் அடிவாங்கறது உனக்கு பொறுக்காது. அதான என்னையும் கூட்டிட்டு கிளம்பிட்ட?…”

“அவங்க புருஷன் பொண்டாட்டி, அடிச்சுக்கட்டும். கூடிக்கட்டும். உங்களுக்கு என்ன? அவன் அடிதான் வாங்குவான்னு நீங்களா முடிவு பண்ணினா எப்புடி? வாழ்க்கைன்னா சிலபல அடிகள் விழத்தான் செய்யும். நம்ம வாழ்க்கையில விழாததா?…” என்று குகனின் வாயை அடைக்க,

“ஐயோ அபி, வாயே திறக்கலம்மா, போதும்…” என கப்பென வாயை மூடிக்கொண்டார்.

“ஆள் தி பெஸ்ட் டா…” என்று விஷ்வா வேறு கண்ணடிக்க சந்தியா நிதியிடம் எதுவோ சொல்லவர,

“போதும்மா, நீ என் வாழ்க்கையில ஏத்திவச்ச விளக்கே போதும். முடிஞ்சா உன் தீபத்தை உன் அப்பாம்மாக்கு ஏத்து. எதாச்சும் நல்லது நடக்கும்…” என கையெடுத்து கும்பிட,

“தொப்பி, தொப்பி…” என விஷ்வாவும் புகழும் ஹைபை கொடுத்துக்கொள்ள அனைவருக்குமே அந்த சூழல் ஒரு மலர்ந்த புன்னகையை தோற்றுவித்தது. அவர்கள் கிளம்பிவிட சட்டென்று ஒரு இறுக்கம் சூழ்ந்ததை போலானது அந்த வீடு.

சந்நிதியும் வசீகரனும் மட்டும். அவனிடம் ஆயிரம் சண்டை போடவேண்டுமென்று வார்த்தைகளை தேடி தேடி கோர்த்துவைத்திருந்தவள் ஏனோ சட்டென மௌனியாகி அவனோட தனித்திருக்க பிடிக்காமல் மேலே செல்ல திரும்பினாள்.

“நிதி…” என்றதும் படக்கென திரும்பியவள்,

“என்ன சொல்ல கூப்பிடறீங்க? உன் வீட்டு வாசல்ல வச்சு என்னை போயான்னுட்ட, வந்துட்டான்னு பேசிட்ட. என்ன மரியாதை இல்லாம பேச்சு? எனக்கு புடிக்காது இதானே? நீங்க பண்ணினதுக்கு இத்தோட விட்டேனேன்னு பார்த்துக்கோங்க…” என எகிற,

“ப்ளீஸ் நிதி, இன்னைக்கே இப்பயே இங்கயே முடிச்சுக்கலாம். இனி எந்த சண்டையும் வேண்டாம்…” ஓய்ந்துபோன குரலில் அவன் சொல்ல வார்த்தை வராமல் திண்டாடிக்கொண்டிருந்தவளுக்கு கோபம் கொப்பளிக்க,

“என்னவோ நான் தான் சண்டை போடற மாதிரி பேசறீங்க?…” என்று சிலிர்த்துக்கொண்டு நிற்க, “நானே சீண்டிட்டேனோ?” என விழிபிதுங்க பார்த்து நின்றான். கோபப்படுவாள் என எதிர்பார்த்தான் தான், ஆனாலும் இந்த வேகம்?

“அப்படி என்ன உங்களுக்கு கோவமும், ஈகோவும்? உங்களுக்கு இது எல்லாம் இருக்கலாம். ஆனா எனக்கு இருக்க கூடாதா?…”

“இப்ப நான் என்ன ஈகோ காண்பிச்சேன்?…”

“எதுல காண்பிக்கலை? விட்டுட்டு போனேன்னு கோவம். ஒரு மெசெஜ்க்கும் பதில் சொல்றதில்லை. பார்க்க மட்டும் செஞ்சீங்க. நான் மெசேஜ் போடலைன்னு கோவம். அப்போ ரிப்ளே பண்ணாத உங்க மேல எனக்கு கோபம் வந்தா அது நியாயமா இல்லையா உங்களுக்கு?. இப்போ நான் என் அப்பாவை பேசினதுல உங்களுக்கு நிறைஞ்சிடுச்சா?. போதுமா?…”

“வாட் யூ மீன் நிதி? நான் உனக்கு பதில் பேசினா என்னால உன்னை அங்க விட்டுட்டு இருக்க முடியாது. கூட்டிட்டு வரனும்னு தோணும். அது இன்னும் பிரச்சனையை குடுக்கும்…”

“இது ஒரு சாக்கு உங்களுக்கு. விட்டுட்டு இருக்க முடியாதவருக்கு தான் ஆடி முடியவும் என்னை கூட்டிட்டு வரனும்னு தோணலையோ?…”

“என்ன பேசற நீ? உன் அப்பா பேசின பேச்சுக்கு நான் எப்படி வரமுடியும்? அப்பாம்மாவை மிரட்டற மாதிரி பேசியிருக்கார். எனக்கு எப்படி இருக்கும்?…”

“எப்படி இருக்கும்? சொல்லுங்க எப்படி இருக்கும்னு நானும் தெரிஞ்சுக்கறேன். அம்மாவை பேசிட்டார், அப்பாவை பேசிட்டார், அப்ப நான் யாரு உங்களுக்கு? அப்பா இன்னும் அதிகமா பேசியிருந்தா என்னை அப்படியே விட்டிருப்பீங்க தானே? இதுக்குத்தான் என்னை கல்யாணம் செஞ்சீங்களா?…”

“இது விதண்டாவாதம் நிதி. அப்படி விட்டுடுவேனா நான்?…”

“அதான் இந்த இருபது நல விட்டுட்டு தான இருந்தீங்க? அது என்ன கணக்கு?. என் அப்பா அவ்வளவு பேசியும் விடாம என்னை காத்திருந்து கல்யாணம் செஞ்சவருக்கு இதை சமாளிக்க முடியலையான்னு எனக்கு எவ்வளவு தோணும்?…”

“ஹேய் நீ என்ன இப்படி பேசற? அப்ப உன் அப்பா என் பேரன்ட்ஸ்ட்ட என்ன பேசினாலும் கேட்டுட்டு உன் வீட்டு வாசல்படி வர சொல்றியா?…”

“இதுதான் இதுதான் தப்புன்னு சொல்றேன். அப்ப பொண்டாட்டின்ற நான் யாருன்னு எனக்கு கேள்வி வரதுல என்ன தப்பு இருக்கு? அம்மாப்பாவை பேசினவர் வீட்ல என் பொண்டாட்டி மட்டும் எதுக்கு இருக்கனும்னு உங்களுக்கு ஏன் தோணவே இல்லை?…” நிதி கேட்டுவிட அவளின் எண்ணப்போக்கு தெளிவாய் புலப்பட தலையில் அடித்துக்கொண்டான் அவன்.

“ஸாரி ஸாரிடா, நான் இதை இப்படி யோசிக்கவே இல்லை…”

“அதைத்தான் நானும் சொல்றேன். என்னை யார்மே யோசிக்கலை. என்னை எல்லாரும் அவங்கவங்களோட ட்ரம்ப் கார்டா தான் யூஸ் பண்ணியிருக்கீங்க. நீங்களும் சரி, என் அப்பாவும் சரி. உங்களுக்கு இன்னும் நான் முனீஸ்வரன் பொண்ணுதான். வசீகரன் வொய்ப் இல்லை. அது பதிஞ்சு போய் இருக்கு…”

“அப்படி இல்லை நிதி, எனக்கு கோபம், உனக்கு தெரியாமலா உன் அப்பா பேசியிருப்பார்? ஏன் என்கிட்டே சொல்லாம இருந்தன்னு கோவம். நான் கால் பன்றபோ சுவிட்ச் ஆஃப் உன் மொபைல். மறுநாள் அவ்வளவு ஆசையா உன்னை எதிர்பார்த்து அம்மாகிட்ட எல்லாம் ரெடியான்னு கேட்டேன். அவங்க முகமே சரியில்லை. என் அம்மாவை நான் அப்படி பார்த்ததேயில்லை நிதி…”

“என்னால இன்னும் எத்தனை கஷ்டங்கள் அவங்களுக்குன்னு நினைச்சு நினைச்சு துடிச்சுப்போய்ட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் உன்னோட போனுக்காக நான் வெய்ட் பண்ணுவேன். பேசனும்னு தோணும். ஆனாலும் என்கிட்டே இதை கூட சொல்லலைன்னா உன் மனசுல எனக்கு எந்த இடம்னு நினைச்சு…”

“இப்படி பேசி சமாளிக்க பார்க்காதீங்க. என் மனசுல உங்களுக்கு எந்த இடம்னு உங்களுக்கு சொல்லனும்னு இல்லை. அதை என் அப்பாக்கிட்ட சொல்லிட்டேன். இந்த நிமிஷம் அவருக்கு தெரிஞ்சிருக்கும்…”

“நான் சொன்னேன்ல கல்யாணம் ஆனா என்ன பிரச்சனைகள் வரும்னு சொன்னேன்ல. இதுக்குதான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன். இது இப்படியே முடியும்னு நினைக்கறீங்களா? சத்தியமா கிடையாது. எங்கப்பாவுக்கும், உங்களுக்கும் எப்பவு ஒத்துபோகாது…”

“உன்னோட எனக்கு ஒத்துப்போனா போதும், அவரோட போகனும்னு என்ன இருக்கு?…” சலிப்பாய் சொல்லுவது போல அவன் சொல்ல,

“சந்நிதின்னா வெறும் ஆளு இல்லை. வானத்துல இருந்து வந்து குதிச்சிடலை. முனீஸ்வரன் பார்கவி சந்தியான்னு எல்லாம் சேர்ந்தது தான் சந்நிதி. இவங்க எல்லாம் என் வாழ்க்கையில் எனக்கு முன்ன உறவுகளா எனக்கு வந்தவங்க. எந்த காலத்திலையும் இது மாறாது. நாளைக்கு என் பிள்ளையோ பேரனோ வந்தாலும் உங்க சொந்தங்களுக்கு குகனோட பேரன், பேரனோட பிள்ளைன்னு தான் அறிமுகமாகும். என் பிறந்தவீட்டுப்பக்கம் முனீஸ்வரன் பேரன், பேரனோட பிள்ளை இப்படித்தான். இது நம்மோட அடையாளம். மாத்திக்க முடியாது…”

“இப்ப யாரும் இதை மாத்திக்க சொல்லலை. எதுக்கு இவ்வளோ எக்ஸ்ப்ளைன்?…”

“அதான் சொன்னீங்களே? என்னால ஒவ்வொரு தடவையும் சண்டை போட முடியாது. அதுக்குத்தான் இப்பவே பேசறேன்…”

“என்னால எல்லா நேரத்திலையும் பொறுமையா இருக்க முடியாது நிதி…” ஆழமான ஒரு பெருமூச்சுடன் அவன் சொல்ல,

“உங்களை பொறுமையா இருக்க சொல்லலை. எங்கயும் என்னையும் விட்டுகுடுக்காம இருங்கன்னு தான் சொல்றேன். இப்படி இதுக்கு விட்டுட்டு இருந்தா இன்னும் பெருசா சண்டை வந்தா விட்டுட்டு போய்டுவீங்களொன்ற பயத்தை தான் எனக்குள்ள நீங்க குடுக்கறீங்க…”

“நாங்கலாம் தண்ணிக்குள்ள இருக்கற மீனுங்க மாதிரி. அழுதாலும் சத்தம் கேட்காது கண்ணீர் விட்டாலும் யாருக்கும் தெரியாது. அப்படித்தான் இத்தனை நாள் வரைக்கும் நானும், அம்மாவும், தியாவும் வாழ்ந்துட்டு இருந்தோம். எல்லாத்துக்கும் பயந்து. இந்த பயம். இப்ப அப்பாவை பேசிட்டாலும் உண்மையில் நடுக்கம் தான்…”

“ஆமா, இந்த வாழ்க்கை முழுக்க இந்த பயம் என்னை துரத்திட்டே இருக்குமோன்னு தோணிட்டே இருக்கு. இப்படி ஒரு வாழ்க்கை தேவையான்னே தோணிடுச்சுன்னா? தோணிடும். எப்பவும் எங்கப்பாவை எதிர்த்து பேசாதவ இன்னைக்கு பேசிட்டேன். நானா இப்படின்னு எனக்கே நம்ப முடியலை. இந்த நிலைக்கு தள்ளிட்டீங்கலேன்னு உங்க ரெண்டு பேர் மேலையும் கோபமா வருது…”

“ப்ச் நிதி…” அவளை அணைக்க வர,

“தள்ளி நின்னு பேசுங்க. இந்த பயம் என் வாழ்நாள் முழுக்க என்னை விடவே விடாதா? எப்ப நீங்க ரெண்டு பெரும் என்ன பண்ணுவீங்களோன்னு பயந்துட்டே என்னால காலந்தள்ள முடியாது. இப்பவே ரெண்டுல ஒன்னு சொல்லிடுங்க…”

“என்ன சொல்லனும்?…” அவளின் கறார் பேச்சில் சிரிப்பு வர புன்னகையோடு அவன் கேட்டான். வெகுநாட்களுக்கு பின்னான அவனின் புன்னகை, ஒரு நொடி அதில் அவள் லயிக்க,

“உண்மையில் சொல்றேன் நிதி, இதுல உன் அப்பாமேல எனக்கு கொஞ்சம் தான் கோபம். அதிகமான கோபம் உன்மேல தான். நல்லா யோசிச்சு பாரு? இப்படி ஒரு பிரச்சனைன்னு என்கிட்டே சொல்லியிருந்தா இந்தளவுக்கு வளரவிட்டிருக்க மாட்டேன். இன்னொன்னு உன்னை விட்டுகுடுத்தும் இருக்க மாட்டேன். நீ மட்டும் சொல்லியிருந்தா உனக்காக நீ என்கிட்டே கேட்டதுக்காகவேணும் நான் அங்க வந்திருப்பேன். உன்னை அழைச்சுட்டு வந்திருப்பேன். உங்க பெரியப்பா வீட்டில் சொன்னது தான். எங்க நான் பேசி நீ அப்பா பேச்சை தான் கேட்பேன்னு சொல்லிட்டா?…”

“நான் எப்படி அப்படி சொல்வேன்னு நீங்க நினைக்கலாம்?…”

“வேற எப்படி நினைப்பேன்? நாம ஒன்னும் அப்படி ஒட்டி உரசி வாழலையே. ரெண்டு மாசம் சேர்ந்து இருந்திருக்கோம். பாதி நாள் சண்டை. உன் அப்பா தான் முக்கியம்ன்ற மாதிரியான உன் பேச்சு. நமக்குள்ள இன்னும் புரிந்துணர்வு ஸ்ட்ராங்கா இல்லை. அப்படி நினைக்க தானே தோணும்…”

“எனக்கு உங்களை புரியும்…” வீம்பாய் சொல்ல,

“என்ன புரியும்? சொல்ல போனா ஈகோ உனக்கும் எனக்கும் நடுவுல தான்.  கண்ணுக்கு தெரியாத ஈகோ. அதை முதல்ல உடைக்கனும். இதுல உன்னை மட்டுமில்லை என்னையும் தான் சொல்லனும். என் பங்கு இதுல அதிகம். நானும் தப்பு தான்…” என்றவன் அவளை நெருங்கி முகம் நிமிர்த்தியவன்,

“பட் ஒரு விஷயம் மட்டும் உண்மை நிதி. இந்த சந்நிதி இல்லைனா வசீகரனும் இல்லை. அதை நீ எந்த சூழ்நிலையிலையும் மறக்க கூடாது…”

“நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன். நீங்க என்ன சொன்னாலும் மயங்க மாட்டேன்…” உண்மையில் கோபத்தை இழுத்துப்பிடித்து நின்றாள். அவனின் பார்வையில் கோபம் குறைந்துகொண்டு தான் இருந்தது.

“இந்த கோபத்தோட, லேசான மயக்கத்தோட  கூட லைப் ஸ்டார்ட் பண்ணலாம். தப்பில்லை…” அவளை போலவே அவனும் சொல்ல,

“இப்ப சொல்லுங்க நான் யாரு?…”

“வசீகரனின் சந்நிதி…”  என்றான் நிறைவான புன்னகையுடன்.

Advertisement