Advertisement

தீண்டல் – 30 (1)

“மத்தபடி உங்க சம்பாத்தியத்துக்காக இல்லை. ஏன் தினக்கூலி வாங்கற ஆளுங்க வீட்டுல இருக்கற சந்தோஷமும், நிம்மதியும், சிரிப்பும் இந்த வீட்டுல இருக்க சொல்லுங்க? அதிகமா பேசிட கூடாது, சத்தமா சிரிச்சுட்ட கூடாது. எங்கயும் யாரையும் பார்த்திட கூடாது. எல்லாத்துக்கும் அடக்குமுறை. அதை நாங்களே எங்க மேல உள்ள அக்கறைன்னு சாயம் பூசி எங்களையே ஏமாத்திட்டு இருந்தோம்…”

“சிறுசு வாய மூடிட்டு உள்ள போயிரு. பயங்கரமான கோவத்துல இருக்கேன்…”

“இனியும் இந்த கோபத்துக்கு பலியாக நான் தயாரா இல்லை. நாங்க என்ன தப்பு பண்ணினோம்?…”

“உன்னை வந்து கூட்டிட்டு போகட்டும்னு சொல்லியும் பதில் எதுவுமே அவங்க வீட்டுல இருந்து வரலை. அதனால எவ்வளவு அவமானத்துல நான் இருக்கேன். நீ என்னனா அவங்களோட போன்ல உறவுகொண்டாடிட்டு இருக்க?…”

“ஆமா பேசினேன். என் மாமியார்க்கிட்ட உறவு வளர்க்காம யார்க்கிட்ட உறவு வளர்த்தேன்? இதுல என்ன தப்பு கண்டீங்க? என் புருஷன்கிட்டையும் பேசுவேன். நீங்க தான கட்டிவச்சு அவங்க மனசு கோணாம நடந்துக்கனும்னு பாடம் எடுத்தீங்க?. நான் என்ன பேங்க் லோன்ல இன்ஸ்டால்மென்ட்ல வாங்கின பைக்கா. டியூ கட்டற வரைக்கும் விட்டுவச்சுட்டு கட்டலைனா பேங்குக்கே தூக்கிட்டு வந்துட?…”

“ஓஹ் நீ எவ்வளவு பேசுவியா? எல்லாம் அவன் சொல்லிக்குடுத்த பாடமா? அப்பா அவன் கூப்பிட்டப்பவே போயிருக்க வேண்டியது தான? உனக்கு அப்பன் முக்கியமில்ல, புகுந்த வீடு அந்த மனுஷங்களும் முக்கியமா போயிட்டாங்கள்ள…”

“திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லாதீங்க. அவர் சொல்லிக்குடுத்தா தானா? ஏன் எனக்கு சொந்த புத்தி இல்லையா? உங்க பேச்சுக்கு மரியாதை குடுத்து தான் நான் இங்க இருக்கேன். எங்க இருந்தாலும் அப்பா நீங்க தான். புருஷன் அவர் தான். என் புகுந்த வீடு அதுதான். உங்க சண்டையில என்னை ஏன் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கீங்க?…”

“திரும்ப பேசாத சிறுசு. இல்ல உன் அம்மாளுக்கு விழவேண்டிய அடி உனக்கு விழும். பொட்டக்கழுத அடிக்க கூடாதேன்னு பார்க்கேன்…” பல்லை கடித்துக்கொண்டு கையை முறுக்கிக்கொண்டு அவர் நிற்க,

“பொண்ணா பிறந்தது எங்க தப்பா? சும்மா இதையே சொல்லி காண்பிக்கீங்க? உங்களால இந்த வீட்டில அம்மாவுக்கு என்ன சந்தோஷத்தை குடுக்க முடிஞ்சது? இப்ப இந்த நிலமையில  கூட அவங்களை வீட்டை விட்டு வெளியேற சொல்ற அளவுக்கு உங்க மனசுல தான்ற எண்ணம் ஆட்டிப்படைக்குது. நாங்கலாம் என்ன அடிமையாப்பா? இத்தனை நாள் நீங்க எங்க மேல உள்ள பாசத்துல தான் அடக்கிவைக்கறீங்கன்னு நினைச்சோம்…”

“பொட்டக்கழுதையை அப்படித்தான் வளர்க்கனும். இல்ல குடும்ப கௌரவம் என்னாகறது? உங்களை எல்லாம் வைக்கவேண்டிய இடத்துல வச்சே இந்த பேச்சு பேசற நீ. உன் அக்கா அங்க பேசறா…”

“ஏன்ப்பா இந்த ஊர் உலகத்துல யாருமே பொம்பளைப்புள்ளை பெத்துக்கலையா? இல்ல கௌரவமா வளர்த்து கல்யாணம் செஞ்சு குடுக்கலையா?…”

“நான் அப்படித்தான் செய்வேன். எனக்கு அடங்கி இருக்கறவங்க தான் என் வீட்டில இருக்க முடியும். இல்லைனா ஒருத்தரும் இங்க இருக்க கூடாது. போய்ட்டே இருங்க…” என தெனாவெட்டாக சொல்ல,

“போறேன், கண்டிப்பா போறேன். இருக்க மாட்டேன்…”

“நீ பேசுவ, நீ இதை பேசுவன்னு நான் எதிர்பார்த்தது தான். அந்தளவுக்கு அந்த குடும்பம் உன்னை மாத்தி வச்சிருக்கும்…” என்ற பேச்சில் வெறுத்துபோனவள்,

“இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லையாப்பா? என்ன மாத்தி வச்சிருக்காங்க? நீங்க பண்ணின அவமானத்தையும் மறந்துட்டு என்னை மருமகளா அழைச்சுட்டு போய் அவங்க பெத்த பொண்ணை போல அன்பா பார்த்துக்கறாங்க. இதை பார்த்து சந்தோஷப்படலைனாலும் பரவாயில்லை. இப்படி அவங்க மேல துவேஷம் காட்டறீங்க பாருங்க…” என்றவள் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு,

“இதுக்குத்தான் நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். காரணம் நீங்க தான் முதல்ல. ரெண்டாவது என் புருஷன். உங்க குணத்துக்கு கொஞ்சமும் குறைஞ்சவர் இல்லை அவரும். ஆனா எனக்காக பார்ப்பார் அவர். அந்த விதத்துல இப்படி ஒருத்தரை விரும்பினதை நினைச்சு நான் சந்தோஷப்படறேன்…”

பார்கவி சந்நிதி பேச பேச அத்தனை அதிர்ச்சி, தன் மகளா? என்று. மகளை சமாதானம் செய்வதா? கணவனை அமைதிப்படுத்துவதா? என்று புரியாமல் ஓய்ந்துபோய் அமர்ந்துவிட்டார். கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.

“அப்ப ஆரம்பத்துல இருந்தே நீ அவனைத்தான் நினைச்சுட்டு இருந்திருக்க. அப்படித்தான? எத்தனை ஏமாத்தியிருக்க நீ? …” என முனிஸ்வரன் கொந்தளிக்க,

“ஆமா, ஆமா, ஆமா. அதுக்கு இப்ப என்ன பண்ணுவீங்கப்பா? எனக்கு அவரை பார்த்ததும் பிடிச்சது தான். ஆனாலும் நான் இது சரிவராதுன்னு என்னக்குள்ளையே வச்சுக்கிட்டேன்.  அவங்க வீட்டுல இருந்து வந்து பேசி நீங்க அவங்களை அனுப்பின விதத்துல மொத்தமாவே அதை மறந்துடனும்னு முடிவு பண்ணிட்டேன்…” என ஆவேசம் வந்தவளாய் ஆரம்பித்தவள்,

“ஆனா நீங்க, நித்தமும் எதாச்சும் ஒரு விதத்துல நீங்க அவரை பேசி நினைக்க வச்சீங்க. தியாவை எத்தனை கொடுமை செஞ்சீங்க? ஏன் உங்களுக்கு எங்க மேல நம்பிக்கை இல்லைன்னு தானே? ஒவ்வொரு கோவிலுக்கு போறப்பவும் பக்தியோட போவாங்க. ஆனா நாங்க அடுத்து என்ன பரிகாரமோன்னு பயத்தோட வருவோம். நல்லா இருக்கனும்னு வேண்டினதில்லை. இதுல இருந்து விடுதலை குடுன்னு தான் வேண்டியிருக்கோம்…”

“எல்லாம் அளவுக்கு மீறி போகும் போதும் நீங்க அம்மாவை படுத்தற பாடுல பல்லைகடிச்சுட்டு பொறுமையா இருந்தோம். தியா கல்யாணம் ஆகி போனதும் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. ஆனா அவரை வேண்டாம் வேண்டாம்னு நினைச்சே அவரை அதிகமா நான் நினச்சிருந்திருக்கேன். அவங்கக்கிட்ட திரும்ப நீங்களா தானே பேசினீங்க? அவங்க ஒன்னும் தேடி வரலையே?…”

“தேடி போய் என்னை குடுத்தீங்க. அவங்க என்ன ரிமோட்டா? நான் கூட இந்த கல்யாணத்தால ரொம்ப பயந்தேன். அவர் நீங்க அவமானப்படுத்தினதை வச்சு மேரேஜ்க்கு பின்னால எதுவும் பிரச்சனை பண்ணுவாரோன்னு. ஆனா அவர் எந்த இன்ட்டேனஷனும் வச்சுக்கலை. உங்களுக்கு தான் இன்டென்ஷன் இருந்திருக்குன்னு இப்ப தெரியுது…”

“சிறுசு நீ…”

“இனி எதுவுமே பேசவேண்டாம். இதுக்கு மேலையும் நான் இங்க இருக்கறதுல அர்த்தமில்லை. நான் போறேன்…”

“இங்க பாரு சிறுசு, நான் உன் நல்லதுக்காக தான் பண்ணினேன். அந்த வீட்டில உன்னோட மதிப்புக்காக…” முனீஸ்வரன் பேச வர,

“போதும், அதான் சொல்லிட்டீங்களே உங்க சம்பாத்தியம் தான் எங்களை இருக்க வச்சதுன்னு. இதுவே போதும் எங்களை சாகடிக்க. உங்களை மாதிரி ஒரு அப்பா இந்த உலகத்துலையே யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. தேங்க்ஸ்…” என்றவள் பார்கவியின் அருகில் சென்று,

“ம்மா, வாங்கம்மா இங்க நீங்க இருக்க வேண்டாம். என்கூட வந்திருங்களேன். ப்ளீஸ்…” என அழைக்க,

“நே போம்மா, நீ உன் புருஷன் வீட்டுல நிம்மதியா வாழ்ந்தாலே பொது. அம்மாவுக்கு வேற எதுவும் வேண்டாம். போய்ட்டுவாடா. இப்பவே கிளம்பிடு…”

“ஏய், என்ன சொல்லிட்டிருக்க அவட்ட…” என பதற,

“போயிரு நிதி. போயிரும்மா…” என கையெடுத்து கும்பிட்டுவிட அவரை கட்டிக்கொண்டு அழுதவள் கண்ணை துடைத்துவிட்டு,

“இனிமே யாருமே என்னை பத்தி கவலைப்பட வேண்டாம். நான் கிளம்பறேன். இத்தனை பேசினப்பின்னாலையும் நான் இங்க இருக்க மாட்டேன்…” என்ற சந்நிதி கோபத்துடன் வாசலுக்கு வர அங்கே வசீகரன் நின்றிருந்தான்.

முனீஸ்வரன் பார்கவியை அடிக்க கையை ஒங்க நிதி கத்த அந்நேரமே வந்துவிட்டான். இப்பொழுது உள்ளே சென்றால் தேவையில்லாத பிரச்சனையில் முடியும் என நினைத்தவன் புகழ் வீட்டிற்கு சென்றுவிடுவோமா என நினைத்துக்கொண்டு ஓரமாய் தள்ளி நிற்க இவன் வந்ததும் தெரியவில்லை, நின்றதும் தெரியவில்லை.

அவள் பேச பேச இவனுக்கு சிலிர்த்துக்கொண்டு வர ஆச்சர்யத்தில் அங்கேயே ஆணியடித்தது போல நின்றுவிட்டவன் அவள் வீட்டை விட்டு வரவும் தன்னை பார்த்த பார்வையிலும் பேசியதிலும் திகைத்து போனவன் அடுத்த நிமிடம் அவளுக்கு பின்னால் ஓட ஆரம்பித்தான்.

நீதிமாணிக்கத்தின் வீடு நோக்கி தான் சென்றுகொண்டிருந்தாள். இவன் பின்னே செல்வதை ஒருசிலர் ஒரு மாதிரியாக பார்க்க மீண்டும் அவளின் வீட்டு வாசலுக்கு வந்து காரை எடுத்துக்கொண்டு அவளுக்கு முன்பாக அங்கே சென்று அமர்ந்துகொண்டான்.

அப்போது தான் நீதிமாணிக்கமும் கோமதியும் வீட்டிற்கு வந்து குளித்திருந்தனர். அபிராமியை அவளின் அம்மாவீட்டில் விட்டுவிட்டு இவர்கள் மட்டும் வந்தனர். உடன் புவனும். இவனை பார்க்கவும் சந்தோஷமும் சங்கடமுமாய் வரவேற்று அமரவைத்துவிட்டு புகழுக்கு அழைக்க அவனும் பதட்டத்துடன் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான்.

அவனுக்கு சந்தியா ஏற்கனவே அழைத்து சொல்லியிருந்தாள். இப்படி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அப்பா வந்துவிட்டார் என. உடனே வீட்டிற்கு சென்று பார்க்கும் படி. வீட்டில் யாருமில்லாமல் தானும் வெளியில் முக்கியமான வேலையாக வந்திருக்க அடித்துபிடித்து பைக்கில் பறந்து வந்தான்.

அவன் வந்து வாசலில் பைக்கை நிறுத்த சந்நிதியும் வந்துவிட்டாள். அவனை முறைத்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தவள் யாரிடமும் பேசாமல் மாடிப்படியில் சென்று அமர்ந்துகொண்டாள். அழுகை பங்கி பொங்கி வந்தது. சத்தமில்லாமல் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

வசீகரனை கண்டும் அவள் காணாதது போல வேகமாக வந்தது, தங்களையும் சட்டை செய்யாமல் கலங்கிய கண்களுடன் தனியாய் சென்று அமர்ந்துகொண்டது அதை பார்த்தும் வசீகரன் அமைதியாய் இருப்பது என நீதிமாணிக்கத்திற்கு யோசனையானது.

புகழும் வந்ததும் வசீகரனை பார்த்து வா என்றுவிட்டு உள்ளே ஓடிவிட கோமதி தான்,

“என்னாச்சுங்க? பிள்ளைக முகமே சரியில்லையே…” என பதட்டமாய் கேட்க புகழ் சந்நிதியின் அருகில் சென்று அமர்ந்தவன் அவளின் கையை பிடிக்க,

“போயிருண்ணே, உன் சித்தப்பாவுக்கு தாளந்தட்டுனதும் போதும். என் புருஷனுக்கு சலாம் போட்டதும் போதும். என் அண்ணனா என்னை பார்க்கவும் இல்லை, யோசிக்கவும் இல்லை. என்னை நே பார்க்காம யார் பார்ப்பா? யாருக்குமே என்னை தோணவே இல்லைல? போயிரு…” என்று கண்ணீருடன் எரிந்துவிழ கோமதி வந்துவிட்டார்.

“போடா எந்திச்சு…” என்றவர் சந்நிதியை மடிதாங்கிக்கொள்ள அவரின் மடியில் படுத்துக்கொண்டவள்,

“அம்மா பாவம் பெரிம்மா. அண்ணனை போய் கூட்டிட்டு வர சொல்லுங்களேன்…”

“சொல்றேன்டா, சொல்றேன்டா.  உன் புருஷன் வந்திருக்கார். நீ பார்க்கவே இல்லையே. உன்னை கூட்டிட்டு போக வந்திருக்கார்ன்னு நினைக்கேன்…” என்றதும் நிமிர்ந்து பார்த்தவள்,

“நான் அவர் கூட போகமாட்டேன். என்னை யாரும் கூட்டிட்டு போக வேண்டாம்…” என்று ஸ்திரமாய் சொல்ல கோமதிக்கு பக்கென்றானது.

“நிதி…”

“அவரை கிளம்ப சொல்லுங்க பெரிம்மா…” என சொல்ல புகழ் மீண்டும் வந்துவிட்டான்.

“என்னடா?…”

“சந்தியா லைன்ல இருக்கா. அழுதுட்டே இருக்கா. பேசு…” என்றதும் வாங்கியவள்,

“ஹலோ…” என்க,

“நிதிம்மா, நான் விஷ்வா…”  என்றதும் நின்றிருந்த கண்ணீர் கண்ணை முட்ட,

“அழக்கூடாது நிதி. நான் வந்துட்டிருக்கேன்…” என்றவனின் குரலில் அத்தனை கோபம்.

“நீங்க என்னை என் அத்தைக்கிட்ட கூட்டிட்டு போங்க அத்தான்…”

“கண்டிப்பாடா. வந்திடறேன்…” என்று சொல்லி வைத்துவிட,

“அத்தான் கூட நான் போய்ப்பேன். அவரை கிளம்ப சொல்லுண்ணே…” என்று மீண்டும் அழுத்தமாய் சொல்ல புகழ் வந்து வசீகரனிடம் சொல்ல,

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் இருக்கேன். ஆனா நிதி கூட தான் போவேன்…” என்று சட்டமாய் வசீகரன் அமர்ந்துவிட அவன் சொன்ன விதத்தில் நீதிமாணிக்கத்திற்கும் கோமதிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

மாடிப்படியில் இருந்து சந்நிதி முறைக்க இவன் பார்க்க இருவரையும் பார்த்திருந்த குடும்பம் எப்படியோ சரியாகிவிட்டால் போதும் என்றுவிட்டனர்.

Advertisement