Advertisement

தீண்டல் – 30 (1)

              பார்கவி அம்பிகாவிடம் பேசிவிட்டு அழுதுகொண்டிருக்க புகழ் தான் அவரை சமாதானம் செய்து தண்ணீர் கொடுத்து அமரவைத்தான்.

“என்ன சித்தி இதெல்லாம்?…”

“என்னை என்ன செய்ய சொல்லற புகழ்? என் பொண்ணு இங்க எப்படி இருக்கா தெரியுமா? அவருக்கிட்ட கெஞ்சி கூட பார்த்துட்டேன். கேட்கவே இல்லை…”

“நிதியை கூட்டிட்டு போகலாம்ன்னா மாப்பிள்ளை வந்து கூப்பிடாம அவ வரமாட்டேன்னு இருக்கா…”

“அவ யாருக்குன்னு பார்ப்பா? ஒரு பக்கம் அப்பா, இன்னொரு பக்கம் புருஷன். அவளுக்கும் என் நிலைமை வந்துடுமோன்னு மனசு நடுங்க ஆரம்பிச்சிருச்சுடா. நான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு. அது என் பொண்ணையுமா தொடரனும்?…”

“வசீ அப்படி இல்லை சித்தி, நிதி மேல உயிரையே வச்சிருக்காரு. உங்களுக்கு தெரியாது…” என்றவன் விபத்தின் பொழுது அவர்களை காப்பாற்ற அவன் மேற்கொண்ட முயற்சியையும் நிதியின் மீதான அன்பையும் சொல்ல பார்கவியின் ஒளியிழந்த விழிகளில் சிறு வெளிச்சம்.

“நீங்க முதல்ல தைரியமா இருங்க. இன்னைக்கு அத்தைக்கிட்ட பேசிருக்கீங்கள்ள. அவங்க சரியான முடிவெடுப்பாங்க…”  என்றவன் அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தான்.

அவனுக்கு தெரியும் இத ஒரு விஷயமே பார்கவிக்கு எத்தனை பெரிய நிம்மதியை தருமென்று.

“நான் கிளம்பறேன் சித்தி, சித்தப்பாக்கிட்ட நான் பேசின எதயும் நீங்க காமிச்சுக்க வேண்டாம். அத்தைக்கிட்ட பேசினதையும் கூட. நல்லதே நடக்கும். அபிராமி அண்ணியோட சொந்தத்துல யாரோ தவறிட்டாங்க. அதுக்கு போயிருக்காங்க அப்பாவும் அம்மாவும். நான் அம்மா வரவும் நைட் கூட்டிட்டு வரேன்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அன்று காலை ஏற்கனவே முனீஸ்வரன் வெளியூர் செல்வதால் இரவு உணவிற்கு கூட வரமாட்டேன் என்று சொல்லி சென்றுவிட்டதால் புகழ் சென்றதும் உறங்கிக்கொண்டிருந்த சந்நிதியை எழுப்பி சாப்பிட வைத்துவிட்டு தானும் சாப்பிட்டு முடித்து சந்நிதியின் மொபைலில் இருந்து சந்தியாவிற்கு அழைக்க அவள் எடுக்கவில்லை. அவளே மீண்டும் அழைக்கட்டும் என விட்டுவிட்டார்.

அம்பிகாவிடம் பேசியதை பற்றி பார்கவி சந்நிதியிடம் சொல்லிக்கொண்டிருக்க அவளுக்குமே அம்பிகாவிடம் பேச ஆசை தான். ஆனாலும் எதுவரைக்கு இது செல்கிறது என்ற எண்ணம். அமைதியாய் இருந்தாள்.

அவளின் அமைதிக்கான காலநேரம் மிக குறைவு என்று அவளுக்கு அப்பொழுது புரியவில்லை. அன்றே அந்த வீட்டை விட்டே வெளியேறுவோம் என்று அவள் நினைக்கவும் இல்லை. ஆனால் இவை எல்லாமே நடந்தது.

மாலை சந்தியா வீடியோ காலில் அழைக்கவும் எடுத்து பேசியவர் அங்கிருப்பவர்களை நலம் விசாரித்துவிட்டு விஷயத்திற்கு வந்தார். அம்பிகாவிடம் பேசியதை பற்றி சொல்ல,

“அம்மா, நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க முதல்ல. எங்களுக்குன்னு இருக்கறது நீங்க மட்டும் தான். நிதியை பத்தி கவலைப்பட்டு நீங்க கஷ்டபடுத்திக்காதீங்க. என் மாமியாருக்கு உடம்புக்கு முடியலை. இல்லைனா நான் வந்திருப்பேன்.இவர் என்னை போய்ட்டு வரத்தான் சொன்னார்…”

“இல்லைடா, நீ அங்க பாரு. உனக்கு உன் மாமியார் முக்கியம். அவங்களை கவனிச்சுக்க. நான் மாப்பிள்ளையோட அம்மாக்கிட்ட பேசிட்டேன். என் மனசுல உள்ள பாரமே குறைஞ்ச மாதிரி இருக்கு. கொஞ்சம் நிம்மதியாவும் இருக்கு…”

“ரொம்ப நல்லதும்மா, அத்தைக்கிட்ட பேசிட்டீங்கள்ள. வசீக்கு அப்பா இப்படி நெருக்கடி குடுக்காறேன்ற கோபம் தானே தவிர நிதி மேல அவருக்கு எந்த கோபமும் இருக்காது. அவளை அவர் புரிஞ்சுப்பார். அநேகமா அத்தை கூட நிதியை கூப்பிட வரலாம்…”

“அவங்க எவ்வளவு தான் இறங்கி வருவாங்க தியா? எதையும் நினைச்சதுமே நடத்திடனும்னு நினைக்கிறது தப்பில்லையா? அவங்களையும் நாம புரிஞ்சுக்கனும்ல…” பார்கவி சம்பந்தி குடும்பத்திற்காக பேச,

“அம்மா, அதுக்கு தான் சொல்றேன். ஒரு வேலை அப்படி எதுவும் அத்தை பேசலைனாலும் பரவாயில்லை. இந்த வாரக்கடைசி கண்டிப்பா நாங்க வரோம். அப்பா ஒத்துக்காட்டிலும் நானும் அவரும் நிதியை கூட்டிட்டு போய் அவ மாமியார் வீட்டில் விட்டுட்டு வந்திடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அப்பாவை இவர் சமாளிச்சுப்பார்…” என்றவள் நிதியிடம்,

“நிதி இங்க என்ன பிரச்சனை வேணும்னாலும் நடக்கட்டும். நீ இதை கொண்டு வசீட்ட பேசாம இருக்க கூடாது. புரியுதா? இது பெரியவங்க சரிபண்ண வேண்டிய விஷயம். இதை உங்க ரெண்டு பேருக்குள்ள கொண்டுவந்து நீங்க முட்டிக்க கூடாது புரியுதா?…” என்றதற்கு நிதி தலையசைக்க,

“வாயை திறந்து சொல்லேன். அம்மா முகமே வாடிப்போய் இருக்கு…” என தாயை கண் காண்பிக்க பார்கவியை பார்த்தவள்,

“தியா நன் அவர்க்கிட்ட பேசிட்டு தான் இருக்கேன். எங்களுக்குள்ள இதை வச்சு எந்த சண்டையுமே இல்லை. இன்னைக்கு மார்னிங் கூட என்கிட்டே பேசிட்டு தான் ஆபீஸ் கிளம்பினார். நைட் கூப்பிடுவார். நீயும் அம்மாவும் கவலைப்படவே வேண்டாம்…”

நிதிக்கும் தெரியும், தியாவிற்கும் தெரியும் இது உண்மையல்ல என்று. இருவருமே தன் தாய்க்காக பொய்யுரைக்க பார்கவியின் மனம் குளிர்ந்துபோனது.

“இத சொல்லவே இல்லடா நிதி. எனக்கு இது போதும். நான் கூட நீ இருக்கறதை பார்த்துட்டு பயந்துபோய்ட்டேன். பேசலையோன்னு. மாப்பிள்ளைக்கும் கோவமோன்னு. என்னவோ இப்பதான் கொஞ்சம் படபடப்பு குறையா இருக்கு. இனி எல்லாமே சரியாகிடும்…”

“கண்டிப்பா சரியாகத்தானே வேணும், இப்படி பொண்டாட்டி பொண்ணுங்க எல்லாரும் சேர்ந்து என் மூஞ்சில கரியை பூசினா எல்லாமே சரியாகிடும்…” என கர்ஜனை குரலில் சந்நிதியின் அறையின் வாசலில் முனீஸ்வரன் நின்றுகொண்டிருக்க இதை எதிர்பாராதவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

பதறி எழுந்ததில் போன் கட்டிலில் விழ மெதுவாக உள்ளே வந்தவர் அதை எடுத்து பார்த்து,

“கூட்டுக்கலவாணித்தனமா பன்றீங்க. உன் நல்ல நேரம் நீ இப்ப என் கண் முன்னால இல்ல…” என திரையில் சந்தியாவை பார்த்து அவர் இறைய,

“அப்பா ப்ளீஸ், நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. நிதி பாவம்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னர் அழைப்பை துண்டித்து போனை தூக்கி சுவற்றில் வீசி எறிந்தார்.

விக்கித்து போய் நின்றார்கள் சந்நிதியும் பார்கவியும். இருவருக்கும் பயத்தில் உடல் நடுங்க என்ன பேச போகிறாரோ என நினைக்கும் பொழுதே உயிர் பதறியது. அதிலும் இத்தனை கோபத்தில் என்றுமே அவரை பார்த்ததில்லை. அத்தனை உச்சக்கட்ட ஆவேசத்தில் நின்றிருந்தார்.

“என்ன நா வெளில போன பின்னால இந்த கலவாணித்தனம் மட்டும் தான் பன்றீங்களா? இல்ல. ஏய் உன்ன நா என்னவோன்னு நினைச்சேன். ஆனா நீ…” என பார்கவியை கூர்மையாக பார்த்துக்கொண்டே கேட்க,

“அப்பா. என்ன இப்படி பேசறீங்க?…” என பேச,

“மூடு வாய அப்பன் அசிங்கப்பட்டாலும் பரவாயில்லன்னு அவன் கூட போன்ல பேசிட்டா இருக்க? இப்ப தான தெரியுது அவன் எத்தனை திண்ணக்கத்துல இருக்கான்னு?…” என்றவர் வேகமாய் பார்கவியை பிடித்து தரதரவென ஹாலிற்கு இழுத்துவர,

“அப்பா விடுங்க அம்மாவை, அப்பா ப்ளீஸ் அப்பா…” என அணிதி கதற கதற அவளை தூரமாய் உதறியவர்,

“இன்ன வரைக்கும் உன்ன கை நீட்டி அடிச்சதில்ல. இனியும் அடிக்க வச்சிடாத. போனா போகுதேன்னு உன்ன கட்டின பாவத்துக்கு கூட வாழ்ந்தா எனக்கே குழி பறிக்கிற நீ? போ வெளில….” என்று பிடித்து தள்ள அதுவரை கெஞ்சிக்கொண்டிருந்த சந்நிதி தாயை தாங்கிகொண்டாள்.

“நீ விடு நிதி…” என்றவர் கணவரிடம் வந்து நிற்க,

“போயிரு இவளையும் கூட்டிட்டு. எல்லாரும் சேர்ந்து ட்ராமாவா பன்றீங்க?…” என்று கத்த,

“என்னங்க நீங்க, நம்ம பொண்ணு வாழ்க்கை நல்ல இருக்கனும்னு தான நினைச்சேன். அதுக்குத்தான பேசினேன். அதுவும் நம்ம சம்பந்தியம்மா அவங்க. கோவப்படாம கொஞ்சம் யோசிச்சு பாருங்கங்க. பாழா போறது நம்ம பொண்ணு எதிர்காலம் தான். வீம்பு பார்க்கற நேரமா இது? அவங்க முன்னப்பின்ன இருந்தாலும் நாம தானுங்க பொறுத்து போகனும். இங்க நாமளே…”

பார்கவி காலை பிடித்துக்கொண்டு அழ சந்நிதி தந்தையை, தாயை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அதுக்கு அவங்க கால்ல விழ சொல்லறியா? அது என்னால முடியாது. வான்னா வீட்டுக்கு வரமட்டாங்களோ? இங்க என்ன பண்ணிடுவோம் அவங்களை? இப்படியே விட்டா வராமலே போயிருவாங்களேன்னு தான வந்து பொன்னை கூட்டிட்டு போக சொன்னேன்…”

“நீங்க பேசினது அப்படி வராதுங்க…” பார்கவி அழ அழ,

“இத்தன நாளா வாயே தொறக்காம இருந்துட்டு இன்னைக்கு இந்த பேச்சு பேசறன்னா யார் குடுத்த துணிச்சல் இது? நீயெல்லாம் எனக்கு புத்தி சொல்ல வந்துட்ட பாரேன். அதத்தான் என் நேரம்ன்றது. நா பார்த்து வளர்த்து கட்டிகுடுத்ததுங்க என் முதுக்குக்கு பின்னால இம்புட்டு வேலை பாக்குதுங்களே…”

“நாங்க பேசினது தப்புன்னு சொல்றீங்களாப்பா?…” சந்நிதியின் குரலில் உள்ள பேதம் புரியாமல்,

“ஆமா தப்பு தான். பயம் விட்டுபோச்சுல எல்லாருக்கும். வளர்ற வரைக்கும் இந்த அப்பனும் அவன் சம்பாத்தியமும் வேணும்…”

“உங்க சம்பாத்தியத்துக்காக தான் நாங்க இத்தனை வருஷமா இங்க இருந்தோமா?…” பார்கவிக்கு பதறிவிட்டது சந்நிதி எதிர்த்து நின்று கேட்டது.

“இல்லைன்னு சொல்லுவியா நீ?…” முனீஸ்வரனுக்கு கோபம் கண்ணை மறைக்க என்ன பேசுகிறோம் எது பேசுகிறோம் என்றே புரியாமல் வார்த்தைகளை விஷமாய் கக்க ஆரம்பித்தார்.

“என்னங்க நீங்க அவ சின்ன பொண்ணு, விடுங்க. புருஷன் பேசினா பேசாம எப்படி இருப்பா?…”

“பேசாம தான் இருக்கனும். திரும்ப திரும்ப வந்து பேசற உன்ன…” என்று பார்கவியை அடிக்க கையை ஓங்கிவிட,

“அப்பா…” என அவருக்கு மேல் கத்தியேவிட்டாள்.

“என்ன எனக்கு எதிர்க்க சவுண்டு குடுக்கற? அவ்வளவு துளிர்விட்டு போச்சா? எல்லாம் அவன் சொல்லிக்குடுத்ததா?…” என மகளிடம் எகிற,

“ஆமா, அவர் சொல்லிக்குடுத்தது தான். அப்படியே வச்சுக்கோங்க. அம்மாவுக்கா தான் இத்தனை நாள் நாங்க பொறுமையா இருந்தோம். அவங்களையே அடிக்க கை ஒங்கறீங்க…”

“என் பொண்டாட்டியை நான் அடிப்பேன்…”

“அதே மாதிரி என் புருஷன்ட்ட நான் பேசுவேன். அது மட்டும் எப்படி தப்பாகும்?. நீங்க சொன்னா பேசனும், இல்லைனா பேச கூடாதா?…”

“சிறுசு, என் கோவத்த கிளறாத…”

“உண்மையை தான சொன்னேன். இப்படி எல்லாம் நடந்திட வேண்டாம்னு தான இந்த கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன். கேட்டீங்களா நீங்க? நீங்களா பார்த்து அத்தனை பிரச்சனையும் செஞ்சுட்டு அவங்க வீட்டுலையே என்னை கட்டியும் குடுத்துட்டு இன்னைக்கு போய் வாழக்கூடாதுன்னா என்னை என்ன போம்மைன்னா நினைக்கறீங்க?…”

“சிறுசு வார்த்தைய அளந்து பேசு…”

“இனிமே எந்த அளவும் இல்லை. எப்பவோ இப்படி உங்களை கேள்வி கேட்டிருந்தா எங்கம்மா நிம்மதியா இருந்திருப்பாங்க. இவங்களுக்காகவும் எங்களை பெத்ததுக்காகவும் தான் நானும் தியாவும் பொறுமையா போனோம். எங்க மேல உள்ள கோபம் ஏற்கனவே வேதனையோட காலந்தள்ளிட்டு இருக்கற அம்மாவுக்கு இன்னமும் வேதனையை குடுத்துட கூடாதுன்னு தான் நாங்க பொறுமையா நீங்க பன்றதுக்கு எல்லாம் சகிச்சுட்டு இருந்தோம்…”

Advertisement